Friday, May 13, 2016

தேர்தலில் நிக்கணுமா? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 33)

 வேட்பாளருக்கான  மினிமம் தகுதிகள் இவை.  பொருந்திவருதா பாருங்க.....


1 சொந்தமா கால் வேலி நிலம் வச்சுருக்கணும்.

( இக்கால அளவில் சொன்னால்  கிட்டத்தட்ட  ஒன்னரை ஏக்கர் நிலம்.
அப்பதான் அடுத்தவன் நிலத்தில் ஆட்டையைப் போடாம இருக்கமுடியும்!)

2  தன்னுடைய மனையிலேயே சொந்த வீடு(ம்) இருக்கணும்.

(அப்பதான் ஊரையே வளைச்சு  வீடுகளை 'எடுத்துக்கும்'  எண்ணம் வராது )

3  வயசு 35 க்கு மேல் 70 வரை தான்.

 (எழுபத்தியோரு வயசு தாத்தா தலைவனாக முடியாது!
நான் ஒன்னும் சொல்லைப்பா..... தமிழர் எழுதிவச்ச தீர்ப்பு !  ஆமாம்... சோழன் தமிழன்தானே?)


4  வேதபாஷ்யங்கள், மந்திரப்ரமாணங்கள் எல்லாம் விளக்கி எடுத்துச்சொல்லும் புலமை வேணும்.

( எழுதப்படிக்கத் தெரிஞ்சுருக்கணுமுன்னு  சொல்றது. அந்தக் காலக் கல்வி(யே) இதுதான்!)

5  ஆச்சாரமா இருக்கணும்.

(அழுக்கும் புழுக்குமா இருந்தால் நல்லாவா இருக்கும்? மனோ வாக்கு காயம் சுத்தமா இருந்தால் பிரச்சனையே இல்லை!)

6  முக்கியமா இதுக்கு முதல் மூணுவருசம் இந்தப்பதவியில்  இருந்திருக்கக் கூடாது.

(தொடர்ந்து நாற்காலியை புடிச்சுக்கிட்டு,  விடமாட்டேன்னு  இருக்கப்டாது!)

ஹைய்யோ.....  எல்லாம் அடிபட்டுப்போச்சு!

இதெல்லாம் நாஞ்சொல்லலைப்பா.... உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இருக்கும் சமாச்சாரங்கள்தானாக்கும்!

இதுலே இன்னும் ஒன்னே ஒன்னு சேர்த்துக்கலாமா?  தன்னுடைய குடும்பநலன், தனக்குக் கிடைக்கும் பேரும் புகழும்,  தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் நல்லது செய்வது,   தன்னுடைய நூறு தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வச்சுக்கறது  என்ற  அசிங்கங்கள் எல்லாம் இல்லாம, ஊருக்கு நல்லது செய்யணுமுன்னு  நினைக்கும் மனசு இருக்கணும். இருக்கோ?


இந்தக் கைகேயி கேட்ட ரெண்டாம் வரத்தின் படி  உத்தரமேரூர் என்ற ஊருக்குள் நுழைஞ்சு  நவநாராயணர் இருக்கும் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்தோம்.

போனமுறை வந்தப்ப ஒன்பது பெருமாளில் ஒரு பெருமாள்  தைலக்காப்பு காரணம் திரைமறைவில்.  இன்னொருக்கா வரணுமுன்னு நினைச்சு  வேண்டிக்கிட்டேன். சட்னு அடுத்த பயணத்துலேயே ஏற்பாடு செஞ்சுட்டார், பாருங்களேன்!
இந்த ரெண்டு வருசத்துலே ஊரில் கூட்டம் இன்னும் அதிகமா ஆகி இருக்கு. அந்தக் கணக்குக்கு ஏத்த வண்டிகளின் நடமாட்டமும்.
கோவில் குளக்கரையோரம் பூஜைக்கான பூக்கள், நெய்விளக்கு, நெய்  இத்யாதிகள் விற்கும் 'கடையில்' கொஞ்சம் துளசி வாங்கிக்கிட்டோம். தாயாருக்குக் கொஞ்சம் பூக்கள்.  பொதுவா வெறுங்கையோடுதான் கோவிலுக்குப் போவது வழக்கம். எப்பவாவது அபூர்வமா துளசியின் கையால் துளசி வேணுமுன்னு 'அவன்' ஆசைப்படுவான்:-)
ராஜகோபுரத்துக்கு முன்னால்  தெருவுக்கு  அந்தாண்டை நேராக் கோவிலைப் பார்த்தபடி ஒரு ஆஞ்சி இருக்கார் தனி சந்நிதியில். அந்தக் கதவும் திறந்துருக்கேன்னு  உள்ளே போனால், கையிலுள்ள பூவை  ஆஞ்சி கேட்டது. கொடுத்துட்டேன்:-) பெரிய சிலை! ஆனால் மார்பில் போட்டுவிட்டார் பட்டர்.
கோபுரவாசல் கடந்து வெளிப்ரகாரத்தின்  உள்ளே போய்  பலிபீடம், கொடிமரம், பெரியதிருவடி ஸேவித்தல் ஆச்சு.  கோவில் கட்டிடமே  நல்ல உசரமான மேடையில்கட்டி எழுப்பி இருக்காங்க.   கருடாழ்வாரும் அதே உயரத்துக்கு  நின்னு  நேருக்கு நேர் பெருமாளைப் பார்க்கற அமைப்பு!


கோவில் கிணத்துலே தண்ணி இருக்கு.  இப்பெல்லாம் தண்ணியைக் காசு கொடுத்து வாங்கி பழக்கப்பட்ட மக்கள்ஸ்  தண்ணியைப் பார்த்ததுமே தங்களையறியாமல் கிணத்துக்குள்ளே காசு போட்டுட்டுப் போறாங்க!

 மூலவர் தன் பெயருக்கேத்தபடி சுந்தரனா இருக்கார். சுந்தர வரதராஜர் என்ற பெயர். கிழக்கு நோக்கி நின்று ஸேவை சாதிக்கிறார்.
உட்ப்ரகாரத்துக்கு நாலு படி இறங்கணும். மூலவரைச் சுற்றி கருவறைக்கு வெளியே மூணு பக்கங்களிலும் அச்சுதவரதர், அநிருத்தவரதர், கல்யாணவரதர் என்று தனிச்சந்நிதிகள் . அஞ்சாறுபடி மேலேறி ஒவ்வொருவரையும் கம்பிக் கதவின் வழியா தரிசிச்சுக்கலாம்.

இந்தக் கோவிலுக்கு,  நம்ம  சென்னை பெஸண்ட் நகர்  மஹாலக்ஷ்மி கோவில்  பொண்ணு!  அச்சு அசல் அப்படியே!  இந்தக் கோவிலின் டிஸைன் வச்சுதான் அந்தக் கோவில் கட்டுனாங்கன்னு போனமுறை பார்த்த பட்டர் ஸ்வாமிகள் சொல்லி இருந்தார்.
கருவறையை ஒட்டி மாடிக்குப்போய் கருவறை விமானத்தின் மேல் நாலு புறமும் இருக்கும் நர நாராயணர் (கிருஷ்ணனும் அர்ஜுனனும்) வைகுண்ட வரதர், யோக நரசிம்மர், லக்ஷ்மிவராஹர் சந்நிதிகளைச் சுத்தி வந்து ஸேவிச்சுக்கிட்டு இன்னுமொரு மாடி ஏறிப்போனால் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்ட ரங்கநாதரை தரிசிக்கலாம்.  போனமுறை இவரை  மார்கழி என்பதால் தரிசிக்க முடியலையேன்னுதான் இப்போ வந்துருக்கோம்.


பஞ்சவரத க்ஷேத்ரம் என்று ஒரு புராணப்பெயர்  இருக்கு, இந்த உத்திரமேரூருக்கு.  பாண்டவர்கள்  பனிரெண்டு வருஷம் காட்டுலே வசிக்கணும். அதன்பின் ஒரு வருசம் அஞ்ஞாதவாசம்  இருக்கணும் என்பதுதானே பகடைப்போட்டியின் 'விதி' இல்லையோ!   அப்போ  பனிரெண்டாவது வருசக் கடைசியில் ஒளிஞ்சு வாழுமுன் இங்கே வந்து  சுந்தரவரதரை  ஸேவிக்கறாங்க.

அப்போ ஒவ்வொரு பாண்டவனுக்கும் ஒவ்வொரு விதமாக் காட்சி கொடுத்தாராம் வரதர்!

வைகுண்டவாசனாக, நம்ம  யுதிஷ்டிரனுக்கும்,  சுந்தரவரதனாக நம்ம பீமனுக்கும், அச்சுதவரதனாக  நம்ம அர்ஜுனனுக்கும், அநிருத்தவரதனாக நம்ம நகுலனுக்கும்,  கல்யாணவரதனாக நம்ம சஹதேவனுக்கும் காட்சி கொடுத்தாராம் பெருமாள்.   அப்போ த்ரௌபதி?    மஹாலக்ஷ்மித் தாயார்  ஆனந்தவல்லியாகக் காட்சி கொடுத்தது  த்ரௌபதிக்குத்தான்!
தாயார் ஆனந்தவல்லிக்கு  வெள்ளிக்கிழமைகளில்  புறப்பாடு உண்டாம். கோவிலுக்குள்ளேயே சுத்தி வர்றாங்க போல!  (சுட்ட படம். கூகுளாருக்கு நன்றி!)
கோவிலுக்கு வயசு ஆயிரத்து முன்னூறுக்கும் மேலே!  எட்டாம் நூற்றாண்டின் பாதியில்  கட்டப்பட்ட கோவில்.  அப்புறம் பனிரெண்டாம் நூற்றாண்டில்  ராஜேந்திர சோழர் காலத்தில் புதுப்பிச்சுக் கட்டி இருக்காங்க. அதுக்குப்பிறகு  பதினாறாம் நூற்றாண்டில்  கிருஷ்ணதேவராயர்  மீண்டும் புதுப்பிச்சுக் கட்டி எழுப்பியிருக்கார்.

 போன பயணத்தில் இப்படி ஒன்பது  நாராயணர்கள்  இருக்கும் கோவில்  உலகில் வேறெங்குமே இல்லைன்னு  துண்டைப்போட்டுத் தாண்டாத குறையா அடிச்சுச் சொன்னார் பட்டர் ஸ்வாமிகள்.

 இந்த ஊருக்கு ஒரு காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்ற பெயரும் இருந்துருக்கு. எட்டாம் நூற்றாண்டில்  ஆயிரத்து இருநூறு (வைணவ) வேத விற்பன்னர்களுக்கு மானியமா அரசர் ( பல்லவ மன்னன் நந்திவர்மன்?) ஒதுக்கித் தந்ததாம்.  எப்பவும்   நாலு வேதங்களையும் கத்துக்கொடுத்து,  மாணவர்கள்  சொல்லிக்கொண்டு  இருந்த ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்த இடமாமே!

கோவில் கல்வெட்டுகளில் இப்படி பல சமாச்சாரங்களும் இருக்கு. (நமக்குத்தான் படிக்கத்தெரியலை. ஆராய்ச்சியாளர்கள் சொல்றதைக் கேட்டுக்கலாம்.)
கருவறையையொட்டியே வெளிப்புறத்தில் ரெண்டு பக்கங்களிலும் படிகள்  இருக்கு.  வலம் வரணுமுன்னா முதலில் இடம்தானே போகணும். மேலேறிப் போறோம்.  முதலடுக்கில் ஸ்ரீ வைகுண்டநாதர் அமர்ந்தகோலத்தில்  இருக்கார்.

கருவறையைச் சுற்றி வரும்போது மூணு பக்கங்களிலும் நர நாராயணர்களா க்ருஷ்ணனும் அர்ஜுனனும்,  ஸ்ரீ லக்ஷ்மிவராஹர், யோகநரசிம்ஹருமா  சின்னச்சின்ன சந்நிதிகளில்! அடுத்த மாடிக்குப் போனால் அங்கேதான் கிடந்த கோலத்தில் பள்ளிகொண்ட பெருமாள்!

சுந்தரவரதர், அச்சுத வரதர், அநிருத்த வரதர், கல்யாணவரதர்,  வைகுந்தவாசப் பெருமாள், கிருஷ்ணர், யோகநரசிம்ஹர், வராஹமூர்த்தி, பள்ளிகொண்டபெருமாள் இப்படி நின்றும் இருந்தும் கிடந்தும் ஸேவை சாதிக்கும்  நவ மூர்த்திகள்!  கட்டாயம் ஒரு முறை வந்து தரிசிக்க வேண்டிய கோவில்தான்!
தரிசனம் முடிச்சுக் கீழே வந்தால் பலிபீடத்தில் இருக்கும் மஹாநைவேத்யத்தை ( வெறும் சோறு) வெண்புறா ஒன்னு அழகாக் கொத்திக்கொத்திச்  சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு.
கோவிலில் போனமுறை பார்த்த  புனருத்தாரண வேலைகள்  அப்படிக்கப்படியே இன்னும் முடிக்கப்படாமல் இருக்கு :-(  ரெண்டு வருசமா ஒரு வேலையுமே நடக்கலையா?
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7 முதல் 12. மாலை 4.00 முதல் 7.30.
ஒரு புது சமாச்சாரம் தெரியுமோ?  கல்யாணத்துக்குக் காத்திருக்கும் மக்கள்,  பொருத்தமான அழகான ஜோடி கிடைக்கணுமுன்னா  அஞ்சு புதன்கிழமைகளில், அவுங்க ஜாதகத்தைக் கொண்டுவந்து கல்யாண வரதர் காலடியில் வச்சு வேண்டிக்கணுமாம்.  அட்டகாசமான வரன்,வது அமைஞ்சுருமுன்னு ஒரு நம்பிக்கை!

நம்புனால்தான் தெய்வம்!  ஞாபகம் வச்சுக்குங்க.

போனமுறை கொஞ்சநேரம் உக்கார்ந்துருந்த திண்ணை வச்ச வீடு இன்னும் இருக்கான்னு  பார்த்தேன். இருக்கு!

இந்த ஊரில்  கிட்டத்தட்ட இதே வயசுள்ள ஒரு  சிவன் (கைலாசநாதர் )  கோவில்  இருக்காம். இன்னும் போகலை. அடுத்தமுறை  இங்கே வரும்போது  அவரையும்  தரிசிக்க ஆவல். பொழுதோடு கிளம்பி முதலில்  உத்திரமேரூர் வந்துட்டு, அப்புறமா காஞ்சிபுரம் போகணும், க்ருஷ்ணனைப் பார்க்க:-)

கிளம்பினோம்.  செங்கல்பட்டு வழியாத் தாம்பரம் வந்து சேர கிட்டத்தட்ட  ஒன்னேமுக்கால் மணி நேரம் ஆகி இருந்துச்சு.

தொடரும்.............:-)


20 comments:

said...

தங்கள் தயவில் குடும்பத்துடன்
தரிசித்து மகிழ்ந்தோம்
மிக்க நன்றி
வாழ்த்துக்களுடன்...

said...

உத்திரமேரூர் போனீங்களே... நாரதர் நாயுடுவைப் பாத்தீங்களா? எப்படி இருக்காரு?

// இந்தக் கோவில் நம்ம சென்னை பெஸண்ட் நகர் மஹாலக்ஷ்மி கோவிலோட பொண்ணு! //

இந்தக் கோயிலுக்கு நம்ம சென்னை பெசண்ட் நகர் கோவில் பொண்ணுன்னு வந்திருக்கனுமோ?


//வேதபாஷ்யங்கள், மந்திரப்ரமாணங்கள் எல்லாம் விளக்கி எடுத்துச்சொல்லும் புலமை வேணும்.//
இதுதான் சோழர்கள் சட்டம். சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் நீதி நூல்களை எடுத்துச் சொல்லும் புலமை வேணும்னு சொல்லலை பாத்தீங்களா :(

உத்திரமேரூர்ல ஒரு முருகன் கோயில் இருக்காமே. போயிருக்கீங்களா?

மங்கலம் என்பது மன்னர்கள் பிராமணர்களுக்காக வரியில்லாமல் கொடுத்த நிலங்கள். அந்த நிலங்களின் விளைச்சலுக்கு வரி கட்ட வேண்டியதில்லை. பெரும்பாலும் இந்த நிலங்கள் குத்தகைக்கு விடப்படும். உழுதவன் மட்டும் கணக்குப் பார்ப்பான்.

said...

இந்த ஊரில் கிட்டத்தட்ட இதே வயசுள்ள ஒரு சிவன் (கைலாசநாதர் ) கோவில் இருக்காம். இன்னும் போகலை. அடுத்தமுறை இங்கே வரும்போது அவரையும் தரிசிக்க ஆவல் / மெய்யாலுமா ?

said...

நம்மூர் வெயிலுக்கு இந்த விளக்குகளிலிருக்கும் நெய் உருகாமல் இவ்ளோ கெட்டியா எப்படி இருக்குங்கறதே எனக்கு எப்பவும் ஆச்சரியமாயிருக்கு. இதிலும் போலிகள் வந்துடுச்சோ!!.. திர்னேலில இப்பல்லாம் ஒவ்வொரு சன்னிதிலயும் விளக்கு வாங்கச்சொல்லி வியாபாரம் நடக்குது.

துளசி அன்னிக்கு ஆஞ்சியின் திருமார்பை அலங்கரிக்கணும்ன்னு இருந்திருக்கு :-))

said...

//ஒரு புது சமாச்சாரம் தெரியுமோ? கல்யாணத்துக்குக் காத்திருக்கும் மக்கள், பொருத்தமான அழகான ஜோடி கிடைக்கணுமுன்னா அஞ்சு புதன்கிழமைகளில், அவுங்க ஜாதகத்தைக் கொண்டுவந்து கல்யாண வரதர் காலடியில் வச்சு வேண்டிக்கணுமாம். அட்டகாசமான வரன்,வது அமைஞ்சுருமுன்னு ஒரு நம்பிக்கை!//

நெக்ஸ்ட் ஜன்மத்திலே யாருன்னாச்சும் ஒத்தரு
இத ஞாபகப்படுத்துவான்களா ?

சுப்பு தாத்தா.

said...

உத்திர மேரூர். அப்போ தக்ஷின மேரூர் எங்க இருக்கோ.
ஒன்பது ரூபங்களைல் பெருமாள். ஒன்றரை மணிப் பயணத்தில் இருக்கிறது என்றால் கட்டாயம் பார்க்கணும். படங்கள் மிகப் பிரமாதம். அதுவும் அந்தக் கடையும் பெண்ணும் வண்ண அழகு.

said...

சிறப்பானதோர் கோவில் கண்டேன்....

//நம்புனால்தான் தெய்வம்! ஞாபகம் வச்சுக்குங்க.//

அதே அதே...

said...

இரண்டு நாட்கள் தங்கி திவ்யதேசங்களை பார்த்தோம் பல வருடங்களுக்கு முன்பு.
கைலாசநாதர் கோவில் நன்றாக இருக்கும் போய் வாருங்கள் அடுத்த முறை.

//நம்புனால்தான் தெய்வம்! ஞாபகம் வச்சுக்குங்க.//

உண்மை நீங்கள் சொல்வது .

said...

உத்திர மேரூரை மீண்டும் தரிசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது படங்களும் பதிவும்!

said...

//
1 சொந்தமா கால் வேலி நிலம் வச்சுருக்கணும்.

( இக்கால அளவில் சொன்னால் கிட்டத்தட்ட ஒன்னரை ஏக்கர் நிலம்.
அப்பதான் அடுத்தவன் நிலத்தில் ஆட்டையைப் போடாம இருக்கமுடியும்!)

2 தன்னுடைய மனையிலேயே சொந்த வீடு(ம்) இருக்கணும்.

(அப்பதான் ஊரையே வளைச்சு வீடுகளை 'எடுத்துக்கும்' எண்ணம் வராது )//

யார் சொன்னது? எனக்கு இருந்தா போதுமா? என் பிள்ளை, பேரன், பேத்தி, மருமகன், மருமகள் இவர்களுக்கெல்லாம் வேண்டாமா? கிடைச்ச வாய்ப்பை விடலாமா? - அரசியல்வாதி

எல்லாக்கோவில்களிலும் தாயார் உட் ப்ரகாரத்தில் மட்டுமே எழுந்தருளுவாள் என்று நினைக்கிறேன். உபயநாச்சிமார்கள் மட்டுமே பெருமாளுடன் வீதி உலா வருவார்கள்.

காஞ்சீபுரம் பயணம் ஒன்று இருக்கிறது. அப்போது உத்திரமேருரையும் முடிந்தால் சேவிக்க வேண்டும். அவன் மனது வைக்க வேண்டும்.

said...

வாங்க ரமணி.

ஒருமுறை போய் வந்தாலும் மீண்டும் போய்ப் பார்க்கத் தூண்டும் கோவில்களில் இதுவும் ஒன்னு!

ஒன்பது பெருமாள்ஸ் ஒரே இடத்தில்!

சந்தர்ப்பம் அமைஞ்சால் விட்டுடாதீங்க!

said...

வாங்க ஜிரா.

நாரதர் நாயுடுவே திரும்ப திரைக்கு வர்றதா இருக்காறாமே மணல்கயிறு 2!


அம்மா பொண்ணுலே கோட்டை விட்டுட்டேனோ..... அடடா.....

அங்கே வேறெந்த கோவிலுக்கும் போகலை. அடுத்தமுறை போகணும், புடவை வாங்கும் சாக்கில் இல்லையாக்கும். 25 அடிக்காரனைப் பார்க்கும் சாக்கில்தான்:-)

// சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் நீதி நூல்களை எடுத்துச் சொல்லும் புலமை வேணும்னு சொல்லலை பாத்தீங்களா :(// அதுக்குத்தான் இப்ப ஆளாளுக்கு அவைகளை விளக்கிச் சொல்லிக்கிட்டு இருக்காங்களே.....

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க?

ஏகப்பட்ட சிவாலயங்களையும் தரிசிச்சு எழுதியும் இருக்கேனே நம்ம துளசிதளத்தில்!

said...

வாங்க சாந்தி.

எல்லாக் கோவில்களிலும் விளக்கு வியாபாரம் சக்கைப்போடு போடுதே! முந்தியெல்லாம் வீட்டுலே இருந்து கிண்ணத்தில் எண்ணெய் கொண்டுபோய் சந்நிதி விளக்கில் ஊத்தச் சொல்வோம். பட்டர்களும் அதைச் செஞ்சாங்க. இப்பப் பாருங்க..... விளக்குப் போடறேன்னு வேண்டிக்கிட்டு ஜாலியாக் கைவீசிக்கிட்டுக் கோவிலுக்குப் போயிடலாம். போயிட்டுப் போகுது அதை வச்சு யாராவது பிழைச்சுட்டுப்போகட்டும்.

ஆஞ்சிக்குத் துளசி போரடிச்சுட்டாள். மல்லி வேணுமுன்னு கேட்டுருச்சு.:-)

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

போன ஜென்மத்துலே உங்களுக்கு நான் ஞாபகப்படுத்தினதால்தானே இந்த ஜென்மத்தில் அழகான மீனாட்சி அக்கா கிடைச்சுருக்காங்க!

ஜோடிகள் மட்டும் எந்த ஜென்மத்திலும் மாறுவதே இல்லையாம். உருவம் மட்டுமே மாறும்!

said...

வாங்க வல்லி.

தக்ஷிண மேரூர்? ஆஹா எனக்குத் தோணலையே............

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க காஞ்சிபுரம் பயணத்துலே இதையும் கவர் பண்ணிருங்க! பார்க்கவேண்டிய கோவில்தான் இது!

said...

வாங்க கோமதி அரசு.

நாங்களும் ஒருசமயம் 2 நாட்கள் தங்கி திவ்யதேசங்களை தரிசித்தோம். நீங்க சொல்வது காஞ்சியில் உள்ள கைலாஸநாதர் கோவிலா? இல்லை உத்தரமேரூரில் உள்ளதா?

காஞ்சி கோவிலுக்குப் போயிருக்கேன் சிலமுறைகள்.

said...

வாங்க மோகன் ஜி.

சான்ஸ் கிடைச்சால் விட்டுடாதீங்க. இன்னும் சில அபூர்வ கோவில்கள் (எல்லாம் 1200 ஆண்டுகள் பழையன ) இருக்காம்!

said...

வாங்க ரஞ்ஜனி.

உண்மைதான். பத்துத் தலைமுறைக்குச் சொத்தை சேர்த்து வைக்கத்தானே ஆசைப்படறாங்க அ. வியாதிகள். ஆனா.... ஒன்னு .... ச்சும்மாக் கிடைக்கும் சொத்தின்மீது யாருக்கு மரியாதை இருக்கு? கிடைச்சதைப் பத்திரப்படுத்திக்கும் அறிவை ஆண்டவன் கொடுப்பதில்லையே...

அதான் தாயார்களுக்குப் படிதாண்டாப் பத்தினின்னு டைட்டில் கொடுத்து உள்ளேயே வச்சுடறாங்களே.......