Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts
Showing posts with label சமையல் குறிப்பு. Show all posts

Saturday, June 17, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல் ! சக்கப் பணியாரம்.... சக்க அடை, சக்கையப்பம்

சக்க....  சக்க.....   உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச சமாச்சாரம்,   ஆனால் பலருக்குத் தெரியாத பெயர் இது :-)

முக்கனிகளில் ஒன்னு இது. பலாப்பழம்!

கொஞ்ச நாளைக்கு முன்னால் சக்கைப்பணியாரம் செஞ்சு  படம்போட்டுக் காமிச்சாங்க நம்ம சொந்தம் அமைதிச்சாரல்.  லேசா புகை......  வந்தது உண்மை :-)  இங்கே உக்கார்ந்துக்கிட்டுச் சக்கைக்கு ஆசைப்பட்டா நடக்குமா?

டின் லேதான்   கிடைக்கும். எதோ அதுவாவது கிடைக்குதே.....  ஏஷியன் கடைக்குப் போனோம்.  அங்கெ என்னன்னா.....   வேணுமெங்கில் சக்கை வேர்லெயும் காய்க்கும் என்றதைப்போல்...   டின்னு  ஒன்னு கையில் எடுத்துக்கிட்டு,  எதுக்கும் ஒரு வேடிக்கைன்னு  ஃப்ரீஸர் செக்‌ஷனில் பார்த்தால்  அங்கே  பலாப்பழச் சுளைகளாவே வச்சுருந்தாங்க.  என்ன இருந்தாலும்.... சக்கரைத் தண்ணியில் ஊறவச்ச டின் சுவைக்கு இது  மேலாக இருக்குமேன்னு  டின்னைத் திருப்பி வச்சுட்டுச் சுளையை வாங்கியாந்தோம். இந்த தோம் தோம்.....  உங்களுக்குப் புரியாதா என்ன?
வாங்கியாந்த உடனே... கொதி.  பேக்கைப் பிரிச்சு எண்ணி நாலு சுளை எடுத்து  ஆளுக்கு ரெண்டுன்னு தின்னோம்.  ஹைய்யோ.....  என்னமா இழுக்குது வாசனை....

மீதியை சக்கைப் பணியாரத்துக்கு எடுத்து வச்சேன். நாள் நல்லா இருக்கணுமா இல்லையா?

நல்லநாளும் வந்துச்சு.  பலாப்பழத்தை நம்ம வீட்டு ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வச்சேன்.  டீஃப்ராஸ்ட் ஆகட்டும்.  அதுக்குள்ளே தேவையான மற்ற சமாச்சாரங்களை எடுத்து வச்சுக்கலாம்.

( முதல் நாள் தின்னது போக பாக்கி பத்து. அதுலே பழமாவே தின்னலாமுன்னு ரெண்டு சுளை எடுத்துத் தனியா வச்சுக்கிட்டேன்)

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை ஒரு எட்டு
புட்டு மாவு  முக்கால் கப்
வெல்லச்சக்கரை  அரைக் கப்
சுக்குப்பொடி  1/4 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்  1/4 டீஸ்பூன்.

டீஃப்ராஸ்ட் ஆன பலாச்சுளைகளை  மிக்ஸியில் இருக்கும் சட்னி ஜாரில் போட்டு  நாலு சுத்து. ரொம்ப அரைக்க வேணாம். சின்னச்சின்ன துண்டுகள்  கொஞ்சம் பல்லில் கடிபடற மாதிரி இருக்கட்டும்.  இல்லேன்னா பலாப்பழம் போட்டேன்னு  சனம் நம்பாது :-)

ஒரு பாத்திரத்துலே  அரைச்ச பலாப்பழத்தை போட்டு,  அதன் தலையில்  மேலே சொன்ன  அத்தனை சமாச்சாரங்களையும் சேர்த்து பிசைஞ்சுக்கணும்.  ரொம்ப இளகினாப்போல இருந்தால் இன்னும் கொஞ்சம் புட்டுமாவு சேர்த்துக்கலாம்.  ஒரு துளி உப்பு கூட சேர்த்துக்கலாம், உங்களுக்கு விருப்பம் இருந்தால். ஆப்ஷனல் :-)



மொத்தையா உருட்டி வச்சுருங்க.

இப்ப பின்னால் புழக்கடைக்குப்போய்  வாழை இலை ஒன்னு  வெட்டி எடுத்துக்கிட்டு வரணும். (ஹாஹா...நம்ம வீட்டுலே சொந்த வாழை மரம் இருக்குன்றதை  உங்களுக்கு வேறெப்படி நாசூக்காச் சொல்றதாம்?) நானோ கருமி. அதனால்  முழு இலையை வெட்டாம, ஒரு  பாதி இலை வெட்டிக்கிட்டு வந்தேன்.
இப்ப இன்னொரு முக்கிய வேலை இருக்கு.  ரைஸ் குக்கர் எடுத்து அதில் பாதிவரை தண்ணீர் ரொப்பி மூடியைப் போட்டு ஸ்விச்சை ஆன் செஞ்சு விடுங்க. ஆமாம்...  உங்ககிட்டே இருக்கும் ரைஸ் குக்கரில்  ஸ்டீமர் அட்டாச்மென்ட் இருக்குதானே?
இல்லைன்னா....   ம்ம்ம்ம்  என்ன செய்யலாம்.  காய் வடிகட்டும் தட்டு அதுலே   மேலாக  விளிம்புலே  உக்காருதா பாருங்க. அதுவும் இல்லையா? நோ ஒர்ரீஸ் ... எடுங்க இட்லிப் பானையை. அதுவும் இல்லையா?  குக்கர்?  அதுலே தண்ணி ஊத்தி அடுப்பில் ஏத்துங்க.

அடுத்து வாழை இலையை நடு நரம்பு நீக்கிட்டு கொஞ்சம் பெரிய துண்டுகளா நறுக்கிக்கலாம்.  ஆமாம்....வாழை இலையைக் கழுவித் துடைச்சீங்கதானே?
உருட்டி வச்ச மொத்தையில் இருந்து  எலுமிச்சங்காய் அளவு மாவை உருண்டை  போட்டுக்கலாம்.   எத்தனை துண்டு வாழைக்கிழிசல் இருக்கோ அத்தனை  உருண்டைகளை உருட்டி, ஒவ்வொரு இலையிலும் ஒரு உருண்டையை வச்சு   இலையை மூடிட்டுக் கையால் ஒரு அழுத்து.  மூடுன இலைக்குள் மாவு இருக்கும்.  இருக்கணும்.
ரைஸ்குக்கர் ஸ்டீமரில்  இலைப்பொதிகளை அடுக்கிக் கொண்டு போய்  கொதிக்கும்  தண்ணீருக்கு மேலே வச்சுட்டு  மூடியைப்  போட்டுருங்க.  ஒரு பத்து நிமிட் போகட்டும்.

அதுவரை?  பாக்கி மீந்து போன மாவு இருந்தால், இன்னும் வாழை இலையும் மீதம் இருந்தால் இன்னொரு செட் இலைக்குள் மாவு.

நம்ம வீடு மாதிரி  மாவு கொஞ்சம்தான் இருக்கு. வாழை இலை இல்லை(!)  என்றால், மினி இட்லித் தட்டு எடுத்து வச்சு அதுலே குட்டிக்குட்டியா நெல்லிக்காய் சைஸில்  மாவை உருட்டி  உள்ளங்கையில் வச்சு  லேசா ஒரு தட்டு, தட்டிக்கொடுத்து மினி இட்லி குழியில் வச்சுடலாம்.

ஆச்சா பத்தி நிமிட்?  ஸ்டீமரை வெளியே எடுத்து  இலைப் பொதிகளை வேறொரு தட்டில் மாற்றி வச்சுட்டு,  மினி இட்லித் தட்டை அப்படியே ஸ்டீமருக்குள் வச்சு ரைஸ்குக்கர் மேலே  வச்சால் ஆச்சு.  அஞ்சாறு நிமிட்லே வெந்துரும்.
நம்ம இலையப்பம் / சக்கைப் பணியாரம்/ சக்கையப்பம் ரெடி.

ஒரு சின்னத்தட்டில் ரெண்டு எடுத்து வச்சு, நம்ம வீட்டுக்கு சாமிக்குக்  காட்டிட்டு,   'உனக்காக சக்கையப்பம் பண்ணி இருக்கேன்டா' ன்னு  சொல்லிட்டு,  நாம் தின்ன வேண்டியதுதான்!
இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


Thursday, March 23, 2017

சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து :-)

முஸ்கி :  இது அன்னாடங்காய்ச்சிகளுக்குச் சரிப்பட்டு வராது   :-)

என்ன இது சகலவியாதிகளுக்கும் ஒரே மருந்தா?    இப்படி ஒன்னு இருக்கோ? இருக்கு.... ஆனா  ஹெல்த் டிபார்ட்மென்ட்லே  இல்லை.  இது  கிச்சன் ஹெல்த் டிபார்ட்மென்ட், கேட்டோ!

நம்ம வீட்டுலே க்ரீன் ஹௌஸ் ஒன்னு வச்சு காய்கறி(!!!) பயிரிடறோமுன்னு உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருக்கேனே.... ஞாபகம் இருக்கா?
எது முளைக்குதோ இல்லையோ... தக்காளி மட்டும் கூடை கூடையாக் காய்ச்சுருது. முந்தியெல்லாம் தக்காளி ஹல்வா எல்லாம் கிண்டி இருக்கேன். இப்போ பேலியோ பக்கம் ஒதுங்கிட்டதால்.... சக்கரைன்னா....  ஊஹூம் னு தலையாட்ட வேண்டியிருக்குப்பா....
நியூஸி வந்த புதிதில்  சம்மர் சீஸன், தக்காளி கிலோ அம்பது சென்ட்தான்  (அதுவும் பிக் யுவர் ஓன்  திட்டத்தில் பக்கெட் பக்கெட்டா பறிச்செடுத்து....)  என்பதால்  வாங்கிவந்து  டீப் ஃப்ரீஸரில் போட்டு வச்சேன்.  குளிர்காலத்தில் தக்காளி விலை பனிரெண்டு பதிமூணு டாலர் வரை  போயிருமுன்னு கேள்விப்பட்டதால் வந்த முன்  ஜாக்கிரதையாக்கும்!

குளிர்காலம் ஆரம்பிச்சதும்  ஃப்ரீஸரில் இருந்து தக்காளியை எடுத்தால்  உள்ளே இருக்கும் தண்ணீர் எல்லாம் ஐஸ் கட்டியாகி, சள்ன்னு இருந்துச்சு. ரசம் வைக்கத்தான் லாயக்கு என்பதால்  தினமும்  ரசமோ ரசம்தான் அந்த வருசம்:-)

அதுக்கப்புறம் வந்த குளிர் காலங்களில்  தக்காளி டின்கள் வாங்க ஆரம்பிச்சு  ரெண்டு மாசத்துக்கு முன்வரை டின் தக்காளிகள்தான்.

திடீர்னு 'தக்காளி மழை' பொழிய ஆரம்பிச்சதும் என்ன செய்யறதுன்னு தெரியாம ஒரு நிமிட் முழிச்ச நான் சுதாரிச்சுக்கிட்டேன். அதான் அந்த சகல வியாதிகளுக்கும் ஒரே மருந்து  ஐடியா.

நம்ம சமையல்களில் ஏறக்கொறைய 85% தக்காளி வெங்காயம் சேர்த்துத்தானே செய்யறோம்.  அதையே கொஞ்சம் ஃப்ரீஸர் டெக்னிக் படி செஞ்சு பார்க்கலாமேன்னு  முதல் தவணையா ஒரு  கிலோ அளவு தக்காளியையும், முக்கால் கிலோ வெங்காயத்தையும் எடுத்து வச்சுக்கிட்டேன். ரெண்டையும் பொடியா அரிஞ்சுட்டு, பெரிய வாணலியில் எண்ணெய் ஒரு அரை கப்  ஊத்திக் காயவச்சு முதலில் வெங்காயத்தைப் போட்டு  வதக்கினேன். நிறம் மாறிவந்தப்ப, தக்காளியையும் சேர்த்து தக்காளி சட்னி பதத்துக்கு  வதக்கி எடுத்துட்டு ஆறுனதும் ஐஸ் க்யூப் ட்ரேயில் போட்டு ஃப்ரீஸரில் வச்சுட்டேன். மறுநாள் எல்லாம்  கெட்டிப்பட்டு  தக்காளி க்யூபா இருந்துச்சு.

அதை ஒரு ஃப்ரீஸர் பையில் போட்டு  ஃப்ரீஸரில் வச்சுட்டேன். குழம்பு , கூட்டு வகைகள் செய்யும்போது  தேவைக்கேத்தபடி  நாலோ அஞ்சோ க்யூப்ஸ்  குழம்பு வகையறாக்கள் கொதிக்கும் போது  போட்டுப் பார்த்தேன். சூப்பர்! ஏற்கெனவே வதக்குனதில் பச்சை வாசனை எல்லாம் போய் அட்டகாசமா இருக்கு!

அடுத்த பரிசோதனையா  இட்லி தோசை வகைகளுக்குச் சட்னி (தக்காளிச்சட்னிதான்) அரைக்கும்போது வெறும் காய்ஞ்ச மிளகாய், பெருங்காயத்தை வறுத்துக்கிட்டு  நாலைஞ்சு  க்யூபும்,  ஒரு புளிக்யூபுமா  சேர்த்து அரைச்சதில்  ருசியிலொரு வித்தியாசமும் இல்லை என்றதோடு  வேலை நேரமும் மிச்சமாச்சு.

புளிக்யூப் பற்றித் தெரியாதவர்கள்  நம்ம டிப்ஸ் பதிவுகளில் பார்த்து உய்யலாம் :-)

நேரடியா வாணலியில் செய்யாமல், ரைஸ் குக்கரில் ஒருநாள்  செஞ்சு பார்த்தேன். எல்லாம்  அப்பப்பக் கிளறிவிடச் சோம்பல் பட்டுக்கிட்டுதான்.  இதுலேயும் லேசா அடிப்பிடிக்க ஆரம்பிச்சது. ஹீட் செட்டிங் ஒன்னே ஒன்னுதானே. சூட்டைக் குறைக்க முடியலையே...   மேலும் தளக் புளக்குன்னு  கொதிச்சு மூடியெல்லாம்  தெறிச்சு, குக்கரின் சுற்றுப்புறம் சமையல் மேடையெல்லாம் ..... தெறிச்சு விழுந்து இதைச் சுத்தம் பண்ணுவதே இன்னொரு எக்ஸ்ட்ரா வேலையாப் போயிருச்சு. மடியன் மலை ச்சுமக்கும்னு சும்மாவா பழமொழி வந்துருக்கும்?  மடியன் = சோம்பேறி. மலையாளச் சொல்.


ஒரு ரெண்டரை வாரத்துக்கு முன்னால் (ஃபிப் 28) இப்படித்தான் அறுவடை செஞ்சுட்டார் நம்மவர். மறுநாள்  ஒரு பயணம் கிட்டத்தட்ட ரெண்டு வாரம் போற திட்டத்தில் இருக்கேன்.  சட்புட்டுன்னு  தக்காளி  க்யூப் செஞ்சு  ஐஸ் க்யூப் ட்ரேயில் போட்டு அதையே ஒரு ஸிப்லாக் பைக்குள்   வச்சு ஃப்ரீஸரில்  விட்டுட்டுப்போனேன்.
ஊரில் இருந்து திரும்பி வந்து,  ( மார்ச் 12)  க்ரீன் ஹௌஸைப் பார்த்தால் ஏகத்துக்கும் வாடிக்கிடக்கும் செடிகளும்  செடி நிறைய தக்காளிகளுமா இருக்கு !
இந்தமுறையும் அதே வைத்தியம்தான்.  கொஞ்சம் கறிவேப்பிலையும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காப் போட்டேன்.  மறக்காமல்   படங்கள் எடுத்து வச்சேன் :-)









ஸிப் பேகில் இருக்கும் காற்றை வெளியில் எடுக்க ஒரு பம்ப் கைவசம் இருக்கு.  Vacuum pack  என்றால் இன்னும் நீண்டநாட்களுக்குக் கெடாமல் இருக்கும்!

பாருங்க.... உங்களில் ஒரு சிலருக்காவது இந்த  'மருந்து' பலன் தரலாம் :-)

PINகுறிப்பு : 

 1.   இதைத் தயாரிக்கும்போது உப்பு ஏதும் சேர்க்கலை.  சமையல் செய்யும்போது  ஞாபகம் இல்லாமல் வழக்கமான அளவு உப்பை, நம்ம்  கை போட்டுருது. இதுலே உப்பு சேர்த்துருந்தால் ,  அதுலே  உப்பு கூடிப்போகும்.

2. ஊரில் இருந்து வந்துருந்த அண்ணி,   ஐடியா சூப்பர்னு  கவனிச்சுக்கிட்டுப் போயிருக்காங்க.

Friday, October 30, 2009

சேனை ரோஸ்ட்

ரொம்பப் பெருசா இருக்கும் சேனைகள் மூணு,நாலு இருந்தாலும் சாப்பிடும் சமயம் தொட்டுக்க இழுபறியாகிருமாம். அதனால் மெனுவில் சேனைன்னு இருக்கும் நாளில் கூடுதலா இன்னொரு காய் செஞ்சே தீரவேண்டிய நிர்ப்பந்தம். கூட்டுக் குடும்பம். கல்லைத் தின்னாலும் ஜீரணிச்சுப்போகும்விதம் ஓடியாடி விளையாடும் பிள்ளைகள் எக்கச்சக்கம்.

அரைவீசைச் சேனைக்கிழங்கைச் சித்தி அருவாமணையில் தோல்சீவி நறுக்கும்போதெல்லாம், பாட்டி ஒரு கொசுவத்தியை ஏத்திருவாங்க.


கல்யாண வீட்டுச் சமையல் மாதிரிதான் தினப்படிச் சமையலே. குடும்பம் தவிர்த்துக் கடையில், கம்பெனியில் வேலை செய்யறவங்களும் பகல் சாப்பாடுக்கு வருவாங்களாம். வீட்டுப் பெண்களுக்கெல்லாம் அடுப்படியில் ஆக்கிப்போட்டே ஆயுசு தீர்ந்துரும் காலம். பிரமாண்டமான வாணலியில் சேனை ரோஸ்ட் வறுபட வறுபடப் பிள்ளைகள் கூட்டம் பலாப் பழத்தில் ஈ மொய்ச்ச்சதுபோல் அங்கயே வட்டம் போடும். ஒரு ஈடு எடுத்துத் தாம்பாளத்தில் வச்ச நிமிஷமே காலி.

பாட்டிச் சொல்லச் சொல்ல, எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத கதைகள். அதே சமயம் சித்தி செய்யும் சமையலை ஓரக் கண்ணால் பார்த்துக்குவேன். இதுக்கு மட்டும் உதவிக்கு என்னைக் கூப்பிடமாட்டாங்க. 'கையெல்லாம் சொறியும். நல்லா எண்ணை தடவிக்கிட்டு அரியணும். கை வழுக்கி அருவாமணையில் வெட்டிக்கப்போறே'ன்னு சொல்லிருவாங்க. நானும் நம்ம உதவிக்குப் போகும் 'பாவ்லா' பலிச்சிருச்சுன்னு இருப்பேன்.

முதலில் சேனைக்கிழங்கை நல்லா தோலெல்லாம் சீவி எடுத்துக் கழுவிட்டு அரை இஞ்சு கனத்தில் ஸ்லைஸ் போட்டுக்குவாங்க. இப்ப வேணுமுன்னா நீங்க ஒரு செ.மீ. கனத்தில் வெட்டிக்குங்க, யார் வேணாமுன்னா?


இனி இது மூணு ஸ்டேஜ் குக்கிங்.

ஒரு அகலமானப் பாத்திரத்தில் அஞ்சாறு டம்ப்ளர் தண்ணீர் ஊத்திக் கொதிக்க விட்டு அதில் இந்தச் சேனை ஸ்லைஸ்களைப் போட்டு வேகவிடணும். ஒரு கத்தி, இல்லை பேம்பூ ஸ்டிக்கால் அழுத்தமாக் குத்துனாச் சட்னு இறங்கணும். அப்போ அந்தத் தண்ணீரை வடிச்சுடணும்.

இதுக்குள்ளே கொஞ்சம் புளித்தண்ணீரில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் எல்லாம் சேர்த்துக் கெட்டியானக் குழம்புப் பதத்த்தில் கரைச்சு வச்சுக்கணும். இந்தக் கரைசலை மறுபடி அந்தச் சேனைத் துண்டுகளில் சேர்த்து அடுப்பில் வச்சு வேகவிடணும். தீ இளந்தீ. இல்லேன்னா அடிப்பிடிச்சிரும். எல்லாத் துண்டுகளிலும் மசாலா நல்லாப் பரவி இருக்கணும். துண்டுகள் உடைஞ்சு போகாம லேசாத் திருப்பிவிடணும். தண்ணியெல்லாம் சுண்டிப்போகணும். கரைசலை ரொம்பத் தண்ணியாக் கரைச்சுடாதீங்க. கொஞ்சம் திக்கா இருந்தால் இதெல்லாம் அஞ்சே நிமிசத்தில் ஆகிரும்.

இப்பக் கடைசிக் கட்டத்துக்கு வந்துட்டோம். வாணலியில் கொஞ்சம் எண்ணை ஊத்தி அதுலே நாலைஞ்சு துண்டுகளாப் போட்டுச் சிவக்க வறுத்து எடுத்தால் ஆச்சு. ரொம்ப எண்ணெய் வேணாமுன்னா அடிபாகம் தட்டையா இருக்கும் ஃப்ரைபேன் வச்சு அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு இடம் கொள்ளும் அளவுக்கு இந்த ஸ்லைஸ்களைப் பரப்பிக் கொஞ்சம் கொஞ்சமா ஸ்பூனால் எண்ணெய் எடுத்துச் சுத்திவர ஊத்தித் திருப்பிப்போட்டு வறுத்து எடுக்கலாம். கவனிக்க வேண்டியது அடுப்புலே தீ மிதமா இருக்கணும். ஒரேடியா 'ஸிம்'லே வச்சால் நாள் பூராவும் அடுப்படியிலேயே நிக்கணும்!

சென்னை வாசத்தில் சேனைக்கிழங்கைத் தரிசித்ததும் பாட்டி நினைவு. சின்னதா ஒரு துண்டம் வாங்கி வந்தேன். 450 கிராமாம். தோலெல்லாம் சீவுனதும் 350 கிராம் வரலாம்.

இதுக்குச் சேர்த்துக்கிட்ட மசாலாப் பொருட்களின் அளவுகள்:

ஒரு தேக்கரண்டி மிளகாய்ப்பொடி (ஆச்சி மிளகாய்த்தூள்)

ரெண்டு தேக்கரண்டி மல்லித்தூள் (எவரெஸ்ட் மல்லித்தூள்)

கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி (ஆச்சி ப்ராண்டு)

கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள் ( வன்தேவி ஹிங்கு)

ஒரு தேக்கரண்டி உப்பு (டாடா)

புளிக் கரைசல் மூணு மேசைக் கரண்டி (இது என்ன பிராண்டுன்னு கேக்காதீங்க:-) தாய்லாந்துப் புளி)

சாம்பாருக்குக் கரைச்ச புளியில் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். சாம்பார் ரசம் வைக்காத நாளுன்னா...நீங்க ஒரு கமர்கட் அளவு புளி எடுத்துக் கரைச்சுங்க.

எண்ணெய் எந்தமாதிரி வாணலியோ அதுக்குத் தேவையான அளவு.
பாட்டி சொன்னதென்னவோ நிசம். வறுத்து வச்சவுடன் உப்புப் பார்க்கட்டுமான்னு கேட்டு நீண்ட கை ஒன்னு, தின்னு பார்த்துட்டு பகல் உணவு நேரம் வருமுன்பே போகவர ரெண்டு மூணு துண்டுகளை உள்ளே தள்ளினதுக்கு நான் மட்டுமே சாட்சி:-)

முதலில் ரெண்டு பேருக்கு இவ்வளவான்னு ஒரு தோணல். இருக்கட்டும் பிரச்சனை இல்லை. அதிகமுன்னா 'டாஸ்மாக்' கொண்டுபோனா நிமிஷமா வித்துறாதா என்ன?


பின் குறிப்பு: ரொம்ப நாளாச் சமைக்கவே இல்லையான்னு நீங்கெல்லாம் நினைச்சுடக்கூடாது பாருங்க. அதுக்குத்தான் இந்தச் சமையல் குறிப்பு;-)))))))

Sunday, October 19, 2008

பச்சை + வெள்ளை = ?

ப்ரொக்கலிக்கும் காலி ஃப்ளவருக்கும் கல்யாணம்

'வாளைமீனுக்கும்....' ராகத்தில் பாடிப்பாருங்க. சரியா வருதா?

ஆச்சு கல்யாணம். அப்புறம் குழந்தை குட்டிங்கதானே? அப்படிப் பொறந்ததுதான் இந்த ப்ரொக்கோ ஃப்ளவர்.(Brocco flower) அப்படியே காலியை உரிச்சுவச்சமாதிரி வடிவம். ப்ரொக்கி ஜாடையில்(வண்ணத்தில்) அழுத்தமா இல்லாம, வெள்ளையுடன் ஒரு தீற்றல் கலந்த பச்சையா ஒரு பொ(பு)து நிறம். சிநேகாக் கலர்ன்னு இப்ப வலம்வருதே அந்த நிறமா இது இருக்கோ? ( புடவை ஒன்னு வாங்கி வச்சுருக்கு. வெளியே எடுத்துப் பார்த்துட்டுச் சொல்லவா?














ப்ரொக்கொ பூ ( மேலே 2 படங்கள்)

புதுக் காய்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்புணர்ச்சியோடு இருந்த என் கண்ணுக்கு இது மட்டுமில்லாம இன்னொண்ணும் அகப்பட்டது. இதுக்குப் பெயர் விட்லோஃப். (whitlof) தாமரை மொட்டுப்போல இருந்துச்சு. விலை கொஞ்சம் அதிகம்தான். கிலோ 15 டாலர். நாமென்ன ஒரு கிலோவா வாங்கப்போறோம்? சின்னதா ஒரு பூ போதும். தின்னு பார்த்துட்டு ஆவன செய்வோமே......


100 கிராம் கூட இல்லாத அந்த பூவுக்கு தப்பான எண்ணில் தட்டிக் கடைக்காரம்மா 2.85 வாங்கிருச்சுன்னு நாலைஞ்சு நாளைக்குப் பிறகுதான் கண்டுபிடிச்சேன். (கார்லே அந்த ரசீது விழுந்து கிடந்துச்சு) சரியான மண்டகப்படி கிடைச்சது கோபாலுக்கு. எத்தனை முறை சொல்லி இருக்கேன், ஸ்கேன் செஞ்சு விலை மானிட்டரில் தெரியும்போது ஒரு கண்ணு வைக்கணுமுன்னு! ப்ரோக்கோப் பூவைப் பத்தி அந்தம்மாக்கிட்டேச் சின்னப்பேச்சுக் கொடுத்துக்கிட்டே நம்ம புத்திமதியைக் கோட்டை விட்டுருக்கார்(-:

சூப்பர்மார்கெட்டுலேயும் கவனமா இல்லாட்டி , தேவையில்லாமக் காசை வீணாக்கணும். வேலை செய்யும் பசங்க எல்லாம் ஹைஸ்கூல் மாணாக்கர்கள். பகுதி நேர வேலை இங்கேதான் சுலபமாக் கிடைக்கும். ஏனோ தானோன்னு பில் போடறதுதான். பல காய்கறி & பழங்ககளின் பெயர் தெரியாம சூப்பர்வைசரைக் கூப்பிட்டுக் கேப்பாங்க சிலர்(-: தப்பான பில்லைக் காட்டிக் கேட்டோமுன்னா இருக்கவே இருக்கு oops...sorry!

இந்த விட்லோஃப் மனுசனை விட்டியாக்கிருச்சு. சாலட்லே அப்படியே சேர்க்கும் லெட்டூஸ் வகைதான். சேர்த்தேன். நறுக்கினதும் உள்ளே பார்த்தால் சவாய் கேபேஜ் போல் சில இதழ்களில் அலையாய் ஒரு நெளிவு.. சுவை?
நல்லாவே இல்லை. லேசான கசப்பு. இதுக்கும் சேர்த்து கருவிக்கிட்டு இருக்கேன் மனுசனை இப்ப.



அந்தப் ப்ரொக்கோ பூவும் அப்படி ஒன்னும் நல்ல ருசியா இல்லை. அதே காலியின் சுவைதான். அதுவும் நம்ம ஸ்டைலில் மிளகாய், மஞ்சள், மல்லின்னு சேர்த்ததும் நிறம் மாறி ஒரு அழுக்குப் பச்சையா இருந்துச்சு.

ஆகக்கூடி இன்றைய சமையல் தண்ட வகையில் வந்தது(-:

சரி. ஒருநாள் அப்படின்னா ஒரு நாள் இப்படித்தான். அதுதான் வாழ்க்கை( அடடா என்னா தத்துவம். என்னா தத்துவம்)

அது இருக்கட்டும் ....வந்துட்டுப்போறவுங்க வெறுங்கையாப் போகாம, இதோ இது என்னன்னு கண்டுபிடிச்சுச் சொல்லிட்டுப் போங்க.