Wednesday, January 21, 2026

கடலிலும் கரையிலும் மிதந்தேன் !

தூக்கத்தின் இனிய பகுதி என்னன்னு கேட்டால் என் பதில் இப்படித்தான் இருக்கும். விழிப்பு வந்தவுடன் மணி பார்த்துட்டு, இன்னும் ஒரு காமணி, அரைமணி தூங்கிக்கலாமுன்னு  திரும்ப ஒரு குட்டித்தூக்கம் போடுவோமே அதுதான் !

அஞ்சு மணிக்கு சிங்கை போயிருவோம். ஹொட்டேலுக்குப் போய்   கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு நேராக் கோவில். அப்புறம் நல்லதா  ஒரு காஃபி, கடைகண்ணி, கொஞ்சம் ஷாப்பிங்னு வரிசையா லிஸ்ட் மனசுக்குள்ளே  போட்டு வச்சுருந்தேன். நாலு மணிக்கு முழிப்பு வந்துருச்சு. பால்கனிப் பக்கம் பார்த்தால் மையிருட்டு.  இன்னும் ஒரு அரைமணி தூங்கிக்கலாம்.  அஞ்சு மணிக்குப் போர்ட்க்குப் போயிட்டாலும் ஃபார்மாலிட்டிகள் முடிஞ்சு கீழிறங்க எப்படியும் இன்னும் ஒருமணி நேரம் ஆகும்தான். 
அடுத்த முழிப்பு வந்தப்போ.....மணி ஆறரைக்குப் பக்கம். சட்னு எழுந்து பால்கனிக்குப் பாய்ஞ்சேன்.  தூரத்துலே விளக்கு வெளிச்சம் . கப்பல் நிக்குதோன்னு பார்த்தால் மெதுவாப் போய்க்கிட்டுதான் இருக்கு ! இன்னுமா....  கப்பல் is ரன்னிங் லேட் !!   அடராமா !!!




குளிச்சு முடிச்சுத் தயாரானோம்.  கப்பல் போர்ட்லே நிக்குது. கரைக்கு  வந்து சேர்ந்தாச்சுன்னு சொல்லும் காக்காய்க்கூட்டம். இதுலே போர்வீரக் காக்கா ஒன்னு....சண்டையில்  கழுத்து இறகுகள் எல்லாம் பறிகொடுத்தும், கம்பீரமா கிட்டே வந்து பார்த்து ஹலோ சொல்லுச்சு.   ( எங்கூரில் காக்கா கிடையாது !) 
                      
ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு வரலாமுன்னு மேலே போறோம். கப்பல் திரும்ப இன்றைக்கே  பயணத்துக்குக் கிளம்புதாம். மூணரைக்குள்  பயணிகள்  வந்து சேரணும் என்ற  தகவல் கண்ணில் பட்டது.

டைனிங்  ஹாலில் கூட்டத்துக்குக் குறைவில்லை. சாப்பிட்டு முடிச்சு அறைக்குத் திரும்பி,  திரும்ப ஒருக்கா எதையாவது  மறந்து விட்டுட்டோமான்னு செக் பண்ணிட்டு, கீழே போறோம்.  அறையை ஒன்பது மணிக்குள் காலி  செஞ்சுறணுமுன்னு அசரீரி சொல்லிக்கிட்டே இருக்கு.  பயணிகள் இறங்க ஆரம்பிச்சுருக்காங்க.  இங்கிருந்து நேரா ஃப்ளைட் பிடிக்க ஏர்ப்போர்ட் போகும் மக்களுக்கு முன்னுரிமை. மற்றவர்கள் எல்லாம்  அசரீரி சொல்லும் எண்களை அனுசரிச்சு Bபேட்ச் பேட்சா போகணும். 

மெயின் கூடத்துலே அங்கங்கே மக்கள் சின்னச் சின்னக் குழுவா உக்கார்ந்துருக்காங்க. கடைகண்ணி, கஸீனோ , இருபத்துநாலு மணிநேரமும் திறந்தே கிடக்கும் Bபார்கள் உட்பட எல்லாம் பூட்டி வச்சுருக்கு.  காலி.....


பயணத்துக்கு முன் கப்பலில் அனுமதிக்கப்படாத பொருட்களை, நாம்  ஊழியர்களிடம்  ஒப்படைச்சுட்டால்  அவற்றைப் பாதுகாத்து,  கப்பலைவிட்டு இறங்கும்போது திரும்ப நமக்குக் கொடுக்கும் சேவை மையம் ஒன்னும் இருக்கு.  கப்பலை விட்டு வெளியேறும் கதவாண்டை, ஒரு மேசையில் அந்தப்பொருட்களைப் பரப்பி வச்சுருக்காங்க. (இது தெரியாமல்,  நம்ம அலாஸ்க்காப் பயணத்தில்  வான்கூவரில்  மாம்பழம் நறுக்க ஒரு கத்தி வாங்கிட்டு, அதைக் கப்பலேறும் நாளில் குப்பைக்கூடையில் போட்டது நினைவுக்கு வந்தது. நல்ல அழகானப் புதுக்கத்தி, போயே போச். இந்தத் தகவல் உங்களுக்கு எப்பவாவது பயன்படலாம், பார்த்துக்குங்க! )


நம்ம எண் அறிவிச்சதும் , கூட்டத்தோடு கூட்டமா   வெளியேறி,  இமிக்ரேஷன் பகுதிக்குப் போனோம்.  கெமெராவில் முகம் காமிச்சதும்,  பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் ஆச்சு.  நம்ம Tடேக்  சொன்னபடி சில்வர் என்னும்  பகுதியில், ஸ்கேன் மெஷினுக்குள் போய் வந்த  நம்ம பெட்டி இருந்தது.  இப்ப டாக்ஸி ஸ்டாண்ட் தேடணும்.  ரொம்ப தூரம் நடக்கும்படி ஆச்சு. 
போகும் வழியில் நாம் கப்பலுக்குள் போகக் காத்திருந்த இடம்.... பயணம் முடிச்சுவந்தவங்களைக் கூட்டிப்போகும் தனியார் வாகனங்களால்..... நிரம்பியிருக்கு.  ஆச்சு இன்னும் ரெண்டு மணி நேரத்தில் ,  பகல் பனிரெண்டுக்குக் கூட்டமும் வரிசையும் தொடங்கிரும்.  இப்போ எப்படிக் கப்பலில் இருந்து வெளிவரும் சடங்கு முறைமைப் படுத்தப்பட்டதோ.... அதே போல உள்ளே வர்றதுக்கும் ஒழுங்கு முறையா ஏற்பாடு செஞ்சுருக்கலாம்.  நம்ம டிக்கெட் எண் அனுசரிச்சு,  இந்த எண் முதல் இந்த எண்வரை இன்ன மணிக்கு வரணும்னு வச்சுருந்தால் நாம் ரெண்டு, மூணு மணிநேரம் வரிசையில் நிக்க வேண்டி இருந்துருக்காது. எல்லாரையும் ஒரே நேரத்தில் வரச் சொல்லிட்டு, மஹா ஸல்யம். ப்ச்....  3660 பயணிகள் ஒரே நேரத்தில் கூடினால் எப்படி இருந்துருக்கும், பாருங்க !

இதுக்கு அடுத்த வரிசையில் வேறொரு க்ரூயிஸில் போறவங்க  வந்து இறங்கிக்கிட்டு இருக்காங்க. இவுங்களை இறக்கிவிட வந்த  டாக்ஸி, சுத்திக்கிட்டு வந்து நம்மை பிக் பண்ணுமுன்னு தோணுது.  கடைசியில் நமக்கு டாக்ஸி கிடைச்சு ஹொட்டேலுக்குப் போய்ச் சேரும்போது மணி பதினொன்னரை! 

இனிமே எந்தக்கோவிலுக்கு போறது ?   நாம் கிளம்பிப்போறதுக்குள்ளே உச்சிகாலபூஜை முடிஞ்சு நடை சாத்தியிருக்காதோ? ப்ச்.  இனி சாயந்திரம்தான் போகணும்.  

நம்மவர்தான் தேவையில்லாம  ஒரு நாளுக்கான  அறை வாடகை நஷ்டப்படுத்திக்கிட்டாரேன்னு நாந்தான் முணுமுணுத்துக்கிட்டு இருந்தேன்.

அப்பதான் நம்ம கோவியார்,  நம்மவருக்கு  செய்தி அனுப்பினார். டாக்ஸி ஏற்பாடு செய்வதாகவும், நாம் பகல் லஞ்சுக்கு அவர்வீட்டுக்கு வரணுமுன்னும்.  அவர் மனைவிக்குக் கூடுதல் வேலை வைக்கவேணாமேன்னு இருக்கு.  மேலும்  பிள்ளைகளும் ஊரில் இல்லை. எனக்குச் செங்கதிரை சந்திக்கத்தான் ஆசையாக இருக்கு.  முதல்முதலில் ஆறுமாசக் குழந்தையாகப் பார்த்தது அப்படியே மனசில் நின்னுபோச்சு,  அப்புறமும்  ரெண்டுமுறை சந்திச்சுருக்கோம்தான் என்றாலும் கூட !  கோவியார் தம்பதிகள், போன ஞாயிறு தான்  நம்மை சந்திக்க வந்தாங்களே !  ....  அடுத்தமுறை  வீட்டுக்கு வர்றோமுன்னும், இந்தமுறை மன்னிக்கணுமுன்னும்  நம்மவர் பதில் அனுப்பினார். 

நேரத்தை விரயம் பண்ணாம, மகளின் ஷாப்பிங் லிஸ்டை முடிக்கலாமுன்னு  கிளம்பினோம்.  எதிர்வாடையில் இருக்கும் முஸ்தாஃபாவுக்கு,  சையத் அல்வி ரோடுலேதான் வாசல். பொடிநடையாப் போறோம். பகல் சாப்பாட்டுக்குக் கோமளவிலாஸ் போய், நம்ம  சாப்பாடே, சாப்பிடணும்னு நினைச்சுக்கிட்டே, கோமளவிலாஸ் பக்கம் திரும்பிப் பார்த்தால்  பிஸினஸே கைமாறியிருக்கு ! வசந்தபவன் வருதாம் !  அட ராமா !  அஞ்சே நாளில் இப்படி ஒரு மாற்றமா ?  விக்னேஷ் நினைவு  வந்தது....  வேற வேலை கிடைச்சுருக்கும்னு நினைக்கிறேன்.
முஸ்தாஃபாவை நெருங்கும் போது.... ஒரு விளம்பரம் இப்படி ! பத்தே டாலர்தானாமே ! யாருக்காவது பயனாகட்டுமேன்னு ஒரு க்ளிக் :-) ஆனால்  நம் மக்கள் யாராவது இதைப் பார்த்துட்டுப் போறதுக்குள்ளே.... இதுவே கூட கைமாறியிருக்கலாம்!  நிலையாமையின் எடுத்துக்காட்டு.  
மகளுக்கானதைத் தேடித் தேடிப்போய் வாங்கும்போது, எனக்கானதும் கண்ணில் பட்டதுதான். ஆனால்  ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றிருந்தேன்.  அப்பதான் ஞாபகம் வந்தது..... உள்ளூர்க்காரர்கள் வந்துபோகும் காய்கறி செக்‌ஷன் பார்க்கலையேன்னு....  எதுவும் வாங்கப்போறதில்லைதான். ஆனால் இங்கே  நமக்குக்கிடைக்காத வகைகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, கெமெராக் கண்ணால் முழுங்கிட்டு வரணும். அதுவும் ஆச்சு ! நுங்கு, விளாம்பழம், பச்சைச் சுண்டைக்காய்,  சீதாப் பழம், இலந்தைப்பழம், கரும்புன்னு........... ஹைய்யோ!!!!






தின்னது போதுமுன்னு கீழே வந்தப்ப, தங்கம் கண்ணில் பட்டது..... வேஸ்டான வாடகைக் காசில் எவ்வளவு தேறும்னு பார்க்க உள்ளே போனேன். 
'கால் வலி எப்படி இருக்கு? கொஞ்சம் பரவாயில்லையா' ன்னு கேட்டார் ஒருவர் !!!!  நான் திடுக்கிட்டு முழிச்சதும் 'துளசிதளம்'ன்னு சொல்றார், புன்னகையுடன். 
துளசிதளம் வாசகராம். அதுவும் சைலண்ட் வாசகர். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வாசிக்கிறாராம்.  ஆனால்  பின்னூட்டம் மட்டும் போடுவதில்லையாம்!  அறிமுகம் ஆச்சு. 
தரையில் இருந்து ஒருஅரையடி உயரத்தில் மிதந்தேன்!!!!

0 comments: