Friday, March 31, 2017

143 ன்னா....... ஐ லவ் யூ தானே? சாங்கோனா.....( நேபாள் பயணப்பதிவு 23 )

கோபாலுக்கு 'நேபாளில்' பொறந்தநாள் இன்றைக்கு :-) காலையில்  கண் முழிச்சதும்  வாழ்த்துகளைச் சொல்லிட்டு  முக்கிய கடமைகளான  'மெயில்பாக்ஸ்' வேலைகளை முடிச்சோம். இங்கே லெமன்ட்ரீயில் 'வைஃபை' நல்லாவே இருக்கு.

ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குக் கீழேபோய் நமக்கு வேண்டியவைகளை மார்க் பண்ணிக் கொடுக்கும்போதே   லெமன்ட்ரீ  ஓனர் ப்ரகாஷ் வந்துட்டார். நம்ம காலை ஆகாரம் ரெடியாகும்வரை  வெளியே  முற்றத்தில் இருந்து பேசிக்கிட்டு இருந்தோம். அப்பதான் கோவிந்தன் நம்பூதிரியை சந்தித்தோம்.  கொறே சம்சாரிச்சு. மும்பையில் வசிக்கும்  கேரளர். நம்முடைய பயணத்திட்டங்களைக் கேட்டவர், நாம் போகும் முக்கிய இடங்கள் இரண்டில் லகுவான தரிசனத்துக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய  நபரையும் ஃபோன் நம்பரையும் கொடுத்தார்.  உறவினர்களாம். அதிலும் ஒருவர் மைத்துனர். நமக்கு பெருமாளின் மைத்துனர்தான் சிபாரிசு என்றாலும்  'தெய்வம் மனுஷ்ய ரூபேணே' என்பதால்  குறிச்சு வச்சுக்கிட்டோம்.
சரியா ஒன்பதுக்கு வந்து சேர்ந்தார் பவன்.  இன்றைக்கும் நாளைக்கும் நமக்கான கைடு. இங்கே நேபாளில்  கைடுகளுக்கான விதிமுறைகள் நிறைய இருக்கு. அதில் ஒன்னு  நகரங்களில் கைடுவேலை பார்ப்பவர்களுக்கும்,  மலைப்பகுதிகளில் கைடா இருப்பவர்களுக்கும்  தனித்தனி லைசன்ஸ்.  அவரவர் அவரவருடைய பிரிவுகளில் மட்டுமே வேலை செய்யணும்.

அதனால்தான் நமக்கு முக்திநாத்  போய்வர துர்காவும்,  உள்ளுர் காத்மாண்டுவில் சுத்திப் பார்க்க பவனுமா ஏற்பாடு செஞ்சுருக்கார் நம்ம ப்ரகாஷ்.  இந்தப் பவனும் ப்ரகாஷும் சுற்றுலா படிப்பில்  ஒரே பேட்ச். வகுப்புத்தோழர்களாம்.

ஏற்கெனவே ப்ரகாஷ்  நம்மை எங்கெங்கு கூட்டிப்போகணுமுன்னு  பவனிடம் சொல்லி இருந்தாலும், இப்ப நம் முன்னால் மறுபடி எங்கெங்கே போகணுமுன்னு கேட்டுக்கிட்டுத் திட்டத்தை அங்கங்கே கொஞ்சம் மாத்திக் கொடுத்தார். நானும் வலையில் பார்த்து  சில இடங்களைக் கட்டாயம் பார்க்கணுமுன்னு குறிச்சு வச்சுருந்தேன்.

சரின்னு நாங்க நாலுபேரும் கிளம்பினோம். நாங்க ரெண்டு பேர், பவன் & ட்ரைவர் தீபக்.  'சாங்கா' என்ற இடத்துக்கு முதலில் போறோமாம்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரப்பயணம். போறவழியில் முக்கியமான கட்டடமா  ஒன்னு  இருக்கு.
ஷிமா தர்பார்னு பெயராம்.  மன்னராட்சி காலத்தில்  கேபினட் ஹௌஸ். இப்ப அது அரசாங்க அலுவலகங்களுக்குன்னு  ஆகி இருக்கு. இதுக்குள்ளேதான் ரேடியோ, டிவி ஸ்டேஷன்கள் எல்லாம் இருக்காம். இந்த விவரங்களை அப்போ சரியாக் கேட்டுக்கலை. இப்ப இதை எழுதும்போதுதான் ஞாபகம் வந்துச்சு. பவனிடம் என்ன ஏதுன்னு விவரம் ஃபேஸ்புக் இன்பாக்ஸ்லே கேட்டுக்கிட்டேன். இப்பப் புரிஞ்சுருக்குமே   நம்ம துர்காவைப்போல் பவனும் நம்மகூட தொடர்பில்தான் இருக்காருன்னு :-)
வண்டியில் போய்க்கிட்டு இருந்தப்பவே தூரக்க எதோ உயரமான சிலை போல ஒன்னு தெரிஞ்சது. என்னன்னு பவனிடம் கேட்டதுக்கு,  இப்ப நாம் அங்கேதான் போறோமுன்னார்.  கைலாஷ்நாத் மஹாதேவ், ஒரு குன்றின்மேல் நின்னுக்கிட்டு இருக்கார்.
நல்லவேளையா  மலைக்குமேலே கார் போகும் வழி இருக்கு. நாம் போய் நின்னது ஒரு ரிஸார்ட் வாசலில். இங்கே ஹெல்த் க்ளப் ஒன்னு இருக்காம். விசேஷம்தான் போல ! அதுக்குள்ளே நுழைஞ்சுதான் அந்தாண்டை போறோம். உள்ளே போக ஆளுக்கு 100 ரூ டிக்கெட்.  இதைத் திருப்பி வாங்கிக்க நாம்  இன்னும் அதிகமா செலவு செய்யணும்! ஹெல்த் க்ளப் ஸ்பா, ரெஸ்ட்டாரண்ட் இதுலே போய் நாம் செலவழிச்சா இந்த நூறை கழிச்சுக்குவாங்க :-)சின்ன மீனைப் போட்டு......
சூரிய ஒளியில் தகதகன்னு  மின்னும் செப்புச்சிலை. 143 அடி உயரம். உலகிலேயே     இவ்ளோ உயரம்  இருக்கும் இந்துக் கடவுள்  இவர் மட்டும்தானாம் இதுவரை!

 இடையில்   புலித்தோலும் விரித்த சடையும் கழுத்தில் சுத்தியிருக்கும் படமெடுக்கும் பாம்பும், கையில் பிடிச்சுருக்கும் த்ரிசூலமுமா.............  ஹைய்யோ   எத்தனை கம்பீரம்! என்னவொரு சாந்தமான முகம்!









அவருக்கு எதிரா, ஒரு பக்கம்  அவர் குடும்பம் மலைமீது உக்கார்ந்து பார்த்துக்கிட்டு இருக்கு!  மனைவியும் ரெண்டு மகன்களும்!  இளையவரின் வாகனத்தைக் காணோம். பறந்து போயிருச்சோ?  ஆனால்  மூத்தவரின்  வாகனம்... கொழுக்கட்டையை உருட்டியபடி :-)  இன்னொரு பக்கம் நந்தி !  எல்லோரும் செப்புச்சிலைகளாவே இருக்காங்க.

சிவனின்  காலடிக்கருகில் சின்னதா ஒரு கோவில். சந்நிதின்னு சொல்லலாம். உள்ளே யாருன்னு எட்டிப் பார்த்தால்  நம்ம பஷுபதிநாத்! ஆனால் நாலு முகங்கள்தான்னு நினைக்கிறேன். ஒருவேளை மேலே போட்டுருக்கும் வெள்ளிக்கவசத் 'தொப்பி'க்குள்  அஞ்சாவது  முகம் இருக்கோ? கவசத்துக்கு மேல்  அஞ்சாறு அடுக்குகளா ருத்திராட்ச சரங்களைச் சுருட்டி வச்சுருக்காங்க. ஆவுடையாரின் மேல்  அமர்ந்துள்ள பஷுபதிநாத்துக்கு நாகம் குடைபிடிக்க,   மேலே கயிறுகட்டித் தூக்கி இருக்கும் ஒரு பாத்திரத்தில் இருந்து  அபிஷேகதாரை சொட்டுச் சொட்டா இறங்கிக்கிட்டு இருக்கு.
சந்நிதியின் பின்புலத்தில்(உள்புறம் இருக்கும் சுவர் )பிள்ளையார், துர்கா மா, ஆஞ்சநேயர் பளிங்குச்சிற்பங்களா இருக்காங்க.


கதவின் மேல்பகுதி திறந்திருக்க, கீழ்ப்பகுதியில்  ஒரு அரைக்கதவை மட்டும் திறந்து உள்ளே உக்கார்ந்திருக்கும்  பண்டிட், கொஞ்சம் முசுடாக இருந்தார்.  எட்டிப் பார்த்துக் கும்பிட்ட என்னைப் பார்த்துச் சின்ன உறுமலோடு, தக்ஷிணைக்காக வச்சுருக்கும் தட்டைத் தொட்டுக் காமிச்சார்.  இடும்பி உடனே போட்டுருவாளோ?  பேசாம இருந்தால் போட்டுருப்பாள்.  போடு என்ற அதிகாரத்தோரணை பார்த்துட்டு சும்மா இருந்துட்டாள்.    (ப்ச்.... போட்டுருக்கலாம். என்னமோ அப்போ தோணலை..... போட்டுருந்தால் கொஞ்சம் பூந்தி கிடைச்சுருக்கும். மிஸ்டு.....  )
அங்கிருந்து படிகள் கீழே குன்றின் அடிவாரத்துக்கு இறங்கிப்போகுது. நல்ல அகலமான படிகளை நடுவில் ரெண்டாப் பிரிப்பதைப்போல சரிவில்  பத்துப்பதினொரு படிகள் இடைவெளிவிட்டு, சின்ன மண்டபங்கள் வரிசை. ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு ஜ்யோதிர்லிங்கம் என்றபடி!  மொத்தம் பனிரெண்டு. அப்புறம் படிக்கு இந்தாண்டை புள்ளையார்.




இந்த மொத்த அமைப்பையும் செஞ்சுமுடிக்க சுமார் ஏழு வருசங்கள் ஆகி இருக்கு. 2004 ஆம் ஆண்டு பணி துவக்கம். 2010 ஆம் ஆண்டு பணி நிறைவு.  திரு தன்ராஜ் ஜெய்ன் (பன்ஸாலி)திருமதி கேஷர் தேவி ஜெய்ன் மற்றும் குடும்பத்தினரின் கைங்கர்யம்.
ஜெய்ன் குடும்பத்தினர் எப்படி சிவன்கோவில்னு ஒருவிநாடி நினைச்சது உண்மை. அப்புறம் பார்த்தால் சின்னச் சந்நிதி மண்டபங்களில் ஒரு பக்கம் தீர்த்தங்கரர் மஹாவீர் சிலையும், குரு  ஆச்சார்ய பிக்ஷு ஸ்வாமியின் சிலையும் நிறுவி இருக்காங்க.  சமணமதத்தின் ஒரு பிரிவான ஸ்வேதாம்பர் தேராபந்த் சங்கத்தை ஆரம்பிச்சவர் இவர்.  தீர்த்தங்கரர் மஹாவீரரின் நேரடி சிஷ்யரும் இவரே!   சமண மதத்தின்  இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் மஹாவீர்தான். (மஹாவீர் ஜயந்தின்னு  மத்திய அரசின் விடுமுறை தினம் நினைவில்  இருக்கோ? )ஸ்வேதாம்பர் சங்கம் ஆரம்பிச்ச சமயம், பதிமூணு முனிவர்களும், இவர்களைப் பின்பற்றும் பதிமூன்று ஆட்களும், பதிமூணு விதிமுறைகளும் இருந்ததாம். எல்லாம் பதிமூணு என்பதால் தேரா (ஹிந்தியில் பதிமூணு)என்பதும் சேர்ந்து தேராபந்த் ஆகி இருக்கு!

நல்லா சுத்தமாகப் பராமரிக்கிறாங்க இந்த  இடத்தை.  அலங்காரச் சிற்பங்களும், அழகாச் செடிகளும் புல்வெளிகளுமா  அமைச்சுருக்காங்க. ஹெல்த் ரிஸார்ட்டுக்கான சின்னச்சின்ன விளம்பரங்களும் அங்கங்கே!  ஸாண்ட் பாத்  இருக்காம்!

அங்கே ஒரு நினைவுப்பொருட்கள் விற்கும் கடையும் இருக்கு.    அதுலே  கம்பீரமாகவும் இடக்கையை ஒய்யாரமா இடுப்பில் வச்சபடி, முதுகில் பேக்பேக்கில் சிவலிங்கத்தை வச்சுக்கிட்டு    நிற்கும் சிலை அப்படியே என் மனசை இழுத்தது உண்மை. பளிங்குச்சிலைதான். கொஞ்சம் பெருசும் கூட.  வாங்கிப்போக சான்ஸே இல்லை........... ப்ச்....


அதே மாதிரி நின்னு போஸ் கொடுத்தாங்க கோபாலும் பவனும் :-)
பவன் அப்பப்ப நம்ம ஃபொட்டாக்ராஃபராகவும் டபுள் ட்யூட்டி செஞ்சார். என்னுடைய செல்ஃபோன் கேமெரா ரொம்பவே நல்லா இருக்குன்னு அவருக்கு ஒரு தோணல். க்ளிக்கட்டுமுன்னு அவரிடமே கொடுத்து வச்சுருந்தேன் :-) அங்கெ நில்லுங்க, இங்கெ நில்லுங்கன்னு அப்பப்ப டைரக்‌ஷன் வேற!
உலகத்தின் மிக உயரமான சிவனைக்  கண் நிறையும் வரை பார்த்துட்டுக் கிளம்பினோம். நம்ம பத்துமலை முருகன் கூட இவரை விட மூணடி  உயரம் குறைவாம். போகட்டும்.... அப்பனை மிஞ்சுவானா சுப்பன்?  அப்படி மிஞ்சினால் நல்லாவா இருக்கும்?  தந்தை என்ற பணிவு வேணாமோ?

தொடரும்.......  :-)



8 comments:

said...

கோபால் ஸாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

கைலாஷ்நாத் மஹாதேவ் என்ன உயரம்! அழகு.

கோவில் அமைந்திருக்கும் சுற்றுப்புறமும் அழகாக, ரம்யமாக இருக்கிறது.

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்தப் பதிவை(யே) போய்வந்த ஆறுமாசத்துக்குப்பின்னேதான் எழுதிக்கிட்டு இருக்கேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. அரை வருசம்தான் கூடி இருக்கு. அடுத்து வரும் பிறந்தநாளுக்கு அட்வான்ஸாக வச்சுக்கறேன்..

நன்றி.

said...

கைலாஷ்நாத் மஹாதேவ் ...அழகா இருக்கார்...ஆன அவர் முகம் எனக்கு என்னமோ குழந்தை முகம் மாதரியே தோணுது.. சாத்வீகம்..

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

உண்மைதான்.

சாந்தமானமுகம்னுதான் நானும் சொல்லி இருக்கேன் :-)

said...

சிவனைப் பகுதி பகுதியாகப் படம் பிடிச்சுப் போட்டது நல்ல ரசனை

said...

அற்புதமான புகைப்படங்களுடன்
விளக்கங்களும் படிக்க நேரடியாகப் பார்த்த'சுகம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

அடேங்கப்பா... எவ்வளவு பெரிய சிலை.

சிவனுக்கு சிலை வைக்கக்கூடாதுன்னு நம்மூர்ல சொல்ற விதியை நார்த்தீஸ் ஏத்துக்கிறதில்ல போல.

நானும் தட்சணைன்னு முசுடாக் கேட்டா போட மாட்டேன். போட்டிருந்தா நாலு பூந்தி கெடைச்சிருக்கும். ஆனா அந்தக் காசுக்கு வெளிய நிறையவே நல்லதா வாங்கலாம்.

சேண்டு பாத்தா? நம்மூர்ல குழந்தைகள் அந்தக் காலத்துல மண்ல பொரண்டு விளையாடுவாங்களே. அதுதான?

said...

இன்றுதான் பார்த்தேன் அருமை. மிக்க நன்றி.

கைலாஷி.