Wednesday, April 05, 2017

சங்கு சக்கர சாமி..... (நேபாள் பயணப்பதிவு 25 )

பக்தபூர் தர்பார் அடுத்து ஒரு ஆறு கிமீ தூரம்தான்.  வண்டியை நிறுத்திட்டு ஏறிட்டுப் பார்த்தால்  அகலமான படிகள். குன்றின்மேல் இருக்கார் சங்கு. குன்றுன்னு தெரியாத வகையில் ரெண்டு பக்கமும் வீடுகளும் கட்டடங்களுமா இருக்கும் படிகளில் ஏறிப்போக வேண்டி இருக்கு.  மழையோ விடமாட்டேங்குது.  நல்ல வேளையா காலையில் கிளம்பும்போதே லெமன்ட்ரீயில் இருந்து  ஒரு குடையை எடுத்து வந்துருந்தார்  பவன்.  ஏற்கெனவே வண்டியில் ஒரு குடை இருந்துருக்கு. பவனின் முதுகுப்பையில் இன்னொரு குடை!   தாராளம்!  சமாளிச்சுக்கலாம்.
காரை பார்க் பண்ணும் இடத்துலேயே  டிக்கெட் வாங்கிக்கணும். ஆளுக்கு முன்னூறு.     கோவிலுக்கான தோரணவாசலூடே மெள்ளப்    படியேற ஆரம்பிச்சோம்.
உண்மையில் ரெண்டுபக்கங்களும்   நினைவுப்பொருட்கள், கலைப்பொருட்கள் விற்கும் கடைகள் என்றாலும் மழை காரணம் வெளியே ஒன்னும் எடுத்து விளம்பரப்படுத்த முடியலை.  வருமானத்துக்கு இதையே நம்பி இருக்கும் மக்கள் பாவம்தான்  :-(


கூரைக்குள்ளில் கயிறு கட்டி மக்காச்சோளக்கதிர்களைக் காயவச்சுருக்காங்க.  தேவைப்படும்போது எடுத்து உதிர்த்து மாவாத் திரிச்சு  ரொட்டி செஞ்சுக்கவாம். மக்காய் ரோட்டி.
கோழிகள்  மழைக்குப் பயந்து அங்கங்கே ஒதுங்கி நிக்குதுகள். கூடவே புறாக்களும். மரத்தாலான முகமூடிகளும் கைவினைப்பொருட்களில் ஒன்னு. சாமி சிற்பங்கள்  அங்கங்கே  .....    இதையும் செதுக்கறாங்களா என்ன?   ஊஹூம்.....   நிலநடுக்கத்தில் இடிஞ்சு விழுந்த இடங்களில் இருந்து  காப்பாத்தி எடுத்து வச்சுருக்காங்களாம். எப்போ வேளை வருமோ  உரிய இடத்துக்குப் போக... :-(


கோவிலுக்குள் நுழையறோம். பெரிய வளாகம்தான்.  அங்கங்கே இடிபாடுகளுக்கு இடையில்  மூணடுக்கு கோவில் கட்டடங்கள். பகோடா ஸ்டைல்.  செங்கல் வச்சுத்தான் கட்டி இருக்காங்கன்னாலும்  மேலடுக்களில் மரக்கூரைகளும் அதிலே இருக்கும் மரவேலைப்பாடுகளும் சிற்பங்களும் அப்படியே கண்ணைக் கட்டி நிறுத்துவது உண்மை!
உள்ளே நுழைஞ்சவுடன்  'ஹை யானை'ன்னு ஓடினேன். உடனே நம்ம பவன், நீங்க ரெண்டுபேரும் இங்கே நில்லுங்க, இப்படி நில்லுங்கன்னு  ஃபொட்டாக்ராஃபர் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டார்:-)
நேபாளில் இருக்கும் கோவில்களிலே ரொம்பவே மூத்தவர் நம்ம சங்குதான்! சங்குநாராயணர்.  அஞ்சாம் நூற்றாண்டுலே கோவிலைக் கட்டியிருக்கார் அரசர்.  அப்புறம்  கோவிலை விரிவுபடுத்திக் கட்டியவர் அரசி .  இவுங்க ரெண்டு பேரின் வெங்கலச்சிற்பங்கள்  கருவறையைப் பார்த்தபடி  தனிக் கூண்டுலே  இருக்கு!
தங்கமும் செம்பும் கலந்துதான் அந்தக் காலத்துலே  மூலவர் வாசல், முகப்புச் சிற்பங்கள் எல்லாம் செய்வாங்களாம். தங்கத்தோட பளபளப்பு இல்லைன்னாலும்  பச்சையும் களிம்பும் பிடிக்காமல் எல்லாமே நல்லாவே இருக்கு.
மூலவர் சங்குநாராயணரை தரிசிக்கப்போறோம். பட்டர் இருந்தார். வாங்கன்னு அன்போடு வரவேற்று, பெருமாளுக்கு தீபஆரத்தி எடுத்து நமக்கும் கண்ணில் ஒற்றிக்கக் கொடுத்தார். உள்ளே போதுமான வெளிச்சம் கிடையாது.  பூக்கள் கொஞ்சம்தான் போட்டுருக்காங்க. ஆனால்  மூலவர் முகம் உடல் எல்லாம்  சந்தனம் குங்குமத்தீற்றல்களால் என்ன ஏதுன்னு  புரியாமல்தான் இருந்தது. நிக்கறார் என்றவகை மட்டும் தெரிஞ்சது.

'நிலநடுக்கக் குழப்பங்களுக்கிடையில் தினசரி பூஜை நடக்கறதில்லை. விசேஷநாட்களில் மட்டும்தான்  சங்குநாராயணர் சந்நிதி திறக்குறாங்க' ன்னு பவன் சொல்லிக்கிட்டு இருந்தார். அதுவும் இன்றைக்குச் சரியான மழை வேற.  எப்படி ஆனாலும் கோவிலுக்குள்ளே போயிட்டாவது வரணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனாப் பாருங்க..... பெருமாளின் கருணையை என்னன்னு சொல்றது!  சந்நிதி திறந்துருந்தது மட்டுமில்லாமல் தீபாராதனையையும் பார்க்க வச்சுருக்கார்!
வாசல் முகப்பு ப்ரீவ்யூவில்  மஹாவிஷ்ணு சங்கும் சக்கரமும் கதையும் தாமரையும் நான்கு கைகளில் ஏந்தியபடி நின்ற கோலத்தில் இருக்கார்.  அவருக்கு வலப்பக்கம்  மஹாலக்ஷ்மியும் இடப்பக்கம்  கருடரும் இருக்காங்க.

வழக்கமா  கருவறை வாசலில் இருக்கும் பெரிய திருவடியைக் காணோமேன்னு கண்ணைத் திருப்பினால்.....   வலப்பக்கம்  கொஞ்சம் தள்ளி   முழங்கால் மடக்கி உக்கார்ந்துருக்கார்!  மனித முகமும் உடலுமா!  அடடா.... என்ன ஒரு அழகு!
ப்ரமிச்சு நிக்கறதைப் பார்த்த நம்ம பவன்,  'இன்னொரு இடத்துலே  கருடர் ரொம்பவே நல்லா இருப்பார். அவரை உங்களுக்குக்  கட்டாயம் காட்டணும்' என்றார்!  அவ்ளோதான் 'எங்கே எங்கே'ன்னு துளைச்செடுத்துட்டேன்.  வேற ஒரு ஊரில். நாம் அங்கேயும் போகத்தான் போறோம்னு சொன்னார். சரின்னு தலையை ஆட்டினாலும்.... இந்தக் கருடர்மேல் வச்ச கண்ணை என்னால் விலக்க முடியலை!  அப்ப ஆட்சியில் இருந்த  அரசரின் முகத்தையே சிலைக்கு மாடலா வச்சுச் செதுக்குனதாக ஒரு 'கதை' இருக்காம்!
     ஜாலியா கருட   சவாரி !
சங்குநாராயணர் சந்நிதிக்கு வெளியே ரெண்டு பக்கமும் பெரிய தூண்கள். ஒன்னில் சக்கரமும் ஒன்னில் சங்குமா நிக்குது. இங்கே ஒரு கல்வெட்டு வேற !

மஹாலக்ஷ்மிக்கு ஒரு தனிச்சந்நிதி. மூடிக்கிடக்கும் வாசல் கதவில் சங்கு !
சிவன், சாமுண்டா,  துர்கா  பகவதின்னு  மூணு பேருக்குமா  ஒரு தனிச்
சந்நிதிக்கோவில். தங்கக்கூரையும் தங்க வாசலும்,   மூணு கதவுகளுமா இருக்கு. சந்நிதி மூடி இருக்கேன்னு மனசுக்குள்ளெயே ஒரு கும்பிடு போட்டேன். பட்டரிடம் கேட்டுருந்தால்  திறந்து காமிச்சுருப்பாரோ? தோணலையே.....
பழைய புள்ளையாருக்கு ஒரு மாடம் கட்டி இருக்காங்க. ஐயோ..... இந்த டைல்ஸ் பதிக்காம விட்டுருந்தால் கூட நல்லா இருந்துருக்குமேன்னு... ப்ச்...  :-(
முழுசும் அழிஞ்சு அடித்தளம் மட்டும் எஞ்சி நிக்கும் ஒரு மேடையில் உடைஞ்ச சிவலிங்கம்.... 1934 ஆம் வருச  நிலநடுக்கமா இருக்கணும்.
கருட வாகனத்தில் இடது மடியில் லக்ஷ்மியுடன் பத்மாசனத்தில் இருக்கும் விஷ்ணுவுக்குப் பனிரெண்டு  கைகள் !!!  ஒன்னுமேலெ ஒன்னுன்னு   ஏழு தலைகள் வேற!  இவர் வைகுந்த விஷ்ணுவாம். பெருமாளுக்கு பனிரெண்டுன்னா எனக்கு அதில் பாதியாவது வேணுமுன்னு கருடர் சொல்லிட்டாரோ என்னவோ... கருடருக்கு  ஆறு கைகள்!

இதுவும் கருடவாகனத்தில்  விஷ்ணுவும் லக்ஷ்மியும்தான்.  விஷ்ணுவுக்கு இதில்   பத்தே  கைகள்.  ஆனால் விராட் விஸ்வரூபம் போல எக்ஸ்ட்ரா முகங்கள் இருக்கே !
ஸ்ரீ கிலேஷ்வர் மஹாதேவ் மந்திர். மூடிக்கிடக்கும்  சந்நிதிக்குள் எட்டிப் பார்த்தால்....  பாவமா ஒரு மூலையில் இருக்கார் கிலேஷ்வர்.  முன்னால் ஒரு 'அ' சைலண்ட் ஆகி இருக்கோ?  சமணக்கோவில்கள்  போல நாலு பக்கமும் வாசல் வச்சுக் கட்டி இருக்காங்க. ஒரு வாசலில்  த்வார யானைகள், இன்னொரு வாசலில் த்வார சிங்கங்கள், இன்னொன்னு  த்வார கருடன்கள், கடைசி வாசலில் த்வார யாழிகள் இப்படி !

கிலேஷ்வர் வாசலில் நந்திகளின் வரிசை

1934 இல்  ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  அழிஞ்சு போன கோவில்களை (சந்நிதிகள்னு சொல்லலாம்)  திரும்பக் கட்டி இருக்காங்க. அப்பக் கட்டுன புதுக்கோவில்கள் இந்த 2015 நிலநடுக்கத்தில் தப்பியிருக்கு.  அப்ப நின்ன  சந்நிதிகள் இப்போ போயிருச்சு :-(

சின்னமஸ்தா தப்பிவிட்டாள்! பாவம் ஏற்கெனவே  தலையை வெட்டிக் காணிக்கை ஆக்கிட்டு உடல் மட்டுமே இருக்கு. இவளுடைய  கதையை என்னன்னு சொல்றது?
தேவி வழிபாட்டில் ரொம்ப உக்ரமான விரதம், பூஜைன்னு செஞ்சுட்டு, தேவிக்குத் தன் தலையைத் தன் கையாலேயே வெட்டி சமர்ப்பிப்பாங்களாம் !  ஐயோ.....  ரத்தம்....  கழுத்துலே இருந்து பீறிடும் ரத்தம்.....  அப்படியே வெட்டுப்பட்ட தலையில் இருக்கும் வாய்க்குப் போகுதாம். கூடவே இன்னும் ரெண்டு ரத்தப் பீறல்கள் அடுத்துள்ள ரெண்டு  தேவதைகளின் தாகம் தீர்க்கும்.  இந்தமாதிரி ஒரு சுதைச் சிற்பத்தை  நம்ம பக்கம்  ஐவர்பாடி (அய்யாவாடி) ப்ரத்யங்கராதேவி கோவிலில் பார்த்திருக்கேன். திபேத்திய பவுத்தர்களின் தேவதையான வஜ்ரயோகினிதான் இந்த சின்னமஸ்தான்னும் சொல்றாங்க. எல்லாம் தாந்த்ரீக வழிபாட்டில் இருப்பவைகளே!

சின்னமஸ்தா கைகூப்பி இருக்கும் திசையில் பார்த்தால் ....  துர்கை. விஷ்ணுதுர்கைன்னு நினைக்கிறேன். கையில் சங்கு சக்கரம் இருக்கே!
கோவில் வளாகத்தில் எங்கே பார்த்தாலும் விஷ்ணு விஷ்ணுதான்.  சங்கும் சக்கரங்களும்தான்! இன்னும் கூட  சில முக்கியமான சிலைகளை  பத்திரப்படுத்தி இருக்காங்கன்னும், முழுசும் பழுது பார்த்துக் கட்டி முடிச்சதும் அவைகளுக்கு உரிய இடத்தில்  வைப்பாங்கன்னும் தகவல் கிடைச்சது.
மூலவர் சந்நிதியாண்டை  விசித்ரமா ஒரு இரும்பு சாதனம். கொக்கியோடு இணைஞ்சுருக்கு. என்னன்னு பார்த்தால் அது   ஒரு வகை பூட்டாம்!
நேபாளில்  நான்கு நாராயணர்களை தரிசனம் செஞ்சுக்கறது விசேஷமாம்.  இப்ப நாம் பார்த்த சங்குநாராயண், அப்புறம் இன்னொரு இடத்தில் 'இச்சங்கு நாராயண்'( ICHANGUNARAYAN)  வேற ஒரு இடத்தில்  லலித்பூர் 'பிச்சங்கு நாராயண்'  ( BISHANKHUNARAYAN ) கடைசியா ஜலநாராயண். நாலுபேருமே இந்த காத்மாண்டு பள்ளத்தாக்கிலேயே நாலுபக்கம் இருக்காங்க.  நால்வரின் நாம் இருவரை தரிசனம் செஞ்சுருக்கோம். ஜலநாராயண்தான் நாம் நாலுநாளைக்கு முன் பொகரா கிளம்பும் நாள் காலையில் தரிசனம் செஞ்ச புதாநீல்கண்ட். மீதி இருவர் கிடைப்பாங்களான்னு பார்க்கலாம்..
இந்தக் கணக்குலே பார்த்தால் இந்த சங்கு நாராயணன் கோவிலிலேயே  நாப்பது நாராயணர்களைப் பார்த்துருவோம். எங்கே பார்த்தாலும்  விதவிதமா  நாராயணன்தான். கருடன்லே ஏறிப் பறந்துக்கிட்டே இருக்கார்.

ஜலநாராயணன் கூட  சிற்பமா நாலைஞ்சு இடத்துலே!
மழை நின்னபாட்டைக் காணோம். இவ்ளோ பெரிய கோவிலுக்கு  வச்சுருக்கும் வாசலைப் பாருங்க. எதோ வீட்டுக்குள் வந்துபோறாமாதிரி....


தொடரும்...........:-)

6 comments:

said...

அழகான இடங்கள்... அழகான படங்கள்.

said...

படங்களும் இடங்களும் அருமை. ஒரு காலத்தில் எல்லாம் ஒரே தேசமாகவும் கலாச்சாரமாகவும் இருந்திருக்கவேண்டும்.

said...

வாங்க ஸ்ரீராம்.

வருகைக்கு நன்றி.

தனியா இருக்கமோன்னு பயந்துட்டேன்ல :-)

said...

கருடனைப் பாத்தா வெள்ளைக்காரர் சிலை மாதிரி உடையலங்காரம் இருக்கு. மன்னரோட முகத்தை வெச்சு செய்யவும் வாய்ப்பிருக்கு. உண்மை என்னன்னு தெரியலை.

சங்கு நாராயணர் கோயில்ல உங்களுக்கு ரெண்டு பக்கமும் கிளி மூக்கோட பறவை துவார பாலகர்கள் இருக்காங்களே. வித்யாசமா இருக்கு.

இச்சங்கு பிச்சங்குன்னா என்ன பொருள்?

சின்னமஸ்தா கோயில் ஒன்னு வங்காளத்தில் போனேன். பிஷ்ணுபூர்னு ஒரு ஊர். அங்கயும் மல்லர்களோட ஆட்சி நடந்திருக்கு. சின்னமஸ்தா படம் போட்டிருந்தீங்களே, அந்த மாதிரியே சிலை வெச்சிருந்தாங்க. ஆனா கோயில்தான் கோயில் மாதிரி இல்லாம கல்யாண மண்டபம் மாதிரி இருந்தது. வடக்க போகப் போகவே இப்படிதான்னு நெனைக்கிறேன்.

said...

உங்களுக்குக் கட்டணம்ரூ,200 ஆ 300,ஆ

said...

சின்னமஸ்திகா.... ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிந்த்பூர்ணியில் சின்னமஸ்திகா தேவி தான் பிரதான தேவி. எனது பக்கத்தில் இக்கோவில் பற்றிய பதிவுகள் உண்டு.

http://venkatnagaraj.blogspot.com/2015/04/blog-post.html

http://venkatnagaraj.blogspot.com/2015/04/blog-post_6.html

http://venkatnagaraj.blogspot.com/2015/04/blog-post_9.html