Monday, June 20, 2016

ஆறுகாலமும் அர்த்தஜாமமும் !!!!(இந்தியப் பயணத்தொடர். பகுதி 49)

சீர்காழியிலிருந்து  கிளம்பி சிதம்பரம் வந்து சேரும்போதே மணி ஏழரைக்குச் சமீபம். கோவிலுக்கு ஒன்பது மணிக்குப் போயிறணும் என்பது  எனக்கு. பத்து மணி பூஜைக்கு எதுக்கு ஒன்பதுக்கேன்னார் நம்மவர்.   வேணாம்.....   போனமுறையும் இப்படிச் சொல்லிக் கடைசியில் போகமுடியாமல் போயிருச்சு. அதனால்  சீக்கிரம் போகணும். உங்களால்  முடியாதுன்னா சொல்லுங்க நான் போயிட்டு வரேன்னு  சின்னதா ஒரு அஸ்த்திரம் எய்தேன்:-)


அப்பப் போற வழியிலேயே எங்கெயாவது  ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டா நல்லதுன்னார். அந்த எங்கேயாவது  எங்கேன்னு எனக்குத்தெரியும்!  மூணரை வருசத்துக்குமுந்தி சாப்பிட்ட சிதம்பரம் கொத்ஸூ ருசி இன்னும் அவர் நாக்கிலே இருந்து மறையலையே...

அதே கடையைத் தேடிப்போனோம். தேடறதுன்னா.... நம்ம சீனிவாசன் கிட்டே சொன்னால் போதும். அவர் கரீட்டாக் கண்டுபிடிச்சுடுவார். தில்லை ஸ்ரீ கணேஷ் !

உள்ளே போய் உக்கார்ந்தாச்சு. கொஸ்து  நோட்டீஸ் இருக்கான்னு கண்கள் தேடுனது உண்மை. ஆனால் காணோம். என்ன வேணும் என்று கேட்டு மெனுவை ஒப்பித்தவர் கொத்ஸ்/கொஸ்து பெயரையே சொல்லலை.

கேட்டதுக்கு திருதிருன்னு முழிச்சார்.  இந்த இடம்தானான்னு எனக்கு லேசாய் ஒரு சந்தேகம்.  வந்துட்டோமேன்னு  ரெண்டு இட்லிகள் சொல்லி, ரெண்டு வகைச் சட்னிகளோடு சாம்பாருமா  வந்தது. அப்புறம்  ஒரு காஃபி.

கல்லாவில் இருந்தவரிடம் கொஸ்து விசாரணை. எப்போ, எங்கேன்றார். வியாபாரம் கைமாறி இருக்கு.  போனவருசம் முதல் புது மேனேஜ்மென்ட்.  நம்மவருக்கு  ஒரே ஏமாற்றம். போயிட்டுப் போறது.  ஊர் திரும்பினதும் சின்ன  வெங்காயம் போட்டு நானே செஞ்சு தர்றேன்னு தேற்றினேன்:-)

இருட்டில் என்னத்தைப் படம் எடுப்பது? மேலும் கோவிலுக்குள் பூஜை நேரம் படம் எடுக்க அனுமதிக்க மாட்டாங்கதானே? தத்துவ யோசனை மனசில்.  கெமெராவை சார்ஜரில் போட்டு வச்சுட்டுக் கோவிலுக்கு ஒன்பது மணிக்குப் போய்ச்  சேர்ந்தோம்.

அந்த நேரத்திலும் கூட்டம் இருக்குதான்.  நேரா மூலவர் நடராஜனை போற போக்கில் கும்பிட்டுக்கிட்டு பக்கத்து  சந்நிதிக்குள் போறோம்.  கோவிந்தராஜர் கிடப்பில். நிம்மதியாக ஸேவிக்க  முடிஞ்சது. கையில் விழுந்த தீர்த்தம் ஒரே இனிப்பு. நல்லவேளை . வாங்கினதும் நேராத் தலையில் தடவாமல் தப்பிச்சேன். நாபிக் கமலத்தில் ப்ரம்மன் இருப்பதைப் போனமுறை கவனிக்கலையேன்ற குறை தீர்ந்தது.
மணி இப்போ ஒன்பதரை ஆகப்போகுதே. எப்போ அர்த்தஜாமப்பூஜையோ என்ற  ஆர்வத்தில் நடராஜன் சந்நிதிக்கு முன் நின்னுக்கிட்டு இருந்தேன். யாரையாவது விவரம் கேட்டுக்கலாமேன்னு  சுத்தும் முத்தும் பார்த்தப்ப , ஒரு பெண்மணி கண்ணில் பட்டாங்க. இங்கே சிவன் சந்நிதிக்கு இடதுபக்கம் படிக்கட்டுகள் இறங்கிப்போகுது. சந்நிதிக்கு நேராக இருக்கும் நடை ஒரு திண்ணைபோல அமைஞ்சுருது. அந்தத் திண்ணையின் தூணோரம் சாய்ஞ்சபடி  இன்னொரு மனிதரிடம் என்னமோ பேசிக்கிட்டு இருந்தாங்க. எளிய முகம். ரொம்பவே சிம்பிள் உடை.

மெள்ள அவுங்ககிட்டப்போய் விசாரிச்சேன். முதல்முறையா வர்றீங்களான்னதுக்கு  ஆமாம்னு பலமாத் தலை ஆட்டினேன்.  கூடவே இந்த அர்த்தஜாம பூஜையை  மூணரை வருசத்துக்கு முந்தி வந்தப்ப தவறவிட்டுட்டேன்னு  ஆத்தாமையோடு சொன்னேன்.

ஸ்படிக லிங்கத்துக்கு இப்போ பூஜை நடக்கப்போகுது. அது முடிஞ்சவுடன் அர்த்தஜாம பூஜை நடக்கும். நீங்க  ஸ்படிக லிங்கப் பூஜை  பார்த்திருக்கீங்களான்னு  கேட்டப்ப , இல்லையேன்னதும்,  வலக்கைப் பக்கம் கை காமிச்சு அங்கே நின்னு பார்த்தால் நல்லாத் தெரியுமுன்னு சொன்னாங்க. அங்கே போய் நின்னவள், சரியான்னு பார்வையால்கேட்டதும், இன்னும் கொஞ்சம் முன்னால்  போங்கன்னு கையைக் காமிச்சாங்க.
மண்டபத்தின் இடதுபக்க ஓரம் அது.  மேடைஓரத்தையொட்டியே  நெருக்கமா நிக்கறேன்.முன்னால் மேடைக்கும் தரைக்கும் ஒரு பலகை வச்சுருக்கு. பின்னால் யாரும் இல்லை. கொஞ்சம் தள்ளி ஒரு அம்மா, தரையில் கோலம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அஞ்சு நிமிசம் போல் ஆச்சு. மேடையில் நடமாட்டம் தெரிஞ்சது.

பூஜை மணி முதலில் ஒலிச்சது. ஆரம்பிச்சாச்சுன்னு கை காமிச்சாங்க நம்ம கைடு. பளிச்ன்னு  உடையோடு ஒரு தீக்ஷிதர் உள்ளே இருந்து ஒரு  அலங்காரப் பெட்டியைக் கொண்டு வந்தார். அதை மேடையில்  இது போல இருந்த (சுட்ட படம்)ஆவுடையார் நடுவில் வச்சுப் பெட்டியைத் திறந்ததும்   உள்ளே ஒரு பொன் லிங்கம்.
ரெண்டு கைகளால் அதைத் தூக்கினவுடன் பெட்டியை இன்னொரு தீக்ஷிதர்  எடுத்து வேற இடத்தில் வச்சார். இப்போ பொன்லிங்கம் அந்த மேடையில். நாலைஞ்சு எண்ணெய் விளக்குகள் பெருசும் சின்னதுமா அங்கே சுத்திலும்  இருந்தன. தலையைத் திருப்பி, நம்மவர் இருக்காரான்னு பார்த்தால் இருந்தார். கூடவே ஓசைப்படாமல் ஒரு பெரிய கூட்டம் நமக்குப் பின்னால்!

அந்தப் பொன் லிங்கத்தை பக்கவாட்டில்  திறந்ததும் ரெண்டு பிரிவா  வந்தது.  ஓஹோ... இது  லிங்க உருவில்  பொன் உறைப்   பெட்டி! உள்ளே கண்ணாடி போல் நிறமில்லாத ஒரு லிங்கம். அதை மட்டும் திரும்பக் கையில் எடுத்ததும், பொன் லிங்கத்தின்  பெட்டியை எடுத்து வேற இடத்தில் வச்சுட்டார் அந்த இன்னொரு தீக்ஷிதர்.  பூஜை செய்ய  மொத்தம் ரெண்டு தீக்ஷிதர்கள்.

இப்ப நிறம் இல்லாத  ஸ்படிகலிங்கம் அந்த மேடையில். மேடையில் ஆவுடையார் வெள்ளியில் செஞ்சு வச்சுருக்காங்க. வட இந்தியப்பயணங்களில் சில இடங்களில்  ஸ்படிக லிங்கங்களைப் பார்த்துருக்கேன்.
இந்த  லிங்கம், ஆதிசங்கரர் கோவிலுக்குக் கொடுத்ததாம். ஸ்படிக லிங்கருக்குச் சந்திரமௌலீஸ்வரர் என்னும் நாமம்.  கூடவே  ஆடும் தில்லை அம்பலத்தான் முன்பு ஒரு ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செஞ்சுருக்காராம்.

அபிஷேகம் ஆரம்பிச்சது. குடங்குடமாத் தண்ணீரும், பாலும், மற்ற திரவியங்களுமா அபிஷேகம் நடந்துக்கிட்டே இருக்கு. என் பாதத்தில் இந்த நீர்த்துளிகள் எல்லாம் தெறிச்சுக்கிட்டே இருக்கு. இடத்தைவிட்டு அசையாமல் மெள்ளக் கீழே பார்த்தேன். பலகையின் அடியில் சின்னதா ஒரு இடைவெளி.  அபிஷேகதாரைகள் கோமுகத்தின் வழியா வெளியே கொட்டுமிடம் அங்கேதான் இருக்கு போல!  ஐயோ  பெருமாளே.... காலில் தெறிக்கிறதே... அபச்சாரமோன்னு கதி கலங்குனது உண்மை. அதே சமயம் இந்த இடத்தை விட்டுத் துளி கூட  பின்னால்  அடி எடுத்து வைக்கமுடியாமல் ஜனத்திரள் எனக்குப் பின்னால்!  எல்லாம் அவன் செயல்னு  பாரத்தை அவன் மேல் போட்டேன்.


அபிஷேகம் முடிஞ்சு அலங்காரம் செய்து தீபாராதனை ஆனதும்,  நாலைஞ்சு சின்னப்பையன்களான தீக்ஷிதர்கள்  மடியில் விபூதியோடு பக்கவாட்டில் இருந்து வந்து எனக்கு முன்னால் (ஐ மீன் பார்வைக்கு முன்னால்) போறாங்க. முதலில் போன சிலரின்  மடியில் இருந்த விபூதியில் கொஞ்சமெடுத்து ஸ்படிகலிங்கத்துக்குத் தூவினதும்  இன்னொரு தட்டில் எடுத்துக் குவிச்சாங்க. இதுதான்  நமக்குத் தரப்போகும் ப்ரஸாதம்.  பின்னால் போன ஒரு குட்டி தீக்ஷிதர் கால் தடுமாறி மடியில் இருந்த  விபூதி எல்லாம் தரையில் கொட்டிப்போச்சு. உடனே மற்ற  குட்டிகள் ஓடிவந்து  குனிஞ்சு எல்லாத்தையும் சேர்த்து எடுத்து உதவி செய்யறாங்க.  இதன் பலன்?

எனக்கு முன்னே குட்டிகளின் பின்பக்க தரிசனம். ஐயோ.... அங்கே லிங்கத்துக்கு  என்ன ஆச்சுன்னு  எம்பிப்  பார்க்கிறேன். திரும்பப் பெட்டிக்குள் போக ரெடியாக, பொன் லிங்கத்துக்குள் போறார் ஸ்படிக லிங்கர். இடையில் என்ன நடந்தது? யாருக்குத் தெரியும்? நம்மவரைக்  கேட்டால் பட்டுத்துண்டால் துடைச்சு எடுத்ததாச் சொன்னார்.  பெட்டிக்குள் வச்சு ஸ்படிக  லிங்கத்தை  எடுத்துக்கிட்டுப்போன அதே நொடியில் என் பின்னால் இருந்த சனம் காணாமப் போச்சு!

நமக்கு வழிகாட்டியா இருந்தவங்ககிட்டே போய் நன்றி சொன்னேன்.  இந்த  சந்திரமௌலீஸ்வரர் என்ற ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் ஆறுகால அபிஷேகமும் பூஜையும் உண்டாம். சிவபெருமானுக்கும் இங்கே ஆறுகாலப்பூஜைதான்.  பகலில் மூன்றுகாலம், இரவில் மூன்று காலம் என்று ஆறு. ஒவ்வொரு காலத்தில் ஸ்படிகலிங்க பூஜை முடித்து தான் நடராஜருக்கும், சிவகாமிக்கு தீப ஆராதனை நடக்கும். காலை ஒன்பது மணிக்கு காலை சந்தி, காலை பதினொரு மணிக்கு இரண்டாங்காலம், பன்னிரண்டு மணிக்கு உச்சி கால வழிபாடு. காலை இரண்டாம் காலத்தின் போது ஸ்படிகலிங்க அபிஷேகத்துக்கு பிறகு இரத்தினசபாபதிக்கு அபிஷேகம், கற்பூர ஆரத்தி நடக்கும்.  திரும்ப மாலை 6 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை முடிந்து, பெருமானுக்கு சாயரக்ஷை பூஜை நடைபெறும். திரும்பவும்  7 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை, அதைத் தொடர்ந்து சிதம்பர ரகசிய பூஜை, அதன் பின்னர் இரண்டாம் கால பூஜை 8 மணிக்கு நிகழும். இரவும்  9.30க்கு ஸ்படிகலிங்க பூஜை முடித்து 10 மணியளவில் அர்த்தசாமப்பூஜை நடக்கும்.

எப்பவாவது  எதோ அசம்பாவிதத்தால் கோவிலைப் பூட்டும்படி ஆச்சுன்னா...   திரும்ப நடை திறக்கும்போது  அந்த நேரத்து ஆறுகாலப்பூஜை டைமுன்னா... விட்டுப்போன காலங்களுக்கும்  சேர்த்து எத்தனை எண்ணிக்கை விட்டுப்போச்சோ அத்தனை முறை தொடர்ந்து அபிஷேகங்கள் செஞ்சுருவாங்களாம். எப்படியும் இந்த ஆறு டைம் என்பது  ஆறுமுறை என்ற கணக்குதானாம்!
பகல் நேரப் பூஜை ஒரு பதினொருமணிக்கு  நடக்கும்போது ரத்தினசபாபதிக்கும் பூஜைகள் உண்டுன்னதும்  அடடா...... நமக்கு இனி இதை அடுத்த முறைக்குன்னு எடுத்து வைக்கவேண்டியதாப் போச்சு. நாளைக் காலையில் இந்த ஊர் விட்டுக் கிளம்பறோம் இல்லையா?

பேசிக்கிட்டு இருக்கும்போதே எனக்கிடதுபக்கம் மேடையில் பலவிதமான டங்காரங்கள் ஜல்ஜல்ன்னு ஒலிக்குது. டமரு போல் ஒரு உடுக்கை. இன்னும் பெயர் தெரியாத சில  இசைக்கருவிகள். இந்தப்பக்கம் வந்து நில்லுங்கன்னு  என்னை நடராஜர் சந்நிதியில் ஒரு இடத்தில் நிறுத்தியவர், என் பின்னாலேயே நின்னுக்கிட்டு, என்ன பார்க்கணும், எதைப்பார்க்கணும் என்றெல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இம்மி அளவும் பிசகாமல், சொன்னதையெல்லாம்  நான்  ஃபாலோ பண்ணினேன்.
64 சிவகலைகள் அனைத்தும் அம்பலக்கூத்தன்பால் வந்து ஓடுங்குவதாக ஐதீகம். இங்கே இந்தக்கோவிலில் அர்த்தஜாம பூஜை மற்ற எல்லா கோவில்களிலேயும் முடிஞ்சபிறகுதான் நடக்குமாம். நடராஜரின் பூஜைக்கு மற்ற எல்லா தெய்வங்களும் தேவதைகளும், ரிஷிகளும் முனிவர்களுமா  வந்து கலந்துக்க உண்டான ஏற்பாடாம் இது.  அப்போ நாமும் இங்கிருந்தால் அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைச்சிருமுன்னு ஒரு ஐதீகம்.

நாலைஞ்சு பேர் தேவாரப்பாடல் பாடுனாங்க. எதுவும் காதில் விழாமல்  டங்கார ஓசைகள்! தாளவாத்தியங்கள். ரொம்பப்பக்கத்தில் இருந்த ஒருவர்  பெரிய ஜால்ராவைக் கையில் வச்சு  ஜல் ஜங்குன்னு  அடிச்சுக்கிட்டு இருந்தார்.  தீபாராதனை ஆச்சு. அங்கே பின்னால் இருக்கும் நீலத்திரையைப் பாருங்கன்னதும் உத்துப் பார்த்துக்கிட்டே இருந்தேன்.  மூணு முறை திரையை விலக்கி அங்கே  தொங்கும்  வில்வமாலையைக் காமிச்சார் தீக்ஷிதர்.

 தகதகன்னு தீப ஒளியில் மின்னுது. பின்னே? தங்க வில்வமாலையாச்சே!  அரூபமாய் நிற்கும் ஒருவர் கழுத்தில் தொங்குவது போலத்தான் தெரிஞ்சது.  அரூபம்....   இதுதான் சிதம்பர ரகஸியம்!

'முடிஞ்சுருச்சா'ன்னு கேக்க முகத்தைத் திருப்பினப்ப, என் கூட வாங்கன்னு  திடீர்னு  கருவறைக்குப் பக்கவாட்டில்  ஓடறாங்க அம்மையார். நாங்களும் கூடவே ஓடினோம். என் பக்கத்தில் நில்லுங்க . அப்பதான் நல்லாத் தெரியுமுன்னு சொல்லும்போதே  வாத்தியமிசைக்கத் தொடங்க  சின்னதா ஒரு பல்லக்கு பக்கவாட்டு வாசலில் சிற்றம்பலத்தில்  இருந்து படிகளில் இறங்கிவருது. ரெண்டு நிமிசம் அங்கே நம்முன்னே நிறுத்தி  பூக்கள் தூவி, தீபம் காமிச்சப்போ கவனிச்சேன், உள்ளே திருப்பாதங்கள்.  தங்கமா இல்லே வெள்ளியான்னு தெரியலை. தீவட்டி ஜோதியில் மின்னுது. ஆனாலும் பூக்கள் குவியலா இருந்ததால் அனுமானிக்க முடியலை.

பல்லக்கு நகர ஆரம்பிக்குமுன்னே.........  என் கூடவே வாங்கன்னு  எங்கியோ புகுந்து ஓடறாங்க. கூடவே நாங்களும்......   போய் நின்னது பள்ளியறை சந்நிதிக்கு முன்னால். இங்கே பள்ளியறையில் இச்சா சக்தி, ஞானாசக்தி, க்ரியா சக்தின்னு தேவியர்  இருக்காங்க. ஸ்வாமி இங்கே பள்ளியறையில் இவர்கள் கூடத் தங்கி இருப்பார் என்று ஐதீகம். ஸ்வாமியின் திருப்பாதங்கள் அவர் சார்பா வந்து போகுது! காலை மறுபடி  ஆறுமணிக்குத் திருப்பள்ளிஎழுச்சிப் பாடி, பால் பழங்கள்  நைவேத்யம் செஞ்சு  பூஜிச்சு, ஸ்வாமியின் திருப்பாதங்களைப் பல்லக்கில் வச்சு திரும்ப சிற்றம்பலம் என்னும்  நடராஜர் சந்நிதிக்குக் கொண்டு போவாங்களாம். இப்போ  இங்கேயும் தீபாராதனை ஆச்சு. பள்ளியறைக் கதவை இழுத்துச்  சாத்தும் போதே ஓட ஆரம்பிச்ச அம்மையார் பின்னே, நாங்களும் ஓடிக்கிட்டு இருக்கோம்.

இப்பப்போய் நின்னது ஒரு சந்நிதியின் எதிரே இருக்கும் மண்டபத்தில். சின்ன படிபோல் இருந்த இடத்தில் ஏறி நின்னவங்க, இது மேலே ஏறி நில்லுங்க. அப்பதான் தெரியுமுன்னு சொன்னாங்க.  சந்நிதிக்கும் நாம் நிற்கும் மண்டபத்துக்கும் இடையில் பாதை ஒன்னு ஓடுது. உள்பிரகாரப் பாதை.  திபுதிபுன்னு ஓடிவந்த மக்கள் கூட்டம்  அந்த பாதையை நிறைச்சு நின்னுட்டாங்க. அவுங்க தலைக்கு மேல் நாம் பார்க்கிறோம். மண்டபத்திலும்  கூட்டம் நிறைஞ்சு போச்சு.

எதிர் சந்நிதியில் இருப்பவர் அர்த்தஜாம அழகர்.  கோவில் நடையைச் சாத்தி, அந்த சாவிகளை இவரிடம் ஒப்படைக்கும் சடங்கு இது!  இங்கேயும் தீபாராதனை ஆச்சு. காலையில்  இவரிடம் வந்து வணங்கி, இவர் அனுமதியுடன் கோவில் சாவிகளை எடுத்துப்போய் நடை திறப்பாங்களாம். போறபோக்கில்  ஸ்வாமியையும் பள்ளி அறையில் இருந்து கூப்பிட்டுப் போவாங்கன்னு நினைக்கிறேன்.

இதுதான் கடைசின்னு இருந்தப்ப சனம் நேரே விடுவிடுன்னு பாதையில் போய் அடுத்த பக்கம் இருக்கும் காலபைரவர் சந்நிதிக்குக் கும்பிடு போடறாங்க. நாங்க மண்டபத்திலேயே  இடதுபுறமா நடந்து போய் காலபைரவரைக் கும்பிட்டோம்.  இனி அவர்தான் கோவிலுக்குக் காவல்!

இதுதான் கடைசியான்னு கேக்குமுன், நீங்க வாங்கன்னுட்டு முன்னால் போயிட்டாங்க. அவுங்க போனவழியில்  தொடர்ந்து போனால்  உட்ப்ரகாரத் திண்ணைகள் வருது.  அங்கே பாத்திரத்தில் என்னவோ வச்சு , எடுத்துக் கொடுக்கறார் ஒருத்தர். அதுக்குள்ளே நம்மிடம் வந்த அம்மையாரின் கையில் ஒரு தொன்னையில் சக்கரைப்பொங்கல். அதையும் நமக்குக் கொடுத்து, கையில் வச்சுருந்த முறுக்குத்துண்டுகளையும் கொடுத்துட்டு, அர்த்தஜாமப் பூஜை நல்லாப் பார்த்தீங்களான்னு  கேட்டாங்க.

ஹைய்யோ!!!!   இதற்காகத்தானே ஆசைப்பட்டாய்......  துள்ஸி!

'ரொம்ப நன்றிங்க. நீங்க கூட்டிப்போய் இப்படி ஒவ்வொன்னா காமிக்கலைன்னா, எங்கே எப்படி போகணும், என்னத்தைக்  கவனிக்கணுமுன்னே தெரிஞ்சுருக்காது. பெருமாள்தான் உங்களை அனுப்பி இருக்கார்னு'  தழுதழுத்த குரலில் சொல்லிட்டு,  உங்க பெயர் என்னங்கன்னு கேட்டேன். மாலா !

இங்கே உள்ளுர்தான். தினமும்  இந்த பூஜை பார்க்கக் கோவிலுக்கு  வருவேன்.  சென்னைக்குப் போனால், அந்த சமயம் வர முடியறதில்லைன்னதும், சென்னையில் எங்கேன்னேன். அடையார்னு சொன்னாங்க. பேசிக்கிட்டே நாங்க கோபுரவாசலாண்டை வந்துருந்தோம்.

வாசலைக் கடந்து  சட்னு அவுங்க  விடுவிடுன்னு நடந்து போறாங்க. ஐயோ அவுங்களை ஒரு படம் எடுத்துக்கலாமுன்னா கையில் கேமெரா இல்லையேன்னு  இருக்கு. 'என் செல்ஃபோன் வண்டியில் இருக்கு'ன்றார் கோபால்.  நம்மைப் பார்த்தவுடன் ஓடி வந்த சீனிவாசன்  வண்டி இங்கேன்னு கூட்டிப்போறார். இதே வழியில்தான் மாலா போனாங்கன்னு  சொல்லிட்டு  நான் அந்தப் பக்கம் போய்ப் பார்க்கிறேன்...... யாருமே இல்லை! நீண்டு கிடக்கும் தெருவில்  ஆள் நடமாட்டமே காணோம்!

 தொடரும்.............  :-)

PINகுறிப்பு : பதிவில் இருக்கும் சில படங்கள் பூஜை சம்பந்தமுள்ளவை சுட்டவை. கோபுரம் மற்றும் சில கோவில் காட்சிகள் போன பயணத்தில் எடுத்தவை.கோவிலைப்பற்றி ஒன்னும் சொல்லலையேன்னு  நினைப்பவர்கள் இங்கே இந்த இரண்டு  பதிவுகளில் பார்க்கலாம்.

தில்லை நடராஜர் 1 

தில்லை நடராஜர்  2


16 comments:

said...

பதிவின் வழியாக உங்களுடன் கோயில் உலா வந்தோம். நன்றி.

said...

உங்கள் புண்ணியத்தில் நாங்களும் சகல பூஜைகளையும் பார்த்து விட்டோம்....

மாலா - தில்லையம்பலத்தானே அனுப்பி வைத்த உணர்வு....

said...

அற்புதம்.
நன்றி.

said...

துளசி, அடியார்களுக்கு இறைவனே வழி துணையாக வருவார் என்பார்கள். வெங்கட் சொல்வது போல் மாலா வந்தார் .
அருமையான பதிவு.
நாங்களும் எப்போது போனாலும் ஒரு அபிஷேகம் பார்த்து விடுவோம்.இரத்தின நடராஜா அபிஷேகம் பார்த்து இருக்கிறோம்.

said...

தீக்ஷிதர்களுக்கு திருமணம் ஆயிருந்தால்தான் பூஜைகளில் கலந்து கொள்ள முடியும் ஆதலால் இங்கு பால்ய விவாகங்கள் அதிகம் உற்சவ மூர்த்தி என்று வேறு இல்லை. நடராஜரே உற்சவராக வருவார் பலமுறை போயிருந்தும் அர்த்த சாம பூஜை பார்த்ததில்லை. கோவிந்த ராஜரை சிரமமில்லாமல் தரிசித்தீர்களா

said...

தில்லை அம்பலத்தரசனைப் பாக்கப் போனா இந்தப் பதிவை ஒரு பிரிண்ட் எடுத்துக்கிட்டுப் போகனும்.

உங்களுக்குக் கிடைச்ச அனுபவமும் அருமை. நீங்க கேட்டது கிடைத்தது. பார்த்தது பொலிந்தது.

கொத்சு கெடைக்காமப் போயிருச்சே. இந்த மாதிரி கடைகள் கைமாறிப் போறதால.. நம்ம ஒன்னு நெனச்சிட்டுப் போக.. அங்க ஒன்னு கிடைக்குது. வெற எதோவொரு ஊர்லயும் கொத்சு பேமஸ்னு எழுதியிருந்தாங்களே. சமஸ் எழுதிய பதிவுன்னு நெனைக்கிறேன். ஊர்ப் பேர் நினைவுக்கு வரல.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எங்களுடன் கோவில் உலா வந்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும் ஒரு அபிஷேகம் பாக்கி இருக்கு! ரத்தினசபாபதி !

நம்ம ஜிராவிடம் சம்பவத்தைச் சொல்லிக்கிட்டு இருந்தப்ப, நீங்க மால் மால்னு கும்பிடறீங்க. மாலனே மாலாவா வந்துருப்பார்னு சொன்னார்!

அரியும் சிவனும் ஒன்றல்லவா? அம்பலத்தான் அனுப்பிய மாலா!

said...

வாங்க விஸ்வநாத்.

என் நன்றிகளும்!

said...

வாங்க கோமதி அரசு.

என்னக்கூட ஒரு பொருட்டாக நினைச்சு மாலா அம்மையாரை அனுப்பி வச்ச பேரருளை என்ன சொல்வேன்!!!!

ரத்தினசபாபதியை பாக்கி வச்சுட்டு வந்துருக்கேன். சீக்கிரம் கூப்புடுவார் என்ற நம்பிக்கை!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சிதம்பரவாசியான நண்பர், வருடம் இருமுறை நடராஜப்பெருமான் (மூலவரே) உற்சவராக நகர்வலம் வர்றாருன்னு மடல் அனுப்பி இருக்கார். ஒருமுறைக்கு இரண்டு நாள் வீதமாம்.

கோவிந்தராஜரைப் பார்க்க என்ன சிரமம்? ஹாயாகப் படுத்துக்கிட்டு இருக்கார். எப்பவும் நல்ல தரிசனம்தான். எனக்குத்தான் முகம் பார்த்தால் முகம். திருவடிகள் பார்த்தால் திருவடின்னு பார்வை ஒரே இடத்தில் நின்னுருது. சந்நிதி விட்டு வெளியே வந்தபிறகுதான் அடடா அதைப் பார்க்கலையே... இதைக் கவனிக்கலையேன்னு நினைச்சு ஓடுவேன்:-)

said...

வாங்க ஜிரா.

சென்னை சந்திப்பில் நீங்க சொன்னீங்க பாருங்க... அந்த மாலே மாலாவா வந்தார்னு ! அது உண்மைதான் போல! எனக்கு ரொம்பப்பிடிச்சுருச்சு அப்படி நீங்கள் சொன்னது!!!

சமஸ் எழுதுன சாப்பாட்டுப் புராணம் இருக்கு. கொத்ஸூ இருக்கான்னு பார்க்கணும்:-)

said...

ஏ பி நாகராஜன் படம் பார்த்த விஸ்தாரமான உணர்வு. படங்களில் வருவது போலவே மாலாவும் மறைந்தாரே. அற்புதமான கோவில். இறைவன் அருள் தொடர்கிறது.

said...

nandri ... Thayar chitrakoodathil thani sannathi illayo ? kerala pola marbil urayum mahalakshmi thano ?

said...

வாங்க வல்லி.

இப்படி நடந்தது இது ரெண்டாவது முறை. முந்தி கோகுலம் போனபோது கூட்டிப்போய் காட்டுன ரெண்டு இளவயது பையன்கள் இப்படித்தான் காணாமப்போயிட்டாங்க. இப்போ மாலா அம்மையார்!

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

மஹாலக்ஷ்மிக்குத் தனி சந்நிதி இருக்கு. பெருமாளுடன் தாயார்களும் இருக்காங்க.