Friday, June 24, 2016

அரிமேயவிண்ணகரம் (திருநாங்கூர்) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 51)

இந்தத் திருநாங்கூர் கோவில்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு பக்கத்தில் இருக்கு. அதிக தூரமில்லை என்றாலும் வழி காமிச்சுக் கொடுக்க யாராவது கூட இருந்தால் தான் நல்லது.  மேலும் ஒரு கோவிலுக்கு ஒரு பட்டர்னு இல்லாம, ஒரே பட்டர் ஸ்வாமிகள் ரெண்டு மூணு கோவில்களுக்கு பூஜை செய்யறார்.  வழிகாட்டியா வர்றவங்களுக்கு இந்த விவரம் பூராவும் தெரியுது.  பட்டர்களின் செல்ஃபோன் நம்பர், எந்த நேரத்துலே எந்தக் கோவில் திறந்துருக்கும், பட்டர் ஸ்வாமிகள் எப்போ எந்தக் கோவிலில் இருப்பார் என்ற   தகவல்கள் எல்லாம் அத்துபடி. நாம் ஒரு கோவிலை நோக்கிப் போகுமுன்னே அங்கே ஆள் இருக்கான்னு  செல்லில் கூப்புட்டுக் கேட்டுக்கிட்டே வழி சொன்னார்   நம்ம குமார்.
இவர் ஒரு காலத்தில் வியாபாரம் செஞ்சுக்கிட்டுதான் இருந்தாராம்.  அப்புறம் இப்போ ஒரு ஏழெட்டு வருசமாத்தான் கைடு வேலை பார்க்கிறேன்னார்.

நாம் அடுத்துப்போன இடம் குடமாடுகூத்தன் கோவில். அரிமேய விண்ணகரம். திருநாங்கூர் திவ்யதேசத்தில் இதுவும் ஒன்னு. சின்னதா இருந்தாலும் பளிச்ன்னு இருக்கும் ராஜகோபுரம் மூணு நிலையில்.
ராஜகோபுரத்துக்கு வெளியிலேயே பெரியதிருவடிக்கு சந்நிதி.  பலிபீடம் மட்டும் இருக்கு. கொடிமரம் இல்லை.
ஒரு நாலு வருசங்களுக்கு முந்தி கும்பாபிஷேகம் நடந்துருக்கு. இன்னும் பரவாயில்லாமல்  இருக்கு. நீளமான முன்மண்டபத்துக் கூரையில் தசாவதாரம், ராமாயணம், பாகவதம் காட்சிகளை வரைஞ்சு வச்சுருக்காங்க.
கண்ணுக்கு நேரா குடமாடுகூத்தனின் சந்நிதி. இப்பதான் கோவில் முன்மண்டபத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்யறாங்க ஒருத்தர்.
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 9 முதல் 12. மாலை 4 முதல் 6  என்று இருந்தாலும் கோவில் திறந்து இருக்கே தவிர,  பட்டர் ஸ்வாமிகள் இருப்பது உத்தரவாதமில்லை. அவரும் ரெண்டு மூணு கோவில்களைப் பார்த்துக்க வேண்டி இருப்பதால் இங்கேயுமங்கேயுமாத்தான் போய்வர்றார்.  என்ன செய்யறது?



 குடமாடும் கூத்தனைக் கம்பி வழியா தரிசனம் செஞ்சுக்கிட்டு, அப்படியே   பக்கத்தில் இந்தாண்டை இருக்கும்  ஸ்ரீராமர்  சந்நிதிக்கும் ஒரு கும்பிடு போட்டுட்டு,  ஒரு பத்து நிமிசம் போலக் கோவிலை வலம் வந்து மற்ற சந்நிதிகளில் போய் கும்பிட்டு வந்தோம்.
மூலவர்  குடமாடு கூத்தன்.  இருந்த கோலம். காலடியில் ஒரு பானை! வெண்ணெய்ப் பானை. மூலவர் சுதைச் சிற்பம் என்பதால் அபிஷேகம் கிடையாது. தைலக்காப்புதான்.

உற்சவர்  நாலு கைகளோடு இருக்கும்  சதுர்புஜ கோபாலன்.
தனிச்சந்நிதியில் தாயார். பெயர் அமிர்தகடவல்லி. வலத்தைத் தொடர்ந்தால்  அந்தாண்டை சூடிக்கொடுத்த சுடர்க்கொடி தனிச் சந்நிதியில்.  கொஞ்சம்(!) சின்னதா இருக்கு  சந்நிதி. நாலுபடிகளேறிப்போய் ஸேவித்துவிட்டு, தூமணி மாடம் ஆச்சு.
கோவிலுக்கு நம்ம மஹாரண்யம் முரளிதர ஸ்வாமிகள்தான் கொஞ்சம்  நிதி உதவி, பராமரிப்பு  செய்யறார். போர்டில் தகவல் இருக்கு.  மாசம் முழுக்க  ஒரு ஆயிரம் ரூதான் சம்பளம் என்றால்....   பட்டர்கள் நிலை கஷ்டம்தான் இல்லையோ.....

தமிழக அரசுதான் எல்லாக் கோவில்களையும் அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்துருச்சே.... அப்ப அரசு சம்பளம் வருமான்னு  கேக்கணும். இந்தக் கோவில்களில் எல்லாம் பக்தர்கள் கூட்டங்கூட்டமாக  வர்றமாதிரி தெரியலை.  சீஸன் அனுசரிச்சு  அப்பப்போ வருவாங்கபோல.  மேலும்  இந்த 108 திவ்யதரிசனக் கோவில்கள்   ஆசை உள்ளவர்கள் வந்துட்டுப் போவாங்கதான். ஆனால் அடிக்கடி வருவாங்களா என்ன?

பட்டர்களுக்கும் குடும்பம் குழந்தைகுட்டின்னு இருக்கும்தானே?  இப்படி வருமானம் என்றால் யார்தான் பிள்ளைகளை கோவில் வேலைக்குன்னு அனுப்புவாங்க?  பெருமாள் மேலுள்ள அன்பால் சிலர் வருவாங்கன்னு  நினைக்கிறேன். அதுவும்   எத்தனை தலைமுறைக்கு? 
திருநாங்கூர் கருட சேவை என்பது ரொம்பவே ப்ரசித்தி என்பதால்  அப்போ மட்டும் கூட்டம்   இருக்கும். ஒவ்வொரு கோவிலில் இருந்தும்  கருடவாகனத்தில் பெருமாள் புறப்பட்டுப்போய் இன்னொரு கோவிலில் ஒன்றாய் சேர்ந்து ஸேவை சாதிப்பார்கள். மொத்தம் பதினோரு  பெருமாள்கள். இங்கேயே வாகன மண்டபத்தில் ஒரு சில கோவில்களின் கருடவாகனங்கள் பார்த்தோம்.

இந்த நாங்கூர் பகுதியை ஒரு காலத்தில் நாகராஜனான தக்ஷகன்/தட்சன்  என்பவன் நிர்மாணிச்சு இங்கே தங்கி இருந்து  ஸ்ரீநாராயணரை வழிபட்டு வந்துருக்கான். அப்போ இதுக்கு நாகபுரம்னு ஒரு பெயர் இருந்துருக்கு. அந்தக் காலக்கட்டத்தில் உத்தங்க   மகரிஷிக்கு தரிசனம்  கொடுத்துருக்கார் நம்ம  குடமாடு கூத்தர். எப்படின்னு பார்க்கலாமா?

உத்தங்கர் சின்ன வயசில் வைதர் என்ற குருவிடம் வேதங்களைக் கற்று முடிச்சார். குரு தட்சிணை தர வேண்டிய சமயம், குருபத்தினி  கேட்டது  உள்ளூர் அரசியின் காதணிகளான குண்டலங்கள்.
உத்தங்கரும்  அரண்மனைக்குப்போய் அரசனிடம் , குருதட்சிணைக்காக அரசியின்  காது குண்டலங்கள் வேணுமுன்னு கேட்டுருக்கார்.  அரசனும் அரசியும்  ஒரு சொல்லும் பேசாது  குண்டலங்களைத் தானம்  செஞ்சுடறாங்க. அதை எடுத்துக்கிட்டு இவர்  குருகுலத்துக்குப் போய்க்கிட்டு இருக்கார். வழியில் சொல்லமுடியாத தாகமும் பசியுமா இருந்துருக்கு.

அப்போ எதிரில் ஒரு இடையன், தலையில் வச்ச குடத்துடன் ஆடிக்கிட்டும் பாடிக்கிட்டும்  வர்றான்.  அவன் வச்சுருக்கும் குடத்தில் வெண்ணையோ தயிரோ இருக்குமுன்னு நினைச்சு, எனக்கும் கொஞ்சம் குடத்தில் இருப்பதைக்கொடுன்னு கேக்கறார்.
அதுக்கு அந்த இடையன், இதுலே மாட்டுச்சாணமும் கோமியமும்தான் இருக்கு.  வர்ற வழியில் ஒரு குருகுலத்துலே இருந்த குருவுக்கும் இதைத் தான் கொடுத்தேன். அருவருப்பில்லாமல் சாப்பிட்டார்னு சொல்றான். குருவே சாப்பிட்டதுன்னா இது குருப்ரஸாதமுன்னு  நினைச்சு, எனக்கும் கொஞ்சம் தான்னு கேட்டு  வாங்கித் தின்னுட்டார்.  அப்போ கையில் இருந்த கமண்டலத்தைக் கீழே மரத்தடியில் வச்சுருந்தார்.  அதை நைஸா தக்ஷகன் எடுத்துக்கிட்டுப்போய் ஒரு இடத்தில் புத்துக்குள் ஒளிஞ்சுக்கறான்.  இவனுக்கு இந்தக் குண்டலங்கள் மேலே ரொம்பநாளா ஒரு கண்ணு.

எப்படி குண்டலத்தை மீட்கலாமுன்னு  இடையனிடம் கேட்க,  இதோ அங்கே குதிரையில் வர்ற ஆளிடம் கேட்டுப் பார்க்கலாமுன்னு சொல்றான். குதிரைக்காரரிடம் சமாச்சாரத்தைச் சொல்லி புத்தாண்டை கூட்டிப்போய் காமிக்கிறாங்க. குதிரை கனைச்சதும் அதன் வாயில் இருந்து  தீ புறப்பட்டு புத்துக்குள் பரவுது.      அனல்    தாங்காத  தக்ஷகன் வெளியே வந்து  கமண்டலத்தைத் திருப்பித்தந்தான்.

இடையனுக்கும், குதிரைக்காரருக்கும் நன்றி சொல்லிட்டு, குருகுலத்துக்கு வந்து சேர்ந்த உதங்கர்  குருபத்னியிடம், குண்டலங்களை சமர்ப்பிக்கிறார். குருவிடம் நடந்த கதைகளைச் சொல்றார்.
உன்னை சோதிக்கவே  இதெல்லாம் நடந்தது. குடத்துடன் ஆடிப்பாடி வந்தவன் சாக்ஷாத் பரம்பொருள் இறைவனே. குடத்தில் இருந்தது  சாணியும் கோமியமும் இல்லை.  அம்ருதம். இதை நீ சாப்பிட்டதால்தான் அந்தப் பகுதியின் விஷக் காத்தில் இருந்தும், தீயின் உஷ்ணத்தில் இருந்தும் தப்ப முடிஞ்சது. குதிரைக்காரனா வந்தவன் இந்திரன். குதிரையா வந்தது அக்னி. உன்னுடைய குருபக்தியைக் கண்டு எல்லோருக்கும் சந்தோஷம்னு சொல்லி வாழ்த்தி அனுப்பினார்.இதே உதங்கர்,  பிரபை என்னும் மங்கையை மணந்து தர்மம் அனுசரித்து வாழ்ந்துவந்தார்.
அதே சமயம் இந்தப் பிரபையைப் பற்றிய கதை ஒன்னு வேற இடத்தில் வாசிச்சேன்.  இவள் பழைய ஜென்மங்கள் ஒன்றில் விலைமகளா இருந்தாளாம். அப்போ சிவ பக்தரான வேதியரிடமிருந்து ஒரு சிவலிங்கத்தை அபகரிச்சு, தினமும் பூஜை செஞ்சு வழிபட்டுக்கிட்டு இருந்தாள். அதன் பலனாகத்தான் இந்தப்பிறப்பில் நல்ல ஒரு தெய்வாம்சம் கிட்டிய முனிவருக்கு மனைவியாகும் பாக்கியம் கிடைச்சதாம். ஒரு சமயம் காசிக்கு தம்பதிகள் பயணம் போயிருக்காங்க. கங்கையில் நீராடும்போது, முதலை ஒன்னு  பிரபையைக் கவ்வி இழுத்துக்கிட்டுப் போய் முழுங்கிருது. மனைவியை இழந்து உதங்கர் இறைவனிடம் பிரலாப்பிக்கும்போது, அவள் இப்பிறவியில் செய்த புண்ணியத்தால்  சொர்க்கத்தில் சுகமாக இருகிறாள்னு பெருமாள் சொன்னதாக இருக்கு.

வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த தயிருண்டு வெண்ணெயமு துண்டு, வலிமிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி,
மஞ்சுலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென் றிரைஞ்சுமணி நாங்கூர் அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே.

 திருமங்கையாழ்வார் - 1238 -1247 - 10 பாசுரங்கள்.

திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.  இந்தப் பக்கத்துக்குக் கோவில்களுக்கெல்லாம் வஞ்சனையே இல்லாம பப்பத்து பாசுரம் பாடிய மனசை என்னன்னு சொல்றது!!!

இதுக்குள் நம்ம குமார் தகவல் சொல்லியபடியால்  பட்டர் அவசர அவசரமா வந்து சேர்ந்தார். இப்பத்தான் இங்கே காலை பூஜைகளை முடிச்சுக்கிட்டு வேறொரு கோவிலுக்குப் பாதிவழியில் போய்க்கிட்டு இருந்துருக்கார்.
வந்ததும் சந்நிதியைத் திறந்து  குடமாடும் கூத்தருக்கு தீப ஆரத்தி செய்து நமக்குத்  தீர்த்தம் சடாரி ஆச்சு.  உடனே  சந்நிதியைப் பூட்டிக்கிட்டு  அடுத்த கோவிலுக்கு வரச்சொல்லிட்டுப் போனார்.  பைக் வச்சுருப்பதால் இங்கே அங்கேன்னு ஓட  முடியுது!

 தொடரும்..........  :-)



PINகுறிப்பு:  இப்போ உதங்கரா இல்லை உத்தங்கரான்னு இன்னொரு சந்தேகம். வெவ்வேற இடத்தில் வெவ்வேறயா இருக்கே...

16 comments:

said...

அருமையான பயணம்...சில கோயில்களுக்குள் செல்லவே முடிவதில்லை ... இங்கு யாரும் வருவதே இல்லை ... எல்லாம் டிசைன் ... தொடர்கிறேன் ..

said...

தொடரட்டும் தாங்கள் செய்யும் திருத்தொண்டு.
தொடர்கிறோம் தங்கள் திருவடி தொட்டு.

said...

நாங்கள் வைகுண்ட ஏகாதசி அன்று எல்லா கோவிலையும் பார்த்தோம். அப்போது திறந்து இருக்கும். பட்டர்களின் உறவினர்கள், மகன் என்று யாராவது இருப்பார்கள். அப்படி இல்லைஎன்றாலும் வீட்டுக்கு போய் அழைத்தால் வந்து திறந்து காட்டுவார்கள்.

நல்ல கதைகளுடன் பதிவு அருமை.

said...

வாங்க ஸ்ரீராம்.

வணக்கம். முதல்வருகைக்கு நன்றி.

முதல்வருகை தானே? இல்லையோ?

தொடர்ந்துவருவது மகிழ்ச்சி.

நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

ஐயைய்யோ... இதென்ன? நாம் எல்லோரும் தொட்டு வணங்க வேண்டிய திருவடி இறைவனோடதுதான்.

எழுத வைப்பதும் அவனே! அவனுக்கு வேணுமோ என்னவோ.... அதான் கோவில்கோவிலா கூட்டிண்டு போறான்!!!!

said...

வாங்க கோமதி அரசு.

வைகுண்ட ஏகாதசின்னா கூட்டம் அம்முமே!

திருவிழாக்கள் , முக்கிய நாட்கள் எல்லாம் பயணம் செய்யும் பழக்கம் சின்ன வயசோடு போயே போச்:-(

வருகைக்கு நன்றி.

said...

குடமாடும் கூத்தரின் தரிசனமும், வரலாறும் தெரிந்து கொண்டோம்..தொடர்கிறேன் டீச்சர்..

said...

திருநாங்கூர் பயண அனுபவம் அருமை. குடமாடும் கூத்தர் தற்போதுதான் கேள்விப்படுகிறேன். நன்றி.

said...

திருநாங்கூர் பதினொரு பெருமாள் கருட சேவை விழா கோலாகலமாக இருக்கும். நான் இரண்டு தடவை பார்த்திருக்கேன்.

said...

உங்களுடன் நானும் வந்து கொண்டிருக்கிறேன் - ஒவ்வொரு திவ்ய தேசமாக.....

நன்றி டீச்சர்.

பல கிராமத்துக் கோவில்கள் இப்படித்தான் ஆளில்லாமல், பூஜை செய்பவர்களுக்கு வருமானமில்லாமல் இருக்கிறது. இதில் புதிது புதிதாய் கோவில்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.....

said...

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில. கால வகையினானே. அதான் பழைய கோயில்கள் மறைஞ்சு புதிய கோயில்கள் வருது.

யாரு கண்டா.. ஆற்றுப்படை வீடுகளின் வரிசை மாறியிருக்கிற மாதிரி.. ஒரு நூறு வருசம் கழிச்சு 108 வரிசையும் மாறியிருக்கலாம். அப்போ அடையாறு அனந்துவும் 108ல் ஒன்னா இருக்கலாம். வேளுக்குடியாழ்வார் மங்களாசாசனம் செய்த கோயில்னு சொல்வாங்களா இருக்கும். ஆழ்வார்கள்ள ஒரேயொரு பெண் விசாகா ஹரி ஆழ்வார் மட்டும் தான்னு பேசுவாங்களா இருக்கும். காலத்தின் கோலத்தை யார் அறிவார்!

கூட்டமில்லாத கோயில்கள்ள.. ரெண்டு மூனு கோயில்களுக்கு ஒரு அர்ச்சகர்னு இருக்குறது தப்பில்ல.

வருமானம் இல்லாததால ஒரு குடும்பம் ஒரு தொழிலை அடுத்த தலைமுறையில் எடுத்துச் செய்யவில்லைன்னா.. அதுவும் தப்பில்லை. அவங்க பொழப்பு அவங்களுக்கு. செருப்புத் தைக்கிறவருக்கும் மாசம் ஆயிரம் ரூபா பத்தாதுதான். அதுனாலதான் அடுத்த தலைமுறை வேற வேலை செய்யட்டும்னு நெனைக்கிறாரு. தொழிலுக்குத் தொழில் வாசப்படிதான் டீச்சர்.

எது நிக்கனும் நிலைக்கனும்னு பரம்பொருளுக்குத் தெரியும். நம்ம வந்தமா போனமான்னு இருக்க வேண்டியதுதான்.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சிப்பா. நன்றீஸ்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இந்த 108 தரிசனம் இல்லைன்னா, எனக்குமே குடமாடு கூத்தனைப் பற்றித் தெரிஞ்சுருக்க வாய்ப்பில்லை !
வருகைக்கு நன்றி.

said...

வாங்க கந்தசாமி ஐயா.

ஆஹா.... இருமுறைகளா!!!!

ஒருமுறை பார்த்தாலே செய்த பாபங்கள் அனைத்தும் போய் மறுபிறவி இல்லையாமே! உங்களுக்கு டபுள் டபுள்!!

said...

வாங்க ஜிரா.

சொன்னது அத்தனையும் ரொம்பச்சரி.

பெருமாளாப் பார்த்துப் படி அளக்கணும்! எனக்கு ஆதங்கமா இருக்குன்னுதான் இந்தப் புலம்பல்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஜனத்தொகை பெருகும்தோறும் அதுக்கீடாக கோயில்களும் தேவையாத்தானே இருக்கு. புதுக் கோவில்களோடு நின்னுடாமல், பழைய கோவில்களையும் பராமரிக்கணும். அதைப்போல் ஒன்னு இனிமே கட்டமுடியுமா என்ன?