Wednesday, June 22, 2016

அண்ணன் பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 50)

இந்த வாண்டையார் ஹொட்டேலில் வெளிமுற்றத்தினொரு பக்கம் தங்கும் அறைகளும், இன்னொரு பக்கம் சதர்ன் ஸ்பைஸ் மல்ட்டி குஸீன் ரெஸ்ட்டாரண்ட் என்ற பெயரில் ஒன்னுமா இருக்கு. முற்றத்துக்கு நேர் எதிரில் மணிக்கூண்டு. காலையில்   ஏழரைக்கு முற்றம் கடந்து  டைனிங் ஹால் போனோம். இட்லி, கேஸரி, காஃபி கிடைச்சது. ரொம்பவே சுமார் ரகம்.
இன்றைக்கு நிறைய  பயணம் என்பதால்  சிதம்பரம் விட்டுச் சட்னு கிளம்பணும். எட்டுமணிக்குச் செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பியாச். நேரா சீர்காழிதான். அங்கிருந்து  ஒரு எட்டு கிமீ போனால் திரு வெள்ளக்குளம் என்ற ஊர்.  இப்படிச் சொல்றதை விட அண்ணன்கோவில் என்றால் எல்லோருக்கும் புரிஞ்சுருது.
சீர்காழிக்குப் பக்கத்திலேயே திருநாங்கூர் திவ்யதேசங்கள் என்ற பெயரில் ஒரு  6 கோவில்கள் இருக்கு.  மேலும்  இந்தக் கோவில்களைச் சுத்தி இன்னும் ஒரு  7 கோவில்கள். மொத்தம் பதிமூணு   கோவில்கள்.  இவை எல்லாமும் நம்ம 108 வைணவ திவ்ய தேசக்கோவில்களில் சேர்த்தி என்பதால் இவைகளை தரிசனம் செஞ்சு நம்ம பட்டியலில், இதுவரை  பார்த்த எண்ணிக்கைகளைக் கூட்டிக்கலாம் என்பது நம்ம பயண நோக்கம்:-)

நேத்து சீர்காழி தாடாளன் கோவிலில் ஒரு வரை படம் பார்த்தமே...  அது ரொம்ப நல்ல உதவி. அங்கே கிடைச்ச தகவல்தான் இங்கே கைடு கிடைப்பார் என்பது.

நல்லவேளையா கைவசம் கூகுள் மேப்புக்கு ஆக்ஸெஸ் இருந்ததால் கோபால் பார்த்துச் சொல்லச்சொல்ல கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தாச்சு.
இடது பக்கம் கோவில் திருக்குளம். ஸ்வேதா புஷ்கரணி. (ஸ்வேதம் = வெள்ளை)

திருவெள்ளக்குளம் என்ற ஊர் பெயருக்குக் காரணி இந்த புஷ்கரணிதான். குளத்தின் நடுவில் இருக்கும் நீராழிமண்டபத்தைச் சீர்ப்படுத்தும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.
குளக்கரையில் நம்ம ஆஞ்சிக்கு ஒரு சந்நிதி.  குட்டியா, கை கூப்பிய நிலையில் கோவில் வாசலைப் பார்த்தபடி நிக்கறார். அவருக்கு ஒரு கும்பிடு போட்டபின்  கோபுரவாசலைக் கடந்து உள்ளே போறோம்.
ராஜகோபுரத்துக்கும் ஒரு முக்காடு. புனரமைப்பு வேலைகள்!

கோவிலுக்குள்  வழக்கமான பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடி கடந்து நேரா உள்ளே அண்ணன் இருக்கார். நேராப்போய் மூலவரை ஸேவித்தோம். தீபாராதனை, தீர்த்தம் சடாரி, துளசிதளம் கிடைச்சது. கூடவே கோபாலின் கழுத்தில்  'துளசி இல்லாத' ஒரு மாலை!!  
 
மஹாரண்யம் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் இந்தப் பக்கத்துக் கோவில்களுக்கெல்லாம்   சுத்தப் படுத்துதல், கோவில் கதைகளை எழுதி வைத்தல் போன்ற கைங்கரியங்கள்  பண்ணி இருக்கார்.

அங்கே இருந்த ஒருவரிடம்  வழிகாட்டி கிடைப்பாரான்னு  விசாரிச்சோம்.  நாம் தேடி வந்த வழிகாட்டி அவர்தான்னு தெரிஞ்சது. பெயர் குமார். திருநாங்கூர் கோவில்களுக்கு நம்மோடு வந்து  வழிகாட்டப் போறார். என்ன சார்ஜ்னு கேட்டப்ப,   ' உங்க இஷ்டம்'  என்றார்.

முதல்லே இங்கே கோவிலைச் சுத்திட்டு வரலாம்.  அண்ணன் பெருமாள் என்று மூலவரைக் கூப்பிட்டாலும், இவர் பெயர் ஸ்ரீநிவாஸன். தாயார் அலர்மேல் மங்கை. அட என்று நினைக்கும்போதே.... இந்தக் கோவிலுக்குத் தென் திருப்பதின்னு ஒரு பெயரும் இருக்குன்றதைச் சொன்னார்.

இந்தத் தென்திருப்பதி என்ற பெயரில் இன்னும் சில கோவில்களைப் பார்த்திருக்கேன். எல்லாம் நம்ம வசூல்ராஜாவின் கிளை ஆஃபீஸ்கள் என்றதே!  திருப்பதிக்கு வேண்டிக்கிட்டு, அங்கே போகமுடியலைன்னா, இப்படி ப்ராஞ்ச் ஆஃபீஸ்களில்  பணத்தைக் கட்டிடலாம். ஹெட் ஆஃபீஸுக்குத்தான் போய் கட்டணும் என்பதில்லை. ரொம்ப ஃப்ளெக்ஸிபிள்ப்பா.  நல்ல நெட் வொர்க்!

கோவில் , திருப்பதி கோவிலைவிடப் பழசு என்பதாலும், பாசுரம் பாடி மங்களாசாஸனம் செய்த திருமங்கை ஆழ்வார் முதலில் இங்கே வந்து பாடியதால் இவரை, திருப்பதி சீனுவுக்கு  அண்ணன் என்று சொல்லி இருக்கார்.

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா,அடியேன் இடரைக் களையாயே.


கோவிலை வலம் வர்றோம். முதலில் நம்ம தாயார் சந்நிதி. அலர்மேல் மங்கை! பத்மாவதி. சந்நிதி மூடி இருந்தாலும் கம்பிக் கதவின் வழியாகத் தரிசனம் ஆச்சு. சின்ன உருவம்தான்.
தாயார் சந்நிதி மண்டபத்துக்குள்ளேயே இன்னொரு சின்ன சந்நிதியில் குமுதவல்லித் தாயார். இது  குமுதவல்லியின் அவதார ஸ்தலமாம்.
யார் இந்தக் குமுதவல்லி?  நம்ம திருமங்கையின் மனைவிதான்! என்ன ஏதுன்னு கொஞ்சம் கதை கேக்கலாமா?
இங்கே  குளத்தில் ஏராளமா எப்போதும் குமுதமலர்கள்  இருக்குமாம். தேவகன்னிகையர் இங்கே வந்து யாருக்கும் தெரியாமல்  அல்லிகளைப் பறித்துப்போய் இஷ்ட  தெய்வத்துக்கு வழிபாடு செய்வாங்க போல. இப்படி தினமும் நடந்து வரும் காலத்துலே, ஒரு நாள்  ஒரு மானிடன் கண்ணுலே பட்டுடறாள் ஒரு தேவகன்னிகை.  இதனால், தேவலோகம் திரும்பிப்போகும் சக்தி போயிருது. பெண்ணாகவே பூமியில் தங்கி இருக்கும் நிலமை. குமுதா என்ற பெயரில் அறியப்படுகிறாள்.

இன்னொரு வெர்ஷனும் இருக்கு.  தேவலோக மங்கையான சுமங்கலை, தன் தோழிகளோடு சேர்ந்து இமயமலைக்கருகில் உல்லாசப்பயணமாச் சுத்திக்கிட்டு இருக்காள். அப்போ கபில முனிவரின் ஆஸ்ரமத்தாண்டை வந்துருக்காங்க. சிஷ்யப்பிள்ளைகளுக்குப் பாடம் நடத்திக்கிட்டு இருக்கார் முனிவர். அந்த சிஷ்யப்பிள்ளைகளில் ஒருவர்  கொஞ்சம்கூட அழகே இல்லாமல்  இருந்துருக்கார். அவரைப் பார்த்ததும் சுமங்கலைக்குச் சிரிப்பு வந்துருது.  சிரிப்புச் சத்தம் கேட்ட கபில மகரிஷி,  கோபமாத் திரும்பிப் பார்த்தார். பலன்?  வேறென்ன... 'பிடி சாபம்'தான். பூலோகத்தில் பிறக்கக் கடவாய்.........
சரி....   கதைகள் எப்படி ஆனாலும்,  குமுதா  என்ற பெயரில்  இந்த ஊரில் இருக்காள்.

படைத்தளபதி ஆக இருந்த நீலனுடைய வீரத்தைக் கண்ட சோழ மன்னர், பரகாலன் என்று  ஒரு பட்டப்பெயர் கொடுத்து,  ஆலிநாடு என்னும் ஒரு சின்ன நிலப்பகுதிக்கு அரசன் ஆக்கி இருந்தார்.  நீலன் ஒருமுறை, குமுதாவைக் கண்டு, அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறான். இவள்தான் தேவகன்னிகையாச்சே. சட்னு சம்மதிக்காமல் சில நிபந்தனைகள் போடறாள்.

முதல் நிபந்தனை, இவர்  வைஷ்ணவராக ஆகணும். எப்படி? பஞ்ச  சம்ஸ்காரம் செஞ்சுக்கணுமாம். சுருக்கமாச் சொன்னா தோளில் சங்கு சக்ர முத்திரை போட்டுக்கறது. இதை ஒரு ஆச்சாரியன் செய்வார்.  தாப, புண்ட்ர, நாம, மந்த்ரம், யாக  சம்ஸ்காரம் என்ற அஞ்சு விதமான சடங்கில்  இது ஒன்னு. நாம் முத்திரை போட்டுக்கிட்டவங்கன்னு  சுருக்கிடறோம். இதைப்பற்றி இன்னும் விரிவா  இன்னொரு சமயம் பார்க்கலாம்.

இது என்ன பிரமாதமான்னுட்டு  நீலன் நேராப்போனது, ஒப்பிலியப்பனைத் தேடித்தான். திருநறையூர் நம்பியிடமே முத்திரை போட்டுக்கும் பாக்கியம் இவருக்குக் கிடைச்சுருது. திரும்பி வெள்ளக்குளம் வந்தவர், 'ஆச்சு'ன்னார். இல்லை... இன்னும் ஆகலைன்னாள் குமுதா.
நீங்கதான் குறுநிலமன்னர் ஆச்சே...  தினமும் வைணவ அடியார்கள் 1008 பேருக்கு   அன்னதானம் செய்யணுமுன்னு அடுத்த நிபந்தனை. எவ்ளோ நாளுக்கு?  ஒரு வருசம், செய்யும். அப்புறம் பார்த்துக்கலாமுன்னு சொல்றாள்.

எந்த தானம் செய்யறதுன்னாலும், மனைவியோடு சேர்ந்து செஞ்சால்தான் பலன் என்று சாஸ்த்திரங்கள் சொல்லுதே! அதன்படி அன்னதானம் தொடங்கறதுக்கு முன்னால் கல்யாணமும் ஆச்சு.

தினமும் ஆயிரத்தெட்டு அடியார்களுக்கு அன்னமிடல். எல்லோரும் சாப்பிட்டானதும்தான் இவுங்க சாப்பிடணும். என்னதான் ராசான்னு இருந்தாலும் தினம் இம்மாம்பேருக்கு விருந்துன்னா.... கை இருப்பு கரையத்தானே செய்யும்....  சோழ மன்னனுக்குக் கட்டவேண்டிய கப்பத்தொகை பூராவும் இங்கே சாப்பாட்டுலேயே செலவாகிப்போச்சு. கையில் காசு இல்லைன்னா...  திருடியாவது அன்னதானம் பண்ணணும் என்று  வழிப்பறி, கொள்ளைன்னு   இறங்கிடறார் திருமங்கை.
ஒருநாள் காட்டுக்குள்ளே வந்துக்கிட்டு இருந்த  கல்யாணகோஷ்டி, ஏராளமா நகையும் நட்டுமா வருதுன்னு  சேதி.  போய்  அனைவரையும் மிரட்டி எல்லாத்தையும் கொள்ளை அடிச்சாச்சு.  மாப்பிள்ளை காலில் போட்டுருக்கும் மெட்டியைக் கழட்ட முடியாமத் திணறினார்.  அந்தக் காலத்தில் ஆண்கள் காலில் மெட்டி போடும் பழக்கம் இருந்துருக்கு. எதிரே நிலம் நோக்கி நடந்து வரும் பெண்களுக்கு, இவர் கல்யாணம் ஆனவர்னு தெரிவிப்பது இந்த மெட்டிதானாம்.

சின்ன மெட்டி, கழட்டவரலை... போனாப் போகட்டுமுன்னு விட்டுருக்கலாம். துளித்தங்கமுன்னாலும் அதை வச்சு ரெண்டு ஆளுக்கு சாப்பாடு போடலாமேன்னு  கழட்டித் தரச்சொல்லி மிரட்டறார். அதான் கழட்டவே வரலையே....  சரி நான் கழட்டி எடுக்கறேன்னு குனிஞ்சு  மாப்பிள்ளையின் கால் விரலில் இருக்கும் மெட்டியைப் பல்லால் கடிச்சு உருவப் பார்க்கிறார். ஊஹூம்... அப்பவும் எடுக்க வரலை.... இவர் குனிஞ்சு  பல்லால் மெட்டியைக் கழட்ட முயற்சி பண்ணும்போது, மாப்பிள்ளையின் கை இவர் தலையைத் தடவுது.  மாப்பிள்ளை அப்படியே குனிஞ்சு,  இவருடைய  காதில் என்னவோ சொல்றார்.  உடம்பெல்லாம்  தூக்கிவாரிப் போட்டாப்ல ஆகிருது.
போகட்டும்னு நகை மூட்டையை எடுக்கக்  கைநீட்டறார். மூட்டையைத் தூக்கமுடியாதபடி அவ்ளோ கனம்!  அசைக்கக்கூட முடியலை.  பொண்ணு மாப்பிள்ளை மந்திரவாதிகளோன்னு  தலையைத் தூக்கிப் பார்க்க.............  சங்குசக்ரதாரியாகப் பெருமாள் காட்சி கொடுக்கறார்.

குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம்.

முதல் பாசுரம் திருமங்கையின் நாவில் இருந்து வந்தது.
இந்த 108 திவ்யதரிசனக் கோவில்களில் 84  கோவில்களுக்குப்போய் மங்களசாஸனம் செஞ்சவர் இவர்தான்.  வொர்ல்ட் ரெக்கார்ட் !

மேலே: சுட்டபடம். தினமலருக்கு நன்றி.

நீலன், திருமங்கை ஆழ்வாரானதும் குமுதவல்லிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமப் போச்சு! அவளுக்குத்தான் இங்கே தனிச்சந்நிதி இருக்கு!
கப்பப்பணம் பாக்கி வச்சவரை, சோழமன்னன் பிடிச்சு சிறையில் போட்டது, காஞ்சிப் பேரறிவாளன் அருளால் நிதி  கிடைச்சதுன்னு  திருமங்கையின் கதை நீண்டு போகுது. அதை இன்னொருநாள் பார்க்கலாம்.

காலையில் ஏழுமணிக்குத் திறந்தால் ராத்ரி எட்டுவரை கோவிலை மூடறதே இல்லை. இப்படி எல்லாக் கோவில்களும் இருக்கப்டாதான்னு மனசு ஏங்கியது உண்மை.


இங்கே  சஷ்டியப்த பூர்த்தி,  பீமரத சாந்தி, சதாபிஷேகம் செஞ்சுக்கறது ரொம்ப விசேஷமாம். ஏன்னா... ம்ருத்யுவை அடக்கியாண்ட தலமாம். எம பயம் கிடையாது.

பிரம்மாவுக்கு ஒரு சமயம் என்னவோ ஆய்ருச்சு. தான் படைத்த உலகத்தைத் தானே  தீயால் கொளுத்திக்கிட்டு இருக்கார். இதைப் பார்த்த  சிவன், தன்னுடைய சக்தியால் தீயைத் தடுத்து நிறுத்துனதும்,  அந்த தீ அப்படியே ஒன்னு சேர்ந்து  ஒரு பெண்ணா உருவாகி நிக்குது. அந்தப் பெண்தான் ம்ருத்யு தேவி.  உடனே ப்ரம்மா, அந்தப் பெண்ணிடம் மீதி இருக்கும் உலகத்தைப்போய் அழிச்சுட்டு வான்னு கட்டளை இட்டார்.  பெண்ணுரு எடுத்ததால் பாவ புண்ணியத்துக்கு பயந்தவளா இருந்த ம்ருத்யு, அது தன்னால் ஆகாத செயல்னு  மறுத்துட்டாள். கோபம் வந்துருது ப்ரம்மாவுக்கு.
உன் பார்வை பட்டவர்களுக்குப் பலவித நோய்கள் உண்டாகும். அதனால் அவுங்கெல்லாம் செத்துப் போயிருவாங்க. நீ தான் மரணத்துக்குக் காரணமா இருப்பாய்னு சபிக்கிறார். 'போய், எமனுக்கு அசிஸ்டென்ட்டா இரு'ன்னதும் வேற வழி இல்லாம கொடுத்த வேலையைச் செய்யும்படி ஆகிருச்சு.


சூரிய குலத்தில் வந்த துந்துமாறன் என்ற அரசனுக்குப் பிறந்தவன் இளவரசன் ஸ்வேதன். இவனுக்கு ஒன்பது வயசில் மரணம்  என்று  ஜாதகம் கணிக்கும்போது தெரியவந்தது. ம்ருத்யுவால் மரணம் என்று தெரிஞ்சுக்கிட்ட  பாலகன்,  இங்கே கோவிலுக்கு வந்து, மரணபயத்தைப் போக்கும்படி பெருமாளிடம் வேண்டிக்கிட்டு, புஷ்கரணியின் கரையில் இருந்த வில்வ மரத்தடியில் உக்கார்ந்து, வில்வ இலைகளால் பெருமாளுக்குப் பூஜை செய்தபடி ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை  இடைவிடாது  ஜெபிக்கிறான்.  பெருமாளும் மனம் இரங்கி, அவன் முன் தோன்றி, மார்க்கண்டேயனைப்போல் நீயும் மரணத்தை வென்றவன்னு அவனுக்கு ஆசி அளித்துக் காப்பாற்றினார்.

அந்த வில்வமரம் சிவனுடைய சாந்நித்யமாக இங்கே  தலவிருட்சமாகவும் இருக்கு.

கோவிலில் தரை போடறாங்க போல....  கடப்பைக்கல் சதுரங்கள் வந்து இறங்கி இருக்கு. தூசு படாமல் இருக்க வாகனங்கள் எல்லாம் வலைப்போர்வைக்குள்.
மடப்பள்ளியாண்டை உரலும், ஆட்டுக்கல்லுமா இருக்கு. உபயோகத்தில் இருக்கறமாதிரி தெரியலை. தொட்டடுத்துக் கிணறு. பத்துப்பாத்திரங்கள் தேய்க்கப் போட்டுருந்தாங்க. கிணற்றில் தண்ணி இருக்கு என்பதே சந்தோஷம்.
ஆண்டாள் சந்நிதியைப் பார்த்த நினைவு இல்லை. சுத்தி வந்தவள் முன்மண்டபத்துக் கொடிமரத்தாண்டை வந்தப்ப, குட்டிப்பையன் வந்து  நின்னான். பெயர் என்னன்னு கேட்டப்ப, சங்கு சக்ரதாரி போல கைகளை உயர்த்திக்கிட்டே 'சீனிவாசன்'னு   சொன்னது ஜோர்!
கொடிமரத்தின் பக்கத்தில் நின்னு மூலவரை ஒரு முறை சேவிச்சு, கேமெராக் கண்ணை உள்ளே அனுப்பினேன். மங்கலாக வந்தார்.

நமக்கு வழி காட்டப்போகும் குமாரை நம்ம வண்டியில் ஏத்திக்கிட்டு அடுத்த திவ்யதேசக் கோவிலுக்குக் கிளம்பறோம். இனி எல்லாம் குமார் கொண்டுபோகும் வழிதான்!

தொடரும்........  :-)




14 comments:

said...

அண்ணன் கோவிலை தரிசித்து விட்டோம்...திருமங்கை கதை இங்கே வேடுபறியாக மிகச்சிறப்பாக நடத்தப்படும்...அவரது வம்சத்தினர் என்று தெருவே நோட்டீஸ் ஒட்டி கொண்டாடும்....அவர்களில் இரு சிறுவர்களை ஆண்டாள் தன் மேல் அமரவைத்து அழைத்துச் செல்வாள்...

said...

நீங்கள் தங்கி இருந்த வாண்டையார் ரெஸ்டாரண்டுக்கு மிக அருகில் மெடிக்கல் காலேஜ் ரோடு, திரிபுர சுந்தரி நகரில் தான் எங்கள் வீடு உள்ளது.

பெரிய கோவில் இருந்து திருச்சி செல்லும் ரோடில் சற்று தூரத்தில், ராஜப்பா நகர் 4 வது தெரு வழியாக சென்றால், அதன் அருகாமையில் செங்கமல நாச்சியார் கோவில் சரித்திர புகழ் வாய்ந்தது. பொன்னியின் செல்வனில் இந்தக் கோவிலைப் பற்றி கல்கி எழுதி இருக்கிறார்.

பெரிய கோயில் மேல வீதியில் ராமர் கோவில், காமாக்ஷி கோவில், மூலை அனுமார் கோவில் அவசியம் பாருங்கள்.



சுப்பு தாத்தா.

said...

அப்பாடா எவ்வளவு கதைகள் எல்லாம் வழிகாட்டி சொன்னதா நினைவில் இருக்கிறதா சிதம்பரத்தில் தில்லை காளி கோவிலுக்குப் போகவில்லையா.

said...

இத்தோட அப்புறம் பார்க்கிற கதைகள் ஏகத்துக்கு ஆச்சு.
அண்ணன் கோவில் பாட்டு ரொம்ப நபர்களுக்குத் தேவை. இடரைக் களையணுமே.
உங்க புண்ணியத்தில இத்தனை கோவில்களையும் பார்த்து வருகிறோம்.

அடுத்தும் பார்க்கிறோம்.

said...

நானும் வரேன் உங்க கூட .. குமுதையின் மன்னன் கதை எனக்கு அவ்வளவாக தெரியாது .. எனக்காக அங்க அங்க சொல்லிக்கிட்டே கூட்டிட்டு போறீங்களா ??

said...

ஆலிநாடன் திருவரங்கத்தில் கோயில் கட்டுறதுக்காகக் கொள்ளையடிச்சார்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.

அரங்கத்துக்குப் போனப்போ திருமங்கையாழ்வார் கட்டிய நெல் சேமிக்கும் கிட்டங்கிகளைக் காட்டினாங்க. பெருசு பெருசா இருந்துச்சு.

திருமால் பெருமைல நடிகர் திலகம் திருமங்கையாழ்வாரா நடிச்சிருக்காரே. அதுல குமுதவல்லியா நடிச்சது சௌகார் ஜானகி.

திருமலைவையாவூருக்கும் தெந்திருப்பதின்னுதான் பேரு. திருப்பதி பாலாஜி மாதிரியே இருக்காரு. ஆனா உயரம் கட்டை.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.


உங்க ஊரில் குறைஞ்சது ஒரு ஆறுமாசம் வந்துருந்து அப்ப நடக்கும் எல்லா உற்சவங்களையும் பார்க்க ஆசை!

எப்போ கிடைக்குதோ......

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

அர்த்தஜாமம் ஒன்றே குறி என்று போனதுதான். சிதம்பரத்தில் இந்தாமுறை வேறெங்கும் போகலை.

எப்படியும் ரத்தினசபாபதியை பாக்கி வச்சுட்டு வந்துருக்கேனே... அடுத்த முறை போனால் நீங்க சொன்ன மற்றகோவில்களைத் தரிசிக்கவேணும்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தில்லை காளியை போன பயணத்தில் தரிசித்தோம்.

கதைகளைச் சொல்லும் அளவுக்கு வழிகாட்டிகள் இப்போது இல்லை. நாமே ஊர்மக்கள் சிலரிடமும், எங்க வீட்டுப் பெரியத்தை, நம்பத்தகுந்த சில ஆன்மிகத் தளங்கள், என்னிடம் ஏற்கெனவே இருக்கும் புத்தகங்கள் மூலமாக வாசித்துத் தெரிஞ்சுக்கிட்டு அதைத்தான் பதிவில் எழுதுகின்றேன்.

said...

வாங்க வல்லி.


எந்தக்கதைக்குள்ளேயாவது போனால்.... அது பாட்டுக்கு ஒன்றோடொன்று தொடர்பா அனுமார்வால் போல் ஆகுதேப்பா. அதான் அப்புறம் பார்த்துக்கலாமுன்னு கொஞ்ச்ம் எடுத்து வச்சுக்கிட்டு இருக்கேன்:-)

இடர் எப்போதும் தொடர். அவரும் களைஞ்சு களைஞ்சு ஓய்ஞ்சு போயிடறார் :-)

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

நம்ம கோபாலுக்கும் கதைகள் தெரியாது. அதான் போறபோக்கில் சொல்லிக்கிட்டே போறேன். நீங்கள் எல்லோரும் கூடவே வந்து கேட்டுக்கொண்டு இருப்பது பிடிச்சிருக்கு!

said...

வாங்க ஜிரா.

ஸ்ரீரங்கம் கிட்டங்கி, திருமங்கையா கட்டினார்? அட! நம்ம ராமானுஜர் கோவிலையும், பூஜை முறைகளையும் சரி செஞ்ச போது, இந்த நெற்குதிர்களைக் கட்ட ஏற்பாடுசெஞ்சாருன்னுதான் தெரியும்.

இப்போ நீங்க சொல்லும் கிட்டங்கிகளை பழுது பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இந்தப்பயணத்துலே பார்த்தேன்:-)

ப்ராஞ்சு ஆஃபீஸிலும் அதே சைஸில் இருக்கமுடியுதா? கட்டையோ குட்டையோ வசூல் ஆனாச் சரி:-)

said...

எத்தனை எத்தனை கதைகள்....

உங்கள் மூலம் நாங்களும் கதை கேட்கிறோம். நல்ல கைடு கிடைத்தால் பல கோவில்களின் கதைகளைத் தெரிந்து கொள்ள முடியும். நம்மூர் கோவில்களில் இப்படிச் சொல்பவர்கள் குறைவு.

தொடர்கிறேன்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கைடுகளுக்கு வழி தெரியுதேதவிரக் கதைகள் தெரிவதில்லை என்பது சோகம். பேசாம வேலையில் இருந்து ஓய்வு ஆனதும் கோவில்கைடா சேவை செய்யலாமான்னு ஒரு யோசனை!