Monday, April 03, 2017

பச்சைக்குளத்தின் நடுவிலே பாம்பு ஒன்னு நிக்குது! ( நேபாள் பயணப்பதிவு 24 )

ஒரு நாட்டுக்கு  ஒரே தலைநகரமுன்னு இருந்துருக்கா என்ன?  மன்னர்கள்  சிலர் ஆட்சிக்கு வந்தவுடன் வெவ்வேறு இடங்களில் தலைநகரங்களை நிர்மாணிச்சுக்கிட்டு அரசாளுவது  சகஜமில்லையோ!  நேபாளநாட்டிலும்  வெவ்வேற காலக் கட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட தலைநகரங்கள் மூணு!  பக்திபூர், பதான், காத்மாண்டு !

தலைநகரங்களுக்குன்னு சில பத்ததிகள் இருக்குமில்லையா.... கோட்டை, கொத்தளம், அரண்மனை, மாடமாளிகை, கூடகோபுரம், நகரச்சதுக்கம்  அது இதுன்னு.....அப்படி இங்கே இருக்கும்   அரண்மனைப் பகுதிகளுக்கு  தர்பார்னு சொல்றாங்க.  பெரிய பிரமாண்டமான  சதுக்கம் அமைச்சு அதில்  கோவில்களும், அரண்மனைக் கட்டிடங்களும் அலங்காரங்களுமாக் கட்டி விட்டுருக்காங்க. உண்மையாவே அரச தர்பார்!  சுற்றுலாப்பயணிகள் மொய்க்கும்  இடங்கள் உண்மையிலேயே இந்த தர்பார்கள்தான்! அதிலும் இந்த பக்தபூர், கலாச்சார நகரம்னு இப்போ ரொம்பவே பெயர் வாங்கி இருக்கு!
சாங்காவிலிருந்து கிளம்பி  எட்டாம் நூற்றாண்டுலேயே அமைக்கப்பட்ட நகரமான பக்தபூர்  நகர தர்பாருக்கு  இப்போ வந்துருக்கோம். ஒரு அரைமணி நேரப் பயணம்தான்.  மல்லர்களின் ஆட்சி காலத்தில் இதுதான் அவர்களின் தலைநகர் என்ற அந்தஸ்துடன் இருந்தது. பதிமூன்றாம்  நூற்றாண்டு ஆரம்பம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு பாதிவரை  மல்லர்களின் ஆட்சி!

தர்பாருக்குள் நுழைஞ்சு பார்க்க இங்கே கட்டணம் ஆளுக்கு ஐநூறு!  பக்தபூர் முனிஸிபாலிட்டி வசூலிக்குது.  அநேகமா எல்லாக் காசும் நகர பரிபாலனத்துக்கு மட்டுமே செலவு செய்யறதாச் சொன்னாங்க. அதுவும் இந்தப் பகுதிகளுக்கு மட்டுமே! சுற்றுலாப் பயணிகளால்தான் மொத்த வருமானமும்! முனிஸிபாலிட்டியே புனர்நிர்மாணம் செய்யுதுன்னா  பாருங்க!!!

கனத்த மழையில்  ஊருக்குள்ளே நுழைஞ்சுருக்கோம்.  இதுவும் யுனெஸ்கோவின்  பாரம்பரியக் கட்டடங்கள் பட்டியலில் இருக்கு. முகத்தில் அறைவது போல் எங்கே பார்த்தாலும் இடிபாடுகள். 2015 ஏப்ரல் நிலநடுக்கம்  நல்லாவே நடுங்கிட்டுப்போன இடங்களில் இதுவும் ஒன்னு :-(   யானைகளும், சிங்கங்களும், குதிரைகளும், வீரர்களும், காளைகளுமா  படியோரங்களில் நின்னு நனைஞ்சுக்கிட்டே வரவேற்பு!  மேலே என்னமாதிரி இருந்துருக்கும்? ஐயோ....
இவ்ளோ மக்கள் கூடும் இடத்தில் இடிஞ்சு  விழுந்துகிடக்கும் கற்குவியல்கள்,  ரிப்பேர் செய்ய வந்து இறங்கி இருக்கும்  கற்கள், சிமெண்ட் மூட்டைகள் தவிர்த்து  சனம் போடும் குப்பைன்னு ஒன்னு இருக்கே.... அதுமட்டும்  இல்லவே இல்லை. தப்பித்தவறி யாராவது  குப்பை போட்டாலுமே... உடனுக்குடன் அகற்றி இடம் பளிச்ன்னுதான் இருக்கு!
அரண்மனையில் ஒரு பகுதி இப்போ ஆர்ட் ம்யூஸியம். உள்ளே நாம் பார்க்கிற ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் கலையழகு ப்ரமிக்கத்தான் வைக்குது. அதிலும்  கடந்து போன பல நூற்றாண்டுகளில்  மக்களின் கலாரசனை இப்படி எல்லாம் இருந்துருக்கேன்னு பார்க்கும்போது.....  ஹப்பா.....

எக்கச்சக்கமா  மரவேலைகள்தான். எப்படி இழைச்சு வச்சுருக்காங்கன்னு பாருங்க!  கருங்கல், செங்கல்னு கலந்துகட்டி....

அம்பத்தியஞ்சு ஜன்னல் மாளிகையைப் பார்த்ததும் நம்ம ' செட்டி நாட்டு ஆயிரம் ஜன்னல் வீடு' நினைவுக்கு வரலைன்னா அது பொய்தானே?


மன்னர் பூபதிந்த்ரா  மல்லா.... பெரிய தூணில் ஏறி உக்கார்ந்துருக்கார். நகரத்தின் இப்போதைய நிலை பார்த்து ரத்தக் கண்ணீர் வடிப்பாராயிருக்கும்..... தூணில் ஒரு பாம்பேறி உக்கார்ந்துருக்குபா !
பகோடா, ஷிக்கார் (கூம்பான சிகர வடிவம்)  வகைக் கோபுரங்களுடன் கோவில்கள். அதிலும் வத்ஸலா (துர்கா)தேவி கோவில்னு  ரொம்பவே அழகா இருந்தது (!) இப்போ முழுசா இடிஞ்சுபோயிருக்கு :-(  எப்படி இருந்துச்சுன்னு  படம் வச்சுருக்காங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாலே கூட  இருந்துருக்குங்க....   ப்ச்....
வத்ஸலா கோவிலுக்குப் பக்கத்துலேயே ஒரு சத்திரம் இருந்துருக்கு.....    யாத்ரிகர் தங்கக் கட்டிவிட்ட சத்திரத்தில் இப்ப ரெஸ்ட்டாரண்ட் . மாடியில் தங்குமிடம் இருக்காம். இலவசத் தங்கல் எல்லாம் ராஜா காலத்தோடு போயே போச்.

நேபாளக்கோவில்களின் வழக்கம் போல இங்கேயும் பெரிய பெரியமணிகள். இதுலே ஒன்னு நாய் குரைக்கும் மணியாம்!!    இந்த மணியை அடிச்சதும்  நாய்களெல்லாம் குரைக்குமாம். சிலது ஊளையிடுமாம்!  எப்படி  ஒரு மணிக்கும் இன்னொரு மணிக்குமான  ஒலி வேறுபாடுகளைக் கவனிச்சு வச்சுருக்குங்க இதுகள் !
அங்கங்கே நீரூற்றுகள்   இருக்குன்னாலும் வெளி முற்றத்திலும் கூட ஒன்னு இருக்கு.  இறங்கிப்போக படிகள் வச்சுருக்காங்க. சின்னப்பெண் குழந்தை அங்கே நின்னுக்கிட்டு இருந்தாள், மழையிலே!  பெயர் என்னன்னு கேட்டேன்... புள்ளெ பாவம் பயந்துருச்சு.தங்கவாசலுக்குள் நுழைஞ்சு உள்ளே போறோம். கோல்டன் கேட்.  அரண்மனை  இல்லையோ!   முகப்பில்   நாலு முகங்களும் பத்து கைகளும், இடுப்பில் எதிரிகளின் தலைகளைக் கோர்த்து ஒட்டியாணமாகவும் போட்டுக்கிட்டு  சண்டி  நிக்கிறாள். Teleju Bhawani Devi. மல்லா அரசர்களின் குலதெய்வம்!     ஆனாலும் வாசலில் ஆர்மி காவல் உண்டு! பயணிகளை ஒன்னும் சொல்றதில்லை.


 இடிபாடுகளுக்குள்ளே மாட்டிக்கிட்ட சிற்பங்களைப் பிரிச்செடுத்து உள்ளே வரிசை வச்சுருக்காங்க. உக்ரசண்டிகள் ஏராளம் ! பல சிற்பங்கள் உடைஞ்சும் போயிருக்கு :-(


அடுத்த பகுதிக்குள்ளே நுழைஞ்சால் நாகங்கள்! ஒவ்வொன்னும்  தலையைத் தூக்கிப் பார்க்குதுகள்.  குளத்தின் மேல்பகுதி முழுசும்  வால் நீண்டுபோய் கரை கட்டியிருக்கு! அரசருக்கான  குளமாம்! காவலுக்கு வேற யாரும் வேணாம்.....  காவல் நாகங்கள்!  Naga pokhari water tank!   பரந்த முற்றத்தில்   பெரிய அளவில் சுத்திவர  இடம்விட்டு நடுவில் இந்தக் குளத்தைக் கட்டி இருக்காங்க.  குளம்னு சொன்னதும்  முழுசாத் தண்ணீர் நிரம்பி இருக்குமுன்னு  நினைக்கப்டாது. படிகளில் இறங்கிப்போகலாம். இங்கேயும் சுத்திவர இடம் இருக்கு.  குளத்தின் நடுவில் 'பச்சை'த் தண்ணீரில் இருந்து எழுந்து நிற்கும் நாகம் சாதுவாப் பார்க்குதுன்னாலும்.... நமக்குக் குலை நடுங்கிப் போகுதுதான் !
குளத்தின் ஒரு பக்கம் நீர்வரத்துக்கான(குழாய்)அமைப்பு  கொஞ்சம் விசித்ரம்!  மகரத்தின் வாய்க்குள்ளில் இருக்கும்  கோமுகத்தில் இருந்து தண்ணீர்  வரும். மகரத்தின் மேல் ஒரு மண்டூகம் உக்கார்ந்துருக்கு. தண்ணீர் வரும் அமைப்பு   எல்லாம் தங்கம்.நல்லா பருத்த நாகங்கள்தான் பயணிகளின் க்ளிக்குகளுக்கு  ஆடாமல் அசையாமல் நின்னு போஸ்  கொடுக்குதுங்க. கூட்டமும் இங்கே அதிகம்தான்!  நம்மவர் கூட பயப்படாமல் கிட்டே நின்னாருன்னா பாருங்க :-)
நந்தி குழந்தையா இருந்தால் எப்படி இருக்குமுன்னு  பார்க்கணுமா? இதோ  இங்கே.... பாவம் மழையில் நனைஞ்சுக் கல்லாட்டம் உக்கார்ந்துருக்கு.....  :-)நம்ம பக்கங்களில் 'சார் தாம்னு' கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி யமுனோத்ரின்னு   இருக்கு  பாருங்க.... அதே  பெயரில் இங்கே ஒரு 'சார்தாம் ' இதே சதுக்கத்திலிருக்கு. விசேஷம் என்னன்னா......பத்ரிநாத்,  கோபிநாத் ( கிருஷ்ணர்,) சிவன், ராமேஷ்வர்னு  நாலு கோவில்கள் தனித்தனியா சின்ன அளவில் 1674 ஆம் வருசத்தில்  கட்டி இருக்கார் ராஜா ஜிடாமித்ர மல்லா!  மல்லா அரசர்களில் இவர்,   பூபதிந்த்ரா  மல்லா, ரஞ்சித் மல்லா என்ற மூன்று அரசர்கள் ஆட்சியில்தான்  கலை கலாச்சார நிகழ்வுகள், இந்தக் கட்டிட அமைப்புகள், கோவில்கள்  எல்லாம் உச்சத்தில் இருந்த காலம்.

பசுபதிநாத் கோவில் முகப்பில்  அப்பாவும் மகன்களும்! பொதுவா வடநாட்டுலே  சிவன் பார்வதிக்கு ஒரே புள்ளை புள்ளையார்தான்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. இங்கே ரெண்டு புள்ளைகளையும் சேர்த்தே வச்சுருப்பது நல்லாத்தான் இருக்கு.  பெயர் மட்டும் முருகன் இல்லை ....  இவர் கார்த்திக் ஸ்வாமி :-)    பதினைஞ்சாம் நூற்றாண்டுக் கோவில் இது. சதுக்கத்தில் இதுதான் காலத்தால் மூத்தது. இதே கோவிலுக்கு வேற ஒரு பெயரும் இருக்கு.  Yaksheswor Mahadev temple


இவ்ளோ அமர்க்களங்களிலும் தினசரி பூஜைக்கான  நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.


ஊருக்கான ஸ்பெஷல்னு சொல்லும் வகையில்  இந்த ஊர் தயிர் பெயரெடுத்துருக்கு. Juju Dhau ! அரசர்களுக்கு உரியதாம்! அப்படி ஒரு தரம்!  இந்த ருசி நேபாள் முழுசும் தேடினாலும் கிடைக்காதாம்!   சாப்பிட்டுப் பார்க்கலை :-(

இன்னொரு சமாச்சாரம்.....புடவை. Haku patasi      கருப்புப் புடவையில் சிகப்பு பார்டர் ! (அட!) இதுக்கே இப்படின்னா அடுத்து வர்றது...   தொப்பி :-)  கருப்புத் தொப்பி. Bhadgaule Topi.  (என்னாங்கடா..... கதையா இருக்கு !!!)
ரெண்டுபக்கங்களிலும் கைவினைப்பொருட்கள் விற்கும் கடைகளைத்தாண்டி அடுத்த  பாகத்துக்குப் போறோம்.
பொம்மலாட்ட யானை ஒன்னு சூப்பர்!!  புள்ளையார்ப்பா!

இங்கேயும் ஒரு பெரிய சதுக்கம் உண்டு.  ஒரு பக்கத்தில்  அஞ்சு நிலையில் கம்பீரமா தலைநிமிர்ந்து நிக்கும் கோவில்!   nyatapola temple .   முதல் நிலைக்கே ஒரு நாப்பது படிகள் மேலேறிப் போகணும். கோவில் மூடித்தான் இருக்காம்.  ஒரே இளவயதினர் கூட்டம்தான் இங்கே!  ஏறுவதும் இறங்குவதும் படங்கள் எடுத்துக்கறதுமா இருக்காங்க இந்த செல்ஃபி புள்ளெங்க :-)
படிகளைப் பார்த்ததுமே என் முழங்கால் முனகல். அஞ்சேல்! கோவிலுக்குள் சாமி என்னன்னு கேட்டால் மஹாலக்ஷ்மியாம்! 1702 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக்கோவில்தான் நேபாள் பகோடா ஸ்டைல் கோவில்களில் ரொம்பவே உயரமானதாம்.  அப்ப  நாப்பது படிகள் இருக்கறது நியாயம்தான்.   சதுக்கத்தின்  இந்தப் பகுதிக்கு  ந்யாத்போல்/ ந்யாத்போலா னு பெயர் கூட உண்டு.  (நியாயம் போல் )
படிகளுக்கு ரெண்டு பக்கமும் பக்கத்துக்கொன்னா பெரிய பெரிய சிலைகள், ஒவ்வொன்னும் ரெண்டு மீட்டர் உயரம் !   ராஜபுதன மல்லர்கள், யானைகள், சிங்கங்கள், வேட்டைநாய்கள் ( griffons ) அப்புறம் காவல் தேவதைகள் போல (தாந்த்ரிக்)ரெண்டு சாமிகள்.  சிங்கிணி, டொயாக்ரிணி என்ற பெயர்களோடு.

சதுக்கத்தின் இன்னொருபக்கம் பைரவர் கோவில்.  Bhirabnath . பைரவருக்குப் பக்கத்துக்கொன்னுன்னு   நாக்கை நீட்டிக்கிட்டு இருக்கும் ரெண்டு சிங்கங்களும், சிங்கத்துக்கொரு மணின்னு  ரெண்டு மணிகளுமா இருக்குபசுங்கன்னு ஒன்னு  பைரவர்சாமிக்குத் துணையா உக்கார்ந்துருந்தது. . உண்மையில் இந்த பைரவர் கோவில்  கட்டடம்  அழகோ அழகு!

இந்த சதுக்கத்தில் நிறைய கடைகண்ணிகள். மழைகாரணம் நின்னு பார்க்கத் தோணலை.
1934 இல்  ஏற்கெனவே ஒரு பெரிய நிலநடுக்கம் வந்து  பல கோவில்களும் கட்டடங்களும் அழிஞ்சு போச்சுதான்.  ரொம்பநாளா ஒன்னும் செய்ய முடியாம இருந்துட்டு, மேற்கு ஜெர்மனி நாட்டின் உதவியோடு 1980களில்தான் கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ணிக்கிட்டு இருந்துருக்காங்க.  அப்புறம் 1990 களில் அமெரிக்க நிதி உதவியும் கிடைச்சுருக்கு. இப்போ பார்த்த பைரவர் கோவில் கூட அப்போ பழுதுபார்த்துத் திருப்பிக் கட்டுனதுதான்.  இந்த 2015 ஏப்ரல் நிலநடுக்கத்தில் தப்பிச்சுருச்சு.


 ஊருக்குள் போய்ப் பார்க்க ஐநூறு அதிகமோன்னு நினைக்கப்டாது. இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் தர்பார் சதுக்கம் தவிர்த்து இன்னும் மூணு சதுக்கங்கள் இருக்கு. மொத்தம் நாலு.  Durbar Square, Taumadhi Square, Dattatreya Square and Pottery Square. இந்த சதுக்கங்களுக்கும் இதில்   இருக்கும் மூணு ம்யூஸியங்களுக்கும் இதே டிக்கெட்டில் போகலாம்.  இங்கேயும் ரிப்பேர் வேலைகள் நடப்பதால்  ரொம்ப நேரம் நின்னு பார்க்கலை. நிறைய  மரவேலைப்பாடுகள், சிற்பங்கள் இருக்கு.  மழை வேற நிக்கவே இல்லை.  பார்த்தவரை போதுமுன்னு கிளம்ப மனசில்லாமல்தான் கிளம்பினேன்.

தொடரும்.....:-)


12 comments:

said...

என்ன அழகான இடம்.. ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய் அதிகமோ என்ற ஆரம்ப எண்ணத்தை அடியோடு அழித்து விட்டது இடத்தின் அழகு. உடைந்த சிற்பங்கள் நம்மூர் தாராசுரத்தை நினைவு படுத்துகின்றன. அந்த ஐந்து நிலை சதுக்கத்தில் நாற்பது படிகள் ரொம்பச் செங்குத்தாக இருப்பது போல் தோன்றுகிறது. தயிர் சாப்பிட்டுப் பார்த்திருக்கக் கூடாதோ!

said...

எத்தனை அழகான வேலைப்பாடு. இயற்கையின் சீற்றத்தில் பெரும்பகுதிகள் அழிந்து போனது சோகம்.....

said...

அப்பப்பா. இவற்றைப் பார்க்க நாங்கள் கொடுத்துவைத்திருக்கவேண்டும். உங்களால் அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. நன்றி.

said...

இடமும் அருமை. படங்களும் நல்லா வந்திருக்கு. காணவேண்டிய இடம் என்று தோன்றுகிறது. இயற்கை சீற்றத்தில் இவ்வளவாவது தப்பியதே..

கோபால்சாருக்கு தைரியம்தான். பாம்புடன் 'படம்' எடுத்துக்கொண்டுள்ளாரே..

said...

படங்களையும் பதிவையும் பார்த்துப் படிக்க நேரம் ஆகிறது இன்னொரு முறை வரவேண்டும்

said...

டீச்சர், எடுத்த படங்கள் பார்த்த இடங்கள் சென்ற தடங்கள் எல்லாமே அருமை. நானே அங்க நேர்ல போயிட்ட மாதிரி இருந்தது. ஒவ்வொரு கட்டிடமும் கோயிலும் சிலையும் செஞ்சு முடிக்க எவ்வளவு காலம் ஆச்சோ. இயற்கை ஒரு நொடில தட்டி விட்டுருச்சு. ஆனாலும் இவ்வளவு பிழைச்சதே அதிசயம் தான்.

நாய் குரைக்கும் மணியை அடிச்சுப் பாத்தீங்களா?

பாம்பு சுத்துன கொளம் பிரம்மாண்டம். இதுல வந்து நிம்மதியா அரசர் குளிச்சிருப்பாரான்னு யோசனையா இருக்கு. ”பய”பக்தியோடயே குளிச்சிருப்பார்னு நெனைக்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.


இன்னொருக்காப் போகவேண்டிய லிஸ்ட்டுலே நேபாள் இருக்கு. அப்ப கட்டாயம் தயிர் சாப்பிடணுமுன்னு மூளையில் முடிச்சு போட்டாச் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ப்ச்... இயற்கைக்கு முன் நாம் வெறும் தூசு :-( ஒரு நாற்பது விநாடிகளில் எங்க ஊரின் தலையெழுத்தே மாறிப்போச்சே!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எதோ பூர்வஜென்மத்தில் செஞ்ச கொஞ்சூண்டு புண்ணியத்துக்கு எனக்கு இதெல்லாம் லபிச்சதோன்னு கூட ஒரு சம்ஸயம் இருக்கு.

நான் பெற்ற இன்பம் வகையில் அனைவரோடும் பகிர்ந்துக்கறேன். அவ்ளோதான்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அதே அதே...இவ்வளவாச்சும் மிஞ்சுச்சே.....


ஜனமேஜயன்கூட 42 வருசமா வாழ்க்கை நடத்தியும் பாம்புக்குப் பயந்தா எப்படின்னு துணிஞ்சுட்டார் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆர்வக்கோளாறில் கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையில் படங்களைப் போட்டுருக்கேன்... அதான் லோட் ஆக அதிக நேரம் எடுக்குது :-(

மன்னிக்கணும், நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

said...

வாங்க ஜிரா.

இவ்வளவாச்சும் தப்பியது கூட ஒரு அதிசயம்தான். நாய் மணியும் வத்ஸலா கோவில் இடிஞ்சதில் ஆப்டுக்கிச்சு:-( எடுத்து வச்சுருந்தாங்கன்னா அதை மீண்டும் இங்கே தொங்க விடுவாங்கன்னு நினைக்கிறேன்.

பாம்புக்கு பயந்தா வேலை ஆகுமா? அரசர் உக்கார்ந்துருக்கும் தூணில் கூட பாம்பு சுத்திக்கிட்டு இருக்கே :-)