Wednesday, March 15, 2017

நினைச்சது ஒன்னு கிடைச்சது மூணு ( நேபாள் பயணப்பதிவு 16 )

நல்ல தூக்கம் தூங்கி மறுநாள் காலை  ரெடி ஆகிட்டோம்.  என்ன ஒன்னு கரண்டு இல்லை.  இருட்டிலேயே தட்டுத்தடுமாறி..... அப்புறம்   பவர் வந்துருச்சுன்னு மணிபார்த்தால் காலை அஞ்சு ! பைகளை பேக் பண்ணியாச்.  எக்ஸ்ட்ரா வெயிட்  நம்ம சாளக்ராம்தானோ? ஊஹூம்.... அதான்   ஷூக்கள்  போயிருச்சே!  அதெப்படி அது கால்லே போட்டுக்கிட்டு வந்ததில்லையோ?  நம்ம கனம் குறைஞ்சு போயிருக்கும் இப்போ! இங்கேதான்    ஏர்ப்போர்ட்டில்  மனுசர்களையும் எடை போடறாங்களே ! அதுவும்  ஊர் முழுக்கக் கேக்கும்படி சத்தம் போட்டு ** கிலோன்னு ....ஐயோ... :-)

  நமக்கு ஆறேமுக்கால் ஃப்ளைட்.  துர்கா வந்து என்ன ப்ரேக்ஃபாஸ்ட் சொல்லட்டுமுன்னு கேட்டார். மெனு பார்த்துட்டு ஒன்னும் சரிப் படலை. பேன் கேக்  சொல்லிருங்கன்னதும் நம்மவர் தனக்கும் அதேன்னார்:-)
அடை மாதிரி திக்கா ஒன்னு வந்தது, கொஞ்சம் தீசலோடு!  முடிஞ்சவரை தின்னாப்போதும். கூடவே  ஒரு காஃபி. நெஸ்காஃபிதான். துர்கா ப்ரெட் டோஸ்ட் & டீ.

நேரம் ஆயிருச்சுன்னு   பைகளை எடுத்துக்கிட்டு அறையை விட்டு வெளியே வந்தால்  சங்கர் & கோ ரெடியாகி அறைவாசலில்  இருந்தாங்க. அவுங்க  ஃப்ளைட்  எட்டு மணிக்காம். வேற ஏர்லைன்ஸ். பைபை சொல்லிட்டு  இருக்கும்போதே துர்கா வந்து 'ஃப்ளைட்  டிலே . கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாமு'ன்னார்.
சரின்னு  நான் வைஃபை கிடைக்குதான்னு தேடிக்கிட்டு இருக்கும்போது நம்மவர்  சங்கர் & பாலாஜி  இருக்கும் அடுத்த அறைக்குப் போய் வந்தவர் கையில் ரெண்டு சாளக்ராம் இருக்கு.  இதை  சங்கர் நமக்குத் தரேன்னு சொல்றாருன்னார்.  அப்ப அவருக்கு? எட்டு வாங்கி இருக்காராம். அதுலே ரெண்டு வேணுமுன்னா தரேன்னு  காமிச்சாராம். அவருக்குன்னு வாங்குனது என்பதால் நல்லதாவே வாங்கி இருப்பார். அதுவும் முக்திநாத்தில் வாங்குனது என்பதால் ஒரிஜினலாக இருக்கும்தான். ஆனால் 'அதுக்குண்டான காசு வாங்கிக்கறதா இருந்தால் ஓக்கே'ன்னேன். திரும்பிப்போய்  நான் சொன்னதைச் சொல்லி  'விலைக்குத் தர்றதா இருந்தால் எடுத்துக்கறே'ன்னதும் விலையைச் சொன்னவர், எந்தக் காசா இருந்தாலும் சரின்னார்.  என்னிடம் இந்தியக் காசு  வச்சுருந்தேன். அதையே  கொடுத்தேன்.
இப்ப நம்மாண்டை மூணு சாளக்ராம் கற்கள்.  நினைச்சது ஒன்னு  கிடைச்சது மூணு :-)

சங்கரும் நம்ம அறைக்கு வந்து பேசிக்கிட்டு இருந்தார். அவருடைய மகளுக்குக் கல்யாணம் வச்சுருக்காராம். கட்டாயம் கல்யாணத்துக்கு வரணுமுன்னு கேட்டுக்கிட்டார். சென்னைக்குப் பக்கம்தான். ஆந்திரா பார்டருக்குப் பக்கம் புத்தூரில்.  நாங்க அதுவரை  சென்னையில் இருப்பமான்னு தெரியலை. இருந்தால் வர்றோமுன்னு சொன்னோம். எனக்கு இவரைப் பார்த்ததும் எங்க தாடி மாமா ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கு :-)

 உங்களுக்கு  என்  தாடிமாமாவைத் தெரியுமோ? தெரியலைன்னா.... இங்கே பாருங்க:-)கோவில் ஒன்னு கட்டிக்கிட்டு இருக்காராம். தேவி உபாசகராச்சே!  நல்லதுன்னு சொன்னேன்.  பேச்சுக்கிடையில் அப்பப்ப ஜன்னல்வழியா ரன்வேயைப் பார்த்து க்ளிக்கிக்கிட்டு  இருந்தேன். ப்ளேன் வர்ற தடயம் கூட இல்லை.  அப்போ ஒரு ஆள் ரன்வேயில் ஓடிக்கிட்டு இருந்தார்.  வருது போல.....
அதே சமயம்  துர்கா வந்து நம்ம பைகளை எடுத்துக்கிட்டுக் கீழே போனார்.  ஜன்னலை மூடிட்டு நாங்களும் போனோம். நேத்து  பார்ட்டி நடந்த இடம் அந்தச்  சுவடே தெரியாமல்  சுத்தமா இருக்கு.  பார்ட்டிக்கான  சுவடு  வெளியில் சுவத்தோரம்!  ரீசைக்கிள் ஆகுமுன்னு நினைக்கிறேன். இங்கே கூடைகள் எல்லாம் கும்மாச்சி ஸ்டைல்தான்.

நேபாளில் குளிர் அதிகமா இருக்குமுன்னு  நானே என் கையால் ஒரு ஸ்கார்ஃப் பின்னிக்கிட்டுப் போயிருந்தேன். அங்கே போனா... குளிரைக் காணோம். அதுக்காகக் கஷ்டப்பட்டுப்  பின்னியதை விட முடியுதா?  குறைஞ்சபட்சம் ஒரு க்ளிக்?  :-)

ரெண்டே நிமிச நடையில் ஏர்ப்போர்ட்.  அங்கிருந்து இன்னும் ஃப்ளைட் வரலைன்னு வாட்ச்மேன்  சொன்னதும் 'அங்கே நின்னுக்கிட்டு என்ன செய்யறது....  திரும்ப அறைக்கே போகலாமுன்னு  துர்கா சொன்னதும்.... ' செக்கவுட் ஆனபின் எப்படித் திரும்பப் போறதுன்னேன்.

'அதெல்லாம் இங்கே பரவாயில்லை. ....   ப்ளேன் வந்ததும்  ஏர்ப்போர்ட்க்கு வந்தால் ஆச்சு'ன்னார். ஹொட்டேலுக்குத் திரும்பி மேலே அறைக்குப் போனோம். செக்கவுட் செய்யறோமுன்னு  கதவைச் சும்மா சாத்திட்டு வந்தது அப்படிக்கப்படியே இருக்கு.  ஜன்னல் கதவைத் திறந்து வச்சேன். ப்ளேன் லேண்ட் ஆச்சுன்னா தெரியுமே :-)

இதுக்குள்ளே ஜெயந்தி நம்ம அறைக்கு வந்தாங்க. அவுங்களோடும் பேச்சு.  அப்புறம் இங்கே இருக்கறதுக்குப் பதிலா ஏர்ப்போர்ட்டே போயிடலாமுன்னதும் திரும்பப் போனோம்.   நல்ல கூட்டம்.  உள்ளுர் சனமே அதிகமா இருக்காங்க.
அம்மா தூக்கி வச்சுருந்த குழந்தை அழகு!  பெயர் சொன்டில்.... செந்தில்னு நான் நினைச்சுக்கிட்டேன்:-)
கொஞ்ச நேரத்துலே ஸிம்ரிக் லேண்ட் ஆச்சு.  வேடிக்கை பார்க்கும்போதே டாராவும் வந்துருச்சு.

சங்கர் & கோ அதுலே போயிட்டாங்க. நம்ம ஸிம்ரிக்கிலே உள்ளூர் ஆளுங்களுக்கு முன்னுரிமையோ என்னவோ அதுவும் கிளம்பிப்போயிருச்சு. இப்ப வந்துரும் கொஞ்சம் வெயிட்ன்னு சொல்றாங்க.
நாங்க  அங்கே இங்கேன்னு பேசிக்கிட்டே சுத்திக்கிட்டு இருக்கோம், 'அப்பப்ப வந்துட்டானா  வந்துட்டானா'ன்னு எட்டிப் பார்த்துக்கிட்டே :-)  இன்னொரு இந்தியத் தம்பதிகள்  சிநேகமாச் சிரிச்சாங்க. போதாதா?  ராஜஸ்தான் மாநிலமக்கள். ஆனால் பொறந்து வளர்ந்ததெல்லாம்  சிவகாசி!  என்னைவிட  நல்லாவே தமிழ் பேசறாங்க. கயிலை யாத்திரை முடிச்சு  முக்திநாத் தரிசனத்துக்கு  வந்திருக்காங்க.  நேத்து தரிசனம் ஆச்சாம். இதோ..திரும்பிப்போறாங்க.
கயிலை யாத்திரை, கஷ்டமா? பரிக்ரமா பண்ண முடிஞ்சதான்னு விவரம் கேட்டுக் கிட்டேன்.  அவ்வளவாக்கஷ்டம் இல்லையாம். ஆனால்  60 வயசுக்கு மேலே இருந்தால் பரிக்கிரமா  அனுமதி இல்லை. கணவர் உடம்பு வேறு அன்ஃபிட்ன்னு சொன்னாங்க.  கயிலை தரிசனம் மட்டும்  செய்ய அனுமதிச்சாங்களாம். அவுங்க பெயர் மது. என் மகளோட பெயரும் இதுதான்னு சொன்னேன்:-)

துர்காவோடு கொஞ்சம் கதை.  அவருடைய  மலைப்பயணங்களைப் பத்திச் சொன்னார். ப்ளேன் வந்தது. பைலட் இறங்கி வந்து வெளியே பெஞ்சில் உக்கார்ந்து   ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடறார்.  மணி ஒன்பதாகிருச்சு. காத்து வந்துருமோன்னு  கலக்கம்....  நல்லவேளை  ஒன்பதே காலுக்கு, 'போய் கேறிக்கோ'ன்னு  உத்தரவாச்சு.
போன அதே மாதிரி திரும்பி வர்றோம். அதே ஸீட்டும்கூட:-)  முட்டாய் கூடவே காதுக்குப் பஞ்சும் வச்சுருக்காங்க,  நம்முன்னே நீட்டுன கூடையில்:-)
ஹைய்யோ....  இப்படி பஞ்சு கொடுக்கறது இன்னும் இருக்கா என்ன? இதை வச்சே சினிமாவில் எத்தனை ஜோக்ஸ் வந்டுருக்கு :-)  கோட்டைச் சுவர் போல அடர்த்தியா வெள்ளை மேகங்கள் வழியை மறைக்குது. அன்னபூரணா, தவளகிரி, மச்சிப்புச்சரே எல்லாம்  மேகத்துக்கிடையில்  லேசா காட்சி கொடுத்தாங்க.
பொகரா நெருங்கிருச்சு. ஃபேவா லேக்  இதோ பரந்து விரிஞ்சு போய்க்கிட்டு இருக்கு. கிளம்பிய இருபதாவது நிமிட் பொகரா வந்துட்டோம்.  இதே இடத்துக்கு  சாலை வழியாப் போனால் சுமார் பதினொரு மணி நேரமாகுமாம்! அம்மாடியோவ்....

ஒழுங்கான நேரத்துக்கு விமானம் அமைஞ்சுருந்தால் காலை ஏழு மணிக்கு  மவுண்டென் வ்யூ வந்துருக்க வேண்டிய நாம் இப்போ மூணுமணி  நேரம் கழிச்சு வந்துருக்கோம். 'அந்தவரைக்கும் நல்லபடியா வந்து சேர்ந்தமேன்னு சந்தோஷப்படு'ன்றார் நம்மவர்.

அதே அறை கொடுத்தாங்க.  ஒருமணி நேர ரெஸ்ட்.  ஏர்ப்போர்ட்டில் காத்துருந்தே களைச்சுப் போயிருந்தோம். இன்றைக்கு இங்கேதான் தங்கறோம். பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கு:-) மவுண்ட் வ்யூ ஹொட்டேல் கார் நமக்காகக் காத்திருந்துச்சு.

டிரைவர், வாயில் குட்கா போட்டுக் குதப்பிக்கிட்டு இருக்கார். பேச்சு கிடையாது.  எல்லாமே  கண்ஜாடை கை ஜாடைதான்:-) இந்த குட்காவைக்கூட இப்பதான் வாழ்க்கையில்   முதல்முறையாப் பார்க்கிறேன்.  இது கூட இந்திய இறக்குமதிதான்.
பதினொன்னேகாலுக்குக் கிளம்பியாச்சு ஊர்சுத்த  :-)


14 comments:

said...

பரவாயில்லை. பத்திரமா பொக்காரா வந்தாச்சு. படங்களைப் பார்த்தபோது, நீங்கள் வந்த விமானம், பொக்காரா வரும்போது 2 பேர் மட்டும் வந்து சேர்றமாதிரி குட்டியாயிடுச்சோன்னு பார்த்தேன். குட்டி விமானம் ரொம்ப அழகா இருக்கு.

said...

நன்றி, தொடர்கிறேன்.

said...

அதிகம் பயணம் செய்தவர்களில் உங்கள் பெயர் கட்டாயம் இருக்கும்

said...

டீச்சர்... பதிவுல வர்ர படங்களையெல்லாம் பாக்கப் பாக்க அங்கல்லாம் போய்ப் பாக்கனும்னு இருக்கு. எப்போ கொடுத்துவெச்சிருக்குன்னு தெரியல. அதுலயும் இவ்வளவு பாடுபட்டுப் போறதுங்குறது... பாப்போம்.

சாளக்கிராமமும் வாங்கீட்டீங்க. அருமை. எதோ ஒரு நத்தை மாதிரி தெரியுது. என்ன அழகான டிசைன்.

said...

சுவாரஸ்யம். பைலட் வெளியில் வந்து பெஞ்சில் அமர்ந்து டிபன் சாப்பிடுவது என்பது வேடிக்கையாக இருந்தது!

said...

அருமை...

said...

பத்திரமாக திரும்பியாச்சு. பயணத்தில் புதியவர்களைச் சந்திப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது தான்.....

தொடர்கிறேன்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆஹா... அந்தக் குட்டி விமானம் சும்மா மேலே ஒரு வட்டம் போட்டு வரத்தான். ஜொம்ஸொம் வரையெல்லாம் போக ச்சான்ஸே இல்லை :-)

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஐயோ... நீங்க வேற ! நிறையப்பேர் இன்னும் அதிகப் பயணங்களில் ஓசைப்படாம கலந்துக்கிட்டு இருக்காங்க.

இங்கே எழுதறதால்தான் அதுவும் நீட்டி முழக்கி விஸ்தரிச்சு.... அதிகப்பயணம் செய்வது போல ஆக்டிங் கொடுத்துக்கிட்டு இருக்கேன் :-)

said...

வாங்க ஜிரா.

நான் உங்க பக்கம் வந்து இலங்கைப் பயணத்தை ரசிச்சுக்கிட்டு இருக்கேன். பின்னூட்டம் போடத்தான் நேரமில்லை, இப்போதைக்கு.

சாளக்ராம் உடைஞ்சுருந்தாலும் அதுக்கு மதிப்பு உண்டாம். பூஜையிலும் வைக்கலாமாம். உள்ளே சக்கரம் மாதிரி இருப்பதால் இது விஷ்ணு சக்கரம் என்ற வகையில் வருது.பெரிய கற்களை உடைச்சுப் பார்த்தால்தானே உள்ளே இருக்கும் டிஸைன் தெரியும், இல்லையோ?

எதோ ஒரு காலத்துலே ஒரு பூரான்போல ஒரு பூச்சி உள்ளே போயிட்டு அங்கேயே வளர்ந்து கடைசியில் ஃபாஸில் ஆகி இருக்கு. கல்லுக்குள் அதுக்கு உணவு எப்படி கிடைச்சிருக்கும் என்பது கேள்வி இப்போ!!! துளைபோட்டுப் போகும் அளவுக்கு மிருதுவான கல்லோ?

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணத்தில் புதியவர்கள்.... ஆஹா.... நீங்க சந்திக்காத எண்ணிக்கையா?

நட்பு தொடர்வதுதான் அபூர்வம். வாசகர்களாப் பிடிச்சுப் போட்டுருப்பதால்.... ஒருவேளை தொடரலாம் :-)

said...

வாங்க ஸ்ரீராம்.

எளிமையான மக்கள்ஸ்தான். அதிலும் குட்டி விமானப் பைலட்டுகள் அலட்டிக்கறது கிடையாது :-)

நம்மூர் பஸ் ட்ரைவர்கள் போல....!!!