Tuesday, November 07, 2006

எவ்ரிடே மனிதர்கள் -21 ராமன்

ராமன்,பெயரில் மட்டுமே ராமன். இதெல்லாம் அவரோட மனைவிக்கு 'முதலில்' தெரியாது!

எந்த மனைவிக்கு?

அதான் இப்ப இருக்கற மனைவிக்கு.


கல்யாணத்தரகர் மூலமா ஏற்பாடான கல்யாணம். ஒரே ஜாதியில் எதோவேற உட்பிரிவாம். லக்ஷ்மியோட வீட்டில் முதல்லெ கொஞ்சமா எதிர்ப்பைக் காமிச்சுட்டுச் சரின்னுட்டாங்களாம்.ராமனோட சைடுலே அம்மா மட்டும்தான். அப்பா இறந்து ரொம்ப வருஷமாயிருச்சாம். ஒரு அக்கா இருக்கறதாச்சொல்லி இருக்கார். ஆனா அவுங்களும் கல்யாணத்துக்கு வரலை. லக்ஷ்மியோட சொந்தக்காரர்கள் ஒரு பெரியபட்டாளம் அளவுக்கு இருக்கறதாலே அவ்வளவாப் பொருட்படுத்தாம பக்கத்தூர் பெருமாள் கோயிலிலே கல்யாணம் ஜாம்ஜாமுன்னு நடக்காம, சிம்பிளா நடத்தி முடிச்சாச்சு.


அம்மாவும் மகனுமா இருந்த வாடகை வீட்டுக்கு மருமகளா லக்ஷ்மி வலதுகாலை எடுத்து வச்சும் ஆச்சு. தனி வீடுதான்.லக்ஷ்மிக்கு டீச்சர் உத்தியோகம். உள்ளூர்லேதான். அதனாலே அம்மா வீட்டுலே இருந்துபோறது மாதிரியே மாமியார் வீட்டுலே இருந்து வேலைக்குப் போய்வர சுலபமா இருந்துச்சு. ராமனுக்கு மவுண்ட் ரோடுலெ வேலை. தினமும் ரயில் பயணம். செண்ட்ரல் வந்து பஸ் பிடிச்சு வேலைக்குப் போய் வருவார். அப்பப்ப வேலை விஷயமா(???) சில நாள் வெளியூர் போய் வரணுமாம்.


காலையிலே எட்டுமணிக்குக் கிளம்பிருவார். சாயந்திரம் வர ஏழுமணியாகும். எப்பவும் வெள்ளை & வெள்ளை உடுப்புதான்.தங்க ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி. பளபளக்கும் ஷூ. முகத்துலே ரொம்ப சிந்தனையைத் தேக்கிவச்ச மாதிரி ஒரு பார்வை. சதா சிகெரெட் புகை. போற வர்ற வழியிலே யாரோடும் பேச்சுவார்த்தை கிடையாது.முதல் வகுப்பு சீஸன் டிக்கெட் வேற. ஆள் பார்க்கவே ஒரு 'கெத்து'தான். ஒரு ஏழெட்டு மாசம்வரை எல்லாம் சுமுகமாப் போச்சு. லக்ஷ்மி அப்போ உண்டாயிருந்தாங்க.


தலைசுத்தலா இருந்ததாலே வேலையிலே லீவு சொல்லிட்டு லக்ஷ்மி ஒரு நாள் வீட்டுக்கு வந்தப்ப ராமனோட அம்மாவைப் பார்த்துப் பேசிக்கிட்டே ஒரு ஆள் பின் வராந்தாவுலெ இருந்து சோறு சாப்புடறதைப் பார்த்தாங்க. யாரோ தெரிஞ்சவுங்களாம். ஊர்லே இருந்துபார்க்க வந்தாங்களாம். இதைப் பத்தி லக்ஷ்மி ஒண்ணும் மேல்கொண்டு விசாரிக்கலை. நாள் போய்க்கிட்டு இருந்துச்சு.



குழந்தை பிறந்தபிறகு மூணு மாசம் லீவுலே வீட்டுலே இருந்தப்பத்தான் அந்த ஆள் மாசம் ஒருக்கா வந்து போறதைக் கவனிச்சாங்க. ஒரு நாள் மூணு வயசுப் பையனோடு அந்த ஆள் வந்துருந்தார். மாமியார் அந்தப் பையனை வாஞ்சையோடுக் கட்டிப்புடிச்சு அழுததைப் பார்த்ததும் எதோ மனசுலெ சந்தேகம். அப்புறம் கொஞ்சம் விசாரணயிலெ இறங்குனப்பத்தான் விஷயம் வெளியே வந்துச்சு.



அந்தப் பையன் ராமனோட குழந்தைதான். அப்ப குழந்தையின் அம்மா?
ஐய்யோ........ அது ஒரு பெரிய கதை.


அந்தம்மா பேரு பத்மா. ராமனோட முதல்(???) மனைவி. அப்ப வேற ஊர்லெ அம்மா வீட்டுலே இருந்துருக்காங்க. ஒரு நாள் சமையல் செய்யும்போது ( விறகு அடுப்பு காலம்) புடவையிலே தீப்புடிச்சுக்கிச்சு. எப்படியோ உயிரைக் காப்பாத்திட்டாங்க. ஆனாஉடம்புலே ஏறக்குறைய பாதி தீக்காயத்துலே பொசுங்கிருச்சு. முகத்துலே பயங்கரமான அடையாளம். தலைமுடி எல்லாம் எரிஞ்சுபோய் பார்க்கறதுக்கே கஷ்டம். புண்ணுங்க ஆறிட்டாலும் வடு நின்னுபோச்சு. அப்பக் குழந்தைக்கு அஞ்சு மாசமாம்.


விஷயம் கேள்விப்பட்ட ராமன் போய்ப் பார்க்கக்கூட இல்லையாம். யாரோ ஊர்க்காரங்களை வச்சுப் பஞ்சாயத்து செஞ்சு, மாசம் எதோ ஒரு தொகை செலவுக்குக் கொடுக்கறதா முடிவாகி அப்படியெ கொடுத்துக்கிட்டு இருக்காங்க. கொஞ்சநாளா அதாவது லக்ஷ்மியைக் கட்டுன நாளா மணிஆர்டர் அனுப்பலையாம். அதைச் சொல்லிட்டுப்போக வந்த ஊர்க்கார ஆளைத்தான் ஒரு நாள் லக்ஷ்மி பார்த்தது. அந்த ஆளே ரெண்டுமூணு மாசத்துக்கொருக்கான்னு வந்து பணத்தை வாங்கிப்போக ஆரம்பிச்சுருக்கார்.லக்ஷ்மிக்குக் குழந்தை பிறந்த சேதி தெரிஞ்சதும், அந்தப் புள்ளையைப் பார்க்கறதுக்கும், தன் புள்ளை அப்பனோட முகத்தையாவது பார்த்துக்கட்டுமுன்னும் பையனை அந்த ஆளொடு அனுப்பி இருக்காங்க பத்மா.


அன்னிக்கு லக்ஷ்மி அழுத அழுகை யாரும் அழுதுருக்க மாட்டாங்க. மனசு ரொம்பவே கஷ்டப்பட்டுப் போயிருக்கு.லக்ஷ்மியோட பொறந்த வீட்டுலே அம்மா, சித்தி, அக்கா தங்கைன்னு ஒரு கூட்டமே இருக்கே, அவுங்க கொஞ்சம் கடவுளுக்குப் பயந்த ஆளுங்க. அவுங்களோட பேசி ஒரு முடிவுக்கு வந்தாங்க லக்ஷ்மி. அந்தப் பையனும் இனிமே இங்கேயே இருந்துக்கட்டும். தன் பிள்ளையோட அவனையும் வளர்த்துக்கலாமுன்னு சொல்லிட்டாங்க. அதே மாதிரிபையன் சந்தானமும் இங்கியே வந்துட்டான். மாமியார்தான் பேச்சு வார்த்தை நடத்துனாங்களே தவிர ராமன் என்ன,ஏதுன்னு ஒரு வார்த்தையும் கேக்கலையாம். இந்த மாதிரி ஆயிருச்சுன்னு ஒரு வருத்தம், மன்னிப்பு, விளக்கம்னு எதுவுமே இல்லையாம்.


பத்மா மட்டும் புள்ளையைப் பார்க்கணுமுன்னு ஏழெட்டு மாசத்துக்கு ஒரு தடவை ராத்திரியிலே வந்து பார்த்துட்டுப் பொழுது விடியுமுன்னே போயிருவாங்களாம். இதுலே 'எல்லாம்' மாமியார்தான் பார்த்துக்குவாங்களாம். வர்றதும் போறதும் அக்கம்பக்கம் யாருக்கும் தெரியாதாம். தனி வீடு வேறயாச்சே. வசதியாப் போச்சு.


அடுத்தடுத்துப் பிள்ளைங்கன்னு லக்ஷ்மிக்கு பொறந்துருக்கு. ரெண்டு பிள்ளைங்க பொறந்து கொஞ்சநாள் இருந்து போயிருச்சுங்க. இப்ப இருக்கறது மூணு பையன், இல்லையில்லை, சந்தானத்தோடு சேர்த்து நாலு பையன், ஒரு பொண்ணு.


குடும்பம் இப்படி வளர்ந்துக்கிட்டுப்போன நிலையிலே ராமனோட எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் வீடுவரை வர ஆரம்பிச்சது. இவ்வளோ நாள் வேலை விஷயமா வெளியூர் போய்க்கிட்டு இருந்ததெல்லாம் இதுக்குத்தானாம். சனிக்கிழமையாச்சுன்னா, தொடுப்பை வீட்டுக்கே கூட்டியாந்துருவாராம். வந்து அறைக்குள்ளே நுழைஞ்சாங்கன்னா அவ்ளோதானாம். ஞாயித்துக்கிழமை சாயந்திரமா இருட்டுனப்புறம் போய் பஸ் ஏத்திட்டு வருவாராம் லக்ஷ்மியோட தம்பி. அப்ப அவரு கொஞ்சநாள் வேலையில்லாமப் போய் அக்கா வீட்டுலே இருந்தாராம். ராமன் பெரிய தொரை.முகத்தைக் கடுகடுன்னு வச்சுக்கிட்டு இருக்கறதாலே யாரும் முன்னாலெ நின்னு பேசவே பயப்படுவாங்களாம். புள்ளைங்கக்கூட அப்பான்னு பயப்படுமே தவிர ஆசையா செல்லம் கொஞ்சிக்கிறதெல்லாம் அம்மாட்டேதானாம்.



ராமன் ஆஃபீஸ்லே இருந்து வீட்டுக்கு வந்தாச்சான்னு தெரிஞ்சுக்கப் புள்ளைங்களைப் பார்த்தாப் போதும். எல்லாரும் கப்சுப். அப்பாவோட 'ஸ்பெஷல் டே' அன்னிக்கு அறை ஜன்னலுக்கு வெளிப்புறம் சத்தமில்லாப் போய்ப்பார்த்து அங்கெ விழுந்து கிடக்கற சாக்லேட் காகிதம், வகைவகையான பழத்தோலுங்க, இனிப்பு வாங்கிவந்த பொட்டலக்காகிதம் எல்லாம் பொறுக்கிக்கிட்டுவந்து வாசனை புடிச்சு ஏமாந்து நிக்குங்களாம். இதையெல்லாம் பார்க்கப்பார்க்க லக்ஷ்மிக்கு வயித்துலே தீ மூட்டுனமாதிரி இருக்குமாம்.


இவ்வளோ கலாட்டாவுலே பத்மாவுக்குப் பணம் அனுப்பறது அடியோடு நின்னு போச்சு. அந்தம்மாவும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒரு நாள் இங்கே வந்து வீட்டுவாசல்லே நின்னு கத்தோ கத்துன்னு கத்தி, மண்ணையெல்லாம் வாரித்தூத்தி இருக்கு. அக்கம்பக்கம் ஜனங்களுக்குத் தெரிஞ்சுபோச்சேன்னு ராமன் வீட்டுலெ கதவு ஜன்னலையெல்லாம் சாத்திக்கிட்டு உள்ளெயே இருந்துட்டாங்களாம். ராத்திரியெல்லாம் வெளியே நின்னு அழுதுக்கிட்டே இருந்த பத்மா, விடியக்காலையிலே ரெயில் முன்னலே போய் விழுந்து உயிரை விட்டுட்டாங்க. இந்த நியூஸையும் ஓடிவந்து சொன்னது லக்ஷ்மியோட தம்பிதான்.


போலீஸ் கேஸ் ஆயிறப்போதேன்னு பயந்துக்கிட்டு அன்னிக்குப்பூரா உயிரைக் கையிலே புடிச்சுக்கிட்டு இருந்திருக்காங்க.பத்மா வெளியூராச்சே. அதுனாலே அடையாளம் காட்ட யாருமில்லாம, அனாதைப் பொணமா போயிருச்சு. கிட்டத்தட்டஒரு மாசம்வரைக்கும் 'தொரை' லீவு போட்டுட்டுப் பதுங்கி இருந்தார். பத்மாவுக்கு வீட்டுலே பூஜை புனஸ்காரமெல்லாம் செஞ்சாங்க. எல்லாம் பயம்தான்....... பேயா வந்து பழி வாங்கிறப்போகுதுன்னு.

அப்புறம்?


எல்லாம் பழையபடிதான். இந்த ஆள் மாறவே இல்லை. லக்ஷ்மிக்கு வாழ்க்கையே துயரமாப் போச்சு. பசங்கதான் ஒரே ஆறுதல். நல்லாப் படிக்கிறானுங்க. பொண்ணுதான் படிப்புலே சுமார். அப்படியும் விடாம உத்தியோகத்துக்குப் போய்வந்துக்கிட்டுத்தான் இருந்தாங்க. உடம்பு ஒரு சமயம் ரொம்ப முடியாமப்போய், மெனோபாஸ் கஷ்டத்தாலெ கடைசியிலே வேலையை விட்டுட்டாங்களாம்.


இப்ப வயசாயிருச்சுல்லே? ராமன் (பெரிய மனுஷ வேஷத்துலே?) ஊரோட வேற பகுதியிலே இருக்காராம். ஒரு 'புகழ் பெற்ற சாமியாரின்' உத்தம பக்த கோடிகளில் ஒருத்தராம். வாராவாரம் பூஜை, பஜனைன்னு வீடே அமர்க்களப்படுதாம். ஜனங்க கூட்டங்கூட்டமா வந்து போகுதாம். ஆஹ்ங்.....



அப்படியா!!!!!!!!


பெரிய இடம். பொல்லாப்பு எதுக்கு?


சந்தானத்தை ஒரு நாள் அகஸ்மாத்தாப் பார்த்தேன். படிச்சுட்டு வேலை செய்யறான். வீட்டுலே இல்லியாம். அப்பா எப்படி? எதாவது மாற்றம் இருக்கான்னு கேட்டேன்? அவன் சிரிப்பே உண்மையைச் சொல்லிருச்சு.

'ஏங்க்கா.........நீயும் நம்பிட்டேயா?'ன்னான்.


அப்ப அம்மா?


'கண்ணை மூடிக்கிட்டு' எப்பவும்போல இருக்காங்க.



அடுத்த வாரம்: பச்சையம்மாக்கா


நன்றி: தமிழோவியம்

26 comments:

said...

ம்ம்ம்... கண்ண மூடீட்டு இருக்கிற வைக்கும் இந்த மாதிரி ராமன்களின் லீலைகள் நடந்துட்டு தான் இருக்கும்..

ஆனா உங்க "எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ் & தொடுப்பு" ,,, சூப்பர்

said...

இதெல்லாம் முதல் நாளே தட்டிக் கேட்க்காத அந்த அம்மாவையும் மனைவியையும் என்ன சொல்ல? பாவம் அந்த பசங்க.

said...

மங்கை & கொத்ஸ்,

வாங்க.

எல்லாம் சமூகத்துக்குப் பயந்தா இல்லே
தைரியம் இல்லையான்னு தெரியலை.

ஒருவேளை இந்தக் 'கல் & புல்' மூளைச் சலவையோ?

பாவம், பசங்க இதைப் பார்த்தே வளர்ந்துருக்கு(-:

said...

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதனை நினைத்துவிட்டால்.
துளசி !! வெள்ளை பாண்டும்
வெள்ளை சட்டையும், வாயில பான் பராக் கிடையாதா.
எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவி இன்னும் அவ்ங்க வீட்டுக்காரரைப் பத்தி சொன்னால் நம்ப மாட்டாங்க.அவர் பேரோ கிருஷ்ணன்.
மனைவிக்கு எல்லாமே கடைசியில் தான் தெரியவரும் என்பது உண்மை.
இவர்களுக்குத் தண்டனையோ ஒன்றும் கிடையாது.
வாழ்க வையகம்:-)

said...

ஹூம். ;-((
ஒரு காலத்துல வெள்ளை வேஷ்டி கட்டனும் என்றால் ஒரு கெத்து வேணும்,ஆனால் இந்த ஆளுக்கு "கெத்து" வேறெதிலோ இருக்கு.

said...

http://gragavancomments.blogspot.com/2006/10/2006.html

முருகா.....நமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு சிறு துன்பம் என்றாலே நமக்கெல்லாம் மனசு சங்கடப்படுகிறது. கட்டிய மனைவி நெருப்பில் வெந்து உறுப்புகள் நொந்து போயிருக்கும் நிலையில் போய்ப் பார்க்காத படுபாவி. வீட்டுக் கதவை மூடிக்கிட்டு உள்ள உக்காந்திருந்தானா...தூத்தூ....அவன் ஆம்பளையே இல்லை.

said...

பெயரில் என்ன இருக்கு?
"நல்ல"பாம்பு கதைதான்

said...

வாங்க வல்லி.

சரியாத்தான் சொன்னீங்க. இவுங்களுக்கு எப்படி உறுத்தல் இல்லாம
வாழமுடியுதுன்றது இன்னிக்கு வரைக்கும் எனக்கு ஆச்சரியம்தான்.

said...

குமார்,

இவர் வேட்டிக்கும் மேலே! தூய வெள்ளை பேண்ட், தூய வெள்ளை முழுக்கைச்
சட்டை( ஷர்ட் இன் பண்ணிக்கிட்டு), தங்க ஃப்ரேம் கண்ணாடி, ப்ரில்க்ரீம் தலை,
அட்டகாசமான செண்ட்ன்னு அமர்க்களம்தான் போங்க. என்னா கெத்து என்னா கெத்து.

said...

ராகவன்,

நாம இப்படிச் சொல்றோம். ஆனா பெரிய ஆன்மீக குரு அளவுக்குப் போய்
ஆளுகளை வசீகரிக்கிறார்னு மக்கள்ஸ் சொல்றாங்க.
'கடவுளுக்குக் கண்ணில்லை'ன்னுகூட நினைச்சு மனம் கசந்து போயிருக்கேன்
பலசமயம்(-:

said...

வாங்க சிஜி.

எந்தப் பாம்பாவது 'வேஷம்' போட்டுப் பார்த்திருக்கோமா?
அதுவும் நல்ல பாம்பு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுன்னு சொல்றாங்களே?

said...

இவனுங்களுக்கேன்னு பேருதான் எப்படி சரியா அமையுதோ?
லக்ஷ்மிக்கு தைரியம் பத்தவில்லையோ? அல்லது "கல்-புல்" கோஷ்டியா?
இவங்களெல்லாம் என்ன படிப்பிச்சு முன்னேத்த போறாங்க?

said...

நேத்தைக்கி ஒரு பின்னூட்டம் போட்டேன்.. என்னாச்சின்னு தெரியலை

ராமன் மாதிரி ஆளுங்க ராவணனா இருக்கறதுக்கு பத்மா, லக்ஷ்மி மாதிரியான கோழை பெண்களூம் ஒரு காரணம்தான்னு நினைக்கிறேன்..

பொண்ணுங்க ஒன்னு கணவர வளைச்சிப் போட்டுக்க கத்துக்கணும்.. இல்லையா ஒதச்சி திருத்த கத்துக்கணும்.. இல்லன்னா பிரச்சினைதான்..

சரிதானே..

said...

கற்று சுயமாக வேலை பார்க்கும் பெண்கூட 'கல்.. புல்..' என்றிருந்தால் எப்படி ? இத்தகைய ஆண்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டாமா ? கை பிடித்த மனைவியை கடைசி வரை .. இது செல்லுபடியாகாதா ? முதல் மனைவியை கொன்ற பாவமும் இரண்டாம் மனைவியை ஏமாற்றிய பாவமும் ...கடவுள் ஏன் கல்லானான் ?

said...

"ராமன் எத்தனை ராமன் அடி" என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது! இப்படியும் ஒரு ராமன்!

பணிக்குச் செல்லும் பெண், இத்தனை மக்களைப் பெற்ற பெண் எப்படி இவ்வளவும் அனுமதித்தார் என்று ஆயிரம் கேள்விகளை மற்றவர் எழுப்பலாம்; ஆனால் பட்டவருக்கு மட்டும் தான் தெரியும் நோவும் வேதனையும், இழப்பும்!
என்ன ஒரு விடயம்; லக்ஷ்மி நிச்சயம் உதவி கேட்டிருக்க வேண்டும்! ஏன் கேட்கவில்லையோ? :-((

//சாக்லேட் காகிதம், வகைவகையான பழத்தோலுங்க, இனிப்பு வாங்கிவந்த பொட்டலக்காகிதம் எல்லாம் பொறுக்கிக்கிட்டுவந்து வாசனை புடிச்சு ஏமாந்து நிக்குங்களாம்//

இதெல்லாம் மிகவும் கொடுமை டீச்சர்!
இப்படியும் ஆளுங்க இருக்காங்களா என்று தான் பெரும்பாலும் கேட்கத் தோணுதே தவிர மனித மனத்தின் வக்கிரங்களைக் கையாளுவது என்பது மிகவும் சிக்கலான விடயமாகி விடுகிறது!

நல்லவர் நல்லவராக இருக்கும் வரை தான் பொல்லாதவரின் கொட்டம் எல்லாம்! போலி பிரேமானந்தாக்கள் சில நாள் கொண்டாடலாம்; ஆனால் இறைவனின் சினம் எங்கு எப்போது வெளிப்படும் என்று யாருக்கும் தெரியாது, அந்தப் பாவிக்குத் தவிர!

said...

வாங்க கஸ்தூரிப்பெண்ணே.

இந்த சம்பவமெல்லாம் நடந்தே ஒரு 45 வருஷம் இருக்கும். அப்போ பெண்கள்
இருந்த நிலை இப்படித்தான் போல(-:
கல் & புல்.

said...

வாங்க டிபிஆர்ஜோ.

வளைச்சுப்போடற அளவு மென்மையான ஆள் இல்லியே இந்த ராமன்.
அகங்காரம் பிடிச்ச மனுஷன். தன்னுடைய தோற்றத்தை வச்சே மத்தவங்களை
மரியாதை தர்ற அளவுக்கு மாத்தி வச்சுருந்தார். நானும் அவரைப் பார்த்து
ரொம்பப் பெரிய மனுஷன்னு நினைச்ச காலம் உண்டு. அப்புறம்தான்.....

said...

மணியன்,

பெண்கள்ன்னா இப்படித்தான் இருக்கணுமுன்னு கட்டுப்பாடு ரொம்ப இருந்த
சமுதாயத்துலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளியே வந்துக்கிட்டு இருந்த
காலக் கட்டம் இல்லியா அப்ப. அதனாலேயே ஒரு கோழைத்தனம் மனசுக்குள்ளே
வந்துருச்சோ என்னமோ?

ஆனா ஒண்ணு, அவுங்க மகள் இவுங்களைவிட மனோ தைரியமிருக்கறவங்களா
இருப்பாங்கதானே?

said...

KRS,

லக்ஷ்மி, தன்னோட குடும்பத்தாரின் உதவி கேட்டிருந்தாங்க. கூடவே மாமியாரும்
இருந்தாங்கதானே? அந்தம்மாவுக்கே பையன் கிட்டே பேசப் பயம். எல்லாம் தன்
தலை எழுத்துன்னு சுலபமா எடுத்துக்கிட்டு அப்படியே 'வாழ்ந்துட்டாங்க'போல.

சமூகம் அப்பெல்லாம் கணவனைவிட்டுப் பிரிஞ்சு வாழற பெண்களை எவ்வளவு
மோசமா நடத்துச்சுன்றது இன்னும் ஒரு பெரிய சோகம். அங்கேதான் இந்த பாலிஸி
கல்லும் புல்லும்.

மனசெல்லாம் மரத்துப்போய் தான் இவ்விதம் நடத்தப்ப்படறோம்ன்றதே புரியாம
இருந்துட்டாங்க. இன்னும் அதே நம்பிக்கை(-:

said...

அப்பாடா டிபிஆர்ஜோ வந்துட்டுப்போயாச்சு,பயமில்லாம வாய திறக்கலாம்.பின்ன பாருங்களேன் Google earth பத்தி சொன்னத வச்சு எப்படி பத்த வச்சுட்டுப் போயிட்டாரு போன கிளாஸ்ல‌.{நல்லாவே யோசிக்கிறாரு:-)}

எவ்ரிடே மனிதர்கள் ஒவ்வொரு கேரக்டர வச்சும் ஒரு மெகா சீரியல் எடுக்கலாம் போல‌ருக்கே. அதுவும் இந்த ல‌ட்சுமி அம்மாவோட சோக கதாபாத்திரம், ரெண்டு பெண்டாட்டிக்கதை, இது போதும் ந‌ம்ப லேடீஸ்ஸை அழவச்சு டாப் 1ல கொண்டுவந்துறலாம்.

said...

ஆ.... மதி. வாங்க .
ஆஹா.... நமக்கு ஒரு ப்ரொட்யூஸர் கிடைச்சாச்சு.
அப்ப மெகா சீரியல் எடுத்துறலாமா?
இன்னும் நாகரிகம் கருதி சொல்லாம விட்ட (ராமன்)விஷயங்கள்
நிறைய இருக்கு.
நான் வசனம் 'சூப்பரா' எழுதுவேன்:-))

அப்படியே எனக்கு ஒரு ரோலும் எடுத்துக்கவா?

said...

ராமனை வைத்து "படமா"??- என்னை ராமனாக நடிக்க கூப்பிடாதீங்க.:-))

said...

//அதுவும் நல்ல பாம்பு சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுன்னு சொல்றாங்களே?//

டீச்சர். நீங்களுமா? :-X

said...

கொத்ஸ்,

எல்லாம் கேள்வி ஞானம்தான். நம்மூட்டுலேயே ஒரு 'கர்ணபரம்பரைக் கதை' இருக்கேப்பா.
நம்பமாட்டேன்னு சொன்னா, 'மேலே போன பாட்டி கனவுலேயாவது வந்து திட்டிட்டுப் போவாங்க'ன்ற
பயம்தான்:-)

said...

சரிங்க குமார். உங்களுக்குக் கிருஷ்ணன் வேஷம். ஓக்கேவா? :-))

said...

வந்துட்டுப்போயாச்சு,பயமில்லாம வாய திறக்கலாம்.பின்ன பாருங்களேன் Google earth பத்தி சொன்னத வச்சு எப்படி பத்த வச்சுட்டுப் போயிட்டாரு போன கிளாஸ்ல‌.{நல்லாவே யோசிக்கிறாரு:-)}
//

அதானே.. ஏம்ப்பா.. ஒனக்கு வேற வேலையே இல்லையா?

நல்ல எண்ணத்தோட மதி சொல்றதையெல்லாமா குதர்க்கமா பாக்கறது?

சாரிங்க மதி..

ஆனா இன்றைய பின்னூட்டத்துலயும்...

சரி.. சரி.. வாய மூடிக்கிட்டேன்..