Monday, April 04, 2016

கோபாலசாமி இங்கேயும் வந்துட்டார்....................(இந்தியப் பயணத்தொடர். பகுதி 16)

முகப்பில்  மஹாவிஷ்ணு, தேவிகளுடன் பெரிய திருவடியும் சிறிய திருவடியுமா ஒரு அலங்கார வாசல். கடந்து உள்ளே போனால் அடிப்பம்பு.  முதலில் போன சீனிவாசன் நம்மவருக்குக் கால் நனைக்கத்  தண்ணீர் அடிச்சார். அப்படியே ப்ரீஸ்ன்னு ஒரு க்ளிக்:-)
நேரெதிரா  கொஞ்சம் வித்தியாசமான மூணடுக்கு வெள்ளைக்கோபுரத்துடன் இருக்கும் கோவிலுக்குள் போறோம். ஸ்ரீ சென்னகேசவ ஸ்வாமி கோவில். இந்தக்கோவிலுக்கு வயசு 1200 என்றார் நம்ம கூடவே இங்கே(யும்) வந்துட்ட  செக்யூரிட்டி!   கொஞ்சநேரத்துக்கு முன்னால் போன  சித்தேஸ்வரா கோவில் வாசலில்தான் இருந்தார். ஒருவேளை  இந்த ரெண்டு கோவில்களுக்கும்  இவர்தான் ட்யூட்டி செய்யறாரோ என்னவோ!


நம்ம பக்கங்களில் சின்ன கிராமம், ஊர் இப்படி இருந்தாலும் சிவன் கோவில் ஒன்னும் பெருமாள் கோவில் ஒன்னும் இருக்கும் வழக்கப்படி  டிப்பிக்கல் கிராமமா இருக்கு தல்லபாகா. அன்னமய்யாவால் மட்டுமே பிரபலமான ஊர்!
இந்தக் கோவிலையும் இப்போ மார்ச் 1991 முதல் திருப்பதி தேவஸ்தானமே ஏற்று நடத்துது. அதனால் ஸ்வாமிக்குக் குறையேதுமில்லை!  நேராப்போய் மூலவரை ஸேவிச்சதும், கையில் கிடைச்சது ப்ரஸாதங்கள்.  இதுலே தனியா எனக்கும் ஒரு பங்கு தர்றார் பட்டர்ஸ்வாமிகள்....   ஒரு செட்டே போதும்  எங்க ரெண்டுபேருக்குமுன்னு, அப்படியே ஆச்சு.  சக்கரைப்பொங்கல், புளியோதரை, ததியன்னம் !  கூடுதல் ப்ரஸாதமா எனக்கொரு ரோஜா!

ஸ்ரீதேவி, பூதேவியருடன் இருக்கார் ஸ்ரீ சென்னகேசவ ஸ்வாமி.
ஸ்ரீ ப்ரஸன்ன ஆஞ்சநேய ஸ்வாமிதான் இங்கே க்ஷேத்ரபாலகர்! தனிச்சந்நிதியில் வாலைத் தலைக்குமேல் கொண்டுபோய் வளைச்சு  வலப்பக்கம் கொண்டு  வந்துருக்கார் பாருங்க.
கோயில் தலவிருட்சம் அரசும் வேம்புமா  சேர்ந்தே இருக்கு!

எந்த உற்சவம் என்றாலும் சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் சேர்த்தே செய்யறாங்க. கல்யாண உத்ஸவம் கூட பெருமாளுக்கும் சிவனுக்கும் உண்டு!

சக்ரத்தாழ்வாருக்கு ஒரு தனி சந்நிதி, சின்னக்கோவிலாவே இருக்கு! ஸ்ரீ கோபாலஸ்வாமி ஸமேத சக்ரத்தாழ்வார்னு  பெயர்! சந்தான கோபாலன் என்ற புகழும்! பெரிய திருவடிக்கும் ஒரு தனி சந்நிதி.
மேலே:  கூகுளாண்டவர் அருளிச்செய்த சுதர்ஸனர். நம் நன்றிகள்.


இந்த வளாகம் ரொம்பவே பெருசு. 2006 ஆம் ஆண்டு கோவிலுக்கு  வலப்பக்கம் அன்னமய்யாவுக்குத் தனி  அலங்காரமண்டம் அமைச்சு அவர் சிலையை வச்சுருக்காங்க.  இதெல்லாம் சமீபத்தியக் கட்டுமானங்கள் தானே?  விளக்கு போட்டுருப்பதைப் பார்த்துச் செய்யக்கூடாதோ? பத்து வருசத்துக்கு முன்னே  ஒயர் தெரியாமல் விளக்கு வைப்பதெல்லாம்  ஆகாத காரியமா?   கட்டும்போதே மின்சார விளக்குக்கான ஒயரை  சுவருக்குள்ளேயே கொண்டுபோய் வச்சுருக்கலாமுல்லே? ப்ச்....
மண்டபத்துக்குப் பக்கத்துலே ஒரு  ஓப்பன் ஷெட்!  விழா நடத்திக்க ஒரு ஏற்பாடோ?

ஷெட்டுக்கு அடுத்தாப்லெ  ஒரு  பெரிய ஹால் இருக்கும் கட்டடம்.

அன்னமய்யா  தியான மண்டபமாம். கட்டட முகப்பில்  ஸ்ரீநிவாசன் பத்மாவதி கல்யாணம். ஆகாஸ ராஜன், கன்யாதானம் செஞ்சு கொடுக்க, ப்ரம்மா, சரஸ்வதி,  லக்ஷ்மி, விஷ்ணு,  நாரதர், சிறிய பெரிய திருவடிகள் ஆகியோர்  கல்யாண சாட்சிகளா  இருக்காங்க.

1982 இல் திருப்பதி தேவஸ்தானம்  கட்டிமுடிச்ச இந்த 'த்யான மந்திரத்தில்'  வருசந்தோறும் அன்னமய்யாவின்  பிறந்த நாளையும், மறைந்த நாளையும் மறக்காமல் விசேஷ பூஜைகள் செஞ்சு அனுசரிக்கிறாங்க.

ஹாலுக்கான வாசல் நிலையில்   ரெண்டு பக்கங்களிலும் அன்னமய்யா!
உள்ளே  போனால் ஹாலின்  மறுகோடியில் சின்ன மேடை அமைப்பில் அன்னமய்யாவுக்கு  ஒரு சந்நிதி.  ஒரு ஓரமா  தேவியருடன் விஷ்ணு!

நம்ம ஊர்களில் எல்லாத்துக்கும் ஒரு அசிரத்தை, அலட்சியம் எல்லாம் பார்த்தால் எரிச்சலா இருக்கு.  இந்த சந்நிதியில் ப்ளாஸ்டிக் சேர்,  அசிங்கமா பெஞ்சுகள் எல்லாம் வேணுமா?  போதாக்குறைக்கு அசிங்கமா ஒரு ஒயரிங்..........  ப்ச்.....:-(  எதையும் நீட்டா வச்சுக்கணும் என்ற எண்ணமே வராது போல........
இந்த தியான மந்திரம் கட்டுனபிறகுதான் கொஞ்சம் கொஞ்சமா வெவ்வேற வருசங்களில்  ராஜம்பெட்டுக்கான  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயவில் (அன்னமய்யாவுக்கு  எதாவது செய்யணும் பாஸ்!) 2006 இல்  இதே வளாகத்தில்  அலங்காரமண்டபத்தில் சிலையும், அடுத்த ரெண்டாம் வருசம் (2008)  நாம் Boyanapalli போயனபள்ளியில் பார்த்த (கடப்பா - திருப்பதி ரோடு) 108 அடி உயரச்சிலையும்  வந்துருக்கு நினைக்கிறேன்.  எப்படியோ...நல்லது நடந்தால் சரி.

இந்த தியானமந்திரம் பார்க்கும்போது, எனக்கு நம்ம திருவையாறில் பார்த்த தியாகப்ரம்மம் தியாகைய்யரின் சமாதி கோவில் நினைவு வரலைன்னு சொன்னால் அது பொய் :-)   நீங்களே பாருங்க இங்கே!


மூணு கிமீ பயணிச்சு திரும்ப  108 உயரச்சிலைக்குப் பக்கம் மெயின் ரோடுலே போய் சேர்ந்துட்டோம். கடப்பா நோக்கிப் போறோம். ஆனா   அடுத்த ஸ்டாப்பிங் நமக்கு இன்னும் அரைமணியில்!

தொடரும்...........:-)


18 comments:

said...

இந்த அன்னமய்யா க்ஷேத்திரத்திற்கு நானும் சென்று இருக்கிறேன்.
1985 வாக்கில். ஆனால், இந்த அளவிற்கு அப்போது இருந்ததில்லை.

மறுபடியும் திருவையாறு தியாகப் பிரும்ம ஆராதனை நடக்கும் திருவையாறு க்ஷேத்திர மகிமையைக் காணும் பாக்கியம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

எந்தரோ மானு பாவா...அந்தரீக்கி....

அந்த மானு பாவா வில் துளசி யும் கோபாலும் பளிச் என்று இருக்காப்போல ...

சுப்பு தாத்தா.

said...

கோபால்சாமி = இந்தப் பேரின் மேலொரு வாஞ்சை!
தாயாகித் தந்தையுமாய்..
காவேரியின் கரை அலைக்கும், கண்ணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே, இராகவனே தாலேலோ!
---

அன்னமய்யா, ரொம்ப அழகா உடுப்பு உடுத்தி இருக்காரு!
வேட்டியும் கரையும் பளிச்!

வடையேந்தும் டீச்சரைப் பாத்துருக்கேன்
குடையேந்தும் டீச்சரை, இன்றே சேவித்தேன்:)

டோலாயாம் சல டோலாயாம், ஹரே டோலாயாம்!
---

கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ, பத கமலமே சரணம்!
---

பரம யோகுலகு, பரிபரி விதமுல
வரமு செகடி... நீ பாதமு!
திருவேங்கட கிரி, திரமணி சூப்பின
பரம பதமு... நீ பாதமு

பிரம்ம கடிகின பாதமு
பிரம்மமு தானினி பாதமு!

இறைவன் திருவடிகளே தஞ்சம்!
பாதம் வருடிய மணவாளா!

said...

//வடையேந்தும் டீச்சரைப் பாத்துருக்கேன்
குடையேந்தும் டீச்சரை, இன்றே சேவித்தேன்:)//

இது மாதிரி ஒரு சிஷ்யன் கிடைப்பது
என்ன ஒரு கொடுப்பினை !!

சேவிக்க வேண்டும் அய்யா.. தினம் தினம்

சுப்பு தாத்தா.

said...

வாங்க அத்திம்பேர்.

இப்ப சமீபகாலமாத்தான் மக்கள்ஸ்க்கு பக்தி அதிகமாகிக்கிட்டு வருது! அதுவுமில்லாமல் இப்பெல்லாம் உள்ளூர் பயணிகள் அதிகமாகிட்டாங்க. க்ஷேத்ராடனம் ஓஹோன்னு நடக்குது.

எப்படியோ எல்லாம் நல்லா இருந்தால் சரி!

எந்தரோ மஹானு பாவ...... கோடிக்கணக்கில் இருக்கும்போது துளசியும் கோபாலும் நினைவுக்கு வந்தது...... பூர்வஜென்ம புண்ணியம் அல்லாது வேறென்ன?
வந்தனுமு.......... கோடானகோடி வந்தனமு (தெலுங்கு உச்சரிப்பில் வாசிச்சால் தேவலை!)

said...

வாங்க கே ஆர் எஸ்.

பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா ..............இராகவனே தாலேலோ! வாஞ்சை........ எனக்கும்தான். ஆனால் உங்க அளவிலான்னு தெரியாது........

அடுத்த பதிவில்....... கூட ஒரு கனெக்‌ஷன் இருக்கலாம்:-)

வடைக்கும் குடைக்கும் சரியாப்போச்சு :-))


said...

@ அத்திம்பேர்.

கொடுப்பினை சிஷ்யன் கிடைச்சதில் மட்டுமா?

அக்காவையும் அத்திம்பேரையும் இந்தக் கணக்கில் சேர்க்கவேண்டாமோ!!!!

said...

அருமையான படங்கள். நானும் சேர்ந்தே தரிசித்தேன்.

said...

அவசர இணைப்பாக மின்சாரம் வந்திருக்கும் துளசி.அதான் அக்கறை போதவில்லை.
சக்காரத்தாழ்வார் மாறுபட்டுத் தெரிகிறார்.

கண்ணபிரான் எமெஸ் அம்மா குரலையும் கொண்டு வந்துவிட்டார். விஷு வரும் முன்னமே குடை பிடித்த துளசி.
சுப்பு அண்ணா ரசனை தனி.
பரம சத்சங்கம்.
108 அடி சிலையைப் பார்க்காமல் விட்டேனே.

said...

படங்கள் எல்லாம் அழகு.
விவரங்கள் எல்லாம் அருமை.
குடையோடு உங்கள் படம் மிக அழகு.

said...

பிரசாத தொன்னையைப் பாத்தாலே வாயூறுதே. கூட ஒரு செட் வாங்கி எனக்குக் கொடுத்திருக்கலாம் :)

அரசையும் வேம்பையும் ஒன்னாவே நட்டியிருப்பாங்களோ? ரொம்ப இள மரங்களா இருக்கே.

கோயில் நல்லா துப்புரவா பாக்கவே பளிச்சுன்னு இருக்கு.

said...

இதெல்லாமே முன்'கூட்டியே திட்டமிட்டுச் சென்று வருகிறீர்களா அல்லது, போகும் வழியில் மற்றவர்கள் சொல்வதை வைத்து இடங்களைச் சேர்த்துக்கொள்கிறீர்களா? கோயில்ல நாம போகும்போது பிரசாதம் தருவதே நமக்கு நல்ல மன நிறைவைத் தரும்.

இதுவாவது இப்போது கட்டிய கோயில். நாம் நம் கலாச்சாரத்தின் பிரதிபிம்பங்களான நிறையக் கோவில்களை சரியாக வைத்துக்கொள்வதில்லை. எங்கு பார்த்தாலும், தூசியும், அழுக்குமாக. முன்னேயெல்லாம் (இப்போதும்தான்) திருப்பதி சன்னிதியை விட்டு வெளியே வந்து, இலவச பிரசாதம் வாங்கிவிட்டு வரும் இடத்தில், ஜாக்கிரதையாக நடக்கவில்லை என்றால், வழுக்கி விழ வேண்டியதுதான். கீழ்த்திருப்பதி பத்மாவதி கோவிலிலும், சுற்றுப் பிரகாரம் ஒரே வழுக்கல்தான். பிரசாதத்தைக் கீழே சிந்தாமல் சாப்பிடவும், தொன்னையை அதன் இடத்தில் போடவும், கையை தண்ணீரில் நன்'கு சுத்தம் செய்வதற்குமே நமக்கு இன்னும் தெரியவில்லை. இதுல, கோவிலை நாம் (பக்தர்கள்) சுத்தமாக வைத்துக்கொள்ள எப்போதுதான் கற்றுக்கொள்ளப் போகிறோமோ.

said...

வாங்க ஸ்ரீராம்.

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.

சிலை வந்து 10 வருசம் ஆச்சு. நீங்க போனது எப்போ?

என்னதான் அவசர இணைப்புன்னாலும் அதன்பின் சரிப்படுத்தி இருக்க வேணாமா? ஐ ஸோர் :-(

said...

வாங்க கோமதி அரசு.

உங்கள் ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

ஒருவேளை புது செட் மரங்களாகவும் இருக்கலாம்!

இப்பதான் உற்சவம் ஒன்னு நடந்து முடிஞ்சுருக்கு. அதான் சுத்தமுன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பயணத்திட்டத்தில் இருப்பவைகளை விட எதிர்பாராமல் வழியில் சில அமைந்துவிடுகிறது! நண்பர்களும் சில சமயம் சொல்வார்கள்தான். ஆனால் நாம் எங்கே போறோமுன்னு அவர்களுக்குத் தெரியாதே! சொல்லிட்டாச் செய்யறோம் :-)

எங்க பெரிய அத்தைதான் பயணத்திட்டம் கேட்டு, வழியில் என்னென்ன பார்க்கணுமுன்னு சொல்வாங்க. அதையும் எத்தனையோ முறை மிஸ் பண்ணி இருக்கோம்!

சுத்தம் முக்கியம் என்பது நம்ம மக்கள்ஸ்க்கு ஏன் புரியலை என்பது விசனம்:-(

said...

திருமதி துளசி!
என்னடா கோபால் முன்னால சாப்பாடு தட்டு இல்லை..அப்படி இல்லை என்றால் இந்த --""பதிவே முழுமை பெறாதே""--- என்று பார்த்தல், கை இருக்க பயமேன் என்று தட்டு இல்லை என்றால் என்ன அவர் கையில் தொன்னையில் கொடுத்து படம் எடுத்தது...அவரை விடுவேனா...என்று! கோபாலும் நம்மள மாதிரி தான் போல...நான் சொல்வது, நானும் ராமன் தான்; சாப்பாட்டு ராமன்!

நான் மதுரை போனால், அழகர் கோவில் போகாம இருக்கமாட்டேன். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை என்பது மாதிரி..,அங்கு சென்றால் மடப்பளியில் ரெண்டு இல்லை மூன்று பட்டை புளியோதரை சாப்பிட்டு விட்டு அந்த கட்டாந் தரையில் கட்டையை நீட்டி விடுவேன். சோறு கண்ட இடம் சுவர்க்கம்! மூன்று வருடத்திற்கு ஒரு முறை வரும் போது..சுட சுட நல்ல காரமா? மூன்று பட்டை சோறு சாப்பிட்டால் தப்பா என்ன?

என் மனைவி...தனியா தான் சாமி தரிசனம் செய்யணும். அதானலே அழகர் கோவில் என்றாலே அலறுவார்கள்! நான் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதை நம்புவேன்; ஆம்! நான் என் பெருமாளை புளியோதரையில் பார்ப்பேன்!

said...

வாங்க நம்பள்கி.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும். ஒரு மெடிகல் எமெர்ஜன்ஸியில் கொஞ்சம் பிஸியா இருக்க வேண்டியதாப் போச்சு.


பெருமாள் சோற்றிலே இல்லைன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. தூணிலும் துரும்பிலும் இருப்பவர்க்கு அரிசியில் இருப்பது கஷ்டமா என்ன :-)

அடுத்த மதுரைப்பயணம் எப்போ?