Monday, June 19, 2017

அடுத்துப்போன ஊர் அனுமன்சட்டி !! (இந்திய மண்ணில் பயணம் 19)

இதென்ன சட்டி, பானை,  குடம்,  குண்டான்னு பெயர் வச்சுருக்காங்க?

 விஷ்ணுப்ரயாகில் இருந்து  ஒரு  இருவது கிமீ தூரத்தில் இருக்கு இந்த இடம்.   சட்டின்னு ஹிந்தியில்  சொல்றதுக்கான பொருள்  தங்குமிடம் என்பதுதான். யமுனோத்ரி போற பக்தர்கள்  அந்தக் காலத்தில் இங்கே இரவு தங்கிப் போகற இடம் இது.  வண்டிகள் கூட  மலையில் இதுவரைதான் ஒரு காலத்துலே வந்துருக்கு. அதுக்குப்பின் பத்ரி போறவங்க இந்தப்பக்கம், யமுனோத்ரி போறவங்க அந்தப் பக்கம்னு பாதை பிரிஞ்சுரும்.  நடந்துதான் போகணும்.  13 கிமீ தூரம்  இந்தாண்டை போனால் யமுனோத்ரி. 12 கிமீ அந்தாண்டை போனால் பத்ரிநாத்.
கோவில் என்னவோ சின்னதுதான்.  ராமநாமத்தை ஜெபம் செஞ்சுக்கிட்டு இருக்கார்   நம்ம ஆஞ்சி. தொட்டடுத்து, பூஜை சாமான்கள் விற்கும் கடைகள்.  ஆஞ்சி, சஞ்சீவி மலையைக் கையிலேந்தி பறக்கும் படம் பதிச்ச டைல்ஸ்தான் கோவில் முகப்பு அலங்காரம். சிம்பிள்!
வண்டியை நிறுத்துனதும், முதலில்  ஓடிப்போய்  சாமியைக் கும்பிட்டுக்கிட்டு வந்தவர் நம்ம முகேஷ்தான்.  இந்த ஏரியாவின் காவல் தெய்வம் நம்ம ஆஞ்சிதான். எல்லாம் அவர் கன்ட்ரோலில்தான் இருக்கு!


இங்கே உக்கார்ந்து  ஹனுமன்சாலீஸா படிச்சா பலன் ரொம்பவே அதிகமாம்!  'ராமலக்ஷ்மண ஜானகி  ஜெய் போலோ  ஹனுமானுகி' ன்னுட்டு  போகலாம்.
அது இருக்கட்டும். இங்கே ஹனுமன் கோவில் எப்படி வந்துச்சாம்?   அதுக்கு ஒரு கதை இருக்கு.  வாங்க ராமாயணத்துலே ஆரம்பிச்சு மஹாபாரத காலத்துக்குப் போகலாம்.....

ராமர் காலம் முடிஞ்ச பிறகு  ஹனுமன் மட்டும் அவுங்களோடு  வைகுண்டம் போகாம,  பூலோகத்துலேயே தங்கிடறார். எங்கே ராமநாமம் கேட்டாலும், ராமகதை சொன்னாலும் அங்கேயே போய்  அந்தப் பெயரை அனுபவிக்கணுமாம்!  அப்படியே அவருக்கும் வயசாகிருச்சு, சிரஞ்சீவி என்பதால் அழிவில்லை. காலங்கள் கடந்து போய்  இன்னொரு யுகம் கூட ஆரம்பிச்சு நடக்குது.

அப்போதான் ஒரு நாள் காற்றிலே பறந்து வந்த ஒரு பூ திரௌபதியின் பக்கத்துலே வந்து விழுந்தது. எடுத்து மோந்து பார்த்தால்....... ஹைய்யோ...மனத்தை மயக்கும் வாசனை. இப்பவே இந்தப் பூ பூத்து நிற்கும் செடியைப் பார்க்கணுமுன்னு மனசு துடிக்குது. அக்கம்பக்கம் தேடிப்பார்க்கிறாள். கண்ணுக்கு இந்தப் பூ இருக்கும் செடி ஒன்னுமே தெரியலை. தடித் தடியா அஞ்சுபேர் அன்பைக் காமிக்க இருக்கும்போது யாரையாவது ஏவினால் ஆச்சு. ஓ.... அஞ்சுன்னு சொல்லிட்டேன் இல்லை.. இப்போதைக்கு நாலு. அர்ஜுனன் தவம் செய்யப்போயிருக்கான்.

அந்த சமயம் பீமன் பக்கத்துலே வந்து நிக்கிறான். இவ்வளவுநாள் கொஞ்சம் வாடிய முகத்துடன் சோகமா இருந்தவள், இப்ப என்னடா ஒரு பூவை கையில் வச்சுக்கிட்டு முகர்ந்து முகர்ந்து பார்த்து பூரிச்சுப் போயிருக்காளேன்னு......

"ஏ புள்ளெ.... என்னா இம்பூட்டு சிரிப்பு?"

"இந்தப் பூவைப் பாருங்க. எப்புடி மணக்கு? மனசை எல்லாம் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது"

ஆஹா...அரோமாதெரப்பி.

"இந்தப் பூவு இன்னும் கொஞ்சம் வேணும். இந்தச் செடியை இங்கே வச்சு வளர்த்தால் எப்பவுமே பூ சப்ளை குறையாம இருக்கும்னு மனசுலே ஒரு எண்ணம். இந்தச் செடி ஏது எங்கேன்னு பார்த்து ஒன்னு கொண்டுவாங்க."

இதோன்னு கிளம்புனவன், மணம் புடிச்சுக்கிட்டே போறான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பூச்செடிகள் ஒன்னையும் காணோம். நடந்து நடந்து வந்தவன் ஒரு மலை அடிவாரம் வந்துட்டான். சரி வந்தது வந்தோம்..........மலைமேல் ஏறிப் பார்த்துடலாம். ஒருவேளை இந்தச் செடி அங்கே இருந்தால்....
முள்ளுச்செடியைத் தள்ளிக்கிட்டு ஒரு மலைப்பாதையில் வரும்போது அங்கே ஒரு கிழக்குரங்கு பாதையின் நடுசெண்டர்லே கிடக்குது. எங்கே போறேன்னு பீமனைக் கேட்க (குரங்கு பேசுமான்னு குறுக்குக் கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது. எங்க கோகி, கப்பு எல்லாம் பேசுவாங்க எனக்கு அது புரியும்) இந்தப் பூ பூக்கும் செடியைத் தேடிக்கிட்டு வந்தேன். மலைமேலே இருக்குமோன்னு ஒரு சம்சயம். நீ வழியை விடு...... நான் மேலே ஏறிப் பார்த்துட்டு வரேன்னான்.

'இங்கே நரன்களுக்கு தடா. நீ போகப்பிடாது'ன்னு சொல்லுச்சு வாநரன்.. 'நீ என்ன இங்கே நாட்டாமை? நான் அப்படித்தான் போவேன். என்னை யார் என்ன செய்யரான்னு பார்க்கலாமு'ன்னு தன் 'சிக்ஸ் பேக்கை' ஸ்டைலாக் காமிச்சு வீரம் பேசறான் பீமன். 'வல்லவனுக்கு வல்லவன்' உண்டுன்னுச்சு குரங்கு. 'சரி,சரி வீண் பேச்சுப் பேசாதே..... மிருகத்தைத் தாண்டிப் போனால் பாவமுன்னு பாட்டி சொல்லி இருக்கு. ஓரமாத் தள்ளிப்படு. நான் போகணு'முன்னான்.

"எனக்கோ உடம்பு ரொம்ப பலவீனமாக் கிடக்கு. நகர முடியலை. நீயே என்னைத் தூக்கி அந்தப் பக்கம் ஓரமா விட்டுட்டுப் போயேன். இந்தப் பேச்சு பேசறே?"

"நீ படு கிழமா இருக்கே. என் பலமான கையாலே தொட்டுத் தூக்கினாலே நீ கூழாயிருவே. என் இரும்புப்பிடி எனக்கே பயமா இருக்கு, நான் தொட்டால் சங்குதான். "

"சரி. அப்ப ஒன்னு செய். என் வாலை மட்டும் நகத்தி வச்சுட்டுப் போ. பாட்டி சொல்லைத் தட்டாதே. சாஸ்திரம் மீறாம இருக்கும்"

சுண்டுவிரலால் லேசா வாலைத் தூக்கலாமுன்னா என்னவோ ஆணி அடிச்சு வச்ச மாதிரி அசைக்க முடியலை. என்னடா இது வம்பா இருக்கேன்னு அசைச்சுப் பார்க்கிறான். ஊஹூம். தன் பலத்தையெல்லாம் சேர்த்து அந்த சின்ன வாலைத் தூக்குனாலும் போதுமுன்னு பார்த்தால்...... ஒன்னும் நடக்கலை.

ஆஹா..... இதுதான் அந்த வல்லவனுக்கு வல்லவன். நம்ம கணக்கு எங்கியோ மிஸ்டேக் ஆகிப்போச்சு......

"ஐயா, கிழ வாநரரே..... நீங்க யார்? என்னாலே உங்க வாலை ஒரு மில்லிகூட (இது மீட்டர்) அசைக்க முடியலை. மன்னிக்கணும். தயவு செஞ்சு நீங்க யார்ன்னு சொல்லுங்க. தயவாக் கேக்கறேன்."

"நாந்தாய்யா உன் அண்ணன்."

"ஐயோ! எப்படி? நீ குரங்காச்சே?"

"எதுக்குய்யா இப்படி பதட்டப் படறே? நான் உன் ஹாஃப் ப்ரதர். நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே அப்பா.

எங்க அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. அவுங்க ஒரு நாள் மலையில் உலாத்தும்போது நம்ம அப்பா, (அப்ப அவர் நம்ம அப்பா இல்லேப்பா) அவர்தான் வாயு பகவான்! அம்மாவைப் பார்த்தார். (அப்ப அது அம்மா இல்லை. ஒரு பொண்ணு.) கண்டேன் காதலை ன்னு ஆகிப்போச்சு. அதுக்கப்புறம்தான் நான் பொறந்தேன்."

"அட தேவுடா..... எனக்கு வேற கதை இருக்கு. அதை அப்புறம் ஒரு நாள் விலாவரியாச் சொல்றென். ஆனா எனக்கும் அப்பா அதே வாயுதான். ஆமா உம்பேரு என்ன?"

" ஹனுமான்"

"அடக் கடவுளே.....அண்ணாத்தே, ராமாயண காலத்துலே பகவான் ஸ்ரீ ராமருக்கு எல்லா வகையிலும் உதவுன ஹனுமான் நீர்தானா?"

"ஆமாம். தம்பி. அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார் எனக்கு ஒரு(?) தம்பி இருக்கான்னு. அது நீதான்னும் எனக்குத் தெரியும். எப்படித் தெரியுமுன்னு கேக்காதே. நான் இப்ப சாமி. எனக்கு எல்லாம் தெரியும்."

"அருமை அண்ணா...."

"ஆசைத் தம்பி.................."

'பாய் பாய்'ன்னு கட்டித் தழுவினாங்க ரெண்டு பேரும். பீமனுக்கு உடம்பில் இன்னும் பலமும் தேஜஸும் கூடுச்சு. ஹனுமனின் ஆசியோடு மலை உச்சிக்குப் போன பீமன், அங்கே பூத்துக் குலுங்கும் செடியில் இருந்து பூக்களைப் பறிச்சுக்கிட்டு, கையோடு ஒரு இளம்செடியையும் தோண்டி எடுத்துக்கிட்டு கீழே இறங்கினான்.

அண்ணாத்தே...இனி யாரும் வரமாட்டாங்க. நீ நல்லா ஆர அமரப் படுத்துத் தூங்குன்னு சொல்லி, கையோடு கொண்டுவந்த பூக்களைப் பாதி எடுத்து மெத்தையா அடுக்கிவச்சான். இன்னும் கொஞ்சம் பூக்களை எடுத்து ஒரு தலையணையும் செஞ்சு கொடுத்துட்டு வந்தான்.

நிம்மதியா ஒரு தூக்கம் போடணுமுன்னு ஒய்யாரமாப் படுத்து, வாலைத் தன் தொடைகளுக்கிடையில் கொடுத்துவாங்கி, ஒருகையால் முகத்துக்கு அண்டை கொடுத்து, மறுகையால் தன் கதாயுதத்தைப் பிடிச்சுக்கிட்டு, உள்ளங்கால் தெரியப் பாதத்தைத் திருப்பிப்போட்டு அசந்து தூங்கிட்டார் வாநர சிரேஷ்டர் ஹனுமான்.
எப்படி இருந்துருக்கும் அந்தக் காட்சி? இப்படித்தான் னு ஒரு படத்தோடு  முடிச்சுருந்தேன் ஒரு பதிவை. ஆச்சு 8 வருசம். நம்ம வீட்டு ஆஞ்சிதான் இவர் !
எட்டு வருசத்தில் நம்ம ஆஞ்சி இப்படி இருக்கார் இப்போ :-)


அந்த சந்திப்பு நடந்த இடம் இதுதான், இதுதான்னு அடிச்சுச் சொல்றாங்க. ஆஞ்சி கோவில் இப்படித்தான் வந்துருக்கு இங்கே.  மலைக்கு மேலே போறவங்க கட்டாயம் இவரை வணங்கி, மேலே போக அனுமதி வாங்கிக்கிட்டுப் போறதுதான் முறை!


நாமும் வண்டியை நிறுத்திட்டு, இவரை வணங்கி அனுமதி வாங்கிக்கிட்டோம். எந்த அபகடமும்  வராமல் ரக்ஷிக்கணுமே....  ஆஞ்சி!


கோவிலைப் பார்த்த மாத்திரத்தில்    சனம் போற போக்குலே காசை விட்டெறிஞ்சுட்டுப்  போகுதாமே !  அப்படிச் செய்யாதீர்னு  எழுதி வச்சுருக்காங்க.  





எதிரே கொஞ்சம் உயரமான கட்டடத்து வாசலில் இருந்த பெஞ்சில் செல்லம் ஒன்னு  சிங்கம் போல உக்கார்ந்துருந்துச்சு:-)


தொடரும்.......... :-)



12 comments:

said...

//(குரங்கு பேசுமான்னு குறுக்குக் கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது. //

கிலோமீட்டர், கிலோம்மீட்டரா தாண்டி மட்டும் வாசனை வருமாக்கும்!!


//எப்படித் தெரியுமுன்னு கேக்காதே. நான் இப்ப சாமி. எனக்கு எல்லாம் தெரியும்."//

ஹா..... ஹா.... ஹா....

பெஞ்ச் பைரவர் சூப்பர்.

said...

வாங்க ஸ்ரீராம்.

த்ரோபதி என்ன நியூஸியிலா இருந்தாள்? அங்கே ஹிமாச்சல் பக்கம்தானே வனவாசத்தில் சுத்திக்கிட்டு இருந்துருப்பாள். அதான் வாசம் வந்துருக்கும்:-)

பெஞ்ச் பைரவர்! ஆஹா.... அழகான சொல்லாடல்! எனக்குத் தோணலை பாருங்க!!!!

said...

பீம ஹனுமான் உரையாடல் அருமை.
ஹனுமான் தூங்கும் வர்ணனை அருமை. அந்த வர்ணனையிலேயே காட்சி தோன்றிவிட்டது. படத்தை அப்புறம்தான் பார்த்தேன். அழகு.

said...

கோயில் பெயர் வித்தியாசமாக உள்ளது. அனுமனை கிடந்த கோலத்தில் இப்போதுதான் தங்கள் பதிவு மூலமாகக் கண்டேன்.

said...

மற்ற பயணத்தைவிட, இந்தப் பயணம் (ரிஷிகேசிலிருந்து ஆரம்பித்து), மனதுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. நீங்கள் சென்ற இடங்களையெல்லாம் காணும் ப்ராப்தம் இருக்கவேண்டும். புராணக்கதை என்று ஒதுக்கமுடியாமல், அது நடந்த இடங்களெல்லாம் இருக்கும்போது, நம்பாமல் எப்படி இருக்கமுடியும்? என்ன.. நீங்கள் ஒவ்வொரு நதிகள் சேரும் இடத்திலும் நீரின் அருகாமையில் சென்றீர்களா என்பதை எழுதவில்லை (ஒரு வேளை இறங்கி ஏறுவதற்குச் சிரமம் என்று செல்லவில்லையோ)

said...

வாங்க விஸ்வநாத்.

படம் இன்னும் க்ளியரா எடுத்துருக்கலாம். இது பழைய படம். முடிஞ்சால் புதுசு எடுத்து ரீப்ளேஸ் செய்வேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரொம்ப அழகா கிடக்கிறார் இல்லே? பார்த்ததும் காதலில் விழுந்தேன் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மைதான். குருக்ஷேத்ரம் போனபோதும் இப்படித்தான் உணர்ந்தேன். சம்பவங்கள் நடந்த இடங்களுக்குப் பொருத்தமான பழைய பெயர்கள் வியப்புதான்!

அதலபாதாளத்துக்கு ஏறி இறங்க முடியுமா இந்த வயசில்? அதுக்குதான் சொல்றது... உடம்பில் வலு இருக்கும்போதே பயணங்கள் போகணும் என்பது!

தரிசனத்துக்கு என்ன பலனோ அது கிடைத்தால் போதும். யதேஷ்டம் :-)

said...

அந்தப் பூவின் பெயரைச் சொல்ல வில்லையோ

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சௌகந்திகம் . சௌகந்திகப்பூ

said...

கோவிலில் உள்ள அனுமன் முகம் ரொம்ப தத்ருபமா இருக்கு...அழகு...

உங்க வீட்டு அனுமனும் ரொம்ப அருமையாய் இருக்கார்..

said...

அனுமன் சட்டி.... இரண்டு மலைதேசங்களிலும் மலைப்பாதையில் ஆங்காங்கே ஆஞ்சி குடிகொண்டிருக்கிறார்.... சிறு சிறு சிலைகள், இப்படி கொஞ்சம் பெரிய கோவில்கள் என. வாகன ஓட்டிகள் எல்லா இடங்களிலும் அனுமனை வணங்காமல் மேலே செல்வதில்லை.....

தொடர்கிறேன்.