Wednesday, April 13, 2016

குல்லாப் போட்ட நவாபு.... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 20)

வெறும் ரெண்டரைக் கிலோ மீட்டர் பயணம்.ஊருக்குள்ளேதான் இருக்கு. பழைய கடப்பான்னு சொல்றாங்க இந்தப் பகுதியை.  போற வழியில் சரியான தெருவிளக்கு இல்லை. மசமசன்னு இருக்கும் சின்ன தெரு. ஒரு கோவிலையொட்டி இருக்கும் இடத்தில்  நாலைஞ்சு  சமாதிகள் போல இருக்கு. இல்லை.... சந்நிதிகளா?  தெரியலை. ஆனால் ஒவ்வொன்னிலும் அகல்விளக்கு மாடம் வேற வச்சுக் கட்டி இருக்காங்க. இது ஒரு இந்துக்கோவில்தான்.

போக்குவரத்து  நடக்காம  அப்படியே நிக்கறோம். கொஞ்ச தூரத்துலே கொஞ்சூண்டு வெளிச்சம். கூட்டமா மக்கள்ஸ்.  எதோ சாவு போலன்னு  நம்மவர் சொல்றார்.  சீனிவாசன் இறங்கிப்போய் விசாரிச்சுக்கிட்டு (!) வந்தவர்,  சாமி ஊர்வலம் னு சொன்னார்.  பொறுமையா இருந்தோம். வேறவழி?

 முன்னாலே யாரோ கூட்டத்தை ஒழுங்குபடுத்தறாங்க போல....வண்டிகள் நகர ஆரம்பிச்சது.   கூட்டத்தின் மையப்புள்ளியைத் தாண்டும்போது  யாரோ  பேசிக்கிட்டு நிக்க அவரைச் சுத்தித்தான் கூட்டம் !  சாமி இல்லேப்பா.....  ஆசாமி!  அரசியல்வியாதியோ என்னவோ?

வண்டிகளின் மேல் கூரையில்  தடதடவென்ன தட்டிக்கிட்டே  வழி ஏற்படுத்திக் கொடுக்கும் சேவையைச் செஞ்சுக்கிட்டு இருந்த இளைஞர்கள் காமிச்ச பாதையில் போறோம். கொஞ்சதூரத்தில் தெரு இன்னும் குறுகலா இருந்ததால்   நிதானிச்சுப் போகும்படியா ஆச்சு. ரெண்டு வண்டிகள் எதிரும் புதிருமா வர முடியாது. தெருவின் ரெண்டு ஓரத்திலும் திறந்த சாக்கடை. கொஞ்சம் அசந்தா  சாக்கடைப் பள்ளத்தில்  வண்டி இறங்கிரும்............   நமக்கு முன்னால் இருந்த வண்டியில் இருந்து  பிள்ளைகுட்டிகளுடன் புர்க்கா போட்ட ஒரு அம்மா இறங்குனதும்,  அவுங்க  வண்டி முன் நகர்ந்து போயிருச்சு. இடப்பக்கம் இருந்த  கேட்டைக் கடந்து  பெரிய  வாசலுக்குள் போறதைப் பார்த்து  இங்கெதான் இறங்கணும்போலன்னு  நாங்களும் இறங்கினோம். சீனிவாசன் பார்க்கிங் இருக்கான்னு பார்க்கப் போனார்.

இன்னும் கொஞ்சம்பேர் பெரிய வாசலுக்குள் போறாங்க. நாங்களும் பின்னாலேயே போய் அந்தப்பக்கம் வெளியே வந்தால்  கண்ணெதிரில் பெரிய கார்பார்க். இடதுபக்கம் மசூதி !  இங்கே வர்றதுக்கு  நல்ல வழி ஒன்னு இருக்கு. அந்தத் திருப்பத்தில்தான் கூட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க:-( நல்ல இடம் பார்த்தாங்க... போங்க.

எல்லோரும் போறதைப் பார்த்து நாங்களும் உள்ளே போறோம். அமீன் பீர் தர்கா!  வாசலிலேயே ஆண்களுக்குத் தொப்பி ஒன்னு கொடுக்கறாங்க. ஓலைத் தொப்பி. கிண்ணம்போல இருக்கு. சட்னு எனக்கு 'குலேபகாவலி பாட்டு  நினைவுக்கு வந்துச்சு! எனக்கு இருக்கவே இருக்கு துப்பட்டா.
 வாசலைக் கடந்தா இடதுபக்கம் ஒரு ஓரத்தில் தேங்காய் உடைச்சுக்கிட்டு இருக்காங்க. பக்தர்கள் கொண்டு வந்து தர்றாங்க.  முன்பக்க வாசலில் வந்திருந்தால் பூஜை சாமான் கடைகள் இருந்திருக்கும் போல. நாம்தான் விஷயம் தெரியாமல் பின்பக்க வழியில் வந்துருக்கோமே..:-(

அப்போ ஒரு இளைஞர் (வயசு ஒரு 20 இருந்தால் அதிகம்) வாங்கன்னு  சொல்லி, முதல்முறையா வந்துருக்கீங்களான்னார். ஆமாம்னு தலையாட்டுனதும், வாங்க உள்ளே கூட்டிப்போய் காமிக்கிறேன்னார். நாங்க பின் தொடர்ந்து போறோம்.  நாலு பக்கங்களிலும் மினாரா வச்சு நடுவில்  வெங்காய டிசைனில் விமானம்  வச்சுருக்கும் தனி அறைபோல் இருந்த சந்நிதியை முதலில்  9 முறை வலம் வரணுமுன்னு சொல்லி எங்களோடேயே அவரும் வலம் வந்தார்.  நாலுபக்கத்தில் அடுத்தடுத்து ரெண்டு பக்கங்களில் மேற்கிலும் தெற்கிலுமா  அலங்கார நிலைப்படிகள் வச்சு  உள்ளே ஒரு சமாதி இருந்தது. சமாதிக்கு மேல் அலங்கார சரிகை விரிப்பு போட்டு பூக்களால் அலங்கரிச்சு இருக்காங்க.
ஒன்பது முறை ஆனதும்  'ஒரு நிலைவாசல் பெண்களுக்கு மட்டும். இங்கே விழுந்து கும்பிட்டுக்கணுமு'ன்னு சொல்லிட்டு கோபாலை அடுத்த நிலைவாசல் பக்கம் கூட்டிப்போனார் இம்ரான். எனக்கு முன்னே அங்கே இடம்பிடிச்சு உக்கார்ந்திருந்த புர்க்கா அணிந்த பெண் நகரவே இல்லை.  சன்னமான குரலில் என்னென்னமோ சொல்லிக் கைகளைக் கூப்பி தலையை நிலைவாசப்படியில் வச்சு  வேண்டிக்கிட்டு இருக்காங்க.  இந்தப்பக்கம் நின்ன  இன்னொரு கோவில் நபர்,' எல்லோரும் வரிசையில் காத்திருக்காங்கம்மா... நீங்க  கொஞ்சம் எழுந்து  வாங்க'ன்னு  மன்றாடறார். அந்தம்மா நகரவே இல்லை.  பாவம்.... என்ன கஷ்டமோ.........
நான் நின்ன இடத்தில் இருந்தே கும்பிட்டுக்கிட்டு, வரிசையில் இருந்து விலகி வந்து நம்மவரைத் தேடிக்கிட்டு இருந்தேன். அதுக்குள்ளே இம்ரான் வந்து என்னை அடுத்த நிலைப்படியாண்டை (ஆண்களுக்கான வாசல்) கூட்டிப்போனார்.  கோபாலும் அங்கேதான் இருந்தார். ஆண்கள் மட்டும்  உள்ளே போய் கும்பிடலாமாம். அங்கே ஒருத்தர் கையில் சொம்பு போல் ஒரு  பாத்திரம் வச்சுக்கிட்டு  அதில் இருந்து  ஒரு சின்ன ஸ்பூனால் என்னமோ  கொடுக்கறார்.
எல்லோரையும்போல அதைக் கைநீட்டி உள்ளங்கை குவிச்சு வாங்கினோம்.  தலையில் தேய்ச்சுக்கச் சொன்னார் இம்ரான். தேய்க்கும்போதுதான் தெரியுது  வாசனை. நல்லாக் காய்ச்சிய நல்லெண்ணெய்!
அடுத்து  இடதுபக்கம் கொஞ்சம் தள்ளி இருந்த இடத்துக்குப் போகணும்.  அங்கே ஒரு  பெரிய  குண்டான்போல இருந்த தொட்டியில்  ஊதுபத்தி புகையுது. பக்தர்கள்  வத்தியைக் கொளுத்தி வைக்காமல் குண்டத்துக்குள் அப்படியே போட்டுட்டுப் போறாங்க. அதனால் முழு வத்தியும் குச்சியோடு எரிஞ்சு  ஒரே புகை.
இந்தப்பக்கம்  ஒருத்தர்  தர்றதை வாங்கிக்கணும்.  நீட்டிய கையில்  ஒரு சிட்டிகை சாம்பல் (விபூதி?)  அதை வாயில் போட்டுக்கணும். அடுத்து சின்னச்சின்ன  குட்டி டம்ப்ளரில்  கொஞ்சம் தண்ணீர். அஞ்சு ஸ்பூன் அளவு இருக்கும். அதை  குடிச்சுடணும். தீர்த்தம் !   எதிர்த்தாப்ல இந்தப்பக்கம்  ஒரு இடத்தில் ஏகப்பட்ட  சமாதிகள் சின்னதும் பெருசுமா!
 இந்தக் கோவில் அமீன் பீர் தர்கா Ameen Peer Dargah. கடப்பாவில் இதை பெத்த தர்கான்னு Pedda Dargah சொல்றாங்க. 'நீங்க தர்கா போயிருக்கீங்களா'ன்னு கேட்டார் இம்ரான்.  ஃபடே(ஹ்)பூர் ஸிக்ரி  ஸலீம் சிஷ்டி பாபா தர்காவுக்கும்,  அஜ்மெர் தர்கா ஷெரீஃபுக்கும் போயிருக்கோமுன்னு சொன்னேன்.

அப்ப என்கூட வராதவங்க இப்ப இங்கே போய் பார்த்துக்கலாம்.


ஃபடே(ஹ்)பூர் ஸிக்ரி . ஸலீம் சிஷ்டி பாபா தர்கா 


அஜ்மெர் /அஜ்மோரா  தர்கா ஷெரீஃப். பகுதி 1

தர்கா ஷெரீஃப்   பகுதி 2 

இந்த தர்காவைப் பத்திச் சொல்லுங்கன்னதும்  நம்ம இம்ரான் சொன்னதை  நம்ம நடையில் இப்போப் பார்க்கலாம்.

Khwaja Peerullah Hussaini ஒரு சூஃபி முனிவர்.  இவர் நம்ம முஹம்மது நபி அவர்களின் வம்சாவழியில் வந்தவர். இவருக்கு  தெய்வசக்தி நிறைய இருக்கு.  சிஷ்டிபாபா தர்கா உட்பட பல இடங்களுக்கும் புனிதயாத்திரை செய்தவர்  இங்கே இந்தப்பகுதியில் வந்ததும் இங்கேயே தங்கிட்டார். அன்பு, சமாதானம், சமூக ஒற்றுமை பற்றியெல்லாம் மக்களுக்கு எடுத்துச்சொல்லிக்கிட்டு இருந்தார். இவரிடம் தங்கள்குறைகளைச் சொன்னவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம்  நீங்க ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா இவருடைய புகழ் பரவத் தொடங்குச்சு.

இவருக்கு ரெண்டு மகன்கள். மூத்தவர் சின்ன வயசுலேயே சாமிகிட்டே போயிட்டார். கல்யாணம் ஆனவர்தான்.  ஆனால்  பிள்ளைகள் இல்லை. இளையவர்  Arifullah Hussani-I  அவர்களுக்குத் தகப்பனைப்போலவே தெய்வீக அருள் கிடைச்சு ஆன்மிகத்துலே இவரும் ரொம்பப் புகழ் பெற்றவரானார்.

மத வித்தியாசம் பார்க்காம  எல்லோரும் இவுங்களை வந்து பார்த்துக் கும்பிட்டுப் பலன் அடைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  இதைப் பொறுக்கமாட்டாத சிலர்.....  ஒரு நாள் இவர்கிட்டே வந்து, எதாவது அற்புதம் நிகழ்த்திக் காமிச்சாதான் உங்களை நம்புவோம்னு சொல்ல இவர் இறைவனை வேண்டுனதும் பூமிஅப்படியே பிளந்து  இவரை உள் வாங்கிருச்சு.  பார்த்துக்கிட்டு இருந்தவர்கள் பிரமிச்சுப் போயிட்டாங்க.  சம்பவம் நடந்த மூணாம் நாள்  அந்தப்பக்கம் போனவங்க  இவர் அவருடைய வழக்கமான இடத்தில் இருந்து சாமி கும்பிட்டுக்கிட்டு இருப்பதைப் பார்த்து அதிசயிச்சுட்டாங்களாம்!

இப்பதான் எனக்கு என் சின்னவயசு காலத்தில் கேட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வருது. அப்போ நாங்க வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்தோம். அங்கே ராவுத்தர்கள் அதிகம். தமிழ்தான் பேசுவாங்க. கருப்பு புர்க்கா இல்லாத காலம். வெள்ளையிலொரு நீளமான துணியை உடம்பைப் போர்த்தித் தலையை மூடி வச்சுக்கிட்டு வெளியே போய் வருவாங்க பெண்கள். அந்த வெள்ளைத் துணியில் ஓரத்தில் லேஸ் பின்னி அலங்கரிச்சு வச்சுருப்பாங்க கொஞ்சம் இளவயதுப் பெண்கள்.

ஒரு இஸ்லாமிய வீட்டில்  அக்காவும் தம்பியுமா ரெண்டு பேர். தம்பி ரொம்பச் சின்னவன்.  அக்காவுக்கு தெய்வபக்தி அதிகம்.  குரான் எல்லாம் படிச்சு  மனப்பாடமாச் சொல்வாங்களாம். தினம் கொஞ்ச நேரம் தம்பிக்குக் குரான் ஓதச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருப்பாங்களாம்.  அக்காவுக்குக் கல்யாணம் செய்ய வீட்டுலே பேச்சு நடந்து  கல்யாணத்துக்குச் சம்பந்தம் பேசி முடிச்சுட்டாங்க.

அக்காவுக்கு கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்லை. இறைவழிபாட்டுலேயே காலம் போக்க ஆசை. வீட்டுலே சொன்னாக் கேப்பாங்களா?  ஒரு நல்ல நாள் பார்த்து, அன்றைக்கு இரவில் கல்யாணம் நடக்கப்போகுது. சொந்தபந்தம் எல்லாம்  வந்து  கூடி இருக்காங்க.
சாமி கும்பிட்டுட்டு வரேன்னு  அறைக்குள்ளே போன அக்கா, மனம் உருகி  அவுங்க சாமியை வேண்ட  அறையின் மூலை அப்படியே பிளந்து அவுங்களை உள்வாங்கிருச்சு. ரொம்பநேரம் வெளியே வரலையேன்னு  உள்ளே போய்பார்த்தால் ஆளைக் காணோம்! அறையின் மூலையில் தரையில்  அவுங்க உடுத்தி இருந்த சேலையின் முந்தானை முனை கொஞ்சூண்டு தெரியுது.

ஐயோன்னு  அலறித் துடிக்கறாங்க. இதுலே தம்பிப் பையன் , அழுதுகிட்டே அக்கா, எனக்கு முழுசுமாச் சொல்லித் தர்றதுக்குள்ளே இப்படி  காணாமல் போயிட்டேயேன்னு  கதறி அழுததும்,   'உனக்குப் பாடம் முடியும்வரை எப்பவும்போல தினமும் சொல்லித்தருவேன்'னு ஒரு குரல் கேட்டதாம்.

அப்போ முதல் தினமும் குரான் சொல்லித்தரும் சமயம் பூமிக்குள்ளில் இருந்து குரல் கேட்குமாம். இப்படியே பையன் படிச்சு முடிக்கும்வரை வந்த குரல் அதுக்கப்புறம் நின்னு போச்சாம். அதுவரை அறை மூலையில் தெரிஞ்சுக்கிட்டு இருந்த சேலை முந்தானையும் பூமிக்குள் போயிருச்சு.


சங்கத்தலைவர்னு நான் கூப்பிடும் ராவுத்தர் தாத்தா ஒரு முறை நம்ம திண்ணையில் தினமும் நடக்கும் சத்சங்கத்தில்  அம்மா & மேரியக்காவிடம் சொன்னதை 'ஆ'ன்னு கேட்டுருக்கேன். சர்வமதமும் சம்மதம் என்று ஒரு பதிவில் ராவுத்தர் தாத்தா பற்றி எழுதி இருக்கேன் :-)
Hazarat Khwaja Peerullah Hussaini  அவர்களைப்பற்றி இம்ரான் சொன்னதைச் சொல்லிக்கிட்டே இருந்தவ வத்தலகுண்டுக்குப் போயிட்டேனே......  ஸாரி கேட்டோ.... 


பலருக்கும் காட்சி அளித்த  பீர் மாலிக் அவர்கள் இங்கே இதே இடத்தில் ஜீவசமாதி ஆகிட்டார். சம்பவம் நடந்தது  மொஹரம் மாசம் பத்தாம் நாள் என்றபடியால் இப்பவும்  அந்த நாளில் பெரிய திருவிழா நடக்குது!

அவருடைய மகனும் Arifullah Hussaini II இங்கேதான்  மக்களுக்கு சேவை செய்தபின் சாமிகிட்டே போயிருக்கார்.
ரெண்டு சூஃபி ஞானிகளின் சமாதி இருக்கும் இந்த தர்காவில் வேண்டிக்கிட்டா நினைச்சது நினைச்சபடி நடக்கும் என்ற நம்பிக்கை  இருப்பதால்  இந்து, முஸல்மானென்ற பேதமில்லாமல் எல்லோரும் வந்து கும்பிட்டுக்கிட்டுப் போறாங்க. !  உண்மையான மத நல்லிணக்கம் இது! அதுவும் வியாழன் வெள்ளிக்கிழமைகள் ரொம்ப விசேஷமாம்.

இன்றைக்கு வெள்ளிக்கிழமையா நமக்கும் அமைஞ்சது பாருங்க !   ரொம்ப மகிழ்ச்சிதான்.

பெரியவர் சமாதிக்கு எதிரே இன்னொரு கட்டிடத்தில்  மகனுடைய சமாதியும் இன்னும் ஏராளமான சமாதிகளுமா இருக்கு.  அங்கேயும் உள்ளே போக பெண்களுக்கு அனுமதி இல்லை. வெளியில் இருந்து முக்கியமானவைகளை தரிசிக்க ஏற்பாடு இருக்கு. சில குறிப்பிட்ட இடங்களில் பெண்கள் வணங்கலாம். ஒரு பெரிய ஜன்னல் போல டிஸைன் செஞ்சுருக்காங்க.
'அங்கே முழங்காலிட்டுத் தலை குனிஞ்சு வணங்கணும் ஆண்ட்டி'ன்னார் இம்ரான். அதே போலாச்சு. மயில்பீலிக்கொத்து நம் தலையைத் தடவி ஆசீர்வதிக்குது! வரிசையா ஒரு மூணு  ஜன்னல்.
'கொஞ்ச நேரம் இங்கே உக்காருங்க ஆண்ட்டி. நான் அங்கிளை அடுத்த பக்கத்துக்குக் கூட்டிப்போறேன்'னு சொல்லி இப்ப பெண்கள் வெளியே இருந்து கும்பிட்ட பெரிய கட்டடத்துக்குள் கூட்டிப்போனார் இம்ரான்.

'பீர் மாலிக்' வழி வந்த வம்சாவளியினரின் சமாதிகள்தான் உள்ளே இருப்பவை. வெளியில் நாம் பார்த்தவைகளும் அவர் சந்ததியினருடையதே. இப்பவும் அந்த சந்ததியினர்தான் இங்கே பூஜை புனஸ்காரத்தைப் பார்த்துக்கறாங்க. மொத்தக் கூட்டத்தில் இவுங்களை சுலபமாக் கண்டுபிடிக்கும் வகையில் காவித் தொப்பி, காவித் துண்டு, காவி உடுப்புன்னு போட்டுக்கிட்டு இருக்காங்க.  நம்ம இம்ரான் காவி இல்லை. கல்லூரி மாணவர். இங்கே வாலண்டியரா சேவை செய்யறார்.  இவரைப்போல் பலர்  இங்கே வழிகாட்டிகளா இருக்காங்க.

முதலில் இங்கே படம் எடுக்கலாமான்னு புரியாமல்  ச்சும்மா இருந்தேன். அப்புறம்  இம்ரானிடம்  கேட்டப்ப,  எடுத்துக்கலாமுன்னு சொன்னார். கோபால் வரும்வரையில் அங்கே உக்கார்ந்து நடப்பவைகளைப் பார்த்தபடி க்ளிக்ஸ்.  இடதுபக்கம் விளக்கு ஏற்றிக்க ஒரு மேடை வச்சுருக்காங்க. நம்ம கோவில்களில் இருப்பதைப்போல் நெய் விளக்கு , ஊதுவத்தி வாங்கிவந்து ஏத்தறாங்க  இஸ்லாமிய மக்கள்ஸ்.
இதுவரை நாம் தரிசிச்ச  மற்ற தர்காக்களில், எண்ணெய், விபூதி, தீர்த்தம், நெய்விளக்கு, தேங்காய் உடைக்கிறதுன்னு  எந்த சாங்கியங்களும் பார்க்காததால்  கொஞ்சம் வாய் பிளந்து நின்னது உண்மை.
அதுக்குள்ளே கோபாலும் இம்ரானும் திரும்பி வந்துட்டாங்க. தரிசனம் நல்லா நிறைவா இருந்ததான்னு கேட்ட இம்ரானிடம் ஆமாம்னு சொன்னோம்.  'இங்கே வந்ததுக்கு ரொம்ப நன்றி. நான் போய் புதுசா வர்றவங்களுக்கு வழி காட்டணும்.  உத்தரவு வாங்கிக்கறேன்'னு சொன்னார் இம்ரான்.  அவரிடம் கேமெராவைக் கொடுத்து நம்மைக் க்ளிக்கச் சொன்னேன். நம்ம பக்கத்தில் உக்கார்ந்திருந்தவங்க  நகர்ந்து  போகப் பார்த்தாங்க.  நம்மைப்போல் வெளியூர் பயணிகள்தான். பரவாயில்லை நீங்களும் படத்தில் இருக்கணுமுன்னு சொன்னேன்:-)
இந்த இளைஞர்களின் சேவையைப் பாராட்டத்தான் வேணும். நம்ம கோவில்களில் இப்படிக் கொண்டுபோய்க் காட்டும் ஸேவை இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்!

நாங்களும் எழுந்து எதிரில் இருக்கும் பெரிய கட்டிடத்தைச் சுத்திக்கிட்டு அந்தப்பக்கம் போனோம்.  அரபுநாடுகளைக் குறிப்பதைப்போல ஈச்சமரங்களை அங்கங்கே வச்சு   ஒரு பெரிய முற்றம். அங்கே குடும்பம் குடும்பமா மக்கள் உக்கார்ந்துருக்காங்க. இங்கேதான் தர்காவின் முன்வாசல்  இருக்கு!
 
பெரிய கட்டிடத்தின் உள்ளே  இருக்கும் சமாதிகளை வெளியே இருந்து க்ளிக் செஞ்சுக்கிட்டேன்.


வெளிவரும் வாசலுக்குப் பக்கம் ஒரு மசூதியும் இருக்கு.  அதன் மறுபக்கத்தை தர்காவின் உள்ளே இருந்தே பார்க்கலாம். சின்னத் தடுப்பு வச்சுருக்காங்க. ஆண்கள் தொழுகைக்கு  இங்கிருந்தே  தடுப்பைக் கடந்து அங்கே போகலாம்.
காலையில் 6 மணி முதல் இரவு 10 வரை தர்கா தினமும் திறந்தேதான் இருக்கு. வெள்ளிக்கிழமைகளில் மதியம் தொழுகைக்கான நேரம் என்பதால்   பல மசூதிகளில்  பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை இங்கெ இல்லை.  அங்கே வர்றவங்க அங்கே, இங்கே வர்றவங்க இங்கேன்னு  இருக்கு!

மொஹல்லாய சக்ரவர்த்தி  ஔரங்கஸேப் அரசாட்சியில்  கட்டுன மசூதி. ஆச்சே முன்னூத்தி முப்பத்தி மூணு வருஷம்!

நிம்மதியான மனசுடன் வெளியே வந்து  ஓலைக் குல்லாயைத் திருப்பித்தரும்போது  நம்ம சீனிவாசன் அங்கே நிக்கறார்.  அவர் சுத்திக்கிட்டு இந்தப் பார்க்கிங் கண்டுபிடிச்சு வண்டியை நிறுத்திட்டு உள்ளே வந்து தரிசனம் செஞ்சுக்கிட்டுப் போனாராம். இப்ப நமக்காக வெயிட்டிங்.  'நானும் குல்லாய் போட்டுக்கிட்டு மொதல்முறையா தர்கா வந்தேன்'னார்.

கடப்பா நகரத்தில் மத நல்லிணக்கம் இருக்குன்றதை  இந்த யுகாதி (தெலுகுப் புத்தாண்டு) சமயம் கிடைச்ச ஒரு  வீடியோ க்ளிப் உறுதிப்படுத்தியிருக்கு. அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துருக்கேன்.


மணி ஒன்பதாயிருச்சு. வேறெங்காவது சாப்பிடலாமுன்னு இடம் தேடிப்போனோம்.  ஒரு இடத்தில்  ஃபாஸ்ட் ஃபுட்போல  இருந்துச்சு.  இட்லி ஆப்ட்டது.  நின்னுக்கிட்டே சாப்பிட்டோம்:-)

நாளைக்கு ஒரு நீண்டபயணம் இருக்கு. பொழுதோட போய் தூங்கலாம்.  குட்நைட்!

தொடரும்......:-)


நம் வாசகர்கள் அனைவருக்கும் துளசிதளத்தின் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து(க்)கள்! மதம் ஏதானாலும் மனிதர்கள் ஒன்றுதான்!  மனிதத்தோடு வாழ இறைவன் அருள்புரிய வேணும்!  

10 comments:

said...

நம் கோயில்களுக்குச் சென்றுவரும்போது கிடைக்கும் மன நிறைவினை இப்பதிவினை படித்தபோது உணர்ந்தேன். நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அங்கே போனபோதும், இப்போ இந்தப் பதிவு எழுதும்போதும் எனக்கும் மனநிறைவு ஏற்பட்டது!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

நானும் இந்த தர்க்காவுக்கு
1986 ல் சென்று இருக்கிறேன்.

சில மணி நேரம் அங்கு உட்கார்ந்து இருக்கிறேன்.

நாகை தர்கா போல இதுவும் ஒரு புண்ணிய ஸ்தலம்.

மத வேறுபாடு இன்றி எல்லோரும் வருகின்றனர்.

நினைவு படுத்தியமைக்கு நன்றி. எனது டயரியில் குறிப்பு இருக்கிறது.

சுப்பு தாத்தா.
குல்லா போட்ட கோபால் நவாபு, எங்க துளசி கிட்ட
செல்லாது உங்க ஜவாபு.

மீனாச்சி பாட்டி.

said...

உங்களுக்கும் கோபால் சாருக்கும் இனிய சித்திரைப் பிறப்பு வாழ்த்துகள்.

உங்க பதிவுகளை வெச்சே இந்தியாவில் எங்கெங்க டூர் போகலாம்னு பிளான் போட்டுறலாம் போலிருக்கே.

கடப்பாக் கல்லுன்னு முன்னாடி அடுப்பாங்கரைல மேடை போடுவாங்க. நல்லா கருப்பா இருக்கும் அந்தக் கல்லு. அப்படிப்பட்ட கல் கெடைக்கிற ஊர்ல இப்பிடிப்பட்ட தர்க்கா இருக்குன்னு இந்தப் பதிவு வழியாத் தெரிஞ்சிக்கிட்டேன்.

தாயை நம்பினாத்தான் தந்தைன்னு ஒரு பேச்சு சொல்வாங்க. அது போல நன்மையை நம்பினால் மட்டுமே தெய்வம்னு யோசிக்காமச் சொல்லலாம்.

தர்காக்கள் இஸ்லாமுக்கு எதிரானதுன்னு இப்பல்லாம் கருத்துகளைச் சொல்றாங்க. எது எப்படியோ... எல்லாருக்கும் ஒற்றுமையையும் சமாதானத்தையும் நிலைப்படுத்துனாப் போதும்.

said...

இறந்தவர்களைப் புதைக்கும் இடம் சமாதிதானே. அங்குபோய் வேண்டும் போதும் பெருமாளே காப்பாத்துப்பா என்றுதானே சொன்னீர்கள்.

said...

நல்ல காரியம். நல்லவர்களை வழிபட்டால் நன்மை கிடைக்கும்.

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

எனக்கு இன்னும் நாகை தர்கா போக வேளை வரலை :-(

said...

வாங்க ஜிரா.

கடப்பாவிலே எங்கேயுமே கடப்பாக் கல்லு விற்கும் இடத்தை இந்தப் பயணத்தில் பார்க்கவே இல்லை ! ராஜஸ்தான் பயணத்தில் சலவைக்கல் வெட்டி விற்கும் இடங்களை வழி நெடுகப் பார்த்தது நினைவுக்கு வருது.

இப்பதான் ஒரு பத்துமுப்பது வருசங்களாக இஸ்லாம் மதத்தினர் தீவிரமா இருக்காங்கன்னு நினைக்கிறேன். நான் சென்னையில் இருந்த காலங்களில் புர்க்கா அணியும் பள்ளிக்கூடப்பிள்ளைகளையோ, வேலைக்குச் செல்லும் பெண்களையோ பார்த்த நினைவு இல்லை. என்னுடைய இஸ்லாமியத் தோழிகள் எவருமே புர்க்கா அணிந்ததில்லை. இவ்வளவு ஏன்.... நம்ம பூனா எபிஸோடில் சஃபியா, நீச்சே உம்மா, போப்ளா சவுக் உம்மா இன்னும் பலர் புடவை கட்டி முந்தானையை தலைக்கு மேல் போர்த்திக்குவாங்க.அதுவே ச்சும்மா பேருக்குத்தான் இருக்கும்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எனக்கு, சர்ச்சில் இருப்பவன் சமாதியிலும் இருப்பானென்ற எண்ணம்தான்:-)

said...

வாங்க வல்லி.

நல்லதுதானேப்பா!