Friday, January 30, 2026

பின் தொடரும் ஏழரை

மெல்பர்ன் லோகல் நியூஸில்.... 'ஒரு சீனியர் ஜோடி, ஏர்ப்போர்ட் ட்ராலிகளில் லக்கேஜ் வச்சுக்கிட்டு,  ஏர்ப்போர்ட்  ஏரியாவாண்டை  ஊரைச் சுத்திச்சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்காங்க'ன்னு  வந்துருந்தா அது யாரா இருக்குமுன்னு யோசிக்காதீங்க.   நாங்களேதான் !
இந்த 'ஹொட்டேல் செக்கின்' ப்ராப்லம், பலநாடுகளிலும் இருப்பதுதான்....எந்தொரு ஸல்யம்!  ஒருநாள் என்பது இவுங்க கணக்கில் இருபத்தியொரு மணி. ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் தங்கினால்தான்  நமக்கு முழுநாள் கிடைக்கும்.

பொதுவா எல்லா ஹொட்டேல்களிலும் செக்கின்  பகல் மூணு மணிக்குத்தான்.....   நகரமையத்துக்குப் பக்கம்  ஹொட்டேல்  புக் பண்ணியிருக்கார் நம்மவர்.  எல்லாம் நடக்கும் தூரத்தில் இருக்கும். உனக்குக் கஷ்டம் இருக்காதுன்னும் சொன்னார்.

மெல்பர்னுக்குக்  காலை அஞ்சு மணிக்குப் போயிருவோம். பகல் மூணுவரை எங்கியாவது தங்கணும். பேசாம ஏர்ப்போர்ட் பக்கத்துலேயே ஒரு ஹொட்டேல் புக் பண்ணிட்டேன். அங்கே போய் ரெஸ்ட் எடுத்துட்டு, ஒரு ரெண்டரை போலக் கிளம்பினால் CBDயில் புக் பண்ணியிருக்கும் ஹொட்டேலுக்குப் போயிடலாம். எல்லாம் பக்காவான ஏற்பாடுதான், இல்லே ?  

ஆமாம்...  அப்ப  இங்கே மட்டும் செக்கின் இருபத்திநாலு மணியா ? 

அதெப்படி ? இங்கேயும் அதேதான். ஆனால் முதல் நாளுக்கே புக் பண்ணால் பிரச்சனை இல்லை.

சிங்கப்பூர் நேரம் காலை அஞ்சு அஞ்சுக்கு மெல்பர்ன் ஏர்ப்போர்ட்டில் இருந்து வெளியே வந்தாச்சு. நல்லாப் பளிச் னு வெயில். இங்கத்து நேரம் காலை எட்டு அஞ்சு ! (நேர வித்தியாசத்தைப் புள்ளி கவனிக்கலை போல இருக்கே !)

அந்த 'பக்கத்தில் இருக்கும்' ஹொட்டேலுக்குப் போக டாக்ஸியைத் தேடறோம். அக்கம் பக்கம் விசாரிச்சால்.... எதுக்கு டாக்ஸி ? இதோ இந்தப்பக்கம் போனா ஹொட்டேல் வந்துரும்னு பதில் வருது. சொன்னதும் ஒரு டாக்ஸிக்காரர்தான்.
நேத்தே சிங்கையில் இருந்து கிளம்புமுன்,  சிங்கை ஸிம் எடுத்துட்டு, நம்ம நியூஸி சிம் போட்டாச்சு. நமக்குத்தான் ரோமிங் இருக்கே....வழி காட்டாதா என்ன ?  அதுமட்டும் லேஸுப்பட்டதா ? வாயிலே இருக்கு வழின்னுது....


அந்த மனிதர் கை காட்டுன திசையில் போறோம். ஏகப்பட்ட சின்னச் சின்னப் பாதைகளைத் தாண்டி போய்க்கிட்டே இருக்கோம். இதுலே அங்கங்கே ஏதோ  ரோடு ரிப்பேர் வேலை, புதுக்கட்டடங்கள் கட்டிக்கிட்டு இருக்கும் வேலைன்னு  இருப்பதால் ஆரஞ்சுக் கோன்களைச் சுத்திப் போகணும். கைவசம் ட்ராலி வேற இருக்கே.....  ஸீப்ரா க்ராஸிங் வரை போனால்தான் ரோடில் இறங்க முடியும்..........

 ஹாலிடேஇன் எந்தப்பக்கம்னு பார்வையை விரட்டுனதில் ரொம்ப தூரத்தில் தலை தெரிஞ்சது.  அங்கே போறதுக்கே  நல்ல சுத்தல்.  ஒரு வழியா இதோ அதோன்னு அந்த ரோடைப் பிடிச்சாச்சு.  சென்டர்  ரோடாம் ! நடுத்தெரு........
ஹொட்டேலில் நுழையும்போது மணி பார்த்தேன். சரியா முப்பத்திநாலு நிமிட் நடந்துருக்கோம். நல்லவேளையா எனக்கும் ஒரு ட்ராலி இருந்தது வசதியாப் போச்சு. குழந்தைகளுக்கு  நடைவண்டின்னு ஒன்னு நம்ம பக்கங்களில் இருக்குமே அதேதான். முழங்கால்வலியில் பேலன்ஸ் போய், கீழே விழாமல் தப்பிச்சேன்.

அறைக்குள் போனதும் படுக்கையில் விழுந்தேன். நடை அதிகம், கால் வீக்கம். கொஞ்சநேரம் தூங்கலாமுன்னா எங்கே ? கால் குடைச்சல் தூங்க விடலை. நல்லவேளையா வைஃபை கிடைச்சது.  மகள் நாலைஞ்சு சேதி அனுப்பி இருந்தாள்.  பதில் அனுப்பும்போது நடைப்பயணம் பற்றிச் சொன்னேன்.  இந்த ஹொட்டேல் வசதியா இருக்கான்னபோது, அவ்வளவாப் பிடிக்கலைன்னு உண்மையைச் சொன்னேன். இங்கே செக்கவுட் காலை பதினொன்னாம். நமக்கு லேட் செக்கவுட்  பகல்  ரெண்டு வரை. 
அடுத்த ஹொட்டேல் போக டாக்ஸிக்குத் தான் ஏற்பாடு பண்ணுவதாகச் சொல்லி, கொஞ்சநேரத்தில் விவரம் அனுப்பினாள். 

சட்னு போய்ப் பல்தேய்ச்சுக் குளிச்சு முடிச்சுட்டு,  அறையிலேயே ஒரு டீ போட்டுக் குடிச்சோம்.  இதுவரை ஒன்னும் சாப்பிடாததால், வயிறு கூப்பாடு போடுது.  ஹொட்டேல் லஞ்ச் மெனு பார்த்தால் ஒன்னும் சரியில்லை. ப்ச்.
மகள் சொன்ன ஊபர் வந்ததும் கிளம்பிட்டோம். மெர்க்யூர் ஹொட்டேல் போய்ச்சேரும்போது மணி ரெண்டேகால்.  டாக்ஸி சார்ஜ்  வேணாமாம்.  'ஆல்ரெடி பெய்ட் 'ன்னார் ட்ரைவர்.
 
 சைனா டவுன்  ஏரியாவா என்ன ?  வழியில் ரெண்டு இடத்தில் சீனர்களின் ஆர்ச் இருந்ததே..........

செக்கின் ஆனதும், கிளம்பிட்டோம்.... முதலில் ஏதாவது  சாப்பிட்டே ஆகணும். என்னோட மருந்து எடுக்கும் நேரம் எல்லாம் போயே போச்சு.....
நாலு  நிமிட் நடையில் ஒரு பீட்ஸா கடையில் லஞ்ச் முடிஞ்சது.  மருந்து சாப்பிடத் தண்ணீர் வேணுமேன்னு பக்கத்துக்கடையில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கினோம்.  விலை பத்து டாலர் ! என்னால் நம்பவே முடியலை............... இது என்னடா..... கொள்ளை!

எனக்கு ஏற்கெனவே இந்த ஊர் பிடிக்காது.  எங்க க்றைஸ்ட்சர்ச்சின் ஸிஸ்டர் ஸிடிதான் இது. இதே குளிர் என்பதால் இத்தனை வருஷத்தில் ஒரு முறை கூட வந்ததில்லை.  நம்மவர் ஆஃபீஸ் வேலையாக அடிக்கடி போய் வருவார்.  கூட வரச் சொல்லிப் பலமுறை கூப்பிட்டும்கூட எனக்கு ஆர்வமே இல்லை.   மகளும் சிலமுறை போய் வந்துருக்காள்.  ரெண்டுபேரும் சொல்லிச் சொல்லித்தான் இப்ப இங்கே வந்துருக்கேன். 

ஆஸியில் எனக்குப் பிடிச்ச ஊர் கோல்ட்கோஸ்ட் &  ப்ரிஸ்பேன்தான் .  ஸ்வெட்டர் தேவைப்படாத ஊர். முக்கியமா இந்த டேலைட் ஸேவிங்ஸ் கிடையாது. ஆறு மாச காலத்தை  ஒருமணி முன்னாலே.... ஆறு மாசம் பின்னாலேன்னு  மாத்தி மாத்திவச்சு, இயற்கைக்கு எதிரா உடல்நிலையைப் பாழாக்கிக்க வேணாம். 

அறைக்கு வந்து  ஆறுமணிவரை நல்ல தூக்கம்.  இப்ப அடுத்த கவலை டின்னர். இங்கே பக்கத்துலே ஒரு இண்டியன் ரெஸ்ட்டாரண்ட் இருக்குன்னார் நம்மவர்.  சரின்னு கிளம்பினேன். எலிஸபெத் தெருவை (நாம் பீட்ஸா வாங்கின தெரு ) கடந்து எதிர்வாடைக்குப் போய் நேராப் போகணும். ஐநூத்தியம்பது மீட்டர்தான்னு வலை சொன்னது.  ஆனால் பாதை ரொம்பவே ஏத்தமுன்னு சொல்லுச்சோ ? ஊஹூம்..... என்னதான் அக்கம்பக்கம் கடைகளை வேடிக்கை பார்த்துக்கிட்டே போனாலும் கூட,  மேலே போகப்போக மூச்சு வாங்குது....  முடியலைன்னு ஒரு கட்டத்துலே திரும்பிடலாமுன்னு சொன்னேன்.....  இன்னும் கொஞ்சநேரம் போய்ப்பார்த்துட்டு, அந்த ஆனந்தபவன் கண்ணில் படலைன்னா திரும்பிருவேன்னு எச்சரிக்கை கொடுத்தும் ஆச்சு.  நமக்குத்தான் கால் வேற சரியில்லையே.....

போதும், இனி முடியாது என்ற நிலையில் கண்ணில் பட்டேவிட்டது!   உள்ளே போய் உக்கார்ந்ததும்  கொஞ்சநேரத்தில்   மூச்சும் நார்மல் ஆச்சு. மெனுவைப் பார்த்தால் புதுசா ஒன்னும் இல்லை. எல்லா இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகளிலும் உள்ள அதே செட் மெனு. ப்ச்........
  


கண்ணைக் கவர்ந்தது ஃபில்டர் காஃபி மட்டுமே !  ஒரு ஆனியன் ஊத்தப்பம், ஒரு நெய் ரோஸ்ட், ரெண்டு காஃபி. ருசி பரவாயில்லை. (பசி ருசி அறியாது)  சாப்பிட்டு முடிச்சதும்தான் விலை கொஞ்சம் அதிகமோன்னு ஒரு தோணல்.(அதானே.......  வயிறு நிறைஞ்சால் விசாரம் வருதுல்லே ? )

திரும்ப வர்றது எனக்கு  எப்பவுமே  கஷ்டமே கிடையாது! இறக்கத்தில் சமாளிக்கலாம்.  ஏற்றத்தில் ? இதுவுமே வாழ்க்கைப்பாடம்தான்.....

எலிஸபெத் தெரு சூப்பர் மார்கெட்டுக்குள் போய், மறுநாள் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு மஃப்பின்,  அசைபோடக் கொஞ்சம் நட்ஸ் வாங்கினோம்.   பொதுவாக ப்ரேக்ஃபாஸ்ட் அறை வாடகையோடு இல்லாத பட்சத்தில் இதுவே நம் வாடிக்கை ! 

பகலில் கொஞ்சம் வெயில் இருந்தாலும்,  சாயங்காலத்தில் குளிர் மெதுவா வர ஆரம்பிச்சது.... நம்ம அக்கா இல்லையோ இந்த ஊர்?  ரூம் ஹீட்டர் வேணும்  என்றதும்   கொண்டுவந்து கொடுத்தாங்க.
ஏழரையே போ போ.............. நாளையாவது நல்லபடி விடியணும்டா பெருமாளே.......

தொடரும்............ :-)

0 comments: