Thursday, March 16, 2017

இஞ்சிப் பச்சடி... தொட்டு நக்கடி :-)

இப்படி ஒரு பழமொழியைக் கேட்டுருக்கீங்களா?

வருசத்துக்கான இஞ்சியை, குளிர்காலம் வருமுன் வாங்கி சேமிச்சு வச்சுக்கணும். முக்கியமா கடையில் ஸேல் (ஆஃபர்) வருதான்னு  கவனிச்சுக்கிட்டே இருக்கணும். குளிர்காலம் வந்துட்டால்..... கிலோ பதினைஞ்சு டாலர் வரை விலை ஏறிடும்.

கண்ணு நட்டுக்கிட்டே இருந்தவ, காய்கறிக்கடையில்  ஸேல் வந்துருக்குன்னு பார்த்துட்டுப் பாய்ஞ்சு போய் வாங்கி வந்தேன். எனக்கு முன்னால் நின்ற  சீனர், இஞ்சித் துண்டுகளைக் கவனிச்சு ஓரத்தில் வங்கரபங்கரன்னு நீட்டிக்கிட்டு இருந்ததையெல்லாம் ஒடைச்சுப் போட்டுட்டு நல்ல மழமழப்பான பாகங்களைமட்டும்  பையில் போட்டுக்கிட்டு இருந்தார்.  நம்மூர் கடைகளில் இப்படிச் செஞ்சா, கையை ஒடைச்சுருப்பாங்க......  இங்கே..........   அவரவரருக்கு அவர் மனம் சொன்னபடி.....

ரொம்ப நியாயவாதியான நான் வாங்கி வந்தது இப்படி :-)
கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது ( ஆங்.... கிடைச்சுட்டாலும்.............. நாமே கொஞ்சம் நேரத்தை இதுக்கு ஒதுக்கினால் தான் உண்டு...)  கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டு, மேல் தோலை சுரண்டி, தேவையான இடத்தில் தோலைச்சீவின்னு  ஆச்சு.
'கொஞ்சங்கா... அல்லம் பச்சடி ச்சேஸி  சூஸ்த்தாமா?'  தோணல்தான்.

நம்மவருக்கு  கேரள ஸ்டைல் புளி இஞ்சி பிடிக்கும்.  பேசாம கேரள அல்லம் பச்சடி துள்ஸி ஸ்டைலா செஞ்சால் என்ன ஆகப்போகுது?

தேவையான பொருட்கள்:

இஞ்சி  200  கிராம்   நம்மகிட்டே கிச்சன் ஸ்கேல் இருக்கு :-)

உப்பு   ஒன்னரை டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி   முக்கால் டீஸ்பூன். ( இது வெரிஹாட் ச்சில்லீ பவுடர்)

மஞ்சள் பொடி  அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்

கடுகு  முக்கால் டீஸ்பூன்

சாஃப்ட் ப்ரௌன் ஷுகர்  கால் கப்.  இது இல்லைன்னா வெல்லம் போட்டுக்கலாம்.

எண்ணெய்  கால் கப்.

அல்லம்பச்சடி செய்யணுமுன்னா நல்லெண்ணெய்
கேரளா புளி இஞ்சி செஞ்சுக்கலாமுன்னா வெளிச்செண்ணெய். (தேங்காய் எண்ணெய்தான்)

பச்சை மிளகாய்  ஒரு  அஞ்சு.

கறிவேப்பிலை   மூணு இணுக்கு.  கழுவிட்டு இலைகளை உருவி வச்சுக்கணும்.

புளிக் கரைச்சல்  ஒரு அஞ்சு  டேபிள் ஸ்பூன். கெட்டிக் கரைசலா இருக்கட்டும். நான் அஞ்சு புளி க்யூப் சேர்த்தேன்:-)

செய்முறை:

மிக்ஸியில் சட்னி ஜார் பொருத்திக்குங்க.

தோல்  சுரண்டிச் சீவிய இஞ்சியை துண்டுகளா நறுக்கிக்கணும். அப்பதான் சீக்கிரம் அரைபடும். இதை அரைக்கும்போதே... பச்சைமிளகாய் & கறிவேப்பிலையைச் சேர்த்து அரைச்சுக்கலாம். தண்ணி சேர்க்காம அரைச்சுருங்க. கொரகொரன்னு இருந்தால் போதும்.

அடுப்பைப் பத்த வச்சு  வாணலியை அதன் தலை மேல் வச்சுட்டுக் கொஞ்சம் சூடானதும்  தேங்காய் எண்ணெயை  அதில் ஊத்துங்க. நல்ல சூடு வந்ததும் கடுகை சேர்த்து, கடுகு படபடன்னு வெடிச்சதும், அரைச்சு வச்ச  இஞ்சி விழுது சேர்த்து கூடவே உப்பையும் போட்டு வதக்குங்க.

அடுப்பு மிதமா எரியட்டும்.  நல்லா வதங்கணும். அடிபிடிச்சுடாம அப்பப்பக் கிளறிக்கிட்டே இருக்கணும். நல்லா வதங்கி வாசம் வந்ததும், நடுவிலே கரண்டியால் சின்னக்குழி பறிச்சு (!) இன்னொரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு  அதுலே பெருங்காயத்தூள், மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி  சேர்த்து அதை மட்டும் ஒரு நிமிட் கிளறிக்கொடுத்துட்டு, கடாயிலிருக்கும்  மற்ற  எல்லா சமாச்சாரத்துடன் சேர்த்துக் கிளறலாம்.

அடுத்து  சேர்க்கறோம்....  புளிக்கரைசலை. தளதளன்னு கொதிச்சு கெட்டிப்பட்டதும் ப்ரவுண் சக்கரையை சேர்த்து நாலு கிளறு கிளறி இறக்கினால் ஆச்சு.
நல்லா ஆறவிட்டு ஒரு  ஜாடியிலோ பாத்திரத்திலோ எடுத்து வச்சுக்கலாம். சாப்பாட்டு சமயத்தில் ஊறுகாய்க்குப் பதிலா தொட்டுக்கலாம். அப்புறம் இருக்கவே இருக்கு இட்லி, தோசை வகைகள். எல்லாத்துக்கும் சரியாகும்.
சோதனை எலியிடம்  கொஞ்சூண்டு கொடுத்து தின்னு பார்க்கச் சொன்னேன்.

"அருமையா இருக்கு. இது என்ன?  "

" அட ராமா.... இஞ்சி வாசனை அறவே இல்லையா? "

"   இருக்கே!   ஆமாம், இது இஞ்சிச்   சட்னியா? "

 " ஙே........... "
PINகுறிப்பு : சமைக்கும்போது படம் எடுக்கலை.  அடிபிடிக்க விடாம கிளறிக்கிட்டு இருந்தேனோல்யோ? அதனால்  பாத்திரத்துலே எடுத்து வச்சபிறகு எடுத்த படங்கள் இவை.

 பார்க்க  கலர்ஃபுல்லா இல்லை என்பதால் ........   சொக்கட்டானை உருட்டி விட்டேன்:-)


11 comments:

said...

நல்லாத்தான் இருக்கும். இருக்கிற குளிர்ல நீங்க எங்க ஊறுகாய், இஞ்சிப் புளிலாம் சாப்பிடப்போறீங்க? தோசைக்கோ சப்பாத்திக்கோ தொட்டுக்கொண்டால்தான் உண்டு.

சொக்கட்டான் இல்லாம படம் இன்னும் நல்லாவே இருந்திருக்கும்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நம்ம வீட்டில் ஒரு ஊறுகாய் ப்ரேமி இருக்காரே! அவருக்காகத்தான் இதெல்லாம் பண்ணியாறது :-)

நேத்திக்கு இட்லிக்கு இதுதான் துணை. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சட்னி பதத்துக்குக் கொண்டுவந்துட்டேன்....

சொக்கட்டான் இல்லாம எடுத்தது கொஞ்சம் போரடிச்சது எனக்கு !

said...

இஞ்சி சட்னி அற்புதம். பார்க்கும்போதே சாப்பிட அழைக்கிறது.

Note: Didn't expected your post on Thursday, hehehe;

said...

நானும் என்னடா இது இஞ்சித் தொவையல் மேல என்னவோ இருக்கேன்னு பாத்தேன். ஒருவேள கேலரி மீட்டர், டெம்பரேச்சர் பாக்குறது, அப்படி இப்பிடின்னு எதாச்சும் டெக்னிகலா இருக்குமோன்னு நெனச்சேன். :)

இஞ்சி நல்ல இஞ்சின்னு படத்தைப் பாத்தாலே தெரியுது. பச்சடியும் தான். :)

said...

எனது இன்னொரு தளத்தில் இஞ்சிப் புளி செய்முறையை எழுதி இருக்கிறேன் கேரள சத்திகளில் இது ஒரு மஸ்ட் ஆனால் எனக்குப் பிடிக்காது

said...

சொக்கட்டான் உருட்டியாச்சு! :)

இஞ்சி நல்லாவே இருக்கு சுவை!

இம்முறை ஊருக்குச் செல்லும் போது மாங்காய் இஞ்சி வாங்கி வரணும்!

said...

வாங்க விஸ்வநாத்.

அப்பப்ப ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கக்கூடாதா நான்? :-)

இந்த வாரம் இன்னொரு அதிர்ச்சி வரப்போகுது...

said...

வாங்க ஜிரா.

நல்ல இஞ்சிதான். வருசத்துக்கு வரணுமே :-)

பச்சடி நல்லாவே இருக்குன்னார் கோபால்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஓணசத்ய இஞ்சிப்புளி இல்லாமலா!!!!

இங்கே வருசாவருசம் விழாவுக்கு இஞ்சிப்புளி செய்வது கடந்த 12 வருசமா ஒருவரே!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா... மாங்காய் இஞ்சி எனக்கும் பிடிக்கும். ஃபிஜி இந்தியன் கடையில் எப்பவாவது கிடைக்கும். பார்த்தால் வாங்கி வந்து செஞ்சுக்கலாம்.

said...

ஆஹா புளி இஞ்சி!! நம்ம கேரளத்து டிஷ்...அடிக்கடி செய்வதுண்டு...அதுபோல அல்லம் பச்சடியும் ....

மாஇஞ்சி தொக்கும் நல்லாருக்கும் நீங்க செஞ்சுருப்பீங்களே..அதையும் இப்படிச் செய்யலாம்...

கீதா