Wednesday, April 27, 2016

குதிரை முட்டை இருபதே ரூபாய்!!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 26)

நோகாமல் நோம்பு கும்பிட்டதில் வெறும் ரெண்டேமுக்கால் மணி நேரத்தில் அஞ்சு கோவில் முடிச்சு அஹோபிலம் விட்டுக் கிளம்பறோம். நாம் போகும் துக்கம் தாங்காமல் சோகமா காட்சி கொடுத்தார் இவர்!


இன்னுமொரு கால்மணி நேரத்தில்   நாம் வந்த வழியிலே திரும்பிப்போகும்போது (அல்லகட்டா போகும் சாலை) குதிரைமுட்டைகள் ஏராளமாக் கொட்டிக் கிடக்குது. ஒரு இடைவேளை ஸ்நாக்கா இருக்கட்டுமேன்னு  வண்டியை நிறுத்தி இறங்கினோம்.  ஒரு முழுப்பழம் 20 ரூபாய்(தான்!)  இளவயது ஜோடியின் வியாபாரம். ஏற்கெனவே வெட்டி வச்சது இருக்குன்னாலும் நமக்குப் புதுசா ஒன்னு வேணுமுன்னதும் நல்லதா ஒன்னு எடுத்து வெட்டினாங்க. அச்சச்சோ....  இது நல்லது இல்லை(யாம்)  அவுங்களே இது ரொம்பக் காய்ஞ்சு கிடக்குன்னு தூக்கிப்போட்டுட்டு இன்னொன்னு எடுத்து வெட்டுனாங்க. அருமை.

முதலில் ஒரு பெரிய துண்டை நம்மாட்களுக்குக் கொடுக்கணுமுன்னு சொன்னதும் நம்ம சீனிவாசன் வாங்கிட்டுப்போய்  பைக் ரைடர் ஒருத்தருக்குக் கொடுத்தார். கைநீட்டி வாங்குனவர் கொஞ்சம் தின்னு பார்த்துட்டு, ஓக்கே, ருசியாத்தான் இருக்குன்னு வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போனார்:-) பைக் ரைடருக்குப் பழம் ஓக்கே!!




சாலைக்கு எதிர்ப்புறம்  இன்னொருத்தர். அவருக்கு நான் கொண்டுபோய்க் கொடுத்துட்டு வந்தேன்.  பொழுதன்னிக்கும் இதையேத் தின்னக்கொடுத்தால் பாவம் போரடிக்கத்தானே செய்யும், இல்லையா?

முகம் கோணாமல் உபசரிச்சு வியாபாரம் செய்யும் இந்த இளம்ஜோடி ராஜ் அண்ட் ஸ்வேதா நல்லா இருக்கணும்.
வயல்களில் விளைஞ்சுருந்த குதிரை முட்டைகளை  விற்பனைக்குக் கொண்டுபோக ஒரு ட்ரக்கில் அடுக்கிக்கிட்டு இருந்தாங்க. வைக்கோல் வச்சு ஒன்னுக்கொன்னு அடிபடாமத்தான் பேக்கிங். நல்லது. செம்மண் பூமி. வேறொன்னும் விளையாதோ என்னவோ!

இந்த இடம் நரசபுரம் ஃபாரஸ்ட் செக்போஸ்ட்டுக்கு அருகில்தான்.
செக்போஸ்ட் கடந்து போறோம். ரெட்டை மாடு பூட்டுன ஏர்,  பெரிய பஞ்சாரம் இப்படிக் கிராமத்துக் காட்சிகள். ஒரு அம்மன் கோவில் கட்டிக்கிட்டு இருக்காங்க. கடப்பாக்கல் குவியல். தரைக்குப் போடறாங்க போல!!


ஒரு ஊரின் கடைத்தெருவில் பாலசுப்பையா அங்கடின்னு ஒரு போர்டு!  அங்கடி... கடை.   தெலுகு மொழியில்.  அட!  நம்ம தமிழ் 'அங்காடி' தான் இல்லே!
கொஞ்சதூரத்தில் நவீன கைலாயம் கண்ணில் பட்டது! (எந்த ஊருன்னு தெரியலையேப்பா..........)
அதுக்குப்பின்னே பொட்டல்காட்டுப் பயணம்தான். கடுகு விதைச்சுருக்காங்க போல, தூரத்துலே மஞ்சள் நிறம் இன்றைக்கு  நேரா திருப்பதி போய் ராத்தங்கிட்டு  மறுநாள் கிளம்பிடணுமுன்னு திடீர் திட்டம்.  மணி ஆகிக்கிட்டே போகுதே  எங்கியாவது  ரெஸ்ட்டாரண்ட் கண்ணில் படுமான்னு பார்த்துக்கிட்டே வர்றார் கோபால். அவர் கவலை எல்லாம் சீனிவாசனுக்குப் பசிக்குமேன்னுதான்.  ஆனால் அவர் தண்ணிப்பழம் சாப்பிட்டதால்  வயிறு திம்முன்னு இருக்கு. இப்பப் பசி இல்லைன்னார்.
அஹோபிலம் விட்டுக் கிளம்பி ரெண்டேகால் மணி நேரமாயிருந்தது.
கடப்பா ஊருக்குள்ளே போகாமல் பைபாஸ் வழியாப் போய்க்கிட்டு இருக்கோம்.  மணி இப்போ ரெண்டே முக்கால். அப்பதான் கண்ணில் பட்டது சுஷாந்த் மோட்டல்ஸ். கார்டன் ரெஸ்ட்டாரண்டு. ஆந்த்ரா ஸ்பைஸ்!  அதுக்குள்ளே நுழைஞ்சோம்.
இடுப்புயரச் செடிகளும், தனித்தனி குடில்களுமா  பார்க்க நல்லாத்தான் இருந்துச்சு. ஒவ்வொரு குடிலும் சின்னக் கொட்டகைதான். அதுக்குள்ளே மேஜையும் நாற்காலிகளும் போட்டு வச்சுருக்காங்க.  அந்த மேஜையின் நிலை பார்க்கச் சகிக்கலை.  ஒரு மேசை விரிப்புபோட்டு வைக்கப்டாதோ?  மேலே சோம்பேறியா ஒரு ஃபேன் .  ஈக்கள் விஸிட் பண்ணுதுகள். ஆர்டர் எடுக்க ஆள் வந்ததும் மேஜையைச் சுத்தம் செஞ்சு, ஃபேன் போடச் சொல்லி அப்படியே ஆச்சு.  ஆந்திரா உணவு வகைகள் என்னன்னு கேட்டால்  நான்,  தால் மக்கானி, மிக்ஸட் வெஜிடபுள் கறியும்தான் இருக்காம்.  ராத்திரி டின்னர்தான் இங்கே  விசேஷமாம். சரி அதையே கொண்டு வாங்கன்னார் நம்மவர்.

நான் அதுவரை எதாவது க்ளிக்கலாமேன்னு போனேன். மரத்தடியில் கீரைக் கட்டுகளை வச்சு ஆய்ஞ்சு போட்டுக்கிட்டு இருந்தவங்க பெயர் ரேவதி. பெரிய பேஸின் நிறைய பூண்டு  உரிச்சுப்போட்டுகிட்டு இருந்தவங்க சின்னம்மா. ராத்திரி சமையலுக்கு ரெடி பண்ணறாங்களாம். சமையலுக்குக் காய்கறி  வெட்டும் இடம் இப்படியா? ஐயோ....  கொஞ்ச நேரம் அவுங்களோடு பேசிக்கிட்டு இருந்தேன்.  எதோ இந்த வேலை கிடைச்சதால் இப்போ வசதியா இருக்காங்களாம்.

இந்த ஹைவேக்களைப் பொறுத்தவரை  வியாபாரம் எப்படின்னாலும் சனம் ஒன்னும் சொல்லாதுன்ற எண்ணத்தில்தான்  ரெஸ்ட்டாரண்டுகளும் கடைகளும் இருக்கு.  பயணிகளுக்கு  நல்லதா ஒரு இடம் அமைச்சுக் கொடுத்தால் வேணாமுன்னா சொல்லப்போறோம்!  கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லைன்னு அந்த இடம் வரும்வரை காத்திருந்து போகமாட்டோமா என்ன?

என்னுடைய இந்தியப் பயணங்களில் நான் இதுவரை பார்த்ததில் , நம்ம சண்டிகர் வாழ்க்கையில் அடிக்கடி தில்லி வந்துட்டுப்போகும்படி இருக்கும். போகும்போதும் சரி , திரும்பி வரும்போதும் சரி, சோனிப்பெட் ஹவேலிக்குள் நுழையாமல் வந்ததே இல்லை!  இதை விட்டுட்டால்  கர்னால் தாண்டி ஒரு  'ச்சோக்கிதானி ' ரெஸ்ட்டாரண்ட் கிராம ஸ்டைல் ஒன்னு, இன்னொரு  பழைய ஹவேலி பஞ்சாபிதாபா   இருந்தாலும்  இந்த சோனிப்பெட் ஹவேலி த பெஸ்ட்! பயணிகளுக்கு ஒரு பசுஞ்சோலை! எப்பப்போனாலும் கூட்டம் அம்மும்!  அதுவும் மாலை வேளைகளில் வெயில் தாழ்ந்தபிறகு  வண்ண விளக்குகளும் நீரூற்றுகளுமா சூப்பர்!
மேலே படம்: சோனிபெட் ஹவேலி

நம்ம சாப்பாடு வந்துருச்சுன்னு சீனிவாசன் வந்து  சொன்னார். எனக்கு ஒரே ஒரு காய்ஞ்ச 'நான்' போதும். நம்ம சீனிவாசனிடம் இருக்கும் ஒரு நல்ல குணம், சாப்பாட்டைப் பற்றிக் குறை சொல்வதே இல்லை. எனக்கு  எப்போ அந்த புத்தி வருமோ தெரியலை.....
இங்கே நமக்கு அரைமணி நேரம் போயிருந்துச்சு. கிளம்பி நேரா திருப்பதி  நோக்கிப் போகணும்.  ஒரு இருவது நிமிசத்தில் வொன்ட்டிமிட்டா ராமர் கோவில் கண்ணில் பட்டது. நல்ல பெரிய கோவில்தான். வெளிப்புற அழகு அபாரம். கிட்டப்போய் பார்க்கலையேன்னு......... ப்ச்...

ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் அது என்ன ஊர்னு தெரியாமலேயே போகவேண்டியதுதான். எல்லோரும்  அவரவர் மாநில மொழிகளில் மட்டுமே  கடைப் பலகைகள் வச்சுருக்காங்க. மொழி தெரியலைன்னா ரொம்பவே கஷ்டம்.  இதுக்குத்தான் ஒரு தேசிய மொழி வேணுங்கறது. ஹிந்தி வேணாமுன்னா பேசாம இங்லீஷையாவது  வச்சுக்கலாம். தெரியாத  தேவதையை விட  250 வருசமாத் தெரிஞ்ச பேயை வச்சுக்கறதில் என்ன அவ்வளவு கஷ்டம்?   22 அதிகாரபூர்வமான மொழிகள் இருக்கும் ஊரில் என்னதான் முயன்றாலும் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்க முடியுமா?  தட்டித்தடுமாறி பேசக் கத்துக்கறது ஒன்னுன்னா, எழுத்துருக்களைப் படிக்கக் கத்துக்கறது  இன்னொரு கஷ்டமில்லையோ?  கடைசியில் மொழி என்பது  கம்யூனிக்கேஷனுக்கு  இல்லை. காம்பௌண்டு.  அதை ஒரு வேலியாகப் போட்டு வச்சுக்கிட்டு உள்ளே அந்தந்த மாநிலம் மட்டும் தனியா உக்கார்ந்துக்கணும் போல!

இன்னும் ஒரு  அரைமணிப் பயணத்தில்   அன்னமய்யா சிலை, ஹரிதா ரெஸ்ட்டாரண்ட் பார்த்தவுடன்  சரியான பாதையில்தான் போறோமுன்னு நிம்மதி ஆச்சு. கொஞ்ச தூரத்தில்  நேத்துக் காலை வரும்போது மிஸ் செஞ்ச என் டி ஆர்  இன்றைக்கு ஆப்ட்டார்:-)
அடுத்த ரெண்டு மணி நேரப் பயணத்தில்  திருப்பதிக்கு வந்து சேர்ந்தோம். இன்றைக்கு இங்கேதான் தங்கறோம். இன்னும் ஹொட்டேல்  தேடிக்கலை.  நம்ம சீனிவாசன்,  ஃபார்ச்சூன் ஹொட்டெல் நல்லா இருக்குமுன்னு சொன்னார். போய்ப் பார்த்துட்டு சரி இல்லைன்னா பேசாம முந்தா நாள் தங்கின ப்ளிஸ்க்கே போயிடலாமுன்னு  ஃபார்ச்சூன் போனோம்.

இப்பெல்லாம் அறையைக் காமிக்கச் சொல்லி கேட்பது  வழக்கமா இருந்துச்சு. போய்ப் பார்த்தபோது  நல்லாத்தான் இருந்துச்சு. சரின்னு  சொல்லிட்டோம் வரவேற்பில் இருந்த ஸ்வேதாவிடம். சென்னைதான். ஹொட்டேல் மேனேஜ்மென்ட் இப்பதான் முடிச்சு இங்கே ட்ரெய்னீயாம்.
ரொம்ப சுத்திட்டோம் இன்றைக்கு. பேசாம  ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு  கம்ப்ளீட் ரெஸ்ட்.  வைஃபை  அறையில் இருக்கு. அது போதாதா? சீனிவாசனுக்கும் சொல்லியாச்சு இன்றைக்கு வேறெங்கேயும் போகலை. நாளைக் காலை  ஒன்பது மணிக்குக் கிளம்பறோம்.

முந்தாநாள் திருப்பதியில் ப்ளிஸ் ஹொட்டேலில் தங்கியிருந்தமே அப்போ, தோழிகூடப் பேசுனபோது,  திருப்பதிக்கே வரக்கூடாதுன்னு இருந்தேன். அஹோபிலம் பயணத்துலே காளஹஸ்தியைச் சேர்த்ததால் இங்கே வரவேண்டியதாப் போச்சு.  ஆனாலும் மலை ஏறப்போறதில்லை. இதுதான் எனக்குக் கடைசி திருப்பதிப் பயணமுன்னு சொன்னேன். அதுக்குத் தோழி, இதுதான் கடைசின்னு எப்படித் தெரியும்னு எதிர்க்கேள்வி கேட்டாங்க. அது அப்படித்தான்னு சொன்ன  மூணாம்நாளே திரும்ப திருப்பதிக்கு வரவச்சுட்டான் பாருங்க!

ராச்சாப்பாட்டுக்கு  ரூம் சர்வீஸ்.  அதே இட்லி & லஸ்ஸி. கோபாலுக்கு மட்டும் கூடுதலா ஒரு தோசை. கொண்டு வந்தது ஒரு சின்னப் பையன்.  ஐயோ....
பெயர் கணேஷ். நம்ம வேலூர்தான் சொந்த ஊர்.  கேட்டரிங் டெக்னாலஜி  ஸ்டூடண்ட்.  இவரும் பயிற்சி & ப்ராக்டிக்கலுக்காக இங்கே வந்துருக்கார்.  நல்லபடி இருக்கட்டும்.
சாப்பாடு ஆனதும் பேப்பர் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர்,  ஷோளிங்கர் கோவிலுக்கு விஞ்ச் போடப்போறாங்கன்னார். இப்படித்தான் ரொம்பநாளா சொல்லிக்கிட்டு இருக்காங்கன்னதும்,  விஞ்ச் போட டெண்டர் அனுப்பச் சொல்லி இருக்காங்க. அப்ப அநேகமா அடுத்த வருஷம் வேலை முடிஞ்சுரும்னார்.

மனசுக்குள்ளே சின்ன சந்தோஷம் வந்தது உண்மை. ஏன்னா....  சென்னையைச் சுற்றி இருக்கும் 108 கோவில்களில் இன்னும்  ஷோளிங்கர் மட்டும் பாக்கி வச்சுருக்கோம்.  படிக்கட்டுகள் பயம்தான்.  பதிவுலக நண்பர் ஒருவர்  அங்கே போய் வந்ததை எழுதுனதும், படிகள் விவரம் கேட்டதுக்கு  ரொம்பவே வயதான பெண்களும் எங்கள் குழுவில் வந்தாங்க. நல்லபடியாத்தான் போய் வந்தோம்னு சொல்லி  இருந்தார்.  சரி. இந்தமுறை நாமும் போகணுமுன்னு முடிவு செஞ்சது அப்போதான்.

சென்னையிலிருந்து  கிட்டத்தட்ட ரெண்டே முக்கால்மணி நேரப் பயணமாம். அதிகாலையில் கோவில்வாசலில் இருந்தால்  மலை ஏறும்போது சிரமம் இருக்காது. அதனால்  சென்னையில் இருந்து காலை 4 மணிக்குக் கிளம்பினால் சரியாக இருக்கும். குளிச்சு ரெடியாக ஒரு மணி நேரம். இந்தக் கணக்கில்  காலை 3 மணிக்கு எழுந்தால் சரியாக இருக்கும். இப்படித்தான் நம்ம பயணங்களுக்குத் திட்டம் போடறோம்.  ஆனால்  மூணு மணிக்கு....   ப்ச்... சரி வருமான்னு தெரியலையே.... ஷோளிங்கரில் தங்குமிடங்கள் இருக்கா? இல்லைன்னா அக்கம்பக்கத்துலே கொஞ்சம் பெரிய ஊர் எது? தேடுனதில் 'காஞ்சிபுரம்தான் இருக்கு. அங்கிருந்து  ஒன்னரை மணி நேரத்தில்  போயிறலாம் ' என்றார். ஒன்னேகால் மணி பயண நேரம் மிச்சம். அப்ப நாலரைக்கு எழுந்தால் போதுமே!


எனக்கும் காஞ்சிபுரம் ஓக்கேதான். ஒரு முக்கியமான விஷயம் பாக்கி வச்சுருக்கேன். அப்ப நாளைக்கு நேரா காஞ்சிபுரம் போயிடலாம்.  அங்கே எனக்கான வேலையை முடிச்சுக்கிட்டு  சாயங்காலமாக் கிளம்பினாலும் ராத்திரி  பத்துமணிக்கு முன்னே சென்னை.  இல்லைன்னா ஒருநாள் தங்கிப்போனால் ஆச்சு.

இது நம்ம ப்ளான். ஆனால் நமக்காக  முருகன் வேற ப்ளான் போட்டு வச்சுருந்தான்.

தொடரும்............ :-)

18 comments:

said...

நிஜமாவே watermelonக்கு குதிரை முட்டைன்னு பெயரா? நீங்க வச்சதா?

பச்சைப்புடவையம்மா படம் பிரமாதம்!

said...

இளம் தம்பதியர் ராஜ் ஸ்வேதா நன்றாக வாழட்டும். இறையருளோடும் நிம்மதியோடும் நல்ல மனதோடும் வாழட்டும்.

முன்னோர்க்கு நீர்க்கடன் செய்றதுன்னு சொல்வாங்க. நீங்க முன்னோர்க்கு நீர்ப்பழம் கொடுத்து புண்ணியம் தேடிக்கிட்டீங்க. கவிச்சோகம் தீர்த்தபுரம்னு அந்தத் திருத்தலத்துக்குப் பேர் வெச்சிறலாம். இதுல வர்ர தீர்த்த-க்கு இரண்டு பொருள் எடுத்துக்கனும் :)

பிரபலமான ஹைவேஸ்லதான் நல்ல மோட்டல்கள் இருக்கு. மத்த ரோடுகள்ள எல்லாம் சுமார்தான்.

இந்தப் பாட்டைக் கேளுங்க. இதுல பல திவ்ய தேசங்களுக்குப் போறாங்க. இதுல சோளிங்கரும் வருது. எனக்குத் தெரிஞ்சு அனேகமா எல்லாத்துக்குமே போயிருப்பீங்கன்னு நெனைக்கிறேன். போகாத எடம் இருந்தாச் சொல்லுங்க. வீடியோ தரக்குறைவுக்கு மன்னிக்க. அப்போ அவ்வளவாக் கிடைக்கலை.
https://www.youtube.com/watch?v=16j5oViE9u0

said...

//ரெண்டேமுக்கால் மணி நேரத்தில் அஞ்சு கோவில்//

சரியாகப் பார்க்கவில்லையோ என்கிற எண்ணம் இருந்திருக்குமே...

குதிரை முட்டை விற்க ஒரு ஸ்வேதா, ஹோட்டல் வரவேற்பறையில் ஒரு ஸ்வேதா!

said...

//கடைசியில் மொழி என்பது கம்யூனிக்கேஷனுக்கு இல்லை. காம்பௌண்டு. அதை ஒரு வேலியாகப் போட்டு வச்சுக்கிட்டு உள்ளே அந்தந்த மாநிலம் மட்டும் தனியா உக்கார்ந்துக்கணும் போல!//

அப்படி போடுங்க..

சுப்பு தாத்தா.

said...

ஷோளிங்கர் கோவில் நானும் பார்க்கவில்லை.
நீங்கள் பார்த்த விபரம் அறிய ஆவல்.

said...

வெரி நைஸ்ங்க..ம்ம் குதிரை முட்டைல்லாம் பச்சையா இருக்காதாக்கும்..யாரோ ஆன்றோர் சொன்னாங்க..:) சோளிங்கர்.. ரொம்ப காலம் முன்போனது..உஙக் ரைட் அப் படிச்சுட்டு என் எக்ஸ்பீரியன்ஸ் சொல்றேன் :) சின்னக் கண்ணன்

said...

பைபை அஹோபிலம்.
ஹலோ திருப்பதி. அவனும் நினைத்தால் தான் அவன் அழைப்பான். துளசி கோபாலுக்கு
இல்லாத பக்தியா.

தர்பூசணி பிரமாதம். ரெண்டு ஸ்வேதாக்களும் அழகு.

said...

//ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் அது என்ன ஊர்னு தெரியாமலேயே போகவேண்டியதுதான். எல்லோரும் அவரவர் மாநில மொழிகளில் மட்டுமே கடைப் பலகைகள் வச்சுருக்காங்க. மொழி தெரியலைன்னா ரொம்பவே கஷ்டம்.//

பேரவஸ்தை..

said...

ஆஹா.. இத்தனை முட்டைகள் உடைஞ்சு கிடக்கற இடத்துல, ஒரே ஒரு இரும்புக்குதிரைதான் வந்துருக்குது :-))

said...

ஒவ்வொரு ஊரைத் தாண்டும்போதும் அது என்ன ஊர்னு தெரியாமலேயே போகவேண்டியதுதான். எல்லோரும் அவரவர் மாநில மொழிகளில் மட்டுமே கடைப் பலகைகள் வச்சுருக்காங்க. மொழி தெரியலைன்னா ரொம்பவே கஷ்டம். இதுக்குத்தான் ஒரு தேசிய மொழி வேணுங்கறது. ஹிந்தி வேணாமுன்னா பேசாம இங்லீஷையாவது வச்சுக்கலாம். தெரியாத தேவதையை விட 250 வருசமாத் தெரிஞ்ச பேயை வச்சுக்கறதில் என்ன அவ்வளவு கஷ்டம்? 22 அதிகாரபூர்வமான மொழிகள் இருக்கும் ஊரில் என்னதான் முயன்றாலும் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்க முடியுமா? தட்டித்தடுமாறி பேசக் கத்துக்கறது ஒன்னுன்னா, எழுத்துருக்களைப் படிக்கக் கத்துக்கறது இன்னொரு கஷ்டமில்லையோ? கடைசியில் மொழி என்பது கம்யூனிக்கேஷனுக்கு இல்லை. காம்பௌண்டு. அதை ஒரு வேலியாகப் போட்டு வச்சுக்கிட்டு உள்ளே அந்தந்த மாநிலம் மட்டும் தனியா உக்கார்ந்துக்கணும் போல!//

ரொம்ப சரியாகச் சொன்னீங்க. எங்களுக்கும் இதே கருத்து உண்டு. அட இரண்டு ஸ்வேதாக்கள்...குதிரைமுட்டையைப் பார்த்ததும் உடனே வாங்கிச் சாப்பிடணும்னு தோணிடுச்சு. இதோ...

said...

வாங்க ஜிரா.

நீங்க அனுப்பிய சுட்டிக்கு நன்றி.

ஷோளிங்கர் கோவிலில்தான் நம்பியார் மகளுக்குப் பிறழ்ந்த மனநிலை திரும்புது போல! இந்தப் படம் பார்க்கலை. தரக்குறைவுக்கு நீங்க என்ன செய்யமுடியும்? கிடைச்ச லக்ஷணம் அப்படி இல்லையோ!

சுத்தமான ஹைவே மோட்டல்ஸ் இருந்தால் நல்லா இருக்கும்தான்.........

said...

வாங்க ஸ்ரீராம்.

மேல் அஹோபிலத்தில் பார்த்த நான்கு கோவில்களில் மூணுலே அப்படி நின்னு பார்த்து ரசிக்கும் அளவில் ஒன்னுமில்லை:-(

பொதுவா நமக்குத்தான் கோவில்களுக்குப்போனால் சிற்பக்கலை, சுத்தம் இன்னபிற சமாச்சாரங்களில் கண்ணும் மனசும் போகுதே தவிர, பெரும்பாலான மக்கள் வந்தமா சாமி கும்பிட்டமான்னு கிளம்பிப்போயிடறாங்கதான். நம்ம தோழி ஒருத்தர் இருக்காங்க.... நேரா மூலவர் சந்நிதிக்குப்போய் அங்கிருக்கும் சக்தியை உள்வாங்கிட்டுக் கிளம்பிருவாங்களாம். அதெல்லாம் எப்படின்னு எனக்கு இதுவரை ஒன்னுமே புரியறதைல்லை......

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

சொன்னது சரிதானே?

said...

வாங்க கோமதி அரசு.

அடடா.... இன்னும் அங்கே போக வாய்க்கலையே எனக்கு:-(

said...

வாங்க கண்ணன்.

இது ஹைப்ரீட் குதிரை முட்டையாக்கும்:-)))))

உங்க அனுபவம் எழுதுங்க. வெயிட்டீஸ் நாங்க.

said...

வாங்க வல்லி.

பக்திக்கு அவன் அளவுகோல் என்னன்னு தெரியலையேப்பா.....

பக்தி'மான்'கள் சிலரின் மறுபக்கம் பார்த்தால்.... ப்ச் :-(

said...

வாங்க சாந்தி.

எல்லோரையும் இப்படி ஒரு அவஸ்தைக்கு உள்ளாக்கிட்டாங்களே இந்த அரசியல் 'வியாதிகள்' :-(

ஒருமுட்டைக்கு ஒரு (இரும்பு)குதிரைன்னா தாங்குமா :-)

said...

வாங்க துளசிதரன்.

இப்பதான் குதிரைமுட்டை சீஸனாச்சே! அடிக்கிற வெயிலுக்கு ஜம்முன்னு இருக்குமே! எஞ்சாய்!