Monday, May 23, 2016

மாத்தும் 'ஏ'மாத்தும் :-( (இந்தியப் பயணத்தொடர். பகுதி 37)

காலையில்  எழுந்ததும்  அடுத்த ரெண்டு நாளுக்கான ஆக்ட்டிவிட்டீஸ் என்னென்னன்னு  சின்னதா ஒரு ப்ளான் செஞ்சு ரெண்டு செட் துணிகளை பேக் செஞ்சு வச்சுட்டு கடமைகளை முடிச்சுட்டு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போனோம். இன்றைய ஸ்பெஷல் குலோப்ஜாமூன்.
ஒன்பது மணி போல கிளம்பி நேரா மச்சினர் வீடு.   சின்னு  என்னை மறக்கலை. சந்தோஷமா வாலாட்டி வரவேற்றது:-)  நாத்தனார் அங்கே வந்து நமக்காகக் காத்துருந்தாங்க. கொஞ்சம் அஹோபிலம், திருத்தணி , காஞ்சி கதைகள் எல்லாம் பேசிட்டுக் கிளம்பி நேரா  தி.நகர் மங்கேஷ் தெரு. நம்ம ஸ்ரீநிவாச ஆச்சாரி அங்கேதானே  இருக்கார்.  கொஞ்சம் வேலைகள் இருக்கு நமக்கு அவரிடம்.
நம்ம அறுபதாம் கல்யாணசமயம், வளையலைத் தொலைச்ச எபிஸோடு நினைவிருக்கோ?  அதை அப்புறம் நான் போட்டுக்கவே இல்லை. அந்தக் கொக்கியை சரி செஞ்சுக்கலாமுன்னு இப்ப எடுத்து வந்துருந்தேன்.   ஜோடிச்செயினில் ஒன்னு இப்ப  பாக்கி இருக்கு. அது சிங்கையில் வாங்கினதுதான். அதே 60 எபிஸோடில்  ஜோடியில் இருந்த இன்னொன்னை  ஜிஆர்டியில் மாத்தப்போய்  அது  மாத்துக்குறைவுன்னு சொல்லி  கொஞ்சம் நஷ்டம் ஆகிருச்சு.  அப்ப குறைவான மாத்து இருக்கும் இன்னொன்னை வேற எதாவது செஞ்சுக்கலாமுன்னு ஒரு எண்ணம். ரெண்டு 'வாழப்பழம்' கதையா ஆகிருச்சு:-) அப்புறம் இன்னும் சில சில்லறை வேலைகள்.

கடைக்குப்போகும்வழியிலேயே இன்னொரு சின்ன வேலையையும் முடிச்சுக்கணும். எனக்கு ஃபாரின் சாமான்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும்!  அரிசி, பருப்பு, மசாலா சாமான்கள், காய்கறிகள்,  இனிப்புகள், பற்பசை, சோப் இப்படி  ஃபாரின் பொருட்கள்தான் வாங்குவேன். இப்பக்கூட எங்களுக்கு ஃபாரினா இருக்கும் இந்தியாவில் செஞ்ச மிக்ஸிக்கு (ப்ளூலீஃப்) ரப்பர் காஸ்கெட் வாங்கிக்கணும். கூடவே  நாலைஞ்சு  புஷ்கள். சீக்கிரம் தேய்ஞ்சு போகுதோ? இல்லைன்னா தேயும் அளவுக்கு  அரைச்சுக்கிட்டே இருக்கேனா?  நம்ம தி நகர் தண்டபாணித் தெருவில்தான் இதுக்கான ஸ்பேர் பார்ட்ஸ் விக்கும் சர்வீஸ் சென்டர் சேர்ந்த  கடை (Preethi Service Centre)  இருக்கு.

 அங்கே போனால்  ரொம்பவே பிஸி. 'சீக்கிரம் ரிப்பேர் செஞ்சு தாங்க. இனிமேதான் மசாலா அரைச்சுக் குழம்பு வைக்கணுமு'ன்னு  அவசரசிகிச்சைக்கு வந்துருந்தாங்க ஒரு அம்மா!   பத்தே நிமிட். சரியாகிருச்சு!  இங்கே ஒரே ஒரு டாக்டர்தான் இருக்கார் போல! வெட் கிரைண்டர், மிக்ஸி, ரைஸ் குக்கர் அப்புறம்  வேறென்னவோ பொருட்கள் வந்தபடி இருக்கு. நம்மைத்தவிர எல்லோருக்கும் அர்ஜெண்ட் மேட்டர்!  அங்கே இருந்த  அரைமணி நேரம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கிட்டு  இருந்தேன். நமக்கு வேண்டப்பட்ட பொருட்களை வாங்கிக்கிட்டு நேரா மங்கேஷ் தெரு!

கடை திறந்து ஆச்சாரி  உக்கார்ந்துருந்தார். நம்மைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும்! செய்யவேண்டியவைகளைச் சொல்லிட்டு  முதலில்  எதிரில் இருக்கும் சூர்யாடெக்கில் நாம் கொண்டுபோன நகைகளின் லக்ஷணத்தைப் பார்த்துக்கிட்டோம். வந்த ரிஸல்ட் அதிர்ச்சிதான்!

ஜிஆர்டியில்  22 கேரட் இல்லைன்னு சொன்னது ரொம்பச் சரி. ஜோடிச்செயின் 23 கேரட்!  எப்படி ஏமாத்தி இருக்காங்க பாருங்க  :-(   இனி  ஜிஆர்டி ப்ளாக் லிஸ்ட்தான்.

அந்தச் சங்கிலி வாங்கியே ஒரு 15 வருஷம் இருக்கும். சிங்கை முஸ்தாஃபாவில் வாங்குனது. மாத்துகுறைவுன்னு  சொன்னதும், அடிக்கடி அவுங்களை மனசில் சபிச்சுக்கிட்டு இருந்தேன் கடந்த மூணரை  வருசமா :-(   ப்ச்....  பாவம்....  இனி சாபம் எல்லாம்  ட்ரான்ஃபர்டு டு ஜிஆர்டி தங்கமாளிகை.

குளிக்கும்போது சோப் நுரைகள் சேர்ந்து நம்ம செயின்  கொஞ்சம் மங்கலா இருக்குன்னு  அதை சுத்தம் செஞ்சார் ஆச்சாரி. பளிச்!   'ரொம்ப நல்லா இருக்கே! எதுக்கு இதை மாத்தறீங்க?ன்னுட்டார் அவர். எனக்கு ஒரு பதக்கம் செஞ்சுக்கணுமுன்னு சொன்னதுக்கு இதே செயினில் பதக்கம் கோர்த்துடலாம். இதுவே அட்டிகை மாடல்தான்னார். அங்கே இருந்த புத்தகத்தில்  பதக்க டிஸைன் எல்லாம் பார்த்தப்ப ஒரு யானை இருந்தது.  மனசைக் கல்லாக்கிக்கிட்டேன்.
பாரம்பரிய டிஸைன் தான் வேணுமுன்னு  சொல்லி ஒன்னு தேர்ந்தெடுத்துச் செய்யச் சொன்னேன்.  கழுத்துச் சுற்றளவு பார்த்து சங்கிலியை  வெட்டி மீதம் இருப்பதை பதக்கத்துக்குப் போட்டுக்கலாமுன்னு சொல்லிட்டார். கடைசியில்  எடை பார்த்துக் கூடுதல் காசோ இல்லை தங்கமாவோ கொடுத்தாலும் சரின்னார்.


காணாமப்போய்க் கிடைச்சதுக்கு,   நிமிசத்துலே கொக்கியைச் சரி பண்ணியும் கொடுத்துட்டார். வேண்டாத புது ப்ரேஸ்லெட் ஒன்னும் கொண்டு போனேன். இப்ப இருக்கும் வளையல் கழட்டி எடுக்கக்  கொஞ்சம் டைட்டா  இருக்கு. அதையும் கொஞ்சம் பெருசாச் செய்யணும். ப்ரிஸ்பேன் ஏர்ப்போர்டில் இந்த வளைகளால் பேஜாராப் போயிருச்சே. இப்ப இருப்பதைக் கழட்டி எடுக்கக் கஷ்டமுன்னதும், எதிர்க் கடையில் போய் ஒரு சின்ன ஸாம்பிள் ஸோப் வாங்கியாந்தார் கடை ஊழியர்.  ஸோப் போட்டதும் வளை கழட்ட வந்துருச்சு.

நம்மவருக்கு  எப்பவும் இந்தக் கவலை இருந்ததுதான்.  'கடைசியில்' வெட்டிதான் எடுக்கணுமோன்னு  சொல்லிக்கிட்டே இருப்பார். அப்போ இருக்கும் டென்ஷனில்  இது வேறயான்னுதான் புது ஏற்பாடு:-)

என்ன டிஸைன்னு பாருங்கன்னு  டிஸைன் புத்தகத்துக்கு  ஆளனுப்பும்போது  வேண்டாம்னேன். இப்போ இருக்கும் இதே டிஸைன். ஆனால் கொஞ்சம் பெருசு,  கொஞ்சம் கூடுதல் கனம். கொஞ்சம் எண்ணிக்கை கூடுதல்னு முடிவாச்சு. மெஷீன் கட்டிங்தான் என்பதால் சேதாரம் கொஞ்சம்(!) அதிகமா இருக்குமுன்னும் சொல்லிட்டார்.

தாலிக்கொடியில் சேர்க்கும்  சரடு இன்னும் கொஞ்சம் நீளம் வேணும் என்றதால் அதையும்  செஞ்சுடச் சொன்னேன்.  ஏற்கெனவே இருக்கும் சரடை பிரிச்செடுக்கணுமேன்னு   தாலியைக்கொடியைக் கழட்டுனதும்  பதறிப்போயிட்டார் நம்ம ஆசாரியின் உதவியாளர்.  பொதுவா வெளியாட்களைப் பொற்கொல்லர்கள் வேலைக்கு அமர்த்துவது இல்லையாம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருக்கணும் என்பது எழுதப்படாத ஒரு விதி!  அந்தக் கணக்கில் இவர்  சித்தப்பா. உடனே மஞ்சள் கயிறு ஒன்றைக் கொடுத்து  கழுத்தில் போட்டுக்கணும் என்றார்.  பெரியவர் சொல்லைத்  தட்டவேணாமுன்னு தேமேன்னு போட்டுக்கிட்டேன்.
திருமாங்கல்யம் இன்னபிற சங்கதிகளை  மஞ்சள் கயிற்றில் கோர்த்தது  நம்ம சீனிவாச ஆச்சாரியின் இளையமகள். எப்படியோ நாத்தனார் முறை செய்ய ஆள் அமைஞ்சு போச்சு. சின்னதா ஒரு அன்பளிப்பு கொடுத்தவுடன் பதறிப்போயிட்டார் அந்த  காலேஜ் குமரி.  இது ஒரு சாஸ்த்திரம்ன்னு சொன்னேன். தாலி முடிஞ்ச நாத்தனாருக்குச் செய்யும் சீர் போல.
பெரிய சரடு  செஞ்சு முடிச்சதும் பழையபடி எல்லாத்தையும் அதில் மாத்திக்கணும். தங்கம் விக்கற விலையில் புதுசா ஒன்னும் வாங்க விருப்பமில்லை.  ஏற்கெனவே இருப்பதை டிஸைன் மாத்திச் செஞ்சுக்கறதுதான்.

இன்றைக்குக் கட்டக் கடைசியா  எனக்கொரு சக்கரம் மோதிரம்  செய்யணும். ஏற்கெனவே சிங்கையில் ரொம்ப வருசத்துக்கு முன்னே ஒரு சங்கு வாங்கி இருக்கேன். அதுக்கு மேட்ச்சா சக்கரம் தேடித்தேடி ஒன்னும் கிடைக்கலை. இப்ப ஒன்னு செஞ்சுக்கிட்டா.... 'சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையள்' ஆகிடலாமே:-)  அதுக்கும் சேர்த்து ஆர்டர் கொடுத்துட்டு இப்ப இந்த செல்ஃபோன் காலமா இருப்பதால் என்ன டிஸைன் என்பதற்கெல்லாம்  க்ளிக் பண்ணிக் கொடுத்து,   கணக்கெல்லாம் எழுதிக் கொடுத்ததை வாங்கிக்கிட்டுக் கிளம்பி நேரா சரவணபவன்.

 இன்றைக்கு சாப்பாடு கொஞ்சம் லேட்டுதான்.

கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின் ராமராஜ்யத்துக்குப் போறோம். இரவு தங்கல் அங்கேதான்.  மூணு மணியிலிருந்து நாலுமணிக்குள் வந்துருவோமுன்னு  செல்லில் சொல்லியாச்சு.

தொடரும்........:-)



24 comments:

said...

//ஒரு யானை இருந்தது. மனசைக் கல்லாக்கிக்கிட்டேன்.// ;)))) படத்தைப் பார்த்ததுமே சிரிச்சிட்டேன். ;) பிறகு பார்த்தா!! கல்லாக்கிட்டீங்க‌.

எனக்கு குட்டி ஸ்டூடண்ட் ஒருத்தட் ஒர் செய்ன் கொடுத்தார். அதைப் பார்க்கும் போதெல்லாம் உங்க‌ நினைப்பு வந்துருது. அதனால‌ மாட்டலை. அடுத்த‌ பொங்கலுக்கு பரிசா கொடுக்கலாம்னு பத்திரமா வைச்சிருக்கேன். :‍)

தாலிக்கொடி... நானும் ஒரு தடவை கொடியை மாத்தவேண்டி வந்துச்சு. அது இங்க‌ பெட்டியிலதான் எப்பவும் இருக்கு. ஆனா அங்க‌ மாமி புதுசை ப்ளெஸ் பண்ணி மாட்டணும் என்றதாலயும் ரொம்ப‌ வயசான‌ ரிடையர்ட் பிஷப் ஒருத்தரைப் பார்க்க‌ இருந்ததாலயும் அவர்ட்டையே கொடுத்து பண்ணலாம்னு முடிவாச்சு. ப்ளெஸ் பண்ணி அதை என் கழுத்தில‌ மாட்டினதும் பழக்க‌ தோஷத்துல‌ பிஷப் சொன்ன‌ வார்த்தை குபீர்னு எல்லோரையும் சிரிக்க‌ வைசசுது. ஐம்பதை சமீபிச்சிருந்த‌ என்னை 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க‌,'ந்னுட்டார். ;)))

said...

மரபை மதிப்பவர்கள், மரபை மறந்தவர்கள், மரபை மிதிப்பவர்கள் மத்தியிலே

நம் தமிழ் மண்ணின் மரபு செழிக்க,
// தாலி முடிஞ்ச நாத்தனாருக்குச் செய்யும் சீர் //
எனக்கு, எங்களுக்கு
பெருமிதம் தந்தது.

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.

said...

வெண்கலக் கடையில் புகுந்த யானை மாதிரி ......என்னவெல்லாம் மாற்றினீர்கள் புதிதாய் செய்வித்தீர்கள் எத்தனை சேதாரம் நகைமேல் ஆசையில்லாத மாதும் பழைய நகைகளை நஷ்டமானாலும் புது மோஸ்தருக்கு மாற்றாத பெண்ணும் இல்லை இல்லவே இல்லை.

said...

அப்போ தங்க மாளிகை போகவேண்டாம். நானும் தீர்மானம் செய்தாச்சு.

பெண்டண்ட் டிசைன் எல்லாம் சூப்பர்.
தாலி முடிஞ்ச நாத்தனார் முகம் மறந்து போச்சு.
எல்லாம் நல்லபடியா வாங்கிக் கிட்டீங்கன்னு நினைக்கிறேன்.

said...

சின்னு கண்ணில் புன்னகை அப்படியே தெரியுதே ..எப்படிக்கா மறப்பான் உங்களை ..
இந்த நகைங்க விஷயத்தில் பல வருஷமுன் நானா செஞ்ச தவறு some பழைய நகைங்கள கேரளா ஜ்வெல்லர்சில் குடுத்து மாற்றினது ..அப்பா அம்மாக்கு தெரியாம செஞ்சேன் !!
அதுக்கப்புறம் மாற்றி வாங்கிய நகைகள் அவ்ளோ தரமில்லை :( ..இங்கே நகை போடற பழக்கமே போச்சு ..என் வளையல் மோதிரம் எல்லாம் இப்பவும் போடலாம் கழட்டலாம் ஹீ ஹி அப்பா எல்லாத்தையும் ரெண்டு சைஸ் பெரிசா செஞ்சார் கல்யாணத்துக்கு இப்பவும் விரலை அசைச்சா ரிங் தொபுக்க்னு விழும்
ஆமா நான் கேக்கனும்னு நினைச்சேன் அந்த மெரூன் கலர் ஸ்டோன் மோதிரம் வாங்கியாச்சா ?? :)

said...

நகையை அழிச்சு அழிச்சுப் பண்ணினால் ரொம்ப சேதாரம் ஆகாதோ? ரொம்ப நாளைக்கு அப்புறம் சரவண பவன் சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தேன். அதன் மாறாத ருசி 'நினைவுக்கு வந்துபோனது.

said...

வாங்க இமா!

பார்த்தால் அம்பதுன்னு சொல்லமுடியாம சின்னப்பொண்ணாத்தான் இருக்கீங்க. அதான் அப்படிச் சொல்லிட்டாரு :-)

said...

வாங்க மீனாக்ஷி அக்கா & சுப்பு அத்திம்பேர்.

நானும் லேசுப்பட்ட ஆளா? அந்த மிதித்தல், மறத்தலெல்லாம் உண்டுன்னாலும் அப்பப்ப என்னை அறியாமல் மதிச்சுருவேன் அந்த மரபை:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

மாத்தும்போது சேதாரம் வந்தாலும், 'இருக்கும்போது' போட்டு அனுபவிக்க முடியுதே! சேதாரத்துக்குப் பயந்து போடாமச் சும்மா வச்சுப் புதையலை பூதம் காத்தால் நல்லாவா இருக்கும்? நாம் போனபின் அதை எடுத்துக்கும் சந்ததிகளுக்கு அதன் உண்மை மதிப்போ, எவ்ளோ கஷ்டப்பட்டு சேர்த்தோம் என்பதோ தெரியுமா? ச்சும்மாக் கிடைச்சதை மதிப்பு தெரியாமல் அள்ளிவிடும் இளைய தலைமுறையை என்னன்னு சொல்றது?

ஒரிஜினல் ஆண்ட்டீக் நகைகள்ன்னா அப்படியே எடுத்து வச்சாலும் அதுக்கு மதிப்பு அதிகம்.

பை த வே.... நகையே பிடிக்காத ஆண்களா உலகம் முழுசும்? ஆதிகாலத்தில் தங்கத்தைத்தேடிப் போனது பெண்களா என்ன?

said...

வாங்க வல்லி.

ஜிஆர்டி இப்படிப் பொய் சொல்லுமுன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லைப்பா !!! இனிமே நெவர் கோ தான்!

எல்லாம் நல்லபடியா வாங்கிக் கொண்டு வந்துட்டேன் இங்கே!

said...

வாங்க ஏஞ்சலீன்.

எந்த மெரூன் கலர் கல் மோதிரம்? ஞாபகம் வரலையேப்பா? நாப்பது வருசத்துக்கு ரூபின்னு சொல்லிக்கிட்டு இருந்தேனே அதுவா?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

போடாமச் சும்மா வச்சுருந்து என்ன பயன்? திருப்பி அழிச்சுச் செய்யும்போது கொஞ்சம் சேதாரம் வரத்தான் செய்யும். அதுக்குப் பயந்துக்கிட்டே இருந்தால்... கடையில் புதுசு வாங்கினாலும் சேதாரம் கணக்கில் போடறதைப் பார்க்கலையா? அங்கேயும் அதுக்குக் காசு கொடுக்கத்தானே வேண்டி இருக்கு :-( இப்பத் தங்கம் விற்கும் விலையில் கூடுதல் செலவு வேற வச்சுக்கணுமா?

பயணத்தில் பெரும்பாலும் சரவணபவன் சாப்பாடுதான். வயித்துக்குக் கெடுதல் வர்றதில்லை.

said...

பெரிய பெரிய நகைக்கடைகள் வந்து ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் இவர்களைப் போன்ற கலைஞர்களின் உழைப்பு பாராட்டத்தக்கது. பகிர்வுக்கு நன்றி.

said...

நகைக்கடை அனுபவம் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை.
படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.
நீங்கள் நினைத்த மாதிரி எல்லாம் அமைந்து விட்டதா? (நகைகள்)

said...

ஊருக்கு சமீபத்தில் போயிருந்தப்ப நானும் திருனேலியில் கோவிலின் பின்புறமிருக்கும் ஒரு கடையில் தாலிக்கொடியின் கொக்கியைச் சரி செஞ்சுட்டு வந்தேன். சின்ன வேலைதானேன்னு உடனே செஞ்சு கொடுத்துட்டார். உக்காந்து எப்படிப்பண்றாங்கன்னு கவனிச்சது மகளுக்கு புது அனுபவம் :-))

யானையை அடுத்த பயணத்தில் கூட்டிப்போயிருவீங்கன்னு எங்களுக்கு நல்லாத்தெரியுமே :-)

said...

யெஸ் யெஸ் :) அதே ரூபி கல் தான்

said...

நல்ல கலெக்‌ஷன்.... :)

தொடர்கிறேன்.

said...

நாங்க எப்போவுமே ஜிஆர்டியை ஆதரிப்பதில்லை! எங்க குடும்ப நபர்களுக்கு அங்கே எதுவும் வாங்கினதும் இல்லை! எல்லாம் ஆர்டர் கொடுத்துச் செய்வது தான். அதுவும் சுத்தமான தங்கத்தில்! சீல் வைச்சது தான்! :) கேடிஎம்மா? அதை என்ன சொல்வாங்கனு மறந்துட்டேனே! :) சொல்லப் போனால் ஷாப்பிங், பர்சேஸ் அப்படினு தி.நகர் பக்கம் தலை வைச்சுக் கூடப் படுக்கிறதில்லை. எப்போவானும் பட்டு எடுத்தாலோ, கலாக்ஷேத்திரா காட்டன் புடைவை எடுத்தாலோ பனகல் பார்க் நல்லிக்கு வந்து எட்டிப் பார்க்கிறதோட சரி!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அடுத்த தலைமுறை இந்தத் தொழிலைச் செய்யாது. ஆனால் நகைநட்டு படிப்புன்னு ஒன்னு வந்துருக்கு. எல்லாம் மெஷீன் வேலைதான். கம்ப்யூட்டரில் டிஸைன் செஞ்சால் ஆச்சு. இங்கெல்லாம் ஹேண்ட்மேட் என்பதாலேயே.... அந்த ஒன்பது கேரட் தங்கநகை கூட யானை விலை!

said...

வாங்க கோமதி அரசு.

எல்லாம் நல்லமாதிரிதான் ஒன்னே ஒன்னைத் தவிர! போகட்டும் அடுத்தமுறை போகும்போது சரி பண்ணிக்கலாம்.

said...

வாங்க சாந்தி.


யானை கூட வரும்னா சொல்றீங்க? கஜலக்ஷ்மின்னா ரெண்டு யானைகள் வராதோ :-)

மகளும் சிலமுறை நகைகள் உருவாகுவதைப் பார்த்து வியந்திருக்கிறாள்!

said...

@ ஏஞ்சலீன்.

ரூபிக்கு என்னோடு வரக் கொடுத்து வைக்கலை. வைரம் முந்திக்கொண்டது :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வதற்கு நன்றீஸ் !

said...

வாங்க கீதா.

முந்தியெல்லாம் இந்த ஆசாரியைக் கண்டுபிடிக்கலை. அதனால் பயணங்களில் கொஞ்சம் ஜிஆர்டியில் ரெடிமேடாக வாங்கிருவோம். செய்யக் கொடுத்துட்டு, நாம் கிளம்பும் முன்னால் கிடைக்கணுமே என்ற யோசனையும் இருந்தது. இனி இல்லை :-)

அதென்ன கலாக்ஷேத்ரா காட்டன் ?