Friday, March 24, 2017

உலக சமாதானத்துக்கொரு கோவில் ( நேபாள் பயணப்பதிவு 20 )

இன்னும் ஒரு இடத்தைப் பார்த்துட்டு அறைக்குத் திரும்பலாமுன்னு துர்கா சொன்னார். இந்த  ஒருநாள்  சைட் ஸீயிங் கூட நம்ம ப்ரகாஷ் ஏற்பாடு செஞ்சதுதான்.  நல்லாதான் முக்கியமான இடங்களைக் கவர் பண்ணி இருக்கார்னு பாராட்டத்தான் வேணும். இப்போ வந்துருக்கும் இடம் உலக சமாதானத்துக்குக் கட்டி இருக்கும் கோவில். வொர்ல்ட் பீஸ் பகோடா. World Peace Pagoda.
பார்க்கிங் போட்டு இறங்குனா.....  ஐயோ..... ஏராளமான படிகள் ஏறிப்போகணுமாம்.  மலைச்சு நின்ன என்னிடம்,  'நீ மலையேற வேணாம். நான் உன் (கெமெரா)கண்ணா இருந்து  எல்லாத்தையும் படம் எடுத்துக்கிட்டு வரேன்' னு நம்மவர் சொன்னதும், வழக்கத்துக்கு மாறா சரின்னுட்டேன்.  இவருக்குப் பெரிய ஷாக் :-)


அவர் வரும்வரை?  இங்கேயே வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். ஏற்கெனவே   கார் பார்க் பாதிக்குன்றுலேதான் இருக்கு.  இந்த பகோடாவை நம்ம அறையில் இருந்தும், ஜொம்ஸொம்மில் இருந்து பொகரா வரும் வழியில் ப்ளேனில் இருந்தும் 'பார்த்துட்டேனே' :-)
மேலே படம் :  விமானத்தில் இருந்து க்ளிக்கியது

மேலே.... இந்தப்படம், நம்ம அறையின் பால்கனியில் இருந்து க்ளிக்கியது.


ரெண்டுமூணு தீனிக்கடைகள் இருக்கு. அதுலே ஒரு கடைக்குப்போய் கடைக்காரம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக்கிட்டே உக்கார்ந்துட்டேன். நம்ம (குட்கா) ட்ரைவர், பார்க்கிங் இடத்துலே இருக்கும்  வண்டிகளில் சில   ட்ரைவர் நண்பர்கள்  இருக்காங்க. போய் பேசிக்கட்டுமான்னார். எப்படி?  முகவாயை வானத்துக்குக் காட்டி கீழுதடும் மேலுதடும் வெள்ளத்தடுப்புப் போட கண்ஜாடை, கை ஜாடை, குதப்பல் மொழியிலே.....    'ஓக்கே... எஞ்சாய்'னு
 அனுப்பிட்டேன். பயணிகள் எல்லாம் படியேறிப் போயிருக்காங்க.

அடையாளத்துக்கு எதுக்கும் இருக்கட்டுமுன்னு  ட்ரைவரை க்ளிக்கி வச்சேன்.

ஆனந்தா ஹில்ஸ் என்ற குன்றின் மேலே இருக்கு இந்த உலக சமாதானக் கோவில்.  ஷாந்தி ஸ்தூபான்னு  பெயர்.   ஸ்தூபாவுக்குப் போகும் வழின்னு கைகாட்டும்  வழியில் படிகளில் ஏறிப்போறாங்க நம்மவரும் துர்காவுமா. ஜப்பான் நாட்டு பௌத்தர்கள் கட்டுன கோவில்.  உலகப்போரில் ரொம்பவே அடிபட்டவங்க இவுங்கதானே!  சமாதானத்தின் அருமை இவுங்களுக்குத்தான் நல்லாவே தெரியும், இல்லையோ?

ஹிரோஷிமா கொடூரத்துக்குப்பிறகு  உலகமெங்கும் இப்படி சமாதானமும் சாந்தியும்  வேண்டி கோவில்கள் கட்ட ஆரம்பிச்ச ஜப்பான் பௌத்தமதத்து மக்கள்ஸ், நேபாளில் ஒரு ஷாந்தி ஸ்தூபா கட்ட 1947 ஆம் வருசமே திட்டம் போட்டுருக்காங்க. அப்ப நேபாளின் அரசு வேற மாதிரி செயல்பட்டுக்கிட்டு இருந்துச்சு. மன்னராட்சிதான்.
 புத்த சந்யாசி Nichidatsu Fujii,  உலக சமாதானத்துக்கு  நூறு கோவில் கட்டணுமுன்னு  முடிவு செஞ்சுக்கிட்டார். 1954 இல் ஜப்பானில் முதல் கோவில் கட்டினார். நேபாளில் கட்டுன முதல் கோவில்தான் இந்த ஷாந்தி ஸ்தூபா. நூத்துலே இதுக்கான வரிசை எழுபது.
கோவிலுக்கு இடம் வேணுமுன்னு கேட்டப்ப,  எல்லாத்தையும் ஆராய்ஞ்சு பார்த்து, அரசின் பாதுகாப்பு அமைச்சரே(டெபுடி) 1973 இல் வந்து ஆரம்பிச்சு வச்சுருக்கார். முதலில்  ஒரு புத்தர் சிலையும், தியானம் செஞ்சுக்க ஒரு ஹாலும்தான். அப்புறம் கட்டடம் கட்ட ஆரம்பிச்சு  சுமார் முப்பத்தியஞ்சடி உசரம்வரை போய்க்கிட்டு இருந்தப்ப, வேற எதோ அரசியல் காரணங்கள் காமிச்சு (டவுன் ப்ளானிங் குளறுபடின்னு  சொன்னாங்களாம்) கட்டுன மொத்தத்தையும் இடிச்சுப் போட்டுருக்காங்க.

ஜப்பானியர்கள் பொறுமை காத்து புத்தரை வேண்டிக்கிட்டே இருந்துருக்காங்க. இது நடந்து பதினெட்டு வருசங்கள் ஆனபிறகு 1992 இல்  பிரதமரே நேரில் வந்து கோவில் கட்ட ஒப்புதல் கொடுத்து அடிக்கல்லையும் நாட்டி வச்சு ஆரம்பிச்சுக் கொடுத்தார். ஆச்சு ஒரு ஏழு வருசம், இதைக் கட்டி முடிக்க.  அப்பவும் இதே பிரதமரின் ஆசிகளோடு 1999 இல்  இந்த பகோடாவைத் திறந்து வச்சுருக்காங்க.

இவ்ளோ ஆசைப்பட்ட புத்த சந்யாசி Nichidatsu Fujii க்கு கற்பனையில் பார்த்த கோவிலை  நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கலை.  1985 லேயே சாமிகிட்டே போயிட்டார். அப்ப அவருக்கு நூறாவது வயசு நடந்துக்கிட்டு இருந்தது. பதினாலு வருசம் காத்திருக்க முடிஞ்சுருக்காது தானே?
நூத்திப் பதினைஞ்சடி  உயரமான வட்ட அமைப்பு.  மேலே ஏறிப்போக படிகள் அமைச்சுருக்காங்க. வட்ட அமைப்பின் நாலு பக்கங்களிலும் புத்தரின்  வெவ்வேறு நிலையில் சிலைகள்.  ஜப்பான், தாய்லாந்து, ஸ்ரீலங்கா, நேபாள்னு  வெவ்வேறு தேச அன்பளிப்புகள்.  எல்லாம்  பொன் நிறம் :-) மேலே வலம் வந்து சுத்தி வரலாம். முன்னூத்தி நாப்பத்திநாலு அடிகள் ஒரு சுத்து.




மேலே கோவிலுக்குப் போய்ச் சேர சுமார் இருவது நிமிட்ஸ் ஆகி இருக்கு. போற வழியிலேயே ஒரு ஹிந்துக் கோவிலும் இருக்காம்.  நம்மவருக்கு எப்பவும்  மேலே உசரத்தில் இருந்து பருந்துப் பார்வை பார்க்கப்பிடிக்கும். (போன ஜென்மத்தில் கருடன்!) அங்கிருந்து தெரியும் பொகரா நகரையும், ஃபேவா ஏரியையும் மலைகளையும் நமக்காக க்ளிக்கிக் கொண்டு வந்தார். கூடவே ஒரு ஃபொட்டாக்ராஃபர் (நம்ம துர்கா) இருப்பதால்  இன்னும் கொஞ்சம் க்ளிக்ஸ்ன்னு  .....   ஜமாய்ச்சுட்டு முக்கால் மணி நேரத்தில் ரெண்டுபேரும் திரும்பி வந்தாங்க.



நேபாளிப்பெண்கள் கடின உழைப்பாளிகள். முதுகில் விறகுக் கட்டைகளைச் சுமந்துக்கிட்டு படிகளில் இறங்கி வர்றாங்க  :-(



நான்  கடைக்காரம்மா கமலினியுடன்  பேசிக்கிட்டு இருந்தேன். வியாபாரத்துக்கிடையிலே....  கடை மூலையில்  ஸ்டவ் அடுப்பில் சமையல் நடந்துக்கிட்டு இருக்கு.  அப்படியொன்னும்  வியாபாரம் ஜரூரா இல்லை.  நான் ஒருத்திதான்.  இன்னொரு வெள்ளைக்காரர் வந்து  சிப்ஸ் & கோக் வாங்கினார். பக்கத்து  மேஜையில் இடம்பிடிச்சுத் தின்னுட்டுக் கிளம்பிட்டார்.
இவுங்க திரும்பி வந்ததும் ட்ரைவர் ஓடி வந்தார்.  எல்லோருக்கும்  ஆரஞ்சு ஜூஸும், எனக்கொரு  மேங்கோ ஜூஸுமா வாங்கினோம்.
மௌண்டன் வியூ ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தப்ப  மணி ஆறு.   ரொம்பவே சுத்தியாச்சு. இனி கொஞ்சம்  ரெஸ்ட் எடுக்கட்டும் நம்ம துர்கா.
ராச்சாப்பாடு இங்கேயே ரெஸ்ட்டாரண்டில் முடிச்சுக்கிட்டால் ஆச்சு. இப்போதைக்கு சூடா ஒரு காஃபி போதும்:-)

உலகம் முழுவதும் சமாதானமும் சாந்தியும் நிலவட்டும்! ஓம்............

தொடரும்...........  :-)


19 comments:

said...

படங்கள் ஹப்பா சூப்பரோ சூப்பர்...அதுவும் அந்த டாப் ஆங்கிளில் ஏரி செம...

தொடர்ந்து கொண்டே இருக்கிறோம் இடையில் சிலது மிஸ் ஆக ஆனால் வாசித்து ஆனால் கமென்டல!!
இந்த இடத்துக்கெல்லாம் போக முடியுதோ இல்லையோ உங்க மூலம் பார்த்துக்கிட்டே வரோம்

said...


உலகம் முழுவதும் சமாதானமும் சாந்தியும் நிலவட்டும்! ஓம்............

said...

பகோடா...ரொம்ப பெருசா அமைதியா இருக்கு..

கோல்டன் புத்தர் அழகா இருக்கார்...ஆன கன்னம் எல்லாம் புஷ்டியா இருக்கே...

said...

புத்தர் கோவில் தரிசனமும் ஆச்சு. நீங்கள்தான் கோவிலுக்குள் செல்லவில்லை.

said...

அடடா.... பகோடாவைச் சாப்பிடாம விட்டுட்டீங்களே...! மேலே ஏறிப்போய் கண்களால் சாப்பிடாம விட்டுட்டீங்களேன்னு சொன்னேன்! படங்கள் அருமை!

said...

Dear Admin,
Greetings!
We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website to reach wider Tamil audiance...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல,
நம் குரல்
Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

said...

பகோடா அழகா இருக்கு. அருணாச்சலப் பிரதேசத்திலும் இப்படி சில பகோடாக்கள் பார்த்தேன்.

அங்கே இருக்கும் அமைதி பிடித்திருந்தது. புகைப்படங்கள் எடுத்த உங்களவருக்கும் வாழ்த்துகள்! :)

said...

வாங்க துளசிதரன்.

ஆஹா.... அந்தப் படம் நம்ம கோபால் க்ளிக்கியது! நம்ம ட்ரெய்னிங் வீண் போகலைன்னு எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி :-)

said...

வாங்க விஸ்வநாத்.
அப்படியே ஆகட்டும். ததாஸ்து, ஆமென் !

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஏன்ப்பா புத்தர் என்றாலே வத்தலும் தொத்தலுமா இருக்கணுமா? பிக்ஷை எடுத்து சாப்பிடும்போது ரகம்ரகமா உணவு கிடைக்காதா?

இல்லே... நம்ம பக்கத்துலே வேண்டாததைக் கழிச்சுக்கட்ட பிச்சைக்காரர்களுக்கு போடற பிச்சை மாதிரியா?

புத்தமதக்காரர்கள், சாதுக்களுக்கு பிக்ஷை அளிப்பதை ஒரு கடமையா மட்டுமில்லை, ரொம்ப ஆர்வத்தோடு அதை ஒரு பாக்கியமா நினைச்சுதான் செய்யறாங்க. இதை தாய்லாந்து, கம்போடியாவில் எல்லாம் பார்த்தது உண்மை.

ரொம்ப சிறந்த உணவு தயாரிச்சு, எச்சில் பண்ணாம வீட்டில் மற்ற யாரும் சாப்பிடுமுன்பு தர்மம் செய்வதுதான் பழக்கம்!!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அதென்னவோ அன்றைக்குக் கால் வலி அதிகம். கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலைன்னா முழுப் பயணமும் பாதிக்கும் . அதான் வேண புத்தக்கோவில்களை மற்ற நாடுகளில் பார்த்தாச்சே.... இப்படியெல்லாம் சமாதானம் சொல்லிக்க வேண்டியதுதான் !

said...

வாங்க ஸ்ரீராம்.

பல் இருக்கறவங்கதானே பகோடாவைச் சாப்பிடணும் :-)

அதெல்லாம் நம்ம மூணாவது கண்ணால் பார்த்தாச். கலியுகத்தில் மூன்றாம் கண்ணுக்கு நெத்திக்கண் என்ற பெயர் இல்லை கேட்டோ..... இப்ப அது கெமெராக் கண் :-)

said...

வாங்க க்ரிபா.

கூடுதல் வாசகர்கள் கிடைச்சால் வேணாமுன்னு இருக்குமா என்ன?

செஞ்சுருவொம் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... வாழ்த்துகளைச் சொல்லிட்டேன் !

நம்மூர்க் கோவில்கள் போல் இல்லாமல் சுத்தமாகவும் பராமரிக்கறாங்களே! அதுவும் ஓர் அழகுதான்! அமைதியும் அழகும் சேர்ந்தால் கேக்கணுமா?

said...

புத்தர் னாலே ..இப்படி பார்த்து பார்த்து பழகிடுசே...



...ரொம்ப சிறந்த உணவு தயாரிச்சு, எச்சில் பண்ணாம வீட்டில் மற்ற யாரும் சாப்பிடுமுன்பு தர்மம் செய்வதுதான் பழக்கம்!...


ம்ம்... உங்க கருத்து ரொம்ப சரிதான்...


இனி புத்தரை கொஞ்சம் புஷ்டிய நினைக்க பழகணும்...

said...

என்னது ட்ரைவரைக் க்ளிக்கினீங்களா தலைவி நீங்க எங்கியோ போயிட்டீங்க. :)

ஆமா கோபால் சார் ஸ்லிம் ஆயிட்டாரு வெறும் காய்கறி கீரைதான் தர்றீங்களா. :)

அடுத்த புக் ரெடி ஆகட்டும் :)

said...

குத்கா கொதப்புறவங்களால வாய சும்மாவே வெச்சிருக்க முடியாது. கொத கொதன்னு கொதப்பி நம்மள கொடுமைப் படுத்தீருவாங்க. நல்ல வேளை நீங்க அவரை அனுப்பீட்டீங்க.

சமாதானத்துக்காக ஒரு கோயில் கட்டியவருக்கு அதை முடிக்கிறதை விட உலகத்துல சமாதானம் நிலவனும்னுதான் ஆசை இருந்திருக்கும். உலகத்துல சமாதானம் வர்ர வரைக்கும் இருந்து பாக்கனும்னா... அவர் வாழ்ந்துக்கிட்டேயிருக்கனும். ஆனாலும் அவரோட நல்ல மனசுக்கு விரைவில் சமாதானம் வரனும்னு நானும் மனசார விரும்புறேன்.

நேபாளம்னு இல்ல... பொதுவாகவே பெண்களைப் போல உழைப்பாளிகளைப் பாக்க முடியாது. ஆண்களை விட உடல் வலிமைலயும் செய்யும் வேலையின் அளவுலயும் குறைவா இருக்கலாம். ஆனா அவங்க மனவுறுதி இருக்கே... அதுக்கு அளவே கிடையாது. பெண்கள் இல்லைன்னா இந்த உலகத்துல பல குடும்பங்கள் என்னைக்கோ அழிஞ்சிருக்கும்.

said...

வாங்க தேனே!

ட்ரைவரைக் கிள்ளினால்தான் தப்பு. க்ளிக்கினால் ஓக்கே :-)

ஒவ்வொரு முறையும் வெவ்வேற ட்ரைவர்கள். எப்படி எல்லோரையும் ஞாபகம் வச்சுக்கறது? நான் வண்டியைக் கூடக் க்ளிக் பண்ணி வச்சுக்குவேனாக்கும் :-)

நாங்க ரெண்டு பேருமே கொஞ்சம் இளைச்சுப் போயிட்டதாத்தான் நண்பர்கள் சொல்றாங்க. ஒருவேளை மகளின் கல்யாண டென்ஷனா இருக்கலாம். இனிமேப் பாருங்க.... ஆளுக்குப் பத்து கிலோ..... இளைக்கணுமுன்னு சொல்றேன், மகள் கல்யாணம் நடத்தி வச்ச மகிழ்ச்சியில் :-)

said...

வாங்க ஜிரா.

உண்மையோ உண்மை. பெண்களுக்கு இருக்கும் மனோதிடம் ஆண்களுக்கு இல்லைன்னுதான் பொதுவாச் சொல்லணும். சுமைதாங்கிகள்ப்பா !!!