Tuesday, January 27, 2026

ராத்ரி கடைசியிலும் காலையில் முதலிலுமாய்..... நம்ம சீனுவின் கோவிலில் !

அம்மனைக் கும்பிட்டுவிட்டு, அண்ணன் கோவிலை நோக்கி நடக்கிறோம்.  வெறும் முன்னூறே மீட்டர்தான், அஞ்சு நிமிட் யதேஷ்டம்..... ஆனால்
வழியில் ஒரு சீனக்கோவில். மனசுக்குள் சட்னு வந்து போனது என்னவாக இருக்கும் ? எல்லாம் இந்தப் பாழாய்ப்போனத் தமிழ் சினிமாதான்.............  தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதென்பதின் சாட்சி !
உண்மையில் இது கோவில் கிடையாது.... ஒரு சந்நிதி மட்டுமே....  பாலியில் வீட்டுக்கு வீடு வெளியில் ஒரு சாமிச் சந்நிதி இருக்குதே அதைப்போல...
ஆனால் இது வீடில்லை...  only one  3 என்னும் 'தீர்த்தஸ்தலம்' !  வாசலில் இருக்கும் சீனச்சாமியைக் கும்பிட்டு, உள்ளே போகணும் ! ஆ............மா.......... போற போக்கிலே சில க்ளிக்ஸ். சாமியைத்தான் கேட்டோ !!!!
நம்ம கோவில் ஜிலு ஜிலுன்னு ஜொலிக்குது ! இந்த விளக்கு அலங்காரத்தை முதல்முதலாப் பார்க்கிறேன்.  செராங்கூன் ரோடு, தீபாவளி விளக்கலங்காரங்கள், பெருமாளோடு முடிஞ்சுருது... 


https://www.facebook.com/share/r/1AY2FNJ9Ee/

கோவிலுக்குள் நுழைஞ்சவுடன் வழக்கம்போல் தலையை வலப்பக்கம் திருப்பினால் நம்ம ஆஞ்சிக்கு தீபாராதனை !  ஆஹா.....

கொடிமரம், பெரியதிருவடி ஸேவிச்சுப் பெருமாளை நோக்கினால் அவருக்கு சின்ன  முணுப்பான குரலில் ஸகஸ்ரநாமாவளி நடக்குது, கோவில் வகையில் !  பக்தர்கள் யாருமில்லை. நமக்கு ஏகாந்த தரிசனம் !  

வெளியே முன்மண்டபத்தில் உற்சவர் பூரண அலங்காரனாக...... 
ப்ரகாரத்தை வலம் வரணும். புள்ளையார், விஷ்ணுதுர்கை, சுதர்ஸனர்/நரஸிம்ஹர், தாயார் எல்லோரும் சாயரக்ஷை பூஜை முடிஞ்சு விஸ்ராந்தியாத்தான் இருக்காங்க.  டைனிங் ஹாலில் ப்ரஸாதமாக ததியன்னம்.



நம்ம ஆண்டாளம்மாவைப் பார்த்ததும்.... மனசுக்குள் தூமணிமாடம் தானாய்....'இப்போ ராத்ரியில் எதுக்குடி? ' ன்னு கேட்டாள்.  'அது அப்படித்தான்'னு சொன்னேன். 
 திரும்ப 'அவன்' முன்...... 'என்னவோ பேசணுமுன்னு வந்துட்டு பேசாம இருக்கியே'ன்னான்.  'அது அப்படித்தான்'னேன். எதுவுமே நினைவில்  இல்லை.... மறக்கடிச்சுட்டுப் பேசலையேன்னால் என்னத்தைப் பேச ?
அரைமணி போல ச்சும்மாத்தான் உக்கார்ந்துருந்தேன். கிளம்பும்போது மட்டும், 'கார்த்தாலை முடிஞ்சால் சுப்ரபாதத்துக்கு  வருவேன்'னு சொல்லிட்டு நகர்ந்தேன்.

டின்னர்னு ஒன்னு இருக்குல்லே ?  மருத்து  எடுத்துக்கறதால் கட்டாயம் ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆகணும். சலோ சரவணாபவன்.  ரெண்டு இட்லியில் துல்ஸின்னு எழுதியிருக்கணும். ஆச்சு.....
மறுநாள் காலையில் நமக்குத் தூக்கம் கலையும்போது  , பெருமாள் எழுந்தே ஒரு மணி நேரத்துக்கு மேலாச்சு !  ராத்ரி, ஃபோன் வந்ததான்னு நம்மவராண்டை கேட்டேன்.  இல்லையாம்..... அப்பாடா...... ப்ளேனுக்கு ஒன்னும் ஆகலை.  ஜெட் ஸ்டார் என்பதால் ஒரு சம்ஸயம் !  சாயங்காலம் இங்கிருந்து கிளம்பறோம்.
கோவிலுக்குக் கிளம்பினோம். ஹொட்டேல் வரவேற்பில்  அலங்காரம் நல்லாவே இருக்கு ! ரங்கூன் ரோடு பஸ் ஸ்டாப்பில் அஞ்சு நிமிட் உக்கார்ந்துருந்தேன்.  வசதியாத்தான் இருக்கு. நம்மவர் குடையை எடுத்துவர அறைக்குப் போயிருந்தார்.

கோவிலுக்கு முன்னே இருக்கும் பூக்கடையில் எங்களுக்குக் கொஞ்சம் மல்லிப்பூ.  எனக்கும் சீனுவுக்கும். 

இன்று விடைபெறுதல்தான். எல்லோராண்டையும் 'போயிட்டு வர்றோம், போயிட்டு வர்றோம், போயிட்டு  வர்றோம்.....'

நம்ம ஆஞ்சியின் தங்கப்பூநூலில் ஒரு சரம் அறுந்திருந்ததை, இப்போ காணோம். ரிப்பேருக்குப் போயிருக்கணும்..... இல்லைன்னா பூக்குவியலுக்குள்ளிலோ...........


மூலவர் கருவறைக்குத் திரை போட்டுருக்கு. நாம் வலம் போனோம்.  
தாயார் சந்நிதிக்கு வரும்போது, சரேல்னு  'அவன் 'திரை விலகியது. அங்கே பாய்ஞ்சேன். அஞ்சு நிமிட்டிலே திரும்பவும் மூடல். கண்ணாமூச்சியாட்டம் !!!
ஆஃபீஸ் கவுன்ட்டர் திறந்ததும் போய் ஒரு அர்ச்சனைச் சீட்டு  வாங்கிவந்தார் நம்மவர்.  
              

https://www.facebook.com/share/r/1C8dP46MBk/

தவில்காரர் தொடங்க.... நாதஸ்வர இசை ஆரம்பிச்சது..... நித்ய பூஜை.....  இது முடிஞ்சாட்டுதான் அர்ச்சனைன்னார் பட்டர் ஸ்வாமிகள்.   
மகள் குடும்பத்தின் பெயருக்கு அர்ச்சனை ஆச்சு.  பழ அர்ச்சனையான்னு ப்ரமிக்க வேணாம். ஒரு பத்துப்பதினைஞ்சு உலர்ந்த திராக்ஷைப்பழம்.  அதுவே ப்ரஸாதம், கொஞ்சம் துளசியுடன்.

https://www.facebook.com/share/r/1FTr4q8cQP/

https://www.facebook.com/share/r/14Sg61bstLE/

தாயார் கோச்சுக்கலை. குழந்தைகளிடம் கோபம் வருமா என்ன ? 
இன்றைக்கு ப்ரேக்ஃபாஸ்ட் எலுமிச்சம்பழ சாதம். என்னடா பெருமாளே.... காலங்கார்த்தாலையில் இதுவா ?  


அடுத்து நம்ம ஆண்டாள். எல்லாம் வழக்கம் போல் !!! 084947 5041 5143 5145

இனி எப்போன்னு நினைச்சதும்....., எல்லாத்தையும் அவன் பொறுப்பில் விட்டதும் உண்மை.
கோவிலுக்கு நேரெதிரில் ஆனந்தபவனுக்குள்  நுழைஞ்சு,  ஆர்டரும் கொடுத்தாச்.  ரொம்பவே விலை மலிவுதான் !  நேத்து வந்து டீ குடிச்சோமே அதே இடம்தான்.  சைவ உணவின் சிறப்புகளையும்,  இந்த ரெஸ்ட்டாரண்ட்டின் சிறப்புகளையும்  சுவர் ஓவியம் போல எழுதி வச்சுருக்காங்க.  சுவாரஸியம்தான். 





இந்த ரெஸ்ட்டாரண்டுதான் சிங்கையின் மூத்த வெஜிடேரியன் !  ஆரம்பிச்சது 1924! அந்தக்  கணக்கில் இப்போ வயசு நூத்தியொன்னு ! இப்போ கிளைவிட்டு வளர்ந்துருச்சு ! சாங்கி ஏர்போர்ட் வரை இதுவரை ஏழு கிளைகள் !!!!

சாப்பிட்டு முடிச்சு வெளியில் வந்ததும்,   கண்ணெதிரில் இருக்கும் கோவில்,  போய் வான்னு சொல்லுச்சு.........
தொடரும்............ :-)

PIN குறிப்பு: ஒரு நாலு வீடியோ க்ளிப்ஸ் போடவேண்டியதாப் போச்சு. வழக்கம்போல் ஃபேஸ்புக்கில் பதிவு செஞ்சுட்டுச் சுட்டிகளை இங்கே போட்டுருக்கேன். எல்லாம் சின்னச்சின்னவைகளே !

0 comments: