கடைக்குள்ளே போனால் நேரம் போறதே தெரிவதில்லை..... மணி ரெண்டாகப்போகுது. லஞ்ச் முடிச்சுக்கிட்டு வரலாமான்னார் நம்மவர். வாசலுக்கு வெளியே போனால்.... இந்தத் தெருவில் ஏகப்பட்ட ரெஸ்ட்டாரண்டுகள் இருக்குதானே !
ஆர்ய சமாஜக் கோவில் ஒன்னு நேரெதிரா இருக்கு. உள்ளே போய்ப் பார்க்கலாமுன்னா மூடியிருக்கு. இவுங்களும் உச்சி காலப்பூஜை முடிச்சு மூடறாங்க போல. அப்புறம் வந்து பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டே கண்ணை ஓட்டினால்...அடுத்த ரெண்டாவது கட்டடத்துலே 'பல்லாஜி பாவன்' வெஜிடேரியன்னு போர்டு. ( நியூமராலஜி படுத்தும் பாடு !)
அந்த பல்லாஜியிலே என்னதான் இருக்குன்னு பார்க்கணும். உள்ளே நுழைஞ்சதும் கண்ணில் பட்டது மஹாமந்த்ரம்!
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமராம ஹரே ஹரே.. ............
ஓக்கே! இங்கேயே சாப்பிட்டால் ஆச்சு ! பஃபே மெனு பார்த்தால் அப்படி ஒன்னும் ரசிக்கிறமாதிரி இல்லை..... வம்பு எதுக்குன்னுட்டு நான் தோசை, நம்மவர் ஊத்தப்பம்னு சாப்ட்டாச்சு ! திரும்ப முஸ்தாஃபா..... கத்தரிக்காயா இல்லை மக்காச் சோளமா........... எதுன்னு ஒரு விநாடி யோசிச்சுட்டு எதுவும் வேணாமுன்னேன்.
எனக்கு ஒரு ஸான்டிஸ்க், (பயணத்தில் இருக்கும்போது செல்ஃபோனில் இருந்து படங்களை சேமிச்சு வச்சுக்க ) வாங்கிக்கணும். ஆச்சு. மகளோட லிஸ்ட்டில் விட்டுப்போனதையும் வாங்கிக்கிட்டு, அறைக்குப் போயிட்டோம்.
கொஞ்ச நேரம் ஓய்வுதான். சாயங்காலம் இதோன்னு கோவிலுக்குக் கிளம்பினோம். முதலில் வடபத்ர காளி தரிசனம் முடிச்சுட்டு, நம்ம சீனுவிடம் கொஞ்சம் மனம் விட்டுப் பேசிட்டு வரணும். சீனு கோவிலைத் தாண்டும்போது, நேரெதிரா எதிர்வாடையில் இருக்கும் ஆனந்தபவனுக்குள் போய், ஒரு டீயைக் குடிச்சுட்டு நடையைக் கட்டினோம். 'அங்கே போயிட்டுக் கொஞ்ச நேரத்துலே வந்துருவேன்'னு சீனுவுக்கு சேதி அனுப்பினேன். இடைவெளி ஒரு முன்னூறு மீட்டர்தான்.


இந்த ஸ்ரீவடபத்ரகாளியம்மனைப் பார்த்து ரொம்பநாளாச்சு. ஒரு ஏழெட்டு வருஷம் இருக்கலாம். இப்போ அங்கே போனால், நம்ம பெரிய சிறிய திருவடிகள் வாசலுக்கு ரெண்டு பக்கங்களிலும் நிக்கறாங்க. அட ! இது என்ன புதுக்கோவிலோ ? அப்போ காளி ? இதோ இந்தப்பக்கம் பாரேன்..... ரெண்டு கோவில்களுமே தனித்தனி முகப்பு வாசல்களோடு ஒரே கட்டடமா இருக்கே !
கருவறையில் ஸ்ரீராமர், ஸீதை & லக்ஷ்மணர் மூவரும் மூலவர்களா இருக்காங்க.
இந்தாண்டை, செல்லம்போல் இருக்கும் ஆஞ்சி ! குபேரலெட்சுமி , ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர்
அடுத்த ரெண்டெட்டில் அம்மன் கோவிலில் சாயரக்ஷை பூஜைக்குத் தயாராகறாங்க....
நடுவில் ஸ்ரீ வடபத்ரகாளியம்மன், அவளுக்கு வலப்பக்கம் புள்ளையார், இடப்பக்கம் முருகனும் மனைவியரும் !
சந்நிதி முன்னால் மக்கள் கூட்டம். சிசிடிவியில் பூஜையைப் பார்க்கலாம்....
ப்ரகாரம் வலம் போறோம். போனமுறை பார்த்ததைப்போல் இல்லாமல் ரொம்பவே அட்டகாசமான அழகுடன் இருக்கு எல்லாமே ! புதுப்புதுச் சிலைகள் அப்படியே புதுக்கருக்குடன் மின்னுது ! கண்கொள்ளாக் காட்சின்னு சொல்வாங்க பாருங்க.... அதேதான் ! கோஷ்டத்திலும் நடுவில் மட்டுமில்லாமல் மற்ற கடவுளர்கள் !
1830 வது ஆண்டில் ஆலமரத்தடியில் ஒரு அம்மன் படம் வச்சுக் கும்பிட ஆரம்பிச்ச கோவில் இப்படி அருமையா வளர்ந்து நிக்குது ! ஆச்சே, கிட்டத்தட்ட ரெண்டு நூற்றாண்டு! இன்னும் நாலே வருஷம்தான் பாக்கி !
வலம் வரும் நமக்கிடதுபக்கச் சுவர்களில்..... ஹைய்யோ !!!!! என்னன்னு சொல்வேன் ? படங்களை போட்டுருக்கேன் , நீங்களே பாருங்க ! ப்ரகாரம் சுற்றல் முடிவது ஸ்ரீராமர் சந்நிதியில் !
ஆரத்தி முடிஞ்சு, ஆரவாரம் இல்லாமல் , ஆற அமரக் கொஞ்சம் ஓய்வா இருக்கும் அம்மனை, இன்னொருக்காப் போய் தரிசனம் செஞ்சுக்கிட்டுக் கிளம்பினோம். அப்ப ஒரு பக்தை, கொஞ்சம் இருந்து ப்ரசாதம் சாப்பிட்டுட்டுப் போங்கன்னாங்க. தினமும் கோவிலுக்கு வர்றவங்களாம். கோவிலில் கண்ட காட்சிகளால் மனசு நிறைஞ்சு போயிருச்சே... அதுவே நமக்குப் போதுமுன்னு தோணுச்சு.
இங்கே சிங்கையில் நாம் தரிசனம் செஞ்ச காளிஅம்மன்கோவில்கள் அனைத்திலும் பெரியாச்சி, மதுரைவீரன் சந்நிதிகள் எல்லாமே ஏறக்குறைய ஒரே மாதிரி செட்டப்! இந்தியாவில் இப்படிப் பார்த்த நினைவே இல்லை. இது இங்கே மட்டும்தானா இல்லை இந்தியக் கோவில்களிலுமா ? தெரிஞ்சவுங்க சொல்லுங்க..... தெரிஞ்சுக்குவேன்!
வரேண்டியம்மான்னு காளியிடம் விடை வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம் !
ஓம் சக்தி!!
தொடரும்........... :-)

.webp)





























0 comments:
Post a Comment