Wednesday, January 07, 2026

நம்ம சரவணனுக்குக் கல்யாணம் !

கூட்டாளிகள் எல்லாம் சேர்ந்து பேனர் அடிச்சுருக்காங்க ! சினிமாவின் வீச்சு அதிகம்தான் !
ஒரே மாதிரிப் புடவை கட்டின வரவேற்புக்குழு, உள்ளே போயிட்டாங்க. இது நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயமாம் !  வாசலில் நின்னு (மூணே படிகள்தான் ) எதிர்வாடையில் பார்த்தால்.... இப்ப நாம் போய்வந்த கோவில்.  நம்ம பெருமாளின் விமானம் தங்கமா மின்னுது ! (என்ன இருந்தாலும்.... மஹாலக்ஷ்மியைக் கட்டுன பாக்கியசாலி இல்லையோ !) 
ஹாலுக்குள்ளே காலெடுத்து வைக்கிறோம்.      ஒரு பக்கம் புள்ளையார் கல்யாணத்துக்கு  வந்துருக்கார்.  


நடுவிலே பாதையை     விட்டுட்டு ரெண்டு பக்கமும் பூக்கள் அலங்காரம்.  இடது பக்கம்  மணவறை. வலப்பக்கம் விருந்தினர் உக்கார நாற்காலி வரிசைகள்.  ரொம்பப் பழைய காலத்து ஸ்டைலில் ரெண்டு பக்கங்களிலும் திறந்தவெளி முற்றம் !    


நெடுநெடுன்னு ஏகப்பட்டத் தூண்கள் வரிசை! பார்க்க அழகாவே இருக்குதான் !

நாம் ஒரு பக்கமா ஒதுங்கி  உள்ளே போய் மூலவர் சந்நிதிக்குப் போனோம். அழகான  முன்மண்டபம் பளிச்ன்னு இருக்க, உள்ளே ஸ்ரீ தண்டாயுதபாணி நிக்கிறார்.  தண்ணீர்மலை மேல் பாலதண்டாயுதபாணியா இருக்கறவர், இங்கே  குமரனாகக் காட்சி கொடுக்கறார் ! 
கருவறை வாசலுக்கு  வலப்புறம் (நமக்கு இடப்புறம்  ) அண்ணன் !  சந்நிதிக்கு நேரெதிரா மயில் வாகனம் !    எல்லோருக்கும் பெரிய பெரிய மாலைகள் !               கொஞ்சம் தள்ளி, அந்த அழகான மணவறை ! 
சந்நிதிக்குமுன் இருக்கும்  முன்மண்டபப் பெரிய தூண்களுக்கு  ஸீத்ரூ ப்ளாஸ்டிக் சுத்திவிட்டுருக்காங்க.        கைக்கெட்டும் உயரம்வரைதான் கண்ணாடிச்சீலை !!!!  நல்ல ஐடியாதான் !  மனிதக் கைகளின்   அழுக்கில் இருந்து தப்பிக்கலாம் !     
          
 வலம் வர்றோம். சுத்திக் கம்பியழி. இடையிடையே தஞ்சாவூர் பெயிண்டிங் ! நடராஜர்,  பெருமாள், அஷ்டலக்ஷ்மி, கோஷ்டத்தில் பழனியாண்டி!  தனிச் சந்நிதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன்.   

இன்னும்கூட அந்தாண்டை சந்நிதிகள் இருக்கலாம். நாம்தான் கல்யாண வீட்டினருக்குத் தொந்திரவாக இருக்கவேணாமேன்னு  இந்தப்பக்கமே இருந்துட்டோம். 


முன்வாசல் திண்ணைச் சுவர்களில் முருகனின் ஓவியங்கள்!  அருமை !
சாலையைக் கடந்து எதிர்வாடையில் நிறுத்தியிருந்த காடிக்குத் திரும்பினோம்.  மணி இப்போப் பத்தேகால்தான்.  இங்கிருந்து ஆறே கிமீ தூரத்தில்  கொடிமலை இருக்காம். (Flagstaff Hill) மேலே போய்ப்  பார்க்க ரயில் இருக்குன்னதும்  நம்மவருக்கு ரொம்பவே மகிழ்ச்சி ! 
அடிவாரத்தில் இருக்கும் ரெயில்வே ஸ்டேஷனில் கொண்டுபோய் விட்டார் மேகநாதன். நாம் திரும்பி  வந்ததும் அவரை ஃபோனில் கூப்பிடலாம்.  அவரையும் நம்மோடு வரச் சொன்னோம். ஆனால் ட்ராவல் டெக்ஸி கம்பெனி  சூப்பர்வைஸர் கொஞ்ச நேரத்தில்  வருவாராம். 


நாங்க போய் டிக்கெட் வாங்கிக்கிட்டுக் காத்திருந்தோம்.  கொஞ்ச நேரத்தில்  மேலேயிருந்து ரயில் வந்துருச்சு. ஒரே ஒரு பெட்டிதான். நாம் போய் உக்கார்ந்தோம். அஞ்சு நிமிட்டுக்கும் குறைவான நேரத்தில் மேலே போய் இறங்கியாச்சு. இந்த அஞ்சே நிமிட்டுக்குள்ளே ஒரு சுரங்கப்பாதை வேற !  இந்த ரயிலுக்கும் ரயில்பாதைக்கும் வயசு நூத்தியிரண்டு ! 2023 இல்தான் நூற்றாண்டுவிழா கொண்டாடியிருக்காங்க.  
பல்ச்சக்கரம் எல்லாம் இல்லை. கனமான கேபிள்தான் பெட்டியை  இழுத்துக்கிட்டுப் போகுது .  ஏற்கெனவே பச்சைப்பசேல்னு இருக்கும் ஊரை,  மலைமேல் இருந்து பார்க்கும்போது அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. இந்தக் காட்சிகளை அனுபவிக்க அங்கங்கே  தனிஏற்பாடுகள் வேற !

இங்கே  மலைமேல் தங்குவதற்கு ஒரு ஹொட்டேல் கூட இருக்கு.  வெறும் பனிரெண்டே அறைகள்தான் என்பதால்  ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே புக் பண்ணனுமாம். ( ஒரு தகவலுக்குச் சொன்னேன். நாம் அஞ்சரைக்குள்ளே கப்பலுக்குத் திரும்பணும், கேட்டோ !)

இந்த பினாங்கு மலையைக் 'கண்டு பிடிச்சவர்'  ப்ரிட்டிஷ் ஆட்சியில் இங்கிருந்த  கேப்டன் ஃப்ரான்சிஸ் லைட் என்றவர். (மலை காணாமப்போயிருச்சா என்ன கண்டுபிடிக்கறதுக்கு ?   ஐ மீன்  மலையை எப்படிப் பயன்படுத்தலாமுன்னு..... ஹிஹி  ) ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்னு உருவாக்கலாமுன்னு நினைச்சு மலையுச்சி வரைப் போய்ப் பார்த்தப்ப, அங்கிருக்கும் அழகுகள், அருவிகள், இயற்கைக் காட்சிகள் எல்லாம் பிடிச்சுப்போனதும்  அங்கே போய்வர என்ன வழின்னு உக்கார்ந்து யோசிச்சுருக்கார் !   காலம் பதினெட்டாம் நூற்றாண்டு !  மலையேற்றம்தான் ஒரே வழி.  இப்பவும் மலையேறிப் போற மக்கள்ஸ் இருக்காங்க. ஆரோக்யமான உடல் இருந்தால் மூணு மணிநேரத்தில் போய்ச் சேரமுடியுமாம். அதுக்கான பாதையை நவீனப்படுத்திப் பராமரிக்கிறாங்கன்னு கேள்வி. 

ரயிலை விட்டிறங்கிய நாமும் அங்கங்கே நின்னு வேடிக்கை பார்த்துட்டு மெதுவா நடந்து  முன்னே போகும் மக்களைப் பின் தொடர்கின்றோம்.  

போற வழியில்...........

தொடரும்............. :-)



2 comments:

said...

அது கல்யாண மண்டபத்தில் கோவிலா, கோவிலில் கல்யாணமா...   சாப்பாட்டுக்கு கூடத்தை நடுவில் முற்றத்தில் வைத்திருக்கலாமோ...   

said...

மொத்த சனமும் பார்க்க
முத்தத்தில் நின்னு 
முத்தம் கொடுப்பாங்களோ 
மணமக்கள்... 
அப்புறம் அத்தை 
வந்து திட்டி 
சித்த உள்ள போ 
என்று 
சத்தம் போடுவாளோ..