Monday, June 13, 2016

எத்தனைபேரைப் பார்த்துருக்கேன்! எனக்குத் தெரியாதா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 46)

மதுராந்தகத்தில் இருந்து கிளம்பி திண்டிவனம் நோக்கிப்  போய்க்கிட்டு இருக்கோம். குன்றைக் கண்டால் குமரன் விடமாட்டான்னு  சொல்வோமே........  அதுலே இப்போ இன்னொரு சின்ன மாற்றம் வந்துருக்கு!  இதுவரை  காலியா இருந்ததோ என்னமோ.... அங்கே மாதா கோவில்....  மரியே வாழ்க ன்னு எழுதிவச்சுருக்காங்க!
இதுக்கு அடுத்த ஒரு குன்றில் சிவசிவ ன்னு  ஒரு சிவன் கோவில். வஜ்ஜிரகிரி      மரகதாம்பிகை  பசுபதீஸ்வரர் திருக்கோவில்!
இன்னும் கொஞ்சதூரம் போனால்....  சாலை ஓரத்துலேயே  பெரிய ஆஞ்சி உக்கார்ந்துக்கிட்டு, என்ன நடக்குது இங்கேன்னு  கண்ணில் கவலையோடு  இருக்கார்!
திண்டிவனம்  தாண்டி  இடதுபக்கம்  திரும்பும் சாலையில்  இப்போ பாண்டிச்சேரிக்குப் போறோம்.  தமிழ்நாடு ரெட்டி நல சங்கம்னு ஒன்னு இருக்குன்றதே இப்பதான் தெரிஞ்சது! தலைவர்  வருகை தருகிறாராம்!  பண்டிச்சேரிக்குள் நுழைய ஒரு  20 நிமிசம் இருக்கும்போதே செக்போஸ்ட் ஒன்னு இருக்கு. அங்கே  பர்மிட்  வாங்கிக்கணுமுன்னு வண்டியை ஓரங்கட்டினார் நம்ம  சீனிவாசன்.

இது ஒரு கட்டாய ஸ்டாப்பிங் என்பதால்  இடத்தைச் சுத்திவர பயணிகளுக்கான  நடமாடும் கடைகள்!  கூடவே  இளநீர் குவியல்கள் ஒருபுறம்! பொதுவா நம்மூர்களில் பயணத்தில் இளநீர்தான் என்னுடைய ஒரே சாய்ஸ். சீனிவாசன் வரட்டுமுன்னு  இருக்கும்போதே...  வெள்ளரிக்காய் விற்கும் பெண்மணி,  ஒரு பாத்திரத்தைக்   காமிச்சாங்க.  வெள்ளரிக்காய்  சின்னது. ஆனால் ஃப்ரெஷா இல்லை.

வாங்குங்கம்மான்னு வற்புறுத்திக்கிட்டே நிக்கறாங்க.  சரி..  போகட்டுமுன்னு  வாங்கிக்கிட்டே பேச்சுக் கொடுத்தேன்.தினமும் காலையில் 500 ரூபாய் வட்டிக்கு வாங்குறாங்களாம். வட்டியைப் பிடிச்சுக்கிட்டுத்தான்  கொடுப்பாங்களாம்.

சாயந்திரம் ஏழு மணிக்கு அந்த ஐநூறைத் திருப்பிக் கட்டணும். அதுக்குத்தான் இப்படி வெய்யிலில் அலைஞ்சு விக்கறேன். அதான் வாடிப்போகுதுன்னு  சொன்னவங்க....  எங்கெ இருந்து வர்றீங்கன்னு கேட்டாங்க. சென்னை என்றதும்.......... 'ஆ.......   இல்லை. இல்லவே இல்லை..... நாஞ்சொல்லவா? மலேசியா' சரிதானே?  அதெல்லாம் பார்த்தவுடன் கரீட்டாச் சொல்லிருவேன்...

அட!  எப்படித் தெரியும்லா? என்றேன்.  எத்தனைபேரைப் பார்த்துருக்கேன்! எனக்குத் தெரியாதா?  குப்பம்மாவுக்கு  ஒரே   சிரிப்பு:-)

அடுத்து, ' அம்மாந்தொலைவுலே இருந்து வந்துருக்கீங்களே... எனக்கு எதாவது கொடுத்துட்டுப் போங்க' ன்னு ஆரம்பிச்சாங்க. அதுக்குள்ளே சீனிவாசன் வந்து வண்டியை எடுத்துட்டார். சட்னு சிரிப்போடு டாடா.........  காமிச்சாங்க. க்ளிக்!

ஊருக்குள்ளே நுழைஞ்சு நேராப்போனது  புள்ளையார் கோவிலுக்குத்தான். மணக்குள விநாயகர் வழக்கம்போல் ஜிலிஜிலுன்னு  இருக்கார்! கோவிலில் நல்ல கூட்டம்.
பொதுவா இங்கே கோவிலுக்குள் கெமெரா அனுமதி இல்லைன்னுதான் போன பயணங்களில்  படம்  ஒன்னும் எடுக்கலை.  இப்ப செல்ஃபோன் கேமெரா வந்தவுடன் ஆளாளுக்கு ஃபொட்டொக்ராஃபர் ஆகிட்டாங்களே! அவுங்களுக்கு ரூல்ஸ் ஒன்னும் இல்லையோ!  நாம் மட்டும் ச்சும்மா இருக்கலாமோ?  க்ளிக்கினேன்!
ச்சும்மாச் சொல்லப்டாது.......  உள்ளே  ரொம்ப அழகுச் சித்திரங்கள்  மட்டுமில்லாமல்  எல்லாம் என்னமோ இப்போதான் வரைஞ்சு வச்சாப்ல ப்ளிச்னு  இருக்கு! க்ளிக் க்ளிக் க்ளிக் :-)
படங்களையெல்லாம்  ஃபேஸ்புக்கில் போட்டுருக்கேன். நேரமும் ஆர்வமும் இருந்தால் இங்கே க்ளிக்கலாம்:-)

உச்சிப்போது. மட்டமத்யான வெய்யில் போடுது. ஆனாலும் நம்ம லக்ஷ்மி இருப்பாளோன்ற  அசட்டு நம்பிக்கையில்  வெளியே  எட்டிப் பார்த்தேன்.  தெருவிலே ஒரு சனம் இல்லை!  ஆசிரமத்து வாசலில் கூட ஆள் இல்லை!
கோவிலை ஒட்டி பக்கவாட்டில் இருக்கும் கடைகளில் அழகழகான டெர்ரகோட்டா சாமான்கள்.  ஹைய்யோ!!!  'வாங்கிருவேனோ'ன்ற பயம் நம்மவர் முகத்தில்! 'அஞ்சேல்' அபயகரம் காமிச்சேன். இப்பதான் தென்னாட்டுப் பயணம் தொடங்கி இருக்கு. இன்றைக்கே நம்ம  குணத்தைக் காமிச்சுக்கணுமா?  போயிட்டுப்போறது போ.....
ஊர் முன்னே போல இப்ப இல்லை. அழுக்கும் குப்பைகளுமா இருக்கு:-(
பகல் சாப்பாட்டுக்கு எப்பவும் போற Promenade வேணாம். வேறெங்காவது  போகலாமான்னு தோணுச்சு. சற்குரு நல்லா இருக்குமுன்னு  நம்ம சீனிவாசன் சொன்னார். சாப்பாடு முன்னே பின்னே இருந்தாலும் ரெஸ்ட்ரூம் வசதி நல்லா இருக்கணும், எனக்கு.
பகல் சாப்பாடு...  தாலி இல்லாதவர்களுக்குத் தாலியும், எனக்குப் பூரியுமா ஆச்சு. பூரின்னு சொன்னதுக்குக் கொஞ்சம்  கலந்தசாதங்களும் வச்சுருந்தாங்க.
சாப்பாடான கையோடு நேரா சிதம்பரம்தான். போற வழியில்  நாக்கைத் துருத்தின காளி வீச்சரிவாளோடு நிக்கறாள். பெரிய சிலைகள் வைக்கும் வழக்கம் இங்கே நம்ம பக்கங்களிலும்      அதிகமாகிவருது.
பாண்டிச்சேரியில் இருந்து ஒன்னரை மணி நேரப்பயணம்.  இன்றைக்கு இங்கே தங்கறோம். போனமுறை தங்குன இடம் இப்போ பராமரிப்பு செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம். அதனால் வலையில் தேடினதில் இது கிடைச்சது. வாண்டையார் ஹொட்டேல். கோவிலுக்குப் பக்கம்தான். வெறும் முக்கால் கிமீ தூரம்.


புது இடமென்றால் இப்பெல்லாம் அறையைப் பார்க்கலாமான்னு  கேட்டுப் பார்வையிட்ட பிறகுதான் எடுத்துக்கறோம். அதே போல் ஆச்சு. நாட் பேட். இன்றைய இரவு மட்டும்தான் தங்கறோம் என்பதால் சமாளிச்சுக்கலாம்தான்.
இங்கிருந்து சீர்காழி  ஒரு 21 கிமீ தூரம்தான்.  அங்கேயே  ஊரைச் சுத்தி ஒரு  15 திவ்யதேசக் கோவில்கள் இருக்கு. அதுக்குத்தான் வந்துருக்கோம். அப்ப ஏன் சிதம்பரத்தில் தங்கணும்?  காரணம் ஒன்னு இருக்கு!

நம்ம அபி அப்பா, போனமுறையே  சிதம்பரம் நடராஜர் கோவிலில்  ராத்திரி அர்த்தஜாமப் பூஜை அட்டகாசமா இருக்குமுன்னு சொல்லி இருந்தார்.  இங்கே இந்தக்கோவிலில் அர்த்தஜாம பூஜை மற்ற எல்லா கோவில்களிலேயும் முடிஞ்சபிறகுதான் நடக்குமாம். நடராஜரின் பூஜைக்கு மற்ற எல்லா தெய்வங்களும் தேவதைகளும், ரிஷிகளும் முனிவர்களுமா  வந்து கலந்துக்க உண்டான ஏற்பாடாம் இது.  இந்த பூஜை ரொம்பவே அட்டகாசமா இருக்கும் என்பதோடு அப்போ நாமும் இங்கிருந்தால் அனைத்து தெய்வங்களின் ஆசிகளும் கிடைச்சிருமுன்னு ஒரு ஐதீகம். கட்டாயம் இந்த பூஜையைப் பாருங்கன்னார். கட்டாயம் போகணுமுன்னு  திட்டமும் வச்சுருந்தோம். ஆனால்  நடராஜரின் குட்புக்ஸில் நம்ம பெயர் எழுத விட்டுப்போயிருந்தது :-(

அதுக்காக  அப்படியே  விட்டுடமுடியுமா? கொஞ்சம் நல்லபிள்ளைகளா நடந்துக்கிட்டு, நம்ம பெயர்  ரெஜிஸ்டராகி இருக்குமுன்னு இப்ப  மறுபடி வந்துருக்கோம்.

 ராத்திரி பத்து மணிக்கு  இங்கிருந்தால் போதும் என்பதால், 'இப்ப  மணி நாலுதான். அரைமணி நேரத்துலே சீர்காழி போயிடலாம்.  உன் 108 கோவிலில் ஒன்னு அங்கே இருக்கே. அங்கே போயிட்டு வந்து, சாப்பாடானதும் அர்த்தஜாம பூஜைக்குப் போக நேரம் சரியா இருக்குமு'ன்னு     நம்மவர் ஐடியாக் கொடுத்தார்.

அதுவுஞ்சரி. போனமுறையே தில்லை நடராஜர் கோவிலை, நம்ம நடராஜ தீக்ஷிதர் கூடவே போய்  நல்லாவே சுத்திப்பார்த்து படங்கள் எடுத்தாச்சு.  இவர் நம்ம அபி அப்பாவின் நண்பர்தான்!  இப்பவும் க்ளிக்கணுமுன்னு இல்லை. வெளிச்சம் இருக்கும்போதே சீர்காழிக்கு போயிட்டு வந்துடலாமுன்னு  கிளம்பினோம்.

தொடரும்.....    :-)


22 comments:

said...

// நடராஜரின் குட்புக்ஸில் நம்ம பெயர் எழுத விட்டுப்போயிருந்தது //
ஹிஹி
'காஞ்சில என்னை
கண்டுக்காம போனெல்ல' என்ற
காண்டு இருக்குமோ ?

said...

பயணத்தைத் தொடர்கிறேன். அர்த்த ஜாம பூஜையைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.. தொடரும்ல முடிச்சிட்டீங்களே... நடராஜர் கோவில் பிரசாதம் கிடைத்ததா?

மணக்குள வினாயகர் கோவில் யானை எங்க போச்சு?

எனக்கும் சீர்காழி போன்ற இடத்தில் தங்கி, அதைச் சுற்றியுள்ள திவ்யதேச கோவில்களை சுற்றிப்பார்க்கவேண்டும் என்று ஆவல். எப்போது நடக்கப்போகிறதோ.

said...

அருமை டீச்சர், பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

said...

சீர்காழிக்கு நானும் கூட வரேன்..எனக்கும் வண்டில இடம் கொஞ்சம் குடுங்க டீச்சர்..

said...

சிதம்பரத்தில் அவர் நடராஜ குஞ்சித பாத தீக்ஷிதரா. எனக்குத் தெரிந்தவர்

said...

நானும் தொடர்கிறேன்.

நெய்வேலியிலிருந்து சீர்காழி, சிதம்பரம் ஆகியவை வெகு அருகிலேயே இருந்தாலும் ஒன்றிரண்டு முறை - அதுவும் ஓட்டமாக ஓடி ஓடி பார்த்ததோடு சரி. ஆற அமர பார்க்க உங்கள் பயணத்தில் நானும் வருகிறேன்....

said...

இனிமே குன்றுகளின் மேல் எந்த மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களும் சின்னங்களும் அமைக்கப்படக்கூடாதுன்னு சட்டம் கொண்டு வரனும். இயற்கையின் மதிப்பு யாருக்கும் தெரியல.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னாடி புதுச்சேரி போயிருக்கேன். அப்போ மணக்குள வினாயகர் கோயிலுக்குப் போயிருக்கேன். நீங்க படம் பிடிச்சுப் போட்டிருக்கும் ஓவியங்கள் எல்லாம் அப்போ இல்ல. சமீபத்துலதான் வரஞ்சிருக்கனும்.

புதுச்சேரி முடிச்சிட்டு சீர்காழியா? நான் சீர்காழி போனதில்ல. உங்க பதிவுலதான் பாக்குறேன். ஆமா.. சீர்காழி கோவிந்தராஜன் வீடு இன்னும் இருக்கா?

said...

அருமை !!! சித்திரகூட நாதனையும் தவிட்டு பானைத் தடாளனையும் பார்க்கலாம் தானே உங்க கூட வந்தா ??

said...

மணக்குள விநாயகர் கோயில் மட்டும் சென்றுள்ளோம். தங்கள் பதிவு மூலமாக பிற கோயில்களுக்குச் சென்றோம். நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

அதெல்லாம் போன பயணத்தில் ஊருக்குள்ளேயே போக முடியாமப்போச்சு. அப்புறம் என்ன கண்டுக்கறதாம்?

இந்தமுறை எல்லாம் சரிக்கட்டியாச்:-) குட்புக்குலே ரெண்டுமூணு வாட்டி பெயரை எழுதிட்டார்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பூஜையே ராத்ரி பத்துக்குத்தான். அதுவரை சும்மா நேரங்கடத்தாம ரெண்டொரு கோவில்களைப் பார்த்துட்டு வந்துடலாம். உண்மையைச் சொன்னால்.... பயணங்களில்தான் நாம் ரொம்பவே பிஸி!

லக்ஷ்மி, சம்மர் கேம்ப் போயிருக்குமோன்னுதான் முதலில் நினைச்சேன். ஆனால் இது தமிழ்நாட்டு யானைகள் கணக்கில் வருமா? பட்டப்பகல், (பாகர் )ஓய்வுக்குக் கொண்டுபோயிருக்கலாம்:-)

ரெண்டு மூணு நாள்போதும், கொஞ்சம் நல்லாவே சுத்திப் பார்த்துடலாம். நேரம் அமையணும். அதை 'அவன்' பொறுப்பில் விடுங்க!

said...

வாங்க பித்தனின் வாக்கு.

நல்ல வாக்கு சொன்னதுக்கு நன்றீஸ்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ரெண்டு ஸீட் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கே! ரோஷ்ணிக்கும் உங்களுக்கும்தான்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்தச் சுட்டியில் பாருங்க. நடராஜ தீக்ஷிதர் படம் இருக்கு. இவரா நீங்கள் சொல்லும் அவர்னு நீங்கதான் சொல்லணும்.http://thulasidhalam.blogspot.co.nz/2013/02/blog-post_22.html

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


பலசமயங்களில் இப்படித்தான் பக்கத்துலே இருப்பவைகளைக் கோட்டை விட்டுடறோம்....

ரெண்டு ஸீட் ஒதுக்கி இருக்கேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி உக்கார்ந்துக்கலாம். ஓக்கே... ரைட் ரைட்.... :-)

said...

வாங்க ஜிரா.

கொஞ்சம் யோசிச்சால்... ஒருவேளை இதுபோல் குன்றின்மேல் வழிபாட்டுத் தலங்களாக் கட்டிவச்சதனால் அந்தக் குன்றுகள் தப்பிச்சுருக்குன்னும் சொல்லலாம். அங்கங்கே மலைகளையும் குன்றுகளையும் அழிக்கும்கூட்டம் ஒன்னு காசு பார்த்துக்கிட்டு இருக்கே :-(

படங்கள் எல்லாம் பளிச்ன்னு சமீபத்துலே வரைஞ்சாப்லதான் இருக்கு. கும்பாபிஷேகம் செஞ்சப்ப சேர்த்துருக்கலாம்!


சீர்காழின்னதும் கோவிந்தராஜன் நினைவு வராம இருக்குதா? அவர் வீடு இப்பவும் இருக்குமுன்னுதான் நினைக்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நீங்கதான் ஏகப்பட்ட கோவில்களுக்குப்போய் வர்றீங்களே.... இந்தப் பக்கம் எப்படி விட்டுப்போச்சு?

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

தவிட்டுப்பானை தடாளனுடன், மட்டவிழ் நாயகியையும் சேர்த்தே பார்க்கலாம். நாளைக்குத்தான் அந்தப் பதிவு.

எழுத எழுத ரொம்பவே நீண்டு போயிருச்சு. ரெண்டாப் பிரிச்சுப் போடலாமான்னு ஒரு யோசனை.

ஊஹூம்.... வேணாமுன்னு இப்போ தோணுது.

நாளை சந்திப்போம்:-)

said...

வழியில் இருந்த அஞ்சிநேயர் ...கம்பீரம்

மணக்குள விநாயகர் கோவில் வழக்கம் போல் அழகு...

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி!

said...

சீர்காழில ஒரு குடிசை வேய்ந்த ஓட்டல் இருக்கும். கோவில் குளம்பனு சுத்திட்டுப் போன போது சாதம் தான் இருந்தது. அவசரமாகக் கீரை செய்து இலையில் போட்டார்கள்.
நல்ல பயணம் சிறக்க இன்னும் வாழ்த்துகள். பாண்டிச்சேரியில் நல்ல உணவு விடுதி சற்குரு.

said...

வாங்க வல்லி.


குடிசை வேய்ந்த ஓட்டல் இன்னுமா இருக்கும்? காலம் மாறிப்போச்சு. மாறித்தான் போச்சு!!!!

சற்குரு சுமார்தான். சரவணபவன் மாதிரி.....ன்னும் சொல்லலாம். வயித்துக்குக் கேடு வராதவரை நல்லது.