Friday, April 08, 2016

புஷ்பகிரி அற்புதங்கள்!!!! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 18)

ஸ்ரீநிவாஸா ரெஸிடன்ஸியில் செக் இன் செஞ்சுட்டு  பக்கத்துலே ஒட்டிக்கிட்டு இருந்த ரெஸ்ட்டாரண்டுக்குச் சாப்பிடப் போனப்ப மணி ரெண்டேகால். இதுதான் கடப்பாவில் பெஸ்ட் ஹொட்டேலாம்.  ஆறுதல் என்னன்னா  இது மெட்ராஸ் ரோடில் இருக்கு:-)

மூணாம் மாடி. அறை பரவாயில்லை. பாத்ரூம் ரொம்ப சுமார்.  தொலையட்டும், ஒரே ஒருநாள்தான் தங்கப் போறோம் என்பதால் போயிட்டுப்போறது போன்னு இருந்தேன். வலையில் பார்த்தப்ப  வைஃபை இருக்குன்னு  சொல்லி,  நேரில் வந்தவுடன் அது  கீழே ரிஸப்ஷனில் ஏரியாவில் மட்டும்தான் வேலை செய்யுமாம் :-(

தொண்டகாயை விட்டால் வேறெதுவும் கிடைக்காத சீமை போல இருக்கு இந்த ராயலசீமாப் பகுதி. கூட்டு, பொரியல், சாம்பார் னு விதவிதமா வேஷங்கட்டிச் சிரிச்சது. நம்ம பக்கங்களில் இதைக் 'கோவைக்காய்' னு சொல்வோம்.

நாங்க விசாகபட்னத்தில்  இருந்த காலங்களில், காலையில் காய்கறிக் கூடை சுமந்து வரும் விற்பனையம்மாவின் குரல், 'தோட்டக்கூராக்கூ, தொண்டகாய, பங்காளுதும்பல, வங்க்காய'ன்னு இன்னும் மனசில் ஒலிக்குது.  தினம் தினம் இந்த நாலு காய்கள்தான். நாங்க இருந்த பகுதி லார்ஸன்ஸ் Bபே.  ஊரைவிட்டுக் கொஞ்சம் தள்ளி கடற்கரைப்பக்கம் இருக்கு. இங்கே இதுதான் கிடைக்குமாம். போரடிச்சுப்போய் அப்புறம் டவுனுக்குப்போய் காய்கறி வாங்கிவர ஆரம்பிச்சோம். 

ஒரு முக்கால்மணி நேர ஓய்வு ( எங்கே?  வரவேற்புப் பகுதியில்தான்!  அங்கெதானே wifi இருக்கு)

மூணேமுக்காலுக்குக் கிளம்பி இதோ புஷ்பகிரிக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.  அப்ப கடப்பாவில் போய் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணுமுன்னு சொன்னது என்னாச்சு?  சொன்னோம்தான். போயனபள்ளி ஹரிதா ரெஸ்ட்டாரண்ட் வரும்வரை  இதுபோல புஷ்பகிரின்னு ஒன்னு இருக்குன்னு தெரியாதே!

20 கிமீ பயணம்.  கூகுளார் சொன்ன வழியும் சரியாத் தெரியாததால்  வாயைப் பயன்படுத்த வேண்டியதாப்போச்சு. நம்ம சீனிவாசன்,  கொஞ்சூண்டு தெலுகு பேசினார். 'புஷ்பகிரி Gகுடி எக்கட' ?  அவுங்க சொல்லும் பதிலை நான் ஒருமாதிரி முழி பெயர்த்துருவேன். எங்க வீட்டில் என் தலைமுறை பேசும் தெலுகு மெட்ராஸ் தெலுகாப் போயிருச்சே!

நந்தியால் போகும் வழியில் போய்,   கோவில் அலங்காரவளைவு வருமிடத்தில்  லெஃப்ட் எடுக்கணும். அதேபோல் கர்நூல் ஹைவே  டோல் ரோடில் போய்  வளைவு (!)கண்ணில் பட்டதும்   அதுக்குள்ளே நுழைஞ்சோம்.  எங்கேயும் போர்டு, தகவல்னு ஒன்னுமே இல்லை. ஈஸ்வரோ ரக்ஷிது......
அப்படி இப்படி சுத்தி ஒரு கிராமத்து வழியில் போறோம். நமக்கு முன்னே  சின்னக் கூட்டம் மெதுநடையில். ஒருத்தர் சாமிகிட்டே போயிட்டார்.  அவரை வழியனுப்பறாங்க. ஊர்வலத்தை ஓவர் டேக் செய்ய வேண்டாமுன்னு சீனிவாசன்கிட்டே சொல்லியாச்.  சாவு பார்த்தால் அதிர்ஷ்டமாம்.



அதுவுமில்லாமல் எனக்கு ரொம்ப ஜூஸியான சப்ஜெக்ட் இது.   ட்ரெடிஷனல் சவ ஊர்வலம் பார்த்தே ரொம்ப நாளாச்சு.  நகரங்களில் இப்பெல்லாம்  அமரர்ஊர்தியில் வச்சுல்லே கொண்டு போயிடறாங்க.

ஒரு ஆறேழு நிமிஷத்தில்  ஊர்வலம்    ஒரு  ஒத்தையடிப் பாதையில் நேராப்போக, நாங்க வலதுபக்கப் பாதையில் போகவேண்டியதாப் போச்சு. கொஞ்சதூரத்தில் ஒரு கோவில். வரும்போது பார்த்துக்கணும். நாம் போகவேண்டிய கோவில் கோபுரம் வேற ஸ்டைலு ஆச்சே!
 இன்னும்  ஒரு வளைவில் திரும்பினதும்  தூரத்தில் தெரிஞ்சது நாம் போகவேண்டிய கோவில். இது சரியான பாதைதான்னு தெரிஞ்சதும் மனசுக்கு நிம்மதி. ஒரு சின்ன ஊருக்குள் நுழைஞ்சு  போறோம். புஷ்பகிரின்னு போர்டு!

ஒரு சின்ன மண்டபத்தில் ரெண்டுமூணு  ஆட்கள் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. வண்டியை நிறுத்திட்டு இறங்கி விசாரிச்சதும், ஒரு ஆள் பொட்டிக்கடைக்குப் பின்னால் போய் இன்னொரு ஆளை இட்டாந்தார்.
அவர்தான் இங்கே டூரிஸ்ட் கைடு.  என்ன சார்ஜ் செய்றீங்கன்னு  கேட்டதுக்கு உங்க இஷ்டம்னு சொல்லிட்டு 'அப்படியே' எங்களோடு கிளம்பினார்.  கோவில் ஆத்துக்கு அந்தாண்டை இருக்குன்னு இடப்பக்கம் திரும்பி நடக்க நாங்க கூடவே போறோம்.
பிநாகினி ( Pinakini )நதி!  பென்னான்னு(Penna)  சொல்றாங்க உள்ளுர் மக்கள்ஸ்.  தண்ணீரில் இறங்கிப்போகணும்னு சொன்னப்ப, லேசா யோசிச்சேன்.  'ஆழமில்லை. என்னைத் தொடர்ந்தே வாங்க'ன்னார். 'கோவில் பூஜாரி கூட்டமில்லைன்னா சிலசமயம் அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் போயிருவார். அதான் முதலில் அங்கே போயிட்டு வந்துறலாமு'ன்னு கூடுதலா ஒரு தகவலும். கடப்பாவில் இருந்து வரும் பட்டர்  காலையில்  எட்டுமணிக்கு வந்தால் சாயங்காலம் ஆறுவரை இங்கேயே இருப்பாராம்.
பொதுவா பயணங்களில் எங்கெயாவது  கைடு வச்சுக்கும்படி ஆச்சுன்னா,  வர்ற கைடுங்க,  எல்லா சமாச்சாரங்களையும் நம்மவர்கிட்டேயே சொல்லிக்கிட்டுப் போவாங்க. நான் க்ளிக் செய்ய அங்கங்கே ஒரு விநாடி நிக்கத்தான் வேண்டி இருக்கும். அதுக்குள்ளே இவுங்க  ரொம்ப முன்னாலே போயிருவாங்க. ஓடிஓடிப்போய் பிடிக்கணும்:-(  சரி போகட்டும். சமாச்சாரங்களையெல்லாம் கோபால் கேட்டு அப்புறம் என்னிடம் சொல்வாருன்னு இருந்தால்.... அவ்ளோதான்!  அங்கேயே கேட்டு அங்கேயே விட்டுருவார்.  'ஏங்க... இதைப் பத்தி  கைடு என்னவோ சொல்லிக்கிட்டு இருந்தாரே....'  விசாரிக்கும்போது......  ஒரே பதில்.... ஙே......

இந்த முறை மொழி தெரிஞ்ச ஒரே காரணத்தால்  எல்லாப் பேச்சும் என்னோடுதான்:-) கோவில்போய் சேரும்வரை கெமெரா கோபால் கையில் இருக்கட்டும்.

வழக்கம்போல் உங்க பெயர் என்னன்னு கேட்டேன். பாஷா! ரொம்ப எளிமையான மனிதர். எப்பவாவதுதான் அபூர்வமா யாராவது கைடு சர்வீஸ் வச்சுப்பாங்களாம். கோவிலுக்கு  அந்தாண்டை   வழியில்  ஆற்றைக் கடக்காமல் வர இன்னொரு ரோடு இருக்காம். நாம்தான்  அதைக் கோட்டை விட்டுட்டு  (சாவு பின்னே வந்ததாலா?) இந்தாண்டை கிராமத்துக்குள் வந்துட்டோம். நல்லதாப் போச்சுன்னே வச்சுக்கலாம்.
'இப்போ ஆத்துலே தண்ணீர் ரொம்பக் கம்மி. முழங்காலளவு இருந்தாலே அதிகம். மழை காலத்துலே கடந்து போகவே முடியாத அளவு வெள்ளம் இருக்கும். இந்தக் கரை படிக்கட்டுகள் வரை  வெள்ளம்தான்'னார். தண்ணீர் குறைவாக இருந்ததால் மணல் பகுதியில் அங்கங்கே நீண்டு வளர்ந்துவரும் கோரைப்புல்  கூட்டம்.  எனக்கு துவாபரயுகத்தில்   த்வாரகையின் கடற்கரையில் இப்படித்தான்  முளைச்சு வந்துருக்குமுன்னு தோணுச்சு. யாதவர்களில் அழிவுக்குக் காரணமான கோரைப்புல்!
தக்ஷிணகாசின்னு இந்த இடத்துக்குப் பெயர்.  இப்ப நாம் கோவிலுக்கு முன்னால் இருக்கோமே  இது விஷ்ணு காசி.  இடப்பக்கம் ப்ரம்ம காசி. வலதுபக்கம்  ருத்ர காசின்னார்.  காசியில் தர்ப்பணம் செய்தால், அந்திம ஸம்ஸ்க்காரம் செஞ்சு ஆற்றில் சாம்பலைக் கரைத்தால் என்னென்ன பலன்கள் உண்டோ அவை அத்தனையும் இங்கே செஞ்சாலும்  கிடைச்சுருமாம்.

ஆமாம்ன்னு சொல்றதைப்போல்  அஸ்தி வச்ச பானை ஒன்னு மிதந்து காமிச்சது!
அமாவாசைகளில் கூட்டம் அதிகமா இருக்கும். தோஷ பரிகாரம் செய்ய வர்றவங்க தண்ணீரில் முங்கி எழுந்த கையோடு உடுத்தி இருக்கும் வஸ்த்ரங்களை இங்கேயே களைஞ்சு போட்டுட்டுப் போயிருவாங்க. அதெல்லாம் குப்பல்குப்பலா சேர்ந்துருமுன்னு சொன்னார்.
ஆத்தைக்  கடந்து குன்றின்மேல் ஏறிப்போறோம்.  ருத்ர பாதம் இருக்கும்  இடம்னு  வெளியிலேயே இருக்கும் சந்நிதிக்குள் போனோம்.  சின்ன பள்ளத்தில் ஒரு பாறை. அதில் கால்தடம் இருக்குன்னு நம்பிக்கை!
சந்நிதிக்கு வெளியே இருக்கும் சுவரில் யாரோ சாமிகிட்டே போயிட்ட என் டி ஆர் படத்தை வச்சு மாலை போட்டுட்டுப் போயிருக்காங்க. அவர் படத்தை ருத்ரன் சந்நிதியில் வைக்காம கிருஷ்ணன் சந்நிதியில் வச்சால் பொருத்தமா இருக்குமே!

வெளியே இருக்கும் மண்டபத்தில் ஒரு புள்ளையார்.  சந்நிதிகளுக்குள்ளே......   ஒன்னுமில்லை பாழடைஞ்சு கிடக்கு:-(


இன்னும் கொஞ்சம் படிகளேறி  மேற்கு பார்த்த அஞ்சு நிலையுள்ள கோபுரவாசலுக்குள் நுழையறோம். பலிபீடம், கொடிமரம் தாண்டி அந்தப்பக்கம் ஆளுயர  மேடை போன்ற அமைப்பில் கருவறைகள்.  நீங்க  உள்ளே போய் சாமி கும்பிட்டு வாங்கன்னு சொல்லி பாஷா வெளியே நின்னுக்கிட்டார்.

அஞ்சாறு  படிகள் ஏறி உள்ளே போறோம். லக்ஷ்மி சமேத  ஸ்ரீ சென்னகேசவ ஸ்வாமி (மட்டும்) அட்டகாசமான உடையில் நின்ற கோலம்! வேஷ்டியின் பட்டையான பார்டர்  ரெண்டு  கால்களிலும்  வி ஷேப்பில்  வரிசைவரிசையா வர்றமாதிரி ஒரு பஞ்சகச்சம்!  எட்டடி உயரத்துக்குக் குறைவா இருக்க சான்ஸே இல்லை!

தீபாராதனை காமிச்ச பட்டர் ஹரின்னு சொல்லி அறிமுகப்படுத்தினார் கேசவனை:-)

அடுத்த சந்நிதியில்  ஹரன்!  சிவன் லிங்க உருவில். பெயர் உமா மஹேஸ்வரர்! எதிரே  மண்டபத்தில்  ரெண்டு நந்திகள்! ஒன்னு பெருசு இன்னொன்னு செல்லம்போல் சின்னது.  தம்பதி நந்திகளாம்! இங்கேயும் தீபாராதனை ஆச்சு.

ஹரிஹரன் கோவில் என்ற பெயர்னு  சொன்னார் அர்ச்சகர்.

வெளியே இறங்கி வந்து காத்திருந்த பாஷாவுடன்  பிரகாரம் சுற்ற ஆரம்பிச்சோம். சிவன் சந்நிதி ஒன்னு வெளியிலும் இருக்கு.  பூட்டிய இன்னொரு சந்நிதியில் அம்பாள்.  இருட்டில் ஒன்னும் தெரியலை.  ஆனால் ஹரியும் ஹரனும் உள்ள மேடைக்குப் பின்புறம்   வந்தால்..... !!!  அற்புதங்கள் எல்லாம்  இங்கேதான்! சந்நிதிகளுக்குப் பின்புறம் சகலமும் அழகோ அழகு!

சின்னச்சின்ன பேனல்கள்தான். 1அடி அகலம், 2 அடி நீளம் இருக்கும் கற்களில்  கண் வச்சால் மீட்டெடுப்பது கஷ்டம்! அடடா....   சோம்பல் பட்டுக்கிட்டு நல்ல கேமெரா கொண்டுவராமல் போயிட்டோமேன்னு நொந்துக்கிட்டேன்.

சிற்பங்களின் அழகை விவரிக்க என்னிடம் இருக்கும் சொற்கள் போதவே போதாது... என்னமா  செதுக்கி இருக்காங்க.....  பேசாம  நான் பெற்ற இன்பம் கணக்கில்  இன்னொரு ஆல்பம் போட்டு லிங்க் கொடுத்தே ஆகணும்!

சுவற்றில் ஒரு இடத்துலே  கல்லை உடைச்சு வச்சுருப்பதைப் பார்த்ததும் (நல்லவேளை அங்கே சிற்பம் ஒன்னும் இல்லை!) திருட்டு சம்பவம் பற்றிச் சொன்னார் பாஷா.  கல்லை உடைச்சு நகர்த்திக்கிட்டு இருக்கான் திருடன். அதே நொடியில்  கிராமத்தலைவருக்கு தூக்கத்தில் தூக்கி வாரிப்போட்டு என்னவோ  தோணியிருக்கு. நாலைஞ்சு ஆட்களுடன் கோவிலுக்கு வர்றார். இங்கே அடுத்த கல்லை கிளப்பும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.  ஆட்களைப்பார்த்ததும் ஓடப் பார்த்த திருடனைப் பிடிச்சுக்கட்டிவச்சு 'கடுமையா' தண்டிச்சுட்டாங்க. இதுவே மத்த திருடனுங்களுக்கு  எச்சரிக்கையா இருக்கட்டுமுன்னு  கல்லை இப்படியே வச்சுட்டாங்களாம்.   எந்தக் காலமுன்னு  வருசத்தை எழுதி வச்சுருக்கப்டாதோ?

என்னமா வாசிக்கறேடா கண்ணா......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...........
பாசுபதம் வாங்கிவரப்போன அர்ஜுனனுடன், அந்த ஈசனே வேடன் உருவில் வந்து  ஒரே வராகத்தை இருவரும் அம்பால் அடிக்க,  யாருக்கு அந்த வராகமுன்னு வாக்குவாதம் வந்து  சிவனுடன்  மற்போர் செஞ்சதாக ஒரு சம்பவம்  மகாபாரதத்தில் இருக்கு பாருங்க.....
இந்தாப்பா... இதுதான் என்  கணையாழி. அடையாளத்துக்கு இத்தை வச்சுக்க...... சீதையைக் கண்டால் காமிச்சுரு. அப்பத்தான் நம்புவாள்.....
ஏம்ப்பா அர்ஜுனா....  சண்டைக்கு வந்துட்டு  இப்படி மாட்டேன்னு நின்னா எப்படி? நான் சொல்லும் உபதேசத்தைக் கேள்!
எங்கே இதே மாதிரி  போஸ் கொடுத்து ஆடு, பார்க்கலாம்..............
நிம்மதியா உக்கார்ந்து வயித்தை இப்படித்தான் கிழிக்கணும்!
ஸர்ஃப் போர்டுலே போறாரு பாருங்க வராஹர்!
பலராமனும் க்ருஷ்ணனும்!
வாலி சுக்ரீவனா?  யாருக்கு நோஸ்கட் ?
இதுக்குத்தான் செருப்பில்லாம நடக்காதேன்னு சொன்னேன். இப்பப் பாரு  முள்ளு குத்திக்கிச்சு :-(

ஹைய்யோ.........   விட்டால் முடிவே இல்லாமச் சொல்லலாம் போல!

 காலைப் பெயர்த்தெடுத்து அந்தாண்டை போறோம்.   துளசி  நிக்கறாள். தாயாருக்குத் தனி சந்நிதி. நம்ம பாஷாவிடம்  தாயார்  சந்நிதியான்னால், ஆமாம் கமலவல்லின்னார். பதிவு எழுதும் சமயம் திக்கித்திணறி எழுத்துக் கூட்டினால்..........   ஹா    'ராஜலக்ஷ்மி அம்மவாரு!'  எதுக்கும் நம்ம தெலுகு ஞானம்  சரியான்னு  பார்த்துக்கலாமேன்னு  தோழியிடம் கேட்டேன்.

 எஸ்ஸூ !   நூத்துக்கு நூறு!

அப்ப....... கமலவல்லி? ஙே............
தாயார் சந்நிதிக்கு நேரெதிரா கொஞ்ச தூரத்தில் ஒரு நாலுபடி இறக்கத்தில் ஆஞ்சி! கைகூப்பி  பக்தியில் கண்கள்  மயங்கி........   தாயார் தாரக மந்திரத்தை உபதேசிச்ச சமயம்.  கேட்டதும்..... பக்தி பெருக்கெடுத்துருக்கு! (பாஷா சொன்னதுதான்!)

PINகுறிப்பு : பதிவின் நீளம் கருதி  இப்போ ஒரு ஸ்டாப். அடுத்த பதிவிலும் புஷ்பகிரிதான்!

தொடரும்.............:-)




18 comments:

said...

புஷ்பகிரி இந்த கோவிலுக்கு போனதாக என்னோட டயரிலே ஒரு குறிப்பு இருக்கு. இருந்தாலும் இந்த அளவுக்கு டீடைல் ஆ கண்டிப்பா நான் பார்க்கலை.

ஆஞ்சி அற்புதம்.

பெருமாள் பிரமாதம்.

ராஜலக்ஷ்மி அமமாவாறு ஆ ?? !!

அது எங்க ஊட்டு அரசியின் அம்மா ஆச்சே !!

சுப்பு தாத்தா.

said...

நீளமாக இருந்தாலும் பொறுமையாகப் படித்தேன். சிற்பங்களை ரசித்தேன். நன்றி.

said...

சிற்பங்கள் போட்டோவும் விளக்கமும் சூப்பர்

said...

சிற்பங்கள் போட்டோவும் விளக்கமும் சூப்பர்

said...

அருமை

said...

நந்திலால் பக்கமா? நாங்க நந்திலால் போனாமே!
அழகான கோவில் படங்கள் எல்லாம் மிக அழகு.

said...

சிற்பங்கள் அருமை.

said...

இனிமே கிரிவலம் வருவதானால் உங்களோட தான் வரணும். அற்புதம் .ஆறு, ஆஞ்சனேயர், சகல யுத்தங்களூம் காப்ஷன் களும். பிரமாதம். பெருமாள் மிக அழகு. தாயார் சன்னிதியைப் பூட்டிவிட்டார்களே. அதுவும் ராஜலக்ஷ்மி.

said...

சிற்பங்கள் மிக மிக அருமை. ஆற்றுக்கு நடுவுல கோயில். எனக்கு இருக்கங்குடி மாரியம்மன் கோயில் நினைவுக்கு வருது. வைப்பாறு கடந்துதான் போகனும். மாட்டு வண்டியில் கடந்து போனதும்.. நடந்து கடந்து போனதும் நினைவுக்கு வருது.

கோவைக்காய் விலை கொறஞ்ச காய். அந்தப் பக்கத்துல நிறைய விளையும் போல. கோவைக் கூட்டு, கோவை பொரியல், கோவை சாம்பார்னு அடுக்கீட்டாங்களே :)))))))))))

said...

வாங்க அத்திம்பேர்.


டிஜிட்டல் கேமெரா வந்தபின் அழகை சிறைபிடிச்சு டீடெய்லா ரசிப்பது எளிதாப் போயிருக்கே:-)

உங்களுக்கு மாமியார் ராஜலக்ஷ்மின்னா, நம்ம வீட்டுலே மஹாராணி ராஜலக்ஷ்மிதான் எங்களை விரட்டி வேலை வாங்கறாள் :-) ரஜ்ஜுவின் அடிமைகள் நானும் கோபாலும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பொறுமைக்குப் பாராட்டுகள்!

said...

வாங்க அபயஅருணா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

இது கடப்பாவுக்குப் பக்கம். 20 கிமீதான்.

நந்தியால் இங்கிருந்து 122 கிமீ தூரம். நாங்க போகலை.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

பட்டரிடம் கேட்டுருந்தால் சந்நிதியைத் திறந்துருப்பார். ஆனால் தோணலை. ராஜலக்ஷ்மின்னதும் நம்மகிட்டே இருக்காளேன்னு ...... :-)

சிற்பங்கள் ஒவ்வொன்னும் அற்புதம். ஒரு நாலு மணிக்குப் போயிருந்தோமானால் இன்னும் ரசிச்சுப் பார்க்க நேரம் இருந்துருக்கும்.

இவ்ளோ இருக்கு அங்கேன்னு தெரியாதேப்பா. இல்லைன்னா ஒரு நாள் ஒதுக்கி இருக்கலாம்.

said...

வாங்க ஜிரா.


இருக்கங்குடி மாரியம்மன் கோயில் எங்கே இருக்கு? தூத்துக்குடி அருகிலா?

said...

டீச்சர்.. இருக்கங்குடி மாரியம்மன் கோயில் சாத்தூருக்கு அருகில் இருக்கு.விருதுநகரிலிருந்தோ கோவில்பட்டியிலிருந்தோ சாத்தூருக்குப் போய்ப் போகனும். பக்கம் தான்.

said...

தகவலுக்கு நன்றி ஜிரா!

அந்தப்பக்கம் போகத்தான் வேணும். 108 தரிசனங்களில் திருத்தண்கால் விட்டுப்போச்சு.

விருதுநகர் போகணும். நம்ம காமராஜ் ஐயா வீட்டையும் தரிசிக்கணுமுல்லே!