Wednesday, March 22, 2017

ஐயோ.... சுற்றுலா வந்த இடத்துலே.... ப்ச்...( நேபாள் பயணப்பதிவு 19 )

 முதலில்  தாகத்துக்கு   லஸ்ஸி கிடைச்சது.  எனக்கு  அதன்  கூடவே வெறும் சோறு.  மத்தவங்க  கறி, குழம்பு, சப்பாத்தி, சுட்ட அப்பளம்  வகைகளோடு லஞ்ச் வாங்கிக்கிட்டாங்க. தயிர் வேணுமுன்னு சொன்னதும்  ரெண்டு ஐஸ்க்ரீம் கப்பில் தயிர் கொண்டு வந்து வச்சாங்க:-)  ட்ரைவர் மட்டும் எங்களோடு வந்து சாப்பிடாமல் வேற இடத்துலே சாப்பிடப்போயிட்டார்.பித்தளைத் தட்டும் பித்தளைக்கிண்ணங்களுமா  தாலி மீல்ஸ்.  இன்னும் கொஞ்சம் பளபளன்னு  தேய்ச்சு மினுக்கி இருக்கக்கூடாது?  ப்ச்....

 சாப்பாட்டுக்கு  ஆர்டர் கொடுத்தபின் அது வர்றவரை  சாலையை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். ட்ராக்டர் எஞ்சின் மாதிரி ஒன்னு வச்சுக்கிட்டு, அதுலே ட்ரெய்லரைக் கட்டி வச்சு புதுமாதிரியான வண்டி. குஜராத்தில் பார்த்த சக்கடா நினைப்பு வந்தது உண்மை. மனுசன் தன் தேவைகளுக்கு ஏத்தாப்படி,  இருக்கும்  சாதனங்களை வச்சே  புதுசா ஒன்னு  கண்டுபிடிச்சுக்கறான், இல்லே!  வாழ்ந்தாகணுமே..... அதுக்கு வரும்படியும் வேணுமே.....
சாப்பாடானதும் சாலையைக் கடந்து  எதிர்ப்பக்கம் வந்தோம்.  இந்த சாலையே ரொம்ப பிஸியா இருக்கு.  ஏகப்பட்ட கடைகண்ணிகள் சாலை முழுசும்.  பித்தளைச்சிலைகள் ரொம்பவே அழகழகாய்!   கனம் கூடியவை.   அதிலும் ஒரு கருடர் இருந்தார் பாருங்க.....  ஹைய்யோ....


சாளக்ராமக் கற்கள் வேற  வெவ்வேற சைஸில் வச்சுருக்காங்க.  இப்பெல்லாம் கண்டகி நதியில் கற்கள் உருண்டு வர்றதெல்லாம் இல்லையாமே!  தாமோதர்குண்ட் என்ற இடத்தில்  நதியின் ஆரம்பத்துலேயே வலை கட்டி, அங்கேயே  சாளக்ராமக் கற்களை வடிகட்டி எடுத்துடறாங்களாம்.  நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வருமானம் இந்தக் கல்லும் கொண்டு வருது பாருங்க.
இந்த இடங்களுக்குச் சுற்றுலாப்பயணிகள்  ரொம்ப காலத்துக்கு முன்னே இருந்தே வந்துக்கிட்டு இருக்காங்க!  எல்லாம் அநேகமா வெள்ளைக்கார நாடுகளில் இருந்துதான்!  அப்படி  அவர்களைக் கவர்ந்து இழுக்கறது,  உலகத்துக்கே ஒன்னுன்னு இருக்கும் எவரஸ்ட் சிகரம் இல்லையோ!  எப்படியாவது அதில் ஏறிடணும் என்று ஆசைப்பட்டு வந்த பல்வேறு நாட்டு மக்களில், குட்டியூண்டு நாடான நியூஸியின் எட்மண்ட் ஹிலரிக்கு அதிர்ஷ்டம் இருந்தது, அங்கே எவரெஸ்ட்டில் முதல்முதல் கால் வைக்க!  இதுலே எங்களுக்கும் பெருமைதான்.  சம்பவம் நடந்த காலத்தில், இப்படி  அந்த ஊரில் குடியேறுவோமுன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை!
வர்றவங்க அப்படியே மற்ற இடங்களையும் பார்க்கறதும்,  மலையேறும் ஆசை இருக்கறவங்க இதுக்காகவே இங்கே வர்றதும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு இப்பவும்.

டேவிஸ் என்ற பெயருடைய ஸ்விஸ் நாட்டுப் பயணி, தன் மனைவியுடன் சுற்றுலா வந்துருக்கார். 1961 ஆவது ஆண்டு. பல இடங்களைச் சுத்திப் பாத்துக்கிட்டே  இங்கே வந்துருக்காங்க.  அந்தாண்டை ஓடும் நதியில்  குளிக்க ஆசை வந்துருக்கு கொஞ்சம் கீழாண்டைப் பகுதிக்குத் தண்ணீர் சரேல்னு பாயும் சமாச்சாரம் அப்ப இவுங்களுக்குத் தெரியாது போல!    திடீர்னு தண்ணீர் வரத்து அதிகமாகி டேவிஸோட  மனைவியை அப்படியே இழுத்துக்கிட்டுப் போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்பட்டு தேடி, மனைவியின் சடலத்தை வெளியே எடுத்துருக்காங்க. அப்ப இருந்து இந்த இடத்துக்கு  டேவிஸ் ஃபால்ஸ் என்ற 'காரணப்பெயர்' அமைஞ்சு போயிருக்கு!

டேவிஸ் ஃபால்ஸ் போறோமுன்னு துர்கா சொன்னதும், தேவி'ஸ் ஃபால்ஸ்ன்னு நினைச்சுக்கிட்டேன்.   தேவிக்குக் கோவில் இருக்குமுன்னு நினைப்பு. அரைக்கிலோ மீட்டர் தூரத்துக்கு  தண்ணீர் அப்படியே பொங்கியடிச்சுக்கிட்டுப் பாயுது. ஆழம் அதிகம் இல்லை. நூறு அடிதானாம்!!!!  யம்மாடியோவ்..... கால்தடுமாறி விழுந்த அம்புட்டுதான். நேராக் கீழே கொண்டுபோய் செருகிடும்!
இப்ப நல்ல கம்பித்தடுப்புகள் போட்டு வச்சுருக்காங்க.  இந்த இடத்தின் நுழைவாயிலுக்கு முன் இருக்கும் சாலையின் எதிர்ப்பக்கம்தான் நாம் லஞ்ச் சாப்பிட்ட ரெஸ்ட்டாரண்டு இருக்கு.

டேவிஸ் ஃபால்ஸ்க்குள் போய்ப் பார்க்க ஆளுக்கு முப்பது ரூ டிக்கெட் கட்டணம் கொடுக்கணும். பரபரப்பான சாலையை அடுத்து  உள்ளே இப்படி பார்க் செட்டிங்ஸ் இருக்குன்னு வெளியேஇருந்து பார்க்கும் யாருக்கும்  தெரியாது !
ஆதிசேஷன்  உருவில் கோழிக்கொண்டைப்பூ !!!

டேவிஸ் ஃபால்ஸ்க்குப் பழங்காலப்பெயர் ஒன்னும் இருக்கு. பாதாளே ச்சாங்கோ !

உள்ளே போகும் பாதையில் நாலைஞ்சு படிகள் இறக்கத்தில் ரொம்பவே பழையகாலச் சிலைகள் ரெண்டுமூணு!   புள்ளையார், சிவலிங்கம்,. நந்தி, நாகர்னு!!!   அங்கிருந்து  பார்க்கும்போதே  கீழே ஹோன்னு இரைச்சலுடன்  பொங்கி விழும் தண்ணீர்!  கொஞ்சம் கிட்டப்போய்ப் பார்க்கும் வகையில் ஒத்தையடிப்பாதை.  கரடுமுரடா இருக்கு, கவனமாக் கால் வச்சுப்போகணும்.  விழுந்துட்டா?   பரவாயில்லை:-)  கம்பித்தடுப்புகள் இருக்கே!  மிஸஸ் டேவீஸ்க்கு  ஏற்பட்ட கதிகேடு இனி  யாருக்கும் வரக்கூடாதுன்னு கவனமாத்தான்  போட்டுவச்சு  இருக்காங்க.
அருவின்னு பெருசா ஒன்னுமில்லை.  பாய்ஞ்சு வர்ற தண்ணி,   கற்பாறைகளுக்கிடையே அப்படியே ஒரு அரைக் கிலோமீட்டருக்கு அகலமா ஓடிட்டு,   சட்னு காணாமப்போயிருது!  இவ்ளோ தண்ணீர் என்னதான் ஆச்சு?  பாதாளத்துக்குள் போயிருதாமே!  பாதாளே சாங்கோ !அவ்ளோதானா?  ஊஹூம்..... நாம  இதைவிட்டு வெளியே போய் சாலையின் இடது பக்கமாவே கொஞ்ச தூரம் நடந்து போனால்... குப்தேஸ்வரா குகைக்கான நுழைவு வாயில் வந்துருது.  வணிக வளாகம்போல் ஏகப்பட்டக் கடைகள். குகைக்குப் போகும் வழின்னு போட்டுவச்சுருக்கும் அம்பைத் தொடர்ந்து  போகணும்.  கீழ்தளத்துக்குப் போறதுமாதிரி    மாடிப்படிகள்.  அங்கே ஒரு   ரெண்டடுக்கு    கட்டடம்.  கோவிலுக்குள் போகவும்    ஒரு கட்டணம் உண்டு.  முப்பது ரூபாய் டிக்கெட்.

மேலேயே புள்ளையார் நிக்கறார். அவராண்டை சொல்லிட்டு குகைக்குப் போறோம்.

 இந்தப்பக்கம் ஒரு சுருள் மாடிப்படி. பக்கச் சுவர்களில் எல்லாம் விதவிதமான சிற்பங்கள். பார்க்க அழகாத்தான் இருக்குன்னாலும்......  பழங்கால வகை இல்லை. காங்க்ரீட்லே வார்த்து வச்சுருக்காங்க.  இடைக்கிடை மாடங்கள் வேற. அதுலே சாமி படங்கள்!கீதோபதேசம்,   நிற்கும் காளைமுக  அரக்கன்(?) மயில்,  வெள்ளையானை மேல் இந்திரன்னு ஆரம்பிக்கும் சிற்பங்கள், மெள்ளமெள்ள ஸ்ருங்கார ரசத்துக்குப் போயிருது. இடையில்  குழந்தையைக் கையிலேந்தி பாலூட்டும் தாய் வேற!  விசுவாமித்திரர் மேனகையோ?
சிவன் காலடி பிடிச்சு,  வேண்டும் இன்னொரு உருவம்.....  யார் ,  கதை என்னன்னு தெரியலையேன்னு எனக்கு மகா கவலை!  இன்னும் புதுசா சிலைகளைச செஞ்சுக்கிட்டு இருக்காங்க போல.... அதுக்குண்டான இடம் தயாரா இருக்கே!

இந்தக் குகையை பதினாறாம் நூற்றாண்டில் யாரோ புல் பறிக்கப்போன இடத்தில் கண்டுபிடிச்சுருக்காங்க. உள்ளே சிவன், பார்வதி, இந்திரன், நாகர்னு கடவுளர்களின்  சிலைகள் இருந்துருக்கு.  அப்படியே கிடந்த இதை சமீபத்தில் 1991 இல்  படிக்கட்டுகள் அமைச்சு கீழே   இறங்கிப் போய்  குகைக்குள் பார்க்கன்னு  ஒரு அமைப்பைக் கட்டிவிட்டது உள்ளுர் நகராட்சி.   ஒரு கட்டணம்  வசூலிக்கிறது கூடப் பரவாயில்லைதான். குகையை பராமரிக்கவும், பக்கத்துலே இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு  செலவுக்குக் கொடுக்கவும்  ஆகுதே!
 சுழல் படிகளில் இறங்கி குகை வாசலுக்கு வந்துருந்தோம். இங்கிருந்து இன்னும் கீழே போகணும். இடதுபக்கம்  நிறைய கற்களை அடுக்கி  சின்னச்சின்ன லிங்கமா பண்ணி வச்சுருந்தாங்க.  படிகளில்  நம்ம கண்ணுக்கு எதிரா ஒரு கோசாலை.  அதுக்கு ஒரு விளக்கு போட்டு வச்சுருக்காங்க. உள்ளே மாடுகள் இருக்கான்னு தெரியலை. முக்கால் இருட்டாத்தான்  கிடக்கு. அங்கங்கே மெல்லிஸா வெளிச்சம் வருது.
கொஞ்ச நேரம் நின்னு இருட்டுக்குக்  கண்கள் பழகியபின் போறோம். படிகளில் கைப்பிடிச்சுக்கக் கம்பி இருக்கு என்பதால் பிரச்சனை  இல்லை. ஆனால்  ஒரே ஈரம். தலைக்கு மேலே இருக்கும் குகைக்கூரைகளில் இருந்து தண்ணீர் சொட்டிக்கிட்டே இருக்கு. நம்ம தலையில்  சொட்டுநீர்! எப்பவும் தண்ணீரும், இருட்டுமா இருக்கறதால்  கால் வழுக்குதுதான்.  குகை வாசலில் செருப்பைக் கழட்டி விட்டுட்டுத்தான்  போகணும்.   கோவிலுக்குள் போறோம் இல்லையா?

கொஞ்சதூரம்  ஒரு அம்பது , நூறு படிகள்  இறங்குனதும்  பெரிய சிவலிங்கம் ஒன்னு, பூக்கள் அலங்காரத்தோடு.  சரிக்கும் செதுக்கிய சிவலிங்கம் இல்லையாக்கும். ஸ்வயம்பு.  உளி படாதது.  நோ உளியின் ஓசை :-)
குகைக்கூரையில் இருந்து   கெட்டிப் பாகுமாதிரி இறங்கும்  stalagmite, stalactite வகைதான். சுத்திவர  கம்பிவலை  அடிச்சுத் தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.  படம் எடுக்கத் தடை உண்டு.  இதுக்குன்னே ஒரு  காவலாளி வேற.  சாமியைக் கும்பிட்டுக்கிட்டே கம்பிவலையை வெளிப்புறமா சுத்தி வரலாம். பரிக்ரமா! ஆனால்  சாமியைப் பார்த்துக்கிட்டே சுத்தமுடியாது.  நாம் கீழே  பள்ளத்தில் போவோம். சாமி மேலே இருந்து நம்மைப் பார்ப்பாரா இருக்கும்!

சிவன் சந்நிதியை விட்டு இன்னும் கொஞ்சம் கீழே இறங்குனா   இன்னொரு சுரங்கப்பாதை. கும்மிருட்டு. ஓரமா வச்சுருக்கும்  ஜன்னல் போன்ற ஓட்டைக்குள்ளே  கண் பார்வையை அனுப்புனால்.....  வெளிச்சம்  தெரிஞ்சது. கூடவே   தண்ணீர் பாயும் சத்தம்......   ஒரு நூத்தியம்பது மீட்டர்  இறக்கம் இருக்காம்.  இப்போ  தண்ணீர் வரத்து அதிகமா இருக்குன்னு அந்தப் பாதையை மூடி வச்சுருக்கறதா  காவலாளி சொன்னார். ஆனாலும் ஒரு பத்திருபது  படிகள் இறங்கிப்போய் வரலாம்தான். ஆனால் நம்மகிட்டே டார்ச்  இல்லையே..... வழக்கம் போல் பயணத்துக்குன்னு  கொண்டுபோகும்  டார்ச் லைட், இந்த முறை காத்மாண்டு லெமன்ட்ரீயில்  பெட்டிக்குள்ளே பத்திரமா இருக்கு:-)

இருட்டுக்குகையின் நீளம் சுமார் மூணு கிமி இருக்குமாம்.  சுரங்கத் தொழிலாளிகள் மாதிரி தலயில் விளக்கு வச்சுக்கிட்டுப்போய் குகை முடிஞ்சதும் வெளியே போய்   தண்ணீர்  பாயும் இடத்தில் இருந்து கரையோரமாகவே நடந்து போகும் டூரிஸ்ட்டுகளும் உண்டாம்!  சரின்னு கேட்டுக்கிட்டேன்:-)   அவுங்க அட்வெஞ்சர் மக்கள். நாமோ....  ஆன்மிக மக்கள் இல்லையோ !

குகையில் இருந்து வெளிவந்து சுருள்படிகளேறி மேலே வந்து நர்த்தன விநாயகருக்குக் கும்பிடு போட்டுட்டு அஞ்சு நிமிட் ரெஸ்ட். அப்போ அங்கே இருந்த ஒரு ஹாலில்  பெரிய கூட்டமா மக்கள்ஸ் உக்கார்ந்துருந்தாங்க. எதோ சாமியாரின் குழு உள்ளே பிரசங்கம் செஞ்சு எதோ பூஜைக்குத் தயார் படுத்திக்கிட்டு இருந்தாங்க.  லோகல்ஸ்தான்.  முக்கால்வாசிப் பெண்கள்  நேபாளிகள் போட்டுக்கும் பாசிமணி மாலையில் இருந்தாங்க.
வெளியே வந்து  ஒரு கடையில் ரெண்டு பாசிமணி மாலை வாங்கினேன். மனிஷா அண்ட் சாரு(மதி) என்ற  சின்னப்பொண்ணுங்க நடத்தும் கடை.   அப்படியே  முதலில்  அழகு கருடன் பார்த்த கடையில்    சின்னதா மூணு சாளக்ராமம், ஒரு பத்து பித்தளை விக்கிரஹங்களும்!  ஹைய்யோ.... பத்தா?  எப்படிக் கொண்டுபோகப் போறோம்?

 அஞ்சேல்........  எல்லாம் ஒன்னரை செமீ உயரம்தான் :-) மொத்தம் ஒரு  200 கிராம் வரும்!

தொடரும்............. :-)9 comments:

said...


சிற்பங்களும்....குகை கோவிலும் ....அழகோ அழகு....


"சாமியைப் பார்த்துக்கிட்டே சுத்தமுடியாது. நாம் கீழே பள்ளத்தில் போவோம்". ....


"அவுங்க அட்வெஞ்சர் மக்கள். நாமோ.... ஆன்மிக மக்கள் இல்லையோ" !...


இடத்தையும், படங்களையும் விட உங்க எழுத்து நடை.... இன்னும் அருமை...

said...

// நாமோ.... ஆன்மிக மக்கள் இல்லையோ !// நொம்பச் சரி.

நன்றி.

said...

மஹாதேவ் கோவிலையும் தேவிஸ் நீர்வீழ்ச்சியையும் பார்த்தாச்சு.

நிறைய சாளிக்ராமம் சேர்க்கறார்ப்போல் இருக்கு. அங்க ஸ்படிக மாலை எதுவும் வாங்கலியா? (நிறைய போலிகள் இருந்தாலும்)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

இல்லையா பின்னே? :-)

வருகைக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நிறைய ஒன்னும் வாங்கலை. மொத்தமே ஏழுதான்.

ஸ்படிகமாலை ரொம்ப வருஷத்துக்கு முன்னே பெங்களூரு ஹரே க்ருஷ்ணாவில் வாங்கினேன், எங்க ரெண்டு பேருக்கும் ஒவ்வொன்னு. அப்புறம் ரிஷிகேஷில் அரசு அப்ரூவ்ட் கடையில் ஒன்னு. கொஞ்சம் விலை அதிகம்தான். ஆனால் அசல் :-) அப்புறம் ராமேஸ்வரத்தில் ஒன்னு. அவ்ளோதான்:-)

said...

குகைக்கட்டிடம் கவர்கிறது. ஆதிசேஷன் வடிவப் பூ அழகு.

said...

ஸ்படிக மாலை - கையில தொட்டா குளிர்ந்திருக்கும். இருட்டுல, ரெண்டு ஸ்படிகத்தை வேகமா உரசுனா, கதிர் அதிலேர்ந்து வரும். நிறையபேர் பிளாஸ்டிக்கைக் கொடுத்து ஏமாத்துறாங்க. 2008ல நான் 150 ரூபாய் கொடுத்த ஞாபகம்.

இப்போ கொஞ்சம் ஃப்ரீ ஆயிட்டீங்க போலிருக்கு. அதனால கொஞ்சம் விரைவா பதிவு போடறீங்க.

said...

சிமெண்ட் சிற்பங்களும் அழகு. பாலூட்டுவது பார்வதி கார்த்திகேயருக்கு அமுதூட்டும் சிற்பமோ இருக்குமோ.

சிவன் காலடியில் உக்காந்திருப்பது பகீரதன்னு நெனைக்கிறேன். கங்கையை தாங்க வேண்டும்னு கேக்குறாரோ என்னவோ.

அந்த குகை அருமை. இதே மாதிரி பெல்ஜியத்துல ஒரு குகைக்குள்ள போனது நினைவுக்கு வருது.

சாளக்கிராமங்களை எல்லாம் அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செஞ்சு அந்தந்த உயிரினங்களைப் பத்திய விவரங்களை கண்டுபிடிக்கனும். நாம என்னடான்னா... :(