Monday, April 24, 2017

சுந்தரியின் குளியலறை !! ( நேபாள் பயணப்பதிவு 33 )

சிலபல இடங்களில்  அரண்மனைகளையும், கோட்டை கொத்தளங்களையும் பார்த்துதான் இருக்கேன் என்றாலும் கூட  அங்கெல்லாம் குளியலறை, சமையலறைன்னு ஒன்னுமே இதுவரை பார்க்கலை. அதிலும் சில அரண்மனைகளில்  படுக்கை அறைன்னு பார்த்ததே இல்லை.....  பெரிய பெரிய ஹாலும் மண்டபமுமாத்தான் நீண்டு போகும். இவுங்களுக்கு ப்ரைவஸி எப்படின்னு கூடத் தோணி இருக்கு. (ராஜஸ்தான், உதய்பூர் ஸிட்டி பேலஸ் விதிவிலக்கு)


கேஷவ்நாராயண் சௌக்கைவிட்டு வெளியே வந்து அடுத்த பாகத்துக்குள் போறோம்.  பா   டன் சதுக்கத்தில் கோவில்களும்  பெரிய தூண்களுமா இருக்கு.  ஒரு தூணின் மேல் அரசர் யோக நரேந்த்ரமல்லா  உக்கார்ந்துருக்கார்.  இன்னொரு தூணில் பெரிய திருவடி!

இவருக்கு முன்னே இருக்கும் வாசலுக்குள் போறோம்.  இந்த  இடத்துக்குப் பெயர்  மூல் சௌக். (மூல்...   மூலம். ஆதி மூலம். ஆரம்பகாலத்து சமாச்சாரம். ஒருவேளை முதலில் கட்டப்பட்டதாக இருக்கலாம்.  )

தகதகன்னு தங்கக் கதவுகளும் தங்கச்சிலைகளும், முற்றத்தின் நடுவில் தங்கமாடமுமா என்ன ஒரு ஜொலிப்பு !
மாடத்துக்குள்ளே எட்டிப் பார்த்தால்....  அருவமாய் கடவுள் இருக்கார் :-) நடுவிலே இருந்தவரைக் கிளப்பிட்டாங்க போல.....  பித்யா கோவிலாம்!
முற்றத்தைச் சுத்தி இருக்கும் ரெண்டு மாடிக்  கட்டிடத்தின் வெளிப்பக்கமெல்லாம் தாங்கிப்பிடிக்கும் மரச்சிற்பங்கள். எதை க்ளிக்கணுமுன்னே தெரியலை....  ஒரே க்ளிக்ஸ்தான்.....


நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவைகளை பழுது பார்த்துக்கிட்டு இருக்காங்க. கழட்டி எடுத்தவைகளைச் சரியாக்கி மீண்டும்  அதுக்குண்டான இடத்தில் பொருத்தணும்....
சுத்திவர இருக்கும் கட்டட அமைப்பில்  ஒரு பக்கம் இருக்கும் தங்கக்கதவு டலேஜு (Taleju Bhawani  )அம்மன் கோவில். மல்லா அரசர்களின் குலதெய்வம். காக்கும் கடவுள்!  வெளியே கதவின் ரெண்டு பக்கமும் இருக்கும் தங்கச்சிலைகள் கங்கையும் யமுனையும்!  ஆமை, மகர வாகனங்களுடன் இருக்காங்க. இந்த டலேஜு அம்மன், தென்னிந்தியக் கடவுளாம்!!!  வீரத்துக்கு  அடையாளம்.   அட!!!!
இன்னொரு வாசல் வழியா அடுத்த முற்றத்துக்குள் கூட்டிப்போனார் பவன்.  பாத்ரூமாம்!   அரசியாரின் தனிப்பட்டக் குளியலறை!

ரெண்டே ரெண்டு கண்தானே இருக்குன்னு என்னையே நொந்துக்கிட்டேன்.....

  இந்த இடத்துக்குத் தனிப்பெயர் இருக்கு , தெரியுமோ?

சுந்தரி சௌக்.  ஹைய்யோ..... பெயர் வச்சவனைப் பாராட்டணும்.... என்ன ஒரு ரசனைப்பா......
நட்ட நடுவில் இருக்கும் திறந்தவெளிக் குளிமுறி!  ரெண்டு பக்கமும் காவலுக்கு நிக்கும் சிங்கப்படிகளில் இறங்கிப் போகணும். பயப்படுத்தாத சின்ன சேஷி சுத்திவரப் போறாப்லெ வளைவு கட்டி உக்கார்ந்துருக்காள், தலையை மட்டும் தூக்கி!
சிற்பக்கலையின் உச்சக் கட்டம்.......
கருடவாகனத்தில் பெருமாள்  பறந்து வந்து பாற்கடலையே சங்கு வழியா ஊத்தறாரோ!  இந்தப் பகுதி  தங்கமே தங்கம்தான்!
Tusha Hiti னு  தண்ணீர் வர்ற அமைப்புக்குப் பெயர். சங்கு தீர்த்தமுன்னு  வச்சுருக்கலாம்:-)


சுத்திவர இருக்கும் மூணடுக்குக் கட்டிடம். ரெண்டாவது  மாடியில் இருக்கும்  ஜன்னல் வழியா அரசர் பார்த்து ரசிப்பாராம்....    பவன் சொன்னார்  :-)
நல்லவேளை  குளிக்குமிடம்  அவர் நேரடிக் கண்பார்வையில் இல்லாமல் பள்ளத்துலே இருக்கு!
மனசுக்குள்ளே இருக்கும் சாத்தான் சொல்லுது.... ராணி மட்டும் குளிக்கிறாங்கன்றது சரிதான். ஆனால்  தன்னந்தனியாகவா வருவாங்க?  அணுக்கர்கள்,பணிப்பெண்கள், இப்படி ஒரு கூட்டம் இருக்கும்தானே?  எந்தப் புத்துலே எந்தப் பாம்பு இருக்கோ?
அந்தப்புரக் கட்டிடமா இருக்கணும். அந்த ஜன்னல்,  அரசியார் முற்றத்தை ரசிக்கறதுக்காக  வச்சதுன்னு நான் நினைக்கிறேன்.

சுந்தரி குளிக்கும் முற்றம்...........  சுந்தரிகள் நடமாடும் முற்றம்.  சுந்தரி சௌக்.
முற்றத்தில் ரெண்டு  உசரமான கல்தூண்கள்.  மேலே மலர்ந்த தாமரை.  விளக்கு வைப்பாங்களாம்.  ராத்ரியில் ஜிலுஜிலுன்னு எப்படி இருக்கும், இல்லே?


நிலநடுக்கம் இந்தப் பகுதியையும் விட்டு வைக்கலை :-(  ஆனால் பாத்ரூம் தப்பிச்சது.
முற்றத்தைச் சுத்தி இருக்கும் கட்டடம் செங்கல்தான். ஆனாலும் மூலைகள் சேருமிடத்தில் அட்டகாசமான சிற்பங்கள். நம்ம புள்ளையாரும் முருகனும் கூட பாவாடை கட்டிக்கிட்டு நிக்கறாங்க :-)


மனசில்லா மனசோடு வெளியே வந்தேன்.....  எப்படி இருந்த இடம் இப்படி ஆச்சு... அதை எப்படி இப்படியாக்கப் போறோமுன்னு அங்கங்கே பெரிய போஸ்டர்களாப் போட்டு வச்சுருக்காங்க.
பழுது பார்க்கும் வேலையை ஆரம்பிச்சுட்டாங்க.  பழைய நிலைக்குக் கொண்டுவந்துருவாங்க......  அப்பப் பார்க்கணும்!இவ்வளவு  அமர்க்களத்திலும் பறவைகள் தாகம் தீர்க்கத்தொட்டியில் தண்ணீர் நிரப்பி  வச்சுருப்பதைப் பாராட்டத்தான் வேணும்.
சுற்றுலாப் பயணிகளுக்கும் குறைவில்லை. சனமோ சனம்தான்.....
இந்த பா.....டன்  சௌக்கிலே மட்டும் எட்டு பெருமாள் கோவில்கள் இருக்கு!  எல்லாமே இப்போ நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படும் நிலையில். அநேகமா இன்னும் ரெண்டு வருசத்தில் வேலை முடிஞ்சுருமுன்னு நினைக்கிறேன். பெருமாள் கோவில் மட்டுமில்லாம சிவன் கோவிலும், பீம்ஸேன் கோவிலும் கூட இருக்கு. பௌத்த கோவில்களுக்கும் மடங்களுக்கும் கூடப் பஞ்சமில்லை.
நிலநடுக்கத்துக்கு முந்தி இருந்த படங்களைப் பார்த்தால்.....  ஹைய்யோ ன்னு இருக்கு!

வாங்க இன்னொரு பகுதிக்குப் போகலாம்.

தொடரும்.....  :-)10 comments:

said...

யோகா நரேந்திர மல்லா சிலை இன்னொரு இடத்தில் கூட இருந்ததோ.. ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தின் உள்ளே..

தங்கக்கதவு தங்க மாடம்னா நிறம் மட்டுமா? நிஜமாவே தங்கமா?

உங்கள் நாட்டிய போஸ் ரசிக்க வைத்தது.

பார்க்க உங்களுக்கு கண் போதவில்லை என்பது போல படமெடுக்க படமெடுக்க தாகம் தீர்ந்திருக்காது என்று தெரிகிறது. எவ்வ்ளவு அழகான இடங்கள்..

said...

வாங்க ஸ்ரீராம்

அரசரை பக்தபூர் தர்பார் சௌக்கில் பார்த்தோமே !

தங்கக்கதவு, மாடம் சிலை எல்லாம் செம்பின்மேல் தங்கப்பூச்சு. ஆனால் சுந்தரியின் சங்கு தீர்த்தக் குழாய் அசல் தங்கம். சொக்கத்தங்கம். காவல் இருக்கு!

அடங்காத ஆசைன்னா.... அது உண்மை :-)

said...

சிற்பங்கள் அருமை. பாவாடைப் பிள்ளையார் பிரமாதம்.

said...

படங்களும், அரண்மனையில் இருக்கும் அத்தனை சிற்பங்களும் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. எப்படிப்பட்ட திறமையான சிற்பிகளும் அவர்களைப் போஷித்த அரசர்களும் நேபாளத்தில் இருந்திருக்கிறார்கள். மிகவும் ரசித்தேன். பாம்பு சூழ்ந்த குளம் ஏற்கனவே இன்னொரு இடத்தில் நீங்கள் போட்டிருந்த படங்களையும் இடத்தையும் நினைவுபடுத்தியது.

குளியலறை, சமையலறைன்னு - பத்மனாபபுரம் அரண்மனையில் இரண்டையும் பார்த்திருக்கலாமே. நான், அங்கும் சரி, லண்டன் டவர் பிரிட்ஜிலும் சரி, கோல்கொண்டா அரண்மனையிலும் சரி (அதற்கும்) உள்ள இடங்களைப் பார்த்தேன். அரசவையில், அவசரமாக ஒதுங்கணும்னா, என்ன செய்வாங்க..

போன இடுகையில, படுக்கறதுக்கு இருந்த இடம் போல, பத்மனாபபுரம் அரண்மனையில் ராஜா உட்கார்ந்து, வெளியில் இருக்கும் பொதுமக்களைக் காணும் இடம் இருந்தது. என்னதான் ராஜான்னாலும், ராத்திரி அவ்வளவு பெரிய அரண்மனையில் தனியாகப் படுத்திருக்கும்போது 'ஜிலோ'ன்னு இருக்காது?

இதேபோல் ஜெய்ப்பூர் (?.இருக்காது. வேறு எந்த ராஜா?. சரியா ஞாபகம் வரமாட்டேன் என்கிறது) சுகவாசி அரசர், நீச்சல் குளத்தில் ஐஸ்போட்டு குளிப்பதற்காக, வேலையாட்கள் வண்டியோட்டிக்கொண்டு மலையிலிருந்து ஐஸ் பாளங்களை வெட்டி எடுத்துக்கொண்டுவந்து குளத்தில் போடுவார்களாம்..

ராணியோ ராஜாவோ.. கொஞ்சம்கூட அவர்களுக்கு பிரைவசியே இருக்காது. அது என்ன வாழ்க்கை...

said...

சுந்தரி சௌக் அட்டகாசம். குளியளறைக்குள்ள எவ்வளவு கலையம்சம். மேல இருந்து ராஜா ராணியை மட்டுமா பாத்திருப்பாரு. யாரார் இருக்காங்க. என்னென்ன செய்றாங்கன்னு எல்லாத்தையும் பாத்துக்கிட்டேதான் இருப்பாரு.

பாவாடைசாமின்னு பேர் கேள்விப்பட்டிருக்கேன். பாவாடை கட்டிய விக்கினேசுவரரையும் கார்த்திகேயரையும் பாத்தா அதான் தோணுது.

கங்கைக்கும் யமுனைக்கு ஆமையும் முதலையும் வாகனமா? யாருக்கு ஆமை? யாருக்கு முதலை?

said...

வாங்க விஸ்வநாத்.

பாவாடை முருகனைப் பார்க்கலையா? :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நீங்க சொன்ன இடங்களையும் பார்த்திருக்கேன். ராஜஸ்தானிலும் சிலபல. தில்லியிலும், தீக் கோட்டையிலும் கூட விஸ்தாரமான கூடங்களாகவே போய்க்கிட்டு இருக்கே! வெளிநாடுகளிலும் பல இடங்கள். ஃப்ரான்ஸில் தங்கக் கட்டில் வேற!

பப்பநாபபுரம் அரண்மனையில் ஒரு லாங்க் ட்ராப் கூட இருக்கு!

அரசர் தனியாப் படுக்க மாட்டார். யாரங்கேன்னதும் ஆஜராக அங்கே ஏவலர்கள் இருப்பாங்கதானே?

சேடியர் புடை சூழ 24 மணி நேரமும் இருந்தால் கஷ்டம்தான்.....

said...

வாங்க ஜிரா.

பாவாடைச்சாமிகள் நல்லாத்தான் இருக்காங்க :-)

ஃபிஜியில் கூட நேடிவ் ஃபிஜியன்களின் ஆடை சுலு என்னும் பாவாடை போல் உள்ள வேட்டிதான்.

கங்கைக்கு முதலை வாகனம் உண்டு. ஆனால் ஆமை வாகனம் பார்வதிக்குரியதாச்சே.... ஒரு வேளை யமுனைக்கு இரவல் கொடுத்துருப்பாங்களோ?

said...

சுந்தரி சௌக்.... பெயரே அட்டகாசமா இருக்கே...

ராணியின் குளியலறை - எத்தனை அழகான சிற்பங்கள். ஒவ்வொன்றும் கலைநயம்.....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


நல்லா அனுபவிச்சு வாழ்ந்துருக்காங்க, இல்லே!!!!

சிற்பிகளைப் போற்றும் அரசர் போல !