Thursday, November 21, 2019

சுப்ரபாதம் ...... ( பயணத்தொடர், பகுதி 173 )

பெரிய ஹொட்டேல்கள் பலதிலும் காலை ப்ரேக்ஃபாஸ்ட் அறை வாடகையோடு சேர்ந்தே இருக்கும். ஆனால் சிங்கையில் மட்டும் வேறுவிதம்.  ப்ரேக்ஃபாஸ்ட் சேர்த்தோ இல்லை சேர்க்காமலோ அறை எடுத்துக்கலாம்.  நாலு எட்டில் நம்ம  கோமளவிலாஸ் இருக்கும்போது யாருக்கு வேணுமாம் சீனவகை?
நேத்துச் சீனு தரிசனம் முடிச்சுட்டுக் கோவிலில் இருந்து வரும்போதே முடிவு செஞ்சதுதான் காலை சுப்ரபாத ஸேவைக்குப் போகணும்னு.  அஞ்சு மணிக்கு எழுந்து குளிச்சுட்டுக் கிளம்பி கோவிலுக்கு வந்தோம்.  இன்னும் இருள் விலகாத காலைப்பொழுதில் செராங்கூன் ரோடு , ரொம்பவே நல்லா இருக்கு!  எனக்கு ரொம்பவே பிடிக்கும்.  அங்கொன்னும் இங்கொன்னுமாய்  வண்டிகளும் ஆட்களுமா ஜிலோன்னு இருக்கு!

காளியம்மனும் கண் விழிச்சுட்டாள். அங்கேயும் உள்ளே விளக்கெல்லாம் போட்டாச்சு. ஆறு மணிக்கு சுப்ரபாத ஸேவை என்பதால் அரக்கப்பரக்க ஓடுனோம். திருப்பதியில் பெருமாளைத் தூங்கவிடாமல் நடுராத்ரியில் எழுப்பிக் காசு பார்க்கும் பம்மாத்தெல்லாம் இங்கே இல்லையாக்கும்!!!
இன்றைக்கு சனிக்கிழமை வேற !  கோவிலில் அந்த நேரத்தில்  பட்டர்களைத்தவிர யாருமே இல்லை.  கருவறை வாசல் திரைபோட்டு மூடியிருக்கப் பட்டர் ஸ்வாமிகள் வெளியே மண்டபத்தில் ஒரு பக்கமாய் உக்கார்ந்து  சுப்ரபாதம்  வாசிக்கத் தொடங்கினார்.
 நாங்க ரெண்டுபேரும் இந்தப் பக்கமா சந்நிதியைப் பார்த்தபடி உக்கார்ந்து கூடவே சொல்லிக்கிட்டு இருந்தோம். ஏகாந்த ஸேவையா என்ன?  அடுத்த பத்தாவது நிமிட்டில் கோவிலின் வாத்யகோஷ்டி வந்தாங்க.  மனசொன்றி சுப்ரபாதம் சொல்லி முடிச்சதும், திரை விலகி தீபாராதனை ஆச்சு. அப்போதான் பார்க்கிறேன்.... நமக்குப்பின்னால் ஒரு சின்னக்கூட்டம், ஓசைப்படாமல் வந்து சேர்ந்துருக்கு!

தீபாராதனை ஆனபின்  நிவேத்யச் சொம்பு (பால்)  தாயார், ஆண்டாள் சந்நிதிகளுக்குப் போய் வந்தபின் நமக்கும் துளி கிடைச்சது!  "ஏண்டா....   உனக்குக் காலங்கார்த்தாலெ பாலா? காஃபி இல்லையா?"
கேட்டு முடிக்குமுன் கூட்டம் அப்படியே நகர நாமும் புள்ளையார், சுதர்ஸன், விஷ்ணுதுர்கை சந்நிதிகளுக்கு வலம் போய்  வலத்தைப் பாதியில்  நிறுத்தி  பெருமாள் சந்நிதிக்குப் பின்புறம் இருக்கும் ஹாலுக்குள் போயிருக்கோம்.

ஓ..... இது டைனிங் ஹால்!  முந்தி இங்கேதான் எண்டோமென்ட் போர்டு ஆஃபீஸ் இருந்தது.  புதுசா மாத்தி அமைச்சுருக்காங்க.  பளபள தரையும், மேஜைகளும், நாற்காலிகளுமா  எல்லாம் பளிச்!

மொதல்லே கேஸரி. அப்புறம் வெண்பொங்கல். அடுத்து பொங்கல் தலையில் சாம்பார் அபிஷேகம். அதான் பக்கத்து இலைப் பாயஸம் இங்கே ஓடிவந்தது.  அணை கட்டலாமுன்னா வடை வேற வந்துருச்சு.  கலந்துகட்டித்தான் அடிக்கணும்.....  ஆறுதல் பரிசாக சுடச்சுட அருமையான ஃபில்ட்டர்  காஃபி!  (எனக்குத்தான் பால். உனக்குக் காஃபின்னுட்டான் ....  )
இன்னும் ஆறேமுக்கால் கூட ஆகலை... அதுக்குள்ளே 'பசியாற்றிட்டான்' எம்பெருமாள்!  ப்ரசாதம்  முடிச்ச கையோடு  பாக்கிச் சுற்று சுத்தப்போனோம்.  ஆஞ்சி நிர்மால்யம் களைஞ்சு இனிமேத்தான்  குளிக்கணுமாம்.

சாயந்திரம், முடிஞ்சா வரேண்டான்னுட்டுக் கிளம்பிப்போனோம். கோவிலையொட்டிப் போகும் தெருவுக்குப் பெயரே 'பெருமாள் ரோடு' !
கோவில் வாசலுக்கு நேரெதிரா எம்டிஆர். நம்ம பெங்களூரு சமாச்சாரம்தான். ஆனால் கொள்ளை விலை..... ஒவ்வொன்னும்....

பெருமாள் கோவில் ராஜகோபுரத்தைப் பார்க்கணுமுன்னே  ஒரு சர்ச் வந்துருக்கு!
லேண்ட்மார்க் சர்ச்.  ஏன்? பெருமாள்  கோவிலை லேண்ட் மார்க்காச் சொல்லப்டாதாமா?  என்னவோ போங்க.....

இன்னும் கடைகள் ஒன்னும் திறக்கலை.... இங்கெல்லாம் பத்துமணிக்குத்தான் .....  ராத்திரி பத்து, பதினொன்னுவரை திறந்தேதான் வைப்பதால் இருக்குமோ? இப்ப மணி ஏழேகால்தான்...

ஆனாலும் வெயில் சுள்னு ஆரம்பிச்சுருக்கு. இதே வெயிலுக்காக நியூஸியில் ஏங்கிக்கிட்டு இருக்கும்  எங்களுக்கு இது ஸ்வர்கமா தெரிய வேணாமோ? ஊஹூம்..... 

'வெயிலில்  அலைய வேணாம். கொஞ்சநேரம் போய் ரெஸ்ட் எடுத்துட்டுப் பத்துமணிக்குக் கிளம்பலாமு'ன்னார் 'நம்மவர்'.  அதுவுஞ்சரி. காலை சீக்கிரமா எழுந்துட்டோமே....

மனுஷர் நியூஸ் பார்க்கிறேன்னு சொன்னவர், கண்ணை மூடி, மனக்கண்ணில் பார்த்துக்கிட்டே தூங்கிட்டார். வெயில் ஆளை அசத்திருதே....  எனக்கு வலை இருக்கு. அது போதும்....
பக்கத்துத்தெரு  லக்ஷ்மிநாராயணன் கோவில் கோபுரம் நம்ம அறை ஜன்னல் வழியாத் தெரியுது.  இந்தாண்டை இருக்கும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் ஒரு பகுதியில் ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமா வந்து சேர்ந்துக்கிட்டு இருக்காங்க. ஏதோ ஸ்போர்ட்ஸ் நடக்குதோ....
நாளைக்கு இந்நேரம்  நம்மூர் மக்கள்ஸ், வேலை செய்யுமிடத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயிறும் இங்கே வந்து ஊருக்குப் பணம் அனுப்பும் வேலையை முதலில் செஞ்சுட்டு, நண்பர்களையும் சந்திச்சு, கோவில், சாப்பாடுன்னு கொஞ்ச நேரத்தைக் கொண்டாடிட்டு போனாங்கன்னா....   அது அடுத்த ஞாயிறு வரை தாங்கும். தாங்கணும்.... இப்படித்தான் போகுது  கட்டட வேலைக்காக வரும் மக்களின் வாழ்க்கை.... ப்ச்....
இவ்ளோ கஷ்டப்பட்டு  அனுப்பும் பணத்தை அங்கே ஊரில் நல்லபடியா சேமிச்சு வைக்கும் உறவினர் கிடைச்சவங்க அதிர்ஷ்டசாலிகள்!

பதினொன்னரை ஆனதும் எழுந்தவர், கிளம்பலாமான்னார். ஆஹா....


ஸ்ரீவீரமாகாளியம்மனைக் கும்பிட்டுட்டுப் போகலாமேன்னு போனால் நல்ல கூட்டம்.  லக்ஷ்மி துர்கை, பெரியாச்சி,  கருப்புசாமி, மதுரைவீரன்னு சந்நிதிகள்....  வெளிநாட்டு மக்கள் (வெள்ளைக்காரங்க ) கோவிலுக்குள் வந்து பார்க்க எந்தஒரு தடையும் இல்லை, ட்ரெஸ் கோட் தவிர.  அவுங்களுக்காக வெளியே ரெண்டு பெரிய  கூடைகளில் சீலைத்துண்டு, பாவாடைகள், மேல்துண்டு, வேட்டிகள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. அதுலே ஒன்னை எடுத்து மாட்டிக்கிட்டால் ஆச்சு!

1881 ஆம் வருஷம்   சின்ன அளவில்  ஆரம்பிச்ச  கோவில். இப்போ ரொம்பவே நல்லபடியா  வளர்ந்து நிக்குது!  நாமும்  இந்த முப்பத்தியஞ்சு வருஷங்களாப் பார்த்துக்கிட்டே வர்றோம்தானே இந்த வளர்ச்சியை!

கோவிலில் அன்னதானம்/ப்ரசாதம் வழங்கல் நடந்துக்கிட்டே இருக்கு நேரா நேரத்துக்கு.  சாம்பார்சாதம், கேஸரின்னு  அமர்க்களம். நாம் காலையில் சாப்பிட்டதே போதுமுன்னு இருந்துட்டோம்.

செந்தில் மாதிரி எங்கெங்கே என்ன பிரஸாதமுன்னு டாடா பேஸ் எல்லாம் வச்சுக்க வேணாம். அண்ணனும் தங்கையுமா செரங்கூன் ரோடின்  அந்தாண்டையும் இந்தாண்டையும் இடம் புடிச்சுக் கோவிலில்  உக்கார்ந்துக்கிட்டுப் பக்தர்களுக்கு இல்லைன்னு சொல்லாம  சோறு போட்டுக்கிட்டு இருக்காங்க !



லிட்டில் இண்டியா எம் ஆர் டி ஸ்டேஷனுக்குப் போகும்வழியில்  காய்கறிகள் பச்சைப்பசேலுன்னு கெமெராக் கண்ணைப்பறிக்குது. விடமுடியுமா?
லக்ஷ்மிகளும் சரஸ்வதிகளுமா ஒரு பக்கம்.  'நிக்கற லக்ஷ்மி'யை நம்ம ரவிவர்மா ஓவியத்தில் இருக்கும் வகையில் ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு இருக்கேன். கிடைக்கலை. பார்க்கலாம், வேளை எப்போ வருமுன்னு....



மண்சட்டி பானைகளுக்கு மறுவாழ்வு கிடைக்க ஆரம்பிச்சது சந்தோஷம். நாம்தான் எதுன்னாலும்  அப்படியே அளவுக்கு மீறித்தானே போவோமே.... அதனால் ட்ரிங் பாட்டில் கூட டெர்ரகோட்டாவில் !  பட்டர்ஃபிங்கர்ஸ் இல்லாம இருக்கணுமே பெருமாளே!



இப்ப ரயில் பிடிச்சு, சாங்கி பிஸினஸ் பார்க் வரை போகணும். அங்கெ நமக்கொரு பிஸினஸ் இருக்கு :-)

தொடரும்........ :-)


5 comments:

said...

இன்றைய இடுகை அருமை. நானே சுடச்சுட பெருமாள் கோவில் வெண்பொங்கல் சாப்பிட்ட மனநிறைவு. என்னவோ போங்க... சாம்பாரும் கேசரியும் நட்பு கொண்டாடறதைப் பார்க்கத்தான் பிடிக்கலை.

கோவில் தரிசனங்கள் அருமை. அதைவிட அருமை, சிங்கப்பூரின் பெருந்தன்மை, விஷன்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

எனக்கும்தான் பிடிக்காது. ஸ்ப்ளிட் செகன்ட் யோசிக்கறதுக்குள்ளே அபிஷேகம் நடந்துருச்சு !

இப்படியே இனி பழகிக்கிட்டால் நிம்மதி :-)

நாட்டை முன்னேற்றணும் என்ற தலைமை கிடைச்சது அவுங்க செஞ்ச புண்ணியம். அதான்.....

ஆளுக்கொரு சட்டம் இல்லைன்னா எல்லாம் சரியாகும்.

இங்கே நம்ம நாட்டில்........... " ஏய்... நான் யாருன்னு தெரியுமில்லே..............."

said...

படங்களுடன் உங்கள்இயல்பான எழுத்து நேரடியாக பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது...வாழ்த்துக்கள்

said...

நெல்லிக்காய் அருமை
மறுபடி மறுபடி ப்ரஸாதம் அருமை

நன்றி

said...

சுப்ரபாத ஸேவையும்

வீரமாகாளியம், லக்ஷ்மி துர்கை, பெரியாச்சி, கருப்புசாமி, மதுரைவீரன்னு அனைவரின் சேவையும் அருமை மா ...

காய்கறி படங்கள் , ஷாப்பிங் படங்கள் எல்லாம் சூப்பர் ..