மனசுக்குள் ஒரு சின்ன சோகத்தோடு அறைக்கு வந்தோம். நாம் தங்கி இருக்கும் ஹாலிடே இன் ஹொட்டேலின் ரெஸ்ட்டாரண்ட் பெயர் கல்லி ! இதோட விளம்பரம் ஒன்னு பெரிய அளவில் நுழைவு வாசலுக்கு வரும் வழியில் ஹொட்டேல் சுவரில் வச்சுருக்காங்க.எல்லாம் சாட் ஐட்டம் ஸ்பெஷல்ஸ்! ஏனோ இங்கே போகத்தோணலை....
அறைக்குப்போனதும், பேக்கிங் ஆரம்பிச்சார் நம்மவர். இங்கே 12 மணிக்குச் செக்கவுட். ஆனால் நம்ம ஃப்ளைட் , ராத்ரி ஒன்பதுக்குத்தான். அதனால் ஒரு அஞ்சு மணிநேரத்துக்கு லேட் செக்கவுட் ஏற்பாடு செஞ்சுருந்தார் நம்மவர். மூட்டை கட்டி முடிஞ்சுட்டு, ஒரு பதினொருமணிவாக்கில் கிளம்பி, அந்த ஆர்யசமாஜ் கோவிலுக்குப் போனோம்.
இங்கே நம்ம ஊரில் ஆர்ய சமாஜ் வழிபாடுகள் ஆரம்பிச்சு இப்ப இருபது வருஷம் ஆச்சு. நாங்களும் அப்போதிருந்தே ஆதரவாளர்களாக இருக்கோம். இப்பப் போனவருஷம்தான், யாகசாலை ஒன்னு கட்டலாமுன்னு முடிவு செஞ்சு, மூணு மாசத்துக்கு முன் உள்ளூர் புள்ளையார் கோவில் நிலத்தில் கொஞ்சம் இடத்தை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி பூமி பூஜை நடத்தினோம். இதோ நேத்து, அஸ்திவாரம் போடும் வேலை நடந்துருக்கு!
யாகம் செய்வது மட்டுமே இந்த சமாஜத்தின் முக்கிய வழிபாடு ! நம்மூரில் தை மாசத்தில் ஒரு நாள், நாலுமணி நேரம் தொடர்ந்து காயத்ரி மந்திரம் ஜபிச்சு யாகம்/ வேள்வி நடத்துவது வழக்கம். முந்தாநாள் ஜனவரி 25 ஆம் தேதிதான் இந்த வருஷத்து அகண்ட யாகம் , நம்மூர் சநாதன் சபா ஹாலில் நடைபெற்றது.
சிங்கையில் ஆர்யசமாஜ் கோவில்னு பார்த்ததும், உள்ளே எப்படி இருக்குமோ என்ற ஆர்வத்தில்தான் போனது. எந்த ஒருவிதமான அடைசலும் இல்லாமல் ஒரு பெரிய ஹால், அங்கே ஒரு ஓரமாக நகர்த்திவச்சுருக்கும் ஹோமகுண்டம், சுவரில் ஒருபக்கம் ஆர்ய சமாஜ் ஸ்தாபகரின் புடைப்புச் சிலை தவிர வேறொன்னுமே இல்லை. ஹாலுக்குப் பக்கத்து சுவரில் சமாஜின் சரித்திரம்(ரொம்பவே சுருக்கமாகத்தான் ) சிங்கைக்கிளையின் வரலாறு இப்படி.... இங்கே 1914 இல் . நூத்திப்பதினொரு வருஷங்கள் ஆகி இருக்குல்லெ ! கோவிலோடு சேர்ந்த டி ஏ வி பள்ளிக்கூடமும் இங்கே நடக்குது!
நாங்களும் காயத்ரி மந்திரத்தை மெல்ல ஓசை எழுப்பாமல் சொல்லிக்கிட்டே சுத்திவந்து பார்த்து, சில க்ளிக்ஸ் எடுத்ததும் வெளியே வந்தோம். நேரெதிரா முஸ்தாஃபா கடை வாசல். உள்ளே போகலை. செராங்கூன் ரோடில் பொடிநடையில் கொஞ்ச நேரம் குமார் மாமா டீக்கடைவரை போயிட்டு, மகள் லிஸ்டில் வாங்காமல் விட்டுப்போயிருந்தவைகளை வாங்கிட்டுத் திரும்பும் வழியில் கட்டக்கடைசியாக் கண்ணில்பட்ட கொஞ்சூண்டு பலாப்பழத்தையும் ( 380 கிராம்) விட்டுவைக்கலை.



மதிய சாப்பாடு வேளை. சாப்பிடத்தோணலை. ஒரு இளநீர் குடிச்சால் போதும். ஆனால் கண்ணில் படலையே..... சூரியா ரெஸ்ட்டாரண்ட் வாசலில் ஒரு பத்துப்பதினைஞ்சு இருந்தது. உள்ளேபோய் 'வெட்டித்தருவீங்களா'ன்னு கேட்டதும், தருவோமேன்னாங்க. இளநீர் ஒரு ஸ்ட்ராவோடும், ஒரு நீள ஸ்பூனோடும் வந்தது. ப்ச்.... நான் நினைச்ச 'வெட்டி' வேற... அவுங்க புரிஞ்சுக்கிட்ட வெட்டி வேற.... சரியாச் சொல்லத்தெரியலை பாருங்க எனக்கு !!!! தேங்காயைச் சுரண்டித் தின்னவேண்டியதாப் போச்சு..... (இங்கே மெனு கொஞ்சம் சுவாரஸியமாத்தான் இருந்தது)
ஒரு கடையில் சாளக்ராம் விற்பனைக்கு வச்சுருக்காங்க. பக்கத்துக்கடையில் பூ விற்பனை. தமிழ்நாட்டுலே இருந்து தினமும் வருதாம் ! செராங்கூன் ரோடும், லிட்டில் இந்தியாவும்தான் என்னைப்பொறுத்தவரை சுவாரஸ்யமான பகுதி!
அறைக்கு வந்ததும் ஒரு கேபின் ஸூட்கேஸ் இருந்தால் தேவலைன்னார் நம்மவர்.
நான் வீட்டில் இருந்து கிளம்பும்போதே சொன்னேன்... 'அந்த பேக்பேக் (Back pack) எதுக்கு ? ஒரு கேபின் பேக் எடுத்துக்குங்க'ன்னு. வீட்டுலேதான் ஏகப்பட்டது கிடக்கே ! ம்ம்ம்ம்ம்.....கேட்டுட்டாலும்........
ஒரொருத்தர்க்கு ஒரு பொருள் மேல் மோகம் இருக்கும். அவுங்கவுங்களுக்கு ஒரு கலெக்ஷன். எனக்கு ஃப்ரையிங் பேன். நம்மவருக்குப் பொட்டி! ஓடு எதிர்வாடையில் இருக்கும் முஸ்தாஃபாவுக்கு........... ஒரு முக்கால் மணி நேரம் ஆச்சு செலக்ட் செய்ய...... கொஞ்சநேரத்துக்கு முன் இளநீர் குடிச்சுட்டு வரும்போது வழியில் ஒரு பெட்டிக்கடையில் ' ஐமீன்' பெட்டிகள் விற்பனைக்கு வச்சுருந்த கடையில் முப்பத்தஞ்சு டாலருக்கு ஒரு கேபின்பேக் , நடந்துவரும் வழியில் இருந்ததால் என் கண்ணில் பட்டது. அதை வாங்கி இருந்தால் கொஞ்சம் காசாவது மிஞ்சியிருக்கும். மூணு மடங்கு கொடுத்து 'ப்ராண்டட்' ஐட்டம் வாங்கறார்.....ப்ச்.... ரொம்ப வருஷம் உழைக்குமாம். அட!!!!
கடையை விட்டு வெளியே வந்ததும் கண்ணில்பட்ட ஆனந்தபவனுக்குள் போய் ஒரு டீ ! இனிப்புகளைக் கெமராக் கண்ணால்......... மட்டும்......
ஒரு சின்ன சுத்தலோடு கிச்சனர் ரோடுவழியா அறைக்குத் திரும்பும்போது மணி நாலரை. அஞ்சுமணிக்குச் செக்கவுட் செய்யணும். புதுப்பெட்டியில் பேக் பேக்க் சமாச்சாரங்களை நிரப்பிட்டு, ஏதாவது பொருட்களை விட்டுட்டோமோன்னு மேஜை இழுப்பறைகளையெல்லாம் திறந்து பார்த்தால் இப்படி ஒன்னு ஒட்டி வச்சுருக்காங்க.
என்னவா இருக்கும் ? எதாக இருந்தாலும் கேட்டதும் பதில்சொல்லத்தான் கூகுள் இருக்கே !பதில் கிடைச்சது. மெக்கா இருக்கும் திசையைக் காமிக்குதாம்.
அஞ்சு மணிக்குக் கீழே போய் செக்கவுட் செஞ்சுட்டு, டாக்ஸிக்கும் சொல்லியாச். காத்திருக்கும் நேரம் சில க்ளிக்ஸ்.
சாங்கி டெர்மினல் 4. இங்கே வர்றது நமக்கு முதல்முறை. நியூஸிக்கு எப்பவும் மூணுதான். உள்ளே எல்லாம் பளபளன்னு இருக்கு ! கட்டி முடிச்சுப் புழக்கத்துக்கு வந்து எட்டு வருஷம் ஆச்சுன்னா நம்ப முடியாது.......
கஷ்டப்படாமல் செக்கின் ஆச்சு. எனக்கு வீல்சேர் உதவிக்குக் கொஞ்சம் காத்திருக்கணுமாம். வேணாமுன்னு சொல்லிட்டு, நம்மவரைக் கொஞ்சம் முறைச்சுப் பார்த்தேன். 'வீல்சேர் வேணாமுன்னு சொல்லுங்க'ன்னு பலமுறை சொல்லியிருந்தாலும், டிக்கெட் புக் பண்ணும்போது வீல்சேர் உதவி தேவைன்னுருவார். கேட்டுட்டாலும்............ ப்ச்.
நமக்கு இன்னும் நேரம் இருக்கே.... அதுவரைக் கொஞ்சம் சுத்திப்பார்க்கணும்.....
அம்மாவும் புள்ளையுமா, மார்கெட் போய் சாமான்கள் வாங்கிக்கிட்டு, வீட்டுக்குத் திரும்பிப்போக சைக்கிள் ரிக்ஷாக்காரரிடம் , எங்கே போகணுமுன்னு (பேரம் பேச ? )சொல்லிக்கிட்டு இருக்காங்க. 1950 களில் இந்தவகை சைக்கிள் ரிக்ஷாக்கள் , உலகின் பல இடங்களில் பொதுவாகக் கண்ணில்படும் காட்சிகள்தான் ! முக்கியமா ஆசிய நாடுகளில் !

இன்னொரு இடத்தில் பயணம்போகும் குடும்பம்...... அந்த ஆள்தான் கொஞ்சம் சரியில்லை.... கையில் நியூஸ் பேப்பர் ! அதுக்குப் பதிலா செல்ஃபோன்தானே இருக்கணும், இல்லையோ !!! இப்பெல்லாம் யார் ஸார், பேப்பர் வாசிக்கிறாங்க ????
Steel in Bloom garden ன்னு ஒன்னு ! ஆறு மீட்டர் உயரமான ஸ்டீல் செடிகள் எல் ஈ டி விளக்குகளுடன் , மீன்கள் நீந்தும் குளத்தின் கரையில். இந்த வகை மீன்கள் ( KOI Fish ) அதிர்ஷ்டம், செழிப்பு, செல்வம் எல்லாம் கொண்டுவருமாம். வாஸ்து இதில் ஒரு சில வெள்ளையன்களும் இருக்கானுங்க !!



மணியாச்சேன்னு கேட்டாண்டை போனோம். ஜெட் ஸ்டார் ரெடி ! பிஸினஸ் க்ளாஸ் அப்படியொன்னும் ப்ரமாதமா இல்லை. முதல்முறையா இந்த விமானத்தில் இந்த வகுப்பில் போறோம். நியூஸிக்கும் ஆஸிக்கும் இடையில் போய்வரும் ஜெட் ஸ்டார் விமானங்களில் ஜனதா வகுப்பைத் தவிர வேறெந்த வகுப்பும் இல்லை !
இப்போ போகுமிடத்துக்குப் பயண நேரம், அதிகப்பட்சம் எட்டுமணி நேரம் ஆகுமாம். ராத்ரி நேரத்தில் வேடிக்கை பார்க்க வெளியே ஒன்னுமில்லை. சாப்பாடு வந்ததும் (ரைஸ் ஸாலட், ப்ரெட் பட்டர், இனிப்புக்காக ஒரு சின்ன கேக், ஜூஸ், காஃபி ) கொஞ்சம் உள்ளே தள்ளிட்டு, என் மருந்துகளையும் முழுங்கிட்டுத் தூங்கிடணும். இன்றைக்கு நிறைய நடந்தாச்சு. என் கால்வலி பின்னியெடுக்குது.
விமானம் தரை தொட்டதும், சாங்கியங்கள் முடிச்சு வெளியே வந்தோம்....
உள்ளுர் மணி ஏழரை ! கடிகாரத்துலே மட்டுமில்லை.... நமக்கும்தான்...........
தொடரும்.......... :-)


























0 comments:
Post a Comment