Friday, December 19, 2008

அக்கா ( பாகம் 13 )

ஒயிட் & ஒயிட் போட்டுக்கிட்டுத் தங்க ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி, கையில் சதா புகையும் சிகெரெட், எல்லாரையும் 'என் ரேஞ்சே தனி, நீங்க எல்லாரும் புல்'லுன்னு பார்க்கும் ஒரு அகம்பாவமான பார்வையில் ஒருத்தர் இருந்தாருன்னா அது இந்த பிரகஸ்பதின்னு ( எங்க ரெண்டாவது சித்தியோட புருஷன்) கண்ணை மூடிக்கிட்டுச் சொல்லிறலாம். அந்த ஆளை ஒரு மகான் ரேஞ்சுக்குக் கொண்டுவச்சுக்கிட்டுப் பாட்டியும் மத்த சித்திகளும் ஆலோசனை கேப்பாங்க. ஆனா... அந்த ஆள் சரியில்லை. எனக்கென்னன்னா...இதைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டும்கூட குடும்பம், அவரை ஏன் உச்சாணிக்கொம்புலே வச்சு ஆடுதுன்றதுதான்.

பெரியதனக்காரர்போல வீட்டுப் பின்பக்கத்து கிணத்தடிக்கிட்டே ஈஸிச்சேர்லே சாய்ஞ்சுக்கிட்டு அம்பது சிகெரெட் வரும் வட்ட டப்பாவைப் பக்கத்து ஸ்டூலில் வச்சுக்கிட்டு ஒன்னு மாத்தி ஒன்னுன்னு ஊதித்தள்ளிக்கிட்டு வானத்தைப் பார்த்துக்கிட்டு இருப்பார். பெரிய சிந்தனாவாதி. சித்தி போய் பவ்யமா.... அவர்கிட்டே யோசனை கேக்கப் பாட்டியோ இல்லை குடும்ப அங்கங்களில் ஓன்னோ வந்துருக்குன்னதும் ரொம்பப் பெரியமனசு பண்ணி வரச்சொல்லுன்றதும், இவுங்க போய் அந்த ஸ்டூலில் அடக்க ஒடுக்கமா உக்கார்ந்து அவர்கிட்டே பேசறதும் ஒரு கேலிக் கூத்தாத்தான் எனக்குப் பட்டுச்சு. எப்பவும் தனித்தனியாத்தான் கூப்புட்டுப் பேசுவார். எல்லாரையும் ஒன்னாக் கூப்புட்டுவச்சுப் பேசுனா என்ன? பொம்பளைங்களைத்தான் மூளைச்சலவை செஞ்சு வச்சுருக்கார் போல. இவரோட பிள்ளைகளுக்கும் இவர் பவிஷூ எல்லாம் தெரிஞ்சுதான் இருக்கு. ஆனா அவுங்க எல்லாருக்கும் இவர் சிம்ம சொப்பனம். அப்படி ஒரு தோற்றத்தைத் தன்னைச்சுத்தி உருவாக்கிக்கிட்ட கில்லாடி. எங்க தாய்மாமனுங்க யாருக்கும் இவரைப் பிடிக்காது.

இந்த மாமனுங்க, வீட்டுக்கு லட்சணமாப் பொறுப்பை ஏத்துக்கிட்டு இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும். ஒன்னும் உருப்படலை. தாத்தா சொந்தமாக் கம்பெனி வச்சுச் செல்வாக்கா இருந்து, பிள்ளைகளுக்கு ஒரு குறைவுமில்லாமப் நாலுதலைமுறைக்கு வருமளவுச் சொத்து சேர்த்து வச்சுருந்தார். அவர் இறந்ததும் கிடைச்சதையெல்லாம் பங்கு போட்டுக்கிட்டுத் தாந்தோணித்தனமா ஆடுனது என்ன............ அவுங்கவுங்க தன்னோட குடும்பத்து க்ஷேமத்தை மட்டும் மனசுலே வச்சிக்கிட்டு, எங்க பாட்டியின் பாஷையில் சொன்னால் 'பெண்டாட்டிக்கு மணைக் கட்டையா' ஆகிக் கிடந்தாங்களே. ஒரே ஒரு மாமா மட்டும் நியாயவானா இருந்தார். அதனாலேயே என்னமோ சீக்கிரம் சாமிகிட்டே போயிட்டார். அவருக்குப் பிள்ளைங்க இல்லாததால் அவர் பங்கையும் அழிச்ச பெருமை மிச்சம்மீதி இருந்த தம்பிகளுக்குத்தான்.

என்னவோ இருக்கு என்னன்னுதான் தெரியலை.
குடும்பங்களுக்குள் ரகசியங்கள் பதுங்கிக் கிடக்கின்றன என்றது மட்டும் புரிஞ்சுபோச்சு.

எவ்வளவுக்கெவ்வளவு எனக்கு இவரைப் பிடிக்காதோ அவ்வளவுக்கவ்வளவு 'எங்க சித்தப்பாசித்தி'யை எனக்குப் பிடிச்சிருந்துச்சு. நல்லவங்களுக்குக் காலம் இல்லை என்றது உண்மைதான்.

அக்காவைப் பத்திச் சொல்லும்போது அங்கங்கெ அலைபாய்ஞ்சுக்கிட்டுப் போறேன் பாருங்க. நல்லவேளையா என்னை மேலே படிக்க வச்சது எல்லாம் விவரமா அப்புறம் 'என் கதை'களில் சொல்றேன். விடுதியில் இருந்தப்ப, எங்க சித்தப்பாச்சித்தி குடும்பத்தோடு எப்பவாவது பார்க்க வருவாங்க. அப்படித்தான் ஒரு சமயம் வந்தப்ப , அவுங்க பொண்ணு நிறைய நகையோடு வந்துச்சு. சித்தியும் நல்ல பட்டுப் புடவையில். சித்தப்பா உடம்பு சுகமில்லைன்னு வேலையை விட்டுட்டாராம். அப்போ கிடைச்சப் பணத்துலேதான் இந்த நகைநட்டு எல்லாம். அந்த அண்ணனுக்கு வேலை கிடைச்சுருச்சாம், அதே ரெயில்வேஸ்லே. இந்தக் குடும்பம் பூராவும் ரெயில்வேஸ் வேலைதான் எங்க அப்பா உள்பட.

ரெண்டு மூணுவருசமா நான் அக்கா வீட்டுக்குப் போகவே இல்லை. என் உலகமே இப்ப வேற. பாட்டி வீட்டுக்குப் போனாலும் எதுலேயும் பட்டுக்காம இருக்க ஆரம்பிச்சேன். இப்பச் சித்தப்பாச்சித்தி, ஒரு நல்ல வீட்டுக்குக் குடிபோயிட்டாங்க. எனக்குத் தோணும்போது அவுங்க வீட்டுக்குப் போயிட்டு வருவேன். 'இவ அடங்கமாட்டா. திட்டித்திட்டி நம்ம வாய்தான் வலிக்குது'ன்னு முணங்கிட்டு, எனக்குத் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க.


அக்காமாமாவுக்கும் நாப்பது வயசுக்கு மேலே ஆயிருச்சே. வாழ்க்கை பூராவும் விளையாடணுமுன்னு உடற்பயிற்சி வாத்தியாரா இருந்தவருக்கு ரத்தக்கொதிப்பு, அது இதுன்னு வர ஆரம்பிச்சதும் ஒரு வருசம் லீவு எடுத்துக்கிட்டு, பி.டி. படிக்க ஆசிரியர் பயிற்சியிலே சேர்ந்துட்டார். அங்கே மாமாவின் அக்காவின் கணவர் இறந்ததும் அவுங்களும் அவுங்க பங்குக்குக் கிடைச்ச சொத்துக்களோடு தம்பி வீட்டோடு வந்துட்டாங்க. துணைக்கு அவுங்களும் இருக்காங்க. ஒரு வருசம் இதோ முடிஞ்சுருமுன்னு எடுத்த முடிவுதான்.

அக்காவுக்கு ஆறாவது பொறந்துச்சு. பையன். இதுக்குள்ளே மூத்தவனைச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவச்சுருந்தாங்க அவன் பாட்டி. எதுக்கெடுத்தாலும் அடாவடி, பிடிவாதமுன்னு வளர்ந்துருந்தான். நாலாம் வருசம் நான் போனப்ப, ஏழாவதும் பொறந்து நாலு மாசம். 'ஏழை ஆசிரியனுக்கு ஏழு பிள்ளைகளா' ன்னு மாமாவைக் கேட்டேன். ஒரு ரைம்ஸ்க்குத்தான் ஏழு, ஏழைன்னு சொன்னேனே தவிர, வீட்டில் பண நடமாட்டம் பளிச்சுன்னு தெரியுது. பழைய திண்ணை இருந்த இடத்தையும், ஹால் வீட்டுலே பாதியையும் விட்டுட்டு, அந்தப் பக்கமாச் செங்கல் சுவர் எடுத்துப் புது வீட்டைக் கட்டியிருந்தாங்க. பத்து செண்ட் பூமியாச்சே. முக்கால்வாசி இடத்தையும் நல்லா வளைச்சுப்போட்டுக் கட்டுனதுதான். அங்கேயும் நடுவுலே கூடம் பெருசா வச்சு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா ரெவ்வெண்டு அறை. கரண்டு வந்துருச்சு. தரையெல்லாம் சிமெண்ட்ப் பூச்சுப் பளபளக்குது. கிணத்துப் பக்கம் இருந்த குளியலறைக்குக் கதவு வந்துருச்சு. அதுக்கு எதுத்தாப்போல ஒரு கழிப்பறை. கிணத்தடி மேடையும் விஸ்தாரமாப் பெருசாப் பண்ணி சிமெண்டு போட்டுருக்கு. அந்திமந்தாரை, டிசம்பர் பூச் செடிகள் மண்டிக்கிடக்குது. கனகாம்பரம், ரோஜாச் செடிகள் கொஞ்சம் வந்துருக்கு. அக்காவின் நாத்தனார் ஏற்பாடு. தினம் தண்ணி ஊத்தறதெல்லாம் பொண்ணுங்க வேலையாம்.

சோளக் காட்டுக்கிடையில் குறுக்காலே ஒரு ரோடு வந்துருக்கு. பைபாஸ் ரோடாம். லாரி, பஸ்ஸுன்னு போய்க்கிட்டு இருக்கு. எட்டிமரம் இருந்த சுவட்டையே காணோம். கணேஷ் சாரும் பாலாக்காவும் வேற ஊருக்கு மாத்திப் போயிட்டாங்களாம். அந்த வீட்டுக்கு இப்போ புது பி.டி. மாஸ்டர் வந்துட்டார். ஒண்டிக் கட்டை. அன்னு அண்ணன் அம்மா இறந்துட்டாங்க.
எபிநேசர் சாரோட மூத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் கலியாணம் கட்டிக் கொடுத்தாச்சு. மூணாவதுக்குப் பார்த்துக்கிட்டு இருக்காங்களாம். அவுங்க உள்ளூர் ஆரம்பப் பாடசாலையில் டீச்சர். ரேணு அவுங்க வகுப்பாம்.


மாமா, இப்ப அதே பள்ளிக்கூடத்துக்கு உதவித்தலைமை ஆசிரியர். சர்வீஸ் இருக்கே. சீனியாரிட்டிப்படி கிடைச்சுருச்சாம். அடுத்தவருசம் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறுவதால் இவருக்கு அந்த இடம் கிடைக்குமாம். அரசாங்கத் தேர்வு விடைத்தாள் திருத்துவது இன்னும் கூடுதலான உபரி வருமானத்துக்கு வழி செஞ்சுருக்கு. எப்பவும் கணக்குப் பேப்பர்தான் திருந்துவார். இந்த வருசம் நான் கூடவே உதவி செஞ்சேன்.

ராணி அழகாப் பெரியவளா வளர்ந்து இருந்தாள். அசப்புலே எங்க அம்மாவேதான். அதே கண்ணு. தரணி கொஞ்சம் எங்க சின்னக்கா மாதிரி.
மத்த புள்ளைங்க எல்லாம் அப்படியே அத்தையம்மாதான். இப்ப எல்லாம் தினமும் இவுங்க யாரும் கடைக்குப் போறதில்லையாம். பசங்களுக்குப் படிக்கவே நேரமில்லாமப் போகுது. மாமா மட்டும் தினம் மாலையில் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு அங்கேயே சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வந்துருவாராம். இவருக்கும் மறுநாளைக்கு எடுக்க வேண்டிய பாடங்களுக்கு நோட்ஸ் ஆஃப் லெஸன் அது இதுன்னு பள்ளிக்கூட வேலைகள் கூடியிருக்காம்.

பெரியவன், பாட்டிகூடயே இருக்கானாம். கடையில் இப்ப வியாபாரம் ஓஹோன்னு நடக்குது. இன்னும் நாலைஞ்சு ஆட்களை வேலைக்கு வச்சுருக்காங்களாம். அத்தையம்மாவுக்குத்தான் உடல்நலம் கொஞ்சம் குறைஞ்சுபோச்சு. போதும்மா, கடையை வித்துறலாமுன்னா............ அத்தையம்மா ஒரு ஆறுமாசம் போகட்டுமுன்னு இருக்காங்களாம். அந்தம்மா ரொம்ப சுதந்திரமான வாழ்க்கைக்குப் பழகுனவுங்க. மகன் வீடா இருந்தாலும் சரிப்படாது. உழைக்க அஞ்சமாட்டாங்க. அவுங்க சேர்த்து வச்சுருக்கும் காசுபணமெல்லாம் சொந்த சம்பாத்தியம். எல்லாம் பெரிய பேரனுக்குத்தான்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதான் அவனும் மிதப்புலே இருக்கான். சித்தி இங்கே நம்மகூடத்தான் இருக்காங்க. வீட்டுக்கானச் சமையலை ரெண்டு பேருமாச் சேர்ந்து ஒருமாதிரி செஞ்சுக்கறோமுன்னு அக்கா சொல்லுச்சு.

சமையல்கட்டு, இன்னும் பழையதிண்ணைப் பகுதியில்தான். அக்காவுக்கு அந்தத் திண்ணையைவிட மனசில்லே.

இதுக்குள்ளே எனக்கும் வேலை கிடைச்சு, வேலை செய்யும் மகளிர் விடுதிக்குப் போயிட்டேன். எப்பவாவது வீட்டுக்குப் போனால் அதிசயம். அப்படி ஒருசமயம் போனப்ப, ஒரு தபால் கார்டை எடுத்து என் முன்னே வீசிப் போட்டார் அண்ணன்.

தொடரும்....

48 comments:

said...

உள்ளேன் டீச்சர்

said...

/*ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி, கையில் சதா புகையும் சிகெரெட், எல்லாரையும் 'என் ரேஞ்சே தனி, நீங்க எல்லாரும் புல்'லுன்னு */

ரஜினி மாதிரி சொல்லி நம்பியார் ஆக்கிடீங்களே.


/*'பெண்டாட்டிக்கு மணைக் கட்டையா' */

வீட்டோட மாப்பிள்ளையா?

said...

ஆக உங்க சித்தப்பு பெரிய மல்லு வேட்டி போலிருக்கே?
3 வருசதுக்கபுறம் னு டைட்டில் போட்டு எல்லா விவரத்தையும் சொல்றதைப் பாத்தா கதைய முடிக்கிற அவசரம் தெரியுது...

Anonymous said...

//இதுக்குள்ளே எனக்கும் வேலை கிடைச்சு, வேலை செய்யும் மகளிர் விடுதிக்குப் போயிட்டேன். //

நீங்களும் டீச்சர் வேலைக்கா போனீங்க.அந்தக்கடுதாசி கோபால் சார் உங்களுக்கு எழுதுனது இல்லையே :)

said...

மத்தவங்க எல்லாம் புல்லுன்னா இவரு ஹாப்பா? குவார்ட்டரா?

said...

//
அப்படி ஒருசமயம் போனப்ப, ஒரு தபால் கார்டை எடுத்து என் முன்னே வீசிப் போட்டார் அண்ணன்.
//

நல்ல எடத்துல விட்டீங்க இன்டர்வெல் :0)

said...

ரேணுவோட சித்தி இப்ப நியூஸில இருக்காங்களாம். ப்ளாக் வட்டாரத்துல ரொம்ப பிரபலமாம். பின்னூட்ட நாயகி,டீச்சர்னு நெறய பட்டம் வாங்கிருக்காங்களாம். அவுங்க வீட்டுக்காரர் பேரு கோபால். ரொம்ப அப்பாவி:-)...அவுங்க கண்ணாலம் கட்டுன கதைய 'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு'-ல பாக்கலாம்:-))

பாத்தீங்களா? உங்க நடை அப்படியே வருது:-))))))

said...

தங்கைக்கோர் தபால்!

said...

//எல்லாரையும் 'என் ரேஞ்சே தனி, நீங்க எல்லாரும் புல்'லுன்னு பார்க்கும் ஒரு அகம்பாவமான பார்வையில் ஒருத்தர் இருந்தாருன்னா//

மாப்பிள்ளைன்னு ஒரு படம் பார்த்திருக்கீங்களா..........

said...

கதைகள் ஆயிரத்துக்கு எதிர்பார்ப்பு கூடிக்கிட்டே போகிறதே துளசி:)

அந்தச் சித்தப்பாவை நினைத்தாலே பகீர்னு பயமா இருக்கு. சரியான எம் .ஆர். ராதா சாயல்.

அண்ணா கல்யாணம் ஆகிடுச்சா இந்த சமயத்தில்.

சின்ன அக்கா பத்தி நீங்க சொல்லி நான் பார்க்காம விட்டுட்டேனா.

''தங்ஸ்'' தனிக்கதை சொல்லுறாங்களே!:)

said...

//
ராணி அழகாப் பெரியவளா வளர்ந்து இருந்தாள். அசப்புலே எங்க அம்மாவேதான். அதே கண்ணு. தரணி கொஞ்சம் எங்க சின்னக்கா மாதிரி.//

மறைந்தவர்களின் ஜாடை வம்சத்தில் வந்து மற்றவர் பார்த்து மனச் சாந்தி கொள்வது..எல்லாக் குடும்பங்களிலும் இதுவும் உண்டு.

வீசியெறியும் அளவுக்கு அந்த தபாலில் இருந்த விசயம்தான் என்ன?

said...

அக்காவுடனான தொடர்பு நிறைய விட்டுப் போனது தெரியுது டீச்சர்... :)

//ஒரு தபால் கார்டை எடுத்து என் முன்னே வீசிப் போட்டார் அண்ணன்.
//

அந்தக்கடுதாசி கோபால் சார் உங்களுக்கு எழுதுனது தானே? :)///

said...

மேடம், சின்ன சின்ன விஷயம் கூட விட்டு போகாம கதை சொல்லும் பாணி, நகைச்சுவை எல்லாம் அப்படியே இருக்குனாலும், இந்த தொடர் அவ்வளவு பிடித்தமாக இல்லை எனக்கு (மற்ற தொடர்கள் போல). :(

அக்கா அப்படினு தலைப்பு இருக்கே ஒழிய, உங்க அக்காவை பற்றி என்ன சொல்ல வந்தீங்கனு இன்னும் புரியலை, எகப்பட்ட கேரக்டர்ஸ் வாரங்க எல்லாருக்கும் பெரியம்மா, சித்தி, மாமானே சொல்றதுல யாரு என்னனு பதியலை (பேரு போட்டு சொல்லிருக்கலாமோ?), ரொம்ப ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் வேற அதனால நீங்க வழக்கமா சொல்லும் கதைகளில் வரும் ஒட்டுதல் ஏற்படவில்லை.

நீங்க வழக்கமா விஸ்தாரமா கிளைக்கதை இலைக்கதை எல்லாம் சொல்லிட்டே போற மாதிரி சொன்னா தான் அழகு. ஹும்ம்ம்ம்..

said...

தபால்கார்ட்ல கோபால் சார் எழுதி இருந்தா அவர் ஹீரோ ஆகி இருக்க முடியாது..வில்லன்.. :)))

said...

வாங்க நசரேயன்.

நம்பியார் சினிமாவில் மட்டும்தான் வில்லன்:-))))

மனைவி சொல்லே மந்திரம் தான் பெண்டாட்டிக்கு மணைக்கட்டை. (இது ஒரு தெலுங்குப் பழஞ்சொல்)

said...

வாங்க நரேன்.

என்னதான் இழுத்தாலும் ஒரு சமயம் முடிக்கத்தானே வேணும்? அதான் ரொம்ப இழுக்காமல் முடிக்கலாமுன்னு:-)))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

உங்க ரெண்டு கேள்விக்கும் ஒரே பதில்,

இல்லை

said...

வாங்க கொத்ஸ்.

இதுக்குத்தான் காக்டெயில் எல்லாம் கூடாது. இது full இல்லை. புல்லு:-)

said...

வாங்க அதுசரி.


அப்பாடா..... 'சரி'யான இடம்தான்:-)))))

said...

வாங்க தங்ஸ்.

எனக்குப்பிறகு 'நடை'யை யாரிட்டே கொடுக்கலாமுன்னு யோசனையா இருந்தேன்.
இப்ப இல்லை:-)

said...

நரேன்,

தங்கைக்கோர் தபால்? நோ ச்சான்ஸ்.....

said...

வாங்க SUREஷ்.

பார்க்கலையே......

said...

வாங்க வல்லி.

ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டா எப்படிப்பா?

நிதானமாச் சொல்றேன் ப்ளீஸ்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

எல்லாம் ஜீனுங்க வேலைதானே?:-)

கடுதாசியில் என்னவா?

திங்கட்க்கிழமை தெரிஞ்சுரும்:-))))

said...

//அப்படி ஒருசமயம் போனப்ப, ஒரு தபால் கார்டை எடுத்து என் முன்னே வீசிப் போட்டார் அண்ணன்.//

சஸ்பென்ஸா முடிச்சிட்டீங்க...அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்

said...

வாங்க தமிழ் பிரியன்.

சரியாச் சொன்னீங்க. ஒரு தாய் வயித்துப் பிள்ளைகள் என்றாலும் காலஓட்டத்தில் மெள்ள மெள்ள பிரிஞ்சு போயிடறோமே.

கோபால்? யாரு? :-)))

said...

வாங்க ஹேமா.

அக்காவைப் பத்தி என்ன சொல்லவந்தேன்? மனசுலே ஒரு மூலையில் குடைச்சல். அவ்ளோதான்.

பெயர்கள் சொன்னால் இன்னும் தலைசுத்தி இருக்கும்:-)))))

ரொம்ப சுமாரா இருக்குன்னா..... எனக்குச் சரியாச் சொல்லத் தெரியலைன்னு வச்சுக்கலாம்(-:

said...

வாங்க கயலு.

எக்ஸாக்ட்லி:-)))))

said...

என்ன வேலைக்குனு கூட சொல்லிருந்தா நல்லா இருந்திருக்கும் !!!!. ரேணு, மத்தவங்களும் என்ன படிக்கறாங்கனும் சொல்லி இருக்கலாம்.சித்தப்பா பத்தி டிஸ்கரைப் பண்ணினது சூப்பர்.

said...

வாங்க சிந்து.

எல்லாத்தையும் இதுலேயே சொல்லிட்டா...அப்புறம் என் கதைக்கு எழுத ஒன்னுமே இருக்காதேப்பா:-)

said...

அதான் என் கதைகள் ஆயிரமா? ஜமாய்ங்க டீச்சர்!!!!

said...

//என்னவோ இருக்கு என்னன்னுதான் தெரியலை.
குடும்பங்களுக்குள் ரகசியங்கள் பதுங்கிக் கிடக்கின்றன என்றது மட்டும் புரிஞ்சுபோச்சு.//

அற்புதமான உண்மை..! அதிரடியான உண்மை!

கலக்குறீங்க டீச்சர்!..அப்படியே நேரமிருந்தா நம்ம ஊட்டுப்பக்கமும் வந்து போங்க!

said...

சூப்பர் பிரேக்....அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))

said...

உங்க "அக்கா" தொடர் சின்ன வயசில தூங்கும் போது கதை கேட்ட உணர்வு. அப்பா கதையை இப்படித்தான் கரெக்டா முக்கியமான கட்டத்தில் நிறுத்துவார்... சீக்கிரம் சொல்லுங்க..யார் கடிதம் அது ??!!!

said...

வாங்க நான் ஆதவன்.


மெகா சீரியலுக்குப் பயிற்சி எடுத்துக்கறேன்.

சரியான இடத்தில் தொடரும் போடத் தெரிஞ்சுக்கிட்டேன்:-)))))

திங்கள் வரும்:-)

said...

வாங்க சுரேகா.

உங்க 100க்கு வாழ்த்துக் கொடுக்க நினைச்சப்ப.... வாசலில் யாரோ வந்துருந்தாங்க. பேச்சுலே இதை மறந்துட்டேன்.

இனிய வாழ்த்து(க்)கள்.

அங்கே மறக்காம வந்து சொல்லிடலாம்.

said...

வாங்க கோபி.

திங்கள் மீண்டும் வருக:-))))

said...

வாங்க இலா.

புதுசா இருக்கீங்க? முதல்முறையா வந்துருக்கீங்க போல!

நலமா?

நான் அடிப்படையில் ஒரு 'கதை சொல்லி'
அதான் சொல்லிக்கிட்டே போறேன்:-)

அடிக்கடி வாங்க.

ஆமா..... அது யார் கடிதம்?
திங்களன்று சொல்லிறலாம்

said...

டீச்சர் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.... உங்க பழைய கதைய லேபிளா தனியா ஒரு சைட்ல போட்டீங்கன்னா படிக்கறதுக்கு சுலுவா இருக்கும்.

said...

//ஒரு மகான் ரேஞ்சுக்குக் கொண்டுவச்சுக்கிட்டுப் பாட்டியும் மத்த சித்திகளும் ஆலோசனை கேப்பாங்க. ஆனா... ... அவரை ஏன் உச்சாணிக்கொம்புலே வச்சு ஆடுதுன்றதுதான்//

எல்லார் வீடுகளிலும் இப்படி செல்வாக்கு வாய்ந்த ஹிட்லர் ஹிட்லிகள் உண்டு என்றே நினைக்கிறேன். நம் நாட்டில் குடும்பம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகமாய் இருப்பதாலோ என்னவோ, எந்த ஒரு காரியமாய் இருந்தாலும், படிப்பு, திருமணம், நகை வாங்குதல், தனியே பயணித்தல், லொட்டு, லொசுக்கு என எல்லாவற்றிற்கும் இந்த ஹிட்ல/ஹிட்லினிகளின் feedback/suggestion கேட்டு செயல்படுவது செம்ம கடுப்பாய் இருக்கும்.

இந்தத் அத்தியாத்தில் 'அக்கா' வரவேயில்லையே :(

said...

சும்மா சொல்லக்கூடாது, உங்கள் எழுத்தில் உறவுகளின் இணைப்பு, ஒரு விடயத்தை ஆராய்கின்ற தன்மை மிகவும் மேலோங்கி நிற்கின்றது. தங்களை பெரியவர்களாக காட்டிக் கொள்பவர்கள் பலர் பல விதமான அணுகுமுறைகளை கையாளுவர். உண்மையான பண்பான மனிதர்கள் அவமானம் பழக்கப்பட்ட ஒன்றாகிவிடுகின்றது. நல்ல தொடர் எழுதுங்கள்.

said...

//ஒயிட் & ஒயிட் போட்டுக்கிட்டுத் தங்க ஃப்ரேம் மூக்குக் கண்ணாடி, கையில் சதா புகையும் சிகெரெட், எல்லாரையும் 'என் ரேஞ்சே தனி, நீங்க எல்லாரும் புல்'லுன்னு பார்க்கும் ஒரு அகம்பாவமான பார்வையில் ஒருத்தர் இருந்தாரு//

டீச்சர், அந்தக் காலத்துத் தமிழ்ப்பட வில்லனுங்கதான் ஞாபகத்துல வந்தாங்க :(

//அப்படி ஒருசமயம் போனப்ப, ஒரு தபால் கார்டை எடுத்து என் முன்னே வீசிப் போட்டார் அண்ணன்.//

அச்சச்சோ..இந்த இடத்துல 'தொடரும்' போட்டுட்டீங்களே.. :(

said...

வாங்க நான் ஆதவன்.

துளசிதளத்துலேயே வலப்பக்கம் இருக்கும் லிங்குகளில் நுழைஞ்சு படிக்கவேண்டியதுதான்.

எண்ணுத்துச் சொச்சத்தை எப்படி தனியாப் பிரிச்சுப் போடமுடியும்?

said...

வாங்க ஷக்திப்ரபா.

அக்கா வீட்டு விஷயங்கள் சிலதை அக்காவே சொல்றாங்களேப்பா இந்த அத்தியாயத்துலே!!!!

அடுத்த பகுதியில் 'அக்கா' இல்லை.
ஆனால் அக்காவைப் பாதிக்கும் சம்பவங்கள் உருவாகுவதை எழுதித்தானே ஆகணும்?

said...

வாங்க காரூரன்.

அவமானங்களைச் சொல்லாம மறைச்சு
எழுதலாம். ஆனா எழுத்தில் உண்மை இருக்காதுல்லே?

வருகைக்கு நன்றி. அடிக்கடி வந்து போங்க.

said...

வாங்க ரிஷான்.

பரிசுத்தமா உடை உடுத்துபவர் மனசு பூராவும் அழுக்கு. இப்படி எதிர்மறையா இருப்பது வில்லன்கள் பழக்கமோ என்னவோ? :-)))

said...

அக்காவைப் பத்திச் சொல்லும்போது அங்கங்கெ அலைபாய்ஞ்சுக்கிட்டுப் போறேன் பாருங்க.

இந்த அலைபாய்தல் கூட நல்லாதான் இருக்கு, நீங்க கதை சொல்ற விதம் அப்படியே கட்டிபோடுது, அது அக்கா கதையோ, இல்ல அலைபாய்தல் கதையோ.

நல்லவேளையா என்னை மேலே படிக்க வச்சது எல்லாம் விவரமா அப்புறம் 'என் கதை'களில் சொல்றேன்.
அப்புறம் கதை, என் கதை லிஸ்ட் ரொம்ப பெரிசா போயிட்டே இருக்கு.
நாங்க ரெடி, நீங்க ரெடியா.

said...

வாங்க அமித்து அம்மா.

அதான் அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு இருக்கே. ஆயுசு உள்ளவரை சொல்லிக்கிட்டுக் கிடப்பேன்:-)))))

ஆதரவுக்கு நன்றி.

அதுவரை அடிச்சு விரட்டாம இருக்கணுமே நம்ம மக்கள்ஸ்:-))))