நம்ம மக்களுக்கு எதாவது குறைஞ்சபட்ச தண்டனை எதுக்காவது கொடுக்கணுமுன்னா 'வாய் பேசாம இருங்க'ன்னு சொல்லலாம். அதுவும் பூஜை, விழாக்கள், கலைநிகழ்ச்சின்னு இப்படி ஒன்றுகூடும் சமயத்தில் சொல்லணும்.கலையை ரசிக்கிறதுக்குத் தெரியலைன்றது ஒரு பக்கம் இருக்கட்டும். மேடையில் நிகழ்ச்சி நடக்கும்போது, அதில் ஈடுபட்டுள்ளவங்க எவ்வளவு நேரம் செலவழிச்சு இதுக்கெல்லாம் தயாரிப்பு செஞ்சுருக்காங்கன்னு ஒரே ஒரு நிமிசம் நினைச்சுப் பார்த்தாப் போதுமே.........
நாங்கள் பஞ்சாபி சொஸைட்டியின் பைஷாகி விழாவுக்குப் போனபோதே பதினொன்னரை மணி ஆகிருச்சு. அழைத்தபோது அவுங்களே சொன்னாங்க 'காலை 9 மணிக்கே புனிதநூல் கிரந்தசாஹிப் படிக்க ஆரம்பிச்சுருவோம். நீங்க அவ்வளோ சீக்கிரம் வரமுடியலைன்னா பரவாயில்லை. பதினொரு மணிக்கு மேலே வந்தாலும் சரிதான். ஆனால் கட்டாயம் வரணும்'
முந்தியெல்லாம் நம்ம வீட்டுக்குப் பக்கத்திலே (ஒரு அஞ்சு நிமிச நடை) இருக்கும் பள்ளிக்கூட ஹாலில்தான் மாசம் ஒரு நாள் இப்படி சத்சங்கமா கூடி, புனித நூல் படிப்பாங்க. பூசை முடிஞ்சதும் சாப்பாடு இருக்கும்.
சமீப காலமா இந்த ஜனவரியில் இருந்து ஹாலை வாடகைக்கு விடறதில்லைன்னு ஸ்கூல் போர்ட் தீர்மானிச்சிருக்கு. முக்கிய காரணம் பயன்படுத்திய பிறகு சரியாச் சுத்தம் செஞ்சுதரலை என்பதுதான். நம்ம உணவு வகைகளில் மசாலா மஞ்சள் தூள் எல்லாம் கலந்து செஞ்சுடறோம். அதைச் சாப்பிடும்போது கவனமாக் கீழே சிந்தாமல் சிதறாமல் தின்னா பரவாயில்லை. பரிமாறிக்கிட்டே வரும்போது சிந்தும் கறிகள், சின்னப் பிள்ளைகள் கொட்டிக் கவுத்துடும் சாப்பாட்டுத்தட்டுகள் அது இதுன்னு தரையில் கார்பெட் எல்லாம் அழுக்கும் ஆகி,அங்கங்கே மஞ்சள் கறைகள்.
நம்மிடம் வசூலிக்கும் வாடகையைவிட க்ளீனிங் செலவு கூடுதலாகிருது. இன்னும் சில இடங்களில் இந்தியர்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைக்கறதும் கஷ்டம்தான். வீடு முழுக்க Curry Smell வருதுன்றது ஒரு காரணம். இன்னொரு காரணம் வீட்டில் இருக்கும் தோட்டப் பகுதியைச் சரியாப் பராமரிக்கறதில்லை என்பது.
தமிழ்ச்சங்கம் வாடகைக்கு எடுக்குமிடத்தில் கார்பெட் கிடையாது. மரத்தரைதான். நல்லதாப் போச்சு. ஆனா நடுத்தர அளவு கூட்டத்துக்குத்தான் சரிப்படும். ஒரு 100 பேர் உட்காரும் வசதி. தமிழ்த் தெரியாதவங்க அவ்வளவா நம்ம விழாக்களுக்கு வர்றதில்லை. இந்த பஞ்சாபி சங்கத்துக்கு ஏகப்பட்ட அங்கத்தினர் இருக்காங்க. அதைத்தவிர மற்ற இனத்து ஆட்களையும் அவுங்க அழைக்காம விடறது இல்லை.
இந்த முறை விழா காஷ்மீர்லே (அந்தப் 'பேட்டை'யின் பெயர்) ஒரு கம்யூனிட்டி ஹாலில் வச்சுருந்தாங்க. வெறும் காங்க்ரீட் தரைதான். பழைய படுக்கை விரிப்புகள், ஜமுக்காளம்ன்னு கொண்டுவந்து விரிச்சுபோட்டுருந்தாங்க. குளிர்காலம் வேற ஆரம்பமாயிருச்சு. தரையெல்லாம் ஒரேச் சில்.
அடுக்களையில் சிலர் தேநீர் தயாரிச்சுக்கிட்டும் வேணுங்கறவங்களுக்கு ஊத்திக் கொடுத்துக்கிட்டும் இருந்தாங்க. அங்கே போய் வாங்கி, உட்புறத் திறந்த வெளியில்வரும் இளம்(?)வெயிலில் நின்னு இதமாய்க் குடிச்சுக்கிட்டும் பலர் இருந்தாங்க. ஒரு அட்டைப்பெட்டியில் ஆரஞ்சு நிறத் துணிகள் இருந்தன. இவுங்க மத வழக்கத்தின்படிப் பூஜை சமயத்தில் அனைவரும் தலையை மூடி இருக்கணும் என்பது நியதி. பெண்களுக்குப் புடவை முந்தாணி, துப்பட்டா என்று இருப்பதால் பிரச்சனை இல்லை. இந்த சீக்கிய மத ஆண்கள் தலைப்பாகை கட்டுவதால் அவர்களுக்கும் பிரச்சனை இல்லாமல்தான் இருந்திருக்கணும். இப்ப சமீபகால நாகரிகத்தினால் பல சீக்கிய இளைஞர்கள் முடி வளர்த்துக்கொள்வதில்லை. 'க்ளீன்ஷேவ் சிக்'. அவர்கள் தங்களுடைய கைகுட்டையால் தலைமுடியை மறைத்துக் கொள்கிறார்கள். அப்படியும் கைகுட்டை(யா) இல்லாத ஆட்கள் கதி? அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரஞ்சுத்துணிகளைக் கிழிச்சுக் கொடுத்துக்கிட்டு ஒருத்தர் அடுக்களைவாசலில் நின்னுருந்தார். கோபால் கைகுட்டையால் தலையை மூடுனார். இவருக்கு டர்பன் கட்டினால் எப்படி இருக்கும்ன்னு கற்பனை செஞ்சுபார்த்தேன். அட! நல்லாத்தான் இருக்கு:-)))))
சின்ன மேடையில் 'குரு க்ரந்த் சாஹிப்' வச்சுப் படிச்சுக்கிட்டு இருந்தார் ஒரு முதியவர். மேலே அலங்காரத்துணியால் செஞ்ச விதானம். அவருக்கு வலப்பக்கம் ஒரு சின்ன மேடை அமைப்பில் தபேலா, ஹார்மோனியம், மைக்குன்னு சில ஏற்பாடுகள். ஹாலில் நுழைஞ்சு நேரா புனிதநூல் உள்ள இடம்வரை நடைபாதை விரிப்பு. நேரா அதுலே நடந்து புனித நூலின் முன் விழுந்து கும்பிட்டுட்டு, நம்மால் முடிஞ்ச காணிக்கையை அங்கே வச்சுட்டு வருவது வழக்கம். இது நிர்பந்தமில்லை. விருப்பம் இருப்பவர்கள் செய்யலாம். நடைபாதைக்கு இரு புறமும் பெண்கள் ஒரு பக்கமாகவும் ஆண்கள் ஒரு பக்கமாகவும் அமர்ந்து வாசிப்பைக் கேட்டுக்கொண்டும் அவ்வப்போது கூட்டத்தில் சிலர் தங்களிடமுள்ளச் சின்னப் பிரார்த்தனைகள் அடங்கிய புத்தகத்தில் சில குறிப்பிட்ட பக்கத்தை உரக்க வாசிக்கும்போது அதைப் பின்பற்றி சில வரிகளைச் சொல்வதுமாக இருந்தனர். பிரார்த்தனைகள் ஸ்லோகங்கள் அச்சிட்ட சிறிய புத்தகங்கள் நிறைய அங்கே குவித்து வச்சிருந்தாங்க. பஞ்சாபி மொழியிலும் இந்தி மொழியிலுமாக குவியல்கள் இருந்தன.
ஒருவர் சொல்லி முடிச்சதும் யார்வேணுமுன்னாலும் அடுத்த ஸ்லோகத்தைத் தொடங்கலாம். ஒரு ராகத்தோடு சொல்வதைக் கேட்பதற்கு காதுகளுக்கு இனிமையாக இருக்கு. காதுன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது. எங்கள் பக்கத்தில் இருந்த ரெண்டு பெண்கள் (தெலுங்கர்) வாய் ஓயாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள். குசுகுசுவென்று பேச ஆரம்பிச்சு, பேச்சு ஜோரில் இருக்குமிடத்தை மறந்து எதோ பார்க்கிலோ பீச்சிலோ உக்கார்ந்திருப்பது போல சத்தமாப் பேசிக்கிட்டு இருக்காங்க. என் இடது காதுக்கு ஸ்லோகமும் வலது காதில் வம்பளப்புமா இருந்து ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போச்சு. அந்தப் பக்கம் திரும்பி 'ஹஸ்தே'ன்னு சொன்னதும் கொஞ்ச நேரத்துக்குப் பேச்சு நின்னுச்சு.
இவுங்கன்னு இல்லே, ராமநவமி பூஜைக்குப் போனப்பவும் முன் பெஞ்சுலே இருந்த ரெண்டு பெண்கள் (ஃபிஜி இந்தியர்கள்) இப்படித்தான். (இந்தப் பதிவின் முதல் பத்தி இங்கே வரணும்!) இதுலே நாடு, மொழி என்ற பிரிவெல்லாம் இல்லையாக்கும்:-) அப்ப அந்தப் பெண்களிடம், 'நீங்க எவ்வளவு நாளைக்குப் பிறகு சந்திச்சுக்கிட்டீங்க?'ன்னு கேட்டேன். (ரெண்டு பேரும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதும், ஒரே ஏரியாவில் வசிப்பதும் எனக்குத் தெரியும்) அசட்டுத்தனமா சிரிச்சாங்க. கூடிவந்தால் ஒரு மணி நேரம். வாயைக் கட்டத்தெரியலை பாருங்க.
இருபது இல்லை முப்பது நிமிசத்துக்கு ஒருத்தரா மாறிமாறிப் புனித நூலைப் படிச்சுக்கிட்டும், கூடியிருப்பவர்கள் ஸ்லோகம் படிக்கும்போது புனித நூலுக்குச் சாமரம் வீசுவதுமா இருந்தாங்க. ஆக்லாந்துலே இருந்து இந்த நிகழ்ச்சிக்காக பஜனைப் பாடல்கள் பாட ரெண்டு ஆணும் ஒரு பெண்ணுமாக மூவர் மேடைக்கு வந்தாங்க. அந்த 'லீட் சிங்கர்' ஏற்கெனவே போன வருசம் விழாவுக்கு வந்திருந்தவர்தான். அருமையாகப் பாடினார். பஜன் என்பதால் இடையிடையே கூட்டத்தினரும் கலந்துகொண்டோம்.( இதுலே கோபால் ஒரு ரெண்டு நிமிசம் பதிவு செஞ்சதைப் போட்டுருக்கேன். கேளுங்க)
அப்புறம் அந்தப் பெண் மட்டும் தனியாக ஒரு பாடல் பாடினார். நம்ம தென்னிந்திய சங்கீதத்தையொட்டிய ஸ்வரவரிசைகளுடன் அந்தப் பாட்டு ரொம்ப நல்லாவே இருந்துச்சு. பஜன் முடிஞ்சதும் இவர்களுடன் வந்த ஒரு முதியவர் மைக் முன்னால் வந்து அமர்ந்தார். ஆன்மீகப்பிரசங்கம். பஞ்சாபியில் பேசினாலும், நமக்கு இந்தி ஓரளவு தெரிஞ்சிருந்து நல்லாக் கவனிச்சுக் கேட்டால் புரியுதுதான். சுருக்கமாச் சொல்லணுமுன்னா 'அருள் இல்லாதார்க்கு அவ்வுலகமில்லை'என்பதுதான் கருத்து. ரெண்டாயிரம் வருசமெல்லாம் பின்னோக்கிப் போகமுடியாதுன்றவங்களுக்கு இன்னும் சொல்லணுமுன்னா 'கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல'ன்ற சினிமாப் பாட்டு சொல்லும் விசயம்தான்:-)))))
நம்மாட்களுக்குக் கையில் மைக் பிடிச்சால் அதை எளிதில் விட்டுற முடியறதில்லை , (உண்மைத்தமிழனுக்கு, எனக்கு, இன்னும் சிலருக்கு எப்படிப் பதிவு எழுத ஆரம்பிச்சால் நிறுத்தமுடியறதில்லையோ அப்படின்னு வச்சுக்குங்க) அவர்பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறார். குழந்தைகள் ரெஸ்ட்லெஸ் ஆக ஆரம்பிச்சாச்சு. ஒரு குழந்தை அழுக ஆரம்பிச்சதும், எதோ சிக்னல் கிடைச்சாப்போல அடுத்து அடுத்துன்னு அங்கங்கே அழுகைச் சத்தம். (அதுகளாலே முடியுது, நம்மாலே முடியலையே) நேரமோ போய்க்கிட்டே இருக்கு. மணி ரெண்டரை. எங்க டேலைட் சேவிங்க்ஸ் இப்ப ரெண்டு வாரம் முன்னேதான் முடிஞ்சது. இன்னும் நம்ம 'பாடி க்ளாக்' அதுக்கேத்தமாதிரி மாறிக்கலை. இந்தக் கணக்குலே இப்ப மணி மூணரை. எல்லாருக்கும் பசிக் களைப்பு முகத்தில் பளிச்சுன்னு தெரிய ஆரம்பிச்சாச்சு. சாமரம் வீசுபவர்கூட முதியவர் எப்போ நிறுத்துவாரோன்னு பார்க்கும் முகபாவத்தில்.
பெரியவரோ இதையெல்லாம் கண்டுக்கவே இல்லை. தனக்குத்தானே அனுபவிச்சுச் சிரிச்சுப் பிரசங்கிக்கிறார். இடைஇடையே அவருக்கு முன்னால் துண்டுச்சீட்டு வைக்கிறாங்க. கார் பார்க்கில் குறுக்கும் நெடுக்குமா இடையில் நிறுத்தி இருக்கும் வண்டிகளை அங்கிருந்து அகற்றச் சொல்லி வண்டி நம்பர்
எழுதிய சீட்டுகள். 'நேரமாகுது. பிரசங்கம் போதும்' என்று ஒரு துண்டுச்சீட்டு அனுப்பலாமான்னு எனக்குத் தோணுச்சு.
பிரசாதங்களும், நைவேதிய உணவுகளுமா தட்டுக்களை புனித நூலுக்கருக்கில் தயாரா எடுத்து வைக்கிறார்கள் சிலர். இதுக்காக பெரிய பெரிய பாத்திரங்களில் இருந்து கொஞ்சம் எடுப்பதற்காக அதன் மூடிகளைத் திறந்தவுடன்......ஹால் முழுக்க பசியைத் தூண்டும் கறிகளின் மணம் பரவுது. எல்லாரும் தங்களையறியாமலேயே மூச்சை நல்லா இழுத்து மணம் பிடிக்கிறோம்:-)))
ஒருவழியா மூணடிக்க அஞ்சு நிமிசம் இருக்கும்போது ( பழைய மணி நாலடிக்க அஞ்சு நிமிசம்!!!) பிரசங்கத்தை முடிச்சார். கிடுகிடுன்னு படையலைச் சாமிக்குக் காமிச்சுட்டு, ஏழெட்டுப்பேராப் பிரிஞ்சு ஹல்வா பிரசாதம் அஞ்சே நிமிசத்தில் விநியோகிச்சு முடிச்சாங்க. புனிதநூலை பட்டுத்துணிகளில் நல்லாப் பொதிஞ்சு தலையில் வைத்து அங்கிருந்து எடுத்துக் கொண்டு போனார் ஒருவர். கையோடு சாப்பாடு பந்தி ஆரம்பிச்சாச்சு. ஹால் நீளத்துக்கு ஆறுவரிசைகளில் எல்லாரும் உட்கார்ந்தோம். நானக் கி லங்கர்.
ரொட்டி(சப்பாத்தி) பூரி, சீரக சாதம், மட்டர் பனீர், தால், காலி ஃப்ளவர், கேரட், உருளைக்கிழங்கு , பச்சைப்பட்டாணி எல்லாம் சேர்த்த கறி, ரெய்த்தா(தயிர்பச்சடி) ஜிலேபி, கீர்(பால்பாயாஸம்).இதுதான் மெனு.
இவுங்களை என்றென்றும் நினைவு வச்சுக்கணுமுன்னோ என்னவோ கறிகளில் உப்பு கொஞ்சம் கூடுதல். இருக்கும் கொலைப்பசியில் இதுவெல்லாம்கூட கவனிச்சேன்:-) பந்தி பரிமாறுதல் விசாரிப்பு இதுலே அப்பழுக்குச் சொல்ல முடியாது. ஓடியோடி உபசரிப்பு. சாப்பிட்ட எவர்சில்வர் தட்டுகளை எல்லாம் சுத்தம் செய்வதற்காக, சாப்பிட்ட இடத்தைக் கூட்டிப்பெருக்க, இப்படி எல்லா வேலைகளிலும் இளைஞர்கள் & ஆண்கள் சேவை செஞ்சாங்க.
உணவுக்குப் பிறகு கோர்ட்யார்டில் நண்பர்களையும் தோழிகளையும் சந்திச்சுக் கொஞ்ச நேரம் பேசி மகிழ்ந்து கிளம்பினோம். இன்னிக்கு நல்ல கூட்டம்தான் அநேகமா 350 பேர் இருக்கலாம். ஹாலின் உள்ளே அடுத்த நிகழ்ச்சியான 'பங்கரா நடனத்துக்குக்கான கொட்டு முழக்கம் கேட்டது. ஆடறவங்க ஆடட்டும்:-)))
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.
16 comments:
இரண்டு பதிவையும் படிச்சேன்...அப்பப்பா..... எப்படி இவ்வளவு நேர்த்தியாக நடந்ததை அப்படியே அங்கங்கே நகைச்சுவை தூவி படைக்கிறீர்கள். வியப்பாக இருக்கு.
நல்லா இருக்கு அம்மா !
\\இப்ப மணி மூணரை. எல்லாருக்கும் பசிக் களைப்பு முகத்தில் பளிச்சுன்னு தெரிய ஆரம்பிச்சாச்சு. சாமரம் வீசுபவர்கூட முதியவர் எப்போ நிறுத்துவாரோன்னு பார்க்கும் முகபாவத்தில்.\\ பசி நேரத்துல சாமியாவது பூதமாவதுன்னு யாரும் சாப்பிட ஆரம்பிக்கலையே, நல்லவேளை
\\இப்படி எல்லா வேலைகளிலும் இளைஞர்கள் & ஆண்கள் சேவை செஞ்சாங்க.\\ இங்க எல்லாம் பொதுவா ஆண்கள் இந்த மாதிரி சேவை செய்யறது நல்லா இருக்கு. இங்க வந்ததும் திடீர்னு நல்ல மாற்றம்தான். பெண்கள் அழகான உடையில வருவாங்க. அதை அழுக்காக்கிக மனசு வருமா!!! ஆண்கள் எல்லாம் பேண்டு சட்டை தானெ, பரவாயில்லை செய்யலாம்
"வாய் பேசாம இருங்க"- இதுவா
குறைந்தபட்ச தண்டனை?
அடுக்களைவாசலில் நின்னுருந்தார். கோபால் கைகுட்டையால் தலையை மூடுனார். இவருக்கு டர்பன் கட்டினால் எப்படி இருக்கும்ன்னு கற்பனை செஞ்சுபார்த்தேன். அட//
இது:))
ரொட்டி(சப்பாத்தி) பூரி, சீரக சாதம், மட்டர் பனீர், தால், காலி ஃப்ளவர், கேரட், உருளைக்கிழங்கு , பச்சைப்பட்டாணி எல்லாம் சேர்த்த கறி, ரெய்த்தா(தயிர்பச்சடி) ஜிலேபி, கீர்(பால்பாயாஸம்).இதுதான் மெனு//
அம்மா பசிக்குதே:)
நிகழ்ச்சிகளை coverage செய்வது துளசி மேடத்துக்கு கைவந்த கலை. As usual,Thulasi medam at her best in this post.
வாங்க கோவியாரே.
நடந்தது மனசில் பதிஞ்சு போச்சுன்னா அதை அப்படியே எழுதுவது சுலபம்தானே?
அதிலும் இது தாஸா கபர்:-))))
வாங்க சின்ன அம்மிணி.
என்னதான் பசின்னாலும் ஸ்வாமிக்குப் படைக்குமுன் தின்னுற முடியுதா?
அவுங்க ஒண்ணு செஞ்சுருக்கலாம். புனிதநூல் படிச்சு முடிச்சதும் படையலைப் போட்டுட்டுச், சின்னப்பிள்ளைகளுக்கு மட்டும் ஒரு புறம் சாப்பாடு கொடுத்துருக்கலாம். பெரியவங்க மட்டும் பிரசங்கம் கேட்டிருப்போம். இதுலேயும் ஒரு சின்னப் பிரச்சனை. புள்ளைகளுக்கு ஊட்டிவிடன்னு தாய்மார்களோ தகப்பன்மார்களோ போயிட்டாங்கன்னா நாலு நல்ல வார்த்தைகள் கேட்கும் சான்ஸ் அவுங்களுக்கு இல்லாமப்போயிரும்.
வாங்க சிஜி.
மவுனமா இருந்தா அது பெரிய தண்டனையா? யாருக்கு?:-))))
வாங்க வல்லி.
ஒருநாள் அவர் போட்டோ ஒண்ணில் கிராஃபிக்ஸ் வேலை செஞ்சு பார்க்கப்போறேன்:-)))))
பசிக்குதா ரொம்ப? கொஞ்சம் உப்பு ஜாஸ்தி. பரவாயில்லையா?
முதல்வரிசையில் எங்களுக்குப் பரிமாறுனபிறகு உப்பு அளவை யாரோ சொல்லக் கேட்டு சரிபண்ணிட்டாங்களாம். கோபால் சாப்பிட்டப்ப நல்லாதான் இருந்துச்சாம். (கொஞ்சம் தண்ணீ ஊத்தியிருப்பாங்களோ? ஓட ஓட மட்டர்பனீர்:-)
வாங்க பிரேம்ஜி.
நெசமாவா சொல்றீங்க? :-)))))
நன்றி.
ungal nadia arputham
tamilnattule puthandu inime pongal than
april 14 will be celebrated as chitrai thirunaal only
ungal nadai arputham
Thulasimaa... i really like your blogs. I read it atleast once a week. It is so interesting .ungaludaya mozhi pravaahaam arumai...
ila (alias) ilakkumi
வாங்க உமாகுமார்.
இனி புத்தண்டுக்குப் 'பொங்கிறலாம்' இல்லே?:-)))))
செஞ்சுருவோம்.
ரெண்டு மூணு விதமா நடந்து பார்த்துட்டு இந்த நடையைப் புடிச்சுக்கிட்டேன். இதுதான் மனசுக்குப் பக்கத்தில் வருதுன்னு ஒரு தோணல்:-)
வாங்க இல(க்குமி)
இங்கே இளான்னு ஒருத்தர் பதிவரா இருக்கார். அவருடைய ஆங்கில ஸ்பெல்லிங் ilaதான். (வெள்ளைக்காரனுக்கு ஏதுப்பா மூணு L?)
நீங்க கோச்சுக்கலைன்னா உங்க பேரில் ஒரு மாற்றம் செஞ்சுக்கிடுங்க. குழப்பத்தைத் தவிர்க்க உதவும்.
லக்ஷ்மி ன்னும் ஒருத்தர் இருக்காங்க:-))))
இலக்குமின்னு யாரும் இங்கே இதுவரை இல்லைன்னு நினைக்கிறேன்
Post a Comment