பச்சையம்மாக்கா லட்டு செய்யறதுலே எக்ஸ்பர்ட். அம்மாவோட 'காரியத்துக்கு' அவுங்கதான் வந்துலட்டு செஞ்சு கொடுத்தாங்க. செத்தது எங்கம்மாவாச்சே....... அப்ப நான் பாவம்தானே? எனக்கு ரெண்டு,மூணு லட்டு கூடுதலாக் கிடைச்சது.
பச்சையம்மா அக்கா இந்த ஊருக்கு வந்தப்பத் தமிழ் சுத்தமாத் தெரியாது. எங்க பாட்டி வீட்டுலே, மளிகைச் சாமான் வாங்க எப்பவும் தங்கராசு (அண்ணன்) கடைக்குத்தான் போவாங்க. சரக்கு சுத்தமா இருக்குமாம். கடைக்காரர் ரொம்பக் கட் & ரைட். நியாயமாப் பேசுவார். ஏமாத்து பிசினெஸ் ஒண்ணும் இல்லை.மத்த மளிகை மாதிரி கடனுக்கும் வியாபாரம் இல்லை. கையிலே காசு & வாயிலே தோசை.
லிஸ்ட் எழுதிக் கொடுத்துட்டாப் போதும், சரக்கை ஒழுங்கா நிறுத்து வீட்டுக்கு வந்துரும். பில் பார்த்துக் காசு கொடுத்தனுப்பிறணும். ஒரு நாள் தங்கராசு அண்ணே, எங்களுக்குத்தான் அண்ணெ. எங்க பாட்டி எப்பவும்வாப்பா தங்கராசுன்னுதான் கூப்புடுவாங்க. அண்ணெ எங்க பாட்டிகிட்டேத்தான் ஒண்ணாப்பு படிச்சாராம். அந்த ஊர்லே முக்காவாசிப்பேர் பாட்டிகிட்டேதான் படிச்சிருக்கணும். எப்பப் பார்த்தாலும் யாராவது கல்யாணப் பத்திரிக்கை வைக்கறதுக்கு வந்துக்கிட்டே இருப்பாங்க.
ஒரு சமயம் பாட்டியோட மாணவர் ஒருத்தர் வேலை கிடைச்சுருச்சுன்னு சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டுச் சொல்லிட்டுப்போக வந்தார். வேலை எங்கேன்னு கேட்டப்ப 'மெர்க்காரா'ன்னு சொன்னார். நான் அந்த ஊர் ஃபாரீன்லேயா இருக்குன்னு கேட்டேன். அவ்வளோ விவரம் அப்பெல்லாம்:-))))
ஆங்.....எங்கே விட்டேன்? தங்கராசண்ணே வந்து பாட்டிகிட்டே கொஞ்ச நேரம் ரகசியமா வாசத் திண்ணையிலே உக்கார்ந்து பேசுனாராம். சித்தி மட்டும் லேசா 'ஒட்டு'க் கேட்டுருக்காங்க. 'அடடா .... அப்படியா?நீ கவலைப்படாதே... ஆனது ஆச்சு. இங்கே கூட்டிட்டு வா' ன்னு துண்டுதுண்டாப் பேச்சு காதுலெ விழுந்ததாம்.
அதோட முழுவிவரமும் அன்னிக்குச் சாயந்திரம் தெரிஞ்சு போச்சாம். அண்ணெ ஒரு பொண்ணைக் கூட்டிட்டுவந்து வீட்டுலே வச்சுருக்கார். அவுங்கதான் பச்சையம்மா. இளம் விதவை. ஊர் ஆந்திரா தமிழ்நாடு பார்டர்.
கடைக்குச் சரக்கு கொள்முதல் செய்ய அண்ணன் அப்பப்ப ட்ரக்லே போய் வருவாராம். அப்ப அங்கே ஒரு இடத்துலே 'இட்டிலிக்கடை' வச்சு நடத்திக்கிட்டு இருந்த ஒரு அம்மாவை பழக்கமாயிருக்கு. அவுங்க பொண்ணுதான் அக்கா. ' கண்ணும் கண்ணும் நோக்கியா' ஆகிப்போச்சு. ஒரு பயணத்துலே அண்ணன்கூட கிளம்பி வந்துட்டாங்க. வந்தபிறகு ரொம்ப பயந்து போயிட்டாங்களாம். மொழிப் பிரச்சனை. தாய் என்ன ஆனாங்களோன்னு கவலை. பள்ளிக்கூடத்துலே படிக்கிற தம்பி நினைவு இப்படி குழப்பத்துலெ அழுதுக்கிட்டே இருந்துருக்காங்க.
அண்ணன் திராவிடக்கழக உறுப்பினர். அதனாலே ஒரு இளம்விதவைக்கு வாழ்வு கொடுக்கலாமுன்னு இப்படி ஆயிருச்சுன்னு சொன்னாராம். பாட்டிக்கு மனசு ரொம்பக் கருணை. அந்தப் பொண்ணையும் நம்ம வீட்டுப்பொண்ணாவே நினைச்சு ஆதரவா அன்பாப் பேசி இருக்காங்க. அதுவும் 'தெலுங்குலே மாட்லாடு'னதும் பச்சம்மாவோட பயம் தணிஞ்சிருக்கு. அப்ப நம்ம வீட்டிலும் சித்தியோட கணவர் இறந்துபோய் அவுங்க அம்மா வீட்டோடயே இருந்தாங்க. சித்திக்கு ஒரு பையன் இருக்கான்.என் வயசுதான். ஒரு மாசம் பெரியவன். அப்ப அவன் குழந்தையாம். தினம் அக்கா வந்து குழந்தையோட கொஞ்ச நேரம்விளையாடிட்டு, வீட்டுலே எல்லார்கிட்டேயும் பேசிக்கிட்டு இருந்துட்டுப் போவாங்களாம். வீடு ரொம்பப் பக்கம்தான்.
அதுக்கப்புறம் பாட்டி சொன்னாங்களாம், கல்யாணம்னு கோவிலில் வச்சாவது ஒரு தாலி கட்டிருப்பான்னு. அவர்தான் கட்சிக்காரராச்சே. என்னவோ சீர்த்திருத்தக் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாராம். கடைசியில் ரிஜிஸ்ட்டர் கல்யாணம் நடந்துருக்கு. பாட்டியும் ஒரு சாட்சிக் கையெழுத்து போட்டாங்களாம். இதெல்லாம் அப்புறமா நான் தெரிஞ்சுக்கிட்டதுதான்.
பச்சையம்மாக்கா அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத் தமிழ்ப் பேசக் கத்துக்கிட்டாங்க. படிக்கத் தெரியாது. அண்ணனும் பேருக்கேத்த மாதிரி தங்கமானவர். நல்லா நகைநட்டுன்னு செஞ்சு போட்டார். ஊருலே இருக்கற அம்மா, தம்பிக்கு ஆள் விட்டனுப்பி சமாதானம் பேசி, அவுங்களுக்கும் தம்பி படிக்க, வீட்டுச் செலவுக்குன்னெல்லாம் உதவி செஞ்சுருக்கார்.
இவுங்களுக்குன்னு குழந்தைகள் பிறக்கலை. அந்தத் தம்பியையே இவரும் புள்ளையா நினைச்சாராம். நல்லாப் படிக்க வச்சிருக்கார். அவரும் படிச்சு முடிச்சுக் கல்யாணமெல்லாம் முடிச்சார். அவுங்களுக்குப் பொறந்த குழந்தைக்கு அக்கா வீட்டுலேதான் பிறந்தநாள் வைபவம் எல்லாம் செஞ்சாங்க.
அக்கா எப்பவும் சிரிச்ச முகமாத்தான் இருப்பாங்க. நெத்தியிலே பெரிய பொட்டு. எப்பவும் பளிச்ன்னு உடுத்தி இருப்பாங்க.வீட்டையும் ரொம்ப அழகா வச்சிருப்பாங்க. வீட்டைச் சுத்தி நிறைய பூச்செடிகள். ரொம்ப உடலுழைப்பு இல்லாததாலே கொஞ்சம் குண்டாப் போயிட்டாங்களாம். ஆனா சமைக்கிறதுலே பெரிய ஆள். உக்காந்த இடத்துலேயே அம்பதுஅறுபதுபேருக்கு அருமையா ஆக்கிருவாங்க. நம்ம வீட்டுலேயோ பெரிய பட்டாளம். கூட்டம் ஜாஸ்த்தி. இதுலே எந்தச் சின்ன விசேஷமுன்னாலும் பச்சையம்மா அக்கா இல்லாம நான் பார்த்த ஞாபகமே இல்லை. அவுங்களைச் சுத்தி எங்க சித்திங்க உக்காந்துக்கிட்டுக் கதை பேசிக்கிட்டு காய்கறி நறுக்கிக் கொடுத்துக்கிட்டு, தேங்காய் துருவிக்கிட்டுன்னு ரொம்பவே மஜாவாத்தான் வேலை நடக்கும்.
அப்பல்லாம் புடவைக்காரர்னு ஒருத்தர் ரெண்டு மூணு மாசத்துக்கொரு தடவை புடவை மூட்டையோடு வருவார்.நாந்தான் ஓடிப்போய் அக்காகிட்டே விவரம் சொல்லிட்டு வருவேன். நம்ம வீட்டுலே எல்லாருக்கும் புடவை எடுக்கும்போது அக்காவுக்கும் ஒரு புடவை கண்டிப்பா உண்டு. அதான் வீட்டுப்பொண்ணாவே ஆயிட்டாங்கன்னு சொன்னேன் இல்லியா?
தங்கராசண்ணேதான் அதெல்லாம் வேணாமுன்னு கொஞ்சம் ஜோர் காட்டுச்சு மொதல்லே. ஆள்தான் கட் அண்ட் ரைட் ஆச்சே! பாட்டி கொஞ்சம் கோபமாத் திட்டுனதும் அடங்கிருச்சு. நாங்க பதின்மவயசா இருந்தப்பெல்லாம் அக்கா வீட்டுக்குப்போக மட்டும் எப்பவும் பர்மிஷன் கிராண்டட். இங்கே வீட்டுலே எதாவது வேலை இருக்கும்போலத் தெரிஞ்சா நான் எஸ்கேப். அக்கா வீட்டுக்குப் போயிருவேன். உக்காரவச்சு நல்லா தலை எல்லாம் சீவிப் பின்னி விடுவாங்க. தோட்டத்துலே இருக்கற பூவையெல்லாம் பறிக்கச் சொல்லி,அழகாக் கட்டி தலை கொள்ளாம வச்சுவிடுவாங்க. அண்ணன் எதோ ஒரு பேப்பர் வாங்குவார். கட்சிப் பத்திரிக்கையாம். அதையெல்லாம்படிக்க எனக்கு அங்கேதான் ச்சான்ஸ் கிடைச்சது. அந்தக் கட்சிகளைப் பத்தியெல்லாம் பாட்டி வீட்டுலே நல்ல அபிப்பிராயம் எல்லாம் கிடையாது. கட்சின்னா காங்கிரஸ்தான்னு இருந்த வீடு.
அண்ணனும் கட்சி வேலை அது இதுன்னு என்னவோ செய்வார். ஆனா எதா இருந்தாலும் வீட்டுவரைக்கும் வராது.கடையோடு நின்னுரும். அக்காவுக்கு ஒண்ணும் கட்டு திட்டமுன்னு போடலைன்னாலும், கட்சியைப் புரிஞ்சுக்கிட்டு அக்கா வீட்டுலே சாமிப் படம் எல்லாம் வச்சுக்கலை. நம்ம வீட்டுக்கு வந்தா மட்டும் எல்லாரும் பூஜையிலே உக்கார்றதுபோல உக்கார்ந்துக்கும்.
எப்பவாவது அக்காவைப் போய்ப் பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். கிழவியா ஆகி இருப்பாங்க இல்லே?லட்டு செய்யறதை எப்பப் பார்த்தாலும் அக்கா ஞாபகம் 'டக்'ன்னு வந்துரும்.
அடுத்தவாரம்: ரகுநாதன்
நன்றி: தமிழோவியம்
Monday, November 13, 2006
எவ்ரிடே மனிதர்கள் -22 பச்சையம்மாக்கா
Posted by துளசி கோபால் at 11/13/2006 09:24:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
உள்ளேன் டீச்சர்! :-)
அட அது எப்படி டீச்சர், எங்க ஊரு வாழைப்பந்தல், பச்சக்கா, மாதிரி, கிட்டத்தட்ட அதே கதை தான்!
அண்ணன் மாவு மில்லும் வச்சிருப்பாரு! தி.க கட்சி!
நோன்பு, மற்றும் தீபாவளிக்கு எல்லாம், மாவு அரைக்க (அரிசி அரைக்க) ஊரே அங்கு தான் கூடும்.
எல்லாரும் அரிசி பக்கெட்டை, பெரிய, பெரியார் படத்துக்குக் கீழே வச்சிருவோம்; அரைச்சப்புறம் எடுத்துக் கொண்டு வருவோம்; அதுக்குள்ள "கடவுள் இல்லை" ன்னு துண்டு நோட்டீசு போட்டுத் தருவாரு அண்ணன்!
வீட்டுக்கு வந்ததும், "பெரியாருக்குத் தான் முதல் நைவேத்தியம் ஆச்சு; பாத்தீங்களா, அப்பறம் தான் பெருமாளுக்கு!", என்று நான் எல்லாரையும் கிண்டல் ஓட்டுவேன்! :-)
உள்ளேன் டீச்சர்.
யோவ் கே.ஆர்.எஸ். எங்க போனாலும் பெரியாரும் பெருமாளும் பத்தியே பேச்சா இருக்குன்னு பார்த்தா இங்க வந்தும் ஆரம்பிச்சிட்டீர்ரா? டீச்சர், இதெல்லாம் கொஞ்சம் கண்டிக்கக் கூடாதா? இவ்விடம் அரசியல் பேசக்கூடாதுன்னு ஒரு போர்டு வையுங்க. :-D
சரி, உங்களுக்கு லட்டு பாத்தா அடுத்தவங்க ஞாபகம் எல்லாம் வருமா? நமக்கு எப்படா உள்ளே ரெண்டு தள்ளறதுன்னு ஒரே ஞாபகம்தான். ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே லட்டு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.
ஐய்யய்யோ நானும் ஆரியம் திராவிடம்ன்னு பேசிட்டேனே. ஐயாம் தி எஸ்கேப்....
வாங்க KRS.
பச்சக்கா அங்கேயும் இருக்காங்களா?
ஆனா ஒரு உண்மையை இங்கே சொல்லணும். அந்தக் காலத்துலே பெரியார் கொள்கையிலே
பிடிப்பு உண்டாகி அந்தக் கட்சியிலே சேர்ந்தவங்க, கட்சியை ஒரு பணம் பண்ணும் இடமா
பார்க்கலை. ( இப்ப அரசியல் வியாபாரம் ஆயிருச்சு)
அவர் சொன்ன பல செயல்களைத் தங்களோட
வாழ்க்கையிலே கடைப்பிடிச்சாங்கதான். ( இப்போ அப்படி யாரும் இல்லையான்னு யாரும்
சண்டைக்கு வந்துறாதீங்கப்பா)
இது பெரியார் கட்சியிலே மட்டுமில்லை அநேகமா எல்லாக் கட்சிகளிலும் 'கொள்கைகளில் மட்டுமே
பிடிப்பு' இருக்கற ஆட்கள் ( இப்ப இவுங்களுக்குப் பேரு பொழைக்கத் தெரியாத மனுசனுங்களாம்)
சிலர் இன்னும் இருக்காங்கதான். இப்படி இருக்கற சிலரால் சில 'பச்சக்காக்களுக்கு ஒரு வாழ்க்கை'
கிடைச்சதே சந்தோஷம்தான்.
கொத்ஸ்,
நம்ம உஷாதானே சொன்னாங்க, வலைப்பதிவுகளிலே ரெண்டு விஷயம்தான் இப்ப இடம்புடிச்சு இருக்குன்னு.
நானும் அந்த ஜோதியிலே ஐக்கியமாயிட்டேன் இப்ப:-))))
//ஐய்யய்யோ நானும் ஆரியம் திராவிடம்ன்னு பேசிட்டேனே. ஐயாம் தி எஸ்கேப்....//
இப்பப் பாருங்க நீங்களும் வந்து இதுலே கலந்தாச்சு:-))))
துளசியக்கா!
சந்தர்ப்பம் கிடைச்சால் கட்டாயம் சென்று பாருங்கள்; மிகச் சந்தோசப்படுவார்கள்;
யோகன் பாரிஸ்
வாங்க யோகன்.
சந்தர்ப்பம் கிடைக்கணுமே, அதான்...... 41 வருசமாச்சு அவுங்களைப் பார்த்து.
ஊரே மாறி இருக்கும் இத்தனை வருசத்துலே வழி தெரியவும் கொஞ்சம் மெனெக்கிடணும்.
தமிழோவியத்திலேயே படித்தாயிற்று.
இந்த வார நட்சத்திரமா ? விருந்துதான் !
வந்துட்டேன்ன்ன்....
நட்சத்திர வாரத்திற்கான வாழ்த்துகள்.ஆவலுடன் காத்திருக்கிறோம்...
வாங்க சுதர்சன்.
நம்மளை 'அரை' யாக்கிட்டாங்கப்பா:-)
வாங்க மணியன்.
நன்றி.
விருந்தா இல்லே மருந்தான்னுதான் இன்னும் முடிவாகலை:-)))
பெருமழையில் சிறுதுளி காணாப் போச்சு.......
நட்சத்திர ஆரவாரத்தில் எவ்ரி டே மனிதர்களை மறந்துட்டேன்..
"செத்தது எங்கம்மாவாச்சே....அப்ப நான் பாவம்தானே..."
"'கண்ணும் கண்ணும் நோக்கியா'ஆகிப்போச்சு.
எப்படி வார்த்தைகள் வந்து விழுகின்றன!
வாங்க சிஜி,
என்னங்க சின்னப்புள்ளையாட்டம் இதுக்கெல்லாம் கண் கலங்கிக்கிட்டு?:-))
எல்லாம் அப்படியே வர்றதுதான்:-))))
Post a Comment