Friday, April 29, 2016

இப்படி முன்னாலே உக்காருங்க ஆஃபீஸர்!!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 27)

அறைக் கதவில் தொங்கவிட்ட நியூஸ் பேப்பரைப் பார்க்கும் வரையில்  அன்றைக்குத் தைப்பூசம் என்றே தெரியாது. அதுகூட நம்மவர் சொல்லித்தான்.  'ஏம்மா  போறவழியில் முருகனைப் பார்த்துட்டுப் போலாமா'ன்னார். என்னாலே அவ்ளோ படி ஏற முடியாதுன்னேன். நீ எந்தக் காலத்துலே இருக்கே? அதெல்லாம் மேலே போக ரோடு போட்டாச்சுன்னார். எப்போ? நாம் கடைசியாப் போனது 1979 மார்ச் இல்லையோ? 37 வருசத்துலே மாறாமலா இருக்கும்?

போகலாம்தான். ஆனா இன்றைக்குத் தைப்பூசம் என்பதால் கூட்டம் அம்மும். போறவழிதானே...   கீழே இருந்து கும்பிட்டுக்கிட்டுப் போனால் ஆச்சுன்னேன்.

நம்மவர் முருகபக்தர். எனக்கு முருகனோடு ஒரு விரோதமும் இல்லை. அவனுக்கும் அப்படித்தான் போல. கூப்புட்டு தரிசனம் கொடுத்துருவான்.  ஒருவேளை பக்தன் கோபாலுக்காக மனம் இரங்கும்போது கூடவே ஒட்டிக்கிட்டு இருக்கும் என்னை எங்கெபோய்த் தள்ளன்னு இருக்கலாம்:-)

கடமைகளை முடிச்சுப் பொட்டிகளைக் கட்டி வச்சுட்டு  ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ரெடியானோம். நம்மவர் வேட்டி கட்டிக்கிட்டார். திருத்தணி ஸ்பெஷலாம்!  கையிலெ செல்ஃபோன் வச்சுக்குங்க. அப்பதான் போஸ் சரியா இருக்கும்னேன்:-)
கீழே ரெஸ்ட்டாரண்ட் அருமையான உள் அலங்காரத்தோடு நல்லாவே இருக்கு. பஃபேதான். ஏராளமான வகைகள் இருக்குன்னாலும் நமக்கு வழக்கம்போல் இட்லி வடைகள். அப்புறம் பார்த்தா அவிச்ச வேர்க்கடலையும் வெள்ளரிக்காயும், முளைகட்டிய பச்சைப்பயிறும் இருக்கேன்னு  கொஞ்சம் எடுத்துக்கிட்டேன்.திரும்ப அறைக்கு வரும் வழியில் வரவேற்பில்  செக்கவுட் பண்ணறோமுன்னு சொல்லிட்டு மேலே வந்தோம். வரவேற்பில் என்டிஆர்  சாமி வேஷத்தில்  டிவியில் இருந்தார். என்னதான் சொன்னாலும் கிருஷ்ணன் வேஷத்துக்கு  இவர் முகம் ரொம்பவே பொருத்தம், இல்லே!

நம்மவர் திடீர்னு  பேண்ட்ஸுக்கு மாறினார்.  கூட்டத்துலே வேட்டி அவுந்துருச்சுன்னா? பயம்  நியாயம்தான். கீழே வந்து  அக்கவுண்ட் செட்டில் பண்ணும்போது நான் சும்மா வெளியே  தோட்டத்தை எட்டிப் பார்த்தால்  கேட் அருகில்   காம்பவுண்டுக்குள்ளேயே சின்னதா ஒரு கோவில். ஹொட்டேல்காரங்க கட்டி இருக்காங்க.  திரை போட்டு  இன்றைய சடங்குகளுக்குத் தயார் செய்யறார்  அர்ச்சகர்.


'மேடம் சாமி கும்பிட வந்துருக்காங்க'ன்னு  கேட் கீப்பர் சவுண்டு விட்டதும் சரேல்னு விலகியது திரை! ஒரு சின்ன அறை. உள்ளே தாயாரும் பெருமாளும்  பஞ்சலோகத்தில்!

ஆர்வக்கோளாறில் பெருமாள்கண்ணுலே கருப்பு முழி பெரூசு. போகட்டும் மலைமேலேதான் கண்ணை மறைச்சு நாமம் போட்டுக்கிட்டானே.....
தீபாராதனை ஆச்சு. என்னைக் காணோமேன்னு தேடிக்கிட்டு  வந்த  கோபாலையும்  கும்பிட்டுக்கச் சொன்னேன்.  நம்ம சீனிவாசனும் வந்து சேர்ந்துக்கிட்டார். பெருமாளுக்கு பைபை சொல்லிட்டுக்  கிளம்பிட்டோம்.
நாற்சந்தியில் நம்ம எம் எஸ் அம்மாவின் சிலை. கையில் தம்பூரா! தேவஸ்தானத்து ஆஸ்தான பாடகரா இருந்ததுக்கு மரியாதை!
ஒரு முப்பத்தியஞ்சு நிமிட்டில்  தடு(க்)கு என்ற ஊரைக் கடக்கும்போதே   முருகன் வந்துட்டான். ஸ்ரீ ஸ்ரீனிவாசலு ரெட்டி நகர் என்ற பெயர் போட்ட கட்டிடத்தின் முகப்பில்  தங்கமுருகன்  கையில் வேலோடு. நம்ம பத்துமலை முருகனின் ஸ்டைலில்  சின்னது. எதோ ஆஸ்ரமக்கோவில்  போல இருக்கு.   உணவுக் கடைகளிலும் தமிழ் எழுத்துகளும் இங்கிருந்தே ஆரம்பிச்சுருது .

கொஞ்சதூரத்துலே இயற்கையாகவே stonehenge போல அமைஞ்சுருக்கும் மலை உச்சியில் இருந்து  பாறைகளை வெட்ட ஆரமிச்சுருக்காங்க. அடப்பாவிகளா.....  இது இயற்கையின் அற்புதம் என்றெல்லாம் சொல்லிப் பாராட்டவேண்டிய சமாச்சாரமாச்சே! இதையா வெட்டித் திங்கறீங்க?உலகத்துலே அங்கங்கே இருக்கும் சாதாரணத்தைக்கூட எப்படி  பெரிய சுற்றுலாவுக்கான இடமாக் காமிச்சு நாட்டின் வருமானத்தைப் பெருக்கறாங்க!  நம்ம நாட்டுலேதான் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் எல்லாம்  அரசு அலுவலர் அனுமதியோடு நடக்குது:-( அடுத்த முறை இந்தப் பக்கம் வரும்போது அந்த மலையே இருக்காது போல! மலைகள் காடுகள், கடற்கரைகள் எல்லாம் நாட்டின் வளங்கள்.  எப்படி இதையெல்லாம் அழிக்க மனசு வருது?
அடுத்து இருந்த இன்னொரு மலைமீது அநாமத்தா  இருக்கும் கல்லுக்கும் இந்த கதி வரக்கூடாதுன்னோ என்னவோ   அதுலே நாமத்தை வரைஞ்சு வச்சுருக்காங்க சில நல் மனத்தவர். சாமிக்கல்லு!  சாமிக்கல்லை மட்டும் விட்டுட்டு சாமர்த்தியமா அதைசுத்திக் கல்வெட்டி எடுத்து விக்கறாங்க.அதான் ரோடுகிட்டேயே ஏத்தி அனுப்ப வசதியா சின்னச்சின்ன குவியல்கள் கிடக்கு.
திருப்பதிக்கு நடந்துபோகும் சனம் மஞ்சள் உடையில்  மூணுநாலுபேர் குழுக்களா நம்மைக் கடந்து போய்க்கிட்டு இருக்காங்க. இவ்ளோ கஷ்டப்பட்டு மலைக்கு நடந்தே போய்  கம்பிக்கூண்டுக்குள் மணிக்கணக்காக் காத்திருந்து பெருமாள் முன்னே போகும்போது  அரை நொடி பார்க்கவிடாமக் கையைப்பிடித்து கடாசும் கோவில் அசுரன்களைக் கன்யாகுமரியில் இருந்து  நடந்துவரச்செஞ்சு மலைமேல் ஏறும்போது தலைகீழா ஏறச் சொல்லணும்.


சாலைக்கு இடதுபக்கம் கோவில் அலங்கார வளைவு ஒன்னு இருக்கு. மூலவர் சாய்பாபா.  இப்பெல்லாம் நிறையக் கோவில்கள்  இவருக்கு வந்துக்கிட்டு இருக்கு போல!  போனமுறை (2011) திருப்பதிக்குப் போனபோது   இந்த வளைவு இல்லை. ஆனால்  சின்னக்குன்றுமேல் ஒரு கோவில் கட்டிக்கிட்டி இருந்தாங்க. போறபோக்குலே அப்ப க்ளிக் செஞ்சுருந்தேன். இப்ப பக்காவா கட்டி முடிச்சுட்டாங்க போல. கோவிலுக்கான பவர் லைன் கம்பங்கள் கோணாமாணான்னு மேலேறிக்கிட்டு இருக்கு.
கொஞ்ச தூரத்தில் இன்னொரு அம்மன் கோவிலுக்கான அலங்கார  வளைவு. ஸ்ரீதேசம்மாள் தேவஸ்தானமாம். 'கன் பார்வை அம்மன். எனக்குத்தான் கண்பார்வை போயிருச்சோன்னு பார்த்தேன்.....    கன் பார்வைன்னுதான் எழுதியிருக்கு.

அடுத்து இன்னும் கொஞ்சதூரத்துலே சாலையோரமாவே பெரிய ஆஞ்சி நிக்கறார். இதுவும் ஒரு கோவில்தான். மக்கள்தொகை கூடக்கூட கோவில்களும் கூடிக்கிட்டே வருது. இப்பெல்லாம் பெரிய பெரிய சிலைகள்  செஞ்சு வைப்பது ஒரு ஃபேஷனாவே போயிருக்கு. 'மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது' என்பதெல்லாம் அந்தக் காலம்......

இதையடுத்துதான் சென்னைக்குப்போகும் சாலை இடது பக்கமும், திருத்தணி, காஞ்சிபுரம்  போகும் சாலைக்கு  நேராப்போய் வலதுபக்கம் திரும்பணுமாம்.  தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறையின் உருப்படியான போர்டு.
திருத்தணி ஊருக்குள்ளே நுழையறோம். பூமாலைகள் தொங்கும் பூக்கடைகளும் வாழைபழக்குலைகளும் வெத்தலைக்கூடைகளுமா ஜேஜேன்னு இருக்கு. இதுலே ட்ராஃபிக் ஜாம் வேற.   நம்ம வண்டியை நாலைஞ்சு போலீஸ் நிறுத்துச்சு.

என்னவோ ஏதோன்னு  நிறுத்தினா......   "மேலே போறீங்கதானே?  இவுங்களையும் அங்கே ட்ராப்  பண்ணிடறீங்களா?"  அதுக்கென்ன முன் ஸீட் எப்பவும் காலியாத்தானே கிடக்கு.  போலீஸ் ஆஃபீஸரம்மாவை வண்டியில் ஏத்திக்கிட்டோம்.  இப்பதான் நம்ம வண்டிக்கு ஒரு கெத்து வந்துருக்கு.
மலைமேலே போகும் பாதையில் தடுப்பு வச்சு, வர்ற வண்டிகளைத் திருப்பி விட்டுக்கிட்டு இருக்காங்க.  மேலே இடம் இல்லையாம். ஆனா  நமக்கு? ஸல்யூட் அடிச்சு வழிவிட்டது  தடுப்புக் காவல்.  பாருங்க.... கூட்டமா இருந்தா கீழே இருந்தே  போறபோக்குலே கும்பிட்டுக்கலாமுன்னு நினைச்சால்  இந்த முருகன் 'வந்து பார்த்துட்டுத்தான் போகணுமு'ன்னு விடாப்பிடியா  வழி செஞ்சு கொடுத்துட்டான்!

எனக்கு என்ன ஒரே ஒரு  மனக்குறைன்னா.... வண்டியின் தலையிலே சிகப்பு விளக்கு மிஸ்ஸிங் ஆனதுதான்.  ஜெகஜெகன்னு விளக்கு சுத்த  உய்ங் உய்ங்குன்னு  ஸைரன் கத்த  மலை ஏறி இருந்தா எம்பூட்டு நல்லா இருந்துருக்கும்!

தொடரும்.....:-)


18 comments:

said...

//நம்மவர் வேட்டி கட்டிக்கிட்டார். திருத்தணி ஸ்பெஷலாம்! கையிலெ செல்ஃபோன் வச்சுக்குங்க.//

அண்ணா நாமம் வாழ்க :-))

//எனக்கு என்ன ஒரே ஒரு மனக்குறைன்னா.... வண்டியின் தலையிலே சிகப்பு விளக்கு மிஸ்ஸிங் ஆனதுதான். ஜெகஜெகன்னு விளக்கு சுத்த உய்ங் உய்ங்குன்னு ஸைரன் கத்த மலை ஏறி இருந்தா எம்பூட்டு நல்லா இருந்துருக்கும்!//

அதானே.. பதிவுலக மக்கள் முதல்வர் deserves it :-))

said...

I think you are partial towards saivaite gods/ எங்கும் எப்போதும் பெருமாள்தானா?

said...

//திருப்பதிக்கு நடந்துபோகும் சனம் மஞ்சள் உடையில் மூணுநாலுபேர் குழுக்களா நம்மைக் கடந்து போய்க்கிட்டு இருக்காங்க. இவ்ளோ கஷ்டப்பட்டு மலைக்கு நடந்தே போய் கம்பிக்கூண்டுக்குள் மணிக்கணக்காக் காத்திருந்து பெருமாள் முன்னே போகும்போது அரை நொடி பார்க்கவிடாமக் கையைப்பிடித்து கடாசும் கோவில் அசுரன்களைக் கன்யாகுமரியில் இருந்து நடந்துவரச்செஞ்சு மலைமேல் ஏறும்போது தலைகீழா ஏறச் சொல்லணும்.//

அப்படி செய்ய பெருமாள் ஒத்துக்கமாட்டார்.

அது சரி.

பெருமாளை ஒரு கணம் பார்த்தாலும் ஒரு ஜன்மம் முழுக்க
மனசிலே வ்யாபிச்சுண்டு இருக்கிற மனசு அவருக்கு இருக்கிறப்போ,
எத்தனை கஷ்டப்பட்டு போய் வந்தால் என்ன ?

சுப்பு தாத்தா.

said...

சுவையான பதிவு

said...

அட, எனக்கும் எல்லாவற்றுக்கும் முருகன்தான்.

said...

சுவையான பதிவு

said...


அருமையான பகிர்வு

தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topic

said...

முருகன் வைதாரையும் வாழவைப்போனாச்சே. அப்படியிருக்க டீச்சராகிய உங்களைக் கண்டுக்காம இருப்பானா? அவன் அருள் உங்களுக்கு முழுமையா உண்டு. அதான் போலிஸ் அதிகாரியம்மாவையே கார்ல உக்கார வெச்சுக் கூட்டீட்டுப் போறான்.

என்ன.. போய் முப்பத்தேழு வருடம் ஆச்சா. அப்போ திருத்தணி எப்படியிருந்திருக்கும்னு பாக்க ஆவலாத்தான் இருக்கு. அப்ப மலை மேல போக படிப்பாதை மட்டும்தான் இருந்ததா? இப்பல்லாம் குன்றத்தூருக்கே மேல கார் போக வழி கட்டீட்டாங்க. அது பெரிய உயரம் இல்லாட்டியும் முடியாதவங்களுக்கு உதவும்.

நீங்க படம் பிடிச்சுப் போட்டிருக்கும் முருகன் சிலை மலேசிய பத்துமலை முருகன் மாதிரியேதான் இருக்கு.

அவிச்ச நிலக்கடலையெல்லாம் பபேல வைக்கிறாங்களா. பரவால்லயே. ஒரு கப் நிறைய சாப்டா வயிறு கப் சுப்னு இருக்கும்.

said...

முருகன் பதிவுல நிறைய சிரிச்சாச்சு.
அந்த ராட்சசர்களை அலிபாபா படம் மாதிரி உருட்டிவிடணும்.
முருகன் அழகு,. கோபால் படம் எடுக்கணும்னு வேஷ்டி கட்டினாரோ என்னவோ.
அந்தப் பாறைகள் இன்னும் இருப்பதே அதிசயம். பத்துவருஷமா வெட்டிக் கொண்டு வருகிறார்கள்.

said...

வாங்க சாந்தி.

ஏற்கெனவே நாமம்தான்னு அழறார். இதுலே நாமம் வாழ்கன்னா :-))))

பதிவுலக சமாச்சாரம் இன்னும் உலகறியலையேப்பா.... !!!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

நெசமாவாச் சொல்றீங்க? அடடா....

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

//பெருமாளை ஒரு கணம் பார்த்தாலும் ...//

உங்களுக்கு கொடுத்து வச்சுருக்கு அந்த ஒரு கணம்! நமக்குக் கால்விநாடிகூடக் கிடைக்கலையேன்ற ஆத்தாமையால்தான் அஞ்சு வருசமா இந்தப் பொறுமல் :-(

இழுத்துவிட்டு வலிச்செறியும் சிஸ்டம் இருக்கும்வரை போகக்கூடாதுன்ற முடிவுதான் இப்பவும். அவனை வேறிடத்தில் சந்திக்கிறேன். நம்ம வீட்டுலேயே கூட ஜம்முன்னு இருக்கான். ஒரு தள்ளுமுள்ளு, ஒரு கஷ்டம், ஒரு ஜருகு இல்லையாக்கும்:-)

said...

வாங்க டொக்டர் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆஹா... முருகா முருகா !

said...

வாங்க ஜீவலிங்கம்.

ஒரு பத்துப் புத்தகம் தேறும். இனிதான் வேலையை ஆரம்பிக்கணும்.

said...

வாங்க ஜிரா.

படிப்பாதை தவிர யானைப்பாதைன்னு ஒன்னு இருந்ததா நினைப்பு. ஆனால் அது கோவில் அலுவல்களுக்கு மட்டும்தான் திறந்துருக்கும். மற்றபடி எல்லோரும் படிகள் ஏறித்தான் போகவேணும்.

அப்போ ஒரு யானைக்குட்டியை அங்கே பார்த்த நினைவு. யானைக்கு மூணு வயசு. தின்பண்டங்கள் எதுவும் கொடுக்கவேண்டாம்னு அறிவிப்பு இருந்தது. அது நம் கையில் இருந்த ஒரு வாழைப்பழத்தைப் பார்த்ததும், ஒளிச்சு வச்சுக்கிட்டேன். பாவம், ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிட்டால்.....

அப்பெல்லாம் கோவில் சுத்தி முடிச்சுட்டுப் படிகளில் உக்கார்ந்து வேடிக்கை பார்ப்பது வழக்கம்!

முருகன், பத்துமலை .... அதேதான். ஆனால் அளவு விகிதம் சரி இல்லை. எப்படியோ செஞ்சு தங்கப்பெயிண்ட் அடிச்சுட்டாச் சரின்னு இருக்காங்க:-(

அவிச்ச கடலை.... அங்கே எனக்கும் வியப்புதான்! இதுதான் முதல்முறை இப்படி ப்ரேக்ஃபாஸ்ட்டில் பார்த்தது!

said...

வாங்க வல்லி.

அட! பத்து வருசமாவாத் தின்னுக்கிட்டு இருக்காங்க! ஏம்ப்பா இதைத் தடை செய்யணுமுன்னு யாருக்கும் தோணலை:-(

said...

நம்ம வீட்டுலேயே கூட ஜம்முன்னு இருக்கான். ஒரு தள்ளுமுள்ளு, ஒரு கஷ்டம், ஒரு ஜருகு இல்லையாக்கும்:-)//

ஆஹா! அப்புறம் என்ன?

படங்கள் எனக்கு லோட் ஆகவில்லை அப்புறம் பார்க்க வேண்டும்.
பயண அனுபவம் அருமை.