Friday, January 09, 2026

குன்றைப் பார்த்தால் விடலாமோ ?

மெதுவா நடக்கும்போதே , மலைப் பாதையும் லேஸா உயர்ந்துக்கிட்டே போகுது.... நமக்கு வலப்பக்கம் கீழே அதலபாதாளத்தில் பினாங்கு நகர் , கீழிறங்கும் மேகத்திரைக்குள் இருக்குது.... கம்பித்தடுப்பு போட்டுருக்காங்கன்றதால்  தைரியமா எட்டிப் பார்த்துக்கலாம்.
சுற்றுலாப்பயணிகளுக்காக சின்னச்சின்ன பெட்டிக்கடைகள் போல..... நினைவுப்பொருட்கள்.   குழந்தைகளுக்கான உடைகள்,  சின்னதா ஒரு ஸ்டூடியோ, பொம்மைகள் இப்படி..........  ஒரு ஓவியர்  மக்களை வரைஞ்சு கொடுக்கறார். நல்லாத்தான்  வரையறார். முக ஜாடையெல்லாம்  சரியாவே இருக்கு. 


ஒரு தகவல் மையம் பார்த்துட்டு, அங்கே போய் விசாரிச்சோம். இங்கே இருக்கும் ஒரு குன்றின்மேல் முருகன் கோவில் இருக்குன்னார். தமிழர்தான். படி ஏறணும் என்றதும் கொஞ்சம் பயந்து போயிட்டேன். படியில்லாத பாதையும் இருக்காம். அந்தக் குன்றைச் சுத்திப்போகணுமாம்.  ஏற்றத்தில் போறதைவிட படிகளே தேவலைன்னு குன்றை நோக்கிப் போறோம்.  வழியில் கொஞ்சநேரம் உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கச் சின்னதா ஒரு பார்க் செட்டிங்! 

                       
ஒரு Buggy  பார்த்துட்டு,  விசாரிக்கப்போன நம்மவர், அதை  ஏற்கெனவே யாரோ புக் பண்ணிட்டாங்கன்னார்.  போகட்டும்..........  படி  பார்த்துட்டுச் சொல்றேன்னேன். முடியலைன்னா.... இவர் போய் பார்த்துட்டு, படங்கள் எடுத்து வரட்டும். 

படியாண்டை போனதும்தான்.... ஏறலாம்னு தோணுச்சு.இந்த முருகனுக்கு என் கால்வலி வேடிக்கையாப் போயிருச்சு போல ! ஒரு பத்துமாசத்துக்கு முன்னால் போன இந்தியப்பயணத்துலே மயிலம் கோவில் படிகள் ஏறவச்சுட்டான்.  ஆனா சும்மாச் சொல்லக்கூடாது..... அற்புதமான தரிசனம். ஏகாந்த தரிசனம் போல அமைஞ்சது, நானும் என் தோழியும்தான் ! இத்தனைக்கும் அன்றைக்குக் கிருத்திகை !!!  இப்ப இங்கே படியேறிவரச் சொல்லிட்டான்னு, மெதுவா ரெய்லிங் கம்பியைப் பிடிச்சுக்கிட்டே ஏறிப்போனேன். ஒரு நாப்பதம்பது படிகள் இருக்கணும்....  ஆறேழு நிமிட்டில் மேலே போயாச்! 

குன்றைப் பார்த்தால் குமரனுக்குக் கொண்டாட்டம்தான்.  ஒரு மலையை விடமாட்டான். போதாததுக்கு இங்கே மலைமேல் இருக்கும் சின்னக்குன்று. அதையும் விட்டுவைக்கலை. 
நல்ல அழகான கோவில், பளிச்ன்னு இருக்கு. சுத்தும் முத்தும் பார்வையை விரட்டினால்.... சின்னப்பிள்ளைங்க விளையாட ஒரு குட்டிப்பார்க்.  இது ரொம்ப நல்ல ஐடியா !  பெரியவங்கதான் சாமி சாமின்னு இருக்கோம். கூட வர்ற பசங்களுக்குப் போரடிக்காதா ?  

இந்த முருகனுக்கு அருளொளி முருகன்னு பெயராம். (இது அஃபிஸியல் பெயர் ) நம்ம மக்கள், கொடிமலை முருகன்னும் சொல்றாங்க. ஒரு காலத்துலே (ப்ரிட்டிஷ் ஆட்சியில் ) மலைமேல் ராணுவக்கொடி இருந்ததாம். பதினெட்டாம் நூற்றாண்டிலே தமிழர்கள் வந்தாங்க இல்லையா.... அப்போ  அடையாளத்துக்கு கொடிமலைன்னு சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க.நம்ம மக்கள், குன்றைப் பார்த்ததும்.... இங்கே ஒரு வேல் நட்டுக் கும்பிட்டுக்கிட்டு இருந்துருக்காங்க. 

  பொதுவா முருகன் வழிபாடுகள் எல்லாம் சிம்பிளா ஒரு வேல்  வச்சு ஆரம்பிச்சவைகள்தான்.  ஃபிஜித்தீவு, சண்டிகர், ஏன் இங்கே நியூஸியில் நம்ம ஊரிலும்  ஒரு குழுவா நாங்களும் புள்ளையார் கோவில் ஒன்னு கட்டலாமுன்னு நினைச்சு, புள்ளையார் விக்ரஹம் ஒன்னும், ஒரு வேலும் வச்சுத்தான் சத்சங்கம்  மாசம் ஒருநாள் நடத்திக்கிட்டு இருந்தோம். இதுக்கு முன்கை எடுத்தவரும் ஒரு மலேசியத் தமிழர்தான். அஞ்சு வருஷம் இப்படியேதான் போச்சு.  கொஞ்சம் நிதி சேர்ந்ததும் தான் கோவிலுக்காக இடம் தேடி, நம் குழுவினர் பலரும் ஒரு நல்ல தொகையைக் கொடுத்து,  ஒரு  கட்டடம் வாங்கி, உள்ளே மாற்றங்கள் பல செஞ்சு,  இந்தியாவிலிருந்து பிள்ளையார் சிலை,   விக்கிரஹங்கள், மற்ற பொருட்கள் வரவழைச்சு ஒரு ஒன்னரை வருசத்துக்குமுன்தான் கும்பாபிஷேகம் ஆச்சு. கீழே மூன்று படங்கள்  நம்மூரில்

                      
இந்தக் கொடிமலை முருகன் கோவில், பினாங்கின் மூத்த கோவில்.  வயசு இருநூறு வருஷங்களுக்கும் மேலே! தீராத நோயெல்லாம் தீர்க்கும் கோவில்னு தனிப்புகழ் பெற்றிருக்கும் கோவில் !


 ரொம்பப்பெரிய கோவில்னு சொல்லமுடியாது.  கருவறையும் சுற்றிலும் மண்டமும்தான் ! வாசலுக்கு நேரே கொடிமரம்,  வேலாயுதம், பலிபீடம், மயில் வாஹனம் கடந்து மூலவர் ஸ்ரீ ஷண்முகநாதர் நின்ற கோலத்தில் ! 

நாம்  கருவறையை வலம் வர்றோம்.  மண்டபத்தில்  ஒரு கோடியில் பிள்ளையாரும்  அடுத்த கோடியில் இடும்பரும் இருக்காங்க. இன்னொரு தனிச்சந்நிதியில்  ஸ்ரீ ஆதிஷண்முகநாதர். 
அடுத்து உற்சவமூர்த்திகளின்  மாடம்.  பக்கத்து சுவரில் பெருமாள் ! இதே மண்டபத்தின் ஒரு மூலையில் கோவிலின் அலுவலகம். ஆச்சு, அவ்வளவுதான் !
வெளி மண்டபத்தின் ஒரு மூலையில் ராமலிங்க அடிகள். அடுத்த மூலையில் அருணகிரிநாதர் !

வெளிப்ரகாரம் சுற்றும்போது, அடர்த்தியான மரக்கூட்டங்கள் தனியழகு !   சிவன் குடும்பத்தினர்  பெரிய நந்தியும் மயில்களுமாக..... ஆஹா..

கோவிலின் வெளிப்புறச் சுவரில் சுத்திவர முருகனின் அழகழகான ஓவியங்கள் ! நல்ல ரசனையுள்ள  நிர்வாகிகள் ! கோவில் இருக்கும்  இந்த இடம்  அரசின்  அன்பளிப்பு ! 



வெளியே  சின்னப்பிள்ளைகளுக்கான  விளையாடும் இடத்துக்கு அந்தாண்டை....  படிகள்! மேலே என்ன இருக்கும்னு  பார்த்தால் மசூதி. 1966 இல் கட்டியிருக்காங்க. இந்துக்கள் மட்டுமில்லாமல் இஸ்லாமியர்களுக்கும்  கொடிமலைக்கு வந்து வழிபாடு நடத்தலாம்.  (செக்யூலர்னு சொல்றது இதுதான். எல்லா மதத்துக்கும் சம உரிமை!  ஒரு சாமி ஆகும் , ஒரு சாமி ஆகவே ஆகாது என்ற போலித்தனம் இல்லை, பாருங்க ! ) படிகள்  ஏறணுமேன்னு நான் போகலை. கீழே இருந்தே  சுமாராத் தெரிஞ்சது. அப்புறம் ஆண்டவர் அருளினார்.

கோவில் தோட்டத்தில்  ஆஹா....  என் 'கனகாம்பரம் ' !!!!   சிலபல க்ளிக்ஸ் முடிச்சுட்டு. 'கேசவா, நாராயணா. கோவிந்தா'ன்னு படிகளில் மெதுவாக இறங்கிவந்தேன். எதையெடுத்தாலும் எண்ணும் குணம் இப்பக் காணோம்.....
பினாங்கு மலையில் கோவில் இருக்கும் குன்றுக்கு  Gun Hill  என்று பெயர் . பீரங்கி (cannon)ஒன்னு 1796 இல் நிறுவியிருக்கு  ப்ரிட்டிஷ் அரசு.   தீவை நோக்கி வரும் கப்பல்களுக்கு  சிக்னல் கொடுக்கறதுக்காகவாம். இப்பவும் அந்த பீரங்கி இங்கே இருக்குதான்.  மேலே மசூதிக்குப்பக்கம் என்றதால் நம் கண்ணுக்குப் படலை. நாம்தான் மேலேறிப் போகலையே.........  ப்ச்.........

இறங்குவதில் எனக்கு அவ்வளவாகப் பிரச்சனை இல்லை.  Angsana  என்ற பெயர் போட்ட ஒரு அமைப்பு! கலை நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்கும்  அரங்கம் போல மேடை இருக்கு.  
பாதையோரக்கடைகளில் பேரனுக்கு ரெண்டு உடுப்பு , நினைவுப்பரிசுன்னு  வாங்கினோம்.  கடைகளின் விற்பனையாளர்/ ஓனர் எல்லோரும் பெண்கள்தான் !  கேட்கும் பொருட்களைப் பொறுமையாத் தேடி எடுத்துக் காமிக்கிறாங்க.  பயணிகள் ரசிக்கத் தெரு ஓவியங்கள் இருக்கும் பகுதி ஒன்னு இருக்காம்.  கீழே இறங்கினதும் நேரம் இருந்தால் போய்ப் பார்க்கணும். 

நாம் இப்போ இருக்குமிடத்தில் இருந்து ஒவ்வொரு அடுக்காக இறங்கிப்போக படிகள் எல்லாமும் இருக்குதான். என் கால்கள், 'போகாதே'ன்னு கெஞ்சியது உண்மை. (இதுக்குத்தான் நல்ல உடல் ஆரோக்கியம் இருக்கும்போதே பயணங்களை  மேற்கொள்ள வேணுமுன்னு நான் எப்பவும் சொல்வது. )
பினாங்கிலிருந்து மெயின்லேண்ட் மலேசியாவுக்குப் போக பாலம் இருக்கு. 1985 இல் கட்டியிருக்காங்க. பதிமூணரை கிமீ நீளமாம். கடல் தண்ணீருக்கு மேலே மட்டும் கிட்டத்தட்ட எட்டரை கிமீ!  இப்போ  2014 இல் ரெண்டாவது பாலம் ஒன்னும்  கட்டியிருக்காங்க. இது இருபத்திநாலு கிமீ நீளமாம்.  கடல் தண்ணீருக்கு மேலே கிட்டத்தட்ட  பதினேழு கிமீ போகுது.  மலேசியாவின் மிகவும் நீளமான பாலம் இதுதான் (இப்போதைக்கு ) தென்கிழக்கு ஆசியாவின் நீண்டபாலமும் இதுதான்னு சொல்றாங்க.  பெனாங் மலையில் இருந்து தெரியுதான்னு தேடுனப்ப,  மேகக்கூட்டத்துக்கிடையில்  தூரமா மசமசன்னு தெரிஞ்சது. இது முதலாவதா இல்லை ரெண்டாவதான்னு தெரியலை..... 
கீழே போகும் ரயிலுக்காக  சீனியர் அறையில் ஒரு  காமணி காத்திருந்தோம். பயண நேரத்தைவிடக் காத்திருப்பின் நேரம் அதிகமே !  

தொடரும்............ :-)



4 comments:

said...

சுவாரஸ்யமான இடங்கள்.  அழகான படங்கள்.  ஆளை பார்த்து ஓவியம் வரைஞ்சு கொடுப்பவங்க சென்னைல நிறையவே இருக்காங்க..  மால் ல மட்டுமில்லை, தி நகர்ல ரோட்டுலயே கிடைக்கறாங்க..  இருபது நிமிஷத்துல pencil ஓவியம் கூட வரைஞ்சுடறாங்க.  என் மகன் என் போட்டோ காமிச்சு வரைந்து கொண்டு வந்து கொடுத்தான். கடுப்பா இருந்தது!

said...

வாங்க ஸ்ரீராம்,
எதுக்குக் கடுப்பானீங்க ? உங்களை மாதிரியே வரைஞ்சதாலா ?

நான் தி நகரில் மருதாணி வச்சுவிடும் இளைஞர்களைப் பனகல் பார்க் சுற்றுச் சுவருக்கு முன்னால் ப்ளாட்ஃபாரத்தில் பார்த்திருக்கேன். ஓவியர்களைப் பார்த்ததில்லை. வரும் பயணத்தில் கவனிக்கணும் !

said...

என்னை மாதிரி இருந்திருந்தால் சந்தோஷமா இருந்திருக்குமே....  என் போட்டோ பார்த்து நான், அதாவது ஸ்ரீராம், இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று கேரக்டர் அலசல் செய்துகொண்டே  வரைந்து....   

அது என் முகம் மாதிரியே இல்லை.   

கிர்ர்ர்ர்ர்ர்.... 

"இதற்கு அவனுக்கு ரூபாய் வேறு கொடுத்து வந்தீங்களா" என்று மகன்களைக் கேட்டேன்!

said...

ஸ்ரீராம், ஸ்ரீராம் மாதிரியே இல்லையா ? அடடா...... ஓவியனிடம் மகன்கள் ஒன்னும் சொல்லலையா ? அடப்பாவமே............ ஆனால் ரூபாய் கொடுக்காமல் வரமுடியுமா ? ஓவியனின் உழைப்புக்குக் காசு கொடுக்கத்தானே வேணும், இல்லையோ....? கொஞ்சம் குறைச்சுக் கொடுத்திருக்கலாம் !