Friday, June 10, 2016

இவருக்கு இங்கே இன்னொரு பெயர் இருக்கு! ....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 45)

எத்தனைமுறை இந்த  வழியாப் போயிருக்கோம். ஆனாலும்  ஒருமுறைகூட ஊருக்குள்  போக சந்தர்ப்பம் வாய்க்கலையே....   திரும்பும் வழியில் பார்த்துக்கலாமுன்னு  இருந்துட்டு,  ரொம்ப இருட்டிப்போச்சு,  இன்னொருக்கா ஆகட்டுமுன்னு  தட்டிப்போய்க்கிட்டே இருக்கும் மதுராந்தகத்தை இந்த முறை விடுவதில்லைன்னு  சபதம்.

நம்ம  சென்னை லோட்டஸில்  இருந்து  எழுபத்தியேழு கிமீ.  சரியாப் பத்தரைக்கு  ஏரி காத்த ராமர் ஆஃப்  மதுராந்தகம் கோவில் வாசலில்  இருந்தோம். பதினொன்னரைக்குக் கோவில் மூடிருவாங்களாம். நல்லவேளை  அதுக்கு முன்னால் வந்தாச்சுன்னு  ஒரு நிம்மதி.
அஞ்சு நிலை ராஜகோபுரம் க்ரீம் கலரில், க்ரே கலர் சிலைகளோடு 'ஸ்ரீராம' ன்னு   இருக்கு!
கோபுரவாசலைக் கடந்து  உள்ளே போனால் முதலில் கண்ணில் பட்டது  உண்டியல்.   பலிபீடம்,  கொடிமரம், பெரியதிருவடி சேவிச்சுட்டு மண்டபத்துக்குள் போறோம். மண்டபத்தின்  முகப்பில் ஏழு கலசங்கள் கூடிய குட்டி கோபுரத்தில்  இடக்கையில் கோதண்டம் ஏந்திய ஸ்ரீராமனும், அவருக்கு வலப்பக்கம் சீதையும், இடப்பக்கம்  லக்ஷ்மணனும்!  அதென்ன வலக்கையில் அம்பா?  கைத்தடி மாதிரி நீளமா இருக்கே!  அதைத் தடிமாதிரிதான் தரையில்  ஊன்றிக்கிட்டு நிக்கறார்!  அழகான சுதைச் சிற்பம்.
ரெண்டுபக்கமும் கஜராஜன் மூக்கை நீட்டிக்கிட்டு  இருக்கார்!  நல்ல சகுனம்! அழகோ அழகு! ரெண்டு பக்கத்திலும் கோவில்மணிகள்!   பல கோவில்களிலும்  காண்டாமணி  ஒன்னுதான் பார்த்திருக்கேன். இங்கே  ரெண்டு! அதுவுமோர் அழகே!

நேராப்போய் மூலவர்  தரிசனம் ஆச்சு! கோதண்டராமர், மனைவியுடனும், தம்பியுடனும் நின்ற கோலத்தில் இருக்கார். அதுவும் மனைவியின் கையைப் பிடித்தபடி நிற்பது  அழகோ அழகு!

இவருக்கு  இங்கே இன்னொரு பெயர் இருக்கு!

கோதண்டராமர் என்பதைவிட ஏரிகாத்த ராமர் என்னும் பெயரில்தான் இவரை எல்லோருக்கும் தெரியும்! கருவறையில் மகரிஷி விபண்டகர்  ராமனை வணங்கிய நிலையில்!

'காணாமப்போன' சீதையைத் தேடி ராமர் தென்திசை நோக்கிப்போனப்ப,  மகரிஷி விபண்டகரின் ஆஸ்ரமத்தில் வந்து தங்கினாராம். சீதை  'கிடைச்சதும்' அயோத்தி திரும்பும் வழியில் இங்கே வந்து  தம்பதி சமேதராக, மகரிஷிக்கு தரிசனம் கொடுத்துட்டுப் போயிருக்கார்.

அந்தக் காரணத்தினால் இங்கே ராமருக்குக் கோவில் கட்டுனதாக தலவரலாறு.  திரேதாயுகத்தில்  கட்டி இருக்காங்க. ஆனால் இப்போ நாம் பார்க்கும் கோவிலுக்கு  வயசு என்னன்னா...  பொதுவான வழக்கத்தின்படி  ஆயிரம், ரெண்டாயிரமுன்னு சொல்றதுதான். இதுலே வடக்கர்கள்தான் கில்லாடிகள். கோவிலுக்கு வயசென்னன்னு கேட்டால்....   தெரியலைன்னா....   ஆதிகாலத்தில் இருந்தே இருக்கு! ப்ராச்சீன்!
உற்சவருக்கு கருணாகரன் என்ற பெயர். தாயார் ஜனகவல்லி.  தனிச்சந்நிதியில் இருக்காங்க. ஜனகரின் மகளான சீதைதான் இந்த ஜனகவல்லி.
கோவில் நல்லா சுத்தமாவே இருக்கு என்பது  ரொம்பவே மகிழ்ச்சி. ப்ளாஸ்டிக் பொருட்களைத் தடை செஞ்சுருக்கோம். கொண்டு வராதீங்கன்ற விண்ணப்பத்துடன்,  செண்டுப்பூவையும் கொண்டுவராதேன்னு  அறிவிப்பு.
இது துலுக்கசாமந்தின்னு  சொல்றோமே அந்தப் பூதான்.  வடநாடுகளில் எல்லாக் கோவில்களிலும் இதை விட்டா வேற பூவே கிடையாது.  கல்யாண மாலைகூட இந்தப் பூவில்தான். அலங்காரம் செய்வதும் இதே பூவில்தான். வடநாட்டுப் பயணங்களில் இதைப் பார்த்தே கண்ணு பூத்துருச்சு எனக்கு !
பிரகாரத்தை  வலம் வர்றோம். தாயார் சந்நிதி முன்மண்டபத்தில் அழகாக ஒரு வேணுகோபாலன். தாயாரை சேவிச்சோம்.  வெளியே கருங்கல் சுவரில்  மூலவரை வரைய ஆரம்பிச்சு முக்காவாசி முடிஞ்ச நிலையில் விட்டு வச்சுருக்காங்க. கண்ணைத் திறக்கணும் சாமி...........
இன்னொரு இடத்தில்  ஏரிகாத்த கோதண்டராமர் சித்திரம். தொப்பி போட்ட துரை கைகூப்பி நிற்க, ராமலக்ஷ்மணர்கள் காட்சி கொடுக்கறாங்க. என்ன கதைன்னு பார்க்கலாமா?
ஆங்கிலேயர் அரசாண்ட  காலம். அப்போ இந்தப் பகுதி  செங்கல்பட்டு மாவட்டம், கர்னல் லயோனல் ப்ளேஸ் என்ற கலெக்டரின் பொறுப்பில்.  1795 - 1798 வரை  இவரது ஆட்சி!  அப்போ ஒரு சமயம் பேய்மழை. இந்த ஊருக்குப் பக்கத்துலே ஒரு பெரிய ஏரி  மழை காரணமா, பெருகி வழிஞ்சு 'இதோ கரையை உடைச்சுக்கிட்டு, ஊருக்குள் வரப்போறேன்'னு மிரட்டிக்கிட்டு இருக்கு!

ஊர்சனம் எல்லாம் ஒன்னு சேர்ந்து  கலெக்டர்கிட்டே போய், ஊருக்கு ஆபத்து. நீங்கதான் எதாச்சும் செஞ்சு  காப்பாத்தணுமுன்னு கேட்டுக்கறாங்க. அதுக்கு அவர்,  'ஏன்...  உங்க சாமி காப்பாத்தாதா?' ன்னு  எகத்தாளமாக் கேட்டுட்டு அவுங்களைத் திருப்பி அனுப்பிடறார்.

சனம் அதுக்குப்பிறகு, கோவிலில் வந்து  கோதண்டராமர்கிட்டெ வேண்டிக்கறாங்க. (இதை முதலிலேயே செஞ்சுருக்கப்டாதோ?)

அன்னிக்கு ராமுழுக்கச் சரியான மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிக்கிட்டு இருக்கு.  ஊர்சனத்தை இப்படிக் கேலி செஞ்சு திருப்பி அனுப்பிட்டோமே.... நாளைக்கு ஏதும் ஆபத்துன்னா, மேலிடத்துக்கு என்னன்னு பதில் சொல்றது? உண்மையில் நிலமை  எப்படித்தான் இருக்குன்னு ஒருக்கா நேரில் போய் பார்த்துட்டு வந்தால் ரிப்போர்ட் எழுத சௌகரியமா இருக்குமேன்னு  அர்த்த ராத்திரியில்  கொட்டும் மழையில் கிளம்பிப்போறார் கலெக்டர். (நல்ல குணம் கொஞ்சமாவது இருந்துருக்கும் போல. இல்லாட்டா மனசாட்சி சொல்றதைக் கேட்டுருப்பாரா என்ன? )

அங்கெ போனா ஏரிக்கரைக்குள் தண்ணி ததும்பிக் கொந்தளிச்சுக்கிட்டு இருக்கு. இதோ அடுத்த விநாடி கரை உடையப்போகுதுன்ற நிலையில்  ஒரு மின்னல் வெட்டு!  அந்த வெளிச்சத்தில்  ரெண்டு பேர் கையில் வில்லும் அம்புமா வச்சுக்கிட்டு ஏரிக்கரையைச் சுத்தி காவல் காத்தபடி கரை மேலே நடந்துக்கிட்டு இருக்காங்க. யாரா இருக்குமுன்னு   யோசனையோடு இருக்கும்போது அடுத்த மின்னல்......   யாரையும் காணோம். கோவிலில் பார்த்த சிலை போலவே இருந்தாங்களே....

புல்லரிச்சுப் போச்சு கலெக்டருக்கு!  இந்த இந்துக்கள் சாமி நமக்கு இப்படி காட்சி கொடுத்துட்டாரேன்னு உருகிப்போயிட்டார். அதே  வேகத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்தவர் என்ன ஆகுமோன்ற பரவசத்திலிருக்கும்போது  பொழுதும் விடிஞ்சுருது . மழையும் நின்னுருது.  ஏரிக்கு ஒன்னும் ஆகலை. எல்லாம் நலம் நலம்!

முதல்நாள் ராத்ரி,  தான் பார்த்தது  சாக்ஷாத் ராமனும் லக்ஷ்மணனும்தான்னு முழு நம்பிக்கை வந்துருது கலெக்டருக்கு. விடுவிடுன்னு  கோவிலுக்கு வந்தவர்,  சாமியைக் கும்பிட்டுக்கிட்டு,   கொஞ்சம் சிதிலமாக் கிடந்த தாயார் சந்நிதியை செப்பனிட்டுக் கொடுத்தார்னு  கோவில் கல்வெட்டு சொல்லுது! எழுதிப்போட்டும் வச்சுருக்காங்க.
சாமி இல்லேன்னு  சொல்லிக்கிட்டு இருந்தாலும்.....   இல்லேன்னு எப்படி நிரூபிக்கன்னு அதே  நெனப்பால்லே  இருக்கவேண்டி இருக்கு!   அதையே மாத்தி சாமி இருக்குன்னு  சொன்னால்.... ....  அதுவும்  வெள்ளைக்காரன்  சொன்னால்  அது சரியாத்தான் இருக்குமுன்னு..... நம்பிருவோம்.   வெள்ளைத்தோல்காரன் பொய் சொல்லமாட்டான், இல்லே!

வலத்தைத் தொடர்கிறோம். பின்பக்கம் தென்னைமர வரிசை!  அதில் கோமாதாக்களைக் கட்டிப் போட்டுருக்காங்க. தாயும் குழந்தையுமா பார்க்க அழகுன்னாலும், ரொம்ப ஒல்லிப்பிச்சான் பசு! எலும்பெல்லாம்  தூக்கிக்கிட்டு இருக்கு. ப்ச்...
கோவில் தலவிருட்சம் மகிழமரம். வேண்டுதல்களால் நிறைஞ்சு கிடக்கு!
காஞ்சி பேரறிவாளனின் கட்டளையை திருக்கச்சி நம்பிகள் சொல்ல,  அதன்படி  பெரியநம்பிகளின் சிஷ்யனாக வேண்டி திருவரங்கத்துக்குப் புறப்பட்டுப் போய்க்கிட்டு இருக்கார் நம்ம ராமானுஜர்.  அப்படிப் போறவழியிலேயே மதுராந்தக ஏரி படித்துறையில் பெரியநம்பிகளை சந்திக்கிறார்.   பெரிய நம்பிகளும் ராமானுஜரை சந்திக்கத்தான்  காஞ்சிக்குப் போய்க்கிட்டு இருக்கார். எதுக்காம்?  ஆளவந்தாருக்குப்பின்  ராமானுஜரை வைஷ்ணவ தர்ஸன(?) ஸ்தாபகரா  ஆக்கணும் என்று அவருக்கு ரங்கனின் கட்டளை .   தேடிப்போன மூலிகை  காலடியில் கிடைச்சுடுத்து!   அப்போதான் இந்த மரத்தடியில்தான்  பெரிய நம்பிகள் நம்ம ராமானுஜருக்கு  பஞ்ச சம்ஸ்காரம் செஞ்சுருக்கார். கிரகஸ்த்தரான  ராமானுஜர், சந்நியாசி ஆனது இங்கேதான்.
சம்பவம் நடந்த நாளை பெரிய விழாவாக் கொண்டாடறாங்க இப்பவும். மேற்படி விவரங்கள் எல்லாம் அங்கே எழுதி வச்சுருக்காங்க. இந்த அட்டையுமே இப்பவோ எப்பவோன்னு  இருக்கு. விரைவில் புதுப்பிச்சு எழுதி வைப்பாங்கன்னு நம்பறேன்.
1953இல்  கோவில் திருப்பணிகள் நடந்தப்ப  சங்கு சக்கர முத்திரைகள்  கிடைச்சதாம்.  இவைகளை நம்ம ராமானுஜருக்கு தீக்ஷை கொடுத்தப்ப  பெரியநம்பிகள் பயன்படுத்தினார்னு சொல்றாங்க.  இப்படி அபூர்வமாக் கிடைச்சவைகளை, பொதுமக்கள் பார்வைக்கு வச்சுருந்தா நல்லா இருக்கும்! நமக்குக் காணக் கிடைக்கலை.
இந்தச் சிலை  யாருன்னு தெரியலை:-(  தெரிஞ்சவங்க  சொன்னால் நல்லது.


ராமானுஜருக்கு  இங்கே தனி  சந்நிதி இருக்கு. உள்ளே பெரியநம்பிகளும் இருக்கார். பூட்டிய சந்நிதிக்குள் தெரிஞ்சவரை(க்கும்)தான் தரிசிக்கணும்.
கோவில்கள் வழக்கப்படி  ஆண்டாள் சந்நிதி பூட்டிக்கிடக்கு. மார்கழியில் மட்டும் தலையில் தூக்கி வச்சு ஆடுனாப்போறும்தானே? என்னுடைய வழக்கத்தை விடாமல், தூமணி மாடத்து....   பாடி, நல்லா கும்பிட்டுக்கிட்டேன். இருட்டுக்குள்ளே பார்வையை அனுப்பினாலும்  கும்மிருட்டைத்தவிர ஒன்னுமே தெரியலை :-(  ப்ச்....

சக்கரத்தாழ்வார் தனிச்சந்நிதியில் இருக்கார். இவருடைய பீடத்துக்குக் கீழே யந்த்ரப் பிரதிஷ்டை செஞ்சுருப்பதால் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கார்னு  சொல்றாங்க.  முன்பக்கம் சக்கரத்தாழ்வாரும், பின்பக்கம் யோக நரசிம்ஹருமா இருக்காங்க.
ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹருக்கு ஒரு தனி சந்நிதியும் உண்டு.  நாம் பார்க்கலைன்னா என்ன, அவர் பார்த்திருப்பார்னு  நம்பிக்கையோடு நமஸ்காரம் பண்ணிட்டு வந்தேன்.  நம்பினால்தானே சாமி, இல்லையோ!
சீதையின் கையைப் பிடிச்சுக்கிட்டு  ராமர் இருப்பதால் , இங்கே வந்து வணங்கினால் தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும் என்று யாரோ கிளப்பி விட்டுருக்கணும்.  அதே ராமர், கர்பிணி மனைவியைக் காட்டுக்கு அனுப்புனதை  மறந்துட்டாங்க போல!

விபகண்டர், விபந்தகர், விபண்டகர்  இப்படி  வெவ்வேற இடத்தில் வெவ்வெற மாதிரி எழுதி இருக்கு. எது சரியான பெயர்னு அந்த ராமனேதான் வந்து சொல்லணும்...

கம்பர், ராமாயணத்தை அரங்கேற்றுவதற்கு  முன்பு, ராமர் கோவில்களாப் போய்  கும்பிட்டுக்கிட்டே வந்தாராம். இங்கே  வந்தப்ப, சிம்ம கர்ஜனை  அவருக்குக் கேட்டதாக ஒரு கதை!  இருக்குமா இருக்காதான்ற ஆராய்ச்சி எல்லாம் செய்யாதேன்னு மனசை மிரட்டி வைக்கும்படியா ஆச்சு.
கோவில் பூஜாவிவரங்கள் போர்டில் காலை 7 முதல் பகல் 12. மாலை 4 முதல் இரவு 8.30 வரை கோவில் திறந்திருக்குமுன்னு தெரிஞ்சது.
ஸ்ரீராமநவமி  இங்கே ரொம்ப விசேஷமாக்  கொண்டாடறாங்களாம். அன்னிக்கு மட்டும் ராமனுக்கு அஞ்சு வித அலங்காரங்கள்! நிமிட்டுக்கு நிமிட் ட்ரெஸ் சேஞ்ச்:-)

நல்ல தரிசனம் கிடைச்சதுன்னு  வெளியே வந்து  கோவிலுக்கு முன்னால் இருக்கும் புஷ்கரிணியை ஸேவிச்சோம். பெருசுதான்.  குப்பைகள் மிதக்கத்தான் செஞ்சது.  இதன் கரையில் ஆஞ்சி இருக்கார்.
பலவருசமா  இங்கே வரணுமுன்னு நினைச்சு இருந்தது,  இன்னைக்கு நிறைவேறிய திருப்தியில் கிளம்பினோம்.

தொடரும்......... :-)


10 comments:

said...

இன்னிக்கு காலைலே கணினியைத் திறந்தால் ,
கூகிள் காரர் ஹாப்பி பர்த் டே சொல்றார்.
அதுக்கப்புறம்,
ஹெச்.டி.எப்.சி.
ஐசி ஐசி ஐ மாதிரி கார்பொரேட்
ஒவ்வொருவரும்
மேசேஜ் அனுப்பி இருக்காங்க.

இங்கன வந்து பார்த்தா,
நான் எப்பவோ 1987 லே போய் தர்சனம் செய்ஞ்ச
ஏரி காத்த ராமர் வந்து
தர்சனம் தரர்றார்.

அது என்ன வால் பைண்டிங் ஆ ? சுவர்லே !!
அற்புதம்.

வாழ் நாள் முழுவதும் மனசிலே
வச்சிருக்கவேண்டிய சித்திரம்.

ஸ்ரீ ராம சீதா லக்ஷ்மண அனுமான் கி
ஜெய் போலோ ஹனுமான் கி.

தாங்க்ஸ் துளசி மேடம்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.


ரொம்ப நல்ல நாளு இன்றைக்கு! என்ன விசேஷமாம்? உங்க பொறந்தநாள்தான்! வேறென்ன?

எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்!

said...

The rishi can be VibhAndakan - the father of Rishya Sringa Maharishi - who did puthra kamesthi yagam for Dasarathan.

There a beautiful malayalam movie Vaishali based on the life of Rishya Shringa

said...

சின்ன வயசுல ரயில்ல வர்ரப்போ மதுராந்தகம் இரயில் நிலையத்தில் “ஏரி காத்த இராமர் கோயிலுக்கு இங்கு இறங்கவும்”னு எழுதியிருக்கும். அதுதான் நினைவுக்கு வருது. இப்போ இருக்கான்னு தெரியல.

சிங்கம் உறுமியது திருவரங்கத்துலன்னு ஒரு கதை உண்டு. மேட்டு அழகிய சிங்கர் பிரகலாதன் கதை கேட்டு உறுமினார்னு கதை உண்டு.

said...

கிரகஸ்தரான ராமானுஜர், மதுராந்தகத்திலயா சன்யாசி ஆனார்? டீச்சர் சொன்னா சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் சந்தேகம்.

ஒவ்வொரு ஊரும் வளர வளர, அதனுடைய பழைமையும், நூற்றாண்டுகளாக வழிவழி வரும் வழக்கங்களும் வழக்கொழிந்து போவதாகத் தோன்றுகிறது. இப்போதெல்லாம், மதுராந்தகத்தில் இருந்த அக்ரஹாரம் (கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் உள்ள குடும்பங்கள்) ஓரளவு வெறிச்சோடிவிட்டது. அந்த அந்த தீர்த்தத்துக்கு முறை வரும்போது மட்டும் விட்டுவிடாமல் குடும்ப உறுப்பினர்கள் வருவதாகத் தோன்றுகிறது. வாழ்க்கை வட்டம் விரிவடைஞ்சதில், கூட்டுக் குடும்பமும், கோவில்/ஊரை ஒட்டிய இயற்கையோடு இயைந்த வாழ்வும், ஓரளவு போதும் என்ற மனமும் மறைந்துவிட்டது.

said...

வாங்க Strada Roseville .

ரிஷ்யசிருங்கரின் தகப்பனாரா!! தகவலுக்கு நன்றி.

வைஷாலி பார்க்கலை. வலையில் படம் கிடைக்குமான்னு தேடினேன். யூ ட்யூபில் இருக்கு! பார்க்கப்போறேன். நன்றி.

said...

வாங்க ஜிரா.

இப்பவும் இருக்கும்தான். மக்களுக்கு ஸ்டேஷன் விவரம் தெரியணுமா இல்லையா?

ஸ்ரீரங்கத்தில் உக்ர நரசிம்ஹர் சந்நிதிக்கு எதிரில் இருக்கும் மண்டபத்தில் ராமாயணம் அரங்கேற்றம் நடக்குது. அதுலே நரசிம்ஹ அவதாரம் ஸீன் வரும்போது, ராமாயணத்துலே இது எப்படின்னு சிலர் ஆட்சேபிக்கிறாங்க. அப்போ உக்ரநரசிம்ஹர் கர்ஜனை செஞ்சு அந்த ஸீனுக்குக் கத்திரி போடப்டாது. கட்டாயம் இருக்கணுமுன்னு அசரீரியாச் சொன்னார்னு சொல்றாங்க!

said...

வாங்க நெல்லத் தமிழன்.

வாழ்வாதாரம் தேடிப்போன மக்களால் கூட்டுக்குடும்பம் போன கையோடு, எல்லா வழக்கங்களும் போயே போச். மதுராந்தகம் மட்டுமில்லை.... பலஊர்களிலும் இதேதான் :-(

இப்படி நியூஸிலாந்தில் வந்து உக்கார்ந்துக்கிட்டுக் கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது?

ராமானுஜர் தீக்ஷை வாங்குன இடமுன்னு எழுதிப்போட்டுருக்கே... கோவில் நிர்வாகம். சரியாத்தான் இருக்கும்!

said...

ஏரி காத்த இராமரின் தரிசனம் இன்று உங்களால் கிட்டியது ...

இனி நேரில் சென்று இராமரை காண வேண்டும் ...

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நேரில் தரிசனம் சீக்கிரம் லபிக்கட்டும்!