Monday, April 21, 2008

விதவிதமாய்ப் புது வருசம்.

'உள்நாட்டுக்காரனுக்கு ஒண்ணு. வெளிநாட்டுக்காரனுக்கு பல' இப்படி ஒரு 'புது(பழ)மொழி எழுதணும்போல இருக்கு. எந்தப் பண்டிகை, விழாவானாலும் அன்னிக்குத் தேதிக்குக் கொண்டாடுனமா அப்புறம் அடுத்த பண்டிகைக்கான ஆர்பாட்டத்தில் இறங்கினோமான்னு இல்லை. எதா இருந்தாலும் வெவ்வேற இடத்தில் பலமுறை கொண்டாடுனாத்தான் மனசு ஆறுதுப்பா எங்களுக்கு. ஒரு முறை (2 வருசம் முந்தி) தீபாவளியை 11 முறை கொண்டாடுனோம்:-)

தமிழக அரசின் ஆணை இவ்வளவு தூரம் எட்டலை. சித்திரை வருசப்பிறப்புக் கொண்டாட்டம் தமிழ்ச்சங்கத்தில் முந்தாநாள் சனிக்கிழமை மாலை நடந்துச்சு. வழக்கம்போல் போய்ச் சேர்ந்தோம் கையில் புளிசாதமூட்டையைத் தூக்கிக்கிட்டு.




நல்ல கூட்டம். ஒரு நூறுபேருக்கு இருப்பாங்க. அதுலே ஒரு அரைப்பங்கு புதியமுகங்கள். தமிழ்ச்சங்கத் தேர்தல் முடிஞ்சு (அண்டர் நியூ மேனேஜ்மெண்ட்) நடக்கும் முதல் விழா. இதைப் பற்றிய மற்ற 'நடந்த விவரங்கள்' எல்லாம் எழுதி இங்கே நம்ம தளத்திலேயே ஒரு ட்ராஃப்ட் ஆக சேமிச்சு வைக்கப்போறேன். இப்ப இதை வெளியிடலைன்னாலும் எங்காவது ஆவணப்படுத்தணுமுன்னு ஒரு தோணல். சேமிச்சுவைக்க இதைவிட நல்ல பெட்டகம் வேற எங்கே இருக்கு? தேவைப்படும்போது பயனாகும்:-)))))




சுநாமியில் இறந்தவர்களுக்கும், தமிழ்மொழிக்காக இறந்தவர்களுக்கும் ஒரு நிமிட மவுன அஞ்சலியுடன் விழா ஆரம்பித்தது. இப்ப என்னடா திடீர்னு சுநாமியின் நினைவுன்னு யோசிச்சதில் கொஞ்சம் விளங்குன மாதிரி இருந்தது.

ஆஹா......விட்ட இடத்தில் இருந்து தொடக்கம். சுநாமி இழப்புகளுக்கான நிதி திரட்டி அனுப்பியதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு(??) காரணம் அப்போதிருந்து தமிழ்ச்சங்கத்திற்கு வராமலிருந்த ஒரு பகுதியினர் சமீபத்திய தேர்தலில் வென்று வாகை சூடியிருந்தனர்.


விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாக, இந்த ஆண்டு நடக்கவிருக்கும் நியூஸிநாட்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இப்போதைய ஆளுங்கட்சி சார்பில் நிற்கவிருக்கும் வேட்பாளர், அவர் மனைவி, (இங்குள்ள வழக்கத்தை அனுசரித்து அரசியல்வாதிகள் தங்கள் மனைவியுடன், கூட்டங்கள் & விழாக்களுக்கு வருவார்கள்) ஆளுங்கட்சியின் 'Ethnic Liaison Officer' ஆக இருப்பவர் என்று மூவர் வந்திருந்தனர். இந்த லயசன் ஆஃபீசர் 'ராஃபா ஆண்டன்' எனக்கு பலவருசங்களாகப் பழக்கமுள்ள ஒரு நண்பர்தான்.எங்கே பார்த்தாலும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தும் நல்ல தோழி. அசப்பில் பார்ப்பதற்கும் ஏறக்குறைய என்னைப்போலவே(அளவில்):-)))))


சங்கத்தின் ஆரம்பகால நிறுவனர்களில் ஒருவரும் வந்திருந்தார். இவரைப் பார்த்தே ஒரு ஏழெட்டு வருடமாகிறது. வேறொரு கருத்துவேறுபாட்டின் காரணம் கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கனகாலமாகத் தவிர்த்துவந்தவர். பழைய முகங்களில் சிலரைக் கண்டதில் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுக்கும் எங்களைக் கண்டதில் மகிழ்ச்சி இருந்திருக்கக்கூடும். மேற்படி நபரைப் பேச அழைத்திருந்தார்கள். (இங்கே 1972ல் நம்ம ஊரில் குடியேறிய மூத்தத் தமிழர், இவர்தான். இலங்கையைச் சேர்ந்தவர். இவருக்கு அடுத்து இன்னொரு இலங்கைத் தமிழர் இங்கே குடியேறினார். நாங்கள் இங்கே வந்த மூன்றாவதுத் தமிழர்களும். இந்தியாவில் இருந்து வந்த முதல் தமிழர்களுமாக இருந்தோம்.)

போனவருடம் புதிதாகச் செய்திருந்த தமிழ்ச்சங்க பேனரைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்த திருவள்ளுவர் படத்தைக் காண்பித்து 'இவர் 1330 கப்லெட்ஸ் எழுதியிருக்கார். இவர் 2000 வருசங்களுக்கு முன்னே இருந்தார் என்று விளக்கினார். புதுசா வந்திருக்கும் வெள்ளைக்காரர்களுக்கு நம் தமிழ் பாரம்பரியத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தார். பேச்சு முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்தது. பரவாயில்லை. விருந்தினருக்கு நாம் என்ன பேசுகிறோம், எதைப் பற்றிப் பேசுகின்றோம் என்பது புரியவேணும்தானே?


அடுத்துச் சொன்ன வரிகள்தான் என்னைத் தூக்கிவாரிப் போட்டது. பேனரின் வலது பக்கம் தமிழில் எழுதியிருந்த 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்பதைக் காண்பித்து , இது சமீபத்திய கவிஞர் எழுதியது. இவர் பெயர் சுப்ரமண்யன். சுப்ரமண்ய பாரதி என்றும் சொல்வார்கள். இவர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதி, ஃப்ரெஞ்சு அரசின் பொறுப்பில் இருந்த பாண்டிச்சேரி என்னும் ஊரில் அடைக்கலம் புகுந்தார்......................

அப்புறம் இலங்கைப் பிரச்சனைகளைக் கொஞ்சம் சொல்லிவிட்டு, பழைய பாராளுமன்ற அங்கத்தினருக்கு பலமுறை இதைப் பற்றிச் சொன்னோம். அவர் காது கொடுத்துக் கேட்டார்.ஆனால் ஒண்ணும் செய்யவில்லை. நீங்கள் அவருடைய இடத்துக்கு வரப்போறீர்கள். நீங்கள் எதாவது செய்யணும் என்றும் கூறினார்.


அடுத்துப் பேசவந்த வேட்பாளர் ஒரு பத்திரிக்கையாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். உலகம் முழுசும் போய்வந்துருக்காராம், இந்தியா இலங்கை தவிர! இலங்கைப் பிரச்சனையையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் இப்ப இவர் பேச்சில் இருந்து புரிஞ்சுக்கிட்டாராம்(????!!!!!!)


உலகம் முழுவதும் அரசியல்வாதிக்குத் தெரிஞ்ச ஒரே மொழி 'ஓட்டு' என்றது நம்ம மக்களுக்குப் புரிஞ்சாத் தேவலைன்னு எனக்கிருந்துச்சு.



கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு. இங்கே நடனம் கற்பிக்கும் ஆசிரியை, தன் மாணவிகளுடன் நடனத்தில் பங்கேற்றார். மதுரை முரளிதரன் எழுதி இசை அமைத்த 'கோபியர்கள் கொஞ்சும் கோபாலன்' பாட்டுக்கு முதல் நடனம். அடுத்து அவரது 5 மாணவிகள் சுதா ரகுநாதனின் தில்லானாவுக்கு ஆடினார்கள். இதில் நான்குபேர் கேரளாவைச் சேர்ந்த பெண்கள். ஒருவர் (பிங்க் நிற உடுப்பில் ஆடுபவர்) உள்ளூர் வெள்ளைக்காரப் பொண்ணு. இவுங்க எல்லாரும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவங்க. கலைக்கு மதமோ மொழியோ பிரச்சனையே இல்லை பாருங்க. இதைப் படிச்சுட்டு இங்கத்துக் கேரளா சங்கத்துலே பரதநாட்டியம் ஜோரா நடக்குமுன்னு நினைச்சுறாதீங்க. அந்த சங்கமும் ரெண்டுபட்டுக் கிடக்கு. அங்கே போகாதவங்க, நம்ம தமிழ்சங்கத்து நிகழ்ச்சிகளில் கலந்துக்கறாங்க. எப்படியோ, 'ஊர் ரெண்டு பட்டா.....யாருக்கோ கொண்டாட்டம்' என்ற பழமொழி பொய்க்கலை:-) அதுக்குப்பிறகு காவடிச்சிந்து என்று 'வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்' பாட்டுக்கு ஆசிரியை தனியாக ஆடினார். உங்களுக்காக அந்தத் தில்லானாவை இங்கே வலை ஏத்தி இருக்கேன்.







ஒரு இளைஞர் ரெண்டு திரையிசைப் பாடல்கள் பாடினார். எல்லாம் ஒரு சோகம் கலந்த 1980 பாட்டுக்கள். நல்ல குரலாக இருந்துச்சு.

தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் (இருந்த) இருவர் வேறு ஊர்களுக்குப் போயிட்டாங்க. இப்பப் பள்ளிக்கூடமும் ஆசிரியரும் மட்டும் இருக்காங்க, மாணவர்கள் வருகையை எதிர்பார்த்து. இப்பப் புதிதாகச் சங்கத்தில் வந்து சேர்ந்துள்ள மக்களில் சில குழந்தைகளைப் பார்த்தேன். அவர்கள் தமிழ் கற்க வருவார்கள் என்று நம்பிக்கை இப்போதைக்கு எனக்கிருக்கு.


அதுக்குப்பிறகு வழக்கம்போல் சாப்பாடு. வகைகள் புட்டு இடியப்பம், சோறு,பூரி,உப்புமான்னு நிறையத்தான். கறிகள்தான் முக்காலும் மூணுவீதம் உருளைக்கிழங்குகளே:-))))) சாப்பாட்டுவகைகளை ஒழுங்குபடுத்திக்கிட்டு இருந்த கோபாலிடம் மெதுவா..... பொருட்குற்றம் ஆகிப்போச்சுன்னு முணுமுணுத்தேன். 'அவர் யூனியில் பெரிய பேராசிரியர். அதையெல்லாம் கண்டுக்காதே'ன்னார். நானும் அதுக்குப்பிறகு வேட்பாளரின் மனைவிக்கு எந்தெந்த உணவு காரம், மசாலா எல்லாம் அதிகமாக இல்லாமல் அவுங்க சாப்பிடும்படி இருக்குமுன்னு பரிந்துரை செய்யறதில் மும்முரமா இருந்துட்டேன். அப்புறம் நான் சாப்பிடப் போனப்பப் பேராசிரியரும் என் அருகிலே இருந்து உணவு எடுத்து அவரோட தட்டிலே வச்சுக்கிட்டு இருந்தார். என் வாய்ச் சும்மா இருக்குமா?


'உங்க பேச்சுலே, யாதும் ஊரே....பாரதியார்ன்னு சொல்லிட்டீங்களே. அதை எழுதுனவர் கணியன் பூங்குன்றனார் ஆச்சே'ன்னேன். ஒரு வினாடி திடுக்கிட்டுப்போனவர், 'ஓ ஐ ஸீ' ன்னார். அவரை மேலும் சங்கடப்படுத்தவேணாமுன்னு வேற இடத்துக்குப் போயிட்டேன்.


அங்கே கௌபாய் வேசத்தில் வந்திருந்த இன்னொரு பஞ்சாபி நண்பர் நடன நிகழ்ச்சிகளைப் பத்தி என்கிட்டே அப்பப்பக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார். அவர் இங்கே ஒரு JPயாக நியமனம் ஆகி இருப்பதைச் சொன்னார். நம்ம கம்யூனிடிக்கு பயனா இருக்கும். அதான் இந்தியாவில் எதாவது பேங்க், இல்லே Pan நம்பர் விஷயமா அனுப்பும் ஒரு கட்டுக் காகிதத்துக்கும் ஜேபி கையெழுத்து வேண்டி இருக்கே:-)


அவர் நினைச்சுக்கிட்டு இருக்கார் தான் மட்டுமே இங்குள்ள இந்தியரில் நியமனம் பெற்றாருன்னு. இல்லை. ஏற்கெனவே நம்ம நண்பர்கள் ரெண்டு பேர் இருக்காங்க. நீங்க இந்த வரிசையில் மூணாவதுன்னேன். அவசர உதவின்னா உடனே கூப்புடறேன்னு சொல்லி வச்சேன்:-) இவர் இப்போது இங்கே கம்யூனிட்டி ஒலிபரப்பில் இந்தியர்களுக்கான கீத்மாலா நிகழ்ச்சியில் ரேடியோ ஜாக்கியா இருக்கார். இந்த நிகழ்ச்சி 1998 ல் ஆரம்பிச்சப்ப நானும் ஒரு ஒலிபரப்பாளரா இருந்துருக்கேன். அப்ப நான் இந்தி மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், தெலுங்குன்னு எல்லாப் பாட்டுகளையும் கலந்தே ஒலிபரப்புவேன். அந்த வருடத்து சிறந்த சேவைன்னு அப்ப அவார்டும் கிடைச்சது. இந்த நிகழ்ச்சி இந்த வருட சிறந்த சேவைக்கான இறுதிச் சுற்றில் தேர்வு ஆகி இருக்காம். அதுக்கான விழா இன்னும் ரெண்டு வாரத்தில் ஆக்லாந்தில் நடக்குதாம். கேட்கவே நல்லா இருந்துச்சு. எனக்கும் ரேடியோ நிகழ்ச்சி நடத்தறதுலே ரொம்பவும் ஆர்வம்தான். மீண்டும் என்னோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்த வாங்கன்னு கூப்புட்டுக்கிட்டே இருக்கார். நேரம்தான் இல்லை. ஒரு நாள் விருந்தினர் ஒலிபரப்புன்னு போகணும்.


இடமிருந்து வலம்:-) Rafaa Antoun, Tulsi, Amrith(JP)


கிளம்பும் சமயம் எத்னிக் லயசன் ஆஃபீஸர் ராஃபா, மறுநாள் நடக்க இருக்கும் பைசாகி விழாவுக்கு வரலாமுன்னு இருக்கேன்னாங்க. எல்லாம் அங்கே கூடும் கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி ஒட்டு வேட்டையாடத்தான்.

'அங்கே கீழே தரையில்தான் உட்காரணும். இருக்கை வசதிகள் இல்லை'ன்னு அவுங்க ஆர்வத்துலே கொஞ்சம் தண்ணீரை ஊத்துனேன். 'ரெண்டு மூணு மணிநேரம் ஆகும். அதனாலே பனிரெண்டரை, ஒரு மணி போல வாங்க'

தொடரும்.........

16 comments:

said...

தோழியும் துளசியும் சரி நிகர் சமானம்னு சொல்ல முடியாது. அவங்க இன்னும் கொஞ்சம் கூடித்தான் இருக்காங்க.:)
மத்தபடி சங்கம்னு ஆரம்பிச்சா கருத்து வேறுபாடுகளும் கூடவே வந்துடுமோ!!
புளியோதரை மிச்சம் இருந்த்தால் பார்சல் அனுப்பவும்:)

Anonymous said...

\\'உங்க பேச்சுலே, யாதும் ஊரே....பாரதியார்ன்னு சொல்லிட்டீங்களே. அதை எழுதுனவர் கணியன் பூங்குன்றனார் ஆச்சே'ன்னேன். ஒரு வினாடி திடுக்கிட்டுப்போனவர், 'ஓ ஐ ஸீ' ன்னார். \\
டீச்சர்னா டீச்சர் தான் கரெக்டா போய் திருத்தீட்டீங்களே வெரிகுட்

said...

ஆக்லாந்தும் உங்க பேட்டைதானே?
அங்கிருந்து ப்ரதிமா னு ஒரு பதிவர்
வந்திருக்காங்க பார்த்தீங்களா?

said...

உள்ளேன் டீச்சர் ;))

said...

<==கையில் புளிசாதமூட்டையைத் தூக்கிக்கிட்டு.==>

புரியலே. பொதுவா விழா ஏற்ப்பாடு பண்றவங்கதான கொடுப்பாங்க =)))

வோட்டு கேக்கிறவஙகளாவது கொடுக்கலைன்னா அப்புறம் எதுக்கு அவங்கள அனுமதிச்சீங்க?

said...

வாங்க வல்லி.

பிரிக்க முடியாதது.....

சங்கமும் சண்டையும்

தருமியின் புதுக்கேள்வி சிவனுக்கு:-))))

எல்லாம் எம்டிஆர் புளியோதரை மிக்ஸ் உபயம்தான்ப்பா:-))))

said...

வாங்க சின்ன அம்மிணி.

அன்னிக்கு உங்களையும் நினைவு கூர்ந்து ஒருத்தரிடம் பேசினேன்.

ஹாமில்டனில் இருந்து தேனுகா வந்திருந்தாங்க:-)))))

said...

வாங்க சிஜி.

கவனக்குறைவு ஆகிருச்சு.

நன்றி. உங்கள் பின்னூட்டம் காப்பாத்துச்சு.

எங்க பேட்டைதான் நாட்டைப் பொறுத்த அளவில்:-)

உலகப்படத்தில்தான் இது இக்கினியூண்டு.

தற்போது இங்கே இருக்கும் 3 பதிவாளர்களும் மூன்றுமுக்கிய நகரத்தில்:-)

said...

வாங்க கோபி.

'ஆஜர் ஹோ'வா:-)))

said...

வாங்க சாமான்யன் சிவா.

இது நம்ம தமிழ்ச்சங்கம் ஏர்பாடு செய்த விழா. எப்பவும் போல Pot luck தான்.

அரசியல்வியாதிகள் இப்படிக் கூட்டத்தில் வந்து கலந்துக்கிட்டு தன்னை அறிமுகப்படுத்திக்கிறாங்க:-)

இன்னும் பிரியாணி & க்வாட்டர் கலாச்சாரம் இவுங்களுக்குத் தெரியலை:-)))))

said...

வணக்கம்மா!
சங்கம் வச்சு தமிழ் வளக்குறீங்க!
வாழ்த்துக்கள்!

RJயா வேற இருந்தாச்சா!

நடத்துங்க ! நடத்துங்க!

said...

உள்ளேன் ரீச்சர்!!

said...

வாங்க சுரேகா.


வணக்கம்.

21 வருசமா இங்கே இருக்கோம். நம்ம கம்யூனிட்டிக்கு என்ன வேணுமோ அதையெல்லாம் ஆரம்பிச்சுக் கொடுத்தாச்சு. இனி இளவயதுஆட்கள் எல்லாத்தையும் ஏற்றுப் பொறுப்பா நடத்தணும்.

நாளைய உலகம் அவுங்களுக்குத்தானே?

said...

வாங்க கொத்ஸ்.

அது என்ன ஆஜர் மட்டும்? கொறைஞ்சது அந்த வீடியோவில் நடனம் பார்த்துட்டு, நம்ம பசங்க எப்படி ஆடுறாங்கன்னு ஒரு பின்னூட்டம் போடக்கூடாதா?

யாருமே நாட்டியத்தைப் பத்தி வாயைத் திறக்கலை!!!

said...

கடல் கடந்து தமிழை வளர்ப்பவர்களின் முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை.நல்ல அழகாக எழுதியுள்ளீர்கள். நமக்கு எழுதுவதற்கு இன்னும் இயலவில்லை.இப்போது தான் தமிழில் யோசிப்பதற்கே முயற்சி எடுக்கிறேன்.
விரைவில் எழுதுகிறேன். :)

said...

வாங்க பிரதிமா.

இப்ப நீங்களும் கடல்கடந்து வந்தாச்சு.

அங்கே ஆக்லாந்தில் தமிழ்ச்சங்கம் அட்டகாசமா நடக்குதாமே.
போய்வந்தீங்களா?