Friday, April 07, 2017

பத்ரகாளியும் பொறந்தநாள் கொண்டாட்டமும் :-) ( நேபாள் பயணப்பதிவு 26 )

ஒரே இடத்தில் ஏகப்பட்ட நாராயணர்களைப் பார்த்த திருப்தியில் சங்கு நாராயணன் கோவிலில் இருந்து   மெள்ள இறங்கி வர்றோம்.  பாதி வழியில்  மழை குறைஞ்சு கொசுத்தூறல். கோழிகள் எல்லாம் இறங்கி வந்துருக்கு.  சில கடைகளையும் திறந்து வச்சுருந்தாங்க. புத்த சின்னங்களை வரைஞ்சுக்கிட்டு இருந்தார் ஒரு  கலைஞர்.
இந்த ஊருக்கு சங்குன்னே பெயர். பக்கத்துலே மனோஹரா என்னும் ஆறு ஓடிக்கிட்டு இருக்காம். அடிவாரத்துலே இருக்கும் கார்பார்க்கிலேயே ஒரு பக்கம்  ரெஸ்ட்டாரண்ட் ஒன்னு. சங்கு ரெஸ்ட்டாரண்ட்.  அங்கேயே சாப்பிடலாமுன்னு நம்மவர் சொன்னார். மணி வேற மதியம் ரெண்டு.
மெனு கார்டை (!) பார்த்து வெஜிடபிள்   ஃப்ரைடு ரைஸ், வெஜிடபிள் பகோடா சொல்லிட்டாங்க  மூணுபேர். நான் ஒரு  ஃபிங்கர் சிப்ஸ் மட்டும் வாங்கிக்கிட்டேன்.






இப்ப நாம் இருக்குமிடம் குன்றுப்பகுதி. இங்கிருந்து  சுற்றிலும் பள்ளத்தாக்கு காட்சிகளும்,  திரும்பும் பக்கமெல்லாம் இமயமலைத் தொடர்களுமா  காட்சிகள் அபாரம்.

இங்கிருந்து ஒரு பத்து கிமீ தூரத்தில் நாகர்கோட் என்னும்  ஊர் இருக்கு. மலைமேலே ஏறணும். ஏழாயிரம் அடி தரைமட்டத்தில் இருந்து  உயரம். வண்டி போகும் சாலைகள் இருக்காம். இங்கே விசேஷமே   அதிகாலை சூரியோதயம் பார்க்கறதாம். இமயமலைச் சிகரங்களில் ஒரு எட்டு சிகரங்கள்  இங்கே நாகர்கோட்டில் இருந்து தெரியுமாம்.  கேக்கக்கேக்க ஆசையாத்தான் இருக்கு.  ஆனா வானிலை அறிக்கை சொல்லுது  இன்றுமுதல் நாலு நாளுக்குத் தொடர் மழைன்னு.  அப்ப அங்கே போய் என்ன செய்ய?  இரவு  அங்கே தங்கினால்தானே சூரியோதயம்? மழையில் மேகம் மறைச்சு சிகரங்களும் ஒன்னும் தெரிய ச்சான்ஸே இல்லை.  ஆகட்டு பார்க்கலாமுன்னு  சங்குவில் இருந்து கிளம்பி  காத்மாண்டு லெமன் ட்ரீக்கு திரும்பிக்கிட்டு இருக்கோம்.
ஏற்கெனவே  நகருக்குள் ஒரிடத்தில் பார்த்த  கோவில் கண்ணில் பட்டதும், 'அங்கே போய் எட்டிப் பார்த்துட்டுப் போகலாமே'ன்னேன்.  பத்ரகாளி கோவில்.  நல்ல கூட்டம்தான்.  இன்றைக்கு சனிக்கிழமையாச்சே அதான் இப்படின்னார் பவன். செவ்வாய், வியாழன், சனி களில்தான் இங்கே வந்து கும்பிடுவது விசேஷமாம். ரொம்ப சக்தி வாய்ந்த காளி.  வேண்டுவது அத்தனையும் கிடைக்கும் என்றார்.  நம்பணும். நம்பினால்தான் சாமி. இல்லையோ?
கோவிலைச் சுத்தி ரெண்டு பக்கமும் ரோடு போகுது. நட்டநடுக்கா இருக்கு கோவில். வாசலில் ரெண்டுபக்கமும் ரெண்டு சிங்கங்கள். தாண்டி உள்ளே போனால்  வளாகத்துக்குள் அங்கங்கே தரையில்  சின்னச்சின்ன மேடுகளா, மணிகள் கட்டி விட்ட  பள்ளங்களா  இருக்கேன்னு பார்த்தால்  இங்கே இருக்கும் மக்களில் பலருக்கும்  இந்த பத்ரகாளி குலதெய்வம் என்றபடியால் அந்தந்த குடும்பத்தினர்  தனித்தனியா அவுங்கவுங்களுக்குன்னு சந்நிதி கட்டி வச்சுருக்காங்களாம். ஸ்ரீகுலதெய்வம்னு கூட ஒரு  இடத்தில் எழுதி இருந்துச்சு!
கோவிலுக்கான கட்டிடங்களோ, பகோடா ஸ்டைலில் சந்நிதிகளோ ஒன்னுமில்லாம திறந்த வெளியில்தான்  மூலவர் சிலை!
கருங்கல்சிலைதான். வழக்கம்போல் குங்குமம் அப்பிக்கிடக்கு.  கூடுதலா பூக்கள் அலங்காரமும்....

தாந்த்ரிக முறையில் தேவியை  உபாசிச்சு வந்த சாஸ்வத் பஜ்ரா என்ற பூஜாரி,  நம்ம இந்தியாவில் (அஸ்ஸாம்) இருக்கும்  காமாக்யா (சக்திபீடக் கோவிலில் ஒன்னு) கோவிலுக்குப்போய் தேவியை  மனம் உருக வழிபட்டு வேண்டி நிக்கறார். இவரோட பக்தியை மெச்சி, தேவி  என்ன வரம் வேணுமுன்னு கேக்கவும், என்னோடு  எங்க ஊருக்கு வந்துரணுமுன்னு  தன் ஆசையைச் சொல்றார்.  சரின்னு தேவி,  ஒரு  கலசத்துக்குள்ளே ஐக்கியமாகிடறாங்க.  கலசத்தைத் தூக்கிக்கிட்டு இவர்  ஊருக்குத் திரும்பிப் போய்க்கிட்டு இருக்கார்.

ஒரு இடத்துலே தன்னுடைய  கடமைகளை முடிச்சுக்கலாமுன்னு நினைச்சவர், கலசத்தை அங்கிருந்த ஒரு மரத்தில் தொங்க விட்டுட்டு, அவருடைய தினசரி  பூஜையை ஆரம்பிச்சுட்டார்.

அப்ப பார்த்து கலசத்துக்குள் இருந்த தேவி வெளியே வந்து  சிறு பெண்ணா உருவெடுத்து அங்குமிங்குமாப் போய் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க. ( அதானே.... எவ்ளோ நேரம் கலசத்துக்குள்ளேயே உக்கார்ந்துருக்கறது?  கையைக் காலை நீட்ட வேணாமா? ) அந்தப்பக்கம் வந்த கிராமத்து ஆள் ஒருத்தர், 'பொண்ணு புதுசா இருக்கே....யார்? என்ன?' ன்னு விசாரிக்கிறார்.   உடனே பொண்ணு அப்படியே மயங்கிக்கீழே விழுந்து தூங்கிருது.

பயந்துபோன  ஆள், கிராமத்துக்கு ஓடிப்போய், இன்னும் சில  ஆட்களை உதவிக்குக் கூட்டிக்கிட்டு வர்றார்.  வந்து பார்த்தா... பொண்ணு விழுந்த இடத்துலே காளி மாதா உக்கார்ந்துருக்கு!  அந்நேரம் பார்த்துப் பூஜையை முடிச்சுட்டு பஜ்ரா, கலசத்தை எடுக்க வர்றார்.  காளி மாதா தன் 'சுயரூபத்துடன்' உக்கார்ந்துருக்கறதைப் பார்த்து பணிவோடு கும்பிடறார்.

 அதே இடத்துலே கோவில் கட்டத் தீர்மானிச்சு  கோவில் கட்ட ஆரம்பிச்சதும், ஒரு நாள் கனவுலே காளி மாதா வந்து, ஒரு குறிப்பிட்ட இடத்துலே போய் தோண்டச் சொல்றாங்க.  அங்கே போய் தோண்டுனதும் ஒரு காளி சிலை அகப்படுது. அதையே கொண்டுவந்து,  கட்டிக்கிட்டு இருக்கும் கோவிலில் ப்ரதிஷ்டை செஞ்சுடறார். அதுதான் இந்த  பத்ரகாளி  இங்கே வந்த கதை!

கோவிலுக்கு லுமார்ஷி கோவில்னும் ஒரு பெயர் இருக்கு.  (இதுக்கும்  ஒரு கதை இருக்கணுமே!  )  ரொம்ப காலத்துக்கு முன்னால்  இங்கெல்லாம் ஒன்னுமே இல்லாமல் வெறும் நிலமாகக்கிடந்த சமயம், ஒரு   விவசாயி  இந்த நிலத்தை உழுது பயிரிட்டுக்கிட்டு இருந்துருக்கார். பகல் சாப்பாட்டுக்குன்னு  வீட்டிலே இருந்து சோளரொட்டி கொண்டு வந்து சாப்பிடும் பழக்கம்.  சாப்பாட்டை  தரையில் எங்கே வைக்கிறதுன்னுட்டு, பக்கத்தில் இருந்த மரத்தில்  சாப்பாட்டு மூட்டையைக்கட்டித் தொங்கவிட்டுட்டு  வந்த வேலையை செஞ்சுக்கிட்டு இருக்கார்.  மதியம் சாப்பாட்டு நேரமானதும் சோத்து மூட்டையைப் பிரிச்சா.....  உள்ளே இருந்த சோளரொட்டி எல்லாம் தங்கமா மாறிக்கிடந்துருக்கு!  லுமார்!   நேபாளின் மொழியான Newari யில்  லுமாடின்னா  தங்கமாம்.

சாமி சமாச்சாரத்துலே மாத்திரம்... கதைகளுக்குப் பஞ்சமே இல்லை, அது எந்த மதமானாலும் சரி!  எந்த நாடானாலும் சரி!

1817 ஆம் ஆண்டு இந்தக் கோவிலைக் கட்டி இருக்காங்க. மூலவருக்கு மேற்கூரை எல்லாம் இல்லை. ஒரு  துணியைத்தான் விதானமாக் கட்டி விட்டுருக்காங்க. மழையிலும் வெயிலிலும் காற்றிலும் குளிரிலும் தேவி  அங்கேயே இருந்து  நாட்டையே காப்பாத்தறாங்க.  அப்படிப்பட்ட தேவி கோவிலை பாதுகாத்துக் காவல் காப்பது யாருங்கறீங்க?  நேபாள் ராணுவம்தான்!  கோவிலுக்கு எதுத்தாப்லெ பிரதமரின் அலுவலகம் இருக்கு.  இந்த இடத்துக்கு சிங்க தர்பார்னு பெயர்!

காவல் காக்க எளிதா இருக்கட்டுமுன்னு  மூலவரைச் சுத்திக் கம்பி கூண்டு எல்லாம் கட்டி  க்ரில் கேட் போட்டு  ரெண்டு பக்கமும் நேபாள் கொடி(மரம்) வச்சுருக்காங்க. உலோகக் கொடிதான். இங்கத்துக் கோவில்களில் வழக்கமா இருக்கும்  பெரிய  பெரிய மணிகளுக்கும், சின்ன மணிகளுக்கும்,  வரிசையா பிடிப்பிச்சு இருக்கும் பித்தளை அகல்விளக்குகளுக்கும்  ஒரு குறைவும் இல்லை. சுத்தி வச்சுருக்கும் பித்தளை அகல்விளக்குகளும் பளிச்ன்னு சுத்தமாவே இருக்கு.  மழை காரணம் விளக்கு ஏத்தலை போல....
பத்ரகாளியைச் சுத்தி முக்காவாசி பெண்கள் கூட்டம்தான். நானும் நீந்திப்போய் கும்பிட்டேன்.
கலை ஆர்வம் கொண்ட   அரசர் ரத்ன மல்லா காலத்தில்  பத்ரகாளி நடனம் ஒன்னு உருவாகி, இப்போவும் வருசாவருசம் பெரிய திருவிழா  நடக்குதாம். அதுலே முக்கியமானது பத்ரகாளி நடனம்தானாம். ஏப்ரல் பத்தாம் தேதி  திருவிழா நடக்குதாம்.

சக்தி பீட் கோவிலுன்னு சொல்றாங்களே   .... தாக்ஷாயிணியின்  உடலின் என்ன பாகம் விழுந்த இடமுன்னு  கேட்டதுக்கு  சரியான விளக்கம் கிடைக்கலை. சாக்தம் என்ற வகையில் சக்தி வழிபாடு மட்டும் செய்யறதாலே சக்திபீட்னு சொல்றாங்க போல!
கோவிலில் நிறையக் கூட்டமுன்னு சொன்னதுக்கு அன்றைக்கு சனிக்கிழமையாப்போனது மட்டும் காரணமில்லையாக்கும்.  குலதெய்வக் கோவிலில் குடும்ப விழாக்கள் நடத்திக்கறது  உண்டு என்பதால்  அங்கே ஒரு குடும்பவிழா ஒருபக்கம் நடந்துக்கிட்டு இருந்துச்சு.
முக்கியமான சமாச்சாரம் சொல்ல விட்டுப்போச்சு பாருங்க.... கருவறைக்கு முன்னால் தரையில் ஒரு ஆள் படுத்துருக்கார்.  நல்லா தேய்ச்சு மினுக்கி பளபளன்னு  பித்தளை உருவம்.  யார்னு கேட்டதுக்கு பவனின் பதில்,  ராக்ஷஸ்.
அசுரனா இருக்குமோ? சனம்  இவருக்கும் குங்குமம் பூ எல்லாம் வச்சுக் கும்பிடுதே! அசுரனுக்கு வந்த வாழ்வு!!

லெமன்ட்ரீ வந்து சேர்ந்தப்ப மணி நாலரை.  மறுநாள் இதே போல ஒன்பதுக்குக் கிளம்பலாமுன்னு  பவனிடம் சொன்னதுக்கு,  'இன்னொரு முக்கியமான கோவிலுக்கு போகணுமுன்னு நீங்க சொன்னீங்களே  அது கிட்டத்தட்ட ஒன்னரை மணிப் பயணம். சீக்கிரம் போனால் நல்லது'ன்னார்.  ஓக்கே. அப்ப  எட்டரைன்னு சொல்லிட்டு அறைக்குப் போனோம்.  கொஞ்சநேரம் ஓய்வு.  கீழே  இருந்து  கூப்பிட்டு, சாய்  அனுப்பவான்னு  கேட்டாங்க.  சாய் வந்ததும் குடிச்சுட்டுப் பார்த்தால் மழை விட்டுருந்துச்சு.   ரொம்ப இருட்டுமுன் நம்ம தமெல்(தமிழ்) ஏரியாவுக்குப் போயிட்டு வரலாமேன்னு கிளம்பிட்டோம். பொடி நடைதான்.

ஒரே கலகலப்பான தெருக்கள்.  சுற்றுலாப்பயணிகள் நிறைஞ்சு வழியும் ஏரியா!  விதவிதமான கடைகளும் விதவிதமான பொருட்களும்!  நினைவுப்பொருளா எதாவது வாங்கிக்கணும். ஒரு சிலை....பார்த்தேன்....   ஊஹூம்.... கேக்கறது நியாயமே இல்லை...  சின்னதா.... 'பயன்' உள்ளதா எதாவது கிடைக்குமா? தேடணும்.

பவதி பிக்ஷாம் தேஹி.... சின்னக் கப்பரையா   இருக்கே!

அய்ய....     இதெல்லாம் பாடும் கப்பரைகள்!

கடைக்காரப்பொண் பாடவச்சுக் காமிச்சதும் ஓக்கே ஆச்சு.  வாங்கறதுதான் வாங்கறோம் கொஞ்சம் நல்லதாவே இருந்தால் என்ன தப்பு?
 'ஆமாம் இதுலே என்ன வச்சுக்கப் போறே?'ன்ற கோபாலின் கேள்விக்கு, 'சாளக்ராம்' என்ற அஸ்திரத்தை எடுத்துப் போட்டேன்! ஒர்க்கவுட் ஆச்சு :-)

அப்படியே  கடைவீதியில் வேடிக்கை பார்த்துட்டு லெமன்ட்ரீ திரும்பும் வழியில் ஒரு ரெஸ்ட்டாரண்டில் ராச்சாப்பாடு ( அதே ஃப்ரைடு ரைஸ்தான். கொஞ்சம்  மேம்பட்ட வெர்ஷன்,  நட்ஸ் வகைகள் எல்லாம் சேர்த்தது) டேக் அவே யா சொல்லிட்டு  அப்படியே ஒரு துண்டு கேக் வாங்கிக்கிட்டேன்.

அறைக்கு வந்து  'கேக் வெட்டி'  பொறந்தநாளைக் கொண்டாடியாச் :-)

நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு  காலையில் கிளம்பலாம். சரிதானே?

தொடரும்...........  :-)


12 comments:

said...

படிக்கட்டில் இறங்கி வரும் போஸ் பிரமாதம்! சினிமா ஷாட் போல இருக்கு!

பத்ரகாளி கதை சுவாரஸ்யம்.

பைரவர் தண்ணீர் குடிக்கிறார்.

அசுரனோ, சாமியோ சிலையைப் பார்த்ததும் மக்கள் கும்பிட ஆரம்பிச்சுடுவாங்க!

said...

பாடும் கப்பரையா!!!.. நல்லாருக்கே :-)

108 எப்போ புத்தகமா வருது?. ஒரு காப்பி ரிசர்வ்ட்.

said...

இந்த மாதிரி மழை பேஞ்சு நசநசன்னு இருக்குற ஊரும் ஒரு அழகுதான்.

பத்ரகாளிக்கே இராணுவப் பாதுகாப்பா?

சின்னக்கடையானாலும் சாப்பாடு டேபிள்ளாம் நீட்டா இருக்கே.

ராட்சனா இருந்தா என்ன.. சிலை வெச்சாச்சுல்ல... சிலைன்னா எதுன்னாலும் கும்புடுவோம்.

அது ஒரு பக்கம் இருக்க... என்ன இருந்தாலும் தேவியோட காலடில இருக்கும் ராட்சசன். இந்நேரம் ஞானம் வந்திருக்கும். கும்பிட்டாத் தப்பில்லைன்னு வெச்சுக்கோங்களேன் :)

பாடும் கப்பரையா... அடடே... அதுக்கு பேட்டரி போடனுமா? எப்படிப் பாடும்? எதுவும் சுவிட்ச் இருக்கா?

said...

வழக்கம்போல் நல்லாருந்தது. பாடும் கப்பரையா? (நான் பொருட்களைக் கேட்கும் கப்பரையைக் கூடவே வச்சுருக்கேன்'னு யாரோட மைன்ட்வாய்ஸ் கேட்குது. இமயமலை சூர்யோதயம் பார்க்க இன்னோரு தடவை அந்த ஆண்டவன் உங்களை சுற்றுப்பிரயாணத்திற்கு அழைக்கட்டும்.

said...

கப்பரை? கொப்பறை தெரியும் டீச்சர். அதென்ன ♫ கப்பரை?

said...

வாங்க ரிஷான்.

என்ன கனகாலமாக ஆளைக்காணோம்?

கப்பரை என்னன்னு கூகுளாரைக் கேட்கப்பிடாதா?

அழகாச் சொல்றாரே..... பிச்சைப் பாத்திரம் !

said...

வாங்க ஸ்ரீராம்.

உண்மைதான்!

சிலையைப் பார்த்ததும் கை கூப்பணும், கும்பிடணும். அது யாராக இருந்தாலென்ன? கடவுள் அதனுள்ளிலும் இருக்கார் :-)

said...

வாங்க சாந்தி.

ஏற்கெனவே இருக்கும் ஆர்டரைக் கேன்ஸல் செய்யவா...இல்லை காப்பி ரெண்டுன்னு எழுதி வைக்கவா?

said...

வாங்க ஜிரா.

உண்மை. சின்னதா இருந்தாலும் சுத்தமாத்தான் இருந்தது. அது போதும் எனக்கு :-)

பேட்டரி எல்லாம் வேணாம். நம்ம கையும் ஒரு கட்டையும் போதும் :-) இங்கே ஃபேஸ்புக்கில் ஒரு சின்ன வீடியோ போட்டுருக்கேன் பாருங்க.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வீட்டு வீட்டுக்கு ஒரு கப்பரை உண்டு. பவதி பிக்ஷாம் தேஹிதான் :-)

இன்னொருக்காப் போகணும்தான். ஏராளமான நல்ல நல்ல இடங்கள் கலையழகுடன் இருக்கும் நாடு.

பெருமாளிடம் கொஞ்சம் பரிந்துரைக்க வேண்டுகின்றேன்!

said...

உங்கள் பதிலை ரசித்தேன்.

அவன் எங்க விடப்போறான். திருப்பியும் 106க்கும் அவன் அழைக்கட்டும் திரும்பவும் நீங்க எழுதுங்கள். நாங்க படிக்கறோம். கடைசில இருக்கவே இருக்கு 107ம் 108ம்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

திரும்பமுதலில் இருந்தே ஆரம்பிக்கணுமா? ஐயோ...ஹைய்யோ!!!

அந்த 107 & 108 கணக்கு பூவுலகிலேயே சரியாகிரும் ச்சான்ஸ் இருக்காம். பயணத்தில் சந்தித்த ஒரு பக்தர் ரெண்டு இடம் குறிப்பிட்டுச் சொன்னாங்க !

அந்தப் பகுதி வரும்போது விவரிக்கலாம் :-)