Monday, March 27, 2017

ஸ்வாயம்பு மஹாசைத்யாவும் வளையத்துலே கைமாட்டுன குரங்கும் ( நேபாள் பயணப்பதிவு 21 )

இன்றே இப்படம் பொகராவில் கடைசி என்பதாலும் ஃப்ளைட்  பகல் பனிரெண்டேகாலுக்குத்தான் என்பதாலும்  நிதானமாக எழுந்து குளிச்சுட்டு, பால்கனியில் நின்னு க்ளிக்ஸ் கடமைகளை முடிச்சுட்டு, எட்டரைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்க்குக் கீழே போனோம். பஃபே தான்.  பார்த்ததில்  பிடிச்சதைத் தேடி,  கிடைச்சதில் திருப்தியாச்சு .

நேபாளக்காக்கா !

நேத்துப் பார்த்த பீஸ் பகோடாவைக் கிட்டக்க வரவழைச்சேன்:-)

'பத்தரை மணிபோலக் கிளம்பலாமா'ன்னார் துர்கா. நம்மோடு இருக்கும் கைடு வேலை நம்மை ஏர்ப்போர்ட்டில்  கொண்டு ஏத்திவிடும்வரைதான். அதுக்குப்பின் அவர் காத்மாண்டு வர பஸ் பிடிக்கணுமாம். எட்டுமணி நேரப் பயணம்.  பதினொரு மணிக்கு ஒரு பஸ் இருக்காம். அதை விட்டுட்டால்  இன்னும் ரெண்டு மூணு மணி நேரக் காத்திருப்பு.  பாவம்.... பொழுதோடு வீட்டுக்குப்போய்ச் சேரட்டும். குழந்தைகள் காத்திருக்குமே....
பிரச்சனை இல்லைன்னு கிளம்பிட்டோம். நேத்து வந்த அதே குட்கா ட்ரைவர் தான் நம்மை ஏர்ப்போர்ட் கூட்டிவந்தார். இன்னும் வாயில் குட்கா போட்டுக்கலை. பெயரைக் கேட்டுக்கிட்டேன்:-) ராம் .  ராம்ராம்.
எங்களுக்குச் செக்கின் ஆச்சு. பிள்ளைகளுக்கு எதாவது வாங்கிப்போகட்டுமேன்னு நம்ம துர்காவுக்குக்   கொஞ்சம் தாராளமா அன்பளிப்பு கொடுத்துட்டு அவருடைய உதவியையும் சேவையும் பாராட்டி நாலு நல்ல வார்த்தை சொன்னேன். (இப்ப அவர் நம்ம ஃபேஸ்புக் நண்பர்களில் ஒருவர்)
சரியாப் பனிரெண்டு மணிக்கு  வந்து சேர்ந்த யேட்டியில்  போய் உக்கார்ந்தோம்.  வரும்போது பார்த்த ஸொல்மாதான் இப்பவும் ட்யூட்டியில். ரொம்ப சந்தோஷமா நம்மை வரவேற்று, தரிசனம் நல்லபடியாக் கிடைச்சதான்னும் விசாரிச்சாங்க. அரை மணி நேரப் பயணம்தான். காத்மாண்டு வந்து சேர்ந்தாச்சு.  பெட்டிகளை எடுக்கக் கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டியதாப் போச்சு.


லெமன்ட்ரீ ஹொட்டேல் ப்ரகாஷ் வண்டி அனுப்பி இருந்தார். ட்ரைவர்  பெயர் ரவி.  ஏர்ப்போர்ட்டில் இருந்து கிளம்புன கொஞ்சநேரத்தில் பாக்மதி தரிசனம் கிடைச்சது.
முக்கால் மணிப்பயணத்தில்  லெமன்ட்ரீ வந்து சேர்ந்தோம். இந்திராவும் சுமனும் கேஷவும் ரொம்ப மகிழ்ச்சியா கைகூப்பி வணங்கி வரவேற்றாங்க.  அதே அறை தயாரா இருக்குன்னதும்  வச்சுட்டுப்போன பெரிய பெட்டிகளை மாடிக்கு அனுப்பச் சொன்னதோடு, பகல் சாப்பாட்டுக்கு என்ன இருக்குன்னு விசாரிச்சோம். அதுக்குள்ளே  வெளியே போயிருந்த ப்ரகாஷ் வந்துட்டார்.

முக்திநாத் தரிசனம் எந்தத் தடங்கலும் இல்லாமல் அவர் போட்டுக்கொடுத்த திட்டத்தின்படி நடந்ததுக்கு நாங்க நன்றி சொன்னோம். அவரும்... உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருந்துருக்கு. அதான் எல்லாம் நல்லபடி முடிஞ்சதுன்னார். கூடவே  கொஞ்சநாளுக்கு முன்பு வந்துருந்த  தென்னிந்தியத் தம்பதிகள்    பொகரா வரை வந்துட்டு, கடும் மழை, கொடுங்காத்து காரணம்  அங்கிருந்து ஜொம்ஸொம் வரைகூட போகமுடியாமல்   ஒரு வாரம் தங்கிக் காத்திருந்து பார்த்து, திரும்பக் காத்மாண்டு வந்து சேர்ந்து ஏமாற்றத்தோடு போனதை இன்னொருமுறையும் சொன்னார்.

எல்லாம் பெருமாள் செயல். நம் கையில் என்ன இருக்கு?

பகல் சாப்பாடு உங்களுக்கு சமைச்சுத் தரச் சொல்றேன். தால் பாத் போதுமான்னார். ஹைய்யோ...   அது அமிர்தம்னு சொன்னேன். ஒரு அரைமணி நேரம் ஆகும் பரவாயில்லையான்னு சுமன் கேட்டத்துக்கு பிரச்சனை இல்லைன்னுட்டு  அறைக்குப் போனோம்.
எதிர் தோட்டத்தில்  ஸ்தூபா,  கட்டி முடிச்சுருந்தாங்க. ஃபைனல் டச் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒருவர். வைஃபை கிடைச்ச சந்தோஷத்தில் நான் மூணு நாளாப் பார்க்காத  மெயில்களைப் பார்த்துப் பதில் போட்டுக்கிட்டு இருந்தப்ப, சாப்பாடு ரெடின்னு தகவல் வந்துச்சு.  சாதம், பருப்பு, தயிர், சுட்ட அப்பளம்! யதேஷ்டம். நேபாளில் பொதுவா சாதாரணப் பொது சனத்தின்  சாப்பாடு எப்பவுமே தால் பாத் தானாம்!  சாத்வீகமான உணவு.
சாப்பிடும்போதே ப்ரகாஷ்... அன்றைக்கு மாலை  சில இடங்களைப் பார்க்கறீங்களான்னார்.  எனக்கு  ஆரத்தி சமயம் பசுபதிநாத் மந்திருக்குப் போகணும். அதுக்கு முன்னே  எதாவதொரு இடம் பார்க்கலாமுன்னதும், நாலு மணிக்கு ரெடியாகிட்டால் ஸ்வாயம்பு மஹாசைத்யா பார்த்துட்டுப் பசுபதிநாத்  போக சரியா இருக்கும்.  இன்றைக்கு இந்த இடங்களுக்கு ரவி கொண்டு போய் விடுவார்னு சொன்னார். கூடவே அடுத்த ரெண்டு நாட்களுக்கு உங்களுக்கு ஒரு கைடு ஏற்பாடு செஞ்சுருக்கேன். அதுக்கான திட்டம் போட்டு வச்சாச்சுன்னார்.
நாலுமணிக்குக் கிளம்பிப்போனோம். நம்ம லெமன் ட்ரீயில் இருந்து ஒரு  கால்மணி நேரப்பயணம்தான்.  ஒரு குன்றின்மேல் இருக்கு இந்தக் கோவில். குரங்குகள் எக்கச்சக்கம். ஆனால் எல்லாம் சாதுக்குரங்கு வகை. யாருக்கும் எந்த உபத்திரவமும் செய்யாதவைகள்தான்.  மேலே கோவிலுக்குப் போக ரெண்டு வழிகள்.  ஒரு 365 படிகள் ஏறிப்போகலாம்,  சரீர உபாதைகளைப் பொருட்படுத்தாமல் இதையே ஒரு பிரார்த்தனைன்னு நினைச்சால்.

     மேலே:   குன்றின் அடியில் இருந்து மேலே போகும் படிகளின் நுழைவு வாயில்

கீழே: குன்றின் மேலுள்ள கார்பார்க்கில் இருந்து  வளாகத்தின் உள்ளே போகும்  நுழைவுவாயில்.
நாந்தான் நோகாமல் நோம்பு கும்பிடும் வகை இல்லையோ...  கார் போகும் பாதையில் போய் மேலே வாசலில் இறக்கி விட்டார் ரவி.  கார்பார்க்கிங் இருக்கு. நான் வண்டியில் உங்களுக்காகக் காத்திருப்பேன் என்றார்.
இங்கே உள்ளே போய் பார்க்க ஒரு கட்டணம் இருக்கு.  அநேகமா எல்லா இடங்களிலும் ஒரு சின்னக் கட்டணம் வசூலிக்கறாங்க இந்தப் பக்கங்களில். இதை வச்சு இடத்தைப் பராமரிக்க முடியுது என்பதே காரணம்.  ஆளுக்கு அம்பது ரூ கொடுத்து டிக்கெட் வாங்கினோம்.  பத்துப்பதினைஞ்சு படிகள் ஏறி வளாகத்துக்குள் நுழைஞ்சால்.....   வாயடைச்சுப் போனது உண்மை.
சின்னதும் பெருசுமா இருக்கும் ஸ்தூபாக்களில் (இங்கே அப்படித்தான் சொல்றாங்க) கண்களோ கண்கள். சாமி பார்த்துக்கிட்டே இருக்கார்.
உலகத்தில் உள்ள அத்தனை துக்கங்களையும் அந்தக் கண்கள்  அப்படியே பீராய்ஞ்சு எடுத்துருதுன்னும், அதனால் சகல  உயிர்களும்   மன நிறைவோடு வாழமுடியுதுன்னும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை!  கருணைப் பார்வை பார்க்கும் கண்கள்னு சொல்றாங்க.  நல்ல உயரத்தில் இருப்பதால் கண் பார்க்கும் அத்தனை தொலை தூரங்களுக்கும் துக்கமே இனி இல்லைன்னு ஒரு ஐதீகம்.  பழைய காலத்துலே அரசர்கள்   அந்தக் கண்கள் பார்க்கும் எல்லைக்குள்ளில்தான் அரசாட்சி செய்யும் நிலத்தை அமைச்சுக்கிட்டாங்கன்னும் சொல்றாங்க.  கண்ணும் மூக்கும் நெத்திப்பொட்டும் (மூணாவது கண்?) இருக்கே தவிர காதுகளை வரைஞ்சு வைக்கலை. காரணம், தன்னைப் புகழ்த்திச் சொல்லும் சொற்கள் எல்லாம் சாமிக்குப் பிடிக்காதாம்! அப்டிப்போடு......   எல்லாத்தையும் கடந்தவன்  தானே கடவுள், இல்லையோ?


துக்கமே அண்டாதுன்னு இருந்த இடத்தையும் இயற்கை  கடைசியில் விட்டு வைக்கலை. 2015 வருச நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்னு.

எங்கே பார்த்தாலும் புத்தர் சிலைகளே!  விதவிதமான முத்திரைகளை, விரல்களில் காமிச்சுக்கிட்டு நின்னும், இருந்துமா ......  கிடந்தும் கூட இருக்கலாம்.  சிலபல சந்நிதிகள் மூடிக்கிடந்ததால்  பார்க்க முடியலை.

திபேத்திய புத்தர் கோவில் இது. சீன ஆக்ரமிப்புக்குப்பின் புலம்பெயர்ந்த திபேத்தியர்கள் இந்தக் கோவிலை நல்லாவே பராமரிச்சு  விஸ்தரிச்சு இருக்காங்க.  இந்தக் கோவிலுக்கு  அசோக சக்ரவர்த்தி வந்துருக்காராம்.  அப்ப....  பழமையான  கோவில்தான், இல்லே?

உலகப் பாரம்பரிய சமாச்சாரங்களில் இதுவும் ஒன்னு.  எனக்குத் தெரிஞ்சவரை இப்படி ஹெரிட்டேஜ் கோவில்கள் அடுத்தடுத்து இருப்பது, கம்போடியாவுக்கு அப்புறம் இங்கெ நேபாளில்தான்னு  நினைக்கிறேன்.

உள்ளே நுழைஞ்சதும் கண்ணெதிரில் ஒரு செயற்கைக் குளத்தில் புத்தர் நின்ற கோலம் காமிக்கிறார்.  அவரை வணங்கி, கொஞ்சம் சில்லறைக்காசுகளை அந்தக் குளத்தில் எறிஞ்சுட்டுப்போகுது சனம். கையில் சில்லறை இல்லைன்னா  கவலையே வேணாம். அங்கேயே 'சில்லறை விற்பனை' நடக்குதே !!! போகட்டும்....  சிலருக்கு இப்படி ஒரு பிழைக்கும் வழி கிடைச்சுருக்கு பாருங்க!
பெரிய வளாகம்தான். கொஞ்சம் கொஞ்சமா மேலேறிப் பரந்து போகுது.  பெரிய முற்றங்களுக்கு நடுவில்  சந்நிதிகள். நேபாளக் கோவில்களுக்குன்னே தனி டிசைன்ஸ் இருக்கே!  தங்கமுலாம் பூசுன சுவர்களும் கதவுகளும்,  வாசல் முகப்புமா இருந்தாலும்  அங்கங்கே கருப்பாக் கரி படிஞ்சு  தங்கத்துக்குள்ள மினுக்கல் இல்லாமத்தான் இருக்கு.
ஒரு இடத்தில் வஜ்ரா என்னும் புனித ஆயுதம் மேடையில் வச்சுருக்காங்க. புத்தமத சடங்கு சம்ப்ரதாயங்களில் இந்த  தேவலோக ஆயுதத்துக்கு  ரொம்பவே  முக்கியத்துவம் இருக்கு.  கிண் ன்னு  இருக்கும்  இதையே வேற உலோகங்களிலும், சில இடத்தில் காங்க்ரீட்டிலும் கூட பார்த்துருக்கேன்.  இந்த வஜ்ரா ஒருவேளை தேவேந்த்ரனின் வஜ்ராயுதமோ?

பத்து கிலோ தங்கம் பயன்படுத்தி, ஏற்றவும் கூடுதல்  உயரக் கும்மாச்சி  ஸ்தூபாவுக்கும், மற்ற சந்நிதிகளுக்கும்  தங்கம் அடிச்சுருக்காங்களாம். (ஆஹா.... இன்னும் நம்ம வேலூர் பக்கம் இருக்கும் ஸ்ரீபுரம் பற்றி இவுங்களுக்குத் தெரியலை போல  :-)...  )
இந்த கும்மாச்சி கோபுரத்து அமைப்புக்குன்னு ஒரு  சிலவிதிகள் இருக்கு. கிண்ணத்தைக் கவுத்து வச்சுருப்பதுபோல் ஒரு அரைவட்டக் கட்டிடத்தின் உச்சியில் சதுரமா ஒரு  அமைப்பு மேலேறிப்போகுது. இந்த சதுர டிஸைனின்  உச்சிமேல் பாகத்தில்தான்  கண்களும்,  மூக்கும், பொட்டும் வரைஞ்சுருக்காங்க.    அதுக்கு மேலே கூம்புருளை போல டிஸைன்.  வட்டவட்டமான  வளையங்களால் மேலெ போகப்போகக் குறுகிக்கிட்டே  வருது. மொத்தம் பதிமூணு வளையங்கள். அதுக்கும் மேல்  உருண்டையா கலசம். கலசத்துக்கு மேலே ஒரு குடை.

கீழே ஒரு படம் நிலநடுக்கத்துக்கு முன் இருந்தது (சுட்டேன்)இது இப்போ இருக்கும் நிலமை.  பழுதான வளையப்பகுதிகளில் ஓலையும் சாக்குமாப் போட்டு  மூடி வச்சுருக்காங்க.
கோவில் வளாகம் முழுசும் பழுதுபார்க்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஆனாலும்  பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் போய்  பார்க்கவும், படம் பிடிக்கவும், தரிசனம் செஞ்சுக்கவும்  ஒரு தடையும் இல்லை.      ரொம்ப மோசமான பகுதிகளில் மட்டும்  மன்னிக்கணுமுன்னு  போர்டு வச்சுருக்காங்க.


தங்கமா இருந்தால் என்ன? பித்தளையா இருந்தால் என்ன? அதனால் எனக்கொரு பிரச்சனையும் இல்லைன்னு சொல்லிக்கிட்டு நம்ம ஆஞ்சி வம்சத்துக்காரர்கள் ஏராளமா அங்குமிங்குமா போய் அவுங்க வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.
பெரிய ஸ்தூபாவின்  அரைவட்ட கீழ்ப்பகுதியைச் (கவுத்த கிண்ணம்)சுத்தி  வெவ்வேற புத்தர்களுக்கான சந்நிதி. அக்‌ஷோப்யா, வைராஸனா, ரத்னசம்பவா, அமிதாபா, அமோகஸித்தின்னு.....  மூடித்தான் இருக்கு எல்லாமே....  வெளியே முகப்பு பார்த்து க்ளிக்கினேன்.

சேஷன்கள்தான் எங்கிலும். இடுப்புவரை மனித உடலும் சந்நிதியைச் சுத்திப்போகும்  வாலுமா.....   ஹைய்யோ!!!
கர்ம ராஜ மஹா விகாரம் என்ற புத்த மடக் கட்டிடம் முழுசுமா இடிஞ்சு போச்சு. அங்குள்ள  கர்ம ராஜரைத் தனியா ஒரு ஷெட்டில் இப்போதைக்கு வச்சுருக்காங்க.
இன்னொரு இடத்தில் அவலோகிதேஸ்வரா தனியா உக்கார்ந்துருக்கார். ரொம்பவே அழகான முகம்.  ஆஞ்சி ஒன்னு  அவர் கையைப் பிடிச்சுக் குனிஞ்சு கும்பிட்டுக்கிட்டு இருந்துச்சு. பாவம்.... அதுக்கு என்ன பிரார்த்தனையோ....

ஒரு பக்கக் கதவை  மூடுன சந்நிதியில் ஒரு பட்டர் (? !)பூஜை செஞ்சுக்கிட்டு இருந்தார். ஹாரதி தேவி சந்நிதியாம். பெரியம்மைக்கான கடவுளாம். அட நம்ம மாரியாத்தா! எங்க பக்கம் இவுங்க பெயர் மாரியம்மான்னேன்.   அப்படியான்னு கேட்டவர் இன்னொரு கதவையும் திறந்து வச்சு  ஆரத்தி காமிச்சு நமக்குக் கண்ணில் ஒத்திக்கவும் கொடுத்தார்.
சிவலிங்கம்போல ஆவுடையோடு  இருக்கும் சிலைகளில் நடுவில் லிங்கத்துப் பதில் புத்தர் இருக்கார். பித்தளை வெங்கலச் சிற்பங்களில் கடவுளர்கள் ரொம்பவே அழகா இருக்காங்க.

ஒரு கையில் பாத்திரமும்  மறுகையில் கரண்டியுமா... இவர் அன்ன பூரணனோ?
இல்லை ஒரு வேளை  தன்வந்த்ரியாகவும் இருக்கலாம்.  பல சிலைகளில் சிற்பங்களில் கையில் ஒரு பாத்திரம் வச்சுருக்காங்க.  புத்தர் கோவில்னு சொன்னாலும்  இந்துச் சாமிகள் ஏராளமா இருக்கு.

அமுதகலசம் ஏந்தி வரும் கருடாழ்வார் கொள்ளை அழகு!
குரங்குகளுக்கு மட்டுமில்லை... எங்களுக்கும்தான் இங்கே இடம் இருக்குன்னு  பைரவர்கள் சுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க. இடைக்கிடையே நல்ல தூக்கத்திலும் சிலர்:-)

சுற்றுலாப்பயணிகள் எக்கச்சக்கமா வர்றதால்....  அங்கே எப்பவும் கூட்டமாத்தான் இருக்குமாம்.  நினைவுப்பொருட்கள், சாமி விக்ரஹங்கள், படங்கள், இப்படிக் கலைப்பொருட்கள் விற்கும் கடைகள் பெரிய  அளவில் இருக்கு.

தலையில் கங்கை  பீறிட்டு இறங்கும்  சிவன் விக்ரஹம் அருமை!  சைஸும் ரொம்பவே பெருசு.  வஜ்ராக்கள் கூட சின்ன சைஸுலே இருந்துச்சுதான். அதென்னமோ வாங்கிக்கத் தோணலை. மகளுக்கு மட்டும்  ஓம் மணி பத்மே ஹூம் போட்ட  காப்பு ஒன்னு வாங்கினேன்.
இங்கிருக்கும்  சின்னச்சின்ன சந்நிதிகள் நிரம்பிய முற்றத்தை வலம் வந்து வணங்கறதுதான் முறைன்னு ஒரு புத்தபிஷூ சொல்லிக்கிட்டு இருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தப்ப,  எங்க பக்கம் ஹிந்து கோவில்களிலும் வலம் வந்து வணங்கறதுதான் சரியான முறைன்னு சொன்னதும் அவருக்கு  சந்தோஷமாப் போயிருச்சு. இன்னும் இந்தியாவுக்கு வரலையாம்.  கட்டாயம் தென்னிந்தியாவுக்கு வாங்க. அழகழகான கோவில்கள் நிறைஞ்ச பகுதின்னு  சொல்லி வச்சேன்.
மேலே இருந்து பார்க்கும்போது காத்மாண்டு பள்ளத்தாக்கும் அதிலுள்ள  கட்டடங்களுமா  நல்லாவே இருக்கு. இந்தப் பள்ளத்தாக்கு கூட ஒரு சமயம் நீர் நிரம்பிய  ஏரியாக இருந்ததாம்.  மேலோகத்தில் இருந்து கடவுள் கீழே பார்த்தப்ப  ஏரியின் நடுவில் ஒரு அழகான தாமரை மலர்ந்து நின்னதைக் கவனிச்சு, அதே தனக்குரிய இடமுன்னு தீர்மானிச்சு, ஒரு பக்கம் ஏரியை கையால் கீறி தண்ணீரை வடிய விட்டாராம். கீழே பெரிய பள்ளத்தாக்கு  உண்டானது அப்போதானாம்.  தாமரை இருந்தது ஒரு குன்றின் மேலாம். அந்தக் குன்றுதான் இப்போ  நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் ஸ்வாயம்பு கோவில் இருக்குமிடம். தாமரை இருந்த குறிப்பிட்ட இடம்தான் ஸ்தூபா அமைச்ச இடமாம்.  புத்தபிஷூ சொன்ன செவிவழிக் கதையைக் கேட்டுக்கிட்டேன்.
அங்கே எடுத்த முன்னூத்தி நாப்பத்தியெட்டு படங்களில் ஓரளவு   நல்லா வந்துருக்கறதை   ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன். என்னதான்  நான்  வர்ணிச்சு வச்சாலும்  ஸீயிங் இஸ் பிலீவிங்னு சொல்லும் வகைக் கோவில் இது.  சந்தர்ப்பம் கிடைச்சால் தவற விடவேணாம்.தொடரும்........ :-)

PINகுறிப்பு: நேத்து இதை எழுதிக்கிட்டு இருந்த காரணமோ என்னமோ தெரியலை....   ஒரு அலங்கார இரும்புகேட்டு வளைவில் ஒரு குரங்கின் கை மாட்டிக்கிட்டு, அதாலே  எடுக்க முடியலை. பாவம்.... தேமேன்னு அங்கேயே உக்கார்ந்துருக்கு. பார்க்கறவங்களுக்கு  அது என்னமோ ஒரு கையால்  அந்தக் கம்பியைப் பிடிச்சுக்கிட்டு இருக்கறமாதிரி தோணுது. எனக்கு மட்டும்தான்  அதன் விரல் அந்த சுழல்வட்ட டிஸைனில் மாட்டிக்கிட்டு இருப்பது தெரியும்!  எப்படி எடுக்கறதுன்னு பலவிதமா யோசனை செஞ்சுக்கிட்டே இருக்கேன். மடக்கி வச்சுருக்கும் விரல்களை நீட்டினால் மெதுவா எடுத்துடலாம்.  ஆனால்....    கிட்டப்போனால் பல்லைக் காட்டுது. பேசாம மயக்க மருந்து  கொடுத்துட்டு அது மயங்கிக்கிடக்கும்போது மெல்ல விரல்களைப்பிடிச்சு வெளியே எடுக்கறதுதான் பெட்டர். இப்ப அதுக்கு மயக்க ஊசி போடணுமா இல்லை....வாழைப்பழத்துக்குள்ளே  மயக்க மருந்து வச்சுக் கொடுக்கலாமா?

ராத்திரி பூராவும் இதே கனவுதான். அப்பப்பத் தூக்கம் கலையும்போதும்... ஐயோ குரங்குக் கையை எப்படி எடுப்பதுன்னே நினைவு.  பொழுது  விடிஞ்சு  ஒன்பதரைக்கு எழுந்திருக்கும் வரையில்  இதேதான்  கன்டின்யூ செஞ்சுக்கிட்டு இருந்துச்சு.  ஆப்புலே ஆப்ட்ட குரங்கு தெரியும். இதென்ன கை மாட்டிக்கிட்ட குரங்கு?  ஹே ஆஞ்சி.....10 comments:

said...

அருணாச்சல் சென்றபோது Zemithong என்ற இடத்திற்குச் சென்றோம். அங்கேயும் இது போன்ற ஸ்தூபா - நான்கு பக்கங்களிலும் கண்கள்! படங்கள் பார்க்கும்போது அந்த நாள் நினைவில் வந்தது.

குரங்கு பாவம். கையை வெளியே எடுக்க முடிஞ்சுதா....

தொடர்கிறேன்.

said...

காக்கைகள் வலசை போகுமோ?

தனியாய் அமர்ந்திருக்கும் புத்தரும், அவர் கையில் தலை சாய்த்திருக்கும் ஆஞ்சிவம்சமும் அருமை.

பாவம் கை மாட்டிய குரங்கு. பைரவர்கள் இருக்காங்கன்னு போட்டிருக்கீங்க.. படத்தைக் காணோம்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சாமி பார்த்துக்கிட்டே இருக்கார்!!!

குரங்குக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை.... இன்றைக்கு வேற கனவு வந்துருச்சு :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

பதிவின் கடைசியில் கனவுக்கு முன்னால் ஒரு ஆல்பம்சுட்டி இருக்கே! பைரவர்கள் எல்லாம் அக்கே சுத்திக்கிட்டு இருக்காங்க :-)

காக்கை வலசை போகாது. சூடான நாடுகளில்தான் இருக்கும். எங்கூரில் காக்கைகள் கிடையாது. அதான் பார்த்ததும் க்ளிக்கினேன் :-)

said...

// பார்த்ததில் பிடிச்சதைத் தேடி, கிடைச்சதில் திருப்தியாச்சு .//
வாழ்க்கைத் தத்துவம், அருமை. நன்றி

said...""ஆஞ்சி ஒன்னு அவர் கையைப் பிடிச்சுக் குனிஞ்சு கும்பிட்டுக்கிட்டு இருந்துச்சு""

அடடா என்னே பக்தி...அழகான கிளிக்...


அந்த கண்களும், ஸ்தூபியும் ..விசேஷம்

said...

கோவில் படங்கள் ரொம்ப அருமை. எல்லாமே ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லா புத்தர்களையும் தரிசித்துக்கொண்டேன். அதுவும் புத்தர் கையில் தலையை வத்திருக்கும் வானரம்-ரொம்பப் பிடித்திருந்தது.

ஸ்தூபிகளும், அதில் வரைந்திருக்கும் கண்களும், எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஞாபகப்படுத்தியது.

(தால் கலர்தான் மங்கலா இருக்கு. பரவாயில்லை... பயணத்தில் உங்களுக்குப் பெரும்பாலும் சாப்பாட்டுப் பிரச்சனை இல்லை).

ஓடும் பாக்மதியும் நல்லா இருந்தது. 2008ல் தண்ணீரே இல்லாமல் வெறும் சாக்கடையாக இருந்தது.

said...

வாங்க விஸ்வநாத்.

வாழ்க்கை பூராவும் அனுபவங்களே! அந்த அனுபவங்களின் தொகுப்பு கடைசியில் வாழ்க்கைத் தத்துவமா மாறிப்போகுது :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

பாவம்ப்பா... அந்த ஆஞ்சி. அதுக்கு என்ன மனக்குறையோ? ப்ச்...

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பயணங்களில் சாப்பாடு எனக்கு ரெண்டாம் பட்சம்தான். அதிலும் வெறும் சாதம் கிடைச்சால் கூடப் போதும். எதிர்பார்ப்பு இல்லாததால்.... அவ்வளவா சிரமம் இல்லை.