Monday, March 20, 2017

மடாலயத்தில் பிஞ்சுகள்......( நேபாள் பயணப்பதிவு 18 )

அடுத்த இருவது நிமிசப் பயணத்தில்  ஒரு புத்தமடம்.  அழகான தோட்டத்துக்குள்  சின்ன  குளத்துக்கு நடுவில் தாமரையில் நிற்கும் புத்தர்.  அவருக்குப் பின்னால் ஒரு மேடை அமைப்பில் அமர்ந்த நிலை புத்தர்.   அவருக்கு ரெண்டு பக்கமும்  இன்னும் இருவர்.  யாராக இருக்கும்?  மடத்தை ஸ்தாபிச்சவராக இருக்கலாம். இல்லைன்னா  புத்த குருக்களாக இருக்குமோ? இவர்களை வலம்  வரும்போதே கோடிகளைச் சேர்த்துக்கும் வகையில் ப்ரார்த்தனைச் சக்கரங்கள்!  ஓம் மணி பத்மே ஹூம்.......



புத்தர் கோவில்ன்னதும்.... முந்தியெல்லாம் 'புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி' ன்னு சொல்லும் மந்திரம்தான்  மனசிலும்  நாவிலும் வந்துக்கிட்டு இருந்தது எல்லாம் போய்  இப்பெல்லாம் 'ஓம் மணி பத்மே ஹூம்' வருதே!  இது பௌத்தர்களின் ஆறெழுத்து மந்திரம்!   நமக்கும் சொல்ல சுலபமாப் போச்சு, இல்லையோ!







ரொம்பவே அழகான, பசுமையான தோட்டம். இந்த மடத்துக்குப் பெயர் Matepani Gumba. திபேத்திய புத்தமதத்தினர்களுக்கானது. ஒரு சின்னக்குன்றின் மேல் கட்டி விட்டுருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா  சரிவுப்பாதையில் ஏறிப் போறோம்.  பாதியில் அங்கங்கே நாலைஞ்சு படிகள். அப்புறம் நடை , மறுபடியும் படிகள் இப்படியே போய் ஒரு பெரிய கட்டடத்துக்குள் வந்துருக்கோம்.
அட்டகாசமான வேலைப்பாட்டுடன் ரெண்டடுக்குகளா நிக்குது.  ஏகப்பட்ட புத்த பிக்ஷுக்கள் இங்கே இருக்காங்க. சுமார் தொன்னூறு பேராம்!  கட்டிடத்தைச் சுத்திக்கிட்டுப் பக்கவாட்டில் போனால்  குட்டி பிக்ஷுக்களுக்கு  ரீஸெஸ் டைம். வரிசையா உக்கார்ந்து  எவர்சில்வர்  மக்கில் ஸ்ட்ரா போட்டு என்னமோ குடிச்சுக்கிட்டு இருக்காங்க.  லெமன் ஜூஸா இருக்கலாம். நல்ல வெயில் பாருங்க....
கொஞ்சம்  பெரிய பிக்ஷுக்கள் (14, 15 வயசு இருக்கலாம்) களிமண்ணில் கலைப்பொருட்கள் செஞ்சு ஆசிரியர் பிக்ஷுகிட்டே காமிச்சுக்கிட்டு இருக்காங்க. ஆசிரியர் அதுலே சிலதிருத்தங்கள் செஞ்சுட்டுத் திருப்பிக் கொடுக்கறார்.

பள்ளிக்கூடக் கட்டிடங்கள் போலவே அந்தாண்டை இருக்கு. குன்றின் முகட்டில் இருந்து பார்க்கும்போது   பொகரா  நகரை முக்கால்வாசி பார்த்துடலாம்.  கீழே அதலபாதாளம். பாதுகாப்புக்குக் கம்பிவலைத் தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.  வண்ண வண்ணக்கொடிகள் இந்த இடத்துக்கு இன்னும் அழகு சேர்க்குது!

ரொம்பப்பழைய மடாலயம் எல்லாம் இல்லையாக்கும். 1960 ஆண்டு  Manang community கட்டி விட்டதுதான். இங்கே  பெரிய பிக்ஷுகளுக்கும் வகுப்பு  நடக்குது. திபேத்தியன், இங்லீஷ், நேபாளி,  என்ற மொழிகளையும், கூடவே  கணக்கும்  கத்துக்க  நேபாளின் பலபகுதிகளில் இருந்து  வர்றாங்களாம்.  பொதுவா புத்தமதம், அதன் தர்மம், அதுக்குண்டான  வழிபாட்டு முறைகள் இன்னபிற சமாச்சாரங்களையும் இங்கே தங்கி இருந்து படிச்சுட்டுப்போறாங்க. ட்ரெய்னிங்ப்பா!

வெள்ளைக்காரப் பயணிகள்  இங்கே வந்து தங்கி, பிக்ஷுக்களுக்கு இங்லிஷ் சொல்லிக் கொடுப்பதும் நடக்குது!  சுற்றுலாப்பயணிகள் வருகை எப்பவுமே இருக்காம். நாம் போன நாளில்  அப்படி யாரையும் பார்க்கலை!
கோவிலுக்குள்ளே போனோம்.  ஒரு புத்தபிக்ஷுதான் கூட்டிட்டுப்போய் காமிச்சார். நிறைய புத்தர் கோவில்களைச் சிலபல நாடுகளில் பார்த்த காரணத்தால் புதுமையா  ஒன்னும் புலப்படலை.  நேபாள் இந்து நாடுன்னு சொல்லிக்கிட்டாலும் இங்கே 81 சதமான மக்கள்தான் இந்துக்கள்.  மீதம்  உள்ளவர்களில் பெரும்பான்மை புத்த மதம் சார்ந்தவர்கள்.  திபெத்தை, சீனர்  தமதாக்கின பின்னே  இருபதாயிரம் திபேத்திய அகதிகளுக்கு இங்கே புகலிடம் கொடுத்துருக்காங்களாம்.

இந்துக்கோவில்களில் புத்தர் சிலைகளையும் வச்சு பூஜிக்கறாங்க. தசாவதாரத்துலே  ஐ மீன்....  மஹாவிஷ்ணுவின் தசாவதாரத்துலே புத்தரும் ஒரு அவதாரமுன்னு சொல்றவங்களும் இருக்காங்கதான்!  தசாவதாரம் பத்து   ன்னு கணக்கில் இல்லாம ஏகப்பட்ட அவதாரங்களை  எம்பெருமான் எடுத்துருக்கார் என்பதால் அதுலே புத்தர் அவதாரமும்  உண்டுன்னு  சிலர் சொல்றாங்க.   இதுவரை இருபத்தியொன்பது புத்தர்கள்   வந்தாச்       என்பதும் மனசுக்குள் வந்து போச்சு :-)

நம்மூர் வேதபாடசாலைகள் மாதிரிதான் இங்கேயும் பிஞ்சுகளை  மடத்துக்கு அனுப்பிடறாங்க பெற்றோர். குடும்பத்துலே இத்தனாவது பிள்ளை சாமிக்குன்னு எதேனும் கணக்கு இருக்குதோ?

ச்சும்மா சொல்லக்கூடாது....  ரொம்பவே கலர்ஃபுல்லா  இருக்கு இந்தக்  கட்டடம் என்பதை ஒத்துக்கணும்!  தோட்டம் பிரமாதம்!

இந்த மடத்துக்குப் பக்கத்துலேயே கொஞ்ச தூரத்தில் ஒரு பத்ரகாளி கோவில் இருக்குன்னதும் அங்கேயும் போயிட்டுப் போயிடலாமேன்னு சொன்னேன். ரெண்டே நிமிசம் சவாரி.  கோவிலின் முகப்பு வாசல்  பார்த்துட்டு  வண்டியில் இருந்து    கீழே இறங்கினால்.....   அலங்கார வாசலில் ஒரு பக்கம்  புள்ளையாரும், அடுத்தபக்கம் தேவியுமா  இருந்து அருள் பாலிக்கறாங்க!   இதுவே போதும்...  கோவிலுக்குப் போக வேணாமுன்னு சொன்னேன்..

ஏனாம்?  ஐயோ.... மேலேறிப்போகும் படிகளைப் பாருங்க..............   இத்தனை படிகளா?  ஊஹூம்.....   கொஞ்சம் படிகளுக்கந்தாண்டை இருக்கும் பைரவரிடம்,  சாமிக்கு சேதி அனுப்பி  வச்சேன். "தாயே.... மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லு..........  கால் முட்டி நிலை உனக்குத் தெரியாதா........."
பகல் ரெண்டரை ஆகுது. எங்கியாவது சாப்பிடப் போகலாமுன்னு நம்மவர் சொன்னார். நமக்குப் பசி இல்லைன்னாலும் துர்காவும் டிரைவரும் இருக்காங்களே...  அடுத்து நாம் போகும் இடத்துலேயே போய் சாப்பிடலாமுன்னு  கூட்டிப்போனார் துர்கா!

சின்ன ரெஸ்ட்டாரண்ட் தான்.  வாங்க சாப்பிட்டு முடிச்சுட்டு ஒரு  சுவாரசியமான இடத்துக்குப் போகலாம் !!!

தொடரும்........... :-)


16 comments:

said...

அழகிய படங்கள். மடாலயத்தில் பிஞ்சுகள் பார்க்கும்போதே ஏனோ பாவமாக இருக்கும்.

ஸ்வாரஸ்யமான இடம் என்ன என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

said...

படங்களுடன் கோவில் விவரங்களை ரசித்தேன்.. மதம் சம்பந்தமாகப் படிப்பதும் கலாச்சாரத்தின் அங்கம்தானே.

said...

அருமை நன்றி.

said...

பசுமையான மடாலயம்..

said...

அழகிய இடம். எங்கும் புத்தர் கோவில் பார்த்ததில்லை. பைரவர் அழகாக ரெஸ்ட் எடுக்கிறார்.

said...

வலது கையை உயர்த்திய நிலையில் உள்ள புத்தரை தங்கள் பதிவு மூலமாகத்தான் முதன்முதலாகப் பார்த்தேன். அமர்ந்த தியான கோலம், பூமியைத் தொட்ட கோலம், கிடந்த கோலம், நின்ற நிலையில் அபய மற்றும் வரத முத்திரையுடன் பார்த்திருக்கிறேன். புத்தகயா சென்றபோது வித்தியாசமான நிலைகளில் புத்தர்களை பார்த்துள்ளேன், அவற்றில் பெரும்பாலானவை பூமியைத் தொட்ட கோலமே.

said...

படிகளில் ஏற முடியாமல் போனாலும் எங்களை உடன் அழைத்துக்கொண்டே போகிறீர்கள்...நன்றி!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

said...

அதுவே ஒரு விஷ்ணுபகவானின் திவயதேசக் கோவிலாயிருந்தால் கால் வலியும் பாராமல் போயிருப்பீர்கள் அல்லவா

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்கும் பாவமாத்தான் இருக்கு. வளர்ந்தபிறகு மடாலயத்தில் சேர விரும்பமாட்டாங்க என்பதால் இப்படிப் பிஞ்சுகளைக் கொண்டு வந்து சேர்த்துடறாங்க போல..... ப்ச்....

தனக்கு வேண்டியதைத் தானே தேர்ந்தெடுக்கத் தெரியாத வயசு.....

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆமாம். ரிலிஜியஸ் ஸ்டடீஸ்.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கண்களுக்கு விருந்து !

said...

வாங்க ஸ்ரீராம்.

புத்தக்கோவில் பார்த்ததில்லையா!!!! இங்கே எங்க ஊரில் கூட ரெண்டு கோவில்கள் இருக்கு!

ஒரு பயணம் தாய்லாந்து போனால் போதும். போதும் என்றவரைக்கும் பார்க்கலாம்:-)

பைரவர்தான் அந்த இடத்துக்கு அத்தாரிட்டி!!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இப்படிக் கையை உயர்த்தி நிற்பது அரசியல்வியாதிகளின் போஸ் இல்லையோ!!!!

said...

வாங்க இராய செல்லப்பா.

அப்பப்ப கால்முட்டி வலி, தானிருக்கேன்னு ஞாபகப்படுத்திருது :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மை. திவ்யதேசக்கோவிலாக இருந்துருந்தால் கட்டாயம் படி ஏறிப்போய்த்தான் இருப்பேன். இல்லைன்னா எப்படி நூத்தியெட்டை பூர்த்தி செய்வது, சொல்லுங்க :-)