Friday, June 17, 2016

சீர்காழியில் ஓர் திருமலை! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 48)

தாடாளன் கோவிலில் இருந்து கிளம்பிய ஆறாவது நிமிசத்தில்  ப்ரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் வாசலில் இருந்தோம்.  அஞ்சு நிலை ராஜகோபுரம். இதன் அளவை வச்சுப் பார்த்தால்.... உள்ளே கோவில் மீடியம் சைஸுன்னு தோணும்.  ஆனால்........

இந்தக் கோவிலுக்கு ஒரு 44 வருசங்களுக்கு முன்பு ஒரு கோவில் டூரில் வந்துருக்கேன். குளம் தவிர  வேறொன்னும்   சரியா நினைவில்லை.  சின்ன வயசுல்லையா....  கவனம் இருந்துருக்காது. பதிவரா என்ன? பார்த்ததை அப்படியே மனசில் எழுதி வச்சுக்க:-)

கோபுரவாசல் கடந்து உள்ளே போனால் இடது பக்கத்தில் பிரமாண்டமான  திருக்குளம். வலது பக்கம் அந்தாண்டை  திருஞானசம்பந்தருக்கு ஒரு தனிக்கோவில். சந்நிதின்னு சொல்லிக்க முடியாமல் பெருசாகவே இருக்கு.  உள்ளே மூலவர் ஞானசம்பந்தர்தான். வெளியே சமயக்குரவர்கள் நால்வரில் மூவர் இருக்காங்க.
இந்த ஊரில் ஒருகாலத்தில் பகவதி அம்மையார் & சிவபாத இருதயர் என்ற தம்பதிகள் , தன்  மகன் சம்பந்தனுடன் வசித்து வந்தாங்க. மகனுக்கு வயசு மூணு. ஒருநாள்  சிவபாதர், தன் மகனுடன் இந்தக் கோவிலுக்கு  வந்தவர்,  குழந்தையைக்    குளத்துப் படிக்கட்டில்   உக்காரவச்சுட்டு, தான் மட்டும் தண்ணீரில் இறங்கி குளிக்கிறார்.

பையனுக்குப் பசி வந்துருச்சு. பத்தும்பறந்து போகும் அளவு போல! அழ ஆரம்பிச்சான்.  இந்தக் காட்சியைக் கண்ட சிவன், தன் மனைவி பார்வதியிடம், குழந்தைப் பசி கொடியது. அவனுக்கு ஒரு சொம்பு பால் கொண்டுபோய்க் கொடுன்னார். மூணு வயசுக் குழந்தைக்கு வேறெதாவது தின்னக் கொடுக்கக்கூடாதா? ( ஏய்.....  மனசே...  அடங்கு. அடங்கிக்கிட!  நாந்தான் மிரட்டினேன்)
சமர்த்தாப் பாலை வாங்கிக் குடிச்சுருச்சு பிள்ளை. பார்வதியும் மறைஞ்சுட்டாங்க. குளிச்சு முடிச்சு வெளியே வந்த  தகப்பன், குழந்தை  வாயில் வழியும் பால் தடத்தைப் பார்த்து, யார்கிட்டே இப்படி பால் வாங்கிக் குடிச்சுருக்கேன்னு கோச்சுக்கறார். தலையைத் திருப்பி  அம்பாள் சந்நிதியைக் காமிச்ச பிள்ளை இப்படிப் பாடறார்! (வயசு வெறும் மூணு! நினைவில் வச்சுக்குங்க!)

தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

தகப்பனைப்போலவே நாமும் அசந்துதான் போவோம், அங்கிருந்தால்!
அம்பாளிடம் தந்த பாலால் பெருகிய ஞானம்!  ஞானப்பாலை  அருந்தியதால் திருஞானசம்பந்தர் என்ற பெயரும் கிடைச்சது! அறுபத்தியேழு பதிகங்கள் பாடி இருக்கார்.  ஒரு சமயம் சீர்காழிக்கு வந்த நால்வரில் ஒருவரான சுந்தரனார்,   திருஞானசம்பந்தர் அவதரித்த புண்ணியத் தலத்தில் தன் கால்கள் மரியாதை இல்லாமல்   படக்கூடாதுன்னு  ஊருக்கு வெளியில் இருந்தே  இறைவனைப் பாடினாராம்!

வைணவத்தலங்களில் ஆழ்வார்கள் பாடி மங்களாசாஸனம் செய்த கோவில்கள்  108 திவ்யதேசக் கோவில்கள் என்ற பெயரில் இருக்கு. அந்த திவ்யதேச யாத்திரைகளைத்தான் ஒவ்வொரு இந்தியப் பயணத்திலும் போய் சேவிச்சு, அவைகளை இங்கே நம்ம துளசிதளத்தில் எழுதிக்கிட்டு வர்றேன்.

இதேபோல்  சைவர்களுக்கான திருத்தலங்கள், (தேவாரப்) பாடல்பெற்ற தலங்களென்ற வரிசையில் 274 கோவில்கள் இருக்கு. அந்த வரிசையில் இந்த ப்ரம்மபுரீஸ்வரர் கோவில் பதினாலாவது தலம்.

இந்த ப்ரம்மபுரீஸ்வரர் கோவில் என்பது ஆதிகாலத்துப்பெயர். ப்ரம்மாவுக்குத் தான்தான் பெரியவர் என்ற அகம்பாவம் வந்ததால்,  அதுக்கு தண்டனையாக ப்ரணவ மந்திரத்தை மறக்கும்படி செஞ்சுட்டார் ஈசன்.  என்னவோ மனசுக்குள் சிக்கிக்கிட்டு இருக்கு...  ஆனால்  என்னன்னு ஞாபகம் வரலையேன்னு   குழப்பத்தில்  மூழ்கி, தன் படைக்கும் தொழிலைச் செய்யமுடியாமல் போயிருச்சு.   என்னவோ தப்பு செஞ்சுட்டேன்னு மனம் வருந்தி  இங்கே வந்து சிவனை வணங்கி மீண்டும் 'ஓம்' நினைவு வரப்பெற்றாராம். அதனால் பிரம்மன் பூசித்த ஈசன் என்று பிரம்மபுரீஸ்வரர்  என்ற பெயர் வந்துருக்கு.  ஆனாலும்... இங்கே பொதுவா சட்டநாதர் கோவில்னு கேட்டால்... சட்னு இடம் எங்கேன்னு காமிச்சுரும் சனம்.

சட்டத்தைக் கையில் எடுத்துக்கிட்டவராம். எதாவது கோர்ட் கேஸ், நிலத்தகராறுன்னு சட்டச்சிக்கல்களில்  மாட்டிக்கிட்டு இருந்தால், இங்கே வந்து பிரார்த்தனை செய்து, வேண்டிக்கிட்டால் எல்லாம் நம்ம தரப்பில் நல்லதா முடியும்னு ஒரு நம்பிக்கை பெருகி, சனம்  வந்து வேண்டிக்கிட்டுப் போகுது!

சரியாச் சொல்லணுமுன்னா இவர் சட்டை நாதர்!  மஹாபலியை அழிச்சு (!)  பாதாளலோகத்துக்கு அனுப்பிய பாவம் உலகளந்தானுக்கு  வந்துருது. செஞ்ச   பாவத்தில் இருந்து யாராலுமே சாமி உட்படத் தப்பிக்க முடியாது என்பதால்  கிட்டத்தட்ட  மஹாவிஷ்ணு தானும்  மறையப்போறமாதிரி பரிதவிக்கிறார். அப்போ  மஹாவிஷ்ணுவின் தோலையேத் தன் சட்டையாக மேலே அணிச்சுக்கிட்டார் சிவன்.
தன் கணவரை  சிவன் அழிச்சுட்டார்னு மகாலக்ஷ்மிக்குத் தோணுது.
கணவன் இல்லாமல் போனதும் கலங்கி நின்னவள்  பூவையும் பொட்டையும் விட்டுடறாள். அதனால்  இங்கே  சிவன் சந்நிதிக்கு வர்றவங்க பூ வச்சுக்கக்கூடாதுன்னு  இருந்துருக்கு. இப்ப இருக்கான்னு தெரியலை. அன்றைக்கு எதேய்ச்சையா என் தலையிலும் பூ இல்லை.

 (சென்னையை விட்டுக் கிளம்பினாலே பூ வச்சுக்கக் கிடைப்பது  கொஞ்சம் கஷ்டமாப் போயிருது.  மதுரையில் மட்டும் பிரச்சனையே இல்லை. ரொம்ப அழகான மல்லிச்சரம்....   கிடைக்குது அங்கே!)
கோபுரவாசலில் நுழைஞ்சவுடன் இடது பக்கம் இருக்கும் குளத்தாண்டைப்             படிகளுக்கு     ஒரு மண்டபத்தைத் தாண்டிப்போய் மறுபடி இடதுபுறம் திரும்பினால்தான்   நுழைவு வாசல் வளைவு இருக்கு.  இந்த மண்டபத்தில் மேல் இருக்கும் ஒரு சுதைச்சிற்பம் அட்டகாசம். இதே போல் ஒன்னை ரிஷிகேஷ் திரிவேணிசங்கமத்தில் பார்த்துருக்கேன். ஆகாயத்தில் இறங்கும் கங்கையைத் தன் தலையில்தாங்க ரெடியா இருக்கும் போஸ். நம்ம ரவி வர்மாவின் சித்திரம் கூட இப்படி ஒன்னு இருக்கு! கோபுரவாசலுக்கு நேரெதிரே இருக்கும் இதுதான் நுழைஞ்சவுடன் கண்ணில் படும்!
மண்டபத்தின்  இடதுபுறம் குளத்துக்கு இறங்கும் படிகள். வலதுபக்கம்  அம்பாள்  திருநிலை நாயகியின் சந்நிதி. ஸ்ரீஸ்திர சுந்தரின்னு  எழுதியிருந்தது.


போய் கும்பிட்டுக்கிட்டுக் கருவறையை வலம் வந்தோம். கோஷ்டத்தில்  இச்சா, க்ரியா, ஞான சக்திகள்  இருக்காங்க.  64 சக்தி பீட ஸ்தலமாம். (எனக்கு  51 சக்தி பீடங்கள்னுதான் தெரியும். இந்த 64 வேற கதை போல இருக்கு!)

வெளிப்ரகாரத்தின் இந்தப் பகுதிதான் உள்ளூர் மக்களுக்கு பீச் :-)

குளத்தைச் சுற்றிக்கிட்டுப் போறோம். கோவிலுக்குள் வந்து  தன்  எதிர்காலத்தைக் கைநீட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தார் ஒருவர்.  ப்ச்.... நேரம் சரியில்லை போல...
ஓங்கி உயர்ந்திருக்கும் மதில் சுவர்!  வலப்பக்கம் இருக்கும் வாசல் வழியா உள்ப்ரகாரத்துக்குள் போறோம். போய் மூலவரை சேவித்து, பிரகாரத்துக்குள்  நடக்கும்போது  திருமலைக்குச் செல்லும் வழின்னு ஒரு போர்டு.
பெரிய முற்றங்களும் சந்நிதிகளுமா இருக்கு!


கொஞ்சம் மேலே உசரத்தில் இருப்பது திருமலை. கயிலையில் இருந்து தெறித்து விழுந்த துண்டுகளில் இது ஒன்னு. வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் யார் பலம் மிகுந்தவர்னு ஒரு போட்டி.
கயிலைமலையையே நகர்த்திக் காட்டறேன்பார்னு வாயு ரெடியானார். கயிலையை நல்லாச் சுத்தி, அதன் முகட்டைத் தன் ஆயிரம்தலைகளால் மூடிக்கிட்டார் ஆதிசேஷன். எத்தனை பலமாக் காத்து வீசுனபோதும் மலை அசையாமல் நிக்குது.  ஆதிசேஷனும் கட்டிப்பிடிச்சது பிடிச்சபடி.
 பலகாலங்கள் இப்படியே போனதும், தேவர்கள் ஈசனை தரிசிக்க உள்ளே எங்களால் போகமுடியலை. ஒரேஒரு தலையைத் தூக்கிக் கொஞ்சூண்டு இடம் விடுன்னு கெஞ்சிக்கேட்டதும். போனாப் போகுதுன்னு  ஒரு தலையை மெள்ள உசத்துனார் ஆதிசேஷன். அப்போப் பார்த்து வாயு பகவான், இன்னும் அதிவேகத்தோடு புயலாகப் பாய, மலையில் இருந்து ஒரு சின்னத் துண்டு  இங்கே வந்து விழுந்ததாம். இதுதான் இங்கத்துத் திருமலை.

 (ஆந்த்ராவில் புஷ்பகிரி பார்த்தோமே  அதுவும் இதே சம்பவத்தில் வந்துவிழுந்த குன்றுகளில் ஒன்று!  மொத்தம் பதினொரு துண்டுகள் தெறித்து விழுந்ததாக ஐதீகம்!)

திருமலை மீது ஏறிப்போக படிகள் இருக்கு. அனுமதிக் கட்டணம் ரூ 5. திருமலைன்னதும் காசு வந்துருச்சு பாருங்க:-)

டிக்கெட் வாங்கிக்கிட்டுப் படிகள் ஏறிப்போனோம். ஒரு செட் படிகள் முடிஞ்சதும்  இடதுபக்கம் இன்னொரு செட் படிகள். அதைக் கடந்தால்  மேலே ஒரு கருவறை.  கிட்டப்போய் நின்னதும் மூச்சு  நின்னதுன்னு சொல்லலாம். உமாவும், மஹேஸ்வரனும்  15 அடி உயரமான சிலைகளா உக்கார்ந்துருக்காங்க.  முகம் சொல்லமுடியாத அழகு.

பொதுவா சிவனை, லிங்க  ரூபமாகத்தான் பல இடங்களில் தரிசிக்கிறோம். மனித ரூபம் என்று பார்த்தால் நடராஜனும், தக்ஷிணா மூர்த்தியுமாகவும்தான்.  இப்படி  இம்மாம் பெரிய  உருவில்  சிவன் கோவிலுக்குள்ளில் சந்நிதியில் பார்த்ததே  இல்லை!

இவருக்குத் தோணியப்பர் என்ற பெயர்!  சீர்காழிக்கு தோணிபுரம் என்றும் ஒரு பெயர் இருந்துருக்கு. பிரளயகாலம். எங்கே பார்த்தாலும் வெள்ளக் காடு. சிவனும் உமையும் ப்ரணவத்தையே ஒரு தோணியாக்கி , 64 கலைகளுடன் அதில் ஏறி மிதந்துக்கிட்டு வர்றாங்க. தோணி வந்து நின்ன இடம் இங்கேதான்!  (மனசுக்குள் நோவா'ஸ் ஆர்க் வருதே!)
அர்ச்சகரிடம், படம் எடுக்க அனுமதி உண்டான்னதுக்கு இல்லைன்னு சொன்னார். அதுக்காக   இந்த அற்புதத்தை ஊர் உலகத்துக்குச் சொல்லாம இருக்க முடியுதா?  சீர்காழி என்னும் வலைப்பக்கத்தில் படம் கிடைச்சுருச்சு. சுட்டுப் போட்டுருக்கேன். அனுமதி கேட்டு சேதி அனுப்பி இருக்கேன்.

கருவறையைச் சுற்றி வெளிப்புறத்தில் கோவில்கதைகள் சித்திரங்களாக இருக்கு. அடுத்த பக்கத்தில் இன்னொரு சின்ன சைஸ் படிக்கட்டுகள் மேல் மாடிக்குப்போகுது.  இதுலே ஏறிப்போனால்  கம்பி ஜன்னலூடாக சட்டைநாதரை தரிசிக்கலாம். இவருக்கு வெள்ளிக்கிழமை நடுராத்ரி விசேஷமாம். கோவில் அர்த்தஜாம பூஜை முடிஞ்சதும் இங்கே பூஜை ஆரம்பிக்கும்.  அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் சார்த்தி, வடை பாயஸத்தோடு விருந்து!

இந்த மாடியில் இருந்து  சுற்றிலும் பார்த்தால்.....  ஹைய்யோ!!!  என்ன அற்புதமான கோவில்னு  பாராட்டத்தான் தோணும். நாலுபுறமும் கோபுரங்கள், விஸ்தாரமான  மண்டபங்கள், பிரகாரங்கள்,  விமானங்கள்  இப்படி...  அடட்டா......  இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட  மேலே ஏறிப்போய் காட்சிகளை ரசிக்கலாம். அஞ்சு ரூ ஒன்னும் பிரமாதம் இல்லே தானே?  கோவில் நிர்வாகம் தருமபுர ஆதீனம்!


வெறும் அஞ்சே ரூபாய்க்குத் தனிமை கிடைக்குதுன்னு ஒரு சில ஜோடிகள்  வந்திருந்தாங்க:-(  பொதுவா கோவில் நல்லசுத்தமாகத்தான் இருக்கு, இந்தப்படிகளின் ஓரம் தவிர :-(
கீழே இறங்கி வந்தோம். முற்றத்தில் இருக்கும் மூங்கில் குத்தின் எதிரே இன்னொரு சந்நிதி.  தீபாரதனை நடந்துக்கிட்டு இருந்தது!  நல்ல கூட்டம். எல்லோரும் தீப ஆரத்தியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றியபின் மூங்கில் மேடையில் வச்சாங்க. நாங்களும் போய் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கிட்டோம். வேணுபுரம் என்றும் இந்த ஊருக்கு இன்னொரு பெயர் இருப்பதின் காரணம் இந்த மூங்கில்கள்தான்.  மூங்கில்  உருவில் இறைவன் காட்சி கொடுத்தாராம். (மூங்கில் = வேணு)

அஷ்டபைரவர்களுக்கு இங்கே தனிச்சந்நிதி இருக்கு. ஆளுக்கொரு திசைன்னு எட்டுத்திசைகளுக்கும்  காவலா இருப்பது  இவுங்கதான். சூரியனைத்தவிர  பாக்கி எட்டு கிரகங்களையும்  ஆளுக்கொன்னா எடுத்துக்கிட்டு அதிபதியாகவும் இருக்காங்க.  இவுங்களுக்கு மனைவிமார்களும் இருக்காங்க! வளர்பிறை அஷ்டமித் திதியில் விசேஷபூஜைகள் நடக்குது.
கோவில் நந்தவனத்தில்  நக்ஷத்திர மரங்கள்  நட்டுப் பராமரிக்கறாங்க. நம்ம நக்ஷத்திரத்துக்கு என்ன மரம்னு பார்த்துக்கிட்டேன்.

புள்ளையாருக்குத் தனியா  ஒரு சந்நிதி. ருணம் தீர்த்த விநாயகர்!
திரும்ப ப்ரம்மதீர்த்தம் குளக்கரைக்கு வந்து  அஞ்சு நிமிட் உக்கார்ந்துட்டு, மனநிறைவோடு அங்கிருந்து கிளம்பி நேரா சிதம்பரம்.

நல்ல பெரிய கோவில்தான்!  எடுத்த படங்களை (இருநூத்துச் சொச்சம்!)  ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டுருக்கேன். விருப்பமிருந்தால்  பார்த்து மகிழலாம்.

   சீர்காழி சட்டை நாதர் கோவில் ஆல்பம்


தொடரும்.......... :-)
20 comments:

said...

வீட்டுக்கார அம்மணி ஊர்.

said...

நல்ல தரிசனம் உங்களால் எங்களுக்கும் கிடைத்தது...இங்கு வந்த போது கூட சட்டைநாதரை பற்றிச் சொன்னீர்கள் டீச்சர்...

said...

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இந்த கோயிலுக்கு இருமுறை வந்துள்ளேன். உங்கள் பதிவும் படங்களும் அந்த பயணங்களை நினைவுக்கு கொணர்ந்தன.

எப்படித்தான் அலுப்பு சலிப்பு இல்லாமல் எழுதுகிறீர்களோ? பாராட்டுக்கள். இந்த தொடர் முழுதும், எடிட் செய்யாமல் , அப்படியே படங்களுடன் புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும். புத்தக விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை.

said...

அருமையான தரிசனம் துள்சிக்கா.

ஏதோவொரு ஜென்மத்தில் ஞானப்பால் உங்களுக்கும் கிடைச்சிருக்கும்.. எழுத்தில் இப்படி போடு போடுன்னு போடறீங்களே :-))

said...

சீர்காழி இன்னும் பாக்காத ஊர். அதுக்கும் ஒரு நாள் வரும். இவ்வளவு பிரம்மாண்டமா அம்மையப்பரைப் பாத்ததில்லை. படத்துல பாக்கவே கண்கொள்ளாக் காட்சியா இருக்கே. நேர்ல பாத்தா எப்படியிருக்குமோ.

கதைகள் தான்னாலும் சில புராணக் கதைகள் ரசிக்கத்தக்கதாக இல்லை. சீர்காழியில் சொல்லப்படும் மகாலட்சுமி + பூ வைக்கக்கூடாத கதையும் அவ்வகையே.

said...

அருமையான கோவில் - உங்களுடன் தொடர்ந்து வந்து பார்த்தாச்சு...

said...

1970 லே சென்று இருக்கிறேன் எனது ஒரு நண்பர் திருமணம் அந்த ஊரில் தான் நடந்தது.

பிரும்மாண்ட அம்மையப்பரை மறுமுறை காண முடியுமா எனத்தெரியவில்லை.

பிரதோஷம் இன்று. அம்மையப்பரை பார்த்த மகிழ்ச்சி .இப்போது தான் சிவன் கோவிலில் பிரதோஷ ஊர்வலம் பார்த்துவிட்டு திரும்பினால், இங்கு அம்மையப்பர் தரிசனம்.

தாங்க்ஸ் மேடம்.

சுப்பு தாத்தா.

said...

சீர்காழிக்குச் சென்றிருக்கிறோம் அந்தக் குளத்தின் அருகே ஞானசம்பந்தர் பால் அருந்திய இடம் என்ற போர்ட் ஒன்று இருந்த நினைவு ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரம் சென்றாலும் சீர்காழியில் இறங்கிதரிசனம் செய்தது குறைவே. விஸ்தாரமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள் இத்தனை விவரங்கள் அறிந்திருக்கவில்லை. நன்றி வாழ்த்துகள்

said...

வாங்க குமார்.

பதிவு சரியா இருக்கான்னு வீட்டுக்காரம்மாவிடம் நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

மறக்கமுடியலையேப்பா! இப்படி இருந்த நிலையில் பார்த்ததும் அப்படியே திகைச்சு நின்னுட்டேன்! ஹப்பா.... எத்தனை பெரிய உருவம்!!!!

said...

வாங்க தமிழ் இளங்கோ.

படங்களுடன், அதிலும் வண்ணப்படங்களுடன் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் பதிப்பகத்தார் சொல்வது...... விலை கட்டுப்படி ஆகாதுன்னு :-(

பேசாமப்படங்களுடன் மின் நூலாக ஆக்கிடணும்.

எழுதன்னு வந்தபிறகு அலுப்பைப் பார்த்தால் ஆகுமோ? எல்லாம் நான் பெற்ற இன்பம் வகை அல்லவா? :-)

பாராட்டுகளுக்கு நன்றி.

said...

வாங்க சாந்தி.

ஞானப்பாலில் கொஞ்சம் தண்ணி கலப்பு அதிகம் & சக்கரை கம்மி போல! அதான் இலக்கணம், இலக்கியம் என்றெல்லாம் வரைமுறை வச்சுக்காம, ஒரு கதை சொல்லியாக எழுதிக்கிட்டு இருக்கேன் :-)

said...

வாங்க ஜிரா.

சில புராணக் கதைகள்..... உண்மைதான். சகிக்கலை. என்ன செய்வது? நல்லவேளை இதை நாம் உருவாக்கலைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். சிலசமயம் ரொம்ப மோசமா இருப்பதைக் கொஞ்சம் பாலீஷ் பண்ணிச் சொல்ல வேண்டியதா இருக்கு.

சீர்காழிப் பக்கம் போனால் தவறவிடக்கூடாத கோயில் இது!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


சந்தர்ப்பம் அமைஞ்சால் கட்டாயம் போயிட்டு வாங்க. அந்தப் பெரிய திருவுருவங்கள் இன்னும் மனசுலேயே இருக்காங்க.!

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்!

இன்னொருமுறை தரிசனம் கிடைக்கட்டும் என நானும் உங்களுக்காக வேண்டிக்கொள்கின்றேன்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சிலசமயம் இப்படித்தான் அந்த ஊர் வழியாகப்போனாலும் தரிசனம் செய்ய வாய்ப்புக் கிடைப்பதில்லை.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

மிக அருமை. பகீரத தவமும் சிவனாரின் கம்பீரமும் சொல்லில் அடங்காது.
மிகப் பெரிய கோவில் தான். கோவிலும் காதலர்களும் பிரிக்க முடியாத காட்சி. திருப்பதியிலியே
பார்த்து நொந்ததுண்டு.

அற்புதமான படங்கள். சட்டானாதருக்கு எனக்கும் பிராது கொடுக்கணும். சட்டை நாதரா சட்ட நாதரான்னு தெரியலை.
திருமாலுக்கு அப்புறம் தோல் கிடைத்ததா.

said...

பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamin.in)

said...

வாங்க வல்லி.

இவர் சட்டை நாதர்தான். மக்கள்ஸ் இவரைச்சட்டநாதர்னு மாத்திட்டபடியால் வக்கீல் வேஷமும் போடவேண்டியதாகிப்போச்சு:-)

said...

நன்றி தமிழன் திரட்டி.