Monday, January 12, 2026

கோட்டையும் கோபமும்............

பினாங்கு மலையில் இருந்தே மேகநாதனுக்கு சேதி அனுப்பியாச்சு.  கீழே போனதும் நமக்காக வந்து காத்திருந்தவரோடு கிளம்பினோம். லஞ்சு டைம் ஆச்சே, எதாவது நல்ல இடத்துக்குக் கூட்டிப்போங்கன்னு சொன்னதால்  மேகநாதன்  காரைக்குடிக்குக் கூட்டிப்போனார். லிட்டில் இண்டியா பகுதியில் இருக்கு இது.  
நம்மவர், வழக்கம்போல் தென்னிந்திய சைவ சாப்பாடு.  மேகநாதன்  சிக்கன் பிரியாணி. என்னால் உறைப்பான எதையும் சாப்பிட முடியாதுன்னதும்,  காரம் இல்லாமல் ஒரு  சப்ஜியும்  சப்பாத்தியும்  தனியாகச் செஞ்சு கொண்டுவரேன்னு போனார் பரிமாறுகிறவர். முதலில் ஆப்பம் & தேங்காய்ப்பால்தான் கேட்டேன். அதெல்லாம் டின்னர் டைமில்தானாம். 

நம்ம சிங்காரச் சென்னை போலவே எங்கே பார்த்தாலும் பிரியாணிக் கடைகளே !  தமிழன்டா.... என்பதின் அடையாளம்!!!
சாப்பாடு ஆனதும் அந்த தெரு ஓவியங்கள் இருக்குமிடத்துக்குப் போகலாமுனு சொன்னதும், 'அது  ஒன்னும் அவ்வளவு நல்லா இருக்காது'ன்னார் மேகநாதன்.   உள்ளுர் விஷயங்களின் அருமை தெரியாமல், வெளியூர்/  வெளிநாட்டைப் பாராட்டுவதும் மனித குணங்களில் ஒன்னுதானே ?  சரி. எதுக்கும் போறபோக்குலே பார்த்துட்டுப் போகலாமுன்னார் நம்மவர்.  வெளிநாடுகளில் இருந்தெல்லாம் ஓவியர்கள் வந்து வரைஞ்சுட்டுப் போகும் அளவுக்கு பிரபலமாகித்தான் இருக்குன்னு கேள்வி.  இதை வரைஞ்சு வச்ச சுவர்கள் பழுதாகிப்போனாலும், இடிச்சுத்தள்ளாமக் காப்பாத்தி வச்சுருக்கும் இடத்து ஓனர்களைப் பாராட்டத்தான் வேணும். ஒரு நாலைஞ்சு தெருக்களில் அங்கங்கே இருக்கு. என்ன ஒன்னு...........  வண்டியைப் பார்க் செஞ்சுட்டு நடந்துபோய்ப் பார்த்தால் நல்லது.  பார்க்கிங் கிடைக்கணுமே.......... நம்மவர் சொன்னதுபோல் போறபோக்கில் பார்த்தவைதான் ! கைடட் டூர் கூட இருக்காம்! 
 படங்கள் ஒன்னு ரெண்டைத்தவிர  அவ்வளவா எடுக்க முடியலை... நம் கண்ணில் பட்டதும்,  காடியை  நிறுத்தச் சொன்னால்..... பின்னால் வரும் ட்ராஃபிக் அனுசரிச்சு, நிறுத்தறதுக்குள்ளே ஒரு அம்பது மீட்டராவது கடந்துருப்போம்.  அங்கிருந்து இறங்கி நடக்க என்னால் ஆகாதுன்றதால்.... வலையில் பார்த்துக்கலாமுன்னு இருந்தேன்.
 
2009 வது வருஷத்தில் ஊரை அழகுபடுத்தன்னு  ஆரம்பிச்சுக் கம்பிகளில் செஞ்ச  கலை அமைப்புகளை அங்கங்கே வைச்சது நகரசபை . அப்புறம்  2012 இல் யாரோ வெற்றுச் சுவர்களில் படங்கள் வரைஞ்சதும்......... அதுவே நல்லா இருக்குன்னு  நாலைஞ்சு தெருக்களில் சுவர் ஓவியங்கள்  வந்துருச்சு.  யுனெஸ்கோவும் இதைப் பாராட்டிக் கலைகளில் சேத்துட்டதால் பராமரிப்பும்  ஆரம்பிச்சது.  சிலபல ஓவியங்களை திரும்ப டச் அப் செஞ்சுருக்காங்களாம் ! 
இந்த ஏரியாவுக்கு ஜார்ஜ் டவுன்னு பெயர். நாம் காலையில் இருந்து இதே ஏரியாவில்தான் சுத்திக்கிட்டு இருக்கோம். பினாங்கு மாநிலத்தின் தலைநகரே இந்த ஜார்ஜ் டவுன்தான் !

பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிகளில் இந்தியர்கள் வரத் தொடங்கிட்டாங்க.  மல்ட்டிக் கல்ச்சர் மாநிலமுன்னு சொல்லும் வகையில்,  பிரிட்டிஷ் மக்கள், சீனர்கள், பூமி புத்திரர்கள்னு சொல்லும் மலேசியர்கள், அக்கம்பக்கத்து நாட்டு மக்கள்னு பலரும் புலம்பெயர்ந்துருக்காங்க.   அந்தக் காலத்திலே ஏராளமான பாக்கு மரங்கள் இங்கே இருந்ததால்..... பாக்குமரத்தீவுன்னு (இதுக்கு மலாய் மொழியில்  பினாங்! ) குறிப்பிட ஆரம்பிச்சு இப்போ பினாங் என்ற பெயர் நிரந்தரமாகிருச்சு ! 

கிழக்கிந்தியக் கம்பெனி கேப்டன் ஃப்ரான்சிஸ் லைட் வசம் தீவு வந்ததும், வெறும் காடாக இருந்த நிலப்பரப்பை சுத்தம் செய்ய ஒரு ஐடியா செஞ்சுருக்கார்.  பீரங்கியில் மருந்துக்குப் பதிலா தங்க நாணயங்களை வச்சு வெடிக்க வச்சாராம். '  ஃபைண்டர்ஸ் கீப்பர்ஸ்'  என்று அந்தப் பகுதியில் பரவலாகப்போய் விழுந்த தங்கக்காசைப் பொறுக்கி எடுத்துக்கப் போன அவருடைய படை வீரர்கள்,  அடர்த்தியா விளைஞ்சு நிக்கும் புல் பூண்டு, புதர்களை வெட்டிட்டுத்தான்   உள்ளே  புகுந்து போகவேண்டியதால்....  இடமும் க்ளியர் ஆச்சாம். இந்த சம்பவம்  குறித்த  செய்தி , நமக்குக் கப்பலில் கொடுத்த நியூஸ் லெட்டரில் இருந்ததுதான்  ! 

மணி இப்போ ரெண்டுதான். வேறெங்கே போகலாம்னு யோசிச்சுட்டு,  ச்சும்மா ஊரைச் சுத்திப் பார்க்கலாமுன்னு போறோம்.   சாலைகள் எல்லாம் சுத்தமாகவும்,  வாகனப் போக்குவரத்து எல்லாம் நியமப்படியும்   இருக்கு ! நிறைய அடுக்குமாடிக் கட்டடங்கள் புதுசு புதுசாக் கட்டிக்கிட்டே இருக்காங்களாம். அவ்வளவாக் கூட்டம் இல்லாத அருமையான தீவு என்பதால்  பணி ஓய்வு பெற்ற  மக்கள் ஆர்வமா இருக்காங்க. எல்லாம் நம்ம மேகநாதனின் வாக்குதான் !
ஒரு இடத்தில் கண்ணில் பட்டது  மூணு நிலைக் கோபுரத்துடன் ஒரு கோவில்.  இப்போ கோவில் மூடியிருக்கும் நேரம் என்பதால் போறபோக்கில் ஒரு கும்பிடு மட்டும்.  பினாங்கு இந்தியர் சங்கம், கண்ணில்பட்டது !


பீச் ரோடில் போகும்போது, நம்ம கப்பல் அதோ அங்கே ! ஏறக்குறைய முழுசாத்தெரியுதேன்னு கீழே இறங்கி கொஞ்சம் க்ளிக்ஸ்.  கொஞ்சதூரத்தில் கோட்டை இருக்குன்னதும்,  நம்ம வீட்டுக் கோட்டைப்ரேமி, அங்கே போகலாம். அருமையா இருக்கும்னார்.  அவருடைய பயணங்களில் வந்துருந்தாராம். 
கோட்டை வாசலில் கொண்டுபோய் விட்டதும், உள்ளே போய்ப் பார்க்க டிக்கட் எடுக்க கவுன்டருக்குப் போனால், காசாக வாங்க மாட்டாங்களாம். ஜி பே மாதிரி ஏதோ ஒன்னில்  காசை அனுப்பணுமாம். நம்மாண்டை பொதுவாகவே  இந்தமாதிரி எதுவும் கிடையாது.  இங்கே நியூஸியில் அதுக்கு அவசியமும் இல்லை.  நான் , பார்க்கலைன்னாப் பரவாயில்லைன்னாலும் நம்மவர் கேட்கலை. மேகநாதனின் ஃபோன் வழியாக் காசை அனுப்பச்சொல்லிட்டு,  மேகநாதனுக்கு டிக்கெட்டுக்கான காசைக் கொடுத்தார். டிக்கெட் நம்ம கைக்கு வந்ததும்,  நீங்க உள்ளே போய்ப் பார்த்துட்டு  வெளியே சாலையைக் கடந்தால்  போதும்.  அந்தக் கட்டடம்தான்  காலையில் பார்த்த நம்ம இடம்னு சொல்லிட்டுப் போனார் மேகநாதன்.  மதியம் சாப்பிடும்போது கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்ததில் இவருக்கு ரெண்டு வயசு மகன் இருப்பது தெரிஞ்சது.  குழந்தைக்கு ஏதாவது வாங்கித்தரச் சொல்லி ஒரு அன்பளிப்பும் கொடுத்தனுப்பினோம்.


டிக்கெட் கவுன்ட்டரில் கொடுத்த  கோட்டையின் வரைபடம் தான்  வழிகாட்டின்னு நாமும் கோட்டைக்குள் போனோம். வழக்கமா கோட்டைகளில் இருக்கும்  ராக்ஷஸ அளவு   கோட்டைக் கதவுகள் ஒன்னுமில்லை.
உள்ளே போனால் ஏதோ சீரமைப்பு வேலைகள் நடக்கும் அடையாளம்.  கொஞ்சம் படிகளில் மேலேறிப் போகணும் என்பதால் முணுமுணுப்போடே மெதுவா ஏறிப்போனேன்.  நம்மவருக்குக் கோட்டை என்றால் ஒரு அலாதிப்ரியம். நம்ம ராஜஸ்தான் பயணத்தில் எந்த ஊருக்குப்போனாலும், கோட்டை கோட்டைன்னு போய்ப் பார்த்து எனக்குப் போதும் போதுமுன்னு ஆகிப்போச்சு. 'இனி கோட்டைன்னா கொலை விழும்' னு ஒரு இடுகை கூட அந்தப் பயணக்கட்டுரையில்  எழுதியிருந்தேன்.

மேலே ஏறினால் அங்கே ஒரு பெரிய கொடிமரம், ஒரு சின்ன  கலங்கரை விளக்கு.  ரெண்டு சுற்றுலாப்பயணிகளுக்கு அதைப்பற்றி விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருவர். கைடட் டூர் !


கொஞ்சம் அந்தாண்டை ஒரு நாலைஞ்சு பீரங்கிகள்.   கால்வட்ட டிஸைனில் ஒரு Amphi Theatre & எதிரில் வட்டமா ஒரு மேடை.  சைனீஸ் கார்டன் போல தொட்டிகளில் ஏகப்பட்டக் குட்டிமரங்கள். 1786 இல்  கிழக்கிந்திய கம்பெனி ப்ரிட்டிஷார் இங்கே  கால்குத்துனவுடன்  கட்டியிருக்காங்க. தீவோட பெயரைக்கூட ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸ் ஐலண்ட்ன்னு  வச்சுருக்காங்க.  இந்த ஜார்ஜ் டவுன் கூட அந்தக் காலக்கட்டத்தில் ராஜாவா இருந்த மூன்றாம் ஜார்ஜ் பெயர்தான்.  

ஆரம்பகாலத்தில் மரத்தில் கட்டுன மரக்கோட்டையை,  1793 வது வருஷத்தில் இங்கிலாந்துக்கும் ப்ரான்ஸுக்கும் சண்டை வந்தப்ப,  எங்கே ஃப்ரெஞ்ச் படை இங்கே வந்துருமோன்னு பயந்து, கோட்டையை வலுப்படுத்த கற்களை வச்சு கற்கோட்டையா மாத்துனாங்களாம்.
 
இங்கிருந்து பார்த்தால்  விக்டோரியா மஹாராணியின் அறுபது வருஷ ஆட்சியின்  நினைவுக்காகக் கட்டிய மணிக்கூண்டு,  தெரிஞ்சது. போய்ப் பார்க்கத்தோணலை. கொஞ்சம் கோட்டையைச் சுத்திக்கிட்டுப்போகணும்.(இங்கே எங்கூரில் கூட விக்டோரியாத் தெருன்னு ஒன்னு இருக்கு. அங்கே ஒரு மணிக்கூண்டும் இருக்கு. ஆட்சி பீடத்தில் அமர்ந்து அறுபது வருஷம் ஆனதுக்காம் )

 உள்ளேதான் ஒன்னுமில்லையே.... மராமத்து நடக்குதுன்னு மூடிவைக்காம, எதுக்கு இப்படி டிக்கெட் விக்கறாங்கன்னு நான் புலம்பிக்கிட்டே வந்தால்.... எசப்புலம்பலா,  நம்மவர் .....'முந்தி நான் வந்தப்ப ரொம்ப நல்லா இருந்தது. சிலைகள் , சரித்திரக்குறிப்புகள்ன்னு இருந்ததால்தான், உனக்குச் சரித்திரம் பிடிக்குமேன்னு  வற்புறுத்தி இங்கே போகலாம்னு சொன்னேன்'ன்னார். போனதுக்குப் பூனை தரிசனம் கிடைச்சது !

சாலையைக் கடந்து பொடிநடையில் குறிப்பிட்ட கட்டடத்துள் போனோம். நம்மைப் பார்த்துட்டு, ஓடிவந்த மேகநாதன், கோட்டையைச் சுத்திப் பார்த்தாச்சான்னு விசாரிச்சார்.  "ஆச்சு, காமணி நேரத்தில் பார்த்தாச்சு. உள்ளே ரிப்பேர் வேலை நடக்குது. ஒன்னுமே இல்லை" 

காலையில் வந்தவழியாகவேத் திரும்பிப்போய்,  க்ரூயிஸ் டெர்மினல் பில்டிங்கில் நுழைஞ்சு, நமக்குக் குடை கொடுத்த மலரைத் தேடினேன்.  காணலை.  அங்கிருந்தவரிடம் விசாரித்தோம்.  இங்கே தான் இருந்தாங்கன்னு தேடப்போனார். அதுக்குள்ளே அவுங்க வர்றதைப் பார்த்துட்டு, ஓடிப்போய்க் கூட்டிவந்தார்.  
 நன்றி சொல்லிக் குடையைத் திருப்பிக்கொடுத்துட்டு, உங்களுக்கு 'குடை கொடுத்த வள்ளல்' னு பட்டம் கொடுத்துட்டேன்னேன். ஒரு அஞ்சு நிமிட் பேசிட்டு, அடுத்த வாசல் வழியா  காலியாக்கிடக்கும் இமிகிரேஷன் ஹாலைக் கடந்து கப்பலாண்டை போனோம். குளிர்ந்த  ஃபேஸ் டவலும், ஐஸ் வாட்டருமா உபசரிப்பு ! 

நேத்துப் போலவே செக்யூரிட்டி செக்கப், ஸ்கேனிங் எல்லாம்   முடிச்சு அறைக்குப் போனப்ப மணி நாலே கால். 

தொடரும்......:-)

0 comments: