Friday, May 06, 2016

கல்யாணத்துக்குப் போக முடியலையே... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 30)

நேரா காமாட்சியம்மன் கோவிலுக்குப் போயிருங்கன்னார் நம்மவர் சீனிவாசனிடம். ஓக்கே. எனக்கும் அங்கே ரெண்டு முக்கிய சமாச்சாரங்கள் இருக்கு:-) கங்கை மண்டபத்தைத் தாண்டுன ரெண்டாவது  மினிட் கோவில் வாசலில் இருந்தோம். சங்கரமடத்துக்கிட்டே தான் கோவில். வண்டிகளின் நடமாட்டங்கள் இவ்ளோ இல்லாத காலத்தில் பேசிக்கிட்டே  நடந்து போகும் தூரம்தான் இங்கே கோவில்கள்.  இப்போ.....   குறுக்கும் நெடுக்கும் ஓடும் வண்டிகளில் மாட்டிக்காம இருக்கணுமுன்னா நாமும் வண்டிகளில் போய்த்தான் ஆகணும் :-(

கோபுரம் தாண்டிக் காலெடுத்து உள்ளெ வச்சதும்  முக்கிய சமாச்சாரம் நம்பர் ஒன்னு கண் எதிரில்!  குளிச்சு முடிச்சு அலங்காரம் செஞ்சுக்கிட்டு ஆடி அசைஞ்சு வர்றாங்க நம்ம காமாக்ஷியம்மாள்!
கோவிலில் பராமரிப்பு வேலைகள் நடப்பதால்  சுத்திக்கிட்டுக் குளத்தாண்டை போக முடியாமல் கம்பித்தடுப்புகள். பார்க்க வேண்டிய ரெண்டாவது  சமாச்சாரம் அங்கெதான். நின்றார், இருந்தார் கிடந்தார்னு மூணு நிலைகளில்  மஹாவிஷ்ணுவை  இங்கே ஒரு மூணடுக்கில் 45 வருசத்துக்கு முன்னே பார்த்த நினைவு. குளத்தின் கரையை ஒட்டியே இருந்த ஞாபகம்.
எங்கே எந்தக் கோவில்னு தெரியாமல்  காஞ்சியில் போகும் கோவில்களில் எல்லாம் தேடிக்கிட்டே இருக்கேன்.   இங்கேதான்னு  இப்ப மனசு வேற  சொல்லுச்சு.  கடைசியா அதன் பேச்சையும் கேக்கலாமுன்னு.......  போனமுறை வந்தப்பவும் குளத்தாண்டை போக முடியலை. இப்பவும்  அதே......  ப்ச்.

மூலவரை தரிசிக்க நிக்கும் வரிசையைப் பார்த்தாலெ... மூச்சு முட்டுது. சரி. கிளம்பலாமுன்னு சொன்னதும் நம்மவர், சாமி பார்க்கலையான்னார்.  பார்த்தாச்சுன்னேன் காமாக்ஷியை க்ளிக்கிட்டு. பாகர் ஃபோட்டோ  எடுக்கக்கூடாதுன்னு சொன்னார்.  சரின்னுட்டு தலையாட்ட வேண்டியதாப்போச்சு.

ஊர்முழுக்க' ஏ  எஸ் பாபு சா'ன்னு  ஹெவியா விளம்பரங்கள். பட்டுப்பொடவை வியாபாரம்தான்.  நாம் இப்பெல்லாம் நம்ம மயிலை கபாலி சந்நிதித்தெருவில் இருக்கும் காஞ்சிபுரம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில்தான் புடவை வாங்கிக்கறோம். கடை முதலாளியும் ஒரு  ஸா தான். சீதாராம் சா. ஒரே குடும்பமாக் கூட  இருக்கலாமோ, தெரியலை. இவுங்களுக்குன்னு ஒரு தனி மொழி கூட இருக்கு!
இவ்ளோ சொல்றாங்களே போய் எட்டிப் பார்க்கலாமுன்னு சொன்னேன். எனக்கு ஸில்க் காட்டன் ஸல்வார் கமீஸ் துணிகள் தேடிக்கிட்டு இருக்கேன்.  எப்பவும் அல்மோஸ்ட் ஒரே டிஸைன்கள்தான் கிடைக்குது.  ஜரி பார்டர்.  வேலைப்பாடுள்ள துப்பட்டா! நிறங்கள் மட்டும் வெவ்வேற!
 வேறெங்கும் கிளைகள் கிடையாது. நடுத்தெருவில் மட்டும்தான் இருக்கோமுன்னு சொல்றாங்க.  சலோன்னு போய்ச் சேர்ந்தால்..... வண்டி நிறுத்தத் துளி இடம் இல்லை. கடை வாசல்னு பெருசா ஒன்னுமில்லை. திரை போட்டு வச்சுருக்குமிடத்தில்  திரையை விலக்கிக்கிட்டு மக்கள்ஸ் போறதும் வாரதுமா இருக்காங்க. வாசலில் குமிஞ்சு கிடக்கும் காலணிகள் உள்ளே இருக்கும் கூட்டத்தைச் சொல்லுது. நாமும் போய் ஜோதியில் கலந்தோம்.
ஸல்வார் கமீஸ்னு சொன்னதும் மாடிக்குக் கை காமிச்சாங்க.  ஒரே பார்வையிலேயே ஒன்னும் சரிப்படலை. வேணாமுன்னு கீழே வந்துட்டோம்.  வண்டி எங்கேன்னு  தேடும்போது, எதிர்வாடையில் இருந்து ஓடிவந்த சீனிவாசன்,   நம்மை வண்டி நிறுத்தி இருக்கும்  இடத்துக்குக் கூட்டிப்போகும்போது இன்னொரு கடை கண்ணில் பட்டது. ஸ்வேதாஸ் !    இந்தப்பெயர்  விடாமல் துரத்துதேப்பா !

இந்த நடுத்தெருவில் ஏகப்பட்ட 'சா'க்களும் இன்னபிறருமா ஜவுளி பிஸினெஸ் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.
 கடைக்குள் நுழைஞ்சு போறோம். ஈ காக்கா இல்லை! ஒருத்தர் வந்து  இன்னொரு கதவைத் திறந்து விளக்கைப் போட்டார்.  துணிக்கடைதான் :-) நல்லவேளை... பாய் போட்டதரையில் உக்கார வேணாம் .  கொஞ்சம் அசுவாரஸியமா தேட ஆரம்பிச்சதும்  அழகான டிஸைன் ஒன்னு கண்ணில் பட்டது. மகளுக்கு வாங்கிக்கலாமேன்னு  ஆசை. ஆனால் அப்படி  நாம் நினைச்சதை வாங்க முடியாதே.  செல்லில் படத்தை க்ளிக்கி வாட்ஸப்பில் அனுப்பினோம்.  'எஸ்ஸு' என்று பதில் உடனே வந்தது.  மகள் இன்னுமா தூங்கலைன்னு இருந்தாலும்  உடனடி பதில் வந்தது மகிழ்ச்சியே!


இதுக்கிடையில்  எனக்கு ஸில்க் காட்டன் ஸல்வார்  துணிகள் ரெண்டு செட் கிடைச்சது. விலையும் சென்னை  விலைதான்.  ஆர்டருக்கு மட்டும் தயாரிச்சு விக்கறாங்களாம்.     இன்னும்  மூணு  காட்டன் செட்களும் வாங்கினேன்.  விலை  அவ்வளவா இல்லை.  இவுங்க கடை ஒன்னு சென்னையில் ஜி என் (செட்டி) சாலையில் இருக்காம்.  மான்யவர்னு சொன்ன நினைவு.
எங்கே தங்கி இருக்கீங்கன்னவர் இங்கேயே  தங்குமிடம் இருக்குன்னார். போய்ப் பார்த்து வச்சுக்கிட்டால் நமக்கு(ம்) நல்லதுன்னு  அவர்கூடவே மாடிக்குப் 'போய்ப் பார்த்தோம்' :-)
லிஃப்ட் வசதிகள் இருக்கு.  ஹெரிட்டேஜ் இன் என்ற பெயர்! சாதாரண ஹொட்டேல்தான்.  ஒரு நைட் தங்கலுக்கு ஓக்கே.  அறை வாடகையும் மலிவுதான். நமக்கு நல்ல டிஸ்கவுண்ட் தரேன்னு சொன்னார்:-)
நம்ம ஷாப்பிங் முடிஞ்சது.  அப்படியே  ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குப் போயிட்டு வந்துறலாமான்னார்  நம்மவர். ஓ எஸ். எனக்கு(ம்) அங்கே ஒருத்தரைப் பார்க்கணுமே:-)   எப்பப் போனாலும்  திறந்தவெளி கடந்து  மண்டபத்துக்குள் காலடி வச்சதும்  இடது புறம் திரும்பி  கொடிமரத்தைக் கும்பிட்டுக்கிட்டு நேரே மூலவர்தான்.  வலது பக்கம் திரும்பி இருந்தால்  மண்டபத்தின்  கடைசியில்  வெளியே அலங்காரமா இருக்கும் நந்தியைப் பார்க்க இதுவரை வேளை வரலை. ஆனால்  இப்போ அது வந்துக்கிட்டு இருக்கு:-)

ராஜகோபுர விநாயகர், ராஜகோபுர ஆறுமுகரிடம் அனுமதி வாங்கிக்கிட்டு வளாகத்துக்குள் நுழைஞ்சதும் கேமெரா  டிக்கெட் வாங்கிக்கப் போனால்...  கவுன்ட்டரில் டிக்கெட் கொடுப்பவரைக் காணோம்.  பக்கத்துக் கடையில் சொல்லிட்டு உள்ளே போனோம்.  நேரா நந்திதான் முதலில்:-) நாலுகால் கல்மண்டபத்தில் 'சிவசிவ'ன்னு  உக்கார்ந்துருக்கு!


சிலை செஞ்சவங்க  எல்லா லக்ஷணங்களும் பார்த்துத்தான் பண்ணி இருப்பாங்க இல்லையா? எனக்கென்னவோ  உடம்புக்கேத்த தலை இல்லைன்னு ஒரு தோணல். கொஞ்சூண்டு சிறுசா இருக்கோ?  நந்தியின் பார்வைக்கு நேராகக் கொடிமரம்.   அதைத் தாண்டிப்போனால் உள்பிரகாரம், முன்மண்டபம், கருவறைன்னு  நெடூகப்போய் அதோ அங்கே ஏகாம்பர நாதர்  இருக்கார் லிங்க வடிவில்!


 மணி ஏழு! சாயரக்ஷ்சை பூஜைக்கான  ஒருக்கங்கள் போல!  நாதஸ்வர, தவில் வாசிப்போர் தயாரா இருக்காங்க.  வரிசையா  ஒரு குடும்பம்  மூணு தலைமுறைகளோடு  உக்கார்ந்துருக்காங்க.  பெரியவங்க கையில் ஒரு புத்தகம் பார்த்து வாசிக்கிறாங்க.  தேவாரமோ திருவாசகமோ?   இல்லை வேற எதாவதோ?மொத்ததுலே சாமி புத்தகம்!  அவுங்க வகையில் இப்போ பூஜை ஒன்னு நடக்கப்போகுது. எதோ  வேண்டுதலா இருக்குமோ?நாங்க உள் பிரகாரம் சுத்திவந்தோம்.  சகஸ்ரலிங்கத்துக்கு ஒரு கும்பிடு.   வலப்பக்க மண்டபத்தில் வாகனங்கள் எல்லாம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க.  சுத்தி வரும்போது  ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் கூட்டம். கம்பித்தடுப்பு வச்சு உள்ளே போய்கிட்டக்க நின்னு கும்பிடணும்.  யார்னு எட்டிப் பார்த்தால்   நம்ம பெருமாள்!  நிலாத்திங்கள்துண்டத்தான்!  108 இல் ஒருவர்!
சுவரில் ஒரு மாடத்தில் இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமா விஸ்வரூபம் எடுத்துக்கிட்டு வர்றார்!  போனமுறைகூட சின்னதா ஒரு சந்நிதியில் இருந்தவருக்கு இப்போ உள்ளே துணையா இன்னொருவர்!  பெரிய பெரிய சிலைகள்!  பெருமாளுக்கு அண்ணன்னு சொல்றார் பட்டர்!  எப்படியோ  ஹரனும் ஹரியும் ஒரே இடத்தில் இருப்பது(ம்) நல்லாத்தான் இருக்கு:-)

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே...  நம்ம காமாக்ஷி அம்மன் கோவிலில் கூட ஒரு  இடத்தில்  மஹாவிஷ்ணு ஒளிஞ்சுக்கிட்டு இருக்கார். இவரும் 108 இல் ஒன்னுதான். திருக்கள்வர் பெருமாள்னு பொருத்தமா ஒரு பெயர்!

அப்படி இப்படின்னு மணி ஏழரை.  காலையில் இருந்து சுத்திக்கிட்டே இருக்கோம். இனி  வேற கோவில் ஒன்னும்வேணாமுன்னு  இருந்தாலும்  குமரக்கோட்டம் தாண்டும்போது  உள்ளே போகலாமுன்னு  ஆசைதான்.  உள்ளே நல்ல கூட்டம்!  முருகனின் நாள் இல்லையோ!  போறபோக்கில் ஒரு கும்பிடு.

கையோடு ராச்சாப்பாடை முடிச்சுக்கிட்டு அறைக்குப் போகலாமுன்னு நம்மவர் சொல்லிட்டார். சலோ சரவணபவன்!  இவருக்கு  இட்லியும், சீனிவாசனுக்கு தோசையும் ,  எனக்கு ஆப்பம் தேங்காய்ப்பாலும் சொன்னோம்.  பக்கத்து மேசையில் ஒரு சின்ன குடும்பம். வேலைக்குப் போகும் வீட்டம்மா! அவுங்களுக்கும் ஒரு பொழுது  அடுப்படியில் இருந்து ஓய்வு வேணாமா?


சண்டே ஸ்பெஷல் அவுட்டிங்!  பள்ளிக்கூட வயசுலே பிள்ளைகள் கீர்த்திவாசனும், ஸ்வப்னாவும்.  சோளா பட்டூரா  தட்டுலே உக்கார்ந்துருக்கு.  ரெடி ஸ்டடி ஷூட். விரலில்  ஒரு குத்து...  புஸ்.... காத்துப் போயிருச்சுபா:-)
அவுங்களோடு பேசிக்கிட்டே சாப்பிட்டதில்   நம்ம தட்டுலே இருந்தவைகளுக்கு  ருசி அதிகமா இருந்துச்சு.  ஆவலோடு நியூஸி பத்தியெல்லாம் விசாரிச்சாங்க பிள்ளைகள்.  நல்லாப் படிச்சு முடிச்சுட்டு நம்மூருக்கு வந்துருங்கன்னு சொன்னேன்:-) நம்மவர் துளசிதளத்தின்  கொபசெ வாக செயல்பட்டு  வலைவிவரம் எல்லாம் சொன்னதும் எழுதி வச்சுக்கிட்டாங்க. அம்மா டீச்சரு!

ராத்திரி மெனுவை க்ளிக்கிட்டு ஜிஆர்டி வந்தோம். தைப்பூசம் வள்ளலார் தினமுன்னு  இப்படி  பார்  மூடிட்டாங்களாம்! போயிட்டுப்போகுது. குட்நைட்:-)
 இத்தனை  அமளியில் நம்ம சசிகலா நடராஜன் வீட்டுக் கல்யாணத்துக்குக் கூப்ட்டாங்க. போகத்தான் நமக்கு நேரமில்லாமல் போச்சு :-)

தொடரும்............  :-)


7 comments:

said...

//ஸ்வேதாஸ் ! இந்தப்பெயர் விடாமல் துரத்துதேப்பா//

அதானே!

நீங்கள் சொன்ன பிறகு நந்தி தலை பற்றி எனக்கும் அப்படித் தோன்றுகிறது!

said...

”மான்யவர்” வடக்கில் இது மிகவும் பிரபலம். ஆண்களுக்கான கல்யாண உடைகள் கிடைக்கும் கடை.

said...

சா சா சான்னு ஒரே பில்டிங்குலயே எத்தனை பேரு!!! ஒவ்வொன்னும் ஒவ்வொரு பிசினெசா?

நிலாத்திங்கள்துண்டத்தான்... நிலான்னாலும் திங்கள்னாலும் ஒன்னுதானே.

என்னதான் இருந்தாலும் பூரியில் குத்தி விளையாடுற சுகம் சுகம் தான். பூரி உப்பாம வந்துருச்சுன்னா சாப்பிட வந்தவங்க மனசும் சந்தோசத்துல உப்பாது.

நடராஜன் - சசிகலா... பெயர்ப்பொருத்தம் படிச்சுச் சிரிச்சிட்டேன் :)

said...

உலகளந்த பெருமாள் கோயிலைத் தேடினீங்களோ? காமாட்சி கோயிலுக்கு மிக அருகே தான் இருக்கு. நடந்தே வந்துடலாம். ஒரு கல்யாண மண்டபம் கூட அங்கே இருந்தது. இப்போ இருக்கானு தெரியலை! உலகளந்த பெருமாள் கோயிலில் தான் பல்லவர்களின் வம்சாவளி குறித்த கல்வெட்டையும் பார்க்கலாம். நாங்க பல முறை போயும் கல்வெட்டைக் கிளிக்க முடியலை! :(

said...

நல்ல வேளை .
காமாக்ஷி அம்மா கண்ணிலே
ஸா போர்டு படல்லே !!

இருந்தால் அவுங்களும் சால்வார் கமீஸ் அப்படின்னு......???

அது என்ன மெனு?
அப்பளம் , உளுந்து வடை, சேமியா பாயசம் இல்லாம்..

we want we want
full meals full meals.

we want we want
full meals full meals.

subbu thatha.

said...

அமர்க்களம் பதிவு முழுவதும் ஒரே உற்சாகம்.
ஸா கடை சூப்பர். காமாக்ஷி அதைவிட சூப்பர்.
குழந்தைகள் +படூரா படம் ரொம்ப அழகு. நீங்களே ஒரு கன்சல்டன்சி
ஆரம்பிக்கலாம் துளசி.

said...

என்னை மாதிரியே ஸ்வேதாவும் டீச்சரை Follow பண்ணிக்கிட்டே இருக்காங்க. :)
ஆப்பமும், தேங்காய்ப் பாலும்?
எங்களூரில் தேங்காய்ப் பாலில் சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு, புட்டு, ரொட்டியோடு சாப்பிடுவோம். அதற்கு பால் சம்பல் என்று பெயர். இப்படி வெறும் தேங்காய்ப்பால் சாப்பிடலாமா டீச்சர்? ஒண்ணும் ஆகாதா?