Wednesday, November 06, 2019

ரிஸ்க் எடுக்கத்தான் வேணும்.... !!!!!! (பயணத்தொடர், பகுதி 165 )

நம்ம லோட்டஸில் எனக்கு ரொம்பவே பிடிச்ச இன்னொரு சமாச்சாரம்.... ஒவ்வொரு தளத்தின் முகப்பிலும் வச்சுருக்கும்  வட்டக்கண்ணாடி !  அறையை விட்டுக்கிளம்பி லிஃப்டுக்கு வரும்போது  கண்ணாடியில் பார்த்துக்கிட்டு ஒரு க்ளிக்!  அப்பதான் நாள் நல்லபடிப்போகும் :-)
யாராவது பணியாளர்கள்  அந்த நேரத்தில் எதிர்ப்பட்டால்,  'உங்க ரெண்டுபேரையும் ஒன்னா எடுக்கறோமு'ன்னு முன்வருவாங்க.  பலசமயங்களில் படங்கள் நல்லாவே வராதுதான்.  அவுங்களுக்கு ஆர்வம். (அழகான ஜோடின்னு நினைச்சுருப்பாங்களோ!  ஹாஹா )  நான் ஒன்னும் சொல்றதில்லை.....
காலையில் ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனதும், நல்லா சாப்பிட்டுக்கோன்னார் நம்மவர். சுத்தல் அதிகமா இருக்குமாம் :-)

நம்ம தெய்வாவும்  வந்து நம்மோடு சேர்ந்துக்கிட்டாங்க.  பகலில் எங்காவது போகலாமான்னு கேட்டால்.....   அவுங்க இன்றைக்கு செக்கவுட் செய்யறாங்களாம்.  ரெண்டு முறை பார்க்க முடிஞ்சதே போதுமுன்னு  மனசிடம் சொன்னேன்.
நான் எப்பவும் வெளிநாட்டுப்பொருட்கள்தான் அதிகம் பயன்படுத்துவேன்(!!!) என்பதால்....  பத்துமணிக்குக் கிளம்பி அம்பிகா (அப்பளம்) ஸ்டோர்ஸ்க்குப் போய், சிலபல பொருட்களை வாங்கினோம். சுண்டைக்காய், மணத்தக்காளி வத்தல்கள், இலந்தவடை, உப்பிட்ட உலர்ந்த  நார்த்தங்காய், பருப்புப்பொடி, இட்லி மிளகாய்ப்பொடி வகைகள்னு..... அதிர்ஷ்டம் இருந்தால் வீட்டுக்கு, இல்லைன்னா  ஏர்ப்போர்ட் குப்பைத்தொட்டிக்கு.....  ரிஸ்க் எடுக்கத்தான் வேணும்... 

நன்னாரி சர்பத் கிடைச்சது.  ஹைய்யோ..... எவ்ளோ நாளாச்சு !!!!  இதைமட்டும்  இங்கேயே முடிச்சுடணும். நியூஸிக்குக் கொண்டு போக முடியாது. அப்படியே  டெய்லர் கடை, பாண்டிபஸாரில் சின்னதா ஒரு சுத்தல் ஆச்சு.

பகல்சாப்பாடு... இங்கே  க்ரீன்வேஸில்தான். அதான் தெய்வாவோடு வெளியே போறது இல்லைன்னு ஆகிப்போச்சே....  நம்ம லோட்டஸின்  கீழ்த்தளத்தில் முந்தி ஒரு ரெஸ்ட்டாரண்ட் சென்னை 24 என்ற பெயரில் இருந்தது.  இப்ப அதுதான் கைமாறிப்போய் க்ரீன்வேஸ் என்ற பெயரில். நல்ல சுவையோடு, முக்கியமா வயித்துக்கு எந்த அபகடமும் ஏற்படுத்தாத சாப்பாடு இங்கே.  சாம்பார்சாதமும் தயிர்சாதமுமா லஞ்ச் முடிச்சுக்கிட்டோம். வெயிலில் சுத்தக்கூடாதுன்னு 'நம்மவரின்' கட்டளை.

நாலு மணிக்குத் தோழி கிருத்திகா ஸ்ரீதர் வரேன்னு சொல்லி இருந்தாங்க.
தம்பதி சகிதம் ஒரு யானையோடு, யானையைச் சந்திக்க வந்தாங்க. ஃபேஸ்புக் தோழமை.  அவுங்க பதிவெல்லாம் பார்த்தால் அரண்டு போயிருவீங்க.  முழுக்க முழுக்க ஆன்மிகம். சித்தர்களைப் பற்றித் தேடித்தேடி நமக்கு விளக்கமாச் சொல்லிடறாங்க !  ஆழ்ந்த அறிவு!  நம்ம கிருத்திகாவும் ஸ்ரீதரும், 'நம்மவரும்' நானுமா  நிறையக் கோவில்களைப் பற்றித்தான்  பேசினோம்.  முதல்முறையாக நேரில் சந்திக்கறோம் என்ற உணர்வே இல்லை.....  இணையம் நம்மையெல்லாம் ஒன்னு சேர்த்து வச்சுருக்கு!

அடுத்துப்போனது அண்ணன் வீட்டுக்கு!  என் உடன்பிறவா அண்ணன். தயக்கத்தோடுதான் போனேன்....  நமக்காக, வழிமேல் விழி வச்சுக் காத்திருக்கும் அண்ணன்,  இப்பவும் அதே போல்தான் காத்திருந்தார், படமாக !
அண்ணிதான் பாதி உடம்பாப் போயிருக்காங்க. ஏற்கெனவே  மெலிஞ்ச உடம்பு, இப்ப இன்னமும்... குறைஞ்சு போயிருக்கு. பேரக்குழந்தைகளும், மகன், மருமகளுமா வாழ்க்கை நல்லபடியாகப் போனாலும்..... மறுபாதியின் இழப்பு என்பது....  மனசை உருக்கிருது இல்லையா?  ப்ச்.....
சிவஞானம்ஜி என்று  வலைப்பதிவில் கலக்கிக்கொண்டு இருந்தவரைப் பழைய நண்பர்கள் நினைவில் வைத்துருப்பாங்க ! நாமெல்லாம் பதிவர் குடும்பம்னு நான் சொல்றது எவ்ளோ உண்மை பாருங்க.....  வலைஉலகில் நேரில் சந்திக்காமலேயே  நல்ல நட்பும் பிரியமும் கிடைச்சுருது.  பதிவர்கள் மட்டுமில்லாமல், அவுங்க குடும்ப அங்கத்தினர்களும் அன்பையும் பிரியத்தையும் அளவில்லாம நம்மமேல் கொட்டுவதும், அதை மனப்பூர்வமா நம்மால் உணர முடிவதும்......   'என்ன தவம் செய்தோம்' என்றுதான்  நினைக்க வைக்குது..........
உங்க அண்ணன் இல்லைன்னா என்ன? நாங்க இருக்கிறோம்னு சொல்லும்   மகன் பிரசன்னாவும் குழந்தைகளும் !
மனநிறைவோடும், அதே சமயம் மனபாரத்தோடும்தான் திரும்ப அறைக்கு வந்தோம். 

தொடரும்........... :-)


12 comments:

Jayakumar Chandrasekaran said...

Who is that third-man who took a sefie of selfie (First photo of you two). Photo taken at the correct moment reflecting your moods and actions. Great shot.

Jayakumar

விஸ்வநாத் said...

நன்றி

வெங்கட் நாகராஜ் said...

தப்பித்தால் வீட்டுக்கு, இல்லை என்றால் குப்பைத் தொட்டிக்கு! கஷ்டம் தான். பல பொருட்கள் அனுமதிப்பதில்லையே.

தொடரும் சந்திப்புகள் மகிழ்ச்சி தந்தன.

தொடர்கிறேன்.

நெல்லைத்தமிழன் said...

லோட்டஸைப் பற்றி ஆஹா ஓஹோன்னு ஒவ்வொரு முறையும் எழுதறீங்க. ஒரு தடவை அங்கு தங்கிப் பார்க்கணும்.

தொடர்கிறேன்.

துளசி கோபால் said...

வாங்க ஜயகுமார்,

அந்தப் படம் நான் எடுத்ததுதான். கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைக் க்ளிக்கினேன்.

துளசி கோபால் said...

வாங்க விஸ்வநாத்,

வருகைக்கு நன்றி !

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அதென்னமோ கடந்த ரெண்டு முறைகளிலும் நார்த்தங்காய் குப்பைத்தொட்டிக்குப் போச்சு. அதில் விதைகள் இருந்த காரணம்தான். ஊறுகாய் விதைகள் முளைக்காதுன்னாலும்..... ஊருக்குள் பழம், விதை, பூ இப்படி ஏதும் வரக்கூடாதே.....


மோர்சாதத்துக்குத் தொட்டுக்க மிஸ்ஸிங். அதுவும் ஜூரம் வந்தால் உப்பு நார்த்தங்காய் வாய்க்கு உணக்கையாக இருக்கும். எல்லாம் போச்சு.... ப்ச்....

துளசி கோபால் said...

வாங்க நெல்லைத்தமிழன்,

ரொம்ப ஆடம்பரமா இருக்காது லோட்டஸ். அருமையான பணியாளர்கள், அருமையான வசதியான அறை. ஆரவாரமில்லாமல் அமைதியாக இருக்கும் இடம். முக்கியமாச் சொல்ல வேண்டியது ப்ரேக்ஃபாஸ்ட்.

நாம் எங்காவது வெளியூர் போய் வரணுமுன்னால் அறையைக் காலி செஞ்சுட்டுப் பெரிய பெட்டிகளை இங்கே ஸ்டோரேஜில் போட்டுட்டுப் போகலாம்.

நாம் எப்பவும் ஜூனியர் ஸ்யூட் எடுப்போம். ரெண்டு அறைகள். நண்பர்கள் சந்திக்க வரும்போது முன்னறை வசதியாக இருக்கு.

ஆரம்பநாட்களை விட இப்பெல்லாம் கட்டடம் பழசாகிப்போச்சு என்றாலும், வீடு மாதிரி தான் நமக்கு.

G.M Balasubramaniam said...

எங்கெல்லா சுற்றுகிறீர்கள் என்பதே தெரிவதில்லை

மாதேவி said...

பதிவர்களும் அன்பான சந்திப்புகளும் தொடரட்டும்.

Anuprem said...

foodie clicks எல்லாமே சூப்பர் மா ..

Kalai said...
This comment has been removed by the author.