Saturday, June 17, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல் ! சக்கப் பணியாரம்.... சக்க அடை, சக்கையப்பம்

சக்க....  சக்க.....   உங்க எல்லோருக்கும் தெரிஞ்ச சமாச்சாரம்,   ஆனால் பலருக்குத் தெரியாத பெயர் இது :-)

முக்கனிகளில் ஒன்னு இது. பலாப்பழம்!

கொஞ்ச நாளைக்கு முன்னால் சக்கைப்பணியாரம் செஞ்சு  படம்போட்டுக் காமிச்சாங்க நம்ம சொந்தம் அமைதிச்சாரல்.  லேசா புகை......  வந்தது உண்மை :-)  இங்கே உக்கார்ந்துக்கிட்டுச் சக்கைக்கு ஆசைப்பட்டா நடக்குமா?

டின் லேதான்   கிடைக்கும். எதோ அதுவாவது கிடைக்குதே.....  ஏஷியன் கடைக்குப் போனோம்.  அங்கெ என்னன்னா.....   வேணுமெங்கில் சக்கை வேர்லெயும் காய்க்கும் என்றதைப்போல்...   டின்னு  ஒன்னு கையில் எடுத்துக்கிட்டு,  எதுக்கும் ஒரு வேடிக்கைன்னு  ஃப்ரீஸர் செக்‌ஷனில் பார்த்தால்  அங்கே  பலாப்பழச் சுளைகளாவே வச்சுருந்தாங்க.  என்ன இருந்தாலும்.... சக்கரைத் தண்ணியில் ஊறவச்ச டின் சுவைக்கு இது  மேலாக இருக்குமேன்னு  டின்னைத் திருப்பி வச்சுட்டுச் சுளையை வாங்கியாந்தோம். இந்த தோம் தோம்.....  உங்களுக்குப் புரியாதா என்ன?
வாங்கியாந்த உடனே... கொதி.  பேக்கைப் பிரிச்சு எண்ணி நாலு சுளை எடுத்து  ஆளுக்கு ரெண்டுன்னு தின்னோம்.  ஹைய்யோ.....  என்னமா இழுக்குது வாசனை....

மீதியை சக்கைப் பணியாரத்துக்கு எடுத்து வச்சேன். நாள் நல்லா இருக்கணுமா இல்லையா?

நல்லநாளும் வந்துச்சு.  பலாப்பழத்தை நம்ம வீட்டு ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வச்சேன்.  டீஃப்ராஸ்ட் ஆகட்டும்.  அதுக்குள்ளே தேவையான மற்ற சமாச்சாரங்களை எடுத்து வச்சுக்கலாம்.

( முதல் நாள் தின்னது போக பாக்கி பத்து. அதுலே பழமாவே தின்னலாமுன்னு ரெண்டு சுளை எடுத்துத் தனியா வச்சுக்கிட்டேன்)

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை ஒரு எட்டு
புட்டு மாவு  முக்கால் கப்
வெல்லச்சக்கரை  அரைக் கப்
சுக்குப்பொடி  1/4 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்  1/4 டீஸ்பூன்.

டீஃப்ராஸ்ட் ஆன பலாச்சுளைகளை  மிக்ஸியில் இருக்கும் சட்னி ஜாரில் போட்டு  நாலு சுத்து. ரொம்ப அரைக்க வேணாம். சின்னச்சின்ன துண்டுகள்  கொஞ்சம் பல்லில் கடிபடற மாதிரி இருக்கட்டும்.  இல்லேன்னா பலாப்பழம் போட்டேன்னு  சனம் நம்பாது :-)

ஒரு பாத்திரத்துலே  அரைச்ச பலாப்பழத்தை போட்டு,  அதன் தலையில்  மேலே சொன்ன  அத்தனை சமாச்சாரங்களையும் சேர்த்து பிசைஞ்சுக்கணும்.  ரொம்ப இளகினாப்போல இருந்தால் இன்னும் கொஞ்சம் புட்டுமாவு சேர்த்துக்கலாம்.  ஒரு துளி உப்பு கூட சேர்த்துக்கலாம், உங்களுக்கு விருப்பம் இருந்தால். ஆப்ஷனல் :-)மொத்தையா உருட்டி வச்சுருங்க.

இப்ப பின்னால் புழக்கடைக்குப்போய்  வாழை இலை ஒன்னு  வெட்டி எடுத்துக்கிட்டு வரணும். (ஹாஹா...நம்ம வீட்டுலே சொந்த வாழை மரம் இருக்குன்றதை  உங்களுக்கு வேறெப்படி நாசூக்காச் சொல்றதாம்?) நானோ கருமி. அதனால்  முழு இலையை வெட்டாம, ஒரு  பாதி இலை வெட்டிக்கிட்டு வந்தேன்.
இப்ப இன்னொரு முக்கிய வேலை இருக்கு.  ரைஸ் குக்கர் எடுத்து அதில் பாதிவரை தண்ணீர் ரொப்பி மூடியைப் போட்டு ஸ்விச்சை ஆன் செஞ்சு விடுங்க. ஆமாம்...  உங்ககிட்டே இருக்கும் ரைஸ் குக்கரில்  ஸ்டீமர் அட்டாச்மென்ட் இருக்குதானே?
இல்லைன்னா....   ம்ம்ம்ம்  என்ன செய்யலாம்.  காய் வடிகட்டும் தட்டு அதுலே   மேலாக  விளிம்புலே  உக்காருதா பாருங்க. அதுவும் இல்லையா? நோ ஒர்ரீஸ் ... எடுங்க இட்லிப் பானையை. அதுவும் இல்லையா?  குக்கர்?  அதுலே தண்ணி ஊத்தி அடுப்பில் ஏத்துங்க.

அடுத்து வாழை இலையை நடு நரம்பு நீக்கிட்டு கொஞ்சம் பெரிய துண்டுகளா நறுக்கிக்கலாம்.  ஆமாம்....வாழை இலையைக் கழுவித் துடைச்சீங்கதானே?
உருட்டி வச்ச மொத்தையில் இருந்து  எலுமிச்சங்காய் அளவு மாவை உருண்டை  போட்டுக்கலாம்.   எத்தனை துண்டு வாழைக்கிழிசல் இருக்கோ அத்தனை  உருண்டைகளை உருட்டி, ஒவ்வொரு இலையிலும் ஒரு உருண்டையை வச்சு   இலையை மூடிட்டுக் கையால் ஒரு அழுத்து.  மூடுன இலைக்குள் மாவு இருக்கும்.  இருக்கணும்.
ரைஸ்குக்கர் ஸ்டீமரில்  இலைப்பொதிகளை அடுக்கிக் கொண்டு போய்  கொதிக்கும்  தண்ணீருக்கு மேலே வச்சுட்டு  மூடியைப்  போட்டுருங்க.  ஒரு பத்து நிமிட் போகட்டும்.

அதுவரை?  பாக்கி மீந்து போன மாவு இருந்தால், இன்னும் வாழை இலையும் மீதம் இருந்தால் இன்னொரு செட் இலைக்குள் மாவு.

நம்ம வீடு மாதிரி  மாவு கொஞ்சம்தான் இருக்கு. வாழை இலை இல்லை(!)  என்றால், மினி இட்லித் தட்டு எடுத்து வச்சு அதுலே குட்டிக்குட்டியா நெல்லிக்காய் சைஸில்  மாவை உருட்டி  உள்ளங்கையில் வச்சு  லேசா ஒரு தட்டு, தட்டிக்கொடுத்து மினி இட்லி குழியில் வச்சுடலாம்.

ஆச்சா பத்தி நிமிட்?  ஸ்டீமரை வெளியே எடுத்து  இலைப் பொதிகளை வேறொரு தட்டில் மாற்றி வச்சுட்டு,  மினி இட்லித் தட்டை அப்படியே ஸ்டீமருக்குள் வச்சு ரைஸ்குக்கர் மேலே  வச்சால் ஆச்சு.  அஞ்சாறு நிமிட்லே வெந்துரும்.
நம்ம இலையப்பம் / சக்கைப் பணியாரம்/ சக்கையப்பம் ரெடி.

ஒரு சின்னத்தட்டில் ரெண்டு எடுத்து வச்சு, நம்ம வீட்டுக்கு சாமிக்குக்  காட்டிட்டு,   'உனக்காக சக்கையப்பம் பண்ணி இருக்கேன்டா' ன்னு  சொல்லிட்டு,  நாம் தின்ன வேண்டியதுதான்!
இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


18 comments:

said...

சக்கப் பணியாரம் சாப்பிட்ட திருப்தி வந்துட்டது.

said...

பாதி இலையை வெட்டினால் மீதி இலை எப்படியும் வேஸ்ட்தானே ஆகும்?

என்ன இருந்தாலும் வாழை இலை வாசனையோடு சாப்பிடும் சுகமே தனிதான்! இதுவரை இதை நான் சுவைத்ததில்லை என்பதையும் இங்கு சொல்லியாகணும்!

said...

வாழ்த்துகள். சக்கப் பணியாரம் எப்படி இருக்கும்னு சொல்லத்தோணலை. என் விருப்பம் சக்க வரட்டி இல்லைனா வெறும்ன சாப்பிடறது.

said...

அருமை. ஈஸீபீஸிக்குக் காத்திருக்கிறோம்:)!

said...

சக்கப்பணியாரம் அருமை!

said...

வாங்க கந்தசாமி ஐயா.

ரொம்ப நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

அது மரத்துலேயே (!) இருக்கட்டுமே. எண்ணி பத்து இல்லை. அதுக்கும் வயசு 13 !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வீட்டுலே இஷ்டம்போல பலா நிக்கும்போள், அத்தனை பழத்தையும் என்ன செய்யறது. அதுதான் இப்படி விதவிதமாச் செஞ்சு சாப்புடும் வழக்கம். இப்ப ஒரு ஆசைக்காகச் செய்யறதுதான் :-)

இங்கே ஒரு சமயம் சக்கவரட்டி கிடைச்சது. ப்ரதமன் ஜோரா செஞ்சேன் :-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அதுக்கு இன்னும் காலம் நேரம் வரலை பாருங்களேன்....

said...

வாங்க மனோ.

ரசிப்புக்கு நன்றிப்பா!

said...

பலாப்பழக் கொழுக்கட்டை பாக்க அட்டகாசமா இருக்கு. நியூசிக்கு டிக்கெட் எடுக்கனும் போல.

said...

வாங்க ஜிரா.

டிசம்பரில் கிளம்பி வாங்க. நமக்கு பலா,நுங்கு எல்லாம் இப்ப எப்பவுமே சீஸன்தான் 😊

said...

பலாப்பழ அடை, பணியாரம் இரண்டும் அருமை.

said...

வாவ்... பார்க்கும்போதே சாப்பிடத் தோணுதே.....

said...

வாங்க கோமதி அரசு.

நன்றீஸ்ப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எளிய செய்முறைதான். நீங்களே கூட தில்லியில் செய்து அசத்தலாம் :-)

said...

பலாப்பழத்தைத் தனியே தின்பதுபோல் வருமா. எங்கள் வீட்டில் சக்கைச் சுளை அதிகமாகக் கிடைத்தால் அதை வழட்டி சக்கைப் பிரதமன் செய்ய உபயோகிப்போம் இந்தப் போம் புரிந்ததா

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

போம் தெரியாதா என்ன? :-) இங்கே அதிகம் தோம் தோம்தான் :-)