Tuesday, November 19, 2019

சென்னையை இன்னும் சிங்கையா மாத்தலை..... (பயணத்தொடர், பகுதி 171 )

மறுநாள் காலையில் சீக்கிரமா எழுந்து தயார் ஆனோம். ரெண்டு கேபின் பேகும், மூணு செக்கின் பெட்டியுமா  எடை மீறாமல்  ரெடி ! இப்பத்தான் 'நம்மவர்' முகத்தில் கொஞ்சம் தெளிவு.
ஏழரைக்குக் கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் .  நான் நிஜமாவே மிஸ் பண்ணப்போற  சமாச்சாரம் இது.....  நம்மை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிட்ட ரெஸ்ட்டாரண்ட் மேனேஜருக்கு நன்றி சொல்லிட்டு எட்டு பத்துக்கு செக்கவுட் செஞ்சு ஏர்ப்போர்ட் வந்து சேரும்போது மணி எட்டு நாப்பதுதான். சனிக்கிழமை, காலை வேளை... ட்ராஃபிக் அதிகமில்லை!








விமானநிலைய வளாகத்தில்  இருக்கும் தேசியக்கொடி, உச்சியில் இருந்து கொஞ்சம் இறங்கி இருக்கு. நாம் போறோமுன்னு துக்கமா என்ன? சரியாப் பார்த்துக் கட்டி விட்டுருக்கக்கூடாதோ?  எப்பவும் அலட்சியம் அதிகம்தான் நம்ம நாட்டில்.....

காலை ஃப்ளைட் சிங்கைக்கு.  10.12 க்குக் கிளம்பி  மாலை 5.09க்குப் போய்ச் சேருதாம் ஸில்க் ஏர்.  சிங்கை ஹொட்டேல்களில்  மதியம் மூணுமணிக்குச் செக்கின் என்பதால்  முக்கால் நாள் வீணாகிப்போகுது எனக்கு.  இதனால் காலை ஃப்ளைட்டில் போறோம் இப்பெல்லாம்.   அதிகாலை ஆறுக்கு முன் வந்திறங்கும் ஃப்ளைட்டுன்னால் நமக்கு முழுநாள் கிடைக்கும் என்றாலும்  ஒன்பது மணி நேரம் தேவுடு காக்க வேணாமா? கூடுதல் போனஸா, ராத்தூக்கமும் போயிருதே.....
நியூஸியில் இருந்து இந்தியாவுக்கு வந்து போக குறுக்கு வழின்னா அது சிங்கை வழியாகத்தான்.  வேற டைரக்ட் ஃப்ளைட் கிடையாது என்பதால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அடிக்கும் கொள்ளையைச் சொல்லி மாளாது. இல்லைன்னா.... மலேசியா வழி போகலாம்.  அதுக்கு நம்ம ஊரில் இருந்து ஆக்லாந்து போகணும் முதலில்.... ப்ச்.....

உலகத்தில் ரொம்பவே பிடிச்ச இடமுன்னு சொன்னால் எனக்கு சிங்கைதான். அங்கேயே வாழ்க்கை நடத்தினால்  எதாவது குற்றங்குறை சொல்வேனோ என்னவோ.....  ஒரு பயணியாக எனக்குப் பிடிச்ச ஊர் இது!

பிக்கல் பிடுங்கல் இல்லாத கோவில் தரிசனம்,  நிம்மதியா நடந்து போகும் விதமான  சாலை அமைப்பு, நம்ம மொழி, கலாச்சாரம், கலைகள் இப்படி எதுக்கும் குறைவில்லை. முக்கியமா பயம் இல்லாமல் தனியா எங்கே வேணுமானாலும் போய் வரலாம்.  அதே சமயம்....   ஹொட்டேல் சார்ஜ் இங்கே பயங்கரம்.  நியூஸி போல டபுள் :-(

எழுத வந்தபின் இங்கே கிடைத்த நண்பர்களைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. ரொம்ப ஆத்மார்த்தமாகப் பழகும் நண்பர்களே  அனைவரும். இந்த எழுத்துக்கே இப்படின்னா.... இன்னும் நல்லா எழுதினால்....   ஹைய்யோ!!!
சென்னை விமானநிலையத்தில் முந்தாநாள் நடந்த சுதந்திரதினக்கொண்டாட்ட அலங்காரம் இன்னும் மிச்சம் இருந்தது!
சரியான நேரத்துக்குக் கிளம்பி சரியான நேரத்துக்குச் சிங்கையில் கொண்டு விட்டது ஸில்க் ஏர்.

தங்கல் நம்ம லிட்டில் இண்டியா ஏரியாவில்தான். ஹில்டன் கார்டன் இன். பெயர் அப்படியே பிடுங்கித் தின்றமாதிரி இருக்குல்லே?  பழைய க்ராண்ட் சான்ஸ்லர் ஹொட்டேல்தான், புதுப்பெயர் வச்சுக்கிட்டு இருக்கு!  நம்ம  செரங்கூன் ரோடு ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலுக்குப் பின்பக்கம்.
உண்மையில் எனக்குப் பிடிச்ச ஹொட்டேல்னு சொன்னா அது ஹொட்டேல் பார்க் ராயல்தான்.  நம்ம சிங்கைச்சீனுவுக்கு ரொம்பவே பக்கம். அஞ்சு நிமிஷ நடை. ராயல்னு பெயர் வச்சதால்  அங்கே வரவரக் கொள்ளையா இருக்கு இப்பெல்லாம். (பழைய பெயர் நியூ பார்க் )  அதுவுமில்லாமல்  இடம் கிடைக்கறதும் இல்லை.....  'போயிட்டுப்போகுது போ.... இன்னொரு அஞ்சு நிமிட் கூடுதலா நடந்தால் என்ன'ன்னுதான் இந்தக் கோடிக்கு வந்தது.  இதுலே இன்னொரு சௌகரியம் என்னன்னா.....   நம்ம பழைய  கோமளவிலாஸ்  இன்னும் கிட்டக்க.  சாமியா சாப்பாடான்னுதான் சீட்டுக் குலுக்கிப் போடணும். சாமியே சாப்பாடு(ம்) போட்டுருதுன்றது  வேற கதை :-)
டாக்ஸி பிடிச்சு ஹில்டன் கார்டன் இன் வந்து செக்கின் ஆகும்போதே மணி ஆறரை. கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பலாமா?

தொடரும்......... :-)


7 comments:

said...

அருமை நன்றி.
(இன்று செவ்வாய் தானே?)

said...

வாங்க விஸ்வநாத்,

இன்று செவ்வாயே தான் !

பயணம் ஒன்று வாய்த்துள்ளது. அதனால் தினமும் ஒரு பதிவாகப் போட்டு இந்தப் பயணத்தொடரை முடிக்கலாமுன்னா எங்கே..... அதுபாட்டுக்கு நீண்டு போகும் அறிகுறி தெரிகிறதே....

பார்க்கலாம், கிளம்புமுன் முடிக்க முடியுமா என்று !

said...

நீங்களும் கோமளவிலாஸ் என்று சொல்லி வந்ததில் இந்தவருட ஆரம்பத்தில் சிங்கைபையும்,மலேசியாவையும் கண்டுகொள்ளக் கிடைத்தது. தைப்பூசமும் காவடிகளும் அமர்களம்.

said...

வாங்க மாதேவி,

அங்கே கோமளவிலாஸ் ஃபாஸ்ட் ஃபுட் வகையில் கூட நாலைஞ்சு கிளைகள் இருந்தாலும், எனக்கென்னவோ வீரமாகாளியம்மன் கோவிலுக்கு முன்னால் இருக்கும் பழைய கோமளவிலாஸ்தான் பிடிச்சுருக்கு.

தைப்பூசம் உண்மையில் ரொம்ப நல்லாக் கொண்டாடறாங்க அங்கே!

உங்க பயணப் பதிவுகளை எழுதுனீங்களா? என் கண்ணில் படவே இல்லையே....

said...

நாங்கள் எல்லாம் பிஸி மனிதர்கள் ஆகிவிட்டோம் நாட்டுக்குள்ளேயே இரு இடத்தில் தங்கல் அங்கும் இங்கும் என பறக்கிறோம் பயணங்கள் அதிகம்.பதிவுஎன்பது முடியவில்லை.

said...

அழகான படங்கள் ...தொடர்கிறேன் மா

said...

பத்தாவது படத்தில் இருப்பவர்தான் ரெஸ்டாரண்ட் மேனேஜர்? ஒரு கொஞ்ச வயசுப் பையனாக இருந்தாரே-நான் அவர்தான் ரெஸ்டாரண்ட்மேனேஜர் என்று நினைத்தேன்!!