Wednesday, June 07, 2017

கர்ணனுக்கும் நந்தனுக்கும் தனித் தனி இடம்! (இந்திய மண்ணில் பயணம் 14 )

ஆறுமணிக்கு முன்னேயே தூக்கம் கலைஞ்சு எழுந்திருச்சேன். க்ளக் க்ளக் ன்னு  ஒரு சத்தம். என்னன்னு பால்கனி வழியாப் பார்த்தால் அலக்நந்தா அதுபாட்டுக்கு  ஓடிக்கிட்டு இருக்க, இங்கே தோட்டத்தில் ஏழு  கூஸ் வகை வாத்துகள்   உலாவிக்கிட்டு இருக்குதுகள்.  கூட்டமாவே நகருதுங்க. பசுமை மலைகளின் மேல் மேகக்கூட்டங்கள் ஒருபக்கம்,   உக்கார்ந்து ரெஸ்ட் எடுக்குதுங்க.  என்ன ஒரு  அமைதியான இடம்ப்பா !!!!  அதுவும் காலை வேளை.... இன்னும்  ஹொட்டேல் கெஸ்டுகளின் நடமாட்டம் ஆரம்பிக்கலை :-)



நாமும் குளிச்சு ரெடியாகி  ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போனோம். இந்தப் பயணத்தில் பகல் சாப்பாடு நாம் வாங்கிக்கணும். காலையும் இரவும்  பேக்கேஜில் சேர்த்துருக்காங்க.  ஷுப் ட்ராவெல்ஸ் நவீனிடம் பொறுப்பைக் கொடுத்தபோது,  என்ன மாதிரியான இடம் புக் செய்வாரோன்னு  ஒரு பயம் இருந்தது உண்மை. ஆனால் முதல் நாள் நல்ல இடம் கிடைச்சுருக்கே.   அவர் ஏற்கெனவே ஐடிநரியை நம்மிடம் கொடுத்தப்ப,  ஹிமாச்சலில் மேலே போகப்போக அவ்வளவா  பெரிய ஹொட்டேல்ஸ் எல்லாம் இருக்காது. ஆனாலும் கூடியவரை நல்ல இடமாத்தான் புக் பண்ணி இருக்கேன்னு சொன்னார்தான். நம்ம பட்ஜெட்டுக்குத்  தகுந்தாப்போல  புக் பண்ணுவாங்களாம்.
ஏழுமணிக்கே எல்லாம் தயார்.  பயணிகள் காலையில் சீக்கிரம்  கிளம்பிருவாங்களே!  டைனிங் ஹால் போனால் இட்லி!  பெங்களூருவில் சில வருசம் வேலை பார்த்தவராம் இட்லி தயாரிச்சவர்.  மாவைத் தாளிச்சுருந்தாங்க. கர்நாடகா ஸ்டைல் போல.  ரெஸ்ட்டாரண்டில் இருந்த பணியாளர்களுக்கு,   நாம் சென்னை மக்கள்னது பிடிச்சுப்போச்சு.  அஸ்ஸி , சென்னை  தி.நகரில் ரெண்டு வருசம் வேலை செஞ்சாராம்.  ஒருவேளை நம்ம லோட்டஸா இருக்குமோ? :-)

டீம் லீடர் (இடதுபக்கம் இருப்பவர்) நமக்கு என்ன வேணுமுன்னு கேட்டுக்கேட்டு உபசரிச்சார் :-)

ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு லாபியில் பத்து நிமிட் மெயில் செக் பண்ணிட்டு,   நம்ம முகேஷ்  சாப்பிட்டாரான்னு கேக்கலாமேன்னு  வெளியே எட்டிப் பார்த்தால் அவரே வந்துக்கிட்டு இருக்கார்.  இவ்ளோ காலையில் சாப்பிடமாட்டாராம். நாம் ரெடின்னா  கிளம்பிடலாம்.  காலை நேரத்துலே அவ்வளவா ட்ராஃபிக் இருக்காதுன்னார்.  'நமக்கு மட்டும்  வேறென்ன வேலை இங்கே'ன்னு  கிளம்பிட்டோம்.

இன்றைக்கு 6 மணி நேர  ட்ரைவ்னு ஐட்டிநரி சொல்லுது.  முதல் ஸ்டாப்  சுமார் 33 கிமீ தூரத்துலே!   ரிஷிகேஷில் இருந்து கிளம்புன இந்தப் பயணத்தில் மட்டும் நம்ம கூடவே  ஒரு நதி வந்துக்கிட்டு இருக்கு.  ரிஷிகேஷில் கங்கை.  தேவப்ரயாகில்  கங்கைதான். கங்கைன்னு பெயர் கிடைச்சதே அங்கேதான்.  பகீரதன் கொண்டுவந்த பாகீரதியும் அலக்நந்தாவும் ஒன்னு சேர்ந்தப்பிறகுதான் கங்கை ஆகிறாள்.

நாம்  இப்போ பார்க்கிறது  அலக்நந்தாவுடன்,  பிண்டார் என்னும்  நதி சேரும் கர்ணப்ரயாக். நாம் இப்போ நதி ஓட்டத்துக்கு எதிர்திசையில் போறதால்  பட்டியல், சங்கமம் எல்லாம் தலைகீழா வந்துக்கிட்டு இருக்கு :-)  கீழே இருக்கும் படத்தைப் பாருங்க. எப்படி சங்கமங்கள் நடக்குதுன்னு புரிஞ்சுரும்.

பாரதப்போரில் கர்ணன் அடிபட்டு உயிர்போகும் நிலையில் இருக்கான்.  அப்போதான் பாண்டவர்களுக்கு  இவன், நம்ம அண்ணன்னு தெரியவருது.  துக்கப்பட்டுக்கிட்டே.... 'மன்னிச்சுரு அண்ணே. உன் கடைசி ஆசை எதுவாச்சும் இருந்தா சொல்லு. நிறைவேத்தறோமு'ன்னு  கேட்டதுக்கு,  'இதுவரை யாரும் பிண்டம் கொடுக்காத இடத்தில் எனக்கு பிண்டம் படைக்கணுமு'ன்னு  சொல்றான்.  தான் ரொம்பவே ஸ்பெஷல். தனக்கு எப்பவும் தனி இடம், தனி மரியாதை வேணுமுன்னு  இருப்பவன்  இப்படிக் கேட்டு(ம்) இருக்கலாம்!

அர்ஜுனன், தன் காண்டீபத்தை எடுத்து ஒரு அம்பைத் தொடுத்து  அனுப்ப, அது போய் தைத்த இடத்திலிருந்து ஒரு நதி கிளம்பி வருது.  இதுதான் பிண்டார் நதி. பொதுவா நதிக்கரையில்  பிண்டதானம்/தர்ப்பணம் கொடுத்தாலும்,  நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பித்ருக்களுக்குக் கொடுக்கும் பிண்டதானத்துக்கு  சிறப்பு அதிகமாம்.  இந்த பிண்டார் நதி,  அலக்நந்தாவுடன் சேருமிடத்தில் கர்ணனுக்கு  பிண்டம் படைச்சுக் கும்பிடறாங்க அவன் தம்பிமார்.  அதுதான் இந்த சங்கமத்துக்கு கர்ணப்ரயாக்னு பெயர் வந்துருக்கு.

எனக்குமே இத்தனை நதிகள்  சேர்ந்துதான் கங்கை ஆச்சுன்றது  ரொம்பநாள் தெரியாது.  ஹிமாச்சலில் இருந்து கிளம்பி வர்றது எல்லாமே  கங்கைன்னு நினைச்சுக்கிட்டு இருந்துருக்கேன்.

மோனலில் இருந்து கிளம்பி ஒன்னேகால்மணி நேரத்துலே கர்ணப்ரயாக் வந்துருந்தோம். சங்கமத்தில் கலக்கும் ரெண்டு நதிகளுக்கும் கொஞ்சம் கலர் வித்தியாசம் இருந்துச்சுதான்.
கீழே இறங்கித் தண்ணீர் வரைக்கும் போகலை. கண்ணால் தரிசனம் ஆனது போதும்.  கீழே பயணிகளுக்காக கட்டடம் கட்டி, படித்துறைகள் அமைச்சுருக்காங்க. கர்ணனுக்கு ஒரு கோவிலும் இருக்காம்.

ஒரு ஒன்னரை நிமிச வீடியோ க்ளிப்  போட்டுருக்கேன் பாருங்க. தண்ணீர் என்ன சத்தமாப் போகுது!!!    இதுலே வீடியோ சரியாத்தான் இருக்கு :-)


நாம நேத்து  ரிஷிகேஷில் இருந்து  கிளம்புன முதல்   அக்கரைக்குப்போக  நதியைத் தாண்டப் போட்டு வச்சுருக்கும் ஏராளமான பாலங்களைப் பார்த்துக்கிட்டே வர்றோம்.  ராம்ஜூலா, லக்ஷ்மண் ஜூலா போலவே  இரும்புக் கயிறு போட்டுக்கட்டி விட்டுருக்கும் தொங்குப் பாலங்கள் அநேகம். சில இடங்களில்  பெரிய வாகனங்கள் கடந்து போக  பக்காவா இரும்புப்  பாலங்களே போட்டு வச்சுருக்காங்க. இங்கெ ஒன்னு  இப்படித்தான் இருக்கு.

கரையை ஒட்டி ஒரு இடத்துலே  யாரோ தொட்டியில் வச்சு என்னை வளர்த்துக்கிட்டு இருக்காங்க :-)  சுத்தமா இருந்த ஒரு ரெஸ்டாரண்ட்(!)பார்த்ததும்,  முகேஷைப் போய் சாப்பிடச் சொன்னோம். இப்ப வேணாமுன்னுட்டார்.
பாஞ்ச் பத்ரின்னு சொல்லும் அஞ்சு பத்ரி கோவில்களில் ஆதி பத்ரி கோவில் இங்கிருந்து ஒரு 22 கிமீ  போனால் வருது.  ஆனால் நாம் போற வழிக்கு எதிர்ப்பக்கமாப் போயிட்டு,  மறுபடி இதே இடத்துக்கு வந்து சேர்ந்துக்கணும்.  'கிட்டத்தட்டப்போயிட்டு வர்றதுக்கு  மூணு மணி நேரம் ஆகுமே.... என்னம்மா சொல்றே'ன்னார் நம்மவர். நமக்குக் குறிப்பறியத் தெரியாதா என்ன?  'பாஞ்ச் பத்ரி எல்லாம் வேணாம். ஒரு பத்ரி போதுமு'ன்னு சொல்லிட்டேன்.

இங்கிருந்து கிளம்பி  இன்னொரு 23 கிமீ தூரத்துலே இன்னொரு ப்ரயாக் வருது. நந்தப்ரயாக்.  நம்ம நந்தகோபர் யசோதா நினைவு இருக்குதானே? கண்ணனின் கோகுலப் பெற்றோர்.  அவுங்க  திருமால்,  தங்கள் புத்திரனாக வரணுமுன்னு இங்கே  வேண்டுனாங்கன்னு ஒரு கதை இருக்கு.


 ஆனால்....    இங்கே  அலக்நந்தாவுடன், நந்தாகினி நதி  வந்து சங்கமம் ஆகுது. அதனால்தான் நந்தப்ராயக் என்ற  பெயரும் வந்துருக்கு. இந்த நதி   நந்தபர்வத் என்னும்  ஹிமகிரி சிகரத்துக்குப்பக்கம் உற்பத்தியாகி  வருதோ?

 நதிகள் சங்கமம் ஆகும் இடங்களிலெல்லாம் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்யறதுதான்  விசேஷம் என்றபடியால்  அதுக்குண்டான வசதிகளுடன், படித்துறைகளும் அமைச்சுருக்காங்க. நந்தாகினி என்னவோ ஹீனமாக இருந்துச்சு. தண்ணீர் வரத்து ரொம்பவே குறைவுதான்.  அங்கே  நதி கிளம்பும் இடத்தில் மழை  இல்லை போல.....
நமக்கு ப்ரயாக் தரிசனம்தான் வேணுமென்பதால் இங்கே முகேஷ் நிறுத்தின ஒரு மேட்டுப்பகுதியில் இருந்தே  தரிசனமும் ஆச்சு. க்ளிக்ஸும் ஆச்சு.

நந்தப்ரயாக் தாண்டிப்போன கொஞ்ச தூரத்தில் 'தேவ்  பூமி' நம்மை அன்போடு கைகூப்பி வரவேற்கிறது!
இன்னொரு 54 கிமீ  பயணிச்சு பீப்பல்கோட்டி என்ற ஊரில் இன்னொரு ஸ்டாப்.  மணி பதினொன்னரை ஆகுது.  'இப்பவாவது எதாவது சாப்பிட்டால் நல்லது'ன்னு முகேஷை  வற்புறுத்தினார் நம்மவர்.



இந்த்ரலோக் ரெஸ்ட்டாரண்டு   பார்க்க நல்லா இருக்குன்னு அங்கெ போய் சாப்பிடச் சொன்னால் சரின்னு  முகேஷ் போனதும் நாங்க ச்சும்மா அந்த இடத்தையும் ஊரையும் வேடிக்கை பார்த்துக்கிட்டுச் சுத்தி வந்தோம்.

இந்த்ரலோக் இட்லிப் பானை ரொம்பவே பெருசு :-)



அடுத்து  இன்னும் 36 கிமீ தூரம் பாக்கி இருக்கு  இன்றைய இலக்கு நோக்கி.  வழியிலே அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சிதைஞ்சு போன சாலையையும், குறுகலா இருக்கும் சாலையைக் கொஞ்சம் விரிவு படுத்தறதுமா நிறைய பணியாட்கள் வேலையில் ஈடுபட்டுருந்தாங்க.  இவுங்க தயவாலேதான் நம்ம பயணம் தடையில்லாமப் போய்க்கிட்டு இருக்கு இப்போ. மனசால் நன்றி சொல்லிக்கணும். சொன்னேன்.


உழைக்கும் வர்க்கத்தில் இன்னொரு வகை....  பாரம் சுமந்து மலை ஏறுது...   பாவம்.....
அங்கங்கே சின்னதா நீர்வீழ்ச்சிகள்....  அதுலே வண்டியை நிறுத்திக் குளிக்கிறதும், வண்டியைக் கழுவறதுமா இருக்காங்க சிலர். இந்தத் தண்ணீர் ரோடுக்குக் குறுக்காலே போய்   அந்தப்பக்கம்   வழிஞ்சு இறங்கும்  இடமெல்லாம்  ஈரத்தால் சரியத்தான் செய்யுது.....
இந்த முப்பத்தியாறு கிமீ பயணிக்க  சுமார் ஒன்னேகால்மணி நேரமாச்சு.  ஹொட்டேல் த்ரோணகிரி போய்ச் சேர்ந்தோம்.  இன்றைக்குத் தங்கல் இங்கேதான்.

தொடரும்.... :-)


9 comments:

said...

டீம் லீடர் பக்கத்தில் இருக்கும் பணியாளர் ஸ்டைலா பாஸ் கொடுக்கிறாரா? இல்லை ஃபோட்டோய் எடுக்கறது பிடிக்கவில்லையாமா?!!

படங்களின் மூலம் இடங்களின் அழகை ரசித்தேன்.

said...

அடுத்தவாட்டி நீங்க டிரிப் போகும் போது சேந்துக்கனும்னு எல்லாருக்கும் ஆசை வந்திருக்கும். குரூப் டூர் போட்டு மாணவர்களைக் கூட்டீட்டுப் போனீங்கன்னா மக்கள் ரொம்பவே சந்தோஷப்படுவாங்க.


மலைச்சரிவு, ஓடும் ஆறு, அருகே ஒரு வீடு... அடடா... சொர்க்கம். சொர்க்கம்.


காலைல சாப்பிடுறதில்லையா முகேஷ்? என்ன பழக்கம் இது? பொதுவா நார்த்தீஸ் காலைல பிரட் முட்டை சாப்பிடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இவரு கொஞ்சம் வித்யாசமா இருக்காரே.

கர்ணன் கதை புதுசா இருக்கே. சரி. பத்தோட ஒன்னு பதினொன்னு. அத்தோட ஒன்னு இதுவொன்னு.

said...

அழகான படங்கள் எல்லாம் ரசித்தேன்

said...

நன்றி தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்..

க்ளிக்கும்போது யாரோ கூப்பிட்டாங்கன்னு தலையைத் திருப்பிட்டார்..... போறாருன்னு விட்டுட்டேன்.

said...

வாங்க ஜிரா.

கதைக்கா பஞ்சம்? :-)

முகேஷ் ஒரு பக்தர். உபவாஸம் எல்லாம் இருக்கார்! எனக்குத்தான்... ஒரு வேளை உணவை உழி என்றால் ஒழியாய்..... கொஞ்சூண்டு வயித்துலே போடாட்டிக் கஷ்டம்...

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

அழகான இடங்கள். பஞ்ச் ப்ரயாக் வரைபடம் நல்ல விஷயம். நினைவில் வைத்துக்கொள்ள உதவும்!

தொடர்கிறேன்.