Thursday, November 02, 2006

உழுதவன் கணக்கு (A t d - பகுதி 7)

காலையில் தினப்பத்திரிக்கையில் இருக்கு விவரம். ஆஸியில் பல இடங்களில் வறட்சி. பூமி எல்லாம் பாளம் பாளமாய் வெடித்த நிலையில் இருக்கும் பண்ணை. மழையைக் கண்டே நாள் ரொம்ப ஆச்சாம்.'விவசாயிகள் கஷ்டப்பட அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்காது. உடனடி உதவிகள் தரப்படும்'ன்னு பிரதமர் சொல்லியிருக்கார். இங்கே வாழைப்பழம், இன்னும் மற்ற பழவகைகளுக்கு இறக்குமதி இல்லை. எல்லாமே உள்ளூர்சரக்குகள் தான். கொஞ்ச நாளைக்கு முன்னாலே கடும் புயல், மழையால் வாழைத்தோட்டங்கள் நாசமாயிருச்சு. அதான் வாழைக்கு வந்த வாழ்வு, விலை ஏறிக்கிடக்கு. ( நம்ம ஷ்ரேயாவும், கானாபிரபாவும் இதை உறுதிப்படுத்திப் போட்ட பின்னூட்டங்கள் வந்துருக்கு)


நம்ம மா.சிவகுமார்கூட அவரோட பொருளாதாரப் பதிவுகளிலே விவசாயம், விலைஏற்றம், சந்தைப்படுத்துதல்னு பல பதிவுகள் எழுதி இருக்கறதைப் படிச்சது நினைவுக்கு வந்துச்சு. இங்கே நியூஸியில் இறக்குமதிகளுக்கு ஒருவரம்பு இல்லை என்ற நிலைதான். ஓப்பன் மார்கெட்டாத்தான் இருக்கு. ஆனா, விவசாயிகளுக்குப் பாதுகாப்புன்றது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயம். பாராட்டியே ஆகணும். 'உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்கரிசி கூட மிஞ்சாது'ன்னுஒரு பழஞ்சொல் இருக்கே. அப்படீன்னா......... அந்தக் காலத்துலேயும் இதே கதிதானா?


வழக்கம்போல் ( நாலைஞ்சு நாட்களிலெ கூட வழக்கமுன்னு ஒரு பேட்டர்ன் வந்துருச்சு, பாருங்க) ஊர்வலம் கிளம்பி, 'பெட் பாரடைஸ்' போயிட்டு, டவுன் ஹால், (பக்கத்துலே ஒரு அழகான சர்ச் இருக்கு. ஞாயித்துக்கிழமை நம்ம பெருமாளைப் பார்க்கக் கிளம்புனப்ப கோயில் மணி ஓசையைக் கேட்டுட்டு, இந்தச் சர்ச்சுக்குள்ளெ போய்அஞ்சு நிமிஷம் பிரார்த்தனை செஞ்சோம்.) ஜார்ஜ் தெரு, இன்னும் அக்கம்பக்கம் எல்லாம் சுத்தியடிச்சுட்டு,ஒருமணி அடிக்கு முன்னே 'தலை கொடுத்தான்'கிட்டேப் போய்ச் சேர்ந்தேன். ஷ்ரேயா வந்துட்டாங்க. ரெண்டு பேருமாக் கிளம்பி,வலைஞர்கள், பதிவுகள்ன்னு பேசிக்கிட்டே என்ன சாப்புடலாமுன்னு நோட்டம் விட்டுக்கிட்டு இருந்தோம். கடைசியில்பீட்ஸாவும் பீருமுன்னு முடிவாச்சு! நமக்கு இஷ்டமுள்ள மூணு டாப்பிங்ஸ் சொன்னா, சுடச்சுடச் செஞ்சு கொடுக்கறாங்க.இத்தாலியன் கடை. இத்தாலிக்குப் போனப்ப அங்கே சாப்பிட்ட 'பீட்ஸா மார்கெரிட்டா'வைப் பத்திச் சொன்னேன். பேருதான் பெத்தபேரு. வெறும் டொமேட்டாவும், வெங்காயமும்( எல்லாம் கொஞ்சமே கொஞ்சம். ஒரு டேஷ்)தான். அப்ப பஞ்சகாலமா இருந்துச்சாம். மக்களுக்கு சாப்புட ஒண்ணும் சரியாக் கிடைக்காம மாவைப் பிசைஞ்சு, அதும்மேலே தக்காளி,வெங்காயம் போட்டுச் செஞ்சாங்களாம். அப்ப இருந்த ராணி மார்கரீட்டா பேரையே அதுக்கும் வச்சுட்டாங்களாம். எல்லாம் நம்ம டூர் கைடு சொன்னதுதான்.


அங்கே இருந்து கிளம்பி மெதுவா நடந்து போனோம். 'நம்ம பெட் பாரடைஸில்' ஜிகேவை மழைக்கு அறிமுகப்படுத்தினேன்.எலிசபெத் தெருவில் ஒரு கடையில் ஷோ கேஸில் கால்கரி சிவாவின் 'நீமோ'வைப் பார்த்தோம். நம்ம தருமி சொன்னதுபோல ஒரு கெமிஸ்ட்டரி இருக்கத்தான் செய்யுது. மொத்தம் 23 பெண் வலைப்பதிவாளராம், ஷ்ரேயா சொன்னாங்க. இதுலேயும்'பெண் பெயரில்' யாராவது எழுதறாங்களான்னு தெரியலை. மணி ரெண்டு ஆயிருச்சு. பிரியாவிடை.

திரும்ப நடந்து வரும்போது மனசுக்கு ஒரு வெறுமை வந்துச்சு. மழைக்கு வயசு, என் மகளைவிட சில வருசங்கள் மட்டுமே அதிகம்.ஆனாலும் ஒரு தோழமை கலந்த அன்பு, பரிவு எல்லாம் எப்படி இந்த வலைப்பதிவுகள் உண்டாக்கி வச்சுருக்கு பாருங்க.மூணு மணிக்கே எங்க இவர் வந்துட்டார். 'இங்கேயும்' எல்லாக் கடைகளும் சாயங்காலம் 6 மணிக்கு மூடிருவாங்க. வியாழந்தான் லேட்நைட் ஷாப்பிங்ன்னு 9 வரை கடைகள் திறந்துருக்கும். நாளைக்குத்தான் வியாழன். ஆனா நாங்க காலையிலேயே நியூஸிக்குக் கிளம்பிருவோமே.



முதல்வேலை முதலில். இவரைக் கூட்டிக்கிட்டுப் போனது 'பெட் பாரடைஸ்.' அப்புறம் நான் எங்கெங்கே போய்ச் சுத்திக்கிட்டு இருந்தேனோ அதே கடைகள். 'நான்பெற்ற இன்பம்' இவரும் பெற வேணாமா? ஒரு இடத்துலே வியாபாரத்தை மூடப்போறாங்களாம், க்ளோஸிங் டவுன் ஸேல். தோல் ஆடைகள். இத்தாலியன் கடை. இவருக்கு ஒரு லெதர்ஜாக்கெட் பார்க்கலாமுன்னு உள்ளெ நுழைஞ்சோம். ஃபேமிலி பிஸினெஸ்,குடும்பமே அங்கெ இருக்கு. எங்களைப் பார்த்ததும் கடைக்கார இளைஞருக்கு ஏகப்பட்டக் குஷி. இந்தியரான்னு ஆவலாக் கேட்டதும், ஆமாமுன்னு 'க்ரேஸ்ஃபுல்'லாச் சொன்னேன். உடனே ஒரு ஹிந்திப்பாட்டைப் பாட ஆரம்பிச்சுட்டார். 'ஜிந்தஹி......து மேரி ப்யார்' கூட வந்து சேர்ந்துக்கிட்ட குடும்பம் முழுசும் கோரஸ் பாடுது. டெல்லியில் மூணு வாரம் கடை போட்டுருக்காங்க. ஹிந்தி சினிமாங்களைப் பார்த்துக்கிட்டு ஜாலியா இருந்தாங்களாம்.


"மம்மா( என்னைத்தான்!) நீங்க இத்தாலி போயிருக்கீங்களா?"


"போயிருக்கேனே" ( ஆ........ ஆப்ட்டுக்கிட்டார், நம்ம கதையை எடுத்து விட வேண்டியதுதான்)


" எந்த ஊரு?"

" சொராண்ட்டோ, காப்ரி ஐலேண்ட், ரோம், நப்பொலி, இன்னும் சில ஊர்கள்"( ஐய்யோ, சோனியா எங்க நாட்டு மருமகள்னு சொல்லி இருக்கலாம். சமயம் பார்த்துஞாபகம் வரலையே(-:......... அடடா...)


அந்தக் குடும்பத்துக்கே 'பாசம்' பொத்துக்கிட்டு வருது. ' ஜிந்தகி'............. மறுபடியும் கோரஸ்:-))))


எண்ணூறு க்குப் போட்டது 50% கழிவு. ஒரிஜனல் லெதராம். சிகெரெட் லைட்டர் கொளுத்தி, ஜாக்கெட்லே' தீ'வச்சுக் காமிக்கிறார்.( அவுங்களுக்கும் எதாவது டெக்னிக் இருக்குமே, சிதைக்காமக் கொளுத்த!)


" இருக்கட்டும், எங்க நண்பரே சொல்லிருவார், இது லெதர்தானான்னு! " எங்க இவர் அளந்து விடறார். நானும் ச்சும்மா இருக்கமுடியுமா? 'ஆமாம், நம்ம சிவகுமாரைக் கேக்கலாம்:-))))'


"நானூறு கூடுதல், இன்னும் விலையைக் குறை"

" ஒரே பேச்சு 350"

" ஊஹூம்.... 250"

" அய்யோ செத்தேன். வரவே வராது மம்மா. பாரு, எப்படி அட்டகாசமா ஃபிட்டிங் இருக்கு. அசல் மாஃபியா!"


" அட...( பாவி). வில்லன் மாதிரியா இருக்கார்?"


" நோ மம்மா.... மஃபியான்னு அது புகழ்ச்சி. "


"சரி ஒரே விலை 275"


" சாரி மம்மா. முடியவே முடியாது. ரியலி சாரி மம்மா. 300ன்னாக்கூடக் கொடுத்துருவேன் மம்மா லாஸ்ட் டே, லாஸ்ட் ஸேல். நாளைக்குக் கிளம்பிருவோம் மெல்பேர்னுக்கு"


வெளியே வந்துட்டோம். ஒரு பத்தடி நடந்தபிறகு இவர் முகத்தைப் பார்த்தேன். ரொம்ப நாளா ஆசைபட்ட பொருள். வெறும் 25 டாலர்தானெ? போனாப் போட்டும். எவ்வளவோதான் செலவாகுது.....( நியூயார்க்லே வீடியோ
கேமராவுக்கு wide லென்ஸ் வாங்குனது... இருக்கு ஒரு கதை:-))

" சரி, வாங்க. வாங்கிறலாம்"


" வேணாம்மா. அப்புறம் பார்க்கலாம்"


" பரவாயில்லை வாங்க. "

" கடையைப் பூட்டி இருப்பாங்க. மணி ஆறுக்கு மேலே ஆச்சு"

" பூட்டுனா என்ன, திறக்கச் சொன்னாப் போச்சு. ஆனா நாந்தான் விலை பேசுவேன்"


திரும்பி வந்தா, கதவு ஒரு அரை அடி திறந்துருக்கு. உள்ளெ எல்லாத்தையும் எடுத்து மடிச்சுவைக்கறாங்க.


" ஓஓஓஓ மம்மா..... ஜிந்தகி............."


ஓடிப்போய் ஹேங்கரில் இருந்த ஜாக்கெட்டைக் கொண்டு வரார் இளைஞர், 'என் பொறுப்புலெ 300 க்குத் தரேன்.'


" நாந்தான் கஸ்டமர். என்னோட சொல்தான் கடைசியா இருக்கணும். 290 ஓக்கேவா?"


" ஓக்கே மம்மா..... யூ ஆர் மை ஃப்ரெண்ட். நீங்க சொன்னாச் சரி."


வாங்கியாச்சு. அறைக்குப் போய் அதை வச்சுட்டு, இன்னும் கொஞ்சம் சுத்திட்டு அப்படியே சாப்பிடப்போகலாமுன்னு கிளம்பினோம். மோனோ ரயிலில் ஏறி ஒரு சுத்து சுத்தலாமுன்னு மோனோ ரெயில் ஸ்டேஷனுக்கு நடந்தோம்.ஜாக்கெட் வாங்குன கடைக்கு வெளியே அந்த இளைஞர், சிலரோட பேசிக்கிட்டு இருக்கார். உள்ளே பேக்கிங் வேகமா நடந்துக்கிட்டு இருக்கு. எங்களைப் பார்த்ததும்..'ஜிந்தகி.....ஈஈஈஈஈஈஈஈ' கோரஸ்:-))))


ஒளி விளக்குகள் பளிச்சிடும் நேரத்துலே அந்தரத்துலே இருந்து சிட்டியைப் பார்க்கறதுலே ஒரு அழகு இருக்கத்தான் செய்யுது.ஒரு முழு வட்டம் போய் வந்தாச்சு. ஏற்கெனவே முடிவு செஞ்சதுபோல 'சாகர் ரெஸ்டாரண்டு'க்குக் கிளம்புனோம். நம்ம க.பெ. வீட்டுலே இருந்து கம்யூனிட்டி பேப்பர்களைத் தூக்கிக்கிட்டு வந்துருந்தோம். ஒண்ணு ஆங்கிலம், ஒண்ணு தமிழ். அதுலே இருந்து புடிச்சதுதான் இந்த சாகர். இனிப்பு வகைகளும் இருக்காம். இன்னும் ரெண்டு நாளிலே தீபாவளி வருது. இங்கிருந்தே கொஞ்சம் இனிப்புகளை வாங்கிக்கிட்டுப் போயிட்டா, பண்டிகையை 'தாம் தூம்'னு கொண்டாடிறலாம்:-)
வரவரசோம்பேறியாகிக்கிட்டே போறேன். வீட்டுலேயே மாய்ஞ்சு மாய்ஞ்சு பலகாரங்கள் செஞ்ச காலமெல்லாம் போச்சு.செஞ்சாலும் திங்க ஆள் வேணாமா? வாங்கி வச்சுட்டால் தொல்லை இல்லை.


இந்தத் தமிழ்ப் பத்திரிக்கையிலே நம்ம கானாபிரபா எழுதுன 'ஓபரா ஹவுஸில் யேசுதாஸ் பாட்டு' பதிவு முழுப்பக்கம் வந்துருந்தது. அடிச் சக்கைன்னு பூரிச்சுப் போயிட்டேன்.


சர்ரே ஹில்ஸ் பகுதிக்குப் போனோம். க்ளீவ்லேண்ட் தெரு. சாகருக்கு முன்னாலே எதிர்வரிசையிலே இறங்குனோம்.இறங்குன இடத்துலேயே 'மாயா ரெஸ்ட்டாரண்டு'. இங்கேயும் உள்ளெ அழகழகா இனிப்பு வகைகள் கண்ணாடிக்குள்ளே இருந்து என்னை கூப்புடுது. சரி, உள்ளெ போய் என்னென்ன இருக்குன்னு பார்த்துக்கிட்டு அப்புறமா முடிவு செய்யலாம். இருவதடிஅந்தப் பக்கமா நடந்தா சிக்னல் இருக்கு. அதுலே 'முறைப்படி ' ரோடைக் கடந்து போனோம். சாகருக்குப்பக்கத்துலெயே இன்னொரு மாயா. இது மாயா ட தாபா. வாவ்.... இங்கேயும் தாபாக்கள் வந்துருச்சோ?ஓஓஓஓஓ ப்பலே பலே பலே!அசல் தாபா ஸ்டைலில் சாப்பாடு தர்றாங்களாம். தலேர் மெஹந்தி மாதிரி ஆடிக்கிட்டே போலாமா?


ஓஓ.... இது பஞ்சாபிகள் வசிக்கும் பகுதியா? அப்பச் சரி.


சாகர்லே சாப்பாடு பரவாயில்லை. அட்லீஸ்ட் பளிச்சுன்னு வெளிச்சம். மெனு கார்டைக் கஷ்டம் இல்லாமப் படிக்கமுடிஞ்சது. செஞ்சு வச்சுருக்கற இனிப்புகளைப் பார்த்தா........... எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை. மாயாவுலெயே வாங்கிக்கலாம். திரும்ப அங்கே போறதுக்காக சிக்னலுக்கு வந்து 'பச்சை ஆள்'க்கு நின்னப்ப.......


எதிர்வரிசையில் 'எக்ஸோடிக்' பெயர்ப் பலகை. இதே பேர்லே ஆக்லாந்துலே மித்தாய்க் கடைகள் இருக்கே. பார்வையைக் கீழே கொண்டு வந்தா, சுமாரான வெளிச்சத்துலே கட்டிடத்துக்குள்ளெ ஆள் நடமாட்டம். என்னன்னு பார்க்கலாமா?


யுரேகா.......... புது ஸ்வீட்ஸ் ஷாப். 'அப் சிட்னி மே(ய்ன்) இண்டியா கி மித்தாஸ்'


ச்சலோ அந்தர்.

இந்த சனிக்கிழமைதான் திறந்திருக்காங்க( அப்ப இனிப்புங்க எல்லாம்' கொஞ்சம் புதுசாத்தான்' இருக்கும்)ளாம். இன்னும்உள்ளூர்லே விளம்பரம் கொடுக்கலையாம். கடைத்திறப்பு அறிவிப்பு இந்த வாரம் கம்யூனிட்டி பத்திரிக்கையிலே வரப்போகுதாம்.


நியூஸியிலே உங்க கடை இருக்கான்னதுக்கு, ஆமாவாம்! அவுங்களோட ப்ராஞ்சுதானாம் இது. நியூஸியிலேயே மூணு கிளை. நமக்கு நாட்டுப்பற்று வந்துருச்சு.


ஓப்பனிங் ஸ்பெஷல்ன்னு ஒரு கிலோ வாங்குனா அரைக்கிலோ இனாம் வேற! நாலைஞ்சு நாள் தாங்கறமாதிரி வாங்கிக்கிட்டோம்.கூடவே இலவசமாப் புள்ளையார் போட்ட அடுத்த வருசக் காலண்டர். நியூஸி மித்தாய்தானே, அங்கெ ஏர்ப்போர்ட்லே பிரச்சனை இருக்காது. இலை, பூ, பழம், பால்ன்னுதான் கொண்டு போக முடியாது. வாசனை இருந்தாலும் 'நாய்' புடிச்சுரும். மறக்காம அறைக்குப் போனவுடனே மிச்சம் இருக்கும் ஒரு மாம்பழத்தை முடிச்சுறணும்.


மறுநாள் காலையில் கிளம்பி, ஸ்பானிஷ் ட்ரைவர்கிட்டே மாட்டிக்கிட்டு ஊரெல்லாம் சுத்தி, முதல் நாள்( ஏர்ப்போர்ட் டு சிட்டி) கொடுத்ததைப்போல ரெட்டிப்புச் சார்ஜ் கொடுத்து ஏர்ப்போர்ட் வந்தாச்சு. நீளமான வரிசையில் நின்னு எல்லா பத்ததிகளையும் முறைப்படி செஞ்சு, ஏற்கெனவே ஒரு மணி நேரம் லேட்டா வந்த ஜெட் ஏர்லே நுழைஞ்சு, இங்கே சரியான நேரத்துக்கு வந்துட்டோம். டெய்ல் விண்ட் சாதகம்.


சாப்பாட்டுச்சாமான் இருக்குன்னு டிக்ளேர் செஞ்சதாலே MAF பரிசோதனை முடிச்சு வெளியே வரவே பகல் மூணரை ஆயிருச்சு. ஷூவுலே மண்ணு ஒட்டிக்கிட்டு இருக்குன்னு எழுதுன ஆசாமிகளுடைய காலணிகளை, அதுக்குன்னே இருக்கற மெஷின்லே போட்டுத் துடைச்சு, மருந்தடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருக்கு அரசாங்கம். நம்ம ஷூவுக்கும் பாலீஷ் பண்ணி ரொம்ப நாளாச்சே. அட! இப்படி ஒரு வழி இருக்கா. அடுத்தமுறை' என் ஷூவிலே மண்ணு. நான் ஃபார்ம்விஸிட் போயிட்டு வந்துருக்கேன்'ன்னு எழுதிறலாமா? :-))))


நாலு மணிக்குக் கேட்டரி திறந்துருவாங்க. ஓடுனோம், ஜிகே வைக் கொண்டு வர. அங்கே ஆஃபீஸ்லே நம்ம வரவைச் சொல்லி, நிர்வாகத்தோட பேசுன சத்தம் கேட்டு, நம்ம ஆளு கம்பிக்கதவுக்கு பின்னாலே இருந்து தலையைச் சாய்ச்சு எட்டி எட்டிப் பாக்கறான். சரியாத் தெரியலைன்னு அங்கே இருக்கற ஒரு பலகை மேலே,எம்பித் தாவி உக்கார்ந்ததைப் பார்க்கறப்ப மனசு இளகிப்போயிருச்சு.


எங்க இவர் ஓடிப்போய், அவனோட அறைக்கதவை( நிர்வாகம் வந்து திறக்குறதுக்கு முன்பே) திறந்துட்டார். அப்பா &பையன் ரீ யூனியன். ஆனந்தமா விட்டுக்கு வந்து சேர்ந்தோம்.


பின் குறிப்பு: நான் எழுதுனதை வச்சு இவ்வளவுதான் 'சிட்னி'ன்னு முடிவு செஞ்சுறாதீங்க. அங்கே முதல்முறை போறவங்களுக்கு எக்கச்சக்கமான அனுபவங்கள் பல இடங்களிலும் காத்து நிக்குது. பத்துநாள் தாராளமாத் தங்குனாலும் புதுப்புது இடங்களைப் பார்த்து நல்லா அனுபவிக்க முடியும். என்னுடைய முதல்முறை விஸிட் நடந்தே பத்து வருசமாச்சு.அப்ப இந்த 'ப்ளொக இல்லாததாலெ நீங்க தப்புனீங்க:-)))


இன்னொரு முக்கியமான குறிப்பு: தனியா மட்டும் பயணம் போகவே போகாதீங்க. எதையுமே நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு உடனுக்குடன் சொல்லிக்கவும் ஒரு பேச்சுத்துணைக் கண்டிப்பா வேணும். அதிலும், உங்க மறுபாதி எதாவது வேலை விஷயமாஅஃபிஷியல் டூர்/பிஸினெஸ்)போறப்ப கூடப் போகவே போகாதீங்க. சொல்றதைச் சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்.


பொறுமையாப் படிச்சுப் பின்னூட்டம் இட்ட /இடாத அனைவருக்கும் நன்றி.


சிட்னி வலைப்பதிவாளர்களுக்கு என் அன்பையும், நன்றியையும் இதன்மூலம் தெரிவிக்கின்றேன்.


விரைவில் மீண்டும் சந்திப்போம்( கபர்தார்)


முற்றும்:-))))

----------

29 comments:

said...

கபர்தார்.....அய்யோ!

said...

நம் நெருங்கிய உறவினர் கடிதம் எழுதிய பாணியில் காலையிலிருந்து மாலைவரை இல்லை அடுத்தநாள் நியூசி திரும்பியவரை ஒவ்வொரு நிகழ்வுகளையும் அதற்கான விமரிசனத்துடன் விவரித்தால்
--ஒரு தோழமை கலந்த அன்பு, பரிவு எல்லாம் எப்படி இந்த வலைப்பதிவுகள் உண்டாக்கி வச்சுருக்கு பாருங்க.-- அந்த அன்பும் பரிவும் உண்டாகாமல் எப்படி இருக்கும் ?

said...

அட்சரலட்சம் தரலாங்கோவ்.......
அந்தக் கடைசி வார்த்தைக்கு

said...

ஒ, முடிச்சாச்சா.
துளசி இத்தனை பார்கெயின் செய்யத் தெரியும்னா ஷஅப்பிங் உங்களோட செய்வேனே.
பரவாயில்லை நம்ம அஜெண்டாவில இதை வச்சுக்கலாம்.
நல்லா இருந்திச்சா ஆசில வாங்கின ஸ்வீட்ஸ் எல்லாம்?

said...

சிஜி,

வாங்க.

'கலங்காதிரு மனமே' பழைய பாட்டு. கேட்டுருக்கீங்கதானே?

போட்டும், 'அஞ்சு லட்சம்' ரெடியா இருக்குல்கலே? :-)))

said...

மணியன்,

'அஞ்சு நாள் ஆஸ்தராலியா போய் வந்தேன்' னு ஒரே வரியில்
எழுதி இருக்கலாமோ? :-))))

said...

வல்லி,

நாம சேர்ந்து ஒருநாள் ஷாப்பிங் போனாப் போவுது. ஆனா சிங்காரச் சென்னையில்
வேணாமே ப்ளீஸ்:-)))
'கசுமாலம், வாங்க வந்துருச்சு'ன்னு ஆசீர்வாதம் கேக்கும்படி ஆயிரும்:-))

ஸ்வீட்ஸ் பரவாயில்லை. வீட்டுக்கு வந்தவங்களுக்குக் கொடுக்கத்தானே
வாங்குனது. ( அதுக்கப்புறம் யாரும் வீட்டுப் பக்கம் தலை காமிக்கலை!!!!)

said...

பார்த்த, கேட்ட விஷயங்களை உள்வாங்கி சுவையாக எழுதுவது ஒரு திறமை, அதைச் சிறப்பாகவே செய்திருக்கீங்க

said...

வாங்க பிரபா.

மெய்யாலுமா சொல்றீங்க?

நன்றி வெரி மச்:-)))

said...

//'உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்கரிசி கூட மிஞ்சாது'ன்னுஒரு பழஞ்சொல் இருக்கே.//
உண்மை தான் டீச்சர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் தான்!
அதையே பதிவுக்குத் தலைப்பா வைச்ச உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! சொல்லுங்க எத்தனி முறை பாராட்டலாம்? 300, 350? இல்லை 290??

//பெருமாளைப் பார்க்கக் கிளம்புனப்ப கோயில் மணி ஓசையைக் கேட்டுட்டு, இந்தச் சர்ச்சுக்குள்ளெ போய்அஞ்சு நிமிஷம் பிரார்த்தனை செஞ்சோம்//

அட சக்கரத்தான் மணி கேட்டு சர்ச்-யுடையான் கிட்ட போயிருக்கீக! சூப்பர்!!

//.....( நியூயார்க்லே வீடியோ
கேமராவுக்கு wide லென்ஸ் வாங்குனது... இருக்கு ஒரு கதை:-))//

அட எங்கூரு கதையா? சொல்லுங்க, சொல்லுங்க!!


கானா பிரபா, ஷ்ரேயா, க.பெண், மற்றும் எல்லா பதிவர்களுக்கும் நன்றி, வடையைக் கண்ணில் காட்டிய ஃபோட்டோவுக்கு!
இதி ஸ்ரீமத் துளசி டீச்சர், சிட்னி திக்விஜயம் சம்பூர்ணம்!
சுப மங்களம்! வணக்கம்; நன்றி; மீண்டும் வருக! :-))

said...

துளசி, உங்க பாசப் பிணைப்பு எப்பவும் நல்லா இருக்கணும்.

எங்கோ இருந்து நம்மைக் கட்டிபோடும் இந்த உறவுக்கு என்ன பெயர் வைக்கிறது.

துளசி ,கோபால் ஆரோக்கியத்தோடையும் சக வலைப் பதிவாளர்கள் அவரிடம்
எப்போதும்போல் அன்புடன் இருக்க வேண்டும்,.

said...

KRS, வாங்க . வந்து மங்களம் பாடுனதுக்கு நன்றி.

நான் கோயில் மணி ஓசைன்னு சொன்னதும் நம்ம
சர்ச்சாழ்வார் கோயில் காண்டா மணியைத்தான்:-))))

said...

வல்லி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. சந்தோஷமா இருக்கு.

கொஞ்சமிருந்து பிரசாதம் வாங்கிக்கிட்டு போங்க.
நம்ம கண்ணபிராந்தான் இன்சார்ஜ்:-))))

said...

காலையில் திறந்த போது பாதிதான் வந்தது.இப்போது தான் முழுவதுமாக படிக்க முடிந்தது.
தோல் என்று வந்தவுடன் எங்க மா.சிவகுமாரை காணவில்லையே என்று பார்த்தால், அடுத்த் வரியிலேயே இருந்தார்.
ஆஸிக்கு தனியாக போகாதீங்க சொல்லி ஏங்க தனியா போறவங்களை பழி வாங்கிறீங்க??
செலவுக்குன்னே நிறைய ஐடியா வச்சிரிக்கீங்க போல!!
முடிவு செய்துவிட்டேன்,இந்த பதிவை மனைவியிடம் காட்டப்போவதில்லை.!!
:-))

said...

வாங்க குமார்.

ஆஸிக்குன்னு இல்லே, எங்கேயுமே 'இவுங்க 'ஆஃபீஸ் வேலையாப் போகும்போது போகக்கூடாது.

அதைத்தான் 'டோண்ட் மிக்ஸ் பிஸினெஸ் வித் ப்ளெஷர்'னு சொல்லிட்டாங்க.

நான் முதல்முறையாத்தான் இப்படிக்கூடப்போனேன். அதுவும் நல்லாத் தெரிஞ்ச இடம்தானேன்ற
ஒரு எண்ணத்தில். அதுக்காகவேதான் சிட்டி செண்டர்லே ஹோட்டல் புக் பண்ணதும்:-)

கூட இன்னொருத்தர் அட்லீஸ்ட் ஒரு ஃப்ரெண்டாவது இல்லே ஒரு வலைஞராவது வேணும்:-)

said...

துளசி ,
சிட்னிய அப்படியே தலைகீழாப் புரட்டிப் போட்டுட்டீங்க :-)
நல்ல தொடர், அடுத்த விசிட் எங்கே ??

said...

//ஸ்வீட்ஸ் பரவாயில்லை. வீட்டுக்கு வந்தவங்களுக்குக் கொடுக்கத்தானே
வாங்குனது. ( அதுக்கப்புறம் யாரும் வீட்டுப் பக்கம் தலை காமிக்கலை!!!!)

வீட்டுக்கு வந்தவங்களுக்கு எத்த‌னை நாள் க‌ழிச்சுக் கொடுத்தீங்க‌?

ஆஸ்த்ரேலியா பயண‌த்தின் க‌டைசி பாக‌த்ல‌ ப‌ட‌ம் ஒண்ணும் காணுமே.

//உங்க மறுபாதி எதாவது வேலை விஷயமாஅஃபிஷியல் டூர்/பிஸினெஸ்)போறப்ப கூடப் போகவே போகாதீங்க.//
//அதைத்தான் 'டோண்ட் மிக்ஸ் பிஸினெஸ் வித் ப்ளெஷர்'னு சொல்லிட்டாங்க.//


அப்போ அடுத்த ப்ளெஷர் டூர் எப்போ?

said...

டீச்சர், லீவு முடிஞ்சு வந்தாச்சு. உள்ளேன் டீச்சர்.

said...

கடைசியில்பீட்ஸாவும் பீருமுன்னு முடிவாச்சு! //

பீட்ஸாவ பத்தி மட்டும் சொல்லிட்டு பீரை விட்டுட்டீங்க? என்ன பிராண்ட் எப்படி இருந்ததுன்னுல்லாம் சொல்ல வேணாமா:)

said...

//பீட்ஸாவ பத்தி மட்டும் சொல்லிட்டு பீரை விட்டுட்டீங்க? என்ன பிராண்ட் எப்படி இருந்ததுன்னுல்லாம் சொல்ல வேணாமா:)//

ஜோசப் சார் வந்து புடிச்சாரு பாருங்க பாயிண்டை! டீச்சர்... மாணாக்கர்கள் கேள்விக்கு ஆன்சர் ப்ளீஸ்!

said...

கார்திக்வேலு,

வாங்க. நலமா?
எல்லாம் 'சித்தன் போக்கு சிவன் போக்கு'தான்.
எப்பச் சான்ஸ் எந்த ஊருக்கோ? :-)))

said...

மதி,

அதான் தீபாவளி சனிக்கிழமை வந்துருச்சுல்லே. அன்னிக்குத்தான்
நம்மளைக் கண்டுக்கிட்டுப் போக மக்கள்ஸ் வந்தாங்க. என்ன இருந்தாலும்
ஊர்லே நாம ஒரு 'பெரிய தலை'யாச்சேப்பா:-))))

நாலுவாட்டி படங்களை ஏத்த முயற்சி செஞ்சேன். உங்களுக்குக் கடுப்புத் தர
வேணாமுன்னு ப்ளொக்கர் நினைச்சுருச்சு.( போச்சு அருமையான மிட்டய்க்கடைப் படம்)

அடுத்த டூர் அநேகமா அடுத்த வருசம்?

said...

வாங்க கொத்ஸ்.

போன வேலை நல்லபடியா முடிஞ்சதா?

said...

டிபிஆர்ஜோ வாங்க வாங்க.

நலமா? எங்கே ரொம்ப நாளா ஆளைக்காணோம்?

இந்த 'பீர்' யாராவது கேப்பாங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

யாரும் கவனிக்கலை போல. இப்ப நீங்கதான் வகுப்புலே கவனமா இருக்கீங்கன்னு
தெரிஞ்சுபோச்சு:-))))

ச்சின்ன பாட்டில்தாங்க. மழைக்கு ஐஸ்லே வைக்காதது. எனக்கு ச்சில்லுன்னு ஒரு பீர்.
எல்லாம் 'ஜிஞ்சர் பீர்'தாங்க :-))))

சரக்கு அடிக்க இன்னும் படிக்கலை.

said...

KRS,

பார்த்தீங்களா? ஜோசஃப் சார் வந்து தைரியமாக் கேட்டுட்டார். மத்தவங்க எல்லாம்
'டீச்சரை' எப்படிக் கேக்குறதுன்னு பதுங்கிட்டீங்களா?
பதில் 'மேலே' இருக்கு. இன்னும் போதை தெளியலை:-)))

said...

கொஞ்சம் மெதுவா படிச்சாலும் உங்கள் சிட்னி பயணக்கட்டுரைகள் எல்லாத்தையும் படிச்சிட்டேன் அக்கா.

//இன்னொரு முக்கியமான குறிப்பு: தனியா மட்டும் பயணம் போகவே போகாதீங்க. எதையுமே நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு உடனுக்குடன் சொல்லிக்கவும் ஒரு பேச்சுத்துணைக் கண்டிப்பா வேணும். அதிலும், உங்க மறுபாதி எதாவது வேலை விஷயமாஅஃபிஷியல் டூர்/பிஸினெஸ்)போறப்ப கூடப் போகவே போகாதீங்க. சொல்றதைச் சொல்லிட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்//

கடைசி சில பாகங்களைப் படிக்கும் போது இது தோன்றியது அக்கா. :-) அதனை நீங்களே வெளிப்படையாகச் சொல்லிவிட்டீர்கள். :-)

said...

நானும் பீரைக் கவனிச்சேன் அக்கா. நாமளே இன்னும் யோசிச்சு யோசிச்சு பீர் அடிக்கிறோம். ரூட் பீர் தான் விரும்பிக் குடிக்கிறது. புளிச்ச பீரை வாழ்க்கையிலேயே நாலோ அஞ்சு கேனோ தான் குடிச்சிருப்பேன். அக்கா நம்மளைவிட அட்வான்ஸ் போல இருக்குன்னு நெனைச்சுக்கிட்டேன். :-)

said...

வாங்க குமரன்.

லேட்டாவந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க. அது போதும்:-)

நம்ம மக்கள்ஸ் 'இன் பிட்வீன் த லைன்' படிக்கறவங்களாச்சே, இந்த 'பீர்' யாரும்
கவனிக்கலையேன்னு இருந்துச்சு. நல்லவேளை நம்ம டிபிஆர்ஜோ குறிப்பிட்டுச்
சொல்லிட்டார்.

வெளிநாடு வந்து 25 வருசமாச்சுப்பா. இதுவரை எந்த 'குடி'யையும் பழக்கிக்கலை. ஆஃபீஸ்
பார்ட்டிகளில் போறப்பவும், இன்னும் மத்த பார்ட்டிகளிலும் நம்ம இந்தியப் பெண்களில் சிலர்
கொஞ்சம் குடிக்கிறதைப் பார்த்துருக்கேன். அது தப்புன்னு சொல்லலை. எனக்குத்தான் 'தைரியம்
வரலை'.

சிலசமயம், எதோ ஒரு நல்ல அனுபவத்தை இழக்குறேனோன்னுகூட நினைச்சிருக்கேன்:-))))

'பழைய நாய்க்கு புது வித்தைகளைக் கத்துக்குடுக்கறது' ரொம்பக் கஷ்டம்!

said...

Old portion ellam padikkaren, katchup pannaum ellai

Sydney azhagana orunu kelvi patrukken, apparum finding nemo , discovery travel and living edhallam sydney gyabagam paduthittey erukku

eppa mudivey panniyaachi.. ellam ungey punniyam dhaan :))