Friday, April 25, 2008

பாப்பி தினமும், ஆன்ஸாக் பிஸ்கெட்டும்

இங்கத்துக் கொடிநாள்தாங்க இந்த ஆன்ஸாக் டே என்றது. இந்த 'ஆ' ஆஸ்தராலியாவையும் 'ன்ஸா' என்பது நியூஸிலாந்தையும் குறிக்கும்.
அடுத்து வரும் a ஆர்மி யையும் c என்றது corps.
A + NZ +AC = ANZAC. சரிதானேங்க.



நம்மூர்லே கொடிநாளுக்கு உண்டியல் குலுக்கிக், காசு போட்டவுடன் குட்டியா தேசியக்கொடி தருவாங்க இல்லே. அதே போல இங்கே கொடிக்குப் பதிலா சிகப்பு நிறமுள்ள பாப்பிப் பூ.
இந்தப் பாப்பிப் பூ என்றது கசகசாச் செடியின் பூதாங்க.



இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று வீடு திரும்பியவர்கள் சங்கம்( Royal New Zealand Returned and Services' Association, RSA)
கொடிதினத்துக்கு இந்தப் பாப்பிப்பூவைக் கொடுத்து உண்டியல் குலுக்குவாங்க. இதில் கிடைக்கும் நிதியை இராணுவவீரர்களின் குடும்ப நலனுக்குப் பயன்படுத்தறாங்க.



ஏன் இந்த பாப்பிப் பூவைத் தேர்ந்தெடுத்தாங்க?



யுத்தம் நடந்த இடத்தில் மனுசங்க, கட்டிடம்,வீடுகள்னு எல்லாம் அழிஞ்சுத் தரைமட்டம் ஆன வெற்றிடத்தில், பருவகாலம் மாறியவுடன் முதல்முதலா முளைச்சது இந்தச் செடிகள்தானாம். 'வாழ்க்கை இன்னும்முடிஞ்சு போகலை. மறுபடியும் வாழ்க்கை இருக்கு' என்ற நம்பிக்கையைக் கொடுத்துச்சாம் இது. 1921 நவம்பர் 11 தான் முதல் பாப்பி தினம் பிரிட்டனில் அனுசரிச்சாங்க.
இந்த ஆன்ஸாக் தினம் என்பது, முதல் உலகமகா யுத்தத்திற்கு இங்கே நியூஸி & ஆஸ்தராலியாவில் இருந்து புறப்பட்டுப்போன படைவீரர்கள் யுத்தம் நடந்த கல்லிப்போலி என்ற இடத்துக்குப் போய்ச்சேர்ந்த தினம்தான் இந்த ஏப்ரல் 25 என்றது. அது நடந்தது 1915.



இந்தப் போர் ஆரம்பிச்சது ஜூலை மாசம் 28, 1914. முடிஞ்சது நவம்பர் 11, 1918.



இதுக்கும் இந்த பிஸ்கெட்டுக்கும் என்ன சம்பந்தம்?



இதை அந்தக் காலத்துலே 'படைவீரர்கள் பிஸ்கெட்ஸ்'ன்னு சொல்லுவாங்களாம். பார்க்கக் கொஞ்சம் கரடுமுரடா இருந்தாலும்,
நாள்பட வச்சுருந்து தின்னலாம். சட்ன்னுக் கெட்டுப்போயிறாது. போர் நடக்கும் இடத்துக்கு இங்கே இருந்து உணவுப்பொருட்கள் அனுப்பும்போது இங்கத்துப் பெண்கள் இதைச்செய்து அனுப்புனாங்களாம். இப்படி இதுக்கு போரோடு ஒரு சம்பந்தம் வந்திருக்கு.



இந்த பிஸ்கெட் நாங்கதான் கண்டுபிடிச்சுச் செஞ்சு கொடுத்தோமுன்னு நியூஸியும் ஆஸ்தராலியாவும் சொல்லிக்கிட்டு இருக்கு. அதனாலேதான் ரெண்டு பெயரையும் சேர்த்தே இதுக்கு வச்சுட்டாங்க.



கிறிஸ்மஸ் கொண்டாடும்போது கிறிஸ்மஸ் கேக் & புட்டிங் எப்படி விசேஷமோ அப்படி கொடிநாள் வரும்போது இந்த பிஸ்கெட் இல்லாமக் கொண்டாட முடியாதுன்ற நிலையில் இருக்கோம் நாங்க:-))))




இப்பெல்லாம் பிஸ்கெட் கம்பெனிகள் இதைத் தயாரிச்சு வித்தாலும், இந்தப் பேரைப் பயன்படுத்த அவுங்க RSA கிட்டே இருந்து அனுமதி வாங்கிக்கணும்.
நல்ல சத்து நிறைஞ்சது இது. நாலு பிஸ்கெட்டை உள்ளே தள்ளிட்டு ஒரு கப் சாயா அடிச்சீங்கன்னா வயுறு திம்முன்னு இருக்கும். மூணு மணி நேரம் பசி தாங்கும். நான் கேரண்டி:-))))



ஏப்ரல் 25 க்கு முன்னே வரும் வார இறுதியில் இந்தப் பாப்பிபூ விற்பனைக்கு வரும். செயற்கைப் பூதான். சிகப்பு நிற ஃபெல்ட் லே செஞ்சது. இதுலே ஒரு சின்ன வெள்ளைப் பட்டை இணைச்சு அதுலே முடியாட்சியின் சின்னமான ராயல் க்ரீடம்( நாங்க இன்னும் மாட்சிமைதாங்கிய மகாராணியின் ஆளுகைக்குள்தான் இருக்கோம்)படமும் NZ Returned Services Association என்ற எழுத்துக்களும் அச்சடிச்சு இருக்கும். இதுலே ஒரு குண்டூசியை இணைச்சு வச்சுருப்பாங்க. உண்டியலில் காசு போட்டுட்டு இதை எடுத்துச் சட்டையில் குத்திக்க வேண்டியதுதான். பழைய ராணுவ வீரர்கள் இதை வச்சு விற்பதைப் பெருமையுடன் செய்யறாங்க. அங்கங்கே ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்கெட்களில் ஒரு மேசை நாற்காலி போட்டு கம்பீரமா மினுங்கும் மெடல்களுடன் இவுங்க உட்கார்ந்து இருப்பதைப் பார்த்ததும் நமக்கே ராணுவத்தினரின் தியாகங்கள் ( அது எந்த நாடா இருந்தாலும் சரி) மனசுலே வந்து போகும்தானே?



இன்னிக்கு அரசாங்க விடுமுறை. அதிகாலை சூரியன் உதிக்குமுன் (dawn) வார் மெமோரியலில் மலர்வளையம் வச்சு பிரார்த்தனை செய்வாங்க. தொடர்ந்து சர்ச்களிலும் பிரார்த்தனை நடக்கும். நானும் இந்த 21 வருசமா ஒரு முறையாவது நேரில் போய்க் கலந்துக்கணுமுன்னு நினைச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். வேளை வரமாட்டேங்குதே(-: குளிர்காலம் ஆரம்பமாச்சு. லீவு வேற. எழுந்திரிக்கச் சோம்பல்தான். தொலைக்காட்சியில் தாத்தாக்கள், பாட்டிகள்னு ராணுவம் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தேய்ச்சு மினுக்கிய யூனிஃபாரமும் மின்னித் திளங்கும் மெடலுமாய் அங்கே இருப்பதைக் காமிக்கும்போது மனசுக்கு குற்ற உணர்வு வருவதைத் தடுக்க முடியலை(-:
நாங்க (நியூஸி & ஆஸி) இதை ஏப்ரல் 25க்குக் கொண்டாடுனாலும், இந்தப் போரில் கலந்துக்கிட்ட மற்ற நாடுகள் நவம்பர் 11 ( போர் முடிந்த நாள்) கொண்டாடுறாங்க.


எல்லாருக்கும் ஒரு வழின்னா எங்களுக்கு எப்பவுமே வேற வழிதான்:-)

கடைகண்ணிகள் எல்லாம் பகல் 1 மணிக்குமேல்தான் திறக்கணும். அவுங்களுக்கு அரைநாள் லீவு. இது தெரியாம (ன்னு நினைக்கிறேன்) சில சீனக்கடைகள் வழக்கம்போல் காலையிலேயே திறந்து வச்சுருந்தாங்க(-:



சரி இந்த பிஸ்கெட் செய்யும் முறை சொல்லித்தரவா?
ஒருமுறை செஞ்சுதான் பாருங்களேன்.
இதுலே கூட ஆஸி, நியூஸின்னு ரெண்டு வகை இருக்கு. நாம் இப்பச் செய்யப்போறது நியூஸி வகைதான்:-))))

1 கப் ஓட்ஸ்
1 கப் மைதா மாவு
அரைக்கப் சக்கரை
முக்கால் கப் (டெஸிகேட்டட்) தேங்காய்ப்பூ
125 கிராம் வெண்ணெய்
2 டேபிள் ஸ்பூன் கோல்டன் சிரப் ( வெல்லப்பாகு டின்லே கிடைக்கும்)
அரைத்தேக்கரண்டி (ஆப்ப) சோடா உப்பு
ஒரு டேபிள் ஸ்பூன் சுடுதண்ணி.

அடுப்பில் இருக்கும் ஒவன்(oven) பகுதியை 160 டிகிரி (செல்சியஸ்)வச்சு சூடாக விடுங்க.
வெண்ணெய் & சிரப் ரெண்டையும் ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் லேசா சூடாக்கி வச்சுக்குங்க. (ஆமாம் இதுக்கு என்ன தனி மரியாதை? பேசாம ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பத்திரத்தில் வச்சு, சூடாகிக்கிட்டு இருக்கும் அதே அவன்லே கொஞ்ச நேரம் வச்சாப் போதாதா?)
ஆப்ப சோடாவை அந்த ஒரு டேபிள் ஸ்பூன் சுடுதண்ணியில் கரைச்சுவச்சுக்கிட்டு, வெண்ணெய் உருகுனதும் அதுலே கலந்துருங்க. மீதி இருக்கும் உலர்ந்த பொருட்களை (ஓட்ஸ் மாவு இத்தியாதிகள்) ஒரு பாத்திரத்தில் போட்டு உருக்கிவச்ச வெண்ணெய், சிரப் தண்ணியை ஊத்தி நல்லாக் கலக்குங்க.
ஒரு ஸ்பூன் கலவையை எடுத்துக் கையில் உருட்டி மசால்வடைக்கு தட்டுறதுபோலத் தட்டி ஒரு பிஸ்கெட் ட்ரே யில் ஒவ்வொண்ணுக்கும் இடம்விட்டுத் தள்ளிதள்ளி வையுங்க.
அவன் இதுக்குள்ளெ சூடாகி இருக்கும். 8 முதல் 10 நிமிஷம் வச்சு எடுத்தால் போதும். இந்தக் கணக்குலே 28 பிஸ்கெட்ஸ் வரணும்.

கொஞ்சம் நல்லா ஆறவிட்டுக் காற்றுப்போகாத டப்பாவுலே போட்டு வச்சுக்கலாம்..... நீங்க தின்னபிறகு மிச்சம் இருந்தால்:-))))

ஆஸிகள் செய்முறையில் என்ன வித்தியாசம்? இருந்தே ஆகணும் இல்லை.
செய்முறை எல்லாம் இதேதான். ஓவன்சூடு மட்டும் 180 டிகிரி.

மற்ற சாமான்கள்:
2 கப் ஓட்ஸ்
1 கப் மைதா மாவு
1 கப் சக்கரை
1 கப் (டெஸிகேட்டட்) தேங்காய்ப்பூ
1/2 (அரைக்) கப் வெண்ணெய்
2 டேபிள் ஸ்பூன் கோல்டன் சிரப் ( வெல்லப்பாகு டின்லே கிடைக்கும்)
1 தேக்கரண்டி (ஆப்ப) சோடா உப்பு
2 டேபிள் ஸ்பூன் சுடுதண்ணி.

எந்த நாடு வேணுமோ அதையே செஞ்சுக்குங்க. நியூஸி செய்முறை செஞ்சா ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு 10 க்ரேஸ் மார்க் போடுவேன்:-))))

இது அசப்புலே பார்க்க மசால்வடை(கோமளவிலாஸ், சிங்கை) மாதிரிதான் இருக்கு.

இந்தப் படத்தைப் பாருங்க. எது பிஸ்கெட் எது வடைன்னு கண்டுபிடிச்சுருங்க பார்க்கலாம்:-))))

24 comments:

said...

ஹ்ம்... ஆன்சாக் பிஸ்கட் படம் நல்லாத் தான் இருக்கு; ஆனா, வடை ரெண்டு செட் பார்சேல்!!

said...

Your blog is verey interesting. I am getting adicted to it thulasimaa..

ila

said...

வாங்க கெக்கேபிக்குணி.

இப்பெல்லாம் வடை செய்யறதை நிறுத்தியே நாளாச்சு. வாய் செத்துக்கிடக்கறேன்னு இவர் பரிதாபப்பட்டு, சிங்கைவழியா வரும்போது 'எனக்காகவே அங்கே கோமளவிலாஸில் சுடச்சுடச் செஞ்சு விக்கறதை' ( நாய் பிடிச்சாப் பிடிக்கட்டும் என்ற தைரியத்தோடு) வாங்கிவர்றார். உடனே அதைப் படம் எடுத்து வச்சுக்கிட்டு, வடை ஆசை வரும்போதெல்லாம் பெரிய ஸ்க்ரீன்லே பார்த்துக்கறேன்.

அடுத்தமுறை வாங்கும்போது உங்களுக்கு 2 ப்ளேட் வாங்கிறலாம்:-)))

said...

வாங்க இலக்குமி.

இப்படித்தான் நாங்க எல்லாரும் வலையில் விழுந்தோம்:-))))

இது நம்ம தளத்தின் 683 வது பதிவு.

நேரம் கிடைக்கும்போது தினம் ஒண்ணுன்னு படிங்க. ரெண்டுவருசம் ஒப்பேத்திறலாம்:-)

said...

புரியலையே? //வாய் செத்துக்கிடக்கறேன்னு இவர் பரிதாபப்பட்டு....வாங்கிவர்றார். உடனே அதைப் படம் எடுத்து வச்சுக்கிட்டு, வடை ஆசை வரும்போதெல்லாம் பெரிய ஸ்க்ரீன்லே பார்த்துக்கறேன்.// ஏன் படம் பிடிச்சவுடனே அவரே சாப்பிடுவாரா:-P

2 ப்ளேட்டுனு சொன்னதுக்கே நன்றி;‍-)

//683 வது பதிவு.// ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!

said...

என்னங்க இப்படி கெக்கேபிக்கேன்னு கேக்கறீங்க? :-)))

அவர் டாக்ஸி விட்டு இறங்குனதும் வடைப் பொதியைக் கையில் கொடுத்துட்டு மத்த சூட்கேஸுகளை உள்ளே கொண்டுவர்றதுக்குள்ளே(யே) நாலு வடையை உள்ளே தள்ளிருவேன்.

அப்புறம்தான் வடை நினைவுகள் வரும்போது, துடிச்சுப்போகறதெல்லாம். அதுக்குத் தீர்வுதான் இந்த ஃபோட்டோஸ்.

கோனார் நோட்ஸ் போல நம்ம தளத்துக்கும் நோட்ஸ் போட்டுறணுமா? :-))))
683 + 683 பரவாயில்லையா? (-:

Anonymous said...

என்ன இருந்தாலும் வடை ருசி பிஸ்கட்டுக்கு வருமா?? நானேல்லாம் வடை கோஷ்டி தான். வடையைப்பாத்துதான் நாக்கு சப்புக்கொட்டிக்கறது.

said...

இப்பெல்லாம் பிஸ்கெட் கம்பெனிகள் இதைத் தயாரிச்சு வித்தாலும், இந்தப் பேரைப் பயன்படுத்த அவுங்க RSA கிட்டே இருந்து அனுமதி வாங்கிக்கணும்.
நல்ல சத்து நிறைஞ்சது இது. நாலு பிஸ்கெட்டை உள்ளே தள்ளிட்டு ஒரு கப் சாயா அடிச்சீங்கன்னா வயுறு திம்முன்னு இருக்கும். மூணு மணி நேரம் பசி தாங்கும். நான் கேரண்டி:-))))//
அப்படியா சேதி!!!
வடை+பிஸ்கட் சாப்பிட்டா??
ஆறு மணி நேரம் தாங்குமோ. கொடி நாள் நம்ம ஊரில வரும்போது நானும் இந்த மாதிரித்தான் நினைச்சுப்பேன். பாவம் பிள்ளைகள் எங்கியோ குளிர்லயும் வெய்யில்லயும் கஷ்டப்படறாங்களேனு.

என்ன செய்யறது அவங்க அவங்க தலைலே என்ன எழுதி இருக்கோ. நமக்கு சம்சார சாகரமே சரியா இருக்கு.
683ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.:)

said...

உள்ளேன் ரீச்சர், இந்த பாப்பி பூ, ஆன்ஸாக் எல்லாம் பாடத்தில் படிச்சதுதானே.

பிஸ்கெட் நல்லா இருக்குன்னு சொல்ல முடியாத மாதிரி தேங்காயைப் போட்டுட்டீங்க! :))

படம் நல்லா இருக்கு. வடையும் சூப்பர்.

said...

வண்ணமயமான படங்களுடன் கண்னுக்கு நல்விருந்து

said...

வாங்க சின்ன அம்மிணி.

வடை 'ருசி' கண்ட பூனைகளாச்சேப்பா நாம்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

பாடத்திட்டத்தில் உள்ளதுதான். ஆனாலும் நடப்புச் செய்திகளை ஒரு ரிவிஷனாத் தரணுமே.

அதுதான் கொஞ்சம் மசாலா சேர்க்காத சமையல் குறிப்பும் போட்டது. இது ப்ராக்டிக்கல் வகுப்பு:-))))

தேங்காய் கூடவே கூடாதா.......?

அச்சச்சோஓஓஓஓஒ

said...

வாங்க பாசமலர்.

நலமா? கொஞ்சநாளா ஆளையே காணோம்?

said...

வாங்க வல்லி.

//வடை + பிஸ்கட் சாப்பிட்டா..//

ஊஹூம்....கனி இருப்பக் காய்கவர்ந்தற்று:-)

said...

ஆஹா..இதுக்காகவே உங்க ஊருக்கு வந்து வடை ஒரு வாயும், பிஸ்கட் ஒரு வாயும் சாப்பிட்டுட்டு உங்க கையால ஒரு கப் சாயா சாப்பிடணும் போல இருக்கு!

இங்க தங்கமணிக்கிட்ட போட்டாவைக்காட்டினா...இந்த மாதிரியெல்லாம் வெளிநாட்லதான் செய்யமுடியும், போடறதை தின்னுட்டு கிடங்க..ங்கிறாங்க!

..ம்..எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்...
ஆண்டவா..அடுத்த தடவை என்னை நியுசிலாந்துல படைச்சுரு :)
(தங்கமணியையும் சேத்து)

said...

//இது நம்ம தளத்தின் 683 வது பதிவு. நேரம் கிடைக்கும்போது தினம் ஒண்ணுன்னு படிங்க. ரெண்டுவருசம் ஒப்பேத்திறலாம்//

இன்னாஆஆஆஆஆஆஆ..து? இந்த 600கும் 700க்கும் நடூல வருமே அந்த 683ஆ? மெய்யாலுமே நீங்க...அது இன்னாமோ சொல்லுவாங்களே...ஆங்...பெரிய இன்ஸ்பிரேஷனுன்ங்கோ!

இப்படிக்கு,
ஜாம்பஜார் ஜக்கு

said...

என் ஒட்டு வடைக்கே

said...

வாங்க சுரேகா.

உங்களுக்கும் தங்கமணிக்கும் இங்கே அடுத்தபிறவிக்கு புக்கிங் ஆயிருச்சாம். ஆனா மவோரிகள் கோட்டாதானாம். பரவாயில்லையா?

said...

வாங்க ஜா.ஜக்கு.

இதுக்கே இப்படி ஆஆஆஆ...ன்னா எப்படி?

நம்ம பதிவர்களில் ஆயிரம் பதிவு போட்ட அபூர்வ சிந்தாமணன்கள் எல்லாம் இருக்காங்க தெரியுமில்லே? :-)))

said...

வாங்க பிரேம்ஜி.

இப்படிக்கு வடைக்கே ஏகப்பட்ட ஆதரவு இருப்பதால் இனிமேல் ஸ்க்ரீன்சேவர்கூட வடைதான்:-))))

said...

பிஸ்கெட் சாப்பிட்ட மாதிரியே இருக்கு நன்றி.. எங்கள் உறவுகார பெண்ணிற்கு மாப்பிள்ளை நியூசியில் இருக்கிறாராம். நான் ரொம்ப தைரியமா சொல்லிட்டேன் எனக்கு ரொம்ப வேண்டியவங்க இருக்காங்க என்ன கேக்கணும் சொல்லுன்னு. திடீர்னு அந்த பொண்ணு கேட்டது அங்க சாட் அயிட்டமெல்லாம் கிடைக்குமான்னு நான் என்ன பதில் சொல்ல…

said...

//வாங்க பாசமலர்.

நலமா? கொஞ்சநாளா ஆளையே காணோம்?//

6 வருஷமா சோம்பல் மற்றும் அடிக்கடி தாய்நாட்டு விஜயம் காரணமா ஒதுக்கி வைத்திருந்த டீச்சர் வேலைல திரும்பவும் சேந்தாச்சு...வீடுமாத்துர வேலை வேற..இனிமே அடிக்கடி வருவேன்..

said...

வாங்க கிருத்திகா.

எந்த 'சாட்'? கூகுள் சாட்டா? :-))))

ஆக்லாந்து வெலிங்டன்னில் நிறைய இந்தியச் சாப்பாட்டுக் கடைகள் இருக்கு.
சாட்டோ சாட்டுன்னு கிடைக்கும்.

நம்மூரு (கிறைஸ்ட்சர்ச்)ன்னா.... சாட் மசாலா இந்தியாவிலிருந்து வருவது கிடைக்குதுப்பா. நாமே செஞ்சுக்க வேண்டியட்துதான்:-)

தூவினால் ஆச்சு:-)

said...

வாங்க பாசமலர்.

வாழ்த்து(க்)கள்.

இப்ப வலை உலகில் 'டீச்சர்'ன்னா மதிப்பு கூடுதல்.

இப்போதைய பேஷனும் இதுதானாம்:-)))

சதங்கா அள்ளி வழங்கிக்கிட்டு இருக்கார்.