Monday, May 02, 2016

குன்றத்துலே குமரனுக்குக் கொண்டாட்டம்........(இந்தியப் பயணத்தொடர். பகுதி 28)

ஏற இறங்கன்னு ரெண்டு  அலங்கார வளைவுகள் அடுத்தடுத்து  கட்டி இருக்காங்க. இந்த ரெண்டு நுழைவு வாசலுக்கும் நடுவிலெ மயில்களும் காவடி எடுக்கும் மனிதர்களும் கூடவே நம்ம யானைகளும்! மேலே போகும்போது நமக்கு   வலதுபக்கம் கோவில்.  சட்னு பார்க்கும்போது கோவில் என்பதற்கான அடையாளங்கள் இல்லாமல் தகரக்கொட்டைகளால் நிரம்பி இருக்கு :-(   அதுக்குப் பக்கத்திலே பெருசா  புதுக் கட்டடம் ஒன்னு. கல்யாண மண்டபமாம்!

கார்பார்க் போகும் சரிவுக்கு முன்னால் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிட்டாங்க  நம்ம ஆஃபீஸர்.  இன்றைக்கு  ஞாயிறு. ஆஃப் கிடைச்சுருக்கேன்னு  இருக்கும்போதே  அவசரமா வரச் சொல்லி ஃபோன் போட்டுட்டாங்களாம்.  பதவி உயர்வுக்குக் காத்திருக்காங்க.  வம்பு வேணாமுன்னு கிளம்பி பஸ் பிடிச்சு வந்துருக்காங்க பக்கத்து ஊரில் இருந்து.

நாங்களும் கூடவே இறங்கிக்கிட்டோம். நம்ம சீனிவாசன் கார்பார்க் பண்ணிட்டு அப்புறமா வருவாராம். நிறைய தடவைகள்  தரிசனம் செஞ்ச கோவில்தான்னு சொன்னார். ட்ராவல்ஸ் வண்டிகளுக்கு திருப்பதி ட்ரிப்தான் அதிகமாம். பாதிப்பேர் திருத்தணியையும் சேர்த்துக்கறதுதான் வழக்கம்னு சொன்னார்.

எங்கே பார்த்தாலும் நல்ல கூட்டம். திருவிழா சமயத்தில் முதல்முறையா வந்துருக்கோம். நமக்கு முன்னால் வேகவேகமா நடந்து போய்க்கிட்டு இருக்காங்க ஆஃபீஸர்.  தன்னுடைய உயர் அதிகாரிக்கு ரிப்போர்ட் பண்ணும் அவசரம்.

நம்ம நடைதான் தெரியுமே..... மேலும் போறபோக்கிலே க்ளிக்க எத்தனை  சமாச்சாரம் இருக்கு! கோவிலாண்டை போய் சேர்ந்தோம். தரிசனவரிசை  எங்கே இருந்து ஆரம்பிக்குதுன்னே தெரியலை. இலவச காலணி பாதுகாப்பில் செருப்பை விட்டுட்டு ஜோதியில் கலந்தோம்.

காவடிகளும் மொட்டைகளுமா இருக்காங்க. தேவஸ்தான ஆஃபீஸில் போய் தரிசன டிக்கெட் விவரம் கேட்கலாமுன்னு  போனால் எல்லா இடத்திலும் கூட்டமோ கூட்டம்.  கம்பித்தடுப்புக்குள் பெண்கள் வரிசையைக் கட்டுப்படுத்தும்   சில பெண் போலீஸுகளிடம் என்னமோ  பேசிக்கிட்டு இருந்த  நம்ம ஆஃபீஸரம்மா நம்மைப் பார்த்ததும்  'சாமி தரிசனம் ஆச்சா'ன்னாங்க.  'இல்லைங்க... அதான் பார்த்துக்கிட்டு இருக்கோம்'னதும்  வாங்கன்னு கூட்டிக்கிட்டு அவுங்க மேலதிகாரியாண்டை போய் ஒரு சல்யூட் அடிச்சு,  'ஸார்  ஃபேமிலி வந்துருக்காங்க'ன்னதும்,  'இப்ப எப்படிம்மா?  பார்த்தீங்கல்லே...'ன்னார். எங்களுக்குப்  பேஜாராப் போச்சு.  'டிக்கெட் எங்கே வாங்கணுமுன்னு சொல்லுங்க. எங்களுக்குப் பிரச்சனை இல்லை'ன்னேன்.  'நூறு ரூபா பரவாயில்லையா'ன்னாங்க.  நோ ஒர்ரீஸ்.

கோவில் நிர்வாகமே போர்டு போட்டு வச்சுருக்கே!
கூட்டிக்கிட்டுப்போய்  நூறு  டிக்கெட் வரிசையில் எங்களைச் சேர்த்துட்டாங்க. "தரிசனம் முடிச்சுக்கிட்டு வாங்க. இங்கெதான் இருப்பேன்". சரிங்கன்னுட்டு  நகரும் வரிசையில் நகர்ந்தோம். அஞ்சு நிமிசத்தில் நம் கையில் டிக்கெட்ஸ் வந்துருச்சு.  படிகளில் ஏறி மேலே போறோம்.  கெமெராவைக் கைப்பையில் வச்சுக்கிட்டேன்.  சுத்திச்சுத்திப் போகும் வழியில் போறோம். ஒரு இடத்தில்  ஏணிப் பாலம் மேலே நிக்கறோம். கீழே இன்னொரு வரிசை நகர்ந்துக்கிட்டு இருக்கு.  சின்னப்பிள்ளைகள் கம்பித்தடுப்புக்குள்ளே நுழைஞ்சு  இந்தப்பக்கம் இருக்கும்  பகுதியில்  வந்து விளையாடுதுகள்.  அப்பப்ப  அம்மா அப்பா மேல் ஒரு கண்ணு:-)

படிகளில் இறங்கி வலதுபக்கம் திரும்புனா ஒரு வாசல். அதுக்குள்ளே நுழையறோம். எதோ வீட்டுக்குள் போறமாதிரி இருந்துச்சு. அங்கிருந்து இன்னொரு வாசலுக்குள் போகணும்!  இங்கேதான் மூலவர் சுப்ரமணிய ஸ்வாமி இருக்கார்.  ரெண்டு பக்கமும் தனித்தனி சந்நிதிகளில் வள்ளியும் தெய்வானையும்! ஒரு நிமிஷம் நின்னு தரிசனம் செஞ்சுக்க முடிஞ்சது. தட்டில் தக்ஷிணை போட்டதும் விபூதிப் பிரஸாதம் கிடைச்சது.  ரொம்ப சின்ன சிலையாத்தான் இருக்கார்  மூலவர்.  மூணு மூணரை அடி உசரம்தான்.  நல்ல பூக்கள் அலங்காரம்!

"என்ன முருகா... நல்லா இருக்கயா?   இப்படிக் கூப்ட்டு தரிசனம் தர்றயேப்பா!தணிகையில் வந்து நின்னதும்   உன் கோபம் தணிஞ்சதோ?" ஒரு நலம் விசாரிப்புதான்! என்ன இருந்தாலும் நம்ம மருமான் இல்லையோ!

"சூரபத்மனுடன் போர். அவனைப் போட்டுத்தள்ளியாச்சு.  அடடா.... எப்படியெல்லாம் வளைச்சுக் கட்டிச் சண்டை போட்டான் தெரியுமோ? கடைசியில் அவனை ரெண்டாப்பிளந்து ஒரு பாதியை  எனக்கு வாகனமான மயிலாகவும், இன்னொரு பாதியை சேவலாக மாத்தி என்  கொடிக்குச் சின்னமாகவும் ஆக்கவேண்டியதாப் போச்சு. இதனால் ரெண்டு பகுதியும் எப்பவும் என்னோட கண்பார்வையில்தான் இருக்கும். அப்புறம்  வாலாட்ட தைரியம் வருமா என்ன? அசுரன்.  எனக்கே தாவு தீர்த்துபோச்சுன்னா பாருங்க. .இப்ப நிம்மதியா ரெஸ்ட் எடுக்கணும்."

அதுதான் கொஞ்சம் ஓய்வெடுத்துக்க இப்படி மனைவி துணைவியோடு இங்கே வந்துருக்கார்.  அசுரன் மேலே கோபம் தணிஞ்சு  உக்கார்ந்த இடம்தான் இந்தத் தணிகை.

 இன்னொரு நண்பர் ஒரு முறை  தன்னுடைய ஆன்மிகப்பதிவிலே, மாம்பழம் கிடைக்காத கோபத்தில் பழனிக்கு ஆண்டியாகப்போய் நின்னவன், தாய்தந்தை வேண்டுனதால் சமாதானம் ஆனவுடன் கோபம் தணிஞ்சு  நின்னது இங்கேன்னார்.  ஊஹூம்ம்ம்...  அப்போ நான் வாயைத் திறக்கலை.  ஆனால்  இத்துனூண்டு  சின்னப்பையனா இப்படி ரெண்டு பெண்டாட்டியுடன்  இருக்கான்னு  நினைச்சதுண்டு. போகட்டும். அவரவருக்கு எப்படித்தோணுதோ அப்படியே இருந்துட்டுப் போனா என்ன நஷ்டம்?

இந்த சூரபத்மன் இருக்கானே... இவனும் காஸ்யபமுனிவருடைய மகன்தான்.  நேத்துப் போய்வந்த அஹோபிலம் ஹிரண்யகசிபு நினைவிருக்கோ? சாக்ஷாத்  அவனுடைய  சகோ தான் இவன். ஸ்டெப் ப்ரதர். அப்பாதான் ஒன்னு. அம்மாக்கள் வேற :-)  அசுரர்கள் எல்லோரையுமே பெத்துப்போட்டது இந்த காஸ்யபமுனிவர்தான்.  அசுரகுருவான சுக்ராச்சாரியார் கொடுத்த ஐடியாவின்படி, தேவர்கள் கொட்டத்தை அடக்க அவுங்களை அவுட் நம்பர்  செஞ்சுடமுன்னு எக்கச்சக்கப் பிள்ளைகள் பெத்துக்கறார்.  தேவர்கள் முப்பத்துமூணு கோடின்னா அசுரர்கள் அறுபது கோடிப்பேர்!

இன்னும் தனக்கு கூடுதல் பவர் வேணுமுன்னு  சிவபெருமானை தியானிச்சுத் தவம் இருக்கான் இந்த சூரபத்மன்.  சிவனை எளிதில்  வசப்படுத்திடலாம்.  ஏமாளி....  கும்பிட்டவுடன் 'பக்தா ! உன் தவத்தை மெச்சினோம். உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றது வழக்கமான டயலாக். வரம் கொடுத்துட்டு அவஸ்த்தைப் படுவதும் வாடிக்கை.

இப்படித்தானே பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்துட்டுத் தன் தலையைக் காப்பாத்திக்கப் படாதபாடுபட்டு, கடைசியில் ' மச்சான்' மோஹினி அவதாரம் எடுத்து  அசுரனைக் கொல்லவேண்டியதாப் போச்சு இல்லையோ?  அந்தக் கதைக்குச் சுட்டி இது:-)


இப்ப சூரபத்மன் சமாச்சாரத்தில்  என்ன செய்யலாம்? மச்சனையே கேக்கலாமான்னு உக்காந்து யோசிச்சார்.  அப்போ சிந்தனையின் தீவிரத்தால் நெத்திக்கண்ணில் இருந்து தீப்பொறி கிளம்புச்சு.  சட்னு அதை ஒரு குளத்துக்குள் செலுத்தினார். மொத்தம் ஆறு தீப்பொறிகள். ஒவ்வொன்னும் ஒரு குழந்தையா உருமாறி தாமரைப்பூக்களில்  மிதக்குது. பக்கத்திலிருந்த மனைவி உடனே ஆறு பெண்களை உருவாக்கி பசங்களுக்குச் செவிலித்தாய்களா  நியமிச்சாங்க.  இந்தப் பெண்கள்தான் கார்த்திகைப் பெண்கள்!   அப்புறமா  ஆறுபேரைக் கட்டிக் காப்பாத்த பேஜாராப்போச்சுன்னு  எல்லோரையும்  ஒன்னாச் சேர்த்துப் பிடிச்சதும் ஒரு உடலும் ஆறுதலையுமானான் குழந்தை. ஆறுமுகன்!  மூத்தவன் ஆனைமுகன். இளையவன் ஆறுமுகன்!

குழந்தையின் அழகைக் கண்டு பிரமிச்சு  முருகன் என்ற பெயரும் சூட்டுனாங்க. (முருகு= அழகு) தோசை முருகலா இருந்தால் அழகாத்தானே இருக்கு,இல்லையோ!

குழந்தை, கொஞ்சம் பெரியவனானதும் இவனையே தேவர்கள் படைக்குத் தளபதியா நியமிச்சாங்க. சூரபத்மனோடு போருக்குக் கிளம்பும்போது, தாய் பார்வதி, தன்னுடைய  சூலத்தின் சக்தியை வேல் என்னும் ஆயுதமாக்கி  சக்திவேலாக மகனின் கையில் கொடுத்துப் போருக்கு அனுப்பிவைச்சாங்க. இதை வச்சுத்தான்  அசுரன் கதையை முடிச்சதா ஐதீகம். இதை நமக்குச் சொல்லும் முகமா, இங்கே  மூலவர்  தன் கையில்  சக்திஹஸ்தம் என்ற வஜ்ரவேல் தாங்கி நிக்கறார்.

இவருக்கு முன்னால் யானை நிக்குது! என்னைச் சொல்லலையாக்கும்:-) பொதுவா முருகன் சந்நிதிகளில் முன்னால் மயில்வாகனம் இருக்குமில்லையா? அதுக்குப் பதிலா இங்கே யானை வாகனம். அதுவும் முருகனைப் பார்த்து நிக்காம, திரும்பி நிக்குது.  இந்த யானைதான் தேவலோகாதிபதி இந்திரனோட ஐராவதம் என்னும் வெள்ளையானை.  முருகன்  அண்ட்  தேவயானி என்னும் தெய்வானை கல்யாணத்தின்போது சீர்வரிசையா மகளுக்குக்  கொடுத்தனுப்பிட்டார் தேவேந்திரன்.

ஐராவதம்  இந்திர லோகத்தை விட்டுப்போயிட்டதால் அங்கே இருக்கும் செல்வ வளம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக் குறைய ஆரம்பிச்சது. போறபோக்கைப் பார்த்தால்.....தரித்திரம் தான் கடைசியில்.  காரணம் தேடுன்னப்பதான் யானை சமாச்சாரம் தெரிஞ்சது. அதுக்காகக் கொடுத்த சீரைத் திருப்பிக் கேக்கமுடியுமோ? அசிங்கமா இருக்காது?

அப்பன் படும் அவஸ்தையைப் புரிஞ்சுக்கிட்ட மகள் சொல்லி இருக்கலாமோ என்னவோ.....  மாமனார் வீட்டுக்கு யானையைத் திருப்பி அனுப்பறார்னு சேதி போயிருக்கு. பதறி ஓடிவந்த மாமனார்....  'ஐயோ...  வேணாம்.  சீர் வரிசையாக் கொடுத்ததைத்  திருப்பி வாங்கிக்கிட்டான்'னு அசிங்கமாப் போயிரும். ஐராவதம்  எங்க ஊர் இருக்கும் திசையை இங்கிருந்தே பார்த்தாக் கூடப்போதும்'னதும் அப்படியே ஆச்சு.
சாமியைக் கும்பிட்டுக்கிட்டு அந்தாண்டை போறோம். ஏற்கெனவே தரிசனம் முடிச்சவங்க  அங்கே விளக்கேத்தி வச்சுக்கிட்டு இருந்தாங்க. இப்பெல்லாம் விளக்கேத்திக்கன்னு ஒரு இடம் ஒதுக்குனது நல்லதாப் போச்சு. கண்ட இடத்துலே கரி பூசி வைக்கவேணாம்!
அப்பதான் பார்க்கிறேன்....   இம்மாங்கூட்டத்தைக் கண்டு மிரண்டுபோன புள்ளைங்களைக் கட்டிப்புடிச்சு ஆறுதல் சொல்லிக்கிட்டு இருக்கும் குடும்பத்தை!   பாவம்.......

வளாகத்தைச் சுற்றிவந்து க்ளிக்கிக்கிட்டு இருந்தேன். எத்தனை விதமான பிரார்த்தனைகள், நேர்த்திக்கடன்கள்......


மொட்டை அடித்தல், காது குத்தல் எல்லாம் தனித்தனி இடங்களில்.
தாய்மாமன் சீர் வரிசைகளோடு  முடி இறக்கிக் காது குத்தும் வைபவம்  ரெண்டு மூணு குடும்பவிழாக்களாக!  அவுங்க ஏற்பாடு செஞ்ச ஃபோட்டோக்காரருடன் இன்னொரு  ஃபாரின்  ஃபொட்டோக்ராஃபர்! பசங்களும் பெரியவங்களும் நல்லாதான் போஸ் கொடுத்தாங்க. வழக்கமா நான்  இப்படி யாரையாவது படம் எடுத்தவுடன், அவுங்களுக்குப் படத்தைக் காமிக்கிறது  வழக்கம். இன்ஸ்டன்ட் ரீப்ளே அவுங்களுக்கும் மகிழ்ச்சி:-) 'படத்தைக் காமிச்சுரு, படத்தைக் காமிச்சுரு'ன்னு  கோபால் சொல்லிக்கிட்டே இருப்பார்.  அது அவர் வழக்கம்:-)

கோவிலில் குடும்பத்துடன் பாடிக்கிட்டு இருந்தாங்க. இதுவும் பிராத்தனைகளிலொன்னு போல!  ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனே‌ஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே....  சுமாராத்தான் பாடுனாங்கன்னாலும் அந்த  டெடிகேஷன் பாராட்டத்தான் வேணும்.  சின்னதா ஒரு நிமிசத்துக்கும் குறைவா ஒரு  வீடியோ க்ளிப் இங்கே :-)





மக்கள் கூடும் இடத்தில் என்னென்ன வியாபாரங்கள்!  நீர்மோர், நெல்லிக்காய், கொய்யாப்பழம், இலந்தைப்பழம் இப்படி......... கொஞ்சம் சீமை இலந்தைப் பழமும் மூணு கொய்யாப்பழங்களுமா நம்ம ஷாப்பிங் ஆச்சு:-)
புதுசா ராஜகோபுரம் கட்டப்போறாங்க. அஸ்திவாரம் போட்டு எழும்பி இருக்கு. ஒன்பது நிலை! ஒன்பது கலசங்கள்!
இன்னமும் படிகளில் ஏறித்தான் மக்கள்ஸ் பலரும் வர்றாங்க.  365 படிகள்.
இங்கே  டிசம்பர் 31 ஆம்தேதி ஒவ்வொரு படியாக ஏறி  படி பூஜை செய்து  ராத்திரி 12.01  ஜனவரி முதல்தேதி  பொறந்ததும் முருகனை தரிசிப்பது ரொம்ப விசேஷம். கிருபானந்தவாரியார் காலத்தில் இது  பிரபலப்படுத்தப்பட்டதுன்னு நினைவு. ஒருவேளை பித்துக்குளி முருகதாஸோ?

கோவிலின் முகப்பு வரும் இடத்தில் ஒரு பெரிய வேல்.  அங்கே  தாங்களே கொண்டு வந்த  தேங்காய் பழம் வச்சுக் கற்பூரம் ஏத்தி சாமி கும்பிட்டுக்கறாங்க சிலர். இதுக்கு நேரெதிரா   உப்புக்காணிக்கை செலுத்தும் மக்கள்,  கம்பித்தடுப்புக்குள் இருக்கும் ஒரு சின்ன  பலிபீடம் போன்ற மேடையில்  கொண்டுபோகும் உப்பைக் கொட்டிட்டு, அங்கெ இருக்கும் கோவில் உதவியாளர்கள் தரும் 'துன்னூறு' வாங்கிப் பூசிக்கிறாங்க.


இவ்ளோ கூட்டம் இருக்குமிடத்தில் எதோ  உபவாசம் இருப்பதுபோல் கிடந்துச்சு ஒரு நாய். ப்ச்.....   எந்த ஜென்மத்துக்கடனோ.... இப்படி தீர்த்துக்குது இது :-(
சரி. கிளம்பலாமுன்னு கார்பார்க் வந்தோம்.  நம்ம சீனிவாசன் வந்து நம்மை  வண்டிக்குக் கூட்டிப்போனார்.  மலை இறங்கினோம்.
பார்த்தவுடன் 'அட' ன்னு  சொல்ல வச்சது இது.  ஆனால் எது இருந்தால் என்ன... நாங்க இப்படித்தான்னு  சொல்லும் சனமும் இருக்கே :-(
இனி நேரா காஞ்சிபுரம்தான்.  கிட்டத்தட்ட 44 கிமீ.  அரக்கோணம் வழியாத்தான் போறோம்.  ரஜினிகாந்த் நற்பணி மன்றம்  தாரைதப்பட்டையுடன் பேனர் பிடிச்சுக்கிட்டு ஊர்வலம் போகுது. 1500 பேருக்கு  குடும்பநல உதவி வழங்கறாங்களாம், ஷோளிங்கர் பக்கத்துலே.
அரக்கோணம் தாண்டி கொஞ்சதூரத்தில் இந்தியக் கப்பல்படை  ராஜாளி தளம் இருக்கு.   பெரிய வளாகம் போல!   காம்பவுண்டு சுவர்  நீண்டுக்கிட்டே போகுது.  சுவரொட்டி ஒன்னும் இல்லாத சுத்தமான சுவர்கள்!
இந்தப் பகுதி சாலையில் போறவர்ற வண்டிகளும்கூட  எதோ ஒரு ஒழுங்கிலே போறமாதிரி எனக்குத் தோணுச்சு.

தொடரும்........:-)



14 comments:

said...

முருகா..
இலந்தைப் பழ முருகா
நெல்லிக் காய் முருகா
கொய்யாக் காய் முருகா
நீ வாழி, நான் வாழி, நாம் வாழி

படி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றில் அமர்ந்த பெருமாளே!

said...

நினைத்தேன் வந்தாய் நூறு வயசு!!!!!


வாங்க கே ஆர் எஸ் .

said...

//அப்போ நான் வாயைத் திறக்கலை. ஆனால் இத்துனூண்டு சின்னப்பையனா இப்படி ரெண்டு பெண்டாட்டியுடன் இருக்கான்னு நினைச்சதுண்டு. போகட்டும். அவரவருக்கு எப்படித்தோணுதோ அப்படியே இருந்துட்டுப் போனா என்ன நஷ்டம்?//

அந்தக் காலத்துலே அதெல்லாம் சாதாரணம் பா !!
இப்ப, ஒண்ணு இருக்கும்போதே தாளல்லே ! இரண்டு இருந்தா
தலை சுத்தும் !

ஒத்தருக்கு ரங்காச்சாரி இன்னொருவருக்கு போத்திஸ்
ஒத்தருக்கு எல்.கே.எஸ். இன்னொருவருக்கு லலிதா ஜ்வேல்லேரி \
ஒத்தருக்கு முருகன் இட்லி கடை. அடுத்தவருக்கு சரவணா பவன்.
ஒத்தருக்கு இன்னிக்கு பீச். அடுத்தவருக்கோ போரம் மால்.


எங்கய்யா போவான் !!
முருகன் இப்ப கண்டிப்பா இன்னொரு தடவை வந்து மாட்டிக்கமாட்டான்.

சுப்பு தாத்தா.

said...

//சிவனை எளிதில் வசப்படுத்திடலாம். ஏமாளி.//

அதுக்குத்தான் வடக்கில் அவரை "போலேநாத்"ன்னு கூப்பிடுறாங்க. ரொம்பவும்தான் அப்பாவி :-)

said...

திருத்தணி = கோபம் தணிஞ்ச இடம் அன்று!
காமம் தணிஞ்ச இடம்:)
ஆம்! திருத்தணி = வள்ளி-முருகன் திருமணத் தலம்!

அருகில் இருக்கும் வள்ளிமலையில் இருந்து உடன்போக்கு செய்து, இங்கே திருத்தணி எழுந்தருளி.. இங்கே தான் வள்ளியை, ஊரறியக் கைப்பற்றின தலம்!

ஆனால் பல பேர் வள்ளித் திருமணத் தலம் என்றே அறிவது இல்லை:(
பின்னாள் புராணக் கதைகளான.. மாம்பழக் கப்சாவும், சூரபத்மனை அழித்த புராணங்களுமே பேசிப் பேசி.. கோபம் தணிஞ்சதாச் சொல்லிக் சொல்லி..
சங்கத் தமிழ் உண்மையான, முல்லைத் தலைவன் மாயோனின் மகளை, குறிஞ்சித் தலைவன், இளையோன் முருகன்.. முறைப்படி மணந்து கொண்ட காதல் நிகழ்வு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது:(

தெய்வயானை, ஐராவத வாகன யானை.. இந்திரலோகம் பார்த்தாப் போல் இருப்பது-ல்லாம், பின்னாளில் செய்து வைத்த அமைப்புக்களே:)
அதற்கும் முன்பே, மாயோன் மணமுடித்துக் கொடுக்கும் வள்ளித் திருமணக் கோலத்தின் சிற்பமெல்லாம், மலை மேல் இருக்கு! சீந்துவாரில்லை!
---

திருத்தணி = 5ஆம் படை வீடு என்பது.. சும்மா ஒரு பேச்சுக்குத் தான்:)

குன்று தோறாடல் என்பது பொதுவான வீடு; பல குன்றுகளில் ஆடல்; அதிலொன்றான திருத்தணி இன்று, மிக்க பிரபலம் ஆகி விட்டது!
பதி எங்கிலும் இருந்து விளையாடி,
பல குன்றில் அமர்ந்த பெருமாளே.. என்று தான் குன்றுதோறாடல் திருப்புகழ்!

திருத்தணி-க்கான தனித்த திருப்புகழும் உண்டு!

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடும் என ஓதும்
இசைத்தமிழ் நடத்தமிழ் எனத்துறை விருப்புடன்
இலக்கண இலக்கியம் கவிநாலும்
..
புயற்பொழில் வயற்பதி நயப்படு ”திருத்தணி”
பொருப்பினில் விருப்புறு பெருமாளே!

said...

திருத்தணி.. 365 படிகள் என்பது செயற்கையே!:)

ஆங்கிலப் புத்தாண்டுக்கு.. வெள்ளைக்காரனுக்கு வால்பிடித்து வாழ்த்தும் அன்றைய ஐ.சி.எஸ் அதிகாரிகளைக் கண்டு மனம் நொந்த வள்ளிமலை சுவாமிகளே..
365 படி பூஜை ஆரம்பிச்சி வைச்சார்.. 365 நாட்களுக்குத் தோதாக:) முருகனும்= ”துரை” முருகன் ஆனான்:)
இதைச் செய்தது: கிருபானந்த வாரியார் அல்லர்; வள்ளிமலைச் சுவாமிகள்

முருகன்= “துரை” முருகன் ஆன கதை: http://goo.gl/aC26Dt

Durer என்பது பிரெஞ்சு மொழிச் சொல்.. துரை ஆகி, பிரெஞ்சு அல்லாத ஆங்கிலேயனையும், நம்ம மக்கள், துரை ஆக்கி விட்டனர்:))

தணிகைமலைப் பெருந்துரையே - வா வா வா
தயாநிதியே தர்மதுரையே - வா வா வா
---

வள்ளிமலையில் மட்டும், விநாயகனை.. கடைசியாக வணங்குவது, ஒரு விநோத வழக்கம்! ஆபத் சகாய விநாயகர் என்று பேரு!

முருகனுக்கும், கந்த சட்டி: சூர சம்ஹார விழா நடக்காத தலம்= திருத்தணியே!

முருகன் கையிலும் ஏனோ வேல் வைப்பதில்லை
இந்திரன் கதையைக் காட்ட, வஜ்ஜிராயுதமே வேல் போல வைத்து விடுகிறார்கள்; பேரே, வஜ்ர வேல் தான்! சக்தி ஹஸ்தத்தில், வஜ்ரவேல்!

திருத்தணியில், திருநீற்றை விடச் சந்தனம் வெகு சிறப்பு..
என்ன கலக்குறாங்களோ, அப்பிடியொரு மணம்! நீரில் கரைத்துச் சந்தன தீர்த்தமாகக் குடிப்பார்கள்:)

திருத்தணி முருகன், நீங்க சொன்னா மாதிரி, குட்டிப் பையன் தான் டீச்சர்:)
சிலையே 3 அடி தான் இருக்கும்
எட்டி நின்னு பாக்குறது கடினம் தான், பாவம் தர்ம தரிசனத்தில் வருபவர்கள்:( அவ்ளோ தெளீவாத் தெரியமாட்டான், அவிங்களுக்கு!:(

திருமலை தென்குமரி என்ற படத்தில், சுருளி-மனோரமாவுக்கு அருள் புரிவான் திருத்தணி முருகன்:)
எளிய மக்களின் பூக்கூடைக் காவடி பார்க்கும் போதே, என்னமோ போல் இருக்கு! நண்பனுக்காக ஒரு காவடி வேண்டுதல் இன்னும் பாக்கி இருக்கு!
---

மேலதிக திருத்தணி தகவல்களுக்கு:
முருகனருள் வலைப்பூவில் http://goo.gl/0sZt23

said...

டீச்சர், ”மனவாடு முருகனைப்” பாத்தீங்களா நீங்க?
திருத்தணிக்குப் பக்கம் தான்..
பள்ளிப்பட்டு/ நெடியம் என்ற எல்லையோர ஊரில் இருக்கும் “தெலுங்கு முருகன்”
பேரு= செங்கல்வ ராயுடு:)

செங்கல் தூளில் பல்லு விளக்குவானோ, முருகன்?:)))
அல்ல அல்ல!
செங் கலுவ ராயுடு = செந் தாமரை மன்னன்

தெலுங்கு எல்லைப்புற மக்கள், முருகனை= செங்கல்வராயன் என்றே அழைக்கிறார்கள்!
மதறாஸ் மனதே காலத்தில்..
திருத்தணியும், ஆந்திராவுக்கே போயிருக்க வேண்டியது; எப்படியோ தப்பிச்சிக்குச்சி.. மபொசி புண்ணியத்தால்! திருப்பதி-திருமலை மட்டும் போயிருச்சி..
”வட வேங்கடம் - தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லலுலகம்” என்ற தொல்காப்பியப் பாயிர வரி, இலக்கியமாவே நின்னுருச்சி;
---

திருத்தணி பற்றிச் சொல்லும் போதெல்லாம்.. நினைவுக்கு வரும் ஒரே ஒருவர்
= VTS எனும் வி.டி. சுப்ரமணியப் பிள்ளை!

இன்னிக்கு, நாமெல்லாம் திருப்புகழ் சொல்றோம்-ன்னா, அதுக்கு மூல காரணமே அவரு தான்!
உ.வே.சா -வுக்கும் முன்னரே, ஊர் ஊராச் சென்று, திருப்புகழ் ஓலையெல்லாம் திரட்டி, அச்சேற்றியவர் VTS தான்! 1334 பாடல்கள்
இதை, உவேசா அவர்களே, என் சரித்திரம் என்ற நூலிற் சொல்லுவாரு!

25 வயசில் ஆரம்பிச்சி, 55 வயசில் தான்.. புத்தகமே போட முடிஞ்சிச்சி, திருப்புகழுக்கு!
பின்னிரு திருமுறைகளாகவும், முருகன் பாடல்களை வகுத்துக் கொடுத்தாரு VTS;
பல பேருக்கு, முருகன் பேரில், ஒரு பன்னிரு திருமுறை இருக்குன்னே தெரியாது..

திருத்தணி-ன்னாலே, இனி 2 தான் நினைவுக்கு வரணும்:
*வள்ளி-முருகன் திருமணத் தலம்; காமம்/ காதல் தணிஞ்ச இடம்
*VTS, திருப்புகழ் மீட்சி

இன்றும், திருத்தணி மலைக் கோயிலைப் பார்த்தாப் போலத் தான்.. VTS சமாதி, கீழ்த் திருத்தணியில் இருக்கும்! ஒவ்வொரு முறையும் அங்கு செல்வேன்.
திருத்தணி முருகனே= தொலைஞ்சி போன திருப்புகழ், மீட்டுக் குடுத்தவன், VTS மூலமாக!

My 1st job in Mumbai; Dadar Express Train, அரக்கோணம் தாண்டிய பின்... திருத்தணி மலை தெரியும்!
"ஓம் முருகா" -ன்னு எழுதியுள்ள பேரெழுத்து நன்கு தெரியும்!!
Train கதவோரம் தனியா நின்னுக்கிட்டு, அந்த லூசு முருகன் கிட்ட Discussion= http://goo.gl/5GpGkh

said...

திருத்தணி கோயில்ல ஐயர் காசைக் கொண்டு தட்டில் தட்டி தட்சணை தட்சணைன்னு கேப்பாரே. தட்சணை போட்டாத்தான் திருநீறு கைக்கு வரும்.

எனக்கு இவ்வளவு கூட்டமால்லாம் கோயிலுக்குப் போனா ஆகாது. காத்தாட இருக்கனும். நீ நல்லாருக்கியா? நான் நல்லாருக்கேன்னு ரெண்டு வார்த்தை நிதானமா கேக்கனும். அவதியவதியா ஜருகண்டி ஜருகண்டி தரிசனம் எனக்குப் பிடிக்கிறதில்ல. நேத்து கூட பார்த்தசாரதி கோயிலுக்குப் போனேன். நல்ல கூட்டம். ஆனாலும் பாருங்க. ஒரு நிமிசம் நின்னு பாக்க முடிஞ்சது.

திருத்தணி மலையேறும் வழியிலேயே நீர்மோர் வித்துட்டிருப்பாங்க. ஒருவாட்டி வாங்கிக் குடிச்சிருக்கேன். உப்பும் உறைப்பும் புளிப்புமா நல்லாவே இருக்கும். இப்பல்லாம் குடிக்கிறதில்ல. எந்தத் தண்ணியில் கலக்குறாங்களோன்னு ஒரு பயம் தான்.

said...

படங்கள் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று விட்டது. குரங்குக் குட்டியும், நாயும் ரொம்பப் பாவம்.
ரவி கண்ணபிரானின் பின்னூட்டங்கள் மிக அருமை. ஜி ரா சொல்வது போல கூட்டமில்லாத சன்னிதியே சிறந்தது. அது நம் குன்றத்தூர் போனால் கிடைக்கும்.

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

கட்டுப்படியாகாதுன்னா சொல்றீங்க:-))))

said...

வாங்க சாந்தி.


அதே அதே! போலேதான்:-)

said...

வாங்க கே ஆர் எஸ்.

அங்கே சந்நிதியில் நின்னப்ப நினைச்சது வீண்போகலை:-)

காமமோ இல்லை கோபமோ ஏதோ ஒன்னு தணிஞ்ச இடமுன்னு சொல்லிக்கலாம்தானே!

செயற்கைப் படி? 365 வர்ற மாதிரி செஞ்சுக்கிட்டாங்களா? பேஷ் பேஷ்!

துரை முருகனுக்குக் காரணம் இப்போதான் தெரிஞ்சது :-)

செங்கல்ராயனை இனி எப்பவாவது அந்தப்பக்கம் போகும்போது நினைவு வச்சுக்கறேன்:-)

ஆமாம் அதுஎன்ன ட்ரெய்ன் கதவோரம் நின்னுக்கிட்டு, ஸ்ரீரங்கம் கோபுரம் , மலைமேல் ஓம் முருகா பார்ப்பதெல்லாம் வழக்கம்தானே உங்களுக்கு :-)

நிறைய விவரங்கள் சொல்லும் பின்னூட்டங்களுக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க வல்லி.


இங்கே கூட சாதாரண நாட்கள் என்றால் இவ்வளவு கூட்டம் இருக்க வாய்ப்பில்லை. இன்று முருகனுக்குரிய நாளாக அமைஞ்சு போச்சு பாருங்க அதுதான்.....

குன்றத்தூர் இதுவரை போகலையேப்பா.

உண்மைக்கும் முருகனை நிம்மதியா தரிசிக்கணும் என்றால் சண்டிகர் போகணும். நம்மவன் அங்கே இருக்கான்:-) இதுவரை புடவை வேஷ்டின்னு மூணு முறை சீர்வரிசை அனுப்பினவனாக்கும் !

said...

வாங்க ஜிரா.

எனக்கும் கூட்டம் இருந்தால் பிடிக்கறதில்லை. அதிலும் கோவில் அரக்கர்கள் பிடிச்சு இழுத்துத் தள்ளுவது மகா வெறுப்பு. அதான் 'அங்கே' போவதில்லைன்னு முடிவு செஞ்சது.

உண்மைக்குமே பெஸ்ட் நம்ம அடையார் அனந்தபதுமன்தான். ஏகாந்தமா தரிசிச்சு நாலு வார்த்தை பேச முடியுதே!

இப்பெல்லாம் எதுவுமே வழியில் பார்ப்பதைக் கண்ணால் தின்னுவதோடு சரி. வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது :-)