Thursday, March 23, 2017

சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து :-)

முஸ்கி :  இது அன்னாடங்காய்ச்சிகளுக்குச் சரிப்பட்டு வராது   :-)

என்ன இது சகலவியாதிகளுக்கும் ஒரே மருந்தா?    இப்படி ஒன்னு இருக்கோ? இருக்கு.... ஆனா  ஹெல்த் டிபார்ட்மென்ட்லே  இல்லை.  இது  கிச்சன் ஹெல்த் டிபார்ட்மென்ட், கேட்டோ!

நம்ம வீட்டுலே க்ரீன் ஹௌஸ் ஒன்னு வச்சு காய்கறி(!!!) பயிரிடறோமுன்னு உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருக்கேனே.... ஞாபகம் இருக்கா?
எது முளைக்குதோ இல்லையோ... தக்காளி மட்டும் கூடை கூடையாக் காய்ச்சுருது. முந்தியெல்லாம் தக்காளி ஹல்வா எல்லாம் கிண்டி இருக்கேன். இப்போ பேலியோ பக்கம் ஒதுங்கிட்டதால்.... சக்கரைன்னா....  ஊஹூம் னு தலையாட்ட வேண்டியிருக்குப்பா....
நியூஸி வந்த புதிதில்  சம்மர் சீஸன், தக்காளி கிலோ அம்பது சென்ட்தான்  (அதுவும் பிக் யுவர் ஓன்  திட்டத்தில் பக்கெட் பக்கெட்டா பறிச்செடுத்து....)  என்பதால்  வாங்கிவந்து  டீப் ஃப்ரீஸரில் போட்டு வச்சேன்.  குளிர்காலத்தில் தக்காளி விலை பனிரெண்டு பதிமூணு டாலர் வரை  போயிருமுன்னு கேள்விப்பட்டதால் வந்த முன்  ஜாக்கிரதையாக்கும்!

குளிர்காலம் ஆரம்பிச்சதும்  ஃப்ரீஸரில் இருந்து தக்காளியை எடுத்தால்  உள்ளே இருக்கும் தண்ணீர் எல்லாம் ஐஸ் கட்டியாகி, சள்ன்னு இருந்துச்சு. ரசம் வைக்கத்தான் லாயக்கு என்பதால்  தினமும்  ரசமோ ரசம்தான் அந்த வருசம்:-)

அதுக்கப்புறம் வந்த குளிர் காலங்களில்  தக்காளி டின்கள் வாங்க ஆரம்பிச்சு  ரெண்டு மாசத்துக்கு முன்வரை டின் தக்காளிகள்தான்.

திடீர்னு 'தக்காளி மழை' பொழிய ஆரம்பிச்சதும் என்ன செய்யறதுன்னு தெரியாம ஒரு நிமிட் முழிச்ச நான் சுதாரிச்சுக்கிட்டேன். அதான் அந்த சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து  ஐடியா.

நம்ம சமையல்களில் ஏறக்கொறைய 85% தக்காளி வெங்காயம் சேர்த்துத்தானே செய்யறோம்.  அதையே கொஞ்சம் ஃப்ரீஸர் டெக்னிக் படி செஞ்சு பார்க்கலாமேன்னு  முதல் தவணையா ஒரு  கிலோ அளவு தக்காளியையும், முக்கால் கிலோ வெங்காயத்தையும் எடுத்து வச்சுக்கிட்டேன். ரெண்டையும் பொடியா அரிஞ்சுட்டு, பெரிய வாணலியில் எண்ணெய் ஒரு அரை கப்  ஊத்திக் காயவச்சு முதலில் வெங்காயத்தைப் போட்டு  வதக்கினேன். நிறம் மாறிவந்தப்ப, தக்காளியையும் சேர்த்து தக்காளி சட்னி பதத்துக்கு  வதக்கி எடுத்துட்டு ஆறுனதும் ஐஸ் க்யூப் ட்ரேயில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுட்டேன். மறுநாள் எல்லாம்  கெட்டிப்பட்டு  தக்காளி க்யூபா இருந்துச்சு.

அதை ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு  ஃப்ரீஸரில் வச்சுட்டேன். குழம்பு , கூட்டு வகைகள் செய்யும்போது  தேவைக்கேத்தபடி  நாலோ அஞ்சோ க்யூப்ஸ்  குழம்பு வகையறாக்கள் கொதிக்கும் போது  போட்டுப் பார்த்தேன். சூப்பர்! ஏற்கெனவே வதக்குனதில் பச்சை வாசனை எல்லாம் போய் அட்டகாசமா இருக்கு!

அடுத்த பரிசோதனையா  இட்லி தோசை வகைகளுக்குச் சட்னி (தக்காளிச்சட்னிதான்) அரைக்கும்போது வெறும் காய்ஞ்ச மிளகாய், பெருங்காயத்தை வறுத்துக்கிட்டு  நாலைஞ்சு  க்யூபும்,  ஒரு புளிக்யூபுமா  சேர்த்து அரைச்சதில்  ருசியிலொரு வித்தியாசமும் இல்லை என்றதோடு  வேலை நேரமும் மிச்சமாச்சு.

புளிக்யூப் பற்றித் தெரியாதவர்கள்  நம்ம டிப்ஸ் பதிவுகளில் பார்த்து உய்யலாம் :-)

நேரடியா வாணலியில் செய்யாமல், ரைஸ் குக்கரில் ஒருநாள்  செஞ்சு பார்த்தேன். எல்லாம்  அப்பப்பக் கிளறிவிடச் சோம்பல் பட்டுக்கிட்டுதான்.  இதுலேயும் லேசா அடிப்பிடிக்க ஆரம்பிச்சது. ஹீட் செட்டிங் ஒன்னே ஒன்னுதானே. சூட்டைக் குறைக்க முடியலையே...   மேலும் தளக் புளக்குன்னு  கொதிச்சு மூடியெல்லாம்  தெறிச்சு, குக்கரின் சுற்றுப்புறம் சமையல் மேடையெல்லாம் ..... தெறிச்சு விழுந்து இதைச் சுத்தம் பண்ணுவதே இன்னொரு எக்ஸ்ட்ரா வேலையாப் போயிருச்சு. மடியன் மலை ச்சுமக்கும்னு சும்மாவா பழமொழி வந்துருக்கும்?  மடியன் = சோம்பேறி. மலையாளச் சொல்.


ஒரு ரெண்டரை வாரத்துக்கு முன்னால் (ஃபிப் 28) இப்படித்தான் அறுவடை செஞ்சுட்டார் நம்மவர். மறுநாள்  ஒரு பயணம் கிட்டத்தட்ட ரெண்டு வாரம் போற திட்டத்தில் இருக்கேன்.  சட்புட்டுன்னு  தக்காளி  க்யூப் செஞ்சு  ஐஸ் க்யூப் ட்ரேயில் போட்டு அதையே ஒரு ஸிப்லாக் பைக்குள்   வச்சு ஃப்ரீஸரில்  விட்டுட்டுப்போனேன்.
ஊரில் இருந்து திரும்பி வந்து,  ( மார்ச் 12)  க்ரீன் ஹௌஸைப் பார்த்தால் ஏகத்துக்கும் வாடிக்கிடக்கும் செடிகளும்  செடி நிறைய தக்காளிகளுமா இருக்கு !
இந்தமுறையும் அதே வைத்தியம்தான்.  கொஞ்சம் கறிவேப்பிலையும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காப் போட்டேன்.  மறக்காமல்   படங்கள் எடுத்து வச்சேன் :-)

ஸிப் பேகில் இருக்கும் காற்றை வெளியில் எடுக்க ஒரு பம்ப் கைவசம் இருக்கு.  Vacuum pack  என்றால் இன்னும் நீண்டநாட்களுக்குக் கெடாமல் இருக்கும்!

பாருங்க.... உங்களில் ஒரு சிலருக்காவது இந்த  'மருந்து' பலன் தரலாம் :-)

PINகுறிப்பு : 

 1.   இதைத் தயாரிக்கும்போது உப்பு ஏதும் சேர்க்கலை.  சமையல் செய்யும்போது  ஞாபகம் இல்லாமல் வழக்கமான அளவு உப்பை, நம்ம்  கை போட்டுருது. இதுலே உப்பு சேர்த்துருந்தால் ,  அதுலே  உப்பு கூடிப்போகும்.

2. ஊரில் இருந்து வந்துருந்த அண்ணி,   ஐடியா சூப்பர்னு  கவனிச்சுக்கிட்டுப் போயிருக்காங்க.

4 comments:

said...

ரொம்ப நல்ல ஐடியாதான். முதல்ல வெங்காயம் வதக்குன படங்களைப் பார்த்து முட்டைக்கோஸ் இங்க எங்க வந்ததுன்னு தோணித்து.

இதேபோல துவரம்பருப்பையும் நேரம் கிடைக்கும்போது வேகவைத்து ஃப்ரீசரில் வைத்தால், சட்டுனு சாத்துமது, சாம்பார் பண்ணமுடியுமோ? (அல்லது அது திருப்பியும் கட்டியாக பருப்பாயிடுமோ?)

என் மனசுல இதெல்லாம் தயார் பண்ணினது (வதக்குறது) கோபால் சார்னு தோணுதே (படத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்கலை).

said...

எலுமிச்சைச் சாற்றை இப்படிச் செய்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றி இருக்கிறது. செய்ததில்லை. இங்கும் தக்காளி வெங்காயம் சீப்பாகக் கிடைக்கும்போது செய்து வைத்து விடுவோம்.

said...

ஓ! நான் புளி பேஸ்ட் இப்படிச் செய்ததுண்டு. தக்காளி வெங்காயம் பேஸ் பேஸ்ட் அது போல சட்னி வகைகள் சிலது....இப்படிச் செய்து வைத்ததுண்டு துளசிக்கா...க்ரேவி செய்யும் போது இதை எல்லாம் வேணுங்கற அளவு போட்டா பொதும்....இப்படிக் கொத்தமல்லி, புதினா கூட...செய்து வைக்கப் பையனுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கேன்...சூப்பர் அக்கா...

கீதா

said...

நானும் குறித்துக் கொள்கிறேன். நல்ல இடியாவா இருக்கு.