Wednesday, April 06, 2016

அனுமன் மைனஸ் ராமர் !!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 17)

நம்ம பயணத்திட்டத்தில் இருக்கும் கோவில்தான்.  25 கிமீ தூரம். அரைமணியில்  கோவில் கண்ணில் பட்டது.  பனிரெண்டேகால் ஆச்சு இப்பவே....   ஒருவேளை கோவில் மூடி இருந்தா......?  எப்போ திறப்பாங்கன்னு கேட்டுக்கிட்டு,  கடப்பாவில் இருந்து  திரும்ப இங்கே வந்தால் ஆச்சு. அதே 25 தானே இடையில்!

சாலையில் வரும்போதே......... ஒற்றை மேடு கோதண்டராமர் கோவில் கண்ணுக்குப் புலப்பட்டது!  சட்னு பார்த்தப்ப அந்த கோபுரங்கள் நிக்கும் ஸ்டைல் நம்ம அங்கோர்வாட்டை மனசுக்குள் கொண்டு வந்தது.  ( அய்ய.... டூ மச்.  இப்படித்தான் சம்பந்தம் இல்லைன்னாலும் சில நினைவுகள்  வந்து நிற்கும் மனசு.... )

வொன்ட்டிமிட்டா என்னும் பெயருக்கேத்தபடி ஒரு ஒற்றை மேடு (குன்று?). கோவில் முகப்புக்கு வந்தால்தான்  மேட்டுலே கோவில் இருக்குன்னு தெரியும்.ஒரு முப்பது படிகள் ஏறிப்போகணும்.  நல்ல விசாலமான நீண்ட படிகள்.

ராஜகோபுரம் அஞ்சடுக்குதான்.  165 அடி உயரமாம்.  Tavarniyar என்ற ப்ரெஞ்சுப் பயணி  ஒருவர் இங்கே 1652 AD ஆண்டு வந்து போனவர்    கோபுரத்தின் அழகையும், கோவில் சிற்பங்களின் அழகையும்  ரொம்பபே சிலாகிச்சு எழுதி இருக்காராம். மேட்டின்மேல் இருப்பதால் ரொம்ப உசரமாத் தெரியுது.  இந்தப் பக்கங்களில் நாம் ராஜகோபுரம் என்று சொல்வதை காலி கோபுரம் என்று சொல்றாங்க. அதுவும் ஒருவிதத்தில் சரிதான்.  கோபுரவாசலில் எப்பவும் காத்து  அட்டகாசமா இருக்குமே... அதேதான்!  காலி  Gali  = காற்று  (தெலுகு மொழியில்)
பலிபீடமும் கொடிமரமும் கண்ணெதிரில். அதைத்தாண்டி ஒரு பெரிய மண்டபம். 32 தூண்கள். ஒவ்வொன்னிலும் சிற்பக்கூட்டங்கள்!  இந்த முன்மண்டபத்துக்குள் போக  இடமும் வலமும் படிக்கட்டுகள் இருக்கு. படிகளுக்கு  எதிர்த்தாப்போல   கோபுரம் உள்ள வாசல்கள்.  கிழக்கு, வடக்கு தெற்குன்னு  மொத்தம் மூணு கோபுரங்கள் இந்தக் கோவிலில். எல்லாமே அஞ்சு நிலைகள்தான்!
முன்மண்டபத்துக்கு இங்கே ரங்கமண்டபம்னு பெயர்.   மூலைத்தூண்கள் எல்லாம் மூணு பக்கத்தூண்களா இருக்கு!  ஒரிஜினல் அழகை ரசிக்க முடியாமல் ரெண்டுபக்கங்களிலும் சின்ன  சந்நிதிபோல காங்க்ரீட் லே கட்டி வச்சுருக்காங்க. யாருடைய ஐடியான்னு தெரியலை :-(  ஆனால்  நல்ல வேளையா  ரொம்ப அசிங்கமாக் கட்டாமல்  ரொம்ப சுமாரா இருக்கு.
மண்டபத்துக்குள்ளேயே  சின்ன மண்டபமா டிசைன் செஞ்சு  அங்கேயும்  மூணுபக்கத் தூண்கள் நாலு இருக்கு.  இது மத்யரங்க மண்டபமாம். ஒவ்வொரு தூணுமே நாலுஅடுக்கு சிற்பங்கள்! இதைத்தவிர சாதாரண சதுரத்தூண்களில்  அடுக்கடுக்காச் சிற்பங்கள். தசாவதாரங்களும், அப்சரஸ்களும், ரிஷிமுனிவர்களும், ஆச்சார்யர்களுமா  எதைச் சொல்ல எதை விட?

கல்லில் செதுக்கிய கருடனும், ஆலிலைக் கிருஷ்ணனும்..........  அள்ளிக்கிட்டுப் போகுது!

மண்டபத்தின் மேற்குப்பக்கம் கருவறை. உள்ளே  லைஃப் ஸைஸில்  ராம, லக்ஷ்மண, சீதா!  தனித்தனி சிலைகளா இல்லாமலொரு பெரிய கல்லில் மூணுபேரையும்  வடிச்சுருக்காங்க.  இதனாலேயே இந்த ஊருக்கு  ஏகசிலா நகரம் என்ற பெயர் !        (ஏக சிலா = ஒரே கல்)
சுட்டபடம்:  நன்றி கூகுளாண்டவரே!

ஸ்ரீராமர், இடது கையில் கோதண்டம் என்னும் வில் ஏந்தி, வலது கையில் ராமபாணம் வச்சுக்கிட்டுக் கம்பீரமா நிக்கறார். அதனால் கோதண்டராமர்!  கோவிலுக்கும் ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம் என்றே பெயர்!

வனவாசம் தொடங்கி இந்தப் பக்கங்களில் வந்துருந்த சமயம் அது என்பதால்  இங்கே  நம்ம ஆஞ்சி கிடையாது.  அனுமனை   அப்போ மீட் பண்ணலை  பாருங்க.  ஆனால் ஒன்னு,   ஆஞ்சி  இங்கே இருந்துருந்தால் சீதை இருந்துருக்க முடியாதுதானே? வனவாசம்  ஸீன்   இல்லையோ!!
சந்நிதின்னு இல்லையே தவிர சிற்பங்களில்  ஆஞ்சி நிறைய இடத்தில் இருக்கார்!

கருவறையில் நிற்கும் மூவரின் முகபாவம், அழகு எல்லாம் சுமார்தான்.  திருத்தமான மூக்கும் முழியுமா இல்லை.  இதுலே ஏகப்பட்ட பூ அலங்காரம் இருப்பதால்  உத்துப் பார்த்தாலும் ரொம்ப அழகுன்னு சொல்லிக்கமுடியலை. போகட்டும். சாமியை சாமியாப் பார்த்துக் கும்பிட்டுக்காம இது என்ன ஆராய்ச்சின்னு மனசைத் திட்ட வேண்டியதாப் போச்சு.

அப்புறம் கிடைச்ச விவரம்  கோவில் மூலவரைச் செஞ்சு இங்கே பிரதிஷ்டை செஞ்சவர் ஜாம்பவானாம்!  ராமாயணகாலத்தில் இருந்தவர்.  ராமரை நேரில் கண்டவர் என்றாலும்.... கரடி கையால் செதுக்க முடிஞ்சது இவ்ளோதான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.


இந்த ஊரை ஒன்ட்டிமிட்டா, வொன்ட்டிமிட்டா இப்படியெல்லாம் இப்போ சொல்றாங்க. இங்லிஷில் எழுதும்போது இது Vontimitta .

உள்ளூர் கதை ஒன்னில்....  வொன்ட்டோடு, மிட்டோடுன்னு ரெண்டு நண்பர்கள்.  வேலைன்னு பெருசா ஒன்னுமில்லை திருட்டுத் தொழில்தான்.  இந்தப்பக்கம் போற மக்களிடம் கொள்ளை அடிப்பாங்க. ஒரு சமயம் ராமனும் லக்ஷ்மணனும் இந்தப்பக்கம் வந்தப்போ, அவுங்ககிட்டே கைவரிசையைக் காமிக்கப்போய், ராம தரிசனம் கிடைச்சுருக்கு!  கடைசியில் மனம் திருந்தி இந்தக் கோவிலைக் கட்டுனாங்கன்னு  சொல்றாங்க. அதானே  வனவாசத்தில் காட்டில் அலையும் போது நகையும் நட்டுமாவா போட்டுருப்பாங்க? வெறும் மரவுரிதாரிகள் இல்லையோ?   அது இருக்கட்டும்...........  கோவிலோட பிரமாண்டத்தையும் கலை அழகையும் பார்க்கும்போது  ஜேப்படித் திருடனுங்க கட்டுன மாதிரியா இருக்கு?


கட்டட அமைப்பைப் பார்த்தால்  முதலில் கோவிலைக் கட்ட ஆரம்பிச்சவங்க சோழர்கள் என்றும், பிற்பாடு அதை முடிச்சு வச்சவங்க விஜயநகர அரசர்கள் என்றும்  கல்வெட்டு  சொல்லுது.  கோவிலைக் கட்டுனது மட்டுமில்லாமல்  கோவில் செலவுகளுக்காக ஏராளமான நிலங்களையும் கிராமங்களையும் அரசர்கள் சாஸனம் செஞ்சுருக்காங்க. கோவிலுக்குள் சில கல்வெட்டுகள் இருக்குன்னாலும் கல்வெட்டு மொழி நமக்குத் தெரியணுமே :-(

தொல்லியல் துறையின் கீழ் இப்போ கோவில் இருப்பதால்  காலை 6 முதல் மாலை 8 வரை திறந்தே வச்சுருக்காங்க. வெளியே பிரகாரம் நல்லா சுத்தமாத்தான் இருக்கு. கோவிலுக்கு வயசு ஆயிரத்துக்கு மேலே இருக்கணும்!
அந்நியர் படையெடுப்பு இங்கே இருந்துச்சான்னு தெரியலை. நிறைய சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கு.  நம்ம  மக்களும்  குறைஞ்சவங்க இல்லை தானே? அதிலும் பெண்கள் சிலைன்னா.....   ப்ச்.  புறநானூறு  வீரத்தாய்களா ஆக்கிவச்சுருக்காங்க :-(




வெளியே பிரகாரம் சுத்தப் போனோம். அரளிச் செடிகள்தான் அங்கங்கே. நடுவில்  இருக்கும் கருவறை, முன்மண்டபத்தைச் சுத்தி கம்பித்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.
உற்சவர் பிரகாரம் சுத்திவர பாடாவதியா ஒரு சப்பரம். இவ்வளோ அழகான கோவிலுக்குத் திருஷ்டி பரிகாரம்.

ப்ரகாரத்தின் தென்மேற்கு, வடகிழக்குக் கோடியில் பக்கத்துக்கொன்னா ரெண்டு கல்மண்டபங்கள்.

முதல்மண்டபத்தின்  நாலு தூண்களிலும்  வேலைப்பாடும் சிற்பங்களும்......  ஹைய்யோ!!! ஒவ்வொரு தூணுக்கும் நாலு பக்கங்களிலுமா  பதினாறு பக்க அற்புதம்! ஒரு தூணில் மூணு அடுக்குகளாச் சிற்பங்கள். 

கோமாளி ஒருத்தன் ஒளிஞ்சு விளையாடறான்.   எங்கேன்னு அவனைத் தேட?




வடக்கு கோபுரவாசலுக்குப் பக்கம்  ஸ்ரீராமலிங்கேஸ்வர ஸ்வாமி இருக்கார். பெரிய கருங்கல் ஆவுடையாரில் சின்ன வெண்பளிங்கு லிங்கம்.

தென்கிழக்கு மண்டபத்தில் தூண்கள் விரிசல்விட்டு இருக்கு :-(  தொட்டடுத்து  ஒரு  நாகர் சந்நிதி. இதுலே விஷ்ணுபாதம் இருப்பதா ஐதீகம்.  அடடா.... காலைச் சுத்துன பாம்போ? பிள்ளை வரத்துக்கு இங்கே வேண்டிக்கலாம்.



கிழக்கு கோபுரத்து  உள்பக்கத்தில்  அப்படி ஒரு சிற்பங்கள்!  நவரசம் காண்பிக்கும் வட்ட முகங்கள். கீழே  போர்க் காட்சிகள்!  கூட்டமாக இருக்கும் சிற்பங்களில் ராமன் லக்ஷ்மணன் சீதை இருப்பதைக் கண்டுபிடிக்க நமக்கு சிரமம் வைக்காமல், அங்கு மட்டும் குங்குமம் தீற்றி வச்சுருக்கு  சனம்.
இதையெல்லாம் க்ளிக்கினதும் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தால்.....   அங்கே எல்லாம் சுதைச் சிற்பங்கள். ஏறக்கொறைய   பாதி அளவுக்குப் பாதி சிதைஞ்சு போய் இருக்கு.  தலைகளைக் காணோம்!  ஒரு சில சிலைகளைச் செஞ்ச சிற்பியின் வக்ரபுத்தி வேதனையைக் கொடுத்தது என்றாலும்,  கோபுரத்தை சீர் செய்யும் காலம் வரும்போது,  இதையே திரும்பப் புதுப்பிக்காது இருக்க அந்த சீதை அருள்புரிய வேணும்.


முகமண்டபத்திலும் ரொம்பமேலே விதானத்துக்கு அருகில் ஒரு சில பாலியல் சிற்பங்கள் இருந்தாலும், அவை  சட்னு கண்ணுக்குப் புலப்படாமல்தான் இருக்கு. அளவில் சின்ன சிற்பங்கள் தான் அவை. அப்ப உனக்கு மட்டும் எப்படிக் கண்ணுலே பட்டதுன்னு கேக்காதீங்க.  வேறு சில சிற்ப வரிசைகளுக்காக் அந்தப் பக்கம்  என் கேமெராக் கண்ணை அனுப்பினபோது பட்டவைதான். 


கோவிலை எத்தனை சுத்து சுத்தினால்  என்ன பலன்னு எழுதிப் போட்டுருக்காங்களா என்ன?  வாசிக்கத்தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.  ரொம்பக் கஷ்டப்பட்டு ஓம் நமோ நாராயணாய ன்னு ஒரு வரி 'கண்டுபிடிச்சேன்'  :-)

காலி கோபுரவாசலைக் கடந்து வரும்போதும்  வரிவரியா, அடுக்கடுக்கா சிற்பங்களோ சிற்பங்கள்.


வாசலில் கோவில்  புத்தகங்கள் விற்பனைக்கு வச்சுருக்கும் நபரிடம்,  ஸ்தலபுராணம்  இங்லிஷில் இருக்கான்னு  விசாரிச்சால்.... தெலுகுவில் மட்டும்தான் இருக்காம். போகட்டும் அதுலே படங்களாவது இருக்கான்னு பார்த்தால்  த்ராபையா சில படங்கள். இதுக்கு நாம் எடுத்தவைகளே மேல் இல்லையோ?

சும்மாச் சொல்லக்கூடாது கோவில் கதவில் தசாவதாரம் சிற்பங்களோடு ஹயக்ரீவர், ஹனுமன், காளிங்கன் தலையில் கால் வைத்திருக்கும்  கண்ணன் இப்படி மரத்தில் செஞ்சவைகள் பிரமாதம்!




பெரிய திருவடியின்  சிறகுகளைப் பாருங்க. இதே டிசைன் உள்ளே கல்லிலும் இருக்கே!





இன்னும் கொஞ்சநேரம் சிற்பங்களை ரசிக்க எண்ணம் இருந்தாலும்,  நமக்கு நேரம் இருக்கணுமே:-( மேல்படிகளில் நின்னு பார்த்தால் எதிரில் ஒரு அனுமன் கோவில். ராமர் இருக்குமிடத்தில் அனுமன் இல்லாத குறையைத் தீர்க்கன்னே சமீபகாலங்களில் கட்டுனது.  இவர் பெயர் சஞ்ஜீவராயா! இவருக்குன்னு ஒரு நல்ல தேர் கூட இருக்கு! கிழக்கே பார்க்கும் ராமனும் மேற்கே  பார்க்கும் அனுமனுமா  இருக்காங்க.
ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீராமநவமி ரொம்பவே விசேஷமாம்.  அன்றைக்கு மட்டும் சுமார் ரெண்டு லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்கு வர்றாங்களாம்.   அவ்ளோ பேருக்கும் 'மற்ற வசதி'களுக்கான ஏற்பாடு நல்லமுறையில் செஞ்சுருக்கணுமே ராமான்னு  இருந்தது!
சில கோவில்களில்  மூலவரைக் கண்டு   மனம் உருகி  நிற்பது போல் இங்கே  மனசு லயிக்கலைதான். ஊஹூம்... பக்தி போதாது......  ஆனாலும் கோவிலின் தூண்களையும் சிற்பங்களையும் கண்டு  ரசிக்க  இன்னொருக்கா வந்தால் கொள்ளாமுன்னுகூடத்   தோணுச்சு!

நேரே கோவிலுக்குள் போய் வந்தோமே தவிர  கோவிலின் வெளிப்ரகாரத்துக்குப் போகவே இல்லை :-(    பேஸ்மெண்ட்க்குப் போக, தெற்கு வாசலில் இறங்கிப்போய் பார்த்திருக்கலாம்.....   ப்ச்.
ரொம்ப அழகான பகுதியை இப்படிக் கோட்டை விட்டுருக்கோமே...........

என்ன கோவில்டா ராமா..........

PINகுறிப்பு:  எடுத்த படங்களின் ஆல்பமொன்னு  இங்கே!  விருப்பம் இருந்தால் எட்டிப் பாருங்க.




தொடரும்.....  :-)



13 comments:

said...

ரொம்ப அழகான கோயிலா இருக்கே.

புறனானூற்றுத் தாய்மார்கள் மாதிரின்னு பஞ்ச் வெச்சுச் சொன்னது பளிச்சுன்னு புரிஞ்சிருச்சு. நம்ம மக்களை என்ன சொல்றது???

கோமாளியை விட நீங்க கொடுத்த போஸ்தான் சூப்பர்.

டீச்சர்.. திருப்போரூர்ல முருகன் முகமே சிதைஞ்சு மொழுக்குன்னு இருக்கும். கண்ணு மூக்கு வாய் எதுவுமே தெரியாது. பழைய கோயில்கள்ள இந்தப் பிரச்சனை இருக்கு. மனசுக்குள்ளயே கும்புட்டுக்க வேண்டியதுதான்.

said...

ரொம்பவே அனுபவித்து பார்த்து மகிழ்ந்திருக்கிறீர்கள் படங்களும் பதிவும் சொல்கின்றன

said...

கோவிலின் படங்கள் வெகு அருமை. எப்படிப்பட்ட கலாச்சாரம் இருந்திருந்தால், இத்தகைய சிற்பங்களுடன் கூடிய கோவிலை எழுப்பியிருப்பார்கள். அரசர்கள் சிற்பிகளை ஆதரிக்கவில்லையென்றால் இத்தகைய கலையழகுடன் கூடிய சிற்பங்கள் சாத்தியமாகியிருக்குமா? காலம் கடந்தும் அந்த்ச் சிற்பிகள் வாழ்கிறார்கள்.

"காலி கோபுரம்" - இப்போதுதான் அர்த்தம் தெரிந்துகொண்டேன். திருப்பதி மலைமேல் ஏறும்போது, முதலில் வரும் கோபுரம் (குழல் விளக்குகளில் திருமண் சங்கு சக்கரம் உள்ளது) காலி கோபுரம் - நான் அதை காளி கோபுரம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். எதற்கு அதை "காளி" என்று அழைக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தேன்.

கண்ணாடி போட்டுக்கொண்டும், மேலே கையை வைத்து எதைப் பார்க்கிறீர்கள்? கோபால் சார் இந்தப் படத்தின்மூலம் உங்களுக்கு ஏதாவது மெசேஜ் சொல்கிறாரா?

டீச்சர்.. 8-6வரை திறந்திருக்கும் என்று சொன்னதால் கீழ்த்திருப்பதியில் அந்தக் கோவிலுக்குச் (ஸ்ரீனிவாச மங்காபுரம்) சென்றேன். பெருமாள் தரிசனம் தர மறுத்துவிட்டார். கோவிலில், அவ்வப்போது 1-1 1/2 மணி நேரம் நடை சாத்தியிருக்குமாம். வேறு வழியில்லாமல் (300 ரூ டிக்கட் நேரம் நெருங்கிவிட்டதால்) மேல் திருப்பதிக்கு உடனே போகவேண்டியதாகிவிட்டது.

said...

தூணில் உள்ள படம் மாதிரி போஸ் கொடுத்த படம் அழகு.
எல்லா படங்களும் மிக அழகு.

said...

சில கோவில்கள் இப்படித்தான்.
வெளி அழகுக்கு ஒருவர் காரணம். உள்ளே இருக்கும் தெய்வத்திற்கு இன்னொருவர்
காரணம்.
சிலை மழை வருதான்னு பார்க்கிறது நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ .ஹாஹா. துளசி.

said...

ஒண்டிமிட்டா அழகு!
வடையேந்திக் குடையேந்திய டீச்சர், இங்கே படையேந்தாம நின்னா எப்பிடி?:)
ஒளிஞ்சி விளையாடுவான் கையில் படை இருக்கே, நீங்க ஒரு கழி வச்சிக்கப்படாதோ?:)

காலி/ Gali Gopuram= தெலுங்கு மட்டுமே அல்ல!
காலி = சொல்லே தமிழ் தான்! காற்று= "கால்" + து

எங்கும் எப்படியும் உலாவ வல்லதால், காற்றுக்கு= "கால்" என்பது வேர்ச்சொல்!
சிறு "கால்" அரும்பத், தீ அரும்பும்..
என்பது தென்றலைப் பாடும் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்!

காற்று போலவே செல்ல வல்லவை நம்ம Legs! அதனால் அவற்றுக்கும் "கால்" என்றே வேர்ச்சொற் பெயர்!

காளி கோபுரம், காளி கோபுரம்-ன்னு திருப்பதி-திருமலை மலைப்பாதைக் கோபுரத்தைப் பிழையாச் சொல்லுவாங்க, நம்ம மக்கள்:)
ஆனா, அங்கே ஒரு காளியும் இருக்க மாட்டா:) காலி கோபுரம் தான்! தெலுங்கில் Gaali என்றாலும், தமிழில் ஒலிப்பு: Kaali தான்!
கோபுரம், ஆலயக் கோபுரமாய் இல்லாது, சும்மா வழிநடைக் கோபுரம் (வெத்துக் கோபுரம்) என்பதால், Empty/காலி -ன்னும் வேணும்னா வச்சிக்கலாம்:)))

புறநானூற்றுத் தாய்மார்கள் பாவம்.. ஆழ்ந்த வருத்தங்கள்!

//சாமியை சாமியாப் பார்த்துக் கும்பிட்டுக்காம இது என்ன ஆராய்ச்சின்னு மனசைத் திட்ட வேண்டியதாப் போச்சு//
பாதி நம்மாழ்வார் ஆயீட்டீங்க போல! அவன் தான் எப்பமே, தன் மனசுக்குச் சொல்லீப்பான்:) தொழுது எழு என் மனனே, பற்றுக மனனே, வாராய் மனமே..

32 வயசு நாயகி பாவப் பையன்; அதான் அவன் -ன்னு சொல்லிப்புட்டேன்; ஆழ்வாரையே அவன்/இவன் -ன்னு சொல்லுறானே-ன்னு என்னைய கோவிச்சிக்காதீங்க:)
திருப்போரூர் முருகன்= நடுகல்;
அதான் மூக்கு முழி இல்லாம இருப்பான்:) அலங்காரத்தில் சும்மா எழுதி வைச்சாலும் பளிச்-ன்னு தெரிஞ்சீரும், மூக்கிலா முருகா!:) இதழிலா முருகனுக்கு இதழ் முத்தங்கள்:)

said...

வாங்க ஜிரா.

இன்னும் திருப்போரூர் போக நேரம் வரலை:-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அழகை ரசிக்காமல் இருக்க முடியுதா என்ன?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தூணில் இருப்பவரைக் காப்பி அடிச்சேன்:-)

அடடா... ஸ்ரீநிவாசன் இப்படிச் செஞ்சுட்டானே.......... ரொம்பத்தான்....

எல்லாத்துக்கும் நேரம்னு ஒன்னு வரணும்போல!

said...

வாங்க கோமதி அரசு.

நல்லா போஸ் கொடுத்தேனோ?

அழகான சிற்பங்கள். படங்களை ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

சிற்பிகளும் வெவ்வேற ஆட்கள் இல்லையோ? அவரவர் ரசனைதான்!

said...

வாங்க கே ஆர் எஸ்.

அவன்னு சொன்னால் ஒன்னும் சொல்லமாட்டான் அவன். எல்லாம் நம்மாளு!

தமிழில் ஒரே ஒரு க,ப,த இருப்பதால் உச்சரிப்பு பல சமயங்களில் கஷ்டம்தான். அதுக்கு ஈடு கட்டத்தான் மூணு ல ள ழவும் மூணு ந ன ண வும் வச்சுருக்கோ! அப்படியும்சொல்ல முடியலையே..மற்ற மொழிகளிலும் இவை இருக்கே. தமிழுக்கு 216ன்னா மற்ற இந்திய மொழிகளுக்கு இன்னும் கூடுதலா இருக்கே!

அட! நடுகல்தான் முருகனா!!!

மைல்கல்லை சாமியா சில இடங்களில் ஆக்கி வச்சுருப்பதைப் பார்த்துருக்கேன். ஆனால் அவை சாலைகளில்:-)

said...

அருமையான இக்கோயில் பற்றி தகவல் திரட்டு. சிற்பங்கள் புகைப்படங்கள் கண்களில் ஒற்றி கொள்ளலாம். அனைவரையும் இக்கோயில் காண வரவழிக்கும் இப்பதிவு